கதை நிலைகள்


கதைகளை தன்னிலை,முன்னிலை , படர்க்கையில் எழுதலாம்.

தன்னிலை

ஒரு கதையின் துவக்கத்தில் "என் அம்மா நேற்று இறந்துவிட்டார்.நான் ஊருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பினேன்."  என்பதும்

"ராஜனின் அம்மா நேற்று இறந்துவிட்டார்.ராஜன் செய்தி கிடைத்தவுடன் ஊரிலிருந்து கிளம்பினான்" என்பதும் முற்றிலும் வித்யாசமான பாதிப்பை ஏற்படுத்துபவை.


தஸ்தாயெவ்ஸ்கியின் நிலைவறையிலிருந்து குறிப்புகள் தன்னிலையில் எழுதப்பட்ட நாவல்.திரைப்படத்தில் இதை Point of View ஷாட்டுடன் ஒப்பிடலாம்.இதன் செளகரியம் இது கொந்தளிப்பான விஷயங்களை பேச பெரிதும் உதவுபவை.மேலும் புற உலகை பற்றி கவலைப்பட தேவையில்லை.கதை சொல்பவனின் அளவில் புற உலகம் வெளிப்பட்டால் போதுமானது.

முன்னிலை

முன்னிலையில் ஆசிரியர் நம்மை பார்த்து பேச ஆரம்பித்து விடுகிறார்.

"என்ன சார் , எப்படி இருக்கீங்க.சாப்டாச்சா.நான் இன்னும் சாப்படல. இங்க மூணு வேல சாப்படறவங்கள மனசுல வெச்சே எல்லாத்தையும் முடிவு செய்றாங்க.நான் உங்கள சொல்லல.பொதுவா சொன்னேன்.அப்பறம் இங்க நல்ல மழை.வெளிய கூட போக முடியல.இன்னிக்கு மத்தியமும் சாப்படல.உங்களுக்கு எப்படி.நல்லா சிக்கன் பிரியாணி சாப்டுட்டு தூங்க போற மாதிரி தெரியுது"

இப்படி கதையை வாசகனை நேரடியாக பார்த்து பேசுவது போல எழுதுவது முன்னிலை.ஆல்பர் காம்யூவின் நாவலான வீழ்ச்சி , முழுக்க முழுக்க முன்னிலையில் எழுதப்பட்டது.இது கேமிராவை ஒருவர் முன் வைத்து அவரை நேரடியாக கேமிராவை பார்த்து பேச வைப்பது போல.இது வாசகரிடம் இடம் காலம் குறித்த மயக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.ஆனால் மிக குறைந்த அளவிலேயே இது பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒரு பொது சிக்கலை பேச இந்த உத்தி பெரிதும் பயன்படும்.

படர்க்கை 

நாம் வாசிக்கும் பெரும்பாலும் கதைகள், நாவல்கள் படர்க்கையில் எழுதப்பட்டவைதான்."அவனது அம்மா இறந்துவிட்டள்.அவன் துயரத்தில் ஆழ்ந்திருந்தான்".இங்கே ஆரம்பித்து அவன் வடபழனியிலிருந்து கோயம்பேடுக்கு செல்லும் போது அந்த நகரம் , அதன் இரைச்சல் ஆகியவற்றை புறவயமாக விளக்க படர்க்கையில் கதை சொல்வது பெரிதும் உதவும்.திரைப்படத்தில் point of view shot,monologue உத்தி போன்றவை தவிர்த்து அனைத்து ஷாட்களும் படர்க்கை தன்மையினலானவைதான்.

எங்கே எதை பயன்படுத்த வேண்டும் என்பதில் ஒரு எழுத்தாளனின் வெற்றி இருக்கிறது.

உயர்கல்வி


ஜெயமோகனின் பத்து லட்சம் காலடிகள் சிறுகதை சுவாரசியமான சிறுகதை.சிக்கலற்ற எளிய கதை.கதைகளில் பெரும்பாலும் ஒரு தளத்தை அமைத்துவிட்டால் மேற்கொண்டு கதையை கொண்டு செல்வது அத்தனை கடினமானதல்ல.இங்கே ஒரு போலீஸ் அதிகாரி கடந்து வந்த வழக்கும் பத்தேமாரி படகின் தொழில்நுட்பமும் அதை செய்யும் சமூகத்தினரின் வரலாற்றையும் இணைத்து ஒரு அடித்தளத்தை உருவாக்கும் போது எளிதாக கதையை மேலே கொண்டு செல்ல முடிகிறது.கதை படர்க்கையில் இல்லாமல் தன்னிலையில் இருப்பது அதை மேலும் எளிதானதாக ஆக்குகிறது.தரவுகளை அடுக்கி இறுதியில் ஒரு திருப்பத்தை உருவாக்கும் போது சிறுகதை மேலும் சுவாரசியமானதாக மாறுகிறது.

இந்தக் கதையில் இறுதியில் தன் மகன் கொலை செய்யப்பட்டதை அவர் தந்தை சொல்கிறார்.எனக்கு விஷ்ணுபுரம் நாவலில் சூரியதத்தர் வீரன் என்ற யானைக்கு வைத்தியம் பார்த்தவருக்கும் அந்த யானையை வேலைக்கு அமர்த்திய சிற்பிக்கும் தண்டனை அளிக்கும் இடத்தில் நாடகீயத்தனத்தைDramatic) உருவாக்குவார், அந்த பகுதி நினைவுக்கு வந்தது.கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்தில் ஒரு வில்லன் அறிமுகமாகும் காட்சி போன்றது சூரியதத்தர் தண்டனை வழங்கும் அந்தக் காட்சி.சினிமாத்தனம் என்ற சொல்லை சிலர் எதிர்மறையாக புரிந்துகொள்கிறார்கள்.மிகவும் டிராமடிக்காக இருக்கிறது என்பதைத்தான் சினிமாத்தனமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.இந்தக் கதையிலும் அந்த தந்தை தன் மகன் கொலை செய்யப்பட்டதையும் அப்படியாக ஒரு நாடகீயத்தருணமாக வெளிப்படுத்துகிறார்.அது சட்டென்று உங்களிடம் வருகிறது.அதுவரை கதையில் அதற்கான எந்த சுவடும் இல்லை.அது குறிப்புணர்த்தப்படவும் இல்லை.அதனால் அது டிராமடிக்கான திருப்பமாக ஆகிறது.பத்தேமாரி படகின் தொழில்நுட்பம், வைகன்களை ஆற்றிலிருந்து எடுத்தது ஆகிய இரண்டுக்குமான குறியீடாக மாறுகிறது.

கைமுக்கு சிறுகதையும் அப்படியான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.ஆனால் இந்தக் கதையில் முக்கியமாக நான் கருதியது உயர்கல்வி நிறுவனங்களை பற்றி அதில் சொல்லப்பட்டிருப்பதை தான்.அது முக்கியமானது.ரோஹித் வெமூலாவின் மரணத்திற்கு காரணமானது.ஏன் நமது உயர் கல்வி நிறுவனங்களில் உயர்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கானதாக முழுவதுமாக மாறிக்கொண்டிருக்கிறது.ஏழ்மையான பின்னணியிலிருந்து வாழ்வில் முன்னேறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.அவர்கள் உயர் கல்வி கற்றார்கள்.நாம் அப்துல் கலாம் பற்றி சொல்கிறோம்.சிவன் பற்றி சொல்கிறோம்.ஆனால் இவை ஒரு காலகட்டம்.தொண்ணூறுகள், இரண்டாயிரத்திற்கு முன்னர் கல்வி கற்றவர்கள்.இன்று அந்த நிலை மெல்ல மாறி வருகிறது.உயர் கல்வி என்பது நகரத்து உயர்த்தப்பட்ட வர்க்கத்து மனிதர்களுக்கானது என்பதாக மாறி வருகிறது.இதை இந்தக் கதை பேசுகிறது.அப்படி இல்லாமல் உயர் கல்வி நிறுவனங்களில் வந்து அமர்பவர்களை சூழல் பாவத்துடன்,ஏளனத்துடன் பார்க்கிறது.இது கொடூரமானது.போகும் நிலை மிகுந்த கவலையை அளிக்கிறது.என்ன பிழை செய்தனர் என் மக்கள்.

நட்பு


ரவி சுப்பரமணியன் இயக்கிய எல்லைகளை கடந்து எழுத்துக்கலைஞன் ஆவணப்படத்தில் ஜெயகாந்தனிடம் கலைஞர் கருணாநிதி பற்றிய ஒரு கேள்விக்கு இந்த குறளை பதிலாக சொல்லியிருப்பார்.

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.


நாடாமல் உருவான நட்பு என்று தனக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இடையிலான நட்பைப் பற்றி சொல்லியிருப்பார்.
அன்பினால் உருவாகும் ஆர்வம், அந்த ஆர்வம் உருவாக்கும் நட்பு.இது அன்புடைமை என்ற அதிகாரத்தில் வருகிறது.கிட்டத்தட்ட இதே பொருளை கொண்ட மற்றொரு குறள் நட்பு என்ற அதிகாரத்தில் வருகிறது.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

பேசிப் பழகி ஒருவரை அறிந்து கொள்வதால் நட்பு உருவாக வேண்டும் என்ற அவசியமில்லை.இருவருக்கும் ஒரு போன்ற உணர்ச்சி இருந்தால் நட்பு எனும் உரிமை தரும் என்கிறார் வள்ளுவர்.கிட்டத்தட்ட நட்பை காதலை போன்ற ஒன்றாக ஆக்குகிறார்.பரிமேலழகர் இந்த குறளில் பழகுதல் பற்றிய விளக்கத்தில் பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல் இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்று சொல்கிறார்.

அன்பும் ஆர்வமும் இருந்தால் பேசுவதும் பழகுவதும் இன்றி நாடாது நட்பு என்ற உரிமை அது உருவாக்கும் என்கிறது இவ்விரண்டு குறள்கள்.நம்முடன் அதிகம் பழகாமல் , பேசாமல் இருந்த ஒருவரின் மரணம் நம்மை சில நேரங்களில் அதிகம் உலுக்குகிறது.நம்முடன் நிறைய நேரம் செலவழித்து பேசிப்பழகிய ஒருவரின் மரணத்தை நாம் எளிதல் கடந்து விடுகிறோம்.ஒரு உறவில் உருவாகும் பற்றுக்கும் பேசிப் பழகி கழித்த காலத்திற்கும் தொடர்பில்லை.

கலைஞர் பற்றிய கேள்விக்கு முதலில் இந்த குறளை சொல்லிவிட்டு பின்னர் தான் விளக்கம் அளிப்பார்.சட்டென்று ஒரு கேள்விக்கு ஒரு குறளை பதிலாக தருவது ஆச்சரியமானது.அதை அவர் தன் மனதுக்குள் மறுபடி மறுபடி மீட்டிக்கொள்கிறார்.அதனால் தான் அவரால் பாரதியார், குணங்குடி மஸ்தான் சாகிபு,வள்ளுவர், சிலப்பதிகாரம் பற்றிய எல்லாம் எளிதாக போகிற போக்கில் சொல்லிச் செல்ல முடிகிறது.ஒரு கேள்விக்கு வையத் தலைமைக்கொள் , வட்டாரத் தலைமை போதாது என்கிறார்.தமிழில் எழுத்தாளர்கள் பற்றி எடுக்குப்பட்ட ஆவணப்படங்களில் மிகச்சிறந்த ஆவணப்படம் ஜெயகாந்தன் பற்றி ரவி சுப்பரமணியன் எடுத்தது தான்.

ஒரு வகையில் ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு கூட இந்தக் குறளில் சொல்லப்படுவது போன்றது தான்.காந்திக்கும் டால்ஸ்டாய்க்குமான அத்தகையதுதான்.

பொருள்



தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய தியரி ஃஆப் எவரிதிங்(Theory of everything) திரைப்படத்தில் அவர் இறுதி காட்சியில் தன் மனைவி மக்களுடன் அரண்மனைக்கு சென்று ராணியை சந்தித்த பின்னர் தோட்டத்தில் தன் குழந்தைகள் தொலைவில் விளையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவாறு தன் மனைவியிடம் பார், நாம் உருவாக்கியவற்றை என்று கூறுவார்.மிகவும் அபாரமான காட்சி.

ஸ்டீபன் ஹாக்கிங் தன் பொருள் என்று தன் மக்களை கூறுகிறார்.மேலே உள்ள குறள், தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்.அந்த புதல்வரின் பொருள் அவர் அவரின் வினையான் வரும் என்று கூறுகிறது.

தன் குழந்தைகளின் அறிவுச்செல்வம், பொருட்செல்வம், மக்கள் செல்வம் எல்லாம் அவர் அவரின் வினையால் வருவது.அது வாழையடி வாழையாக வருவது அன்று.இதுவும் பெளத்தம் , சாங்கியம் கூறும் காரண - காரிய அடிப்படையையே குறிக்கிறது.அதே நேரத்தில் கர்மவினை என்று பெளத்தம் எதையும் சுருக்குவதில்லை.தற்செயல் என்று எதையும் தனித்து பார்ப்பதுமில்லை.காரணங்களையும், சூழ்நிலைகளையும் , ஆதரவுகளையும் சார்ந்து ஒவ்வொன்றும் எவ்வாறு மாறுகின்றது, மறைகிறது, தோன்றுகிறது என்பதை நிர்னயிக்கும் இயற்கை விதிகளின் தொகுப்பே தர்மம்.கர்மவினை ஒருவரின் தனிப்பட்ட செயல்களை மட்டுமே சுட்டுகிறது.ஆனால் பெளத்தம் எதையும் தனித்த ஒன்றாக பார்ப்பதில்லை.அது ஆன்மைவை மறுக்கிறது.அதனாலேயே அதை அனான்மவாதம் என்கிறார்கள்.எதுவும் மாற்றத்திற்கு உட்படாத வகையில் இருக்க இயலாது என்பதே பெளத்தத்தின் அடிப்படை.

இதுவரையான காரணங்களின் வழி இனியான காரியங்கள் இருக்கிறது.அதில் உங்களின் பங்கும் இருக்கிறது.உங்களின் பிரக்ஞையின் துணைக்கொண்டு இருக்கும் சூழமைவில் நீங்கள் எவ்வாறு தேர்கிறீர்கள் என்பதையே பெளத்தம் பேசுகிறது.அந்த வகையில் இந்தக் குறள் தந்தை வழி மகன் எந்த பொருளையும் பெறுவதில்லை, மாறாக அது அவனின் வினை வழி வருவது என்று கூறுகிறது.அப்படியே அவன் பெறும் மக்களும் அவன் வினை வழி வருவது என்றே கூறுகிறது.ஒரு கருவில் உருவாகும் குழந்தையின் எண்ணத் தொகுப்பு அவரின் வினையாலும் தேர்வாகிறது என்பதாக கூட இதைக் கொள்ள முடியும்.

திருக்குறளில் பெளத்தத்தின் தாக்கம் வலுவாக உள்ளது.இதை குறித்து பல அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.தனித்த சுயம்பு என்று எதுவும் இல்லை.ஒன்றின் சாத்தியம் அந்த சூழமைவில் தான் இருக்கிறது.ஐன்ஸ்டீன் அவர் உருவான காலத்தில் தான் உருவாகியிருக்க முடியும்.Positive unconsciousness என்று ஃபூக்கோ தன் The order of things புத்தகத்தில் இதை குறிப்பிடுகிறார்.இது முக்கியமான ஒன்று.

இது யுகபுருஷர்களை , பிம்பங்களை, அறிவுஜீவிதனத்தை உடைக்கிறது.எனக்கு இந்த தேர்தெடுக்கப்பட்டவர்கள், ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், பீடிக்கப்பட்டவர்கள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை.எழுத்து, கலை , விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது.அவர்கள் பெரும்பாலும் உலக மனிதர்களை இரண்டாக வகுக்கிறார்கள்.சாமானியர்கள் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு ஏதோ பட்டவர்கள்.ஜெயமோகன் இதை பலமுறை எழுதியிருக்கிறார். இந்த ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான் இந்த சாமானியர்களின் வாழ்க்கையின் விடிவெள்ளி மற்றும் சனியும் கூட.அவர்கள் இவர்களுக்காக புதிய உலகை உருவாக்குவர்கள்.அதன் பொருட்டு அவர்களின் சிறுமைகள், மீறல்கள் உலகத்தால் பொறுத்தக்கொள்ளப்பட வேண்டும்.குற்றமும் தண்டனையும் நாவலில் இதைத்தான் ரஸ்கோல்நிகோவ் சொல்கிறான்.

ஆனால் ஒருவன் ஒரு இருட்குகையில் சிறு ஒளியை உருவாக்குவது கூட அந்த சூழமைவிலிருந்து பெறும் ஒன்றே.அங்கு அதை செயல்படுத்தும் அவன் ஒரு நிமித்தம் மட்டுமே.அவன் கடவுளோ, ஆசிர்வதிக்கப்பட்டவனோ அல்ல.ஐன்ஸ்டீன் தன் அறிதல்களை பற்றி சொல்லும் போது தான் நியூட்டன் , கலீலியோ போன்றோரின் தோள்களில் ஏறி அதை அறிந்ததாக கூறுகிறார்.அவர் ஏன் அறிந்தார் பிறர் ஏன் அறியவில்லை என்ற கேள்விக்கு நாம் Resonance என்பதை பற்றி யோசிக்கலாம்.சூழமைவில் உள்ள ஒரு அறிதலை அதன் அலைவரிசையில் வந்து சேரும் ஒரு மனம் அறிந்துகொள்கிறது.அவ்வளவுதான்.அதற்கு அப்பால் அந்த மனம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.

நான் பெரும்பாலும் இலக்கிய கூட்டங்கள் , விவாதங்கள், உரையாடல்களில் , குழுக்களில் , ஜெபங்களில் பங்கு கொள்வதில்லை.அது ஏதோ ஒரு வகையில் அறிந்தோர் சபை என்ற எண்ணத்தை கொண்டுள்ளது.எனக்கு அப்படியான இடங்களில் என்னை பொருத்துக்கொள்வதில் தயக்கம் உள்ளது.நீங்கள் புதிதாக படைக்க ஒன்றும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.இன்றைய மனிதன் நேற்றைய மனிதனை விட பண்பானவன் , நாகரீகமானவன், அறிந்தவன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.அவர் அவர் தன் பிரக்ஞையின் வழி இந்த வாழ்க்கையில் தேர்கிறார்கள்.அதற்கு அப்பால் இதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.சென்று சேர்வதற்கும் அழைத்துக்கொள்வதற்கும் எந்த இஷ்டலோகமும் இல்லை. 

மறுபிறப்பு



உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

மறுபிறப்பு குறித்த பெளத்தத்தின் சாரம் உள்ளடக்கியிருக்கும் குறள்.பெளத்தம் மறுபிறப்பு குறித்து பேசும் போது முதலில் மரணத்தை இரண்டாக வகுக்கிறது.அவை பொருள் மற்றும் எண்ணம்.பொருள் அழிந்து பஞ்சபூதங்களில் கலந்து விடுகிறது.எண்ணம் அழிவதில்லை.அது மறுபிறப்பு கொள்கிறது.அதற்கான கருவை கண்டடைகிறது.பெற்றோர் , மூத்தோரின் உடல் சார்ந்த இயல்புகளை , நோய்களை குழந்தைகள் பெற முடியும் என்றாலும் எண்ணம் பெற்றோரின் , மூத்தோரின் வழி வந்ததாக இருக்க வேண்டும் என்றில்லை என்பது இதில் உள்ள முக்கிய விஷயம்.

எண்ணம் , மனம் என்று நாம் சொல்பவற்றை  பெளத்தத்தில் விஞ்ஞானம் என்று சொல்கிறார்கள்.
விஞ்ஞானம் ஐந்து அடிப்படை புலனுணர்வுகள், மன உணர்வுகள், பகுத்து ஆராயும் அறிவு, புத்தி ஆகிய ஏழு உணர்வுகளை உள்ளடக்கியது.மேலும் எட்டாவதாக ஆலய விஞ்ஞானம் விளக்கப்படுகிறது.இது இச்சாசக்திகள் மற்றும் குணங்களாகிய சக்திகளின் கூட்டாக தொகுக்கப்படுகிறது.

இப்போது நாம் அதிகம் உபயோகப்படுத்தும் கார்ல் யுங் சொன்ன கூட்டு நனவிலி என்பதுடன் ஆலய விஞ்ஞானத் இணைத்து பார்க்கலாம்.பெளத்தம் எதையும் தனித்த பொருளாக பார்க்கவில்லை.ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை சார்ந்து இருக்கிறது என்கிறது பெளத்தம்.எந்த மனமும் தனித்த இருப்பு அல்ல.ஆலய விஞ்ஞானம், மகாதர்மம் என்பவை எல்லாம் வெறும் சுட்டு பெயர்கள் தான்.

அதனால் இந்த மறுபிறப்பு பற்றி பேசும் போதும் அது அந்த விஞ்ஞானத்தின் தொடர்ச்சியை பேசுகிறது.மேலே உள்ள குறளில் வரும் உறங்குவது போல சாக்காடு உறங்கி விழிப்பது போல பிறப்பு என்பது அந்த தொடர்ச்சியை தான் பேசுகிறது.இது நிலையாமை என்ற அதிகாரத்தில் இருந்தாலும் இது தொடர்ச்சியை குறிக்கிறது.மரணமும் பிறப்பும் தொடர் நிகழ்வுகள்.அவற்றின் இடையில் இருக்கும் தருணங்கள் நிலையற்றவை.

மறுபிறப்பு குறித்து பேசும் போது மக்களை பெற்றெடுப்பது, அறிவு , கலைகளை விட்டுச் செல்வது ஆகியவையும் மறுபிறப்பாக பார்க்கப்படுகிறது.இதனுடன் ஒரு மனிதன் இறந்த பின்னர் அந்த கூட்டு உணர்வின் தொடர்வும் பெளத்தத்தில் மறுபிறப்பாக பார்க்க படுகிறது.

இதன் அடிப்படையில் பார்க்கும் போதும் பெற்றோர் மற்றும் மூத்தோரின் அறிவு தொடர்ச்சியாக குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதில்லை என்பது புலனாகிறது.பெளத்தம் பெற்றோர், மூத்தோரிலிருந்து குழந்தைகள் பெறுவது உடல் வழி தொடர்ச்சி மட்டுமே என்கிறது.இந்த சாதியை சேர்ந்தவருக்கு இந்தக் குணம், இவரின் மகன் என்பதால் இவன் இப்படித்தான் இருப்பான் என்பது போன்ற வாதங்கள் இதன் வழி இல்லாமல் ஆகிறது.இது எந்த அளவு உண்மை என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை.ஆனால் எனக்கு இந்த பார்வை மிகவும் பிடித்திருந்தது.இதை படித்த போது ஒரு பெரிய விடுதலை உணர்வை அது அளித்தது.ஒரு கூட்டத்திற்கு, மக்கள் தொகுப்பிற்கு பிறப்பால் ஒரு குணத்தை அளிக்கும் பாவச் செயலை இது வீழ்த்துகிறது.இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.நான் பெளத்தத்தின் வழி பெற்ற முக்கியமான மெய்யுணர்வாக இதையே கருதுகிறேன்.