தமாஷ்


என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.படித்துக் கொண்டிருக்கிறீர்களா.என்ன புத்தகம்.புத்தகம் போல தெரியவில்லையே.சஞ்சிகையா.சிறுகதை வாசித்துக்  கொண்டிருக்கிறீர்களா.யாருடையது.சர்வோத்தமனா.கேள்விபட்டதே இல்லையே.தெலுங்கா. தமிழா.ஏன் இப்படி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.சிறுகதையின் பெயர் தமாஷா.நம் குடியிருப்பிலேயே நேற்று ஒரு தமாஷ் நடந்தது.உங்களுக்கு தெரியுமா.தெரியாது.அது தெரியாமல் சிறுகதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஆமாம், நான் கேட்க வேண்டும் என்று  நினைத்திருந்தேன்.ஏன் எப்போதும் தாடி வளர்த்து எதையோ பறிகொடுத்துவிட்டது போலவே இருக்கிறீர்கள்.உங்கள் காரணம் வேடிக்கையாக இருக்கிறது.காதல் தோல்வி என்ற விஷயம் இந்த காலத்திற்கே உரியதில்லை.நீங்கள் ஏதோ பெருங் கற்காலத்தில் வாழ்கிறீர்கள்.சரி,அந்த சஞ்சிகையை அப்படியே கொஞ்சம் வைத்துவிட்டு வெளியே வாங்களேன்.உங்களிடம் நேற்று நமது குடியிருப்பில் நடந்த ஒரு கூத்தை சொல்ல வேண்டும்.சஞ்சிகையுடனே வருகிறீர்களா.சரி.உங்கள் இஷ்டம்.இதென்ன.ரோஜா செடியா. பன்னீர் ரோஜா.நல்ல சுகந்தம்.செடிக்கு தண்ணீர் ஊற்றி நிறைய நாட்களாவது போல தெரிகிறதே.இப்படி முடங்கி கிடந்து சிறுகதை வாசித்து தாடி வளர்த்து செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்கிறீர்கள்.சரி. இந்த பூங்க மரம் இந்த இடத்தில் எத்தனை வருடங்களாக இருக்கும்.உங்கள் வீட்டின் உப்பரிகையில் எவ்வளவு அழகாக வெளிச்சமும் காற்றும் வருகிறது.தினமும் சிறிது நேரம் இங்கு வந்து நின்றால் நன்றாக இருக்கும்.நாளை முதல் தினமும் இங்கே வர விரும்புகிறேன்.ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கலாம் என்று தோன்றுகிறது.சரி,உங்களுக்கு சொல்லவே இல்லையே.இந்தக் குடியிருப்பில் உள்ள நாம் ஐவரும் காலி செய்ய வேண்டியிருக்கும்.இதில் விசேஷம் என்னவென்றால் நமது வீட்டு உரிமையாளர் கூட காலி செய்ய வேண்டியிருக்கும்.அதை நினைத்துதான் நேற்று இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருந்தேன்.

நமது வீட்டு உரிமையாளர் சதானந்தன் நேற்று மோட்டார் பம்பை சீர் செய்ய நம்மிடம் பணம் கேட்டாரே, நீங்கள் கொடுத்தீர்களா.வாடகைக்கு இருக்கும் நான் ஏன் உங்கள் மோட்டார் ரீப்பேர் ஆகிவிட்டால் காசு கொடுக்க வேண்டும் என்று கேட்டீர்களா.கேட்டிருக்க மாட்டீர்கள்.ஆயிர ரூபாயும் கொடுத்து விட்டீர்களா.நான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை.நாம் வீட்டிற்கு வருவதற்கு முன் கொடுக்கும் முன்பணத்திற்கு எவ்வளவு வட்டி தெரியுமா.நீங்கள் ஐந்து வருடங்கள் கழித்து காலி செய்தால் கூட அதே பணத்தைதானே தருகிறார்கள்.அதிலும் சதானந்தன் எவ்வளவு குறைக்க முடியுமா அவ்வளவு குறைத்துக் கொள்கிறார்.சென்ற வாரம் நமது குடியிருப்பில் , உங்களின் பக்கத்து அறையில் வசித்த திவாகர் காலி செய்தானே பார்த்தீர்களா.தெரியாதா.ஏன் எப்போதும் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறீர்கள்.அவனிடம் மின்சார கட்டணமாக ஐநூறு ரூபாயை முன்பணத்திலிருந்து எடுத்திருக்கிறார். இன்று கட்டணச்சீட்டு வந்தது.முந்நூறு ரூபாய்தான்.திவாகர் மூன்று வருடங்களாக இந்த வீட்டில் இருந்தான்.வீட்டை அப்படியே திருப்பி கொடுத்திருக்கிறான்.ஆனால் மின்சார கட்டணத்தில் கூட இருநூறு ரூபாய் அதிகமாக எடுத்திருக்கிறார்.இவருக்கு போய் மோட்டார் சீர் செய்ய எதற்கு காசு கொடுத்தீர்கள்.எல்லாவற்றுக்கும் சிரிக்காதீர்கள்.சரி.நேற்று ஐந்தாம் தேதி இல்லையா சதானந்தம் எல்லாரிடமும் வாடகை பணம் வாங்க வந்திருந்தார்.நீங்கள் வீட்டிலில்லை.கடற்கரைக்கு சென்றிருந்தீர்களா. காதல் தோல்வி, கடற்கரை,அது தான் சரியான இடம்.ஆம் அப்போது தான் வந்திருந்தார்.அப்படியென்றால் நீங்கள் இன்னும் வாடகைக்கு பணத்தை கொடுக்கவில்லையா.ஐயையோ,எனக்கு வயிறு எரிகிறதே.நீங்கள் ஒரு வேளை அந்தப் பணத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம்.

நேற்று முன்தினம் இரவு பன்னிரெண்டு மணி அளவில் இங்கே ஒரே சத்தம்.எப்போதும் நம் கீழ் வீட்டில் இருக்கும் மூன்று பெண்கள் கூச்சல் போட்டுக் கொண்டே இருப்பார்கள் இல்லையா ,அது போல ஏதோ கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.பிறகு தான் தெரிந்தது.யாரோ ஒருவன் வீட்டில் புகுந்திருக்கிறான்.வீட்டில் அந்தப் பெண்கள் மட்டுமில்லாமல் இரண்டு ஆண்களும் இருந்திருக்கிறார்கள்.வந்தவன் ஒரு பெண்ணின் உடையை பற்றி இழுத்திருக்கிறான்.உடன் இருந்தவன் தடுக்க முயற்சித்ததும் அவனை கன்னத்தில் அடித்திருக்கிறான்.பிறகு வீட்டை வெளி பக்கமாக மூடி சாவியை எடுத்து சென்றிருக்கிறான்.சதானந்தன் வீட்டிலில்லை.அவரது குடும்பத்துடன் வேலூரிலுருக்கும் தங்க கோயிலுக்கு சென்றிருந்தார்.விஷயம் என்னவென்றால் இந்தப் பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்கு தெருவில் உடன் இரண்டு ஆண்களுடன் கூச்சல் போட்ட படியே வந்திருக்கிறார்கள்.நமது தெரு முனையில் ஒருவன் சிகரெட் பிடித்தவாறு நின்றிருக்கிறான்.பார்த்தவன் பின்தொடர்ந்து வீட்டுக்கு வந்திருக்கிறான்.ஒரு பெண்ணின் உடையை பற்றி இழுத்திருக்கிறான்.தடுத்தவனை அடித்திருக்கிறான்.சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த கர்ப்பிணிப் பெண் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்.பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை வெளி பக்கம் பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டான்.நீங்கள் மட்டும்தான் வெளியில் வரவில்லை.தூக்க மாத்திரை சாப்பிட்டிருந்தீர்களா.சரி.நான் இதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.அந்தப் பெண்கள் வீட்டுக்குள்ளிருந்து சதானந்தை அழைத்திருக்கிறார்கள்.சதானந்த் உங்களை அழைக்க வாய்ப்பில்லை.திவாகர் காலி செய்துவிட்டான்.அந்த வீட்டுக்கு வர வேண்டியவர்கள் அடுத்த வாரம்தான் வருகிறார்கள்.என்னை அழைத்திருக்கலாம்.ஆனால் அவர் அந்த மேல் வீட்டு ஆசிரியை தேவியைதான் அழைத்திருக்கிறார்.நீங்கள் எதற்கோ சிரிக்கிறீர்கள்.நீங்கள் புதிதாக எந்த அர்த்தத்தையும் உருவாக்கி கொள்ள வேண்டாம். , அந்தப் பெண், ஆசிரியர் என்பது உங்களுக்கு தெரியாதா.கணித ஆசிரியர்.அவரது கணவர் உங்களிடம் பேசுவதை பார்த்திருக்கிறேனே.என்னது அவரும் சிறுகதைகள் நாவல்கள் வாசிப்பாரா.அதைப்பற்றி மட்டும்தான் பேசுவீர்களா.சரிதான்.அவருக்கு எப்படியும் அறுபது வயது இருக்கும் இல்லையா.அவர் வேலை எதுவும் செய்யவில்லையா.என்னது அவர் சினிமாவில் காபராக இருந்தாரா.பக்கவாதம் வந்தபின் அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டாரா.சரிதான்.இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்.கை ரேகையா.ஜோசியமா.ஜாதகம் பார்த்து சொல்வதா..திருமண பொருத்தங்கள்.ஓ ஹோ.

சரி,வாருங்கள் நாம் சென்று பானி பூரி சாப்பிடுவோம்.இருங்கள் என் அறையை பூட்டி விட்டு வருகிறேன். நீங்கள் இந்த டிராக் பேண்ட்டை துவைத்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன.ஆமாம் நீங்கள் சமையல் செய்து கொள்கிறீர்களா.என்னைப் போல சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே.காந்தி நமது வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்று சொன்னாரா.சரிதான்.இந்த பானி பூரி விற்கும் பையன் எந்த ஊர் தெரியுமா.மத்திய பிரதேசம்.அங்கே ஜபல்பூர் என்ற ஊரை சேர்ந்தவன்.அவனுடைய தந்தை வெடிகுண்டு பேக்டரியில் பணிபுரிந்தவர்.விபத்து ஒன்றில் இறந்துவிட்டார்.இங்கே வந்திருக்கிறான்.இவனுடைய பெயர் தெரியுமா.குமார்.நம் ஊர் பெயர் போல இருக்கிறதா.அந்த ஊரில் கூட இந்தப் பெயரை வைக்கிறார்கள்.நீங்கள் எப்போதாவது மத்திய பிரதேசம் போய் வெங்காய பஜ்ஜி விற்பதை பற்றி யோசித்து இருக்கிறீர்களா.சரி.உங்களை விமர்சிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல.ஆனால் உங்கள் தோற்றம் வேடிக்கையாக இருக்கிறது.சரி.நீங்கள் எரிச்சல் கொள்கிறீர்கள்.நான் இது குறித்து இனி ஒன்றும் பேசவில்லை.நீங்கள் தோற்றமற்றவர் என்று நினைத்துக் கொள்கிறேன்.

பானி பூரி நன்றாக இருக்கிறதா.பனை ஓலையிலான தட்டு.பிரம்பு கழியின் மேல் கூடையில் பூரி.மண்பானையில் பானி.எவர்சில்வர் தூக்குவாளியில் உருளைகள்.மல்லி.கச்சிதமான கடை.எனக்குப் பிடித்திருக்கிறது.வாருங்களேன் அந்த பூங்காவில் சென்று சிறிது நேரம் அமர்வோம்.இந்த பூங்காவை பார்த்தீர்களா.இதன் நடைபாதை முக்கோண வடிவில் இருக்கும்.சரி,இந்த முக்கோணம் பற்றி சொல்லும் போதுதான் நமது வீட்டை பற்றிய தமாஷ் நினைவிற்கு வருகிறது.அது கூட ஒரு முக்கோண கதைதான்.நமது வீட்டின் உரிமையாளர் சதானந்த் , தேவியை அழைத்திருக்கிறார்.தேவி சென்று பார்த்திருக்கிறார்.பிறகு தேவி என்னையும் அழைத்தார்.அந்தப் பெண்கள் உள்ளிருந்து கதவை திறந்தார்கள்.உள்ளேயிருந்து இரண்டு பையன்களும் வந்தார்கள். அதில் ஒரு பையனின் கன்னம் சிவந்திருந்தது.அவன் தன் காது இனிமேல் கேட்காதா என்று என்னிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்.பீட் போலீஸார் வந்தார்கள்.மறுபடியும் ஏதேனும் பிரச்சனை என்றால் தெரிவியுங்கள் என்று சொல்லி விட்டு சென்றார்கள்.அவர்களுக்கு கேஸை பதிவு செய்வதில் விருப்பமில்லை.அந்தப் பெண்கள் நாங்கள் வீட்டை காலி செய்கிறாம் என்று அடுத்த நாள் சதானந்திடம் சொன்னார்கள்.ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே.காது கேட்காதோ என்று புலம்பிய பையன் ஓலா கேப்பை வரவழைத்து மருத்துவமனை சென்றான்.

சரி , எவ்வளவு நேரம் தான் அமர்ந்தே இருப்பது.வாருங்கள் சற்று நடப்போம்.பார்த்தீர்களா.அந்தி.காதல் தோல்விக்கு ஏற்ற நேரம் இல்லையா. , மன்னிக்கவும்,நான் மறந்துவிட்டேன்.சரி, சதானந்த் அத்துடன் அந்த விஷயத்தை விட்டிருந்தால் பரவாயில்லை.எங்கு பெண்கள் காலி செய்து விட்டால் பாதுகாப்பற்ற வீடு என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடுமோ என்று நடுங்கிவிட்டார்.எப்படியும் அந்தப் பையனை பிடித்துவிட வேண்டும் என்று காவல் நிலையம் சென்றார்.இரவு பன்னிரெண்டு மணிக்கு ஒருவன் சாலையோரத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றால் அவன் அநேகமாக அந்த பகுதியின் பையனாகத்தானே இருக்க வேண்டும்.சதானந்தன் நாம் யாருக்கும் தெரியாமல் நம் குடியிருப்பின் வாயிலில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறார்,தெரியுமா.அது ஒரு பொந்து போல இருக்கும்.அதற்குள் ஒரு கேமரா வைத்திருக்கிறார்.சதானந்தன் தன்னை கெட்டிக்காரர் என்றுதான் நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்தார்.கேமரா பதிவை வைத்து பையனை கண்டுபிடித்துவிட்டார்கள்.

அங்கே பார்த்தீர்களா,அந்த சிவப்பு நிற வீடு தெரிகிறது இல்லையா,அந்த வீடு இல்லை, அதற்கு பக்கத்திலிருக்கும் வீடு ,ஆம் முக்கோண வடிவில் இருக்கிறதே அந்த வீடுதான்.பையன் அந்த வீட்டை சேர்ந்தவன்தான்.தேவியின் கணவர் அவனை அறிவார்.பையன் விஸ்காம் படித்துக்கொண்டிருக்கிறான்.தேவியின் கணவர் காபராக இருந்தார் என்று சொன்னீர்களே.இப்போது தான் புரிகிறது.தேவியின் கணவர் பணிபுரிந்த திரைப்படத்தில் அவனும் சிறிது காலம் பணிபுரிந்திருக்கிறான் போலும்.அவரை ஏன் தேவியின் கணவர் என்று சொல்ல வேண்டும்.அவர் பெயர் என்ன,ராதாகிருஷ்ணன்.ஆம்.ராதாகிருஷ்ணன்.அவரும் காவல் நிலையம் வந்தார்.நானும் வேடிக்கை பார்க்க சென்றிருந்தேன்.

பையன் மீது வழக்கை பதிவு செய்தே தீர வேண்டும் என்று சதானந்த் பிடிவாதமாக இருந்தார். எப்படியாவது தன்னை விட்டுவிட சொல்லுங்கள் என்று ராதாகிருஷ்ணனிடம் கதறியிருக்கிறான் பையன். பையனின் தந்தையும் வந்தார்.சதானந்த் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நமச்சிவாயத்திடமிருந்து நம் குடியிருப்பை வாங்கினார்.ஆமாம் நீங்கள் ஊகிப்பது சரிதான்.பையனின் தந்தை நமச்சிவாயம்தான்.அவர்தான் வந்திருந்தார்.நமச்சிவாயம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் சதானந்த் சிறிது நேரம் கழித்து சமாதானமானார்.மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு வெளியே வந்தான் பையன்.

என்ன அதற்குள் வீட்டுக்குள் போக முற்படுகிறீர்கள்.போய் அந்த கதையை படித்து முடிவை தெரிந்து கொள்ள வேண்டுமா.முதலில் நம் கதையின் முடிவை தெரிந்து கொள்ளுங்கள்.தன்னை கதற வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சதானந்தை பழிவாங்க முடிவு செய்துவிட்டான் பையன். இங்குதான் தமாஷ் துவங்குகிறது.பையன் சதானந்த் மீது மைனர் சூட் வழக்கு தொடுத்திருக்கிறான்.புரியவில்லையா.அவன் மைனராக இருந்த போது விற்ற சொத்து இது.இப்போது அவனுக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டது.இந்த குடியிருப்பு நமச்சிவாயம் சம்பாதித்த சொத்து இல்லை.பூர்விக சொத்து.யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை உங்களுக்கு சொல்கிறேன்.இதை செய்யச்சொல்லி அந்த பையனை தூண்டியது யார் தெரியுமா.நமது தேவியின் கணவர்.ஆம்.ராதாகிருஷ்ணன்தான்.சதானந்த் நமச்சிவாயத்தை பார்த்திருக்கிறார்.நான் வேண்டுமானால் உங்களிடம் வாங்கிய பணத்தை கொடுத்துவிடுகிறேன்.அவனை சமாதானம் செய்ய முடியவில்லை.அவன் உங்களை பழிவாங்கிய தீர்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான்.நீங்கள் அவனை காவல் நிலையத்தில் வைத்து கதற வைத்துவிட்டீர்கள்.அதனால் விட முடியாது என்று விட்டான்.உங்களுக்கே தெரியும் இதில் சொத்து ஒரு விஷயமே இல்லை.நான் செய்ய ஒன்றுமில்லை என்று கையை பெரிதாக விரித்துவிட்டார் நமச்சிவாயம்.என்னால் சதானந்திற்கு செய்ய முடிந்த உதவி ,அந்த மோட்டார் பம்ப்பை சீர் செய்ய ஆயிர ரூபாய் கேட்டார் இல்லையா.அதை கொடுத்துவிடுவதுதான்.சிரிக்கிறீர்கள்.சரி,நீங்கள் போயி அந்த சிறுகதை வாசிப்பை தொடருங்கள்.நாம் கூட இந்த குடியிருப்பில் தொடர வாய்ப்புண்டு.ஆனால் சதானந்திற்குதான் வாய்ப்பே இல்லை.அவருக்கு முதலில் ஒரு வீட்டை பார்த்துக் கொடுக்க வேண்டும். வருகிறேன்.உங்களுக்கு நல் இரவு.

Photo by MARK ADRIANE on Unsplash