Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

சுயமும் ஆளுமையும்


ஆங்கிலத்தில் Enmeshment என்ற சொல் இருக்கிறது.இந்தியக் குடும்பங்களில் அதிகம் காணப்படும் ஒன்று தான்.பிறரில் நம்மை காண்பது என்று இதைச் சொல்லலாம். எனது உடல், எனது மனம் , எனது விருப்பு வெறுப்புகள் , எனது அடையாளம் என்ற எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் பிறருடன் நமது ஆளுமையை இணைத்துக் காண்பது Enmeshment என்று சொல்லலாம்.அந்த பிறர் தந்தை, தாய், சகோதரன், ஆசிரியர், தலைவர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.பொதுவாக Enmeshment குடும்பச் சூழலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தை.இதனுடன் தொடர்புடைய மற்றொரு சொல் ஆளுமைக் குறைபாடு, ஆளுமைச்சிக்கல்(Underdeveloped Self).

சிலர் பன்னிரண்டு வயதிலேயே தனி ஆளுமைகளாக முகிழ்ந்து விடுகிறார்கள்.தங்களுக்கு எது பிடிக்கும் , பிடிக்காது என்பதிலிருந்து தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொள்வது வரை அவர்கள் முழுமையான தனிமனிதர்களாக வளர்ந்து விடுவார்கள்.சிலர் பதினெட்டு இருபது வயதில் அந்த முதிர்ச்சியை அடைவார்கள்.சிலர் முப்பது வயதில் கூட அத்தகைய தனி மனிதர்களாக ஆளுமைகளாக மாறாமல் குறைப்பட்ட ஆளுமைகளாகவே இருப்பார்கள்.இதற்கு பெரும்பாலும் தாய் அல்லது தந்தையின் வளர்ப்பு முறை ஒரு காரணமாக இருக்கும்.அல்லது அவர்கள் சிறு வயதில் பதின் பருவத்தில் எதிர்கொண்ட சிக்கல்களால் கூட இவை நிகழலாம்.ஆனால் குடும்பம் இதில் முக்கிய பங்காற்றுகிறது.உங்களுக்கு உடல் வலி என்றால் நீங்கள் துடிக்கலாம்,உங்களுடன் சேர்ந்து உங்களின் தாயும் தந்தையும் துடித்தால் அங்கே வெவ்வேறு உடல்கள் என்ற எல்லைகள் இல்லாமல் போகின்றன.தன் தந்தையில் தன்னைக் காண்பது , தாