சில படங்கள்ராபெர் ப்ரெஸ்ஸோன் இயக்கிய பிக்பாக்கெட் படம் பார்த்தேன். ஒரு வகையில் இது தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் போல எனக்குப் பட்டது. நான் தவறாக கூறவில்லை.ஆனால் குற்றமும் தண்டனையும் நாவலை படிக்காத ஒருவர் இந்த படத்தை பார்த்தால் எவ்வாறு புரிந்து கொள்வார் என்று எனக்கு புரியவில்லை.
சங்கராபரணம் என்ற தெலுங்குப் படம் பார்த்தேன். மிக அற்புதமான படம். கிட்டத்தட்ட பத்து முறை பார்த்து விட்டேன்.இதில் சங்கரசாஸ்திரியாக நடித்திருப்பவர் சோமயாஜூலு.இவர் ஒரு IAS அதிகாரி. கே.விஸ்வநாத் இயக்கிய இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. பாலு மகேந்திராவின் வீடு படமும் அழியாத கோலங்கள் படமும் பார்த்தேன். அற்புதமான படங்கள். அழியாத கோலங்கள் படத்தில் வரும் நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை பாட்டும் பூவண்ணம் போல நெஞ்சம் பாட்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். அதிலும் பூவண்ணம் பாடல் ஜெயசந்திரனின் குரலில் என்னை வசீகரித்துவிட்டது. எவ்வளவு முறை கேட்டேன் என்றே தெரியவில்லை.ராபெர் ப்ரெஸ்ஸோனின் பல்தஸார் படமும் பார்த்தேன். ஒரு கழுதையும் ஒரு இளம் பெண்ணும் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.ஏன் எல்லா முகங்களும் எவ்வித முகபாவங்களும் இல்லாமல் நடிக்க வைக்கப்பட்டார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் எதிர்காலத்தில் வரலாம்.ஹிட்ச்காக்கின் தி பர்ட்ஸ் படம் பிரமிப்பாக இருந்தது. ஏன் பறவைகள் மனிதர்களை தாக்குகிறது என்பதற்கு கடைசி வரை எந்த விடையும் இல்லை. இதை குறித்து நாகார்ஜூனன் அவர்கள் அவருடைய தளத்தில் எழுதியிருக்கிறார்.