என் தஸ்தாயெவ்ஸ்கி


லாசரஸின் மீள்உயிர்ப்பு


ஒரு எழுத்தாளன் நிகழ்காலத்தை பார்ப்பது போலவே இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறான்.அதற்கான கண் அவனுக்கு உண்டு.இறந்தகாலத்தில் நடந்த பேரழிவுகள் எப்படி அவனை துன்புறுத்துகிறதோ அதே போல வருங்காலத்தில் நடக்கவிருக்கும் பேரழிவுகளும் அவனை துன்புறுத்துகின்றன. அவனுடைய அதீத நுண்ணுணர்வு அவனை மிகவும் துயரம் கொண்டவனாக பதற்றம் நிறைந்தவனாக எப்போதும் இருக்க செய்கிறது. அப்படி துன்பப்பட்ட ஒரு ஆன்மா தான் தஸ்தாயெவ்ஸ்கி.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் மிகுந்த நாடகீயத்தருணங்களால் ஆனவை.குற்றமும் தண்டனையும் நாவல் ரஸ்கோல்நிகோவ் செய்யும் கொலையை மையப்படுத்தி நிகழ்கிறது.அது போல கரமசோவ் சகோதரர்கள் நாவல் தந்தை கரமசோவின் கொலையை மையப்படுத்தி நிகழ்கிறது.தந்தை பியோதர் கரமசோவின் மூன்று மகன்களான திமித்ரி, இவான்,அல்யோஷா தந்தை கரமசோவிற்கு முறைகேடாக பிறந்தவன் என்று கருதப்படும் சேமர்டகோவையும் சேர்த்து நால்வரும் பியோதர் கரமசோவின் கொலையில் ஏதோவோரு வகையில் சம்பந்தப்படுகிறார்கள். திமித்ரி குருஷன்கா என்ற பெண் மீது அதீத விருப்போடு இருக்கிறான். அதே நேரத்தில் தந்தை கரமசோவ் குருஷன்காவுக்கு மூன்றாயிரம் ரூபள்கள் கொடுத்து அவளை தன்னுடையவளாக்கி கொள்ள போவதாக சொல்கிறார். தந்தை மகனுக்குமான இந்த பிரச்சனையில் தந்தை கரமசோவின் கொலை நிகழ்கிறது.காவல் துறை திமித்ரிதான் கொலையை செய்திருக்ககூடும் என்று எண்ணி அவனை கைது செய்கிறது.ஆனால் உண்மையில் இவான் தான் மறைமுகமாக சேமர்டகோவை உந்தி கொலையை செய்ய வைக்கிறான்.தன்மீதான குற்றவுணர்வால் இவான் மனபிறழ்வு அடைகிறான். சேமர்டகோவ் தற்கொலை செய்து கொள்கிறான். திமித்ரி சிறை தண்டனை பெறுகிறான்.அல்யோஷா சிறுவர்களுடன் நிகழ்த்தும் உரையாடலோடு நாவல் முடிவடைகிறது.இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத வேண்டும் என்று தஸ்தாயெவ்ஸ்கி எண்ணியிருந்தார்.ஆனால் நாவல் வந்த அடுத்த வருடம் அவர் மரணமடைந்தார்.

பேதை நாவல் அப்படிபட்ட நாடகீயத் தருணங்களால் ஆனது அல்ல என்பதும் உண்மையே.மனநலவிடுதியிலிருந்து திரும்பும் மிஸ்கின் தன் குடும்ப பெயரை கொண்டிருக்கும் யெபான்சினின் மனைவியை சந்திக்க அவர்கள் வீட்டுக்கு செல்கிறான். அங்கே நாஸ்டாஸியாவின் வரைபடத்தை பார்க்கிறான்.அவளின் முகத்தில் துயரத்தை பார்ப்பவன் அவளுக்காக இரக்கம் கொள்கிறான். அவளை துயரத்திலிருந்து காப்பாற்ற நினைக்கிறான். அன்று நிகழும் நாஸ்டாஸியாவின் பிறந்த நாள் விருந்தில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்கிறான். அதே நேரத்தில் நாஸ்டாஸியா மீது அதீத விருப்பால் துரத்தப்படும் ரோகஸின் அவளுக்கு ஒரு லட்சம் ரூபள்களை அளித்து அவளை தன்னுடன் வர சொல்கிறான். மிஸ்கினின் தூய அன்புக்கு முன் தன்னை மிகவும் கீழானவளாக கருதும் நாஸ்டாஸியா ரோகஸினுடன் சென்று விடுகிறாள்.அதன்பின் ரோகஸினுக்கும் மிஸ்கினுக்கும் இடையில் ஊசலாடியபடியே இருக்கிறாள் நாஸ்டாஸியா.இதற்கிடையில் அக்லேயா என்ற யெபான்சினின் கடைசி மகள் மிஸ்கினை விரும்புகிறாள். இறுதியில் அக்லேயாவின் மீதான காதலுக்கும் நாஸ்டாஸியாவின் மீதான இரக்கத்திற்கும் இடையில் நாஸ்டாஸியா மீதான இரக்கத்தின் பக்கமே மிஸ்கின் செல்கிறான். ஆனால் மறுபடியும் நாஸ்டாஸியா மிஸ்கினை விட்டு ரோகஸினிடம் சென்று விடுகிறாள்.இந்த முறை ரோகஸின் நாஸ்டாஸியாவை கொலை செய்து விடுகிறான். ரோகஸினுக்கு பதினையந்து வருட தண்டனை கிடைக்கிறது. மிஸ்கின் மறுபடியும் மனநலம் பாதிக்கப்பட்டு மனநலவிடுதியில் சேர்க்கப்படுகிறான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல.அவை கருத்துருவகங்கள். குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்நிகோவ் ஒரு வட்டிக்கடை அம்மையாரை கொலை செய்கிறான். அங்கே எதிர்பாராத விதமாக வந்துவிடும் அவளின் தங்கையையும் கொலை செய்து விடுகிறான். ரஸ்கோல்நிகோவ் ஒரு கருத்தியல் அடிப்படையில் இந்த கொலையை செய்கிறான். மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒருவகையினர் சாதாரண மனிதர்கள். இவர்கள் சட்டத்திற்கும் , அறத்திற்கும் , விழுமியங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள். மற்றொரு வகையினர் உண்டு.இவர்கள் அதிமனிதர்கள். தாங்கள் செய்யும் செயலால் மானுட இனமே நண்மை அடையும் என்கிற போது அதன் பொருட்டு அவர்கள் எந்த செயலையும் செய்யலாம். எந்த கொலைகளும் செய்யலாம்.அவர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள். மாறாக அவர்கள் புரவலர்களாக கொண்டாடப்படுவார்கள்.இது ஒரு கருத்தியல். இந்த கருத்தியலை ரஸ்கோல்நிகோவ் என்ற எந்த அதிகாரமும் இல்லாத ஒரு மாணவன் நிகழ்த்தும்போது அது இரண்டு கொலைகளுடன் முடிந்து விடுகிறது. இது போன்ற ஒரு கருத்தியலை அதிகாரத்தில் இருப்பவர்கள் உருவாக்கிக்கொண்டால் அது மானுடம் நினைத்துபார்க்கவே அஞ்சக்கூடிய பேரழிவாக முடிகிறது. அதற்கான சான்றுகள் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் விரவிக்கிடக்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் இறுதி நாவலான கரமசோவ் சகோதரர்களில் இவான் கரமசோவ் சொல்லும் ஒரு வாக்கியம் 'கடவுள் இல்லையென்றால் பின் எல்லாம் அனுமதிக்கப்பட்டவையே' . தஸ்தாயெவ்ஸ்கியின் உலகத்திற்கான திறவுகோல் இந்த வாக்கியம். இவான் கரமசோவ் ஒரு அறிவுஜீவியாக இருக்கிறான். அவனால் சேமர்டகோவ்வை மறைமுகமாக உந்தி தன் தந்தையை கொலை செய்ய வைக்க முடிகிறது. இவான் மேல் சொன்ன கருத்தியிலின் துணைக்கொண்டு தான் இதை செய்கிறான். கடவுள் இல்லையென்றால் கடவுளின் பெயரில் உருவாக்கப்பட்ட அறமும் விழுமியங்களும் இறக்ககின்றன. அறமும் விழுமியங்களும் இல்லாத ஒரு உலகில் எல்லாம் அனுமதிக்கப்பட்டவை. இங்கே இவான் கரமசோவ் என்ற அறிவுஜீவி கதாபாத்திரத்தை கருத்துருவகமாக மாற்றி சற்று விரித்தால் நாம் வந்து சேரும் சொல் விஞ்ஞானம்.

ஆம்.கடவுள் இல்லை என்ற எதிர்வினையில் தன் இருப்பை உருவாக்கிய ஐரோப்பிய நாத்திகவாதமும் அதன் சகோதரனான சோஷியலிசமும் கடவுளுக்கு மாற்றாக வைத்த பகுத்தறிவும் அதன் அனைத்து உரையாடல்கள், கலைகள், தத்துவங்கள் மூலமாக முன்னேற்றிய ஒரு துறையும் விஞ்ஞானமே. இன்று ஒரு விஞ்ஞானியால் எந்த அறப்பிரச்சனையும் இல்லாமல் அணுமின் நிலையத்தில் வேலை செய்ய முடிகிறது.சோதனை கூடத்தில் அமர்ந்து கொண்டு எந்த சலனமும் இல்லாமல் மரபணு மாற்று விதைகளை உருவாக்க முடிகிறது.இந்த விஞ்ஞானிகள் யார்? ஏதேனும் தனித்த ஒரு சமூக சூழலில் வளர்ந்தவர்களா? இல்லையே. நாம் வாழும் இதே சமூகத்தில் படித்து வளர்ந்த மத்திய தர வர்க்கத்தினர் தானே. அப்படியென்றால் எப்படி எந்த சலனமும் இல்லாமல் அவர்களால் இதை செய்ய முடிகிறது? இவானின் வாக்கியமே அதற்கான பதில்.

ஒரு புறம் மிகப்பெரிய அநீதிகளையும் , பேரழிவுகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கும் விஞ்ஞானம், அரசு , நவீன முதலாளித்துவம் அல்லது கம்யூனிசம் (இரண்டும் ஒன்று தான்) அதே வலைப்பின்னலில் மறுமுனையில் மத்திய தர வர்க்கத்தினரை அதில் வேலை செய்பவர்களாகவும் நுகர்வோராகவும் இருக்கும் படி செய்ய முடிந்திருக்கிறது. நாமும் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் அந்த வலையில் முன்னேறிய படி இருக்கிறோம். நமது கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. கூட்டு பாவம் என்ற வார்த்தையை பிரயோகப்படுத்துகிறார் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் பாதிரியார் ஜோஷிமா.இவை எல்லாம் சாத்தியமானதுக்கு கடவுளை கொண்றுவிட்டு அந்த இடத்தை பிடித்த விஞ்ஞானத்தால் தன்னளவில் அறத்தையோ , விழுமியங்களையோ உருவாக்க முடியவில்லை என்பதே காரணம் .விஞ்ஞானம் என்ற சட்டகத்துக்குள் அதற்கான இடமே இல்லை.இதை முன்னறிவித்தவர் தஸ்தாயெவ்ஸ்கி.விஞ்ஞானம் குறித்து எந்தவிதமான அறிதலும் இல்லாமல் தஸ்தாயெவ்ஸ்கி இதை சொல்லவில்லை. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் அவர் அந்த காலகட்டத்தின் விஞ்ஞான வளர்ச்சியை உரையாடல்களை மேலோட்டமாக அல்ல மிக தீவிரமாக அறிந்திருக்கார் என்பதற்கான தடயங்கள் இருக்கிறது.

இந்த தூய அறிவுக்கு எதிர் நிலையில் அவர் மற்றொரு கருத்துருவகத்தை நிறுவுகிறார்.அதுவே அமைப்புக்கு வெளியே இருக்கும் கிறுஸ்து. இந்த கிறுஸ்துவின் கருத்துருவக கதாபாத்திரங்களே அல்யோஷா(கரமசோவ் சகோதரர்கள்), மிஸ்கின் ( பேதை) , ஒரளவு வரை சோனியா( குற்றமும் தண்டனையும்) .இங்கே அல்யோஷா மடத்திலிருப்பதும், மிஸ்கின் மனநலவிடுதியிலிருந்து திரும்புவதும், சோனியா விலைமாதுவாக இருப்பதும் தற்செயல் அல்ல.இவர்கள் மைய அமைப்புக்கு வெளியே இருக்கிறார்கள்.பணம் என்பது லெளகீகத்தை குறிக்குமென்றால் பணத்தின் மீது மதிப்பு அற்றவர்கள். பேதை நாவலில் ஒருவர் மிஸ்கினை பற்றி சொல்லும் போது ஸ்லாவோவிரும்பி (Slavophile) என்று குறிப்பிடுவார். ஸ்லாவோவிரும்பி என்பது மேற்கு ஐரோப்பாவின் தாக்கத்தை எதிர்ப்பது. பேதை நாவலில் மிஸ்கின் இரண்டு இடங்களில் மட்டுமே நீளமான உரையாடலை நிகழ்த்துகிறான்.

ஒன்று முதல் முறையாக ஜெனரல் யெபான்சின் வீட்டில் யெபான்சினின் மனைவியையும் அவரது மூன்று மகள்களையும் சந்திக்கும் போது மற்றோன்று ஒரு மாலை விருந்தில் . முதல் உரையாடல் மரண தண்டனை பற்றியது.இரண்டாவது உரையாடல் ரோமன் கத்தோலிக்கம் பற்றியது. ரோமன் கத்தோலிக்கம் பற்றி மிஸ்கின் சொல்வதே தஸ்தாயெவ்ஸ்கி எதை நினைத்து அச்சப்படுகிறார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ரோமன் கத்தோலிக்கத்தின் எதிர்வினை தான் ஐரோப்பிய நாத்திகவாதமும் , சோஷியலிசமும்.அவை ரோமன் கத்தோலிக்கத்தின் மீதான விரக்தியால் முளைத்தவை. அவை தன்னளவில் சுயமான சிந்தனைகள் அல்ல. சமயம் உருவாக்கிய அற நம்பிக்கை ரோமன் கத்தோலிக்கத்தால் இல்லாமல் போனதால் அவற்றை மறுபடியும் இவை மீள்உருவாக்கம் செய்ய முயல்கின்றன.ஆன்மிக தாகத்தில் இருக்கும் மானுட குலத்தின் தாகத்தை தணிய வைக்கவும் காப்பாற்றவும் இவை முயல்கின்றன.

அதை கிறுஸ்துவின் மூலமாக அல்லாமல் வன்முறையால் செய்ய முயல்கின்றன. இவை மிக பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்கிறான் மிஸ்கின். அதுவும் ரஷ்யாவில் அது பயங்கரமாக இருக்கும் என்கிறான். உண்மையில் நாம் ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்த்து ரஷ்ய வேர்களை நோக்கி மக்களை திருப்ப வேண்டும் என்கிறான்.அப்போது ஒருவர் சொல்கிறார் நீங்கள் சமூகத்தோடு பழக பழக இவை எல்லாம் பெரிய விஷயங்களாக தெரியாது என்று. இது முக்கியமான ஒரு வாக்கியம்.அதாவது தஸ்தாயெவ்ஸ்கி நிறுவனபடுத்தப்படாத அமைப்புக்கு வெளியே உள்ள ஒரு கிறுஸ்துவை யத்தினிக்கிறார். இந்த கதாபாத்திரங்கள் எல்லாமே பிறர் மீது அன்பை மட்டுமே செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இங்கே அன்பு என்பது தூய அன்பு.தூய அறிவுக்கு எதிரிடையாக தூய அன்பு.பிறரின் துன்பத்தை தன் துன்பமாக கருதுபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக அழுகிறார்கள்.துயரம் கொள்கிறார்கள்.மிஸ்கினிடமும் அல்யோஷாவிடமும் பிற கதாபாத்திரங்கள் தங்களின் அகத்தை சட்டென்று திறந்து கொள்கிறார்கள்.

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மிக எளிதாக அல்யோஷாவை தன்னால் வசியப்படுத்திவிட முடியும் என்று குருஷன்காவின் உறவினான ராத்திகனிடம் சவடால் விடும் குருஷன்கா அல்யோஷா வந்த பின் அவனிடம் கிட்டத்தட்ட சரணாகதி என்பது போல் ஆகிறாள். குருஷன்கா மீது அதீத விருப்பத்தால் இருக்கும் திமித்ரியும் நாஸ்டாஸ்யா மீது அதீத விருப்புடன் இருக்கும் ரோகஸினும் முறையே அல்யோஷாவிடமும் மிஸ்கினிடமும் தங்களின் அந்தரங்கமான துயரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.குற்றமும் தண்டனையும் நாவலில் மர்மலதேவ்வின் மூலம் சோனியா என்ற அவனது பெண்னை பற்றி மதுவகத்தில் வைத்து அறிந்து கொள்ளும் ரஸ்கோல்நிகோவ் தான் கொலை செய்த பின் அந்த கொலையை தான் ஏன் செய்தேன் என்பதை சோனியாவிடமே சொல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறான்.அதை போல தான் கொலை செய்தபின் சோனியாவிடம் சென்று அதை சொல்கிறான்.நான் நெப்போலியனாக விரும்பினேன்.அதனால் நான் கொலை செய்தேன் என்கிறான்.தன் தந்தை மர்மலதேவ் குடிகாரராக இருப்பதால் வீட்டின் பொருள் தேவைக்காக ஒரு சிறிய சூழ்ச்சியில் விலைமாதுவாகும் சோனியாவே பிறரின் துயரத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆத்மா என்பதை அவன் அறிவதால் அவளிடம் இதை சொல்கிறான்.உடனே சோனியா அழுதபடியே நாற்சந்திக்கு சென்று மானுட குலத்திற்கு முன் மண்டியிட்டு தான் ஒரு கொலைக்காரன் என்பதை பிரகடனம் செய் என்று சொல்கிறாள். இறுதியில் ரஸ்கோல்நிகோவ்வும் அப்படியே செய்கிறான்.

அல்யோஷாவையும் மிஸ்கினையும் எடுத்துக்கொண்டால் அவர்களால் எந்த ஒரு சம்பவத்தை நிகழ்த்தவோ நிகழாமல் தடுக்கவோ முடியவில்லை.மிஸ்கினால் நாஸ்டாஷியாவின் கொலையையோ அல்யோஷாவால் தன் தந்தையின் கொலையையோ தடுத்து நிறுத்த இயலவில்லை. ஒரு வகையில் பார்த்தால் அவர்களின் தூய அன்பை கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள்.இவான் கரமசோவால் ஒரு குறிப்பட்ட கட்டத்திற்குப்பின் அல்யோஷாவின் இருப்பை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. பேதை நாவலில் இப்போலிட் மிஸ்கினை நேரடியாகவே தூற்றுகிறான்.நமக்கு லெளகீகமான ஒரு அன்பை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமன செலுத்தப்படும் தூயஅன்பு நம்மை அச்சுறுத்துகிறது.இங்கே மேலும் ஒரு விஷயம் இருக்கிறது.ஒரு குரல் அமைப்புக்கு வெளியிலிருந்து வரும் போது அது எல்லாவகைப்பட்ட மனிதர்களையும் சலனமடைய நிம்மதியிழக்க செய்கிறது.உதாரணமாக இன்று மனித உரிமை குறித்து , நாட்டார் கலைகள் அழிவது குறித்து, பழங்குடியினர் தங்கள் இருப்பிடத்தைவிட்டு துரத்தப்படுவது குறித்து, விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து , உலகமயமாதலின் பிரச்சனைகள் குறித்து , அணு பெளதீகம் குறித்து, மரபணு மாற்று விதைகளை குறித்து என்று எவை குறித்தும் நாம் அக்வாபீனா பொத்தல்களை மேடையில் வைத்துக்கொண்டு பேசலாம். ஆனால் அவற்றை குறித்து பேசும் போதே குறியீட்டு தளத்தில் நவீன முதலாளிகளுக்கும் அரசுக்கும் ஒரு தந்தி அனுப்புகிறோம்.நாங்கள் இந்த அமைப்பின் சலுகைகளையும் செளகரியங்களையும் மிகவும் விரும்புகிறோம் . உண்மையில் நாங்கள் விரும்புவது மாற்றம் அல்ல மாறாக Status Quo தான் என்று. உடனே கார்ப்ரேட்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்.பிரச்சனை எதுவும் இல்லையென்றான பின் நமக்கு உதவிகள் செய்யக்கூட முன்வருகிறார்கள்.

இப்படித்தான் நாட்டார் கலைகள் குறித்தும் நாட்டார் பண்பாடு குறித்தும் ஆராய கார்ப்ரேட் உதவி செய்யும் அபத்தத்தை நம்மால் பார்க்க முடிகிறது.ஆக, இந்த அமைப்புக்குள் இருந்து கொண்டே எழுப்பப்படும் குரல்கள் மையத்தில் கலக்கின்றன. அப்படியல்லாமல் அமைப்புக்கு வெளியில் இருக்கும் குரல்கள் சேர்ந்து ஒலிக்கும் போது அது மிகப்பெரிய சலனத்தையும் அச்சத்தையும் மையத்தில் ஏற்படுத்துகிறது.உடனே அந்த குரல் ஒடுக்கப்படுகிறது.ஆனால் அது தான் உண்மையான மாற்று குரல்.தஸ்தாயெவ்ஸ்கியும் அப்படிப்பட்ட ஒரு மாற்று குரலை ஒலிக்கச்செய்கிறார்.அது புரட்சியின் குரலாகவோ கலகக் குரலாகவோ அல்லாமல் தூய அன்பின் குரலாக இருக்கிறது.அதுவே தஸ்தாயெவ்ஸ்கியின் குரல்.

அவர் நாவலின் இருமைகள் மிஸ்கின் X ரோகஸின், ரஸ்கோல்நிகோவ் X சோனியா ,இவான் X அல்யோஷா சந்தித்துக்கொண்டு மிக அந்தரங்கமான உரையாடல்களை நிகழ்த்திகொள்கின்றனர்.இவையே தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களின் நாடகீயத் தருணங்களின் உச்சம்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் புகழ்பெற்ற The Grand Inquistor இவான் கரமசோவ் அல்யோஷாவிடம் உரையாடலில் சொல்லும் புனைவே..அவரின் நாவல்களை தனித்த ஒன்றாக அல்லாமல் இனைத்து பார்க்கும் போது அதில் ஒரு தொடர்ச்சியை பார்க்க முடிகிறது.ரோகஸினில் திமித்ரியையும் , ஸ்விட்ரிகைலோவ்வில் தந்தை கரமசோவையும் , மிஸ்கினில் அல்யோஷாவையும் சோனியாவையும் , குருஷன்காவில் நாஸ்டாஸ்யியாவையும், ரஸ்கோல்நிகோவில் இவானையும் நாம் பார்க்கலாம்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் கோல்யாவும் பேதை நாவில் வரும் கோல்யாவும் கிட்டத்தட்ட ஒரே சிறுவன் தான்.அவர் ஒரு இருமையை உருவாக்கினாலும் அதில் பிரச்சாரம் இல்லை.

திமத்ரி அதீத விருப்பால் துரத்தப்படுபவன்.அதை முன்னிட்டு பல தவறுகளை செய்பவன். ஆனால் அவனின் தொலைந்து போன பால்ய காலம் ஒன்று உள்ளது.ஹெர்ஸன்டியூப் என்ற மருத்துவர் மூலமாக நாவலின் இறுதியில் அது நீதிமன்றத்தில் பேசப்படுகிறது.அதே போல ரோகஸின் பற்றிய ஒரு சித்திரத்தை வரையும் போது அவன் மட்டும் நாஸ்டாஸ்யா மீதான அதீத விருப்பால் உந்தப்படாமல் இருந்தால் ஒரு கட்டளைக்கு அடிபணியும் பெண்னை திருமணம் செய்து கொண்டு அவனது தந்தையை போலவே பெரும் செல்வம் ஈட்டக்கூடியவனாக இறுதியில் சகாப்ட்சி (Skoptsy) போன்ற ஒரு ரகசிய குழுவின் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடியவாக அவன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வான் என்று மிஸ்கினும் நாஸ்டாஸியாவும் சொல்கிறார்கள்.ரோகஸின் இருண்மையானவன் தான் என்றாலும் அவன் தீமையின் உருவம் அல்ல.

அவரின் பெண்கள் பெரும்பாலும் அழகிகள் அல்ல.மாறாக பேரழகிகள்.துயரத்தில் இருப்பவர்கள்.தஸ்தாயெவ்ஸ்கியின் மைய கதாபாத்திரங்கள் எத்தனை முக்கியமானவையோ அதே அளவுக்கு முக்கியமானவை அவரின் குறும் கதாபாத்திரங்கள்.உதாரணமாக குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் மர்மலதேவ்.சோனியாவின் தந்தையான மர்மலதேவ் குடிகாரர்.ஆழமான முறையில் தான் பிறரால் மதிக்கப்படவில்லை என்பதை ஒருவன் உணரும் போதே ஒருவன் குடிக்கிறான் என்று மர்மலதேவ் ஒரிடத்தில் சொல்கிறார். இது மர்மலதேவ் கதாபாத்திரத்தை பற்றிய ஒரு முக்கியமான சித்திரத்தை ஏற்படுத்தும் வரி. அது போல பேதை நாவலில் வரும் இப்போலிட். அவன் காசநோயால் பாதிக்கப்பட்டவன். மரணத்தை எதிர்நோக்குபவனின் பார்வையில் இந்த உலகம் எப்படி காட்சியளிக்கிறது என்பதை 'ஒரு அவசியமான விளக்கம்' என்ற அறிக்கையில் அவன் விளக்குவது நாவலின் முக்கியமான இடம்.ஒரு சாதாரணமானவன் அந்தி பொழுதை பார்பதற்கும் ஒரு நோயாளி அந்தி பொழுதை பார்ப்தற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை நாம் இந்த இப்போலிட்டின் அறிக்கையில் கண்டுகொள்ளலாம்.இங்கே ஒரு விஷயத்தை மிக அழுத்தி சொல்ல வேண்டும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலின் முக்கிய விஷயமே இப்படி ஒரு குடிகாரனின் குரல் ஒரு நோயாளியின் குரல் என எல்லா குரல்களையும் ஒலிக்கச்செய்வது தான்.மேலும் அவர் தன் நாவல்களில் மைய கதாபாத்திரங்களின் பிரச்சனைகளை குறும்பாத்திரங்கள் வழியாக சொல்லவும் செய்கிறார்.உதாரணமாக ரஸ்கோல்நிகோவை புரிந்து கொள்ள ஸ்விட்ரிகைலோவ் கதாபாத்திரம் பெரிய அளவில் உதவி செய்கிறது.ஸ்விட்ரிகைலோவ் ரஸ்கோல்நிகோவின் தங்கை துனியா வேலை செய்த வீட்டின் முதலாளி.துனியா மீதான தன் பாலியல் வேட்கைக்காக அவளை தொடர்ந்து துரத்துபவன்.பதினையந்து வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணமானவன் என்று சொல்லபடுபவன்.ஒரிடத்தில் ஸ்விட்ரிகைலோவ் ரஸ்கோல்நிகோவை சந்திக்கும் போது சொல்வான் பெண்களால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிற போது அதைத்தான எதன் பொருட்டு நிறுத்திக்கொள்ள வேண்டும் என. நாவலின் இறுதியில் துனியா அவனுடைய பாலியல் இச்சைக்கு இனங்க மறுக்கும் போது சட்டென்று அவனுள் ஏற்படும் கீழ்மையிலிருந்து மேன்மைக்கான உச்சத்தில் தற்கொலை செய்து கொள்கிறான்.ஸ்விட்ரிகைலோவ் எப்படி தன் பாலியல் விருப்பத்தின் காரணமாக தான் செய்யும் எந்த செயலுக்கும் குற்றவுணர்வு கொள்ளாமல் இருக்கிறானோ அதுபோல ரஸ்கோல்நிகோவின் கொலையையும் தன் இருப்பின் நிறைவுக்கான கொலையாக அமைகிறது.மேலும் நாவலின் போக்கை புரிந்து கொள்ள நாவலில் சில குறியீடுகளை உபயோபடுத்துகிறார். ஒரு குதிரையை அதிக அளவில் மது அருந்திய ஒருவன் மிக மூர்க்கமாக அடித்து தன் குரூர மகிழ்ச்சிக்காக கொலை செய்வதாக ரஸ்கோல்நிகோவ் ஒரு கனவை காண்கிறான்.ஒரு வகையில் ரஸ்கோல்நிகோவ் செய்யும் கொலையும் அது போல தன் இருப்பின் நிறைவுக்காக செய்யப்படும் கொலையாக அமைகிறது என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

பேதை நாவலில் ஹோன்ஸ் ஹோல்பின் என்ற ஒவியர் வரைந்த கிறுஸ்துவின் ஒவியம் ஒன்று வருகிறது. கிறுஸ்து சிலுவையிலிருந்து அகற்றப்பட்டு படுத்த நிலையிலிருக்கும் ஒரு காட்சியை சித்திரக்கும் ஒவியம். இதுவும் இந்த நாவலை புரிந்துகொள்ள ஒரு குறியீடுதான். இந்த கிறுஸ்து வலியும் வேதனையும் கொண்ட ஒரு எளிய மனிதனாக இயற்கையின் மிகப்பெரிய சக்திக்குமுன் தோற்றுபோனவனாக இருக்கிறார்.இயற்கையின் நியதிகளை மீறி லாசரஸை உயிர்பிக்க செய்த கிறுஸ்து அதே இயற்கை என்னும் மிகப்பெரிய கொடிய விலங்கின் முன் மீள்உயிர்ப்பாகான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறார். இது பார்ப்பவர்களின் நம்பிக்கையை இழக்க செய்வதாக இருக்கிறது. மிஸ்கினும் நாவலின் இறுதியில் யதார்த்த உலகின் விளையாட்டுகளால் மறுபடியும் மனநலம் குன்றியவானாகிறான். தான் ஒலிக்கச்செய்யும் குரல் யதார்த்தத்தில் ஒலிக்க முடியாத குரலோ என்று தஸ்தாயெவ்ஸ்கி அச்சப்படுகிறார்.தூய அன்பு அறிவின் முன் தோற்றுவிடுமோ என்று பதறுகிறார்.தஸ்தாயெவ்ஸ்கி எதையெல்லாம் நினைத்து அச்சப்பட்டாரோ பதறினாரோ அவையெல்லாம் இன்று அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.நாம் அவற்றை நிகழ்த்துவோராகவும் அவற்றின் சாட்சிகளாகவும் இருந்துகொண்டிருக்கிறோம்.நாம் வேறு என்ன செய்து விட போகிறோம்?

தஸ்தாயெவ்ஸ்கியை ஒரு வாசகனுக்கு மிக முக்கியமாக இளைஞனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். அவரிடம் நீங்கள் உங்களின் இயற்பியல் சந்தேகங்களிலிருந்து உங்கள் காதலர் உங்களிடம் இரண்டு நாட்களாக பேசவில்லை என்பது வரை எதைகுறித்தும் புகைபிடித்துக்கொண்டோ மதுவகத்தில் அமர்ந்துகொண்டோ பேசலாம். உடனே டால்ஸ்டாய் போல கையை உயர்த்திக்கொண்டு உங்களுக்கு அவர் ஆசிர்வாதம் செய்து துன்புறுத்தமாட்டார். அறிவுரைகளோ , ஆலோசனைகளோ வழங்கமாட்டார்.மாறாக உங்களுக்காக துயரம் கொள்வார். அப்போது தாராளமாக நீங்கள் அவர் தோளில் சாய்ந்து கொள்ளலாம். அப்போது கொதி நெருப்பில் நிற்பவனின் முனுமுனுப்பு ஒசை உங்களுக்கு கேட்கக்கூடும்.அதுவே தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகங்களில் நாம் கேட்கும் ஒசை.


எல்லாம்



ஒரு கானகத்தில் யாருமில்லை.பெரிய மரம் ஒன்று விழுகிறது. அது சத்தம் எழுப்புமா எழுப்பாதா.


கடைசிக் கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்

                                                           நகுலன்.


பூனையும் கிறுஸ்துவும் - ஒரு நல்ல கட்டுரை




இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்


கவிதை தனிமொழியாலானது. அந்த தனிமொழியை அறிந்தவன் அல்ல நான். இந்த குறிப்பு நான் கவிதைகளை புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி மட்டுமே.இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளை வாசிக்கும் போது அதில் சில இடங்களில் சுகுமாரனின் தொடர்ச்சியை பார்க்க முடிகிறது.உதாரணமாக சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள் கவிதையொன்றில் நாம் எப்போதும் இருப்பது கோடைகாலத்தில் தானே என்கிற வகையில் ஒரு வரி வரும். அதன் தொடர்ச்சியை நாம் கோடை கவிதையிலும் பார்க்கலாம்.கோடையில் வாழ்ந்து கோடையில் மடிகிறேன் என்று முடிகிறது இந்த கவிதை. எந்த ஒரு படைப்பாளியுமே தன்னை வரையறுத்திக்கொண்டு முன்வைப்பதில்லை.ஆனால் ஒரு வாசகன் அதை ஏதேனும் ஒரு வகையில் தொகுத்துக்கொள்ள பார்க்கிறான்.அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் இந்தக்குறிப்பும்.

ஒரு நகரித்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் எப்போதும் எதிர்பாராமையோடு பகடையாடிபடியே இருக்கிறார்கள். அந்த நாளின் வரவு எப்படியிருக்கும் என்று அவர்கள் படபடப்புடனே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சித்திரங்கள் இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளில் தொடர்ந்து வருகிறது. கதவு என்றோரு கவிதை.கதவு என்பது ஒரு வாய்ப்பிற்கான வாசல்.வெவ்வேறு வாய்ப்புகளுக்காக திறப்புகளுக்குகாக சதாகாலமும் மூடப்பட்ட கதவின் முன் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இது திறக்காது என்றால் பிரச்சனையில்லை.எல்லோரும் சென்று உறங்கிவிடுவார்கள். ஆனால் அவ்வப்போது அது திறக்கப்படுவதற்கான சமிக்ஞைகள் வந்தபடியே இருக்கின்றன.ஆக அவர்கள் திறக்கப்படாத கதவின் முன் நெடுங்காலம் காத்திருக்கிறார்கள்.இந்த காத்திருத்தல் தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல் பற்றிய கவிதையாக நம்பிக்கையின் தேவதை என்பதில் வருகிறது.அன்றைய நாளில் எந்த பொம்மைகளையும் விற்க இயலாமல் வீடு திரும்ப யத்தனிக்கும் சித்திரம் பொம்மைகள் விற்பவன் என்ற கவிதையில் வருகிறது. வேட்டையில் சிறு முயல்கூட கிடைக்காமல் வீடு திரும்பும் ஒருவனின் கையறு நிலை வீடு திரும்புதல் கவிதையில் வருகிறது.இதையே நாம் முல்லா, கிறிச் கிறச்,நெய்தல்,குழந்தை கவிதைகளிலும் பார்க்கலாம். இந்த கவிதைகளை பற்றி பாவண்ணன் சொல்வது போல மேலும் ஒரு சித்திரம் இருக்கிறது. வீடு திரும்புதல் பிரச்சனையில்லை.வெறும் கைகளோடு வீடு திரும்புதல் தான் பிரச்சனை.அதனால் தான் வேட்டைக்கு சென்றவன் வழியில் சில நாவற்பழங்களையும் மரவள்ளிக் கிழங்குகளையும் சேகரித்து செல்கிறான்.

இருத்தலியம் சார்ந்த கவிதைகளையும் இவர் எழுதியிருக்கிறார். மேலே சொன்னது போல கோடை அப்படியானதொரு கவிதை. கான்கீரிட் இறுக்கத்திலிருந்து விடுப்பட்டு சூறைக்காற்றாய் மாறி அலையத் துவங்கினான் உலகத்து வீதிகளில் என்ற அவதாரம் கவிதை , ஒரு நாளின் இரவில் வீடு திரும்புபவனின் இழப்புகள் பற்றிய சித்திரத்தை முன்வைக்கும் நகரம் வசன கவிதை , கானாமல் போன மரப்பாச்சி பொம்மையை போல தானும் கானாமல் போவது எப்படி என ஏங்கும் மரப்பாச்சி கவிதை, குழந்தைமையின் நாட்களை இழந்துவிட்டதின் ஏக்கத்தை முன்வைக்கும் சிறுவன் ததாதிதீ கவிதை , தினம் தினம் கொலை செய்யப்படுகிறது என் பிணம் என ஒவ்வோரு நாளின் இருத்தல் சார்ந்த துயரை பேசும் கொலையுறு பிணம்,மேடையில் தன் வசனங்களை பேச இயலாமல் பொருத்தமில்லாத வசனங்களை பேச நேரும் மேடை கவிதை , சதா கண்காணிக்கப்படும் சித்திரத்தை தரும் சுதந்திரம் கவிதை ஆகியவற்றை ஒருவகையில் இருத்திலியம் சார்ந்த கவிதைகள் என்று வகைமை படுத்தலாம்.இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவது தேவையற்றது என்றும் இது போன்ற கவிதைகள் நிறைய எழுதப்பட்டிருக்கிறது என்றும் ஒரு சொல் இருக்கிறது. ஆனால் அதை ஒரு கவிஞன் பொருட்படுத்த தேவையில்லை என்று தான் நான் சொல்வேன். வேறு எப்போதும் விட இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இயந்திரம் போல இருக்கிறோம். கான்கீரிட்டின் இறுக்கத்தை பொறுக்க முடியாமல் மூச்சு விட கட்டிடத்தை விட்டு கொஞ்ச நேரம் சாலையில் வந்து நின்றுகொள்வேன் நான் அவ்வப்போது. ஆக இது ஒரு சூழலின் பிரச்சனை.அது பாடுபொருளாக இருக்கத்தான் செய்யும்.அந்நியமாதல் இருக்கையில் இருத்தலியம் சார்ந்த கவிதைகள் இருப்பதில் என்ன தவறு.ஆட்டத்தின் விதிகளில் இல்லாமல் என்னை சற்று வெளியே உலாவ விடுங்கள் என்கிற ரீதியிலான கவிதைகளும் இதில் இருக்கின்றன.ஊழியன் & கம்பெணி(பி) லிமிடெட் ஒரு படைப்பாளி தன் ஆளுமையை எப்படி ஒரு நிர்வாகத்திற்கு தகுந்தாற் போல கத்திரித்து கொள்ள வேண்டிருக்கிறது என்பது பற்றிய கவிதை.என் பகல் நேரத்தை எடுத்துக்கொள்கிறாய் இரவையாவது எனக்குக் கொடு என்று பண நோட்டில் இருக்கும் கானுறை வேங்கையிடம் இரைஞ்சும் சித்திரம்தான் கானுறை வேங்கை கவிதை.ஆட்டம் ,Mr.இடியட் என்ற கவிதையும் ஆட்டத்தின் விதிகளை பற்றிய கவிதை தான்.

இந்த வகையான மேலே சொன்ன தொகுப்புக்குள் அடங்காத கவிதைகளும் நிறைய இந்த தொகுப்பில் இருக்கின்றன். எனக்கு இந்த தொகுப்பில் மிகவும் பிடித்த கவிதை ஈரச்சாட்சி.மழை , ஜன்னல் வழியாக தூக்கு மாட்டும் ஒருவனை பார்க்கும் காட்சி மிகுந்த கவித்துவமானது.சட்டென்று ஒரு சித்திரத்தை மனதில் கொண்டு வந்து விடுகிறது.இன்றைய விளம்பரங்களை பற்றிய ஒரு நல்ல கிண்டல் தேவ செய்தியாளர்கள்.இந்த கவிதை தொகுப்பில் தேவையற்றது என்ற தோன்றிய கவிதை - கவிதையாம்... என்ற கவிதை.

காயசண்டிகை - இளங்கோ கிருஷ்ணன் - காலச்சுவடு வெளியீடு.



மஞ்சள் வெயில்



நண்பர் ஒருவர் ஒருமுறை ஒரு ஐந்தாறு புத்தகங்களை ஒரு பாலிதீன் பையில் போட்டு என்னிடம் வந்து நீட்டினார். என்னவென்றேன். தன் இருப்பிடத்தில் புத்தகங்களை வைத்து கொள்ள இடமில்லாததால் இவற்றை உங்கள் வீட்டில் வைத்து கொள்ளுங்கள் என்றார். எனக்கு அவர் காரணம் பிடிக்கவில்லை. வாங்க மறுத்தேன். அவர் திணித்தார்.அதற்கு மேல் எதிர்ப்பை காட்டாமல் வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு ஒரத்தில் கிடத்தினேன். பிறகு சில நாட்கள் கழித்து அதில் உள்ள புத்தகங்களை எடுத்து என் புத்தக அலமாரியில் அடுக்கினேன். அப்போது பிரமளின் கவிதை தொகுப்பை எடுத்து புரட்டினேன். நிறைய கவிதைகள் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தின.அது போல ஏதேர்ச்சையாக இணைய தளங்களில் உலாவி கொண்டிருந்த போது இன்று என்ன செய்யலாம் என்று மணம் யோசித்து கொண்டிருந்தது. சட்டென்று புத்தக அலமாரியிலிருந்து நண்பர் கொடுத்திருந்த மஞ்சள் வெயில் புத்தகத்தை அடுக்குகளிலிருந்து உருவினேன். என் மிக நெருங்கிய நண்பர் பட்டுக்கோட்டை ஹவுசிங் யூனிட்டின் இரவுக் காவலராக இருந்த திரு.வி.கே.பாலகிருஷ்ணன் (நிறுவனர் : பழஞ்சூர் தமிழ் முற்றம்) அவர்களின் நினைவுக்கு அடிபணிந்து.... என்றிருந்தது. தொடர்ந்து வாசிக்கலாமா அல்லது வேறு எதாவது புத்தகத்தை வாசிக்கலாமா என்று எண்ணியவாறு அடுத்த பக்கத்தை புரட்டினேன். அன்பிற்குரிய ஜீவிதா... என்று ஆரம்பமான வரிகளை வாசித்த பின் தொடர்ந்து சில பக்கங்களை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவித்துவமான வரிகள்.சட்டென்று உள்ளிக்கப்பட்டேன். தொடர்ந்து வாசித்து முடித்தேன். தான் விரும்பிய பெண்ணுக்கு எழுதப்பட்ட கடிதம் தான் இந்த நாவல் அல்லது குறுநாவல். ஒரு தன்னிலை விளக்கம். கூச்ச சுபாவமும் வெட்கமும் பிறவி குணங்களாகி போன கதிரவன் ஒரு பெண்ணுக்கு எழுதிய கடிதமே இந்த மஞ்சள் வெயில்.இந்த புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் சிலவற்றில் நான் என்னை பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட கதிரவன் அளவுக்கே வெட்கமும் கூச்சமும் உடையவன் தான் நானும்.ஒரு மாதிரி வேலையிடங்களில் பொது இடங்களில் சமாளித்து கொள்வேன். அதுவே நாவலின் ஆரம்ப பக்கங்களில் வசீகரத்தை ஏற்படுத்தியது. பெண்களிடத்தில் மட்டும் கூச்சம் அடைகிறவர் அல்ல கதிரவன். ஒரு முறை தான் முகப்வோவியம் வரைந்த கவிதை புத்தக வெளியீட்டு விழாவில் தன்னை மேடைக்கு அழைக்கும் போது கூச்சம் மிகுந்து வெளிறி போகிறார் கதிரவன்.ஆக அது அவர் குணம். அவர் ஒரு தினச்செய்தி அலுவலகத்தில் ஃப்ரிலென்ஸர் ஒவியராக பணிபுரிகிறார்.அதே அலுவலகத்தில் கம்ப்யூட்டர் செக்ஷ்னில் பணிபுரியும் ஜீவிதா என்ற பெண்ணிற்கு அவரின் ஒவியங்கள் , கவிதைகள் பிடித்திருக்கிறது. அவரை சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். அங்கே தான் கதிரவனின் பதற்றம் ஆரம்பமாகிறது. சந்திப்பதில் ஏற்படுக்கூடும் கூச்சமும் வெட்கமும் காரணமாக சந்திப்பை தவிர்க்கிறார். பிறகு சந்தித்திருக்கலாமோ என்று கவலைப்படுகிறார். குடிக்கிறார். சீகரெட் பிடிக்கிறார்.கடற்கரையில் போய் உட்கார்ந்து கொள்கிறார். பின்பு சிலநாள் கழித்து தைரியத்தை வரவழைத்து கொண்டு ஒரு ஜனசந்தடி அற்ற டெலிபோன் பூத்திற்கு சென்று பேசிகிறார்.கடைசியில் பேசியும் விடுகிறார். அவளுக்கு ரோஜா ஒன்றை தருகிறார். அதை அவள் ஏற்றும் கொள்கிறாள். அவள் அவரை காதிலிப்பதாக அவர் நினைக்கிறார். இதற்கிடையில் அவள் அலுவலகம் வருவது நின்று விடுகிறது. விசாரிக்கையில் அவளின் சம்பளமும் அவள் மேல் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவள் என்பதும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவளை காதிலிப்பது பைத்தியாகாரத்தனம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கதிரவன் தொலைபேசியில் முயற்சித்தபடியே இருக்கிறார். பேசுகிறார். தன் விருப்பத்தை சொல்கிறார்.அவள் தான் அப்படி நினைக்கவில்லையே என்று மறுப்பு தெரிவிக்கிறாள். மறுநாள் ஒருவன் அவரை அழைத்து பேசுகிறான். அடிக்கவும் செய்கிறான். அவமானத்தால் ஊரை விட்டு போய்விடலாம் என்று நினைக்கும் போது மறுபடியும் அவளுக்கு தொலைபேசுகிறார். அவள் நாளை அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று பொய் சொல்கிறாள். அவளுக்காக தான் எழுதிய எல்லா கவிதைகளையும் ஒன்றாக்கி ஒரு காகித உறையில் சில ரோஜா இதழ்களை சேர்த்து அடுத்த நாள் அலுவலகத்திற்கு எடுத்து செல்கிறார். அவள் வரவில்லை.அவள் அமெரிக்கா சென்று விடுகிறாள். அதை அறிந்து தொடர்ந்து அவளுக்கு ஒரு வருடமாக வாழ்த்து அட்டைகளையும் , தான் வரைந்த ஒவியங்களையும் ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியபடியே இருக்கிறார். அவளின் எதிர்கால வாழ்க்கைகான வாழ்த்துகளுடனும் கடிதத்தை முடிக்கிறார் கதிரவன். நாவலும் முடிகிறது.

இந்த புத்தகத்தை யூமா வாசுகி பாலகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.பாலகிருஷ்ணன் இரவுக் காவலராகவே நாவிலும் வருகிறார்.சூரியோதத்தை கண்டு பரவசம் அடைபவராக,தன் பனைமரத்திலிருந்த பச்சைக்கிளிகளுக்காக பனைமரத்தை விற்பதற்கு மணமில்லதாவராக , தோழரே என்று கதிரவனை விளிப்பவராக மிக அற்புதமான நுண்ணுணர்வு கொண்டவராக இருக்கிறார் பாலகிருஷ்ணன். தன் மகள் நஜ்மா இறந்து போனதில் மனம் பிறழ்ந்தவராக அவள் எங்கேனும் விளையாட சென்றிருப்பாள் என்று நினைத்து தேடியபடியே இருக்கும் சுலைமான் சேட், நாடோடி உருதுப் பாடகனான கான் முகம்மது ,அவனை வீட்டு நீங்காதிருக்கும் பெரிய சிம்னிவிளக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியும் , நாவலில் தொடர்ந்து வந்தபடியே இருக்கும் குழந்தைகள், அக்குழந்தைகளுக்கு படம் வரைந்து தந்தபடியே இருக்கும் கதிரவன் , அலுவலகத்தில் சக ஊழியராக வரும் சந்திரன் என்று மிகவும் கவித்துவமான குறும்கதாபாத்திரங்களும் இடங்களும் நாவல் முழுதும் வருகின்றன.குழந்தைகள் என்னும் போது கதிரவன் மிகந்த பரவசமும் குழந்தைமையும் கொண்டவராக இருக்கிறார். இலக்கியா வந்து அங்கிள் நீங்கள் என் பூவை திருடிவிட்டீர்களா என்று கேட்குமிடம் மிக அற்பதமான இடம்.

நாவலின் இறுதியில் ஒரு கிழவி தன் மகன் கொலைசெய்யப்பட்டதையும் இருந்த குடிசையை ஒடித்து போட்டதையும் சொல்லி புலம்பியபடியே ரயிலில் வருகிறாள்.அவளில் தன்னை கண்டுகொள்கிறார் கதிரவன். ஜீவிதா இல்லாமல் தானும் அந்தக் கிழவியை போல அநாதையாக்க பட்டதாக உணர்கிறார். பல இடங்களில் தன்னை மரணத்திவிட்ட ஒருவனைபோலவும் கொடும்பாவி போலவும் நினைத்துகொள்கிறார். எப்போதும் லெளகீகம் தான் வெல்கிறது என்று ஒரு வரி வருகிறது. மிக நல்ல வரி. கதிரவன் எல்லா வற்றையும் புரிந்து கொள்கிறார்.ஆனால் அவரால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. அதைப்போல ஜீவிதா தான் காதலிக்கவேயில்லை என்றும் அமெரிக்கா செல்லும் அன்று அலுவலகம் வருவதாக பொய் சொன்னதை நினைத்து நீங்கள் சிறுபெண் என்று சொல்கிறார்.அதுவும் மிக நல்லதொரு இடம். மிகவும் மெண்மையானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். புதிய கூண்டு கதையில் மூத்த சகோதரனை மிகவும் மெண்மையானவனாக காண்பிக்கும் புதுமைப்பித்தன் அவனே காதல் வயப்படுபவனாகவும் மதமாறுபவனாகவும் வருவதை காட்டுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் தான் வெட்கமும் கூச்சமும் உடையவரகளாக இருக்கிறார்கள்.அவர்களே பெரும்பாலும் காதல் வயப்படவும் செய்கிறார்கள்.அவர்களே தங்களை வதைத்தும் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவரை பற்றிய தன்னிலை விளக்கமே மஞ்சள் வெயில்.யூமா வாசுகி கவிஞராக இருப்பது அவருக்கு இந்த நாவலை எளிதில் எழுத உதவியிருக்கக்கூடும்.வராந்தாவில் படரும் மஞ்சள் வெயில் தனிமையின் படிமம்.எல்லாவற்றாலும் தனிமையில் விடப்பட்ட தனிமையின் படிமம்.

மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி - அகல் வெளியீடு.



புதுமைப்பித்தன்



புதுமைப்பித்தன் சிறுகதைகளை வாசிக்கும் போது அதிலுள்ள உயிர்த்துடிப்பு நம்மை மிகவும் பரவசமடைய வைக்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அதை நம்பிக்கை வரட்சி என்ற சட்டகத்துக்குள் நாம் கொண்டு வரலாம். பாரதி கோபலயங்காருக்கும் ஒரு இடையர் பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை ஒரு லட்சியவாதத் தண்மையோடு முன்வைக்கையில் அதற்கு இரண்டாம் பாகம் எழுதுகிறார் புதுமைப்பித்தன். அப்படி லட்சியவாதத்தோடு நடந்த திருமணம் எப்படி இருக்கிறது என்கிற போது அதில் வரும் தினசரி உணவு பிரச்சனையை பேசுகிறார். லட்சியவாதம் என்று எழுதிவிடலாம்.ஆனால் அதை வாழும் போது ஏற்படும் தினசரி பிரச்சனைகள் புதுமைப்பித்தனின் அக்கறைகள் இருக்கின்றன. அவர் பலதரப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். டாக்டர் சம்பத், நானே கொண்றேன் , குற்றவாளி யார் போன்ற வெறும் துப்பறியும் கதைகள் எழுதியிருக்கிறார். கீழ் மத்தியத்தர வாழ்க்கையின் பிரச்சனைகள் என்று ஒரு நாள் கழிந்தது , வெளிப்பூச்சு, சுப்பையா பிள்ளையின் காதல்கள் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் பாடுகள் என்ற ரீதியில் வழி,கலியாணி, வாடா மல்லிகை, பாட்டியின் தீபாவளி,சாப விமோசனம் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். கொடுக்காபுளி மரம் , புதிய கூண்டு , நியாயம் , அவதாரம் போன்றவை கிறுஸ்துவ மதத்தை சார்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் என்றும் சொல்லலாம்.அப்படியென்றால் அவர் ஹிந்து மத்த்தை விமர்சனம் செய்யவில்லையா என்றால் அப்படியல்ல.அவர் ஒரு மதமாற்றத்திற்கு புதிய கூண்டு என்று தான் பெயர் வைக்கிறார்.பழையது ஹிந்து மதம் என்றால் புதியது கிறுஸ்துவ மதம் என்கிற ரீதியில். பொன்னகரம், கவுந்தனும் காமனும்,மகாமசானம் போன்ற நகரத்தின் இருண்ட பக்கங்களை பற்றிய கதைகளையும் எழுதியிருக்கிறார். மனிதன் தன்னை ஒரு இயந்திரம் போல தினசரி வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்பவன் , அதிலிருந்து அவன் வெளியில் வருவது அவனே நினைத்தாலும் இயலாது. மனித யந்திரம் , இது மிஷின் யுகம் ! அது போன்ற கதைகள். புதுமைப்பித்தன் தொடர்ந்து ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கிறார். கருத்துதளத்தில் நீங்கள் பேசும் விஷயங்கள் எல்லாம் யதார்த்த தளத்தில் என்னவாக இருக்கின்றன என்று பாருங்கள்ளய்யா என்கிறார். இந்த கேள்வியை நீங்கள் ஜே.ஜே.சில குறிப்புகளிலும் பார்க்க முடியும்.இவருடைய கதைகளில் பரஸ்பர அன்பு ஒரு மனிதர் மீது மற்றொரு மனிதர் செலுத்தக்கூடியதாக வருகிறதென்றால் அது கணவன் மனைவி உறவே. செல்லம்மாள் , பொய்க் குதிரை , ஒரு நாள் கழிந்தது,உணர்ச்சியின் அடிமைகள் போன்ற கதைகளில் அன்பு , உறவில் ஒரு மலர்ச்சி இருப்பதை பார்க்க முடியும். பரஸ்பர அன்பு உருவாக முடியாமல் கணவன் மனைவி தனித்தனி உலகங்களில் வாழும் இரண்டு உலகங்கள் கதையையும் எழுதியிருக்கிறார். எதிர்மறையாக பால்வண்ணம் பிள்ளை கதையில் ஒரு ஆண் தன் அதிகாரத்தை குடும்பத்தில் எப்படி செலுத்துகிறான் என்பதையும் எழுதுகிறார். காந்தியை பற்றி , பெரியாரை பற்றி புதுமைப்பித்தன் என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை புதிய நந்தன் கதையில் நாம் பார்க்கலாம். இரண்டு போக்குகளையும் ஒரளவுக்கு ஆரோக்கியத்தோடே அவர் பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. மனிதனின் நண்மை குணங்கள் மீது அவருக்கு பெரிய அபிப்பிராயம் இல்லை தான் என்றாலும் சங்குத்தேவனின் தர்ம்ம் போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய ஹாஸ்ய கதை என்றால் அது திருக்குறள் செய்த திருக்கூத்து. ஆற்றங்கரைப் பிள்ளையார் கதையில் பிள்ளையார் என்பது மனிதன் என்பதன் குறியீடு. அதுவும் இந்திய பிரஜை என்பது முக்கியம்.அவனை சமன , புத்த, இஸ்லாமிய, சங்கர, ராமானுஜ, மாதவச்சாரிய தத்துவங்கள் , கிறுஸ்வ மதங்கள் போட்டு துன்புறுத்துகிறது என்று எழுதுகிறார். இதில் பிள்ளையார் என்பது மனிதன் என்பது போல ஆறு என்பது காலத்தின் குறியீடாக வருகிறது. ஒப்பந்தம் என்கிற கதையில் ஒரு வாசகனின் கற்பனைக்கு என்று அவர் எதையும் விட்டுவைக்கவில்லை.வரதட்சனை பற்றிய மிக தீவரமான விமர்சனத்தை முன்வைக்கும் கதை அது. கோபல்லயங்காரின் மனைவி போல தனி ஒருவனுக்கு என்ற கதையில் தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி எழுதியதற்கு ஒரு எதிர்வினை போலவே தனி ஒருவன் உணவில்லாமல் இறந்து விடுவதும் , அதன்பின் பாரதி பாடலை தாங்கள் கேட்டு ரசிப்பதையும் பதிவு செய்கிறார். தெரு விளக்கு என்று ஒரு கதை .ஒரு கிழவனையும் ஒரு தெரு விளக்கையும் பற்றியது. கிழவனுக்கு என்று இருந்த தெரு விளக்கு உடைந்து போகிறது. ஒரே இருள். அடுத்த நாள் கிழவன் இறந்து போகிறான். இவ்வளவுதான் கதை. ரா.ஸ்ரீ.தேசிகன் இதற்கு விளக்கம் எழுதுகையில் வாழ்க்கையில் இருளில் விடப்பட்ட அனாதைகள் பற்றிய கதை என்று எழுதுகிறார். இப்படியொரு வாசிப்பு எனக்கு எப்போது சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. சாப விமோசனம் , தனி ஒருவனுக்கு, கோபாலயங்ங்காரின் மனைவி,நன்மை பயக்குமெனின்,அகல்யை போன்ற கதைகள் அவரின் வாசிப்பின் மீது சமூக யதார்த்த்த்தில் நின்று செய்யும் எதிர்வினை என்றும் கொள்ளலாம.சிற்பியின் நரகம் கதை பைலார்க்ஸ் சாத்தனிடம் அதற்கு நீ இந்த சிலையை போட்டு உடைக்கலாம் என்று சொல்வது போல இறுதியில் சாத்தன் கானும் கனவில் முடிகிறது.கனவில் அவன் சிலையை போட்டு உடைக்கிறான்.காஞ்சனை போன்ற சில அமானுஷ்ய தன்மையிலான கதைகளையும் எழுதியிருக்கார். சட்டென்று தினசரி வாழ்வை விட்டு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் கதாபாத்திரங்களை கொண்ட உபசேதம், சித்தி, அவதாரம்,ஞானக்குகை போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார்.மிகவும் சாதாரண மனிதர்கள் அதிகார பீடங்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் என்கிற ரீதியில் மனக்குகை ஒவியங்கள், காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் , வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகள் வருகின்றன.ஒரு வகையில் அவரின் கதைகளை தொகுத்து பார்க்கும் தளத்தில் தான் இவற்றை மேலே தொகுத்திருக்கிறேன். மற்றபடி ஒவ்வொரு கதையையும் பற்றி தனித்தனியே பலரும் எழுதியிருக்கிறார்கள்.

நாம் விரும்பும் இஷ்ட லோகத்திற்கும் , துஷ்ட லோகத்திற்குமான (தற்போதைய நிலைமை) ஒரு முரணியக்கம் தான் படைப்பு என்று ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதியிருப்பார். புதுமைப்பித்தனுக்கும் ஒரு இஷ்ட லோகம் உண்டு. ஆனால் அவர் லட்சியவாதி அல்ல. இஷ்டலோகம் என்பதெல்லாம் சரி.தற்போதைய நிலைமை இப்படித்தானே இருக்கிறது. மனிதன் இப்படித்தானே இருக்கிறான் என்று வினவுகிறார். நிறைய புத்தகம் படிக்கும் ஒருவர். தான் செய்யும் ஆராய்ச்சிக்காக ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து பக்கத்து வீட்டு நண்பரின் மகனை எடுத்து வரச்செய்கிறார்.பின்பு அது தொலைந்து போய்விட்டது என்று பொய் சொல்ல சொல்கிறார்.இந்த கதைக்கு அவர் தரும் தலைப்பு நன்மை பயக்குமெனின். பொய்மையும் வாய்மை இடத்த நன்மை பயக்குமெனின் என்பதை கிண்டல் செய்கிறார். இவர் அநேகமாக எல்லாவற்றையும் கிண்டலும் கேலியும் செய்கிறார். அதன் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்.புத்தகம் வாசிப்பது , ஆராய்ச்சி செய்வது அறிவு அபிவிருத்திக்காக என்கிற போது இந்த பொய்யின் மூலம் அப்படி புத்தகம் வாசித்து என்ன அவர் அறிவு அபிவிருத்தி கண்டுவிட்டார் என்று அவர் கேள்வி எழுப்புகிறார் என்றும் கொள்ளலாம். கிண்டலும் , கேலியும் இருந்தாலும் அதற்கு பின்னால் அவருக்கு மனிதர்கள் மீது அன்பு இருக்கிறது. அதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். இப்படி இருக்கிறதே என்று தான் அவர் ஆதங்கப்படுகிறார்.அந்த ஆதங்கம் தான் கிண்டலாகவும் , கேலியாகவும்,விமர்சனமாகவும் வெளி வருகிறது.இதை உணர்ந்து விட்டால் நாம் புதுமைப்பித்தனோடு எளிதாக உரையாடலாம். அவர் கரங்களை பற்றிக்கொண்டு அவருடைய ஆதங்கத்தில் நாமும் பங்கு கொள்ளலாம்.





மானுடம் வெல்லும்



1735ம் ஆண்டிலிருந்து 1740 வரை புதுச்சேரியை ஆண்ட குவர்னர் துய்மா துரையின் காலத்தில் புதுச்சேரி , தஞ்சை , திருச்சி , ஆற்காடு , மராத்தியர் அரசாங்களை பற்றிய ஒரு குறுக்குவெட்டு பார்வை என்று மானுடம் வெல்லும் நாவலை பற்றி சொல்லலாம்.துரை துய்மாவின் சின்ன துபாஷியான  ஆனந்தரங்கப் பிள்ளை நாள் தோறும் எழுதிய நாட்குறிப்புகளில் 1735யிலிருந்து 1742வரையான நாட்குறிப்புகளின் தொகுப்பே இந்த மானுடம் வெல்லும். இதில் முக்கியமாக பதிவாகியிருப்பது காரைக்கால் மற்றும் அதை சுற்றிய ஊர்கள் எப்படி புதுச்சேரி வசமானது என்ற வரலாறு, மதுரையை ராணி மீனாட்சி அம்மாளிடமிருந்து ஏமாற்றி பறித்த சந்தா சாயபு என்ற ஆற்காடு நவாபின் மருமகன் பற்றிய வரலாறு, தஞ்சையை ஆண்ட காட்டு ராஜா சித்துஜி அவரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் சாயாஜி மன்னர் பற்றியும் அவரை கொன்று ஆட்சியை கைப்பற்றும் பிரதாப் சிங்கின் வரலாறும், இந்த மூன்று நிலங்களின் எளிய மக்களின் வரலாறும் சேர்ந்தது தான் பிரபஞ்சன் எழுதிய நாவல் மானுடம் வெல்லுமின் சாரம்.இந்த நாவலை அவர் வெறும் அரசியல் விளையாட்டுகளை பற்றியதாக மட்டுமானதாக எழுதியிருக்கலாம்.அது எளிதும் கூட. ஆனால் கோகிலாம்பாள் எனும் தாசியிலிருந்து , வெள்ளைபூண்டு என்ற விவசாயிலிருந்து , குருசு , வரதன் என்ற ஊழியனிலிருந்து பல சிறு சிறு கதாபாத்திரங்களாக வரும் எளிய மனிதர்கள் வரலாறும் இதில் பதிவாகியிருக்கிறது.அதுவே இந்த நாவலின் பலம்.ஏன் பிரபஞ்சன் இப்படி செய்தார் என்பதற்கு அவரே முன்னுரையில் விளக்கம் அளித்துள்ளார்.வரலாறு என்பது சாமான்ய மக்களின் கதை என்று. இது ஒரு மார்க்சியப் பார்வை. வரலாறு என்பது ஆட்சியாளர்களின் காலங்களை பிரிப்பது அல்ல.அது எளிய மக்களின் வாழ்க்கையில் இருக்கும் உற்பத்தி உறவுகள் , உற்பத்தி சக்திகளை பற்றிய ஆவணமே என்று கோசாம்பி முதலான மார்க்சிய வரலாற்றாசியர்கள் சொல்ல ஆரம்பித்தனர். கோசாம்பி ஒர் இடத்தில் இந்த மார்க்சியப் பார்வையை ஏன் உபயோகபடுத்துகிறேன் என்றால் இது வேலை செய்கிறது என்பதால் தான் என்கிறார்.ஆட்சியாளர்களின் மாற்றமும் , ஆட்சி மாற்றமும் சாமான்யன் வாழ்க்கையில் எந்த உற்பத்தி முறையிலான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பதே உண்மை.இந்த பார்வையை பிரபஞ்சன் ஏற்றுக்கொண்டு தன் படைப்பில முயன்றிருக்கார் என்பதே இந்த நாவலின் வெற்றி. ஆனால் இது முழுமையான வெற்றியா என்கிற போது ஒரு கேள்வி எழுகிறது. பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாக வைத்தே தன் நாவலை எழுதியிருக்கார்.ஆனால் அதிலிருந்து சிறிதளவு கூட தகவல்களில் பிசிறி விடக்கூடாது என்று பிரபஞ்சன் பதறியிருக்கார் என்பதாக படுகிறது.இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக அவர் செயல்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நாவலின் முக்கியமான தரிசனமாக எனக்கு படுவது இதுதான். நாம் இருத்தலியம் என்கிறோம், மறுப்புவாதம் என்கிறோம் , ஆனால் அந்த காலத்தில் போர்களின் போது எளிய மனிதர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு தரிசனம் மேலெழுந்து வருகிறது.நேற்றைய மனிதர்கள் ஏதோ கிராமங்களில் எழில்சார்ந்த சூழலில் சுகமாக வாழ்ந்தார்கள் என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் இருக்கிறது. அது எத்தனை முட்டாள்தனமானது என்று மானுடம் வெல்லும் நாவல் பல்வேறு வாழ்க்கைகள் முழுமாக தொடர்ந்து நிரூபித்திருக்கிறது.எழில் நிறைந்த கிராமிய சுழல்கள் எப்படி சுரண்டல் நிறைந்ததாக இருந்தது என்பதும் அடிமைகள் பண்டங்கள் போல மாற்றப்பட்டார்கள் என்பதும் மிக முக்கியமான ஆவணங்கள்.மிக முக்கியமான வரலாற்று நாவல்.பிரபஞ்சனின் உழைப்பு வணக்கத்திற்குரியது.



மானுடம் வெல்லும் - எழுத்தாளர் பிரபஞ்சன் - கவிதா வெளியீடு.

புதிய விழுமியங்கள்






                                                                         1

 
ஸ்ரீனிவாசராவ் மனம் விம்மி அழுது கொண்டிருந்தான்.ராஜன் அவனை சமாதானம் செய்யாமல் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஸ்ரீனிவாசராவ் மறுபடி மறுபடி நான் பெறும் தவறு இழைத்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.கொஞ்ச நேரம் ராஜன் அமைதி காத்தான்.பின்னர் மிகவும் கோபமாக அப்படி என்னத்தான் செய்து விட்டாய் என்று கத்தினான். ஸ்ரீனிவாசராவ் அழுகையை நிறுத்தினான்.

நான் செய்தது தவறல்லவா?

என்ன தவறு செய்தாய்.

நான் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்த காலத்தில் என் மீது பரிதாபப்பட்டு அக்கறை கொண்டு என்னை தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து கொண்ட மனிதருக்கு துரோகம் செய்து விட்டோம் என்று நினைக்கையில் மனம் விம்முகிறது.அவருக்கு எதிராக தொழில் தொடங்கும் எண்ணம் என் மனதில் எப்படி முளைத்தது என்றே எனக்கு தெரியவில்லை.இன்று நான் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று செல்கையில் மேற்கொண்டு என்ன செய்ய விருப்பம் என்று அவர் கேட்ட போது நான் இந்த தொழிலை தனியாக ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்ன போது அவர் என்னை பார்த்த பார்வை இருக்கிறதே.இப்படிப்பட்ட துரோகத்தை உன்னால் எப்படி செய்ய முடிந்தது என்று கேட்காமல் கேட்டார்.

நீ ஒரு பைத்திக்காரன் என்றான் ராஜன்.

ஏன் அப்படி சொல்கிறாய்.அவருக்கு நான் துரோகம் இழைத்து விட்டது உண்மைதானே.

நீ சொல்வது விசுவாசம் என்ற விழுமியம்.இந்த விசுவாசம் என்ற விழுமியத்திற்கு நவீன முதலாளித்துவ காலத்தில் சுத்தமாக இடமில்லை. இந்த விசுவாசம் , உன்னதமாக்கல் போன்ற விழுமியங்கள் எப்போதோ காலவாதி ஆகிவிட்டன.இன்று சந்தை தான் எஜமான். திறமை கொண்ட எவர் வேண்டுமானாலும் அதில் போட்டி போடலாம். யாரும் தடுக்க முடியாது.

அப்படியென்றால் எல்லா விழுமியங்களும் இறந்துவிட்டனவா.

நிலப்பிரத்துவ காலத்து விழுமியங்கள் எல்லாம் எப்போதோ இறந்துவிட்டன.

ஸ்ரீனிவாசராவ் மேற்கொண்டு அழவில்லை. அப்போது ஸ்ரீனிவாசராவ் பார்க்க ஒருவன் வந்தான்.தன்னை அஸ்வத்தாமன் என்று அறிவித்துக்கொண்டான். ஸ்ரீனிவாசராவ் அஸ்வத்தாமனும் தன்னோடு தொழிலில் ஈடுபடபோவதாக ராஜனிடம் சொன்னான்.ராஜன் மிக்க மகிழ்ச்சி என்று அஸ்வத்தாமனிடம் கை குலுக்கினான்.

ஸ்ரீனிவாசராவ் தான் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று சொல்லி அஸ்வத்தாமனிடம் ராஜனுடன் பேசி கொண்டியிருக்கம்படி சொல்லி கிளம்பினான்.

ராஜன் ஸ்ரீனிவாசராவ் சென்றபின் அஸ்வத்தாமனிடம் ஸ்ரீனிவாசராவ் அழுது கொண்டிருந்த விஷயத்தையும் சொன்னான்.இருவரும் மகிழ்ச்சியாக சிரித்துகொண்டார்கள்.

                                                                         2

 
ராஜன் சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தான். மனித சடலம் தான். சற்று நேரத்துக்கு முன்வரை அவன் ஆரோக்கியமாக இருப்பது போலத்தான் இருந்தான்.நல்ல தேஜஸ் நிரம்பிய முகம். பார்க்கையில் அவன் தூங்குவது போல இருந்தது. ராஜன் இனி என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தான். பழகிய ஒரு மணிநேரத்தில் அவனது பெயரை மட்டும் அறிந்திருந்தான் அஸ்வத்தாமன் என்பது பெயர். காற்று பலமாக வீசியது. சடலம் அசைந்தது.ஒரு தீ பிளம்பு சுற்றி எழுவதுபோல அஸ்வத்தாமன் எழுந்து கொண்டான். ராஜன் பயந்து போனான். அப்படியென்றால் நீ இறக்கவில்லையா என்று அலறியபடி கேட்டான். நான் இறந்துதான் விட்டேன் என்று சாந்தமாக பதில் சொன்னான் அஸ்வத்தாமன். அப்படியென்றால் இப்போது எப்படி பேசுகிறாய்..? எப்படி யென்றால் நான் இப்போது உயிர்பெற்றுவிட்டேன். அது எப்படி சாத்தியம். ஏன் சாத்தியமில்லை என்று வினவினான் அஸ்வத்தாமன்.எழுந்து அறையின் குறுக்காக நடந்தான்.

இறந்து போயிருந்த இந்த கொஞ்ச நேரத்தில் நீ எங்கு சென்றாய்.

நான் எங்கும் செல்லவில்லை.செல்வதற்கு சொர்க்கம் நரகம் என்று ஏதேனும் இருக்கிறது என்று இன்னும் நினைத்துகொண்டிருக்கிறாயா.பைத்தியகாரா.

அப்படியென்றால் இந்த சில மணிநேரத்திற்கு உன் உயிர் எங்கு சென்றது?

அது எங்கும் செல்லவில்லை. ஏன் எல்லோரும் ஒருவன் இறந்து விட்டால் மேலேயே பார்க்கிறீர்கள். பூமியின் ஈர்ப்புவிசை காரணமாக ஏன் உயிர் கீழே செல்லகூடாது. நரகம் கூட மேலே தான் இருக்கிறதா? கிண்டலாக சிரித்தான் அஸ்வத்தாமன்.

நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை.அப்படியென்றால் சொர்க்கம் நரகம் என்று எதுவும் இல்லை என்கிறாயா.

ஆம்.

சரி.உயிர் பிரிந்தபின் உடலில் இருந்து அது எங்குத்தான் செல்கிறது.

உயிர் உடலைவிட்டு பிரிவதுமில்லை. சேர்வதுமில்லை.உடல்தான் உயிர்.உயிர்தான் உடல்.

ராஜன் திகைத்து போய் அமர்ந்திருந்தான்.

சொர்க்கம் நரகம் என்ற கருத்துலகங்கள் இல்லையென்றால் நல்லது தீயது என்ற கருத்துகளுக்கே அர்த்தம் இல்லையே.

ஆம்.இல்லை.

அப்படியென்றால் கடவுள்.

கடவுள் இறந்துதான் பலகாலம் ஆகிறதே.இன்னும் அவரை விடவில்லையா நீங்கள்.

அப்படியென்றால்..

அப்படித்தான்.கடவுள் இறந்துவிட்டார் என்பது ஒரு உண்மை. கடவுள் இறந்த சில காலம் கழித்து நல்லது தீயதுக்கான விழுமியங்களும் இறந்துவிட்டன.

இது எப்படி நிகழ்ந்தது.எனக்கு தெரியாதே. கடவுளை யார் கொன்றது.

நாம் தான்.

நாம்!

ஆமாம் நாமேதான்.

எப்படி.

விஞ்ஞானத்தின் மூலம்.

விஞ்ஞானம் எப்படி கடவுளை கொல்ல முடியும்.நீ என்னை குழுப்புகிறாய்.நீ ஒரு மூடன்.

நான் மூடன் அல்ல.நீங்கள் எல்லோரும் தான் மூடர்கள்.கடவுள் இறந்துவிட்டார். அவர் இறந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. விஞ்ஞானத்தின் துணைக்கொண்டு அவர் கொல்லப்பட்டார்.

விஞ்ஞானம் எப்படி கடவுளை கொன்றது என்கிறாய்.எனக்கு புரியவில்லை.

நீ ஒரு அசடன்.இன்னும் உனக்கு புரியவில்லையா. நல்லது தீயது என்ற அடிப்படை எதன் பெயரால் உருவாக்கப்பட்டது.

கடவுளின் பெயரால்.

விஞ்ஞானம் சிறிது சிறிதாக நல்லது மற்றும் தீயதின் விழுமியங்களை கடவுளிடமிருந்து பிடுங்கிவிட்டது. நல்லது தீயது பிடுங்கப்பட்டபின் நிராயுதபாணியான கடவுள் ஒரே அடியில் வீழத்தப்பட்டார்.

கடவுள் இறந்தபின்தான் நல்லது தீயது இறந்தது என்றாயே.

ஆம். அது ஒரு முரணியக்கம்.

அப்படியென்றால் இப்போது விழுமியங்களும் இல்லை கடவுளும் இல்லை என்கிறாயா.

ஆம்.அப்படித்தான்.

அப்படியென்றால் நாம் எதன் அடிப்படையில் வாழ்வது, நமக்கான அறமும் , விழுமியங்களும் இல்லையென்றால் நாம் பைத்தியகாரர்களாகிவிட மாட்டோமா.எனக்கு ஒன்றும் புரியவில்லை.என் உடல் நடுங்குகிறது. நான் அச்சம் கொள்கிறேன்.

நாம் இனி புது விழுமியங்களை உருவாக்க வேண்டும் என்று நிதானமாக கூறினான் அஸ்வத்தாமன்.

புது விழுமியங்களையா.

எதன் அடிப்படையில்.

பூமியில் உள்ள மனிதர்களின் அடிப்படையில்.அவர்களின் உடல் அடிப்படையில்.

ஆனால் அவை நிரந்தரமற்றவை ஆயிற்றே.

இல்லை.மனித உடல்கள் அதன் ஆசைகளும் நிரந்தரமானவை.அதன் அடிப்படையில் புதிய விழுமியங்களை நாம் உருவாக்க வேண்டும்.

இது சாத்தியமா.

சாத்தியம்.

ஏன் அதை விஞ்ஞானத்தின் அடிப்படையில் செய்யக்கூடாது.

செய்யக்கூடாது. இன்று அந்த திசையில்தான் சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.ஆனால் விஞ்ஞானம் ஒரு சாத்தான் என்பதே உண்மை.

ராஜன் எதுவும் பேசாமல் சோர்ந்து போய்விட்டான்.








இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 5




இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 4

இந்தக்குழுவை சேர்ந்த பெண்கள் சாலையில் ஒரு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட முகாமிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதும் உணவு தயாரிப்பிலும் ஈடுபடுவர். ஆண்கள் மந்தை ஆடுகளை ஊர்புறமாக மேய்த்து ஏதேனும் விவசாயியின் நிலத்தில் இரவு விட்டுவிடுவர்.ஆடுகளின் இரவு கழிவு மதிப்புள்ள உரம் என்பதால் விவசாயி அதற்கு பணமாகவோ வேளான் விளைபொருளாகவோ தருவர்.இந்த கட்டணங்களும் இதனுடன் கம்பளி போன்றவற்றை விற்பதில் கிடைக்கும் சிறுதொகை எப்போதாவது விலங்கு இவையே ஆயர்நாடோடிகளின் வாழ்வாதாரம்.

மழைக்காலத்திய நான்கு மாதங்களில் தாங்கர் மேய்ச்சல்காரர்கள் மேய்ச்சல் புல்வெளி நிலங்களிலிருந்து காய்ந்த சமவெளிகளில் உள்ள பாரம்பரிய முகாம்களுக்கு , ஆடுகளுக்கு சேற்றுநிலத்தில் தொற்றிக்கொள்ளக்கூடிய குளம்பு அழிவியிலிருந்து பாதுகாக்க இடம் பெயர்வர்.மழைக்காலங்கள் முகாம்கள் எல்லாமே உலர்கல் கட்டுமானத்தாலான ஆட்டுக்கிடைகள்.இவை முன்வரலாற்று காலத்தில் கட்டப்பட்டவை.நான் இந்தியாவில் கண்டுபிடித்த முன்வரலாற்று கல் கருவிகளின் வளமான படுவுகள் பலவும் தாங்கர்களின் மழைக்கால முகாம்களுக்கு அருகிலேயே இருக்கின்றன.முன்வரலாற்று காலத்தை சேர்ந்த செதுக்கப்பட்ட கல் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கிறது.

இந்த கல் கருவிகள் நுண்கற்கள் என்ற மெல்லிய தகடுகள்.இதிலுள்ள ஆர்வமூட்டும் விஷயம் தாங்கர்கள் நுண்கற்களை பார்க்கும் போது அவற்றை அடையாளம் கண்டுகொள்வதில்லை, ஆனால் அதே போன்ற கருவிகளை அவர்கள் உருவாக்கி கொள்கிறார்கள்.ஒரு ஆட்டுக்குட்டி நலந்தட்டல் செய்யப்படவேண்டும் என்கிற போது , தாங்கர் மேய்ப்பர் இருகற்களில் ஒன்றை சுத்தியலாகவும் மற்றதை அடைகல்லாகவும் வைத்து சற்கடோனியை உடைப்பர்.பின்னர் சற்கடோனியின் நுண் தகடை நலந்தட்டலுக்கான கத்தியாக பயன்படுத்துவர்.அந்த நுண்தகடு கல் பயண்படுத்தப்பட்ட பின் ஆட்டுக்குட்டியின் விரைகளோடு சேர்ந்து சடங்குப்படி கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் வீசப்பட்டுவிடும்.

மகாராஷ்டிராவில் தக்காணத்து பகுதியிலுள்ள ஒரு பாரம்பரிய சடங்கான பந்தர்பூர்க்கான புனித யாத்திரை — இன்றும் தாங்கர் மேய்ப்பர்களின் முறையாக இருக்கும் பருவகாலப் அலைதல்கள் போன்று எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு வகையில் உள்ளாகியிருந்த காலத்தில் தொடங்கியிருக்கக்கூடும் . ஒரே பகுதியில் நிலைத்த விவசாய முறையிலான வாழ்க்கையோடு இந்த புனித யாத்திரை பொருத்தமற்றதாக இருக்கிறது.பந்தர்பூருக்கான பயணம் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுப்பதோடு பாரம்பரியமாக மழைக்காலத்தில் தொடங்கும் சடங்காகும். அத்தகைய ஒரு பழக்கம் விவசாய சமூகத்தில் தோன்றியிருக்க முடியும் என்பது நம்புவதற்கு கடினம் ஏனேனில் மழைக்காலங்களிலேயே அவர்கள் பெரும்பாலான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.



கடவுள் இறந்துவிட்டார்






கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் சொல்வான் 'கடவுள் இல்லையென்றால் பின் எல்லாமே அனுமதிக்கப்பட்டவையே' என்று. கடவுளின் பெயரால் தான் அறமும் விழுமியங்களும் உருவாக்கப்பட்டன.ஆனால் விஞ்ஞானத்தின் ஊடாக கடவுள் இறந்துவிட்டார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது நடந்து நூற்றாண்டை கடந்துவிட்டாலும் அது நம்மால் கண்டுகொள்ளப்படவில்லை என்பது தான்!  கடவுள் இறந்துவிட்டார் என்கிற போது அந்த விழுமியங்களும் அறமும் இறக்கின்றன.அப்படியென்றால் இவான் சொல்வது போல எல்லாம் அனுமதிக்கப்பட்டவையே. இவான் மூத்த கரமசோவை சமேர்டகோவை தூண்டி கொலை செய்ய வைக்கிறான். இதை அவனால் மேல் சொன்ன வாக்கியத்தின் தத்துவ துனையாலேயே செய்ய முடிகிறது. கடவுள் இறந்துவிட்டார்.இனி இந்த கைகளை எந்த தண்ணீரால் கழுவப்போகிறீர்கள் என்று நீட்ஷே கேள்வி எழுப்புகிறார்.

இது ஒரு தீவிரமான பிரச்சனை. அறமும் விழுமியங்களும் இறந்து விடும் போது நாம் எதன் அடிப்படையில் நமது வாழ்வை மேற்கொள்வது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் ஜே.ஜே. ஒரு தொழுநோயாளனுக்கு காசு கொடுக்கலாமா வேண்டாமா என்று தீவிரமாக சிந்தித்துவிட்டு இறுதியில் அவனுக்கு சில்லறையை கொடுக்கிறான். பின்னர் தான் கொடுத்த காசு கீழே விழுந்து விடவே அதை சரியாக அவனுக்கு கொடுப்பதற்காக ஜே.ஜே. குனியும் போது தொழுநோயாளன் அந்த நாணயத்தை மண்ணில் புதைத்து இழுத்து கொள்கிறான். ஜே.ஜே.வை அது வெட்கப்பட செய்கிறது.இங்கே எந்த தத்துவ அடிப்படையில் ஜே.ஜே. காசு கொடுக்கிறான் என்பதுதான் முக்கியமான கேள்வி.அற மதிப்பீடுகள் இறந்துவிட்டன என்ற நிலையில் அவனுக்கு காசு கொடுக்க வேண்டும் என்ற ஜே.ஜே முடிவு செய்வது உண்மையில் ஜே.ஜே அந்த அறமதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்துள்ளவன் என்றே காண்பிக்கிறது.அப்படியாக கடவுள் மீதும் என்றும் சொல்லலாம். அப்படியென்றால் நாம் பிச்சைகாரனுக்கு உதவ கூடாதா என்ற அபத்த கேள்வி அல்ல நம் முன் எழ வேண்டியது.ஜே.ஜே. என்ற எழுத்துரு எந்த அடிப்படையில் அதைச்செய்தான் என்ற கேள்வியே முக்கியம்.நீட்ஷே ஜரதுஷ்டரா இவ்வாறு கூறினான் என்ற நூலில் பிச்சைகாரனுக்கு கொடுப்பதை விட எடுத்துக்கொள்ள செய்வது மேலானது ஏனேனில் அது குறைவாகவே வெட்கம் கொள்ள செய்கிறது என்கிறார்.

இருத்தலியவாதத்தின் எல்லா கேள்விகளும் இந்த கடவுள் இறந்துவிட்டார் என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது என்றே நான் புரிந்து கொள்கிறேன்.தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் நாவலில் எழுப்பும் கேள்வி, அதில் The Grand Inquistor என்ற பகுதியில் கடவுள் பூமிக்கு வருவதை விரும்பாத பிஷப் அவரை திருப்பி அனுப்புகிறார். அதைப்போல ஆல்பெர் காம்யு அந்நியன் நாவலில் எழுப்பும் இருத்தலில் உள்ள அபத்தம் குறித்த கேள்வி ,காஃப்கா உருமாற்றம் கதையில் எழுப்பும் அபத்தம் எல்லாமே இந்த கேள்வியோடு சம்மந்தபட்டதாகவே தெரிகிறது.அப்படியென்றால் அறமதிப்பீடுகளும் விழுமியங்களும் இல்லாத போது மனிதன் எதன் அடிப்படையில் தன் வாழ்வை மேற்கொள்வான் என்கிற போது Freewill என்ற கருத்து முக்கியத்துவம் கொள்கிறது.நீட்ஷேவின் எல்லா புத்தகங்களுக்கும் இந்த வாக்கியமே திறவுகோல் என்று கூட கொள்ளலாம் .



இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 4


இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1

இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2

இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 3


பார்தி சமய வழக்கங்கள் பெற்றுக்கொண்டதுவும் தொன்மை கூறுகளினதுவுமான கலவை.வழிபாட்டின் பிரதான பொருள் நவீன உற்பத்தியிலான வெள்ளியில் செய்த தட்டையான அலங்காரமான பொருள். அதில் ஒரு இந்து தாய்தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.இருந்தும் மிக முக்கிய சடங்கு - வளம் ஆடல் - அதன் ஒவ்வொரு குறிகளுமே அது உண்மையில் தொன்மையானது என்பதை குறிக்கிறது.இதில் ஆடுபவர் ஒரு ஆண் -  சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பழங்குடிகளில் ஒரு குழுவின் தலைமையில் இருப்பவர் .அவர் தன்னை ஒரு பெண்ணாக ஆடைஅமைத்து கொள்கிறார்.அவர் சடங்கில் ஒரு பூசாரி மாத்திரம் அல்ல.அவர் தன்னை ' நான் தான் அம்மன்' என்று சொல்லிக் கொள்கிறார்.


இந்த வளமை சடங்கின் ஒரு பகுதி இந்துகளுக்கும் தொன்மரபினருக்குமான தலைகீழ் புதுபண்பாட்டை ஏற்றுக்கொண்டதற்கான சுவாரசியமான சான்றுகளை வழங்குகிறது. ஆடுபவர் ஒரு கட்டத்தில் தன் கையை எரியும் எண்ணை பாத்திரத்தில் மூழ்க்குகிறார் - ஆம் எந்த விதமான காயமும் இல்லாமல்.இது போன்ற கடுமையான சடங்கு பார்திகளின் பழைய வழக்கம். பார்திகளின் சோதனைகளில் தங்களின் அறியாமையை நிருபிப்பதற்காக ஒரு செந்நிற சூடான இரும்பை தூக்கிக்கொண்டு குறிப்பிட்ட அடிகள் நடக்க வேண்டும். இதற்கு இனையான இந்துக்களின் கடுமையான சடங்கு - சூடான நிலக்கரிமேல் நடப்பது - இதற்கு பிராமண வேத நூல்களில் எந்த வித ஒப்புதலும் இல்லை;சோதனைகள் குறித்து மிக முந்திய இந்து புனித புத்தகங்களில் எவ்வித குறிப்பும் இல்லை. சொல்லப்போனால் , நெருப்பில் நடக்கும் பழக்கம் கிறுஸ்துவ காலம் வரை இந்துக்களின் சடங்காக இல்லை.அதன் பின் இந்த சடங்கு தீவிர குற்றச் செயலுக்கான ஆதாரம் இருக்கும்போது பிரதானமாக அறியாமையை நிருப்பிப்தற்காக ஒரு வழிமுறையாக பெற்றுக்கொள்ளப்பட்டது.ஒருவர் இந்துக்களின் இந்த கடுமையான சடங்கு பார்திகளின் சோதனையின் போதான சடங்கை போல ஏதாவது ஒரு தொன்மையான இந்திய சடங்கிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.


மற்றொரு தொன்மையான குழுவான தெக்கானத்து பகுதிகளில் வாழும் தாங்கர்கள் - ஒரு பழங்குடியினர் அல்லாது ஒரு சாதியினர்.இதில் சிலர் விவசாயிகள் ; மற்றவர்கள் கம்பளி போர்வை செய்வதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.தாங்கர் குடும்பத்தில் - இருந்த ஹோல்கர்ஸ் - ராணுவ வாழ்வை பதினேட்டாம் நூற்றாண்டிலேயே மேற்கொண்டு இன்டோரின் மகாராஜாக்களாக உயர்ந்தார்கள்.தாங்கர் சாதியை சேர்ந்த ஒரு பிரிவினர் பழங்குடியின வாழ்வை மேற்கொண்டு நாடோடிகளாக மந்தை மேய்ப்பாளராக இருக்கிறார்கள்.ஒவ்வொரு தாங்கர் குழுவும் பண்ணிரெண்டு பேரை உள்ளடக்கியது. 300 செம்மறி ஆட்டு மந்தைகளை மேய்த்துகொண்டு, இந்த குழு வருடத்தின் எட்டு வரண்ட மாதங்களை பயணத்தில் செலவழிக்கிறது , இது மிகவும் ஆபுர்வமாக 200 மைல்களுக்குள்ளும் பெரும்பாலும் 400 மைல்கள் வரையும் வேறுபடலாம்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.





லோகாயதம்



எல்லா தத்துவ போக்குகளையும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்று பிரித்துவிடலாம் என்றால் இந்திய தத்துவத்திலிருந்த பொருள்முதல்வாதத்தை பற்றிய ஏழு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு Musings in Ideology என்று சொல்லலாம். மார்க்ஸிய சிந்தனையாளர் தேவிபிரசாத் சட்டோபத்யாயவின் கட்டுரைகளின் தொகுப்பு இவை. தொண்ணூற்றி ஒன்றுக்கு முன்னிருந்த கனவு இன்று இடதுசாரிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை. அந்த கனவின் சில கீற்றுகளையும் நாம் இந்த புத்தகத்தில் பார்க்கலாம்.

மேற்குலகின் எல்லா வகை விஞ்ஞானங்களின் முதல் சிந்தனையாளர் என்று தேல்ஸ் குறிப்பிடபடுகிறார். ஆனால் அவரைக் காட்டிலும் அசலான பொருள்முதல்வாத சிந்தனையாளர் உத்தலக்க அருணி. அருணியின் சிந்தனைகளை நாம் சந்தோக்யா உபநிடதத்தில் பார்க்கலாம். நாம் உட்கொள்ளும் உணவின் நுட்பமான வடிவமே நமது அறிவாகிறது. நீரின் நுட்பமான வடிவமே பிராணம்.வெப்பத்தின் நுட்பமான வடிவமே பேச்சு.இறுதியில் மரணத்தின் போது உணவு நீராக மாறி, நீர் வெப்பமாக மாறி, வெப்பம் பிரதான இருப்பில் கலந்துவிடுகிறது.ஆக நமது துவக்கம் பிரதான இருப்பிலிருந்து தான் - சத் (இருப்பிலிருந்து)தான் , அ-சத்திலிருந்து என்று சிலர் சொல்கிறார்கள் , ஆனால் அ-சத்திலிருந்து எப்படி சத் உருவாக முடியும். ஆக எப்போதும் இருப்பது சத்.ஒன்று இரண்டற்றது. அதுவே அது என்கிறார் அருணி. இங்கே தன்னுடைய கருத்துகளுக்கு மூலமாக அறிவுவாதத்தை மட்டுமே முன்வைக்காமல் அதற்கு சில உதாரணங்களை சொல்கிறார். தன் மகனை தண்ணீரில் உப்பை கரைக்க சொல்கிறார். அப்படி கரைத்த பின் அதில் எப்படி உப்பை கண்டுகொள்ள முடியவில்லையோ , ஆனால் அந்த தண்ணீரின் எல்லா தளங்களிலும் எப்படி உப்பு கலந்திருக்கிறதோ அது போல இந்த அகிலம் முழுவதும் சத்(இருப்பு) தால் ஆனது. ஒன்று இரண்டற்றது.அதுவே அது என்று தன்னுடைய விளக்கங்களை ஆய்வுகள் மூலம் நிருபிக்கிறார். அவர் இருந்திருக்கக்கூடிய காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம்.இப்படியாக எப்படி அருணி முதல் பொருள்முதல்வாதி என்று தன் ஆய்வுகளை முன்வைக்கிறார் சட்டோபத்யாய .

வேத காலத்தில் பலிபீடங்களை நிறுவுவதற்கு செங்கல்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் சுல்வா வரைகணித நூலில் இருப்பது பற்றி தன் ஆய்வுகளை முன்வைக்கிறார். சிந்து சமவெளி காலத்தை கி.மு. 1750 எனக் கொண்டால் வேத காலம் 350 கி.மு என்று கணக்கிடப்படுகிறது. இதற்கு இடையிலான காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.வேத காலத்தில் சுல்வா வரைகணிதம் புதிய அறிவாக உருவாகியிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இருபதாம் நூற்றாண்டின் மத்திம காலங்களில் செய்யப்பட்ட அகழ்வராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பா நாகரிகத்தின் எச்சங்களை வைத்து பார்க்கும் போது அந்த நாகரிகத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த சுல்வா வரைகணித நூல் உருவாகியிருப்பதற்கான சாத்தியங்கள் பெரும் அளவு உண்டு என்று நிறுவுகிறார்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராஹமீஹிரா என்ற வானவியல் விஞ்ஞானி சூரிய கிரகணம் வருவதற்கான காரணம் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் வருவதுதான் என்றும் சந்திர கிரகணத்துக்கான காரணம் பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுவது தான் என்றும் எழுதியிருப்பதை முகம்மது கஜினியுடன் பெர்சியாவிலிருந்த வந்த அல்-பிருணி என்ற அறிஞர் கண்டுகொள்கிறார். அதே சமயத்தில் பிரம்மகுப்தா போன்ற அறிஞர்கள் ராகு கவ்வுவதால் உருவாவதுதான் கிரகணம் என்று தனது பிரம்மசித்தாந்தா என்ற நூலில் எழுதியிருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இதை ஒரு குறையாக அல்லாமல் அந்த காலகட்டத்தின் சமூகத்தை வரலாற்றில் வைத்து பார்க்கையில் சாக்ரட்டீஸூக்கு ஏற்பட்ட நெருக்கடி போல பிரம்மகுப்தாவுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் அல்-பிருணி. ஆனால் சட்டோபத்யாயா தெகார்தேவுடன் பிரம்மகுப்தாவை ஒப்பிடுகிறார். தன்னுடைய La Monde (இந்த உலகம்) என்ற நூலை எழுதி முடித்து பிரசுரத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த நிலையில் கலிலீயோவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை பற்றி தெரிந்துகொண்டபின் அந்த திட்டத்தை கைவிடுகிறார் தெகார்தே.அவர் இறந்த பின் 1644ல்தான் அந்த புத்தகம் வெளிவந்தது.

அதே போல பண்டைய இந்தியாவில் முற்றிலும் சமயச் சார்பற்ற விஞ்ஞான பூர்வமான துறை என்றால் அது ஆயுர்வேதம் தான்.அதிலிருந்த தாவரவியல் , விலங்கியல் , பெளதீகம், வேதயியல் போன்ற துறைகள் கிளைந்தெழுந்தன என்கிறார் சட்டோபத்யாய.சராக்கா சம்ஹிதாவும் அதன் அறுவைசிகிச்சையின் நூலாக இருக்கும் சுஸ்ரூதா சம்ஹிதாவும்
முற்றிலும் விஞ்ஞான புத்தகங்களாக விளங்குகின்றன. இவற்றின் காலம் அநேகமாக கி.மு. ஆறாம் நூற்றாண்டாக கொள்ளலாம்.ஒருவரின் பிறப்பு சார் தாழ்வும் , அவரது கஷ்டங்களும் , அவரின் வியாதிகளும் அவருடைய கர்மத்தால் விளைபவை தான் என்ற கருத்து தீவிரமாக இருந்த காலத்தில் ஆயுர்வேதம் மருத்துவத்தின் முக்கிய காரணிகளாக நான்கை கருதுகிறது.

1. மருத்துவர்
2. மருத்துவத்திற்கு தேவைப்படும் கருவிகள்
3. மருத்துவ துணையாளன்
4. நோயாளி

இங்கே கர்மாவை ஒரு காரணியாக சேர்க்கவில்லை.இயற்கையில் உடலில் சமநிலை நிலவுகிறது. அந்த சமநிலை குலையும் போது நோய் ஏற்படுகிறது.அதை மறுபடியும் சமநிலை நோக்கிய மறுசீரமைப்பே மருத்துவம். இயற்கையில் எந்த பொருளும் உபயோகமற்றதாக இல்லை என்று கருதுகிறது ஆயுர்வேதம்.எந்த அளவு இயற்கையின் நியதிகளை புரிந்துகொள்கிறோமா அந்த அளவு நோய்கள் குறித்தும் புரிந்து கொள்ளலாம். இயற்கை என்பது பஞ்சபூதங்களால் ஆனது. அதுபோலவே மனித உடலும் பஞ்சபூதங்களால் ஆனது. மனித உடலுக்கும் இயற்கைக்கும் இடையே தொடர்ந்து பாயம் நிகழ்நதவண்ணம் இருக்கிறது. இதில் பொருள் சரியான வகையில் உடலால் பெறப்பட்டால் உடல் நன்றாக இருக்கிறது. தவறான விகிதத்தில் பொருள் உடலால் பெறப்படும் போது சமநிலை குலைகிறது. அதுவே நோய் எனப்படுகிறது. இந்த உடலுக்கும் இயற்கைக்குமான தொடர்ந்த பாயத்தில் உடல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் உடல் ஒன்று போலவே இருக்கிறது என்பதை எவ்வாறு நினைக்கிறோம் என்றால் பழையதுக்கும் புதியதுக்குமான ஒப்புமையால் தான்.இந்த மாறிக்கொண்டே இருக்கும் உடலில் ஒரு கட்டத்தில் பொருட்கள் தங்களின் பிரதான நிலைக்கு திரும்புகின்றன.அதையே நாம் மரணம் என்கிறோம். அதை இயற்கைக்கு திரும்புதல் என்றும் சொல்லலாம் என்கிறது ஆயுர்வேதம்.சுஸ்ரூதா சம்ஹிதாவில் கிட்டத்தட்ட ஆயிரத்திக்கு நிகரான தாவரங்கள் பற்றியும் சராக்கா சம்ஹிதாவில் விலங்குகளின் உடலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற நோக்கில் தொள்ளாயிர வகையான தாவரங்கள் பற்றிய ஆய்வு இருக்கிறது. இதில் ஒரு இயற்கை பண்டத்தில் உள்ள பொருள் மனித உடலின் பொருள் பொதிவில் ஏன் ஒரு வகையான தாக்கத்தை செலுத்துகிறது என்றால் ஆயுர்வேத்த்தில் அதற்கு ஒரே பதில் தான் உண்டு. அது இயற்கையின் நியதி என்பதாகும்.


ஆயுர்வேதத்தை பயிற்சி செய்த மருத்துவர்களை பற்றி எதிர்மறையான கருத்துகளே அக்காலத்து சட்ட நூல்களில் இருந்திருக்கிறது என்கிறார் சட்டோபத்யாய. மருத்துவத்தை பயிற்சி செய்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று சட்டநூல்கள் கூறுகின்றன.பிராமணன் மருத்துவம் பயிலக்கூடாது. பயின்றால் அவன் அசுத்தம் ஆகி தியாகத்திக்கு தகுதி இல்லாதவனாக ஆகிறான். ஏன் மருத்துவத்தை பயிற்சி செய்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று கருதப்பட்டார்கள் என்றால் மருத்துவ பயிற்சியில் உயர்குடிகள் அற்ற மக்களோடு கலக்க வேண்டியிருக்கும் என்று யஜூர்வேதம் கூறுகிறது. ஆயுர்வேதம் ஜனநாயக தன்மை கொண்டதாக விளங்குகையில் அதன் மருத்துவர்கள் எப்படி அசுத்தமானவர்களாக ஆகிறார்கள் என்கிற போது அதற்கான ஒரே பதில் ஆயுர்வேதம் வரணாசிரம சமூகத்திற்கு ஒத்ததாக இல்லை என்பதே. அது நோயிற்கான காரணம் கர்மா என்று சொல்லவில்லை.மாறாக பஞ்சபூதங்களாலான பொருள் பொதிவில் ஏற்படும் சமநிலை குலைவு என்று தான் சொன்னது. ஆக அது சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு உவப்பானதாக இல்லை.இந்த காரணத்தால் மிகவும் நம்பிக்கையுடன் தன் ஆரம்ப காலங்களில் தொடங்கிய ஆயுர்வேதம் காலப்போக்கில் சமய அதிகாரிகளின் சித்தாந்த காரணங்களுக்காக கிட்டத்தட்ட அழித்தேவிட்டார்கள் என்றும் அதனால் இயற்கையை அறிந்து கொள்ளக்கூடிய  ஒரு விஞ்ஞான முறையின் வளர்ச்சி தடை செய்யப்பட்டது என்றும் அதன் பாதை மாற்றப்பட்டுவிட்டது என்றும் ஆதங்கப்படுகிறார் சட்டோபத்யாய.

இன்றைய இந்தியாவிற்கான சித்தாந்த போராட்டம் பற்றி பேசுகையில் அது இரண்டு தளங்களில் நிகழ வேண்டும் என்கிறார். முதலாவது பொதுவானது.இரண்டாவது இந்திய சூழலுக்கு முக்கியமாக தேவைப்படுவது. பொதுவானது எல்லோருக்கும் மார்க்ஸிய சிந்தனை குறித்த அடிப்படைகள் பரப்புவது.இதுவே சோஷியலிச சமூகத்திற்கான வழி.
மார்க்ஸியத்திற்கு நிகரானது என்றோ சமமானது என்றோ மற்றொரு தத்துவத்தை முன்வைப்பது ஆபத்தானது என்கிறார்.அதே நேரத்தில் இந்தியா போன்ற தொன்மையான சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய காரியங்களும் இருக்கின்றன.இந்தியாவில் பழங்காலத்திலிருந்து வரும் தத்துவத்தின் சாரம் அதன் எழுத படிக்க தெரியாத மக்களும் அறிந்ததே.மேற்குலகத்தில் தத்துவ பிரச்சனை தத்துவவாதிகளுக்குள் நடந்த ஒரு உரையாடல்.ஆனால் இந்தியாவில் புராணங்களை கூறும் உபசாகர்கள் மூலம் தத்துவம் மக்களுக்கு சொல்லப்பட்டது. அதுவே அக்காலத்தின் ஊடகம். அத்தகைய கருத்துகள் அவர்கள் ஆழ்மனத்தில் அழுத்தமாக உள்ளது. அவர்களின் நடத்தையை அந்த எண்ணங்கள் தீர்மானிக்கிறது. ஆக நாம் இந்திய தத்துவத்தை எளிதல் புறக்கணித்துவிடமுடியாது.அதே நேரத்தில் இந்திய தத்துவத்தில் உள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள கூடாது. இன்றைய தேவைக்கு இந்திய தத்துவத்தில் எவை உயிரோடு இருக்கின்றன எவை இறந்து விட்டன என்று பிரிக்க வேண்டும். எதை வைத்து அதை முடிவு செய்ய வேண்டும் என்கிற போது கருத்துமுதல்வாத தளத்தில் பேசப்பட்டவையே இறந்து விட்டது என ஒதுக்கி பொருள்முதல்வாத தளத்தில் இயங்கிய வானயில் விஞ்ஞானம் , ஆயுர்வேதம் , கணிதம் போன்ற அறிவுவாத, சமயச் சார்பற்ற, சிந்தனைகள் குறித்து பேச வேண்டும். அந்த சிந்தனைகள் வரலாற்றில் வைத்து அவை எப்படி அந்த அனுபூதவியல் கருத்துகளுக்கும் ,வரணாசிரம கருத்துகளுக்கும் எதிராக போராடியது என்று வலியுறுத்த வேண்டும். இப்படி பேசுகையில் மக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த சொற்களை பயண்படுத்தி நாம் பேச முடியும்.மேலும் மார்க்ஸியம் முற்றிலும் அந்நியமான சிந்தனை இல்லை என்பதையும் நிறுவமுடியும் என முடிக்கிறார் சட்டோபத்யாயா.

இந்த மிக சிறிய நூலில் அடங்கியுள்ள கருத்துகளை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. சட்டோபத்யாய தமிழில் நன்கு அறிமுகவானவர் என தெரிகிறது.அவருடைய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கிடைக்கின்றன.அவருக்குள் இருக்கும் மார்க்ஸிய சமூகத்தின் கனவு அநேகமாக எல்லா கட்டுரைகளிலும் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட கட்டுரைகள் எழுதுவதற்கு எப்படிப்பட்ட உழைப்பு தேவைப்படும் என்று எண்ணிப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.

Musings in Ideology - Debiprasad Chattopadhyaya - Navakarnataka Publications , Bangalore.


இடைமை



தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் புகழ்பெற்றது. தமிழ் இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கொண்டவர்கள்கூட வாசித்திருக்காவிட்டாலும் அறிந்த கதை மோகமுள். ஆக கதையை விவரிக்க தேவையில்லை.இந்த நாவலில் வரும் வெங்கட்ராமன் என்ற கதாபாத்திரம் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களை முன்வைத்து எழுதியதா என்று தோன்றுகிறது.


பாவுவின் பக்கத்து வீட்டில் ஒரு கிழவருக்கு இரண்டாம் தாரமாக வரும் தங்கம்மாள் தான் பாபு என்ற கதாபாத்திரத்தின் கீழ்மையின் உச்சம்.ரங்கண்ணா மேண்மையின் உச்சம்.நமக்கு இருக்கும் அதே பலஹினம் கொண்ட வேறு ஒரு மனிதரை போல நாம் இந்த புவியில் வேறு யாரையும் வெறுப்பதில்லை. பாபு தங்கம்மாளை முழுக்க வெறுக்கிறான். குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ் கதாபாத்திரத்தின் கீழ்மையின் உச்சம் ஸ்விட்ரிகைலோவ். அதே போலத்தான் பாபுவும் தங்கம்மாளும். தங்கம்மாள் கொள்ளும் அதே உரிமையைத்தான் பாபு யமுனாவிடம் கொள்கிறான். இதில் என்ன தவறு இருக்கிறது.எனக்கு இது தவறாகவே படவில்லையே என்று எண்ணுகிறான் பாபு.அக்டோபர் இரண்டு அன்று காந்தியின் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கும்போது கூட பாபு யமுனாவிடம் இப்போது கூட எனக்கு இது தவறாக படவில்லை என்கிறான். அதே எண்ணத்தை பாபு தங்கம்மாளிடம் மூர்க்கமாக நிராகரிக்கும் போது அவள் தற்கொலை செய்து கொள்கிறான்.முதல் முறையாக தன்னுடைய எண்ணத்தை யமுனாவிடம் சொல்லும்போது யமுனா வேண்டாம் பாபு வேண்டாம் என்று கெஞ்சத்தான் செய்கிறாள்.மூர்க்கம் கொள்ளவில்லை.கொண்டிருந்தால் தங்கம்மாளின் கதியே பாபுவுக்கும் நடந்திருக்கக்கூடும். ஆனால் தங்கம்மாளுக்கு இல்லாத ஒன்று பாபுவுக்கு இருக்கிறது.அது சங்கீதமும் ரங்கண்ணாவும்.

ரங்கண்ணாவிடம் ஆறேழு வருடங்கள் சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு ரங்கண்ணா போலவே கச்சேரி செய்ய வேண்டும் என்று ஆர்வம் காட்டவில்லை. ரங்கண்ணா அவர் இறப்பதற்கு முன் அவனிடம் அப்படி கச்சேரி செய்ய வேண்டாம் என்று சொல்வதை கணக்கில் கொண்டாலும் அவனும் அதில் உடன்படவே செய்கிறான்.இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பாலூர் ராமு. கிட்டத்தட்ட முற்றிலும் லெளகீகமான மனிதர் என்ற கதியில் அறிமுகம் ஆகும் அவர் போகப்போக முற்றிலும் வேறு விதமாக தெரிகிறார். பாபு பாடுவதை கேட்டு அடிக்கடி அவன் அறைக்கு வருகிறார்.பேசுகிறார். உரையாடுகிறார். ராமு தான் பாபு ஆகிவிட முடியாதா என்று தான் கஷ்டப்படுகிறார். ஒரு இடத்தில் அழுகிறார். கச்சேரி கச்சேரி என்று அவர் இருக்கும் போதிலும் பாபு வடநாட்டுக்கு சென்று குரலை இன்னும் மேம்படுத்திக்கொள்ள எண்ணுவதை தெரிந்துகொள்ளும் போது ராமு தனக்கு அது போல சாத்தியப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே ஏங்குகிறார்.இதில் சங்கீதத்தில் ஞானம் முக்கியமா குரல் முக்கியமா என்ற விவாதம் ராமுவுக்கும் பாபுவுக்கும் தொடர்ந்து நிகழ்கிறது. இசை அறிந்தவர்கள் இதை பற்றி எழுதலாம்.எழுதியிருக்கக்கூடும்.

பாபுவின் பெரியப்பா பிள்ளையாக வரும் சங்கு மிகப்பெரிய ஆளுமையாக வரக்கூடும் என்று ராஜமும் பாபுவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதியில் ஆஸ்பத்திரிக்கு கூட பணம் இல்லாமல் பாபுவிற்கு எழுதுகிறான் சங்கு.விளையாட்டும் துடுக்கத்தனமும் நல்ல கணித அறிவும் உள்ள சங்கு ஏன் இப்படி ஆகிவிடுகிறான்.அதுவும் பாபு ஆகியிருக்கக்கூடிய ஒரு உச்சம் தான்.

ஒரு நீளமான கோடு வரைந்து கொண்டு அதன் நடுவில் பாபுவை வைத்தால் அதன் வலதுபக்கத்தில் இடது வலதாக பார்க்கும் போது அதில் சுந்தரம், நண்பன் ராஜம், தந்தை வைத்தி , வெங்கட்ராமன்,  சித்தர் ராஜூ , மங்கள்வாடியிலிருந்து வந்து பாடும் பாடகர்கள், உச்சமாக அவனுடைய குரு ரங்கண்ணா வருகிறார்கள். இடது பக்கத்தில் வலது இடமாக பார்த்தால் அதில் பாலூர் ராமு முதலில் வருகிறார். ஆம்.லெளகீக தளத்தில் தன் திறமையை கொண்டு அவன் அடைய சாத்தியப்படக்கூடிய உச்சத்தையும் ஆனால் அதில் உள்ள வெறுமையையும் அவன் பாலூர் ராமுவிடமே தெரிந்து கொள்கிறான். உண்மையில் முதல்முறையாக யமுனா பாபுவை பார்க்க வரும் அதே ஞாயிற்றுக்கிழமை அன்று வந்து அவனை பாடச்சொல்லி விக்கித்து போய் நின்று பாராட்டி செல்லும்போதே பாபு தன் இடத்தை உணர்கிறான். அடுத்த படியாக சங்கு.தங்கம்மாளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட கிழவர். உச்சமாக தங்கம்மாள். இதில் இருபக்கத்திலும் வைக்க முடியாத முக்கியமான கதாபாத்திரம் யமுனா. பாபுவை போல அல்லாமல் யமுனா மிகவும் அழுத்தமானவள். ஆழமானவள். அவள் ஏழேட்டு வருடங்கள் கழித்து பாபுவை பார்க்க சென்னை வரும் போது அவளிடம் இருக்கும் ஒரே பிரச்சனை பசி. அது இல்லாவிட்டால் அவள் பாபுவை சந்தித்திருக்கவே மாட்டாள். அவள் அவனுடைய ஆசையை ஏற்றுக்கொள்ளும் போது அதில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. வருத்தம் இல்லை. ஒரு உணர்ச்சியும் இல்லை என்று கூட சொல்லலாம். அவளை பாபு உயர்வாகவே எண்ணுகிறான். அவள் பெரிய அளவில் இதில் குற்றவுணர்வு கூட கொள்ளவில்லை. இருக்கும் சிறு நெருடல் கூட காஞ்சிபுரத்தில் அவளுக்கு இல்லாமல் போகிறது.

இந்த மேலே வரைந்த கோட்டை பார்க்கும் போது இந்த பிரிவில் உள்ள முக்கிய அம்சம் லெளகீகம். அப்படியென்றால் சுந்தரம் ஏன் வலது பக்கம் இருக்கிறான். ஏனேனில் லெளகீகத்தின் அவஸ்தையயை , உழைப்பை அதன் தரிசனத்தை அவன் சுந்திரத்திடமிருந்தே பெறுகிறான். அவன் மேல் கோபம் இல்லாமல் இல்லை.வருத்தம் இல்லாமல் இல்லை.ஆனால் லெளகீகத்தின் நியாயத்தை அவன் சுந்திரத்திடமிருந்து தான் கற்றுக்கொள்கிறான். அதை அவனுக்கு அவன் தந்தையோ , ராஜமோ, ரங்கண்ணாவோ யாரும் சொல்வதேயில்லை.லெளகீகத்திலிருந்து பிரிந்து ஏதோ ஒரு வகையில் அவன் வரையில் முன்னோக்கி சென்றவர்கள் ஒரு உச்சம் எனில் லெளகீத்திலே தன்னை முழுதும் செலுத்திக்கொண்ட மற்றவர்கள் இன்னொரு உச்சம். இந்த கீழ்மைக்கும் மேண்மைக்குமான ஊசலாட்டமே பாபு.

அப்படியென்றால் லெளகீக தளத்திலேயே நாம் வைத்திருக்கும் இந்த உடல்பசி. அதை பாபு எப்படி எதிர்கொள்கிறான்.யமுனா அவனிடம் இதற்குத்தானா , இதற்குத்தான் என்று சொல்லிச்சென்ற பின் அதைப்பற்றி யோசிக்கும் போது அவன் அடையும் தெளிவு மிக முக்கியம்.'உடலைப் படைத்தது உதறி எறிவதற்காகவா? அதுவும் என்னில் ஒரு பகுதிதான். அதுவே எல்லாம் இல்லாமல் இருக்கலாம்.அதுவும் ஒரு பகுதிதான். இரட்டைச் சக்கரத்தில் ஒன்று.' என்று தெளிவு கொள்கிறான். இங்குதான் அவன் உண்மையில் பாலூர் ராமு, தந்தை வைத்தி, சித்தர் ராஜூ , குரு ரங்கண்ணா எல்லோரும் சொல்லும் ஒழுக்கத்தை எதிர்கொள்கிறான்.தைரியமாக எதிர்கொள்கிறான். மீறுகிறான். ராமு ஒரு முறை பிரம்மச்சரியம் குறித்து பேசும் போது இந்த உடல் என்ன பாபம் செய்தது? என்று கேட்டு கொள்கிறான். அங்கே அவன் தங்கம்மாளை சந்திக்கிறான்.இப்போது அவன் மிக தெளிவு அடைந்தவனாக மங்கள்வாடி செல்கிறான்.ராமுவிடம் யமுனாவை வீட்டுக்காரி என்று அறிமுகம் செய்கிறான். உடலை பொருட்படுத்தலாம் என்ற தரிசனத்தை பாபு அடைகிறான்.

தங்கம்மாள் இறந்து போனது, தன்னால் இறந்து போனதை பாபு யமுனாவிடமோ , ராஜத்திடமோ சொல்லவில்லை.முக்கியமாக யமுனாவிடம் சொல்லவில்லை.சொல்லியதற்கான தடயங்கள் நாவலில் இல்லை. சொல்லியிருந்தால் அது நாவலின் முக்கிய தருணமாக இருந்திருக்கும்.அது ஒரு குறை என்றே நினைக்கிறேன்.

தி.ஜானகிராமன் எந்த வித அகங்காரமும் இல்லாத எழுத்தாளர் என்றுதான் தோன்றுகிறது. இசை, காவேரி, கும்பகோணம் சொல்லி மாளவில்லை அவருக்கு. இந்த அளவுக்கு ஒருவரால் வாழ்வை அதன் அழகை ரசிக்கமுடியுமென்றால் வேறு என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில்.

நாவல் இப்படி முடிகிறது.

வெண்கலச் சிலைபோல் அவள்(யமுனா) அசைவற்று நின்றது, மோகத்தை காலடியில் மிதிப்பது போலிருந்தது.

அடிவானத்திலுள்ள மரங்கள்கூட நகர்ந்து வந்தன .வானையும் வின்னையும் சேர்த்தன அம்மரங்கள்.

பூமி வானைத்த தொட்டது. வானம் பூமியை தொட்டது.

ஐப்பசி காற்று ஜில்லென்று வீசியது.


தங்கம்மாளை பூமியெனக் கொண்டால் ரங்கண்ணாவை வானம் எனக் கொண்டால் பாபு இரண்டுக்கும் இடைமையாக நிற்கிறான்.இது இந்த நாவலை பற்றிய விமர்சனம் அல்ல.வாசிப்பு மட்டுமே. எல்லா வாசிப்பும் முக்கியமானவையே.


வரலாறு


சமூகம் என்பது மேற்கட்டுமானம் மற்றும் அடித்தளத்தால் ஆனது. அடித்தளம் என்பது உற்பத்தி உறவுகளாலும் உற்பத்தி முறைகளாலும் ஆனது. மேற்கட்டுமானம் என்பது இந்த உற்பத்தி உறவுகளை , உற்பத்தி முறைகளுக்கான கருத்துதளம். உற்பத்தி உறவுகளிலும் உற்பத்தி முறைகளிலும் மாற்றம் வருவதும் அவைகள் நீட்டிப்பதற்கான கருத்துதளத்தை இது உருவாக்கும்.

ஆகையால் அதன் பாதிப்புகள் அடித்தளத்தில் ஏற்படும்.அதே நேரத்தில் அடித்தளம் மேற்கட்டுமானத்தை மாற்றிப்போடும். இது ஒரு முரணியக்கம்.இதில் மேற்கட்டுமானத்தை விட அடித்தளத்தில் பாட்டாளி வர்க்கம் உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை கொண்டுவந்தால் அதுவே மேற்கட்டுமானத்தை புரட்டிப்போடும். முரணியக்க பொருள்முதல்வாதம் என்கிறது மார்க்சியம்.பின்னாட்களில் வந்த அன்டோனியோ கிராம்சி என்ற இத்தாலிய மார்க்சியர் அடித்தளம் மேற்கட்டுமானத்தை எந்தளவு பாதிக்கறதோ அந்த அளவு சொல்லப்போனால் இன்னும் அதிகமாக மேற்கட்டுமானம் அடித்தளத்தை பாதிக்கிறது என்றார்.


கோசாம்பி இந்தியாவின் வரலாற்றை பற்றி எழுதும் போது அது மன்னர்களின் காலத்தை பிரிப்பது அல்ல மாறாக உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி முறைகளிலான மாற்றத்தின் வரலாறே என்கிறார். அந்த கருவியை இந்திய வரலாற்றின் மீது செலுத்தி தன் ஆய்வை மேற்கொண்டார்.அதே போல மேற்கட்டுமானத்தை பற்றியும் பேசலாம். உதாரணமாக விஞ்ஞானத்தை பற்றி என்றால் நீயூட்டனால் நவீன பெளதிகம் தோன்றியது என்றோ ஜன்ஸ்டீனால் சார்பியல் தத்துவம் உருவானது என்று சொல்லாம். ஆனால் அது உண்மையல்ல.

இவை எப்படி ராஜராஜன் காலம் , அக்பர் காலம் என்று பிரிக்கிறோமா அது போலதான். மாறாக கருத்துதளத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவம் , விஞ்ஞானம் , மொழியியல் , பொருளாதாரம்.இலக்கியம் , கலை என்ற பல்வேறு கருத்துதளங்ளுக்கு உள்ளீடாக உரையாடல் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. Positive Unconsiousness என்கிறார் ஃபூக்கோ. இந்த உரையாடல்களின் விளைவே புதிய திறப்புகள்.நீயூட்டனும் , ஜன்ஸ்டீனும் நாம் அறிந்த முகங்கள்.தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் சார்பியல் தத்துவத்தை முன்னான பல்வேறு கேள்விகள் உள்ளன. ஆக அறிவுதுறைகளின் வராலாற்றை முன்வைத்துதான் எல்லா விமர்சனங்களும் பேசப்பட வேண்டும். இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதனால் ஏற்பட்ட நுகர்வோர் சமூகம் இதை பற்றியெல்லாம் நாம் பேசவேண்டுமென்றால் நாம் விட்கென்ஸ்டீன் முன்வைத்த தத்துவத்தை குறித்து பேசியாக வேண்டும். ஒரு இலக்கிய ஆக்கத்தை பற்றி நாம் விமர்சனம் செய்கிறோம் என்றால் அந்த காலகட்டத்தின் தத்துவம் ,விஞ்ஞானம் , பொருளாதாரம் போன்றவற்றை ஆராய்ந்து தான் பேசமுடியும்.எப்படி அடித்தளம் என்பது உற்பத்தி உறவுகள் உற்பத்தி முறைகள் பற்றிய வரலாறோ அதுபோல மேற்கட்டுமானம் இந்த அறிவுதுறைகளின் வரலாறே.Transcendental consiousness என்றும் ஆழ்மன உள்ளுணர்வு சார்ந்த அவதானிப்பு அல்லது திறப்பு என்பது போன்ற தனிநபர் வழிபாடுகளை கருவிகளாக பயன்படுத்துவது பெரிய அளவில் பயன் தர வாய்ப்பில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் இன்று மனிதன் இயற்கையை அழிக்கிறான்.மனிதனும் இயற்கையே என்று அவன் கண்டுகொள்ளும்போது அவன் இயற்கையோடு இயைதல் என்ற நிலைக்கு வருவான் என்கிற ரீதியில் நாம் பேசலாம்.ஆனால் இது சாத்தியமேயில்லை. மனிதன் X இயற்கை என்ற எதிர்வுகள் நம் மனங்களில் ஆழமாக இருக்கிறது. அதற்கான கருத்தியல் தளமே கடந்த ஐநூறு ஆண்டு மேற்கட்டுமானத்தின் வரலாறு. இந்த எதிர்வை நாம் உடைக்க வேண்டுமென்றால் அதற்கான தத்துவம் உருவாக வேண்டும்.அது விஞ்ஞானத்தோடு உரையாட வேண்டும். அது பொருளாதாரத்தோடு உரையாட வேண்டும்.ஃபூக்கோ சொல்வது போல இந்த எதிர்வுகளுக்கு எதிராக Positive unconsiousness உருவாக வேண்டும் . அதற்கு அறிவுத்துறைகளில் பெரும் பாய்ச்சல் வேண்டும்.அது ஒரு நீண்ட நாள் செயலாகத்தான் இருக்க முடியும்.


ஒற்றை பரிமாண மனிதன்


ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதிய புத்தகம் ஒற்றை பரிமாண மனிதன். ந.முத்துமோகன் எழுதிய மார்க்சிய விவாதங்கள் என்ற புத்தகத்தில் இவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது. மார்க்யூஸா ஒரு நவமார்க்ஸியர்.ஆரம்ப காலங்களில் ஹைடக்கரிடம் பணிபுரிந்தவர்.அவரிடம் கருத்து வேறுபாடு முற்றவே அவரை பிரிந்து ஃப்ராங்பர்ட் பள்ளியில் சேர்ந்தார். இந்த பள்ளியின் நோக்கம் மார்க்ஸிய ஃப்ராய்டிய நோக்கில் முன்னேறிய தொழில்மய உலகை ஆராய்வது. அப்படி முன்னேறிய தொழில்மய நாடுகளை பற்றிய ஒரு ஆய்வு தான் ஒற்றை பரிமாண மனிதன். எல்லா தளங்களிலும் இன்று மறுதலிப்பது(Negation) இல்லாமல் ஆகிவிட்டது. மார்க்ஸ் முதலாளித்துவ சமூகம் முன்னேற முன்னேற தொழிலாளர்களுக்கும் முதலாளிக்களுக்குமான முரணியக்கம் முற்றி இறுதியில் புரட்சி வெடிக்கும் என்று நினைத்தார்.அதாவது முன்னேறிய முதலாளித்துவ சமூகத்தின் பரிணாம வளர்ச்சி சோஷியலிச சமூகம் தான் என்றார். ஆனால் முதலாளித்துவ சமூகம் வளர்ச்சியடையும் தோறும் அது தொழிலாளர்களையும் தனக்குள் இனைத்துக்கொண்டது. அதாவது இன்று ஒரு தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆக தொழிலாளியையும் ஒரு நுகர்வோனாக மாற்றி விடுகிறது. ஆக புரட்சிக்கான சாத்தியம் இல்லாமல் செய்யப்படுகிறது. இன்று ஒரு அரசியல்தலைவர் புரட்சி வெடிக்கவேண்டும் என்று கர்ஜித்தால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளபோவதில்லை.மொழி தளத்தில் இந்த மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. ஒரு சமூகத்தில் கலை என்பது மறுதலிப்பது.இன்று ஜான் ஆப்ரகாமின் படைப்பைபும் நீங்கள் சந்தைபடுத்தலாம். அதற்கும் சந்தை மதிப்பு உண்டு. அப்படி முற்றிலும் கரடாக எடுக்கப்படும் சினிமாவோ அல்லது வேறு கலைப்படைப்போ சந்தை படுத்தபட முடியும் என்பதன் மூலம் அதன் மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறுது. எல்லா கலைஞர்களுக்கும் தான விரும்பும் இஷ்டலோகம் என்று ஒன்று உண்டு. இப்போதைய நிலையை துஷ்டலோகம் என்று கொண்டால் இந்த இரண்டுக்குமான முரணியக்கத்தில் உருவாவதுதான் ஒரு கலைஞனின் படைப்பு.ஆனால் ஒரு கலைஞனுக்குள் இப்போது இருப்பதே நன்றாகத்தான் இருக்கிறது என்று எண்ணம் உருவாக்கப்பட்டுவிட்டால் பின்பு அவனது படைப்பில் அந்த எதிர்ப்பு இல்லாமல் செய்யப்பட்டுவிடுகிறது.மொழியில் , சமூகத்தில், கலையில் மறுதலிப்பு இல்லாமல் செய்யப்படுகிறது.


சமூகவியல் ஆய்வுகளில் இருபோக்குகள் உண்டு. ஒன்று எமிலி டர்க்கெய்ம் என்ற பிரெஞ்சு சமூகவியலாளர் உருவாக்கிய வகை.மற்றது மாக்ஸ் வேபர் என்ற ஜெர்மானிய சமூகவியலாளர் உருவாக்கியது. முதலாவது சமூக அமைப்பை முன்வைத்து பேசுவது. இரண்டாவது தனிமனிதர்கள் சமூக நடத்தையை முன்வைத்து பேசுவது. ஒற்றை பரிமாண மனிதன் என்ற இந்த புத்தகம் இரண்டாவது வகையை சார்ந்தது. முதல் வகை நேர்க்காட்சி வாதத்தை முன்வைத்தது. அதாவது விஞ்ஞான பூர்வமாக சமூகத்தை ஆராய்வது. அதாவது இதில் தற்சார்பு முற்றிலும் இல்லை என்ற பாவனை உண்டு. முற்றிலும் புறவயமானது (objective). வேபர் வழி வந்த சமூகவியல் ஆய்வு நேர்க்காட்சி வாதத்தை மறுக்கிறது.அது தனிமனிதர்களின் சமூக நடத்தையை முதலில் எடுத்து அதன் மூலம் தன் ஆய்வுகளை மேல் எடுக்கிறது.


இன்றைய தொழில்மய சமூகத்தில் மனிதன் அந்நியப்படுகிறான். அப்படி அந்நியப்படும் மனிதன் தன்னை சூழ்ந்துள்ள சமூகத்தின் ஒடுக்குமுறையால் அ-உன்னதமாக்கலுக்குள் செல்கிறான்.அவனது மகிழ்ச்சி அற்ற பிரக்ஞை உன்னதமாக்கலற்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. உங்களின் வேலை நேரங்களை மட்டுமல்ல உங்களின் பொழுதுபோக்கும் நேரத்தையும் இந்த சமூகமே கவணித்துக்கொள்கிறது! மேலும் நம் சிந்தனை முறை மாற்றப்பட்டுவிட்டது.அதாவது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் நல்ல சமூகமே என்ற எண்ணம் நம்முள் எழுகிறது , எழுப்பப்படுகிறது. சொல்லாடல்களின் உலகம் மூடப்படுகிறது.இதற்கு அவர் முன்வைக்கும் முக்கிய காரணம் தொழில்நுட்ப பகுத்திறவு.மேலும் விட்கென்ஸ்டீன் போன்றோர் முன்வைத்த நேர்க்காட்சி வாத தர்க்க முறை ஒற்றை பரிமாண தத்துவத்திற்கு வழி வகுத்தது என்கிறார்.


இந்த ஒற்றை பரிமாண உலகில் இருந்து விடுதலையை இல்லையா என்றால் அது இந்த ஒற்றை பரிமாண உலகிற்கு வெளியே இருப்பவர்களுக்கும் இந்த மிக முன்னேறிய தொழில்மய சமூகத்தை ஆழப்புரிந்து கொண்ட அறிவுஜீவிகளும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பின் மூலம் இந்த விளையாட்டுக்கு எதிராக செயல்பட முடியும் என முடிக்கிறார் மார்க்யூஸா.

என்னை மிகவும் பாதித்த நூல். நமது இன்றைய சமூகச்சுழல் குறித்து அக்கறை உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.இந்த நூலின் இரு பக்கங்களை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தேன்.


இந்தியாவின் தொழில்மயம் - 4




இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 3





இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2

இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1

விஷயம் இப்படியிருந்திருக்கையில் விவசாயிகளின் ஜாதி இன்று பழங்குடியினரைவிட உயர்ந்ததாக இருக்கிறதே என்று ஒருவர் கேட்கலாம். பதிலை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல.முதலாவது , ஆரம்பக்கட்ட தடுமாற்றங்கள் எதுவாக இருந்திருந்தாலும் விவசாயத்தை சாதாரணமாக பழகியதில் விவசாயிகளுக்கு பழங்குடியினரை விட பலமான பொருளாதார தளம் அமைந்தது. இந்தியாவில் வேறெங்கும் இருப்பது போல சமூக மதிப்புத்தரம் பொருளாதார அளவை பொருத்தே இருக்கிறது.இரண்டாவது இவர்களின் ஒரளவு சுமாரான உணவளிப்பால் பழங்குடியினரை விட வேகமாக பெருக்கமடைந்து எண்ணிக்கையில் கடந்து அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தலாயினர்.

விவசாயிகளுக்கும் பழங்குடியினருக்கும் சாதி சமநிலையற்ற தன்மை இன்று நிலவினாலும் பரஸ்பர பண்பாட்டு பரிமாற்றத்திறகான சான்றுகள் நிறைய உள்ளன , குறிப்பாக சமயம் சார்ந்த துறையில். பெரும்பாலான இந்துக் கடவுள்கள் என்று சொல்லப்படுகிற பிராமண கோயில்களின் கடவுளின் தோற்றம் உண்மையில் பழங்குடி சடங்கு முறையிலிருந்து தோன்றியது. அதே சமயத்தில் பழங்குடி இன மக்கள் பழங்குடி வாழ்க்கைமுறையை விட்டுவிட்டு வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை எடுக்கையில் தங்களின் தொன்மையான கடவுள்களை விட்டுவிட்டு இந்து சமய கடவுள்களின் பழக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து சமயத்தினதும் தொன்மரபுனதும் சடங்குகள் நாகரீக கண்களுக்கு விநோதமாக தெரிகிறது. சடங்குகளை வெறும் மூடநம்பிக்கை என்று நிராகரிப்பது ( அதை மனோதத்துவ முறையில் விளக்குவது மேலும் மோசமானது) என்பது இந்தியாவின் வரலாற்றையும் முன்வரலாற்றையும் ஒருங்கே படிப்பதற்கான உண்மையான வாய்ப்பை தூக்கியேறிவதாகும்.

என்னுடைய களப்பணி தக்காணத்து பகுதிகளையும் தீபகற்ப இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளையும் மட்டுமே உள்ளடக்கியது. இந்த பகுதியின் வட்டார வழக்கிலும் பழக்கவழக்கங்களிலும்
உள்ள பரிச்சயத்தால் தான் பழங்குடி மக்கள் மற்றும் கிராம வாழ்க்கையின் மீது விரிவான ஆய்வை மேற்கொள்ள முடிந்தது.நான் ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் பழங்குடியினர் ராஸ் பேஸ் பார்தி(Ras Phase Pardhi).மகாரஷ்டராவில் தற்சமயம் இருக்கும் இந்த மக்கள் உண்மையில் குஜராத்திலிருந்து வடக்கு நோக்கி வந்தவர்கள்.இவர்கள் குஜராத்தியின் வட்டார வழக்கு ஒன்றை பேசுகிறார்கள்.பார்திகள் நாடோடிகள்.இவர்களின் பயணங்களில் மெலிந்த கால்நடைகளை உடன் அழைத்து செல்வர். ஆண்கள் சில நாட்கூலி வேலைகளை செய்வதோடு பறவைகளை ரகசியமாக பின்தொடர்ந்து சென்று பொறி வைத்து பிடிப்பதில் தேர்ந்தவர்கள்.மேலும் சிறிய வேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர்.எனினும் இன்று பார்திகளின் முதன்மை பணி பிச்சை எடுப்பதும் திருடுவதும் தான்.இது ஆண்களாலும் பெண்களாலும் ஒருங்கே செய்யப்படுகிறது.பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதை பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான்.

