வீடு திரும்புதல்

அந்த அந்திப்பொழுதில் இலைகளற்ற
மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது கிளி.
தான் இன்றிரவு பாடும் பாடலில் மரக்கிளையில்
இலை துளிர்ந்து நாளை ஒளிச்சேர்ந்தால் இங்கே கானகம்
உருவாகும் என்றது என்னிடம்.
உற்சாகமான நான்
உடனே அடர்த்தியான இலைகள் கொண்ட மரத்தையும்
அதில் காய்களும், பச்சைக்கிளியையும் சேர்த்து ஒவியம் வரைந்தேன்.
அத்துடன் நிறைய மரங்கள் இருக்கும் சோலையை உருவாக்கினேன்.
இருக்கட்டும் என்று வீண்மின்களை சேர்ந்தேன்.நிலவையும்.
நான் வரைந்த படத்தை பார்த்த கிளி கண்கள் பணித்தது.
இன்றிரவு தன் பாடலுக்கு நான் இசை அமைத்தால் துளிர்த்து விடும் இலைகள் என்றது கிளி.
நான் இசை அமைக்க ஆயுத்தமானேன்.
கிளி அந்தியில் தன் பாடலை பாடியது.
வானத்திலிருந்து செங்குத்தாக பெய்த நீரில் நணைந்தோம் கிளியும் நானும்.
கிளி தொடர்ந்து பாடியது.
நான் பதற்றத்துடன் மொட்டை மாடியில்
காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க  
வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
         

பிரபஞ்சம்
என் மகன்
என் தந்தை
என் தந்தை
என் மகன்.
நான் தந்தை.
நான் மகன்.


வருங்கால இணைய இதழ்கள்
தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோட்பாடுகளான அமைப்புவாதம் , பின்அமைப்புவாதம் ஆகியவற்றின் முக்கிய பிரச்சனை அதற்கு முந்திய தளங்கள் இங்கு எதுவுமே பேசப்படவில்லை என்பதுதான்.இங்கு அதற்கான தத்துவ பின்புலமும்,மொழியியல் பற்றிய அறிமுகமும் முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும்.

தத்துவம்,மொழியியல்,சமூகவியல்,உளவியல்,வரலாறு,இயற்பியல்,உயிரியல்,நரம்பியல்,பொருளாதாரம் ஆகிய அறிவுத்துறைகள் சார்ந்து இங்கு எந்த அறிமுகமும் முறையாக நிகழவில்லை.அதற்கென்று தனியான இதழ்கள் இங்கு எப்போதும் இல்லை.சட்டென்று சில கோட்பாடுகள் பற்றி மட்டும் பேசப்படுகின்றன.இன்றும் மேற்சொன்ன அறிவுத்துறைகள் பற்றிய அறிமுகமும் தீவிர வாசிப்பும் வேண்டுமென்று ஒருவர் விரும்பினால் அவர் ஆங்கில நூல்களைத்தான் நாட வேண்டும்.தமிழில் சில நூல்கள் அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் ஆர்வத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.ந.முத்துமோகனின் நூல் முக்கியமான ஒன்று.அவர் எழுதியவை இதழ்களில் வந்து பின்னர் நூலானதா அல்லது நூலாகவே வெளியானதா என்று தெரியவில்லை.காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியிடாக வந்த ஆடம் ஸ்மித் முதல் மார்க்ஸ் வரை முக்கிய புத்தகம்.ஸோபியின் உலகம் முக்கிய அறிமுக நூல்.இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்கும்.

ஆனால் இதற்கான இதழ்கள் சூழலில் உருவாக வேண்டும்.அப்போதுதான் முறையான அறிமுகங்கள் சாத்தியம்.ந.முத்துமோகன் நூல் மூலமாகத்தான் எனக்கு பிராங்க்பர்ட் சிந்தனை பள்ளி பற்றிய அறிமுகம் கிடைத்தது.அப்படித்தான் அடார்னோ பற்றியும் ஹெர்பர்ட் மார்க்யூஸா பற்றியும் அறிந்தேன்.இதழ்கள் அந்தப் பணியை செய்ய வேண்டும்.நம் சூழலில் தத்துவம்,சமூகவியல்,உளவியல்,வரலாறு,இயற்பியல்,உயிரியல்,நரம்பியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்து தனித்தனி இதழ்கள் வர வேண்டும்.இணைய இதழ்களே கூட போதுமானவை.அவை அந்த துறைகள் பற்றி மட்டுமே பேச வேண்டும்.ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மாதந்தோறும் அப்படியான இதழ்கள் வந்து அவை நூலாக்கம் பெற்றால் அவை தமிழ் அறிவுச்சூழலில் மிகப் பெரிய பாதிப்பவை ஏற்படுத்த வல்லவை.ஒரு இலக்கிய எழுத்தாளன் இந்த அறிவுத்துறைகள் பற்றிய அறிமுகத்தை கொள்ள வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.நூல்களாக இல்லாமல் இதழ்களாக வருவது சில உரையாடல்களை உருவாக்கும்.

ஒரு எழுத்தாளன் நீட்ஷே குறித்தும் ஸ்பினோசா குறித்தும் ஐன்ஸ்டீன் குறித்தும் ஆழமான புரிதலை சூழலிருந்து பெற வேண்டும்.அதை கலை இலக்கிய அரசியல் சிற்றிதழ்களும்,இடைநிலை இதழ்களும் செய்ய முடியாது.அல்லது அதற்கு மிகச் சில பக்கங்களை மட்டுமே ஒதுக்க முடியும்.இங்கு எப்போதும் நாம் இருத்தலியத்திலிருந்து ஆரம்பித்து பின் அமைப்புவாதம் வரை சென்று பேசுவதும் மற்றொரு தளத்தில் கீழை மார்க்ஸியம் பேசி தமிழ் தேசியம் நோக்கி வருவதுமாக இருப்பதால் பலனில்லை.

தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் இவான் கதாபாத்திரம் எழுதப்பட்டு கிட்டத்தட்ட நூற்றி நாற்பது ஆண்டுகள் ஆகின்றன.தமிழில் அப்படியான ஒரு கதாபாத்திரம் ஏன் இன்றைய சூழலில் கூட உருவாகி வர முடியவில்லை.ஏனேனில் தஸ்தாவெய்ஸ்கி வாழ்ந்த அறிவுச்சூழலில் தத்துவம்,விஞ்ஞானம் ஆகிய அறிவுத்துறைகள் பற்றிய ஆழமான விவாதம் நிகழ்ந்திருக்க வேண்டும்.தஸ்தாவெய்ஸ்கி மேதைதான் ஆனால் சுயம்பு அல்ல.பூக்கோ இதைத்தான் The Order of Things நூலில் சொல்கிறார்.

குட்டிப் பிரபஞ்சம்

வா.மணிகண்டன் தன் நாவல் பற்றிய நேர்காணலில் மைய கதாபாத்திரத்தின் சுயதணிக்கை செய்யப்பட்ட கதை பற்றியும் அது ஏன் இந்த நாவலுக்கு அவசியப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.அவர் சொல்வது சரிதான்.

ஆனால் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் முழு சுதந்திரத்தோடு சிந்திக்க வேண்டும்.முழு சுதந்திரம் என்கிற போது அவன் யாரை பற்றியும் எதைப்பற்றியும் எப்படி வேண்டுமானாலும் பேசுபவனாக இருக்க வேண்டும்.அற மதிப்பீடுகளை பொருட்படுத்தக்கூடாது.

உதாரணமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.அன்றைய தலைப்பு மதுவிலக்கு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதாக இருக்கிறது.நீங்கள் மதுவிலக்கு வேண்டும் என்று பேச செல்கிறீர்கள்.இன்னொருவரையும் மதுவிலக்கு வேண்டும் என்று பேச அழைத்திருக்கிறார்கள்.மது விலக்கு வேண்டாம் என்று பேச வேண்டியவர் ஒருவர் மட்டுமே.அவர் கடைசி நேரத்தில் வரவில்லை. தொகுப்பாளர் நீங்கள் மதுவிலக்கு வேண்டாம் என்ற தலைப்பில் பேச முடியுமா என்கிறார்.சரி இப்ப என்ன பேசலாமே என்று ஐந்து நிமிடத்தில் பேசுவதற்கான தர்க்கத்தை உங்களால் உருவாக்கி கொள்ள முடியுமென்றால் நீங்கள் அநேகமாக எழுத்தாளர் ஆவதற்கான தகுதியை பெற்று விட்டீர்கள் என்று பொருள்.

எழுத்தாளனின் வேலை மதிப்பீடுகளை உருவாக்குவது அல்ல.எழுதுவது.அவ்வளவுதான்.உண்மையில் தீமையை மிக அருகில் தரிசித்தவர் நல்ல எழுத்தாளராக முடியும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.இந்த உலகில் இதை விட கீழ்த்தரமாக ஒருவனால் நடந்து கொள்ள முடியாது என்று நாம் உணரும் விஷயத்தை ஒருவர் மிக எளிதாக மனதளவில் தர்க்கப்படுத்தி அதற்கான காரண காரியங்களை, சமூகவியல் ,உளவியல் விஷயங்களை பட்டியலிடுவார் என்றால் அவர் எழுத்தாளரே தான்.எழுதவில்லை என்றாலும்.

தஸ்தவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தந்தை கரமசோவ் தன் மனைவியை நடத்திய விஷயத்தை தன் மகனிடம் சொல்லும் போது அல்யோஷா கண்ணீர் மல்க நிற்பான்.தந்தை கரமசோவ்,இவான்,திமித்ரி,அல்யோஷா,சேமர்டியகோவ்எல்லோருமே தஸ்தாவெயஸ்கி தான்.கிராண்ட் இன்கியூஸ்டார் என்ற பகுதியை தஸ்தாவெய்ஸ்கி மிக விரைவாக எழுதிவிட்டார் என்று எங்கோ படித்ததாக நினைவு.அதற்கு அடுத்த துறவி ஜோசிமாவின் சுயசரிதை பகுதியை எழுத அவருக்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.

தீமையும் கீழ்மையும் மனிதனின் ஆதார குணங்கள் என்பதால் அவைகளை எழுத ஒரு எழுத்தாளன் செய்ய வேண்டியது ஒன்றுதான் , தன்னை தளர்த்திக்கொள்வது. சுதந்திரமாக சிந்திப்பது.சுதந்திரமாக சிந்திப்பது என்றால் தன் மனதையே எந்த ஒழுக்க நெருக்கடிகளும் இல்லாமல் ஆராய்வது.
சமூகவியல்,உளவியல்,விஞ்ஞானம்,வரலாறு போன்ற விஷயங்கள் எல்லாம் வெறும் தரவுகள்தான்.இவை எல்லாவற்றையும் வைத்து இறுதியில் சொல்லப்படுவது கதை.அந்தக் கதை என்பது ஒரு மாற்றுப் பிரபஞ்சம்.ஒரு எழுத்தாளன் தனக்காகவே எழுதிக்கொள்கிறான்.அவன் உருவாக்குகிறான் தனக்கான குட்டிப் பிரபஞ்சத்தை.மற்றவை அனைத்தும் By products தான்.

ஆத்மாநாம் கவிதைகளின் மூலப் பிரதி

ஆத்மாநாம் கவிதைகள் தொகுப்பை பற்றி கல்யாணராமன் எழுதியுள்ள கட்டுரையின் முக்கிய பிரச்சனை அதன் தொனிதான்.மிகப் பெரிய பிழை நிகழ்ந்துவிட்டதாகவும் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற அந்த தொனியில் சிக்கல் உள்ளது.

ஆத்மாநாம் கவிதைகளை 1989 முழுதாக பதிப்பிக்கிறார் பிரம்மராஜன்.பின்னர் அது 2002யில் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகள் கழித்து அதன் பிழைகளை கல்யாணராமன் பட்டியலிடுகிறார்.பட்டியலிடும் போது பெரும் தவறு நிகழ்ந்துவிட்டது என்பது போல பதற்றமடைகிறார்.

சிற்றிதழ்களில் வெளியான ஆத்மாநாம் கவிதைகள்,காகிதத்தில் ஒரு கோடு என்ற 1981 ஆண்டு வெளியான தொகுப்பு, பிரம்மராஜன் தொகுத்து 1989 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுப்பு, பிரம்மராஜன் 2002 யில் வெளியிட்ட காலச்சுவடு தொகுப்பு இவற்றிற்கு இடையிலான விடுபடல்கள், மாற்றங்கள், பிழைகள், திருத்தங்கள் ஆகியவற்றை பட்டியலிடுகிறார்.

ஆத்மாநாமின் கையெழுத்து பிரதி ஏதேனும் கல்யாணராமனிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.அதையும் ஒரு தரப்பாக எடுத்துக்கொள்ளலாம்.இவைகளை எல்லாம் தரவுகளாக வைத்து காலவரிசைப்படி செம்பதிப்பு வெளியிடலாம்.ஆனால் இதில் எதை கல்யாணராமன் Frame of Reference ஆக வைத்துக்கொள்வார்.அவரே ஆத்மாநாம் 156 கவிதைகள் எழுதியிருக்கிறார்.ஆனால் 147 கவிதைகள்தான் பிரசுரமாகியிருக்கிறது என்கிறார்.அப்படியென்றால் Frame of Reference ஆக அவர் முன்வைப்பது பிரம்மராஜனின் தொகுப்பை.

அப்படியென்றால் பிரம்மராஜனின் தொகுப்பை அவர் இன்னும் சரியான பதிப்பாக கொண்டு வர முனைகிறார் என்பதுதானே அர்த்தம்.அவர் சூனியத்திலிருந்து ஆத்மாநாம் கவிதைகளை கொண்டுவரப் போவதில்லை.அவன் பத்து மைல் தூரம் ஓடினான் என்ற வரியில் அவன் எங்கிருந்து பத்து மைல் ஓடினான் என்பதும் இருக்கிறது.நிலையான,ஸ்திரமான ஒரு இடத்திலிருந்துதான் அவன் பத்து மைல் ஓடுகிறான்.சூனியத்திலிருந்து அல்ல.

பதிப்பித்தல் என்பது தனிநபர் செயல்பாடு அல்ல என்கிறார்.ஆத்மாநாமை ஒரு வாசகன் ஏன் பிரம்மராஜன் விரும்புவது போல வாசிக்க வேண்டும் , அதை ஆத்மாநாம் எழுதியது போலவே வாசிக்கட்டுமே என்கிறார்.பிரம்மராஜனுக்கும் , ஆத்மாநாமுக்கும் இடையிலான உரையாடல்கள், கடிதங்கள் இவற்றையும் கணக்கில் கொண்டால்தான் அதையும் சொல்ல முடியும்.முதலில் ஒரு விஷயத்தை அவர் உணர வேண்டும்.இங்கு எந்த அநீதியும் நிகழவில்லை.ஒருவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டுவந்த ஒரு தொகுப்பில் பிழைகளை சுட்டிக் காட்டும் போது அவர் அதை இன்முகத்துடன் ஏற்பார் என்று சொல்ல முடியாது.அவர் ஒரு கட்டத்தில் மெளனமாகிவிடுவார்.பிரம்மராஜன் அதையே செய்திருக்கிறார்.செம்பதிப்பை கொண்டு வரட்டும்.இதுவரை ஆத்மாநாமை அறிந்திராத வகையில் புதிய வெளிச்சத்தை அந்த தொகுப்பு ஆத்மாநாம் மீது செலுத்தட்டும்.

ஆனால் அதில் மூலத்தொகுப்பு பிரம்மராஜனின் தொகுப்பு என்று இருக்க வேண்டும் என்றே ஒரு வாசகனாக நான் ஆசைப்படுகிறேன்.மற்றும் பின்னினைப்பாக சிற்றிதழ்களில் வெளியான ஆத்மாநாம் கவிதைகள், 1981 ஆம் ஆண்டு வந்த தொகுப்பு, 1989 ஆம் ஆண்டு வந்த தொகுப்பு , 2002 வந்த தொகுப்பு – இதில் 2002 யில் தொகுப்பிலிருந்து மாற்றிய, திருத்தியவற்றை பட்டியலிட வேண்டும்.அதன் மூலமாக உங்களின் Frame of Reference பிரம்மராஜன் என்பதை அங்கீகரியுங்கள்.

இத்தகைய அர்ப்பணிப்பான செயல்களால் நம் சூழலில் ஒருவர் எதை பெறப்போகிறார்.பணம்,புகழ் எதுவுமே இல்லை.ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் கர்வமும்தான்.கல்யாணராமனின் இந்த கட்டுரை பிரம்மராஜனின் அந்த திருப்தியை, மகிழ்ச்சியை, கர்வத்தை அசைக்கிறது.அது பிழை என்று நினைக்கிறேன்.அப்படி நிகழக்கூடாது.அவ்வளவுதான்.


உருளும் பாறை
ஜெயமோகன் அழுக்கு படிந்த கண்ணாடி என்ற கட்டுரையில் காமம் ,குரோதம், மோகம் ஆகிய அழுக்குகள் நீங்கி பார்த்தால் கண்ணாடியில் பிம்பம் சரியாக தெரியும் என்கிறார்.ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் (இங்கனைத்திலும் இறை உறைகிறது) என்ற நிலை தான் அது என்று ஒரு துறவி அதனை விளக்குகிறார்.ஆல்பர் காம்யூவின் சிசிபஸின் தொன்மம் கட்டுரைத் தொகுப்பில் சிசிபஸ் ஒரு உருளும் பாறையை மலை உச்சிவரை கொண்டு செல்ல வேண்டும்.அங்கிருந்து மறுபடி அதை உருள விட வேண்டும்.பின்னர் கீழே சென்று அதை மறுபடியும் மேலே உருட்டிக் கொண்டு வர வேண்டும்.இப்படி தொடர்ச்சியாக எந்த முடிவும் இல்லாமல் அதை அவன் செய்ய வேண்டும்.இதில் சிசிபஸ் அந்த உருளும் பாறையை மறுபடியும் மேலே கொண்டுவர தனியாக கீழே இறங்குகிறான்.அப்போதும் அவனுடன் அந்த பாறை கூட இல்லை.மறுபடியும் அது கீழே தான் செல்லும் என்பதையும் அவன் அறிவான்.

இது சுத்த அபத்த செயல்பாடு.ஆனால் அவன் அதை செய்தாக வேண்டும்.வேறு வழியில்லை.இப்போது அவன் முன் இரண்டு வழிகள் இருக்கிறது.ஒன்று அவன் தற்கொலை செய்துக் கொள்ளலாம்.அல்லது கீழே சென்று மறுபடி அதை உருட்டி மேலே கொண்டு வரலாம்.அவன் தற்கொலை செய்துக் கொள்வதில்லை.மாறாக அவன் இந்த அபத்தத்தை முழுவதுமாக உணர்ந்து கீழே செல்கிறான்.அப்போது அவன் என்ன உணர்வான்.அந்த கூர்மையான வெயிலில் வியர்வை பிசுபிசுக்க அவன் அந்த அபத்த பந்தை எட்டி உதைத்து கீழே செல்வது அற்புதமான காட்சி.இதோ அபத்தமே நான் உன்னை அங்கீகரிக்கிறேன்.நான் உன்னை பிரக்ஞைபூர்வமாக உணர்கிறேன்.ஆனால் நான் ஒரு போதும் உன்னை நினைத்து சோர்ந்து போய் அமர்ந்துவிடப் போவதில்லை.ஒரு போதும் தற்கொலை செய்துக் கொள்ள போவதில்லை.நான் உன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்வேன்.இதுவே என் இருத்தல் செயல்பாடு என்கிறான் சிசிபஸ்.சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றே நாம் கருத வேண்டும் என்று அந்தக் கட்டுரையை முடிக்கிறார் காம்யூ.

ராஜீவ் கொலை வழக்கில் தன் இளமையை முழுமையாக இழந்து நிற்கும் பேரறிவாளன் இந்த அடிப்படையில் தான் வாழ்வை சந்திக்க முடியும்.தன் ஆண் உடலில் இருக்கும் பெண் தண்மை புரிந்துக்கொண்டு அதை தனது அடையாளமாக அறிவிக்க இயலாமல் திணறும் மனிதன் அபத்தமாகத்தான் வாழ்வை எதிர்கொள்வான்.தன் அதுவரையான உழைப்பும் கனவும் கண்ணீரும் அர்த்தமற்று போகும் புதல்வனின் மரணத்தில் ஒரு தந்தை வாழ்வின் அபத்தம் முன் கையறு நிலையில் தான் நிற்க முடியும்.தன்னை முழுமையாக சிதறடித்து விடக்கூடிய அவமானத்தை எதிர்கொள்ளும் மனிதன் வாழ்வை அர்த்தமுள்ளதாக பார்க்க முடியாது.நாம் ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று அவர்களிடம் நாம் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.அது அநீதியும் கூட.

வாழ்வின் அபத்தம் முன் கையறு நிலையில் நிற்பவனிடம் அதை எதிர்கொள்ளும் பிரக்ஞையை சிசிபஸின் தொன்மம் கட்டுரை அளிக்கிறது.சிசிபஸ் தனியாக அந்த உருளும் கல்லை நோக்கி செல்லும் போது அவனைப் போலவே வேறொருவனுக்கும் அதே பணி அளிக்கப்பட்டிருக்கிறது எனக் கொள்வோம்.இருவரும் வாழ்வின் அபத்தத்தை பிரக்ஞை பூர்வமாக உணர்ந்து அதை எதிர்த்து கிளர்ச்சி செய்கிறார்கள்.கிளர்ச்சி என்றால் கொடி தூக்குவது இல்லை.மலை உச்சியிலிருந்து கீழே செல்வதுதான்.இப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவானால் அங்கு மானுட நேசமும் அன்புமே மலரும்.ஒரு வகையில் இந்த அபத்தத்தை உணரும் தருணம் , அதை பிரக்ஞைபூர்வமாக எதிர்கொள்ளும் கிளர்ச்சி, அதன் ஊடாக மலரும் நேசம் ஆகியவற்றைத் தான் காம்யூ மறுபடி மறுபடி சொல்கிறார்.இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்தால் அதை ஒரு முழுக் கோட்பாடாக அவர் உருவாக்கியிருக்கலாம்.

ஒரு அர்த்தமற்ற வேலையை காலையிலிருந்து மாலை வரை செய்து வீடு சென்று திரும்பி அடுத்த நாள் காலை மறுபடி அதே அர்த்தமற்ற வேலையை செய்ய கிளம்பும் தருணம் சிசிபஸ் தருணம் தான்.உங்களை குதறிப்போட்டு கீழே விழ வைத்து பல்லிளிக்கும் சமூகத்தின் முன் அடுத்த நாள் சென்று அமர்வதும் சிசிபஸ் தருணம் தான். துறவு ஒருவகையில் சாகச மனநிலை.தொடர் ஓட்டங்களும் சறுக்கல்களும் அலைச்சல்களும் கீழ்மையும் தீமையும் சிதறலும் பற்றும் பரிவை தேடும் கரங்களும் கொண்ட வாழ்வில் அத்தகைய மனநிலை சாத்தியமே இல்லை என்று தான் தோன்றுகிறது.

சிசிபஸின் தொன்மம் என்ற தொகுப்பில் காம்யூ தன் நிலைப்பாட்டை முன்வைக்க ஒரு பெண் பித்தனையும் , ஒரு நடிகன் பாத்திரத்தையும் விளக்குவார்.இரண்டுமே காம்யூதான்.அத்வைத தரிசனங்கள் அல்லது அதுபோன்ற பிற வேதாந்த தரிசனங்கள் முன்வைக்கும் மனநிலை எத்தகைய வாழ்க்கை முறையில் சாத்தியம் என்று தெரியவில்லை.ஆனால் உங்களால் உங்கள் வாழ்க்கை முறையில் சாத்தியமாக்கிக் கொள்ள இயலாத வாழ்க்கை தரிசனம் எந்த வகையில் உங்களுக்கு உதவும்.தெரியவில்லை.இருத்தலியவாதம் கேலிக்குள்ளாவது இயல்புதான்.ஏனேனில் அது ஒருவகையில் புலம்பல் கூட.லெவி ஸ்ட்ராஸ் அதை பெட்டிக்கடைகாரியின் தத்துவம் என்கிறார்.

ஒரு சமூகத்தின் தனிமனிதர்கள் ஏதேனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைப்பாக்கம் பெறுவதும் அந்த தனிமனிதர்களின் சிக்கல்கள் உண்மையில் அமைப்பின் சிக்கல்கள் என்று உணர்வதும் அதை எதிர்கொள்வதும் போரிடுவதும் வெல்வதும் சரியே.ஆனால் அது ஒரு போதும் ஒரு தனிமனிதனின் துயரத்தை பாடாது.அங்கே ஒரு மனிதன் எண்ணாக மாறுகிறான்.ஒரு புள்ளியியல் விவரனையின் வரைவாக உருக்கொள்கிறான்.ஆனால் அந்த பெளதீக மனிதன் ஆசைகளும் குழப்பங்களும் அச்சமும் காதலும் காமமும் பற்றும் வெறுமையும் என வாழ்வை வழக்கம் போலவே எதிர்கொள்கிறான்.அங்கே அமைப்பு அவனுக்காக வந்து நிறகப் போவதில்லை.அப்போது அவன் சிசிபஸூடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.அவன் துறவு கொண்டால் ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று சொல்லவும் கூடும்.   


தி மிரர்
ஒரு வகையில் தி மிரர் தார்கோவ்ஸ்கியின் சுயசரிதை.ஒரு கவிதை போன்ற திரைப்படம்.அலெக்ஸிதான் படத்தின் மைய கதாபாத்திரம்.இந்த அலெக்ஸியை நாம் தார்கோவ்ஸ்கியாக கொள்ளலாம்.ஒரு கதை என்கிற எதுவுமே இல்லாத திரைப்படம்.இந்தப் படம் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை மரம் (The Tree of life) படத்தை நினைவு படுத்துகிறது.அலெக்ஸி மரணப்படுக்கையில் இருக்கும் போது எல்லாம் சரியாகிவிடும் என்கிறான்.மூன்று தலைமுறைகளின் தொடர்ச்சி.அலெக்ஸியின் தந்தை 1935 வாக்கில் அவர்களை விட்டு பிரிந்துவிடுகிறார்.அலெக்ஸியும் அவளது தங்கையும் அன்னையின் அரவணைப்பில் வளர்கிறார்கள்.அவனின் அன்னை பதிப்பகத்தில் வேலை செய்கிறாள்.வளர்ந்த அலெக்ஸிக்கும் அவனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு.இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.அவர்களின் மகன் இக்னாத் நன்றாக வளர வேண்டும் என்று இருவரும் ஆசைப்படுகிறார்கள்.அலெக்ஸி உடல் நலம் குன்றி படுக்கையில் கிடக்கிறான்.அவனின் மனைவி ஒரு எழுத்தாளனை திருமணம் செய்துகொள்ள இருப்பதை சொல்கிறாள்.இறுதி காட்சியில் அவனுடைய இளவயது அன்னை தன் கணவரோடு புல்வெளியில் படுத்து பேசிக்கொண்டிருக்கும் காட்சியும் மறுபுறம் வயோதிக அன்னை இரு குழந்தைகளையும் அதே புல்வெளியில் அழைத்து செல்லும் காட்சியும் மாறி மாறி வருகிறது.இங்கே ஒரு உயிர் தொடர்ச்சி இருக்கிறது.எனக்கு பிறகு என் மகன்.ஆனால் அது நானே தான்.படத்தில் அலெக்ஸியின் இள வயது அன்னையாகவும் மனைவியுமாக வருபவர் ஒருவரே.அவர் நிஜ வாழ்வில் தார்கோவ்ஸ்கியின் மனைவி.சிறுவயது இக்னாத்தும் அலெக்ஸியும் ஒருவரே.அலெக்ஸி மரண படுக்கையில் இருக்கும் போது ஒரு சிட்டுக்குருவியை பறக்க விடுகிறான்.அவன் சொல்கிறான் எல்லாம் சரியாகிவிடும் என்று.இங்கு எதுவும் நிற்கப் போவதில்லை.எதுவும் தொடர்ச்சி அற்று நின்றுவிடப் போவதில்லை.அலெக்ஸியின் தந்தை, அலெக்ஸி,அலெக்ஸியின் மகன் இக்னாத்.அந்த தொடர்ச்சி ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை மரம் படத்தை நினைவுப்படுத்துகிறது.

பீடிக்கப்பட்டவர்கள் நாவல்களில் வரும் மரியா என்ற நிகோலய் திருமணம் செய்து கொள்ளும் மனப்பிறழ்வு அடைந்த பெண்ணுடன் ஒப்பிட்டு அலெக்ஸியின் அன்னையை உடன் வேலை செய்யும் பெண் பேசுவார்.நாம் தார்கோவ்ஸ்கியை எந்தளவு அறிகிறோமோ,எந்தளவு நம்மை அறிகிறோமோ அந்தளவு மிரர் படத்தை அறிந்து கொள்ளலாம்.படத்தின் துவக்கத்தில் வரும் மருத்துவர் அலெக்ஸியின் அன்னையிடம் செடிகளை பற்றி பேசுவார்.அது தார்கோவ்ஸ்கி தன்னைப் பற்றி கொள்ளும் எண்ணம்.நான் பார்த்தவரையில் இங்கார் பெர்க்மனை விட சிறந்த இயக்குனர் தார்கோவ்ஸ்கி.இப்படி ஒரு திரைப்படத்தை ஒருவரால் எடுத்துவிட முடியும் என்றால் வாழ்க்கையில் வேறு ஒன்றுமே வேண்டாம்.இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.படத்தை பார்த்து முடிக்கும் போது ஒரு கனவிலிருந்து மீண்டு வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.