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.




சில படங்கள்



ராபெர் ப்ரெஸ்ஸோன் இயக்கிய பிக்பாக்கெட் படம் பார்த்தேன். ஒரு வகையில் இது தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் போல எனக்குப் பட்டது. நான் தவறாக கூறவில்லை.ஆனால் குற்றமும் தண்டனையும் நாவலை படிக்காத ஒருவர் இந்த படத்தை பார்த்தால் எவ்வாறு புரிந்து கொள்வார் என்று எனக்கு புரியவில்லை.
சங்கராபரணம் என்ற தெலுங்குப் படம் பார்த்தேன். மிக அற்புதமான படம். கிட்டத்தட்ட பத்து முறை பார்த்து விட்டேன்.இதில் சங்கரசாஸ்திரியாக நடித்திருப்பவர் சோமயாஜூலு.இவர் ஒரு IAS அதிகாரி. கே.விஸ்வநாத் இயக்கிய இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. பாலு மகேந்திராவின் வீடு படமும் அழியாத கோலங்கள் படமும் பார்த்தேன். அற்புதமான படங்கள். அழியாத கோலங்கள் படத்தில் வரும் நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை பாட்டும் பூவண்ணம் போல நெஞ்சம் பாட்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். அதிலும் பூவண்ணம் பாடல் ஜெயசந்திரனின் குரலில் என்னை வசீகரித்துவிட்டது. எவ்வளவு முறை கேட்டேன் என்றே தெரியவில்லை.ராபெர் ப்ரெஸ்ஸோனின் பல்தஸார் படமும் பார்த்தேன். ஒரு கழுதையும் ஒரு இளம் பெண்ணும் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.ஏன் எல்லா முகங்களும் எவ்வித முகபாவங்களும் இல்லாமல் நடிக்க வைக்கப்பட்டார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் எதிர்காலத்தில் வரலாம்.ஹிட்ச்காக்கின் தி பர்ட்ஸ் படம் பிரமிப்பாக இருந்தது. ஏன் பறவைகள் மனிதர்களை தாக்குகிறது என்பதற்கு கடைசி வரை எந்த விடையும் இல்லை. இதை குறித்து நாகார்ஜூனன் அவர்கள் அவருடைய தளத்தில் எழுதியிருக்கிறார்.







என்பதனால்



தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது என்று ஒரு தொழிலாளி சொல்கிறான். இந்த வாக்கியத்தில் என்ன பொருள் கொள்ளலாம். நிர்வாகம் , அரசு தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்று கொள்ளலாம். இதை கட்டுடைக்கலாம்.இந்த வாக்கியத்தை சொல்பவன் பெயர் ராஜன்.அவன் ஒரு தொழிலாளி. அவன் சமீபத்தில் அவனுடைய சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி இருக்கிறான். வங்கிக் கடனில். மேலும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டான்.மோட்டார் சைக்கிள் வேறு வாங்கிக் கொண்டான். அதுவும் கடனில். அவனுடைய வயோதிக அம்மாவிற்கு மருத்துவ செலவு. ஆக தொழிலாளிகளுக்கு சம்பளம் குறைவு என்பது உண்மையில்லை.மாறாக ராஜன் வாங்கிய வீட்டுக்கடன், வண்டிக்கடன் , செய்துகொண்ட திருமணம், அவனுடைய தாய் இவைகளே இந்த வாக்கியத்திற்கான காரணம். ராஜனின் நடவடிக்கைகளால் அவனுக்கு சம்பளம் கட்டுபடியாகவில்லை. இரண்டாவது செய்தி.ராஜன் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த ஊரில் தொழிலாளர்களின் தற்கொலை போன ஆண்டை விட அதிகரித்து உள்ளது என்று ஒரு கணக்கு சொல்கிறது. இதை எப்படி நிர்வாகம் எதிர்கொள்கிறது என பார்ப்போம். ராஜன் தன்னுடைய தகுதிக்கு மீறி கடன் பெற்றார். மேலும் அவர் தனி வாழ்வில் ஒழுக்கமாக இருக்கவில்லை.பாலியல் அறமதிப்பீடுகளை அவர் மீறினார்.இவைகளால் அவருக்கு உண்டான மனநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார்.மற்றபடி நிர்வாகம் தன்னுடைய தொழிலாளர்களுக்கு மனநெருக்கடிகளை சமாளிக்கவே நிறைய செலவு செய்கிறது என ஒரு பட்டியலை நீட்டும். மூன்றாவது செய்தி - நிர்வாகத்தின் மீதும் அரசின் மீதும் சுற்றுச்சுழல் மாசு சார்ந்து புகார் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அந்த நிர்வாகம் எந்த ஊரில் உள்ளதோ அந்த ஊரில் அது ஒரு பிரகடனம் செய்யும். நாம் சேர்ந்து நமது ஆற்று நீரை சுத்தப்படுத்துவோம் என்று. உடனே புகார் தெரிவித்த அமைப்புகள் வெற்றி வெற்றி என்று சொல்லும். வழக்கு திரும்ப பெறப்படும்.


மேலே சொன்ன விஷயங்களில் முதலாவதை எடுத்துக்கொள்வோம். கடன் வாங்கிக்கொள்ள நம்மை சுற்றி இருக்கும் அமைப்பு,நிர்வாகம், அரசு எல்லாம் தான் ஊக்குவிக்கிறது.ஆனால் இங்கு முக்கிய விஷயம் அதுவல்ல.ராஜன் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது என்ற ஒரு புகாரை எழுப்பும் போது அது புறவயமானதாக இருக்கிறது. அப்படியல்ல அது ராஜனின் பிரச்சனை. அவனது திறமையின்மையால் அவன் அதிக கடன் பெற்று இவ்வாறு அவதிபடுகிறான் என்று அகவயமாக்குகிறது. இரண்டாவது பிரச்சனை இன்னும் பெரிது.தன்னால் சுயமாக ஒரு தொழிலை செய்யவதற்கான அனைத்து வாசல்களையும் அடைத்தப்பின் அவனை ஒரு கைதி போல ஆக்கி அவனை நகருக்கு வரவழைத்து ஒரு பெரிய அமைப்பின் கீழ் தொழிலாளி ஆக்கப்பட்டு சுரண்டப்படுகிறான். உண்மை என்னவென்றால் அவன் சுரண்டப்படுகிறான் என்பது அவனுக்கு தெரியாது. பருண்மை வடிவில் அவனுக்கு எஜமான் இல்லை.ஆனால் அவன் அச்சப்படுகிறான். எதிர்காலத்தின் நிச்சயமின்னை அவனை பயமுறுத்துகிறது. அப்போது ராஜன் நிலப்பிரபுத்துவம் உருவாக்கி கொடுத்த பாலியல் அறங்களை மீறுகிறான். அப்படி மீறுகையில் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறான்.தற்கொலை செய்து கொள்கிறான். இங்கு பிரச்சனை ராஜன் மாத்திரம் அல்ல. இந்த அமைப்பின் பிரச்சனை.முதல் இரண்டுமே மிகப்பெரிய பிரச்சனைகள்.அவற்றை ஆராய்ந்தால் அவன் சார்ந்திருக்கும் அமைப்பு அதில் முக்கிய பங்கு வகிப்பதை நாம் உணர முடியும். இரண்டுமே புறவயமாக அணுகப்பட வேண்டியவைகள். ஆனால் இரண்டுமே அகவயமானதாக , தனிநபருக்கு உரியதாக மாற்றப்படுகிறது. இதுதான் நவீன முதலாளித்துவத்தின் வெற்றி. மூன்றாவது இன்னும் பெரிய விஷயம்.இதை நமது நவீன முதலாளித்துவம் மிக அழகாக கையாள்கிறது. உதாரணத்துக்கு காந்தியர் ஒருவர் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதால் அதை எதிர்த்து பெரிய மக்கள் போராட்டம் நடத்துகிறார் என வைத்துக்கொள்வோம். கொஞ்ச காலம் நம் நிர்வாகமும் , அரசும் அவரை அடக்க பார்க்கும். ஒன்றும் வழியில்லை என்றால் கடைசி ஆயுதம்.இது எங்களால் வந்த பிரச்சனை அல்ல.மாறாக நம்மால் வந்த பிரச்சனை. நாம் தான் சமாளிக்க வேண்டும். நாம் என்பதை அழுத்திச்சொல்லும்.ஆம்.அவரை(காந்தியரை) அழைத்து சுற்றுச்சுழலுக்கு தங்களால் முடிந்ததை தாங்கள் நிச்சயம் செய்வதாகவும் ஆனால் அதை தங்களால் மட்டும் செய்ய முடியாது என்றும் ஆக நாம் செய்வோம் என சொல்லும். முடிந்தால் அந்த காந்தியரை வைத்து ஒரு கருத்தரங்கு நடத்தும். ஊர் கூடி தேர் இழுப்போம் என்று விளம்பரம் செய்யும்.ஒரு வருடம் கழித்து காந்தியர் மெளனமாகி போவார்.

என்பதனால் சொல்லப்படுவது என்னவென்றால் முதலிலேயே மெளனமாக இருந்து விடுவது நலம்.




ஒரு துண்டு வானம்



ராஜன் தனது நினைவுகளை மீட்டான். மலம் என்றால் புனிதமற்றது.அமலம் என்றால் புனிதமானது.அழுக்கற்றது.அமலா என்றால் புனிதமானவள்.உண்மையில் புனிதமானது புனிதமற்றது என்ற பிரிவினைகள் உண்டோ? உண்டோ என்றால் இப்போது உண்டா அல்லது எப்போதும் இருந்ததா என்ற கேள்வி கேட்டு கொண்டான். இருந்திருக்கலாம் , ஆனால் நிச்சயம் இப்போது இல்லை. ஒரு பெரிய பாறை போல கனத்தது காலம். இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாக வேண்டும். வாழ்ந்தாகத்தான் வேண்டுமா? மனிதன் இறக்கும் போது தனியாக மரணத்தை சந்திக்கிறான்.அப்போது அதுவரை அவனோடு வந்த சித்தாந்தங்கள் , தூக்கி கொண்டு நடந்த லட்சியவாதங்கள் தள்ளி நின்று எக்களிக்கின்றன.ராஜன் தனியாக நின்றான்.அமலா பேசும் போது ஒரு முறை அவனிடம் சொன்னாள். ராஜன் நேற்று நிலப்பிரத்துவ காலத்தின் ஆண் பெண் இருந்தார்கள் , இன்று முதலாளித்துவத்தின் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அப்போது அவளை பெண்ணியவாதி என்று கிண்டல் செய்தான் ராஜன். அவள் சொன்னாள் நீ எப்போது புரிந்து கொள்வாயோ தெரியவில்லை ராஜன், எல்லாம் மாறிவிட்டது.பிறகு அன்று அவள் எதுவும் பேசவில்லை. ராஜனை விட்டு விலகிவிடலாம் என்று அவள் முடிவு செய்துவிட்ட நாட்கள் அவை. ராஜனுக்கு அவை புரியாமல் இல்லை. ஆனால் அது வெறும் கருத்துதளத்தில் நின்ற போது அவன் சற்று சமாதானம் செய்து கொண்டான்.ஆனால் இன்று எல்லாமே பருண்மை வடிவில் வெளிப்பட்டாகிவிட்டது. அமலா அவனை எவ்வித கருணையும் இல்லாமல் நிராகரித்து விட்டாள். அவள் கடைசியில் நேர் சந்திப்பில் சொன்னது - எல்லாம் மாறிவிட்டது ராஜன் புரிந்துகொள் சேகுவராவும் பாப் மார்லியும் இன்று முதலாளித்துவத்தின் குறியீடுகள்.சடை வளர்த்து கொள்வதும் , தாடி வைத்துக்கொள்வதும் இன்று எதிர் கலாச்சாரம் அல்ல.அவை வெறும் மோஸ்தர் அவ்வளவே.


உண்மையில் ராஜன் தாடி வைத்துக்கொள்ளவோ சடை வளர்த்துக்கொண்டதோ இல்லை.ராஜன் அடிக்கடி சோதனைக்கூடத்திலேயே நினைவிழந்துவிடுவான்.அப்படி ஒரு முறை நினைவிழந்தபோது அவனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி போய்விட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியேறி வேலைக்கு செல்லாமலே இருந்தான். அவனது நண்பர்கள் அவனது உடல் நலமின்மையால்தான் அவன் வேலைக்கு வரவில்லை என நினைத்துக்கொண்டனர். ராஜன் அந்த நாட்களின் பின் மதியப் பொழுதுகளில் எங்கேங்கோ அழைந்து திரிந்தான். ஒரு முறை அப்படி அலைந்து திரிந்த போது காலத்திலிருந்து அவன் விலகிவிட்டது போல உணர்ந்தான் .அவன் முன் மனிதர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.சைக்கிள்கள் மோட்டார்கள் எல்லாம் ஒடிக்கொண்டிருநதன்.ஆனால் அவை எல்லாம் வெகு அப்பால் பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நடப்பது போல உணர்ந்தான். ராஜன் அதன்பின் சில நாட்களில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.சோதனைக்கூடத்தில் ஒரு நாள் எதையும் செய்யாமல் அமர்ந்திருந்த போது நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. ராஜன் வெளியே வந்து வானத்தை பார்த்தான் . கீறல்கள் இல்லாத நீல வானம். மறுபடி சோதனைகூடத்துக்குள் சென்றான்.ஜன்னலின் வழியாக பார்த்த போது ஒரு துண்டு வானம் தெரிந்த்து. சிரித்துக் கொண்டான்.மேலதிகாரியிடம் சென்று நான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்றான். அவர் உட்பட அனைவரும் அவனை பைத்தியக்காரன் என கேலி செய்தனர்.நீங்கள் எல்லோரும் துண்டு வானத்தை பாருங்கள் என்று சொல்லி வெளியேறினான் ராஜன்.

இந்த சமயங்களில் தான் அமலா அவன் மேல் எரிச்சல் கொண்டாள். ராஜன் அவளை சமாதானம் செய்யவில்லை. இனி என்னதான் செய்ய போகிறாய் என்று அவள் கேட்கும் போது எனது பயணம் முழுமையை நோக்கி இருக்கும் என்பான். அவள் மேலும் எரிச்சல் கொண்டாள். இயற்கை விவசாயம் குறித்து அவன் ஒரு முறை சொன்ன போது விவசாயத்தில் என்ன இயற்கை அது உண்மையில் இயற்கையை நம் விருப்பத்திற்கு புணரமைப்பது தான் வேண்டுமானால் கானகம் சென்று உணவு சேகரிப்பில் ஈடுபடு என்று அவனை கேலி செய்தாள்.வெயிலில் ஒரு முறை அலைந்து திரிந்த போது நினைவிழந்து கீழே விழுந்துவிட்டான். எழுந்தால் ஒரு பழைய புத்தக கடையில் நாற்காலியில் அமர்நதிருநதான். எழுந்து கெட்டி அட்டை போட்ட ஒரு புத்தகத்தை கையில் எடுத்தான். பிரித்து பார்த்த போது அவன் படம் அதிலிருந்தது. அவனை போன்ற படம்.


ராஜன் அந்த புத்தகத்தை எழுதியவரின் பெயரை பார்த்த போது அதிலும் ராஜன் என்ற பெயரே இருந்தது. புத்தகத்தின் தலைப்பு வருங்காலங்களின் வரலாறு. காசி பனாரஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியில் இருந்தவர் எழுதியது. அதற்கு ஒரு முன்னுரை எழுதப்பட்டுயிருந்தது. அதை எழுதியவர் இது இந்தியாவின் வரலாறு. ஒரு மாற்றம்.இது இந்தியாவின் இறந்த கால வரலாறு அல்ல.மாறாக எதிர்கால இந்தியாவின் வரலாறு என்பதாக இருந்தது. இதை எழுதியவர் பிற்காலத்தில் காணாமல் போய்விட்டார் என்றும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மிக குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட இந்த புத்தகம் மறுபதிப்பு காணுமா என்பது இதை வாசிப்பவர் கைகளில் தான் இருக்கிறது என்றும் இருந்தது. ராஜன் ஐநூறு பக்கங்களுக்கு மேல் நீண்ட அந்த புத்தகத்தை ஒரே இரவில் வாசித்து முடித்தான்.

புத்தகத்தில் மொத்தமாக இருந்தது இதுதான். லட்சியவதாங்களின் தலைமுறை முடிவுக்கு வந்து முதலாளித்துவம் உருவாக்கும் பெரிய வலையில் மத்திய தர வர்க்கமும் உள்ளே நுழைந்து தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்ற நிலை உருவாகும் .அதுவே பொதுமையாக்கலின் காலமாக இருக்கும். அந்த காலத்தின் அரசன் உண்மையில் தொழில்நுட்பமே என்றும் இருந்தது. அதன் பின்னான காலகட்டத்தில் மனிதர்கள் சலமின்றி வாழ்வார்கள்.அப்போது அவர்கள் முற்றிலும் தொழில்நுட்பத்தால் கட்டுபடுத்தப்பட்டுயிருப்பார்கள்.அந்த காலத்தில்
அவர்கள் இயந்திரங்களாகவும் மாறி போயிருப்பார்கள். அதற்கு அடுத்த காலகட்டம் தான் The Era of Great Refusal காலகட்டம்.அந்த காலகட்டத்தில் மனிதர்கள் பெரிதாக எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஆனால் வீடுகளை விட்டு வெளியில் வந்து சாலையில் இருப்பார்கள்.அந்த காலகட்டத்தில் மனிதர்கள் மின்சாரத்தை துறப்பார்கள்.அதுவே மறுப்பின் காலகட்டம். அதன்பின்னான வரலாறு வேறு விதமாக இருக்கும்.இதுவே இந்தியாவின் அடுத்த நூறாண்டுகளின் வரலாறு என்று முடிந்திருந்தார் ராஜன். புத்தகம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதாம் வருடம் வெளிவந்திருக்கிறது.

பின்னர் ஒரு நாள் இந்த புத்தகத்தை அமலாவிடம் கொடுத்த போது அவள் அதை படித்துவிட்டு மிகுந்த சலிப்புடன் சொன்னாள். இந்த ராஜன் சொல்வது போல இது பொதுமையாக்கலின் காலகட்டம் . நீயும் உள்ளே நுழைந்து அதுனுள் இரு.அப்போது மிகுந்த எதிர்வினையாற்றிய ராஜனை பார்த்து அவள் சொன்னவைதான் எல்லாம் மாறிவிட்டது ராஜன் என்பது.மிகுந்த அலைகழிதல்களுக்கு பின் ஒரு நாளில் ராஜன் மறுபடியும் ஒரு துண்டு வானத்தை பார்க்க ஆரம்பித்தான்.ஆம் இந்த தலைமுறைக்கு சாத்தியப்பட்டது ஒரு துண்டு வானம் தான். ஆனால் அமலா அவனை விட்டு எப்போதைக்குமாக விலகியிருந்தாள்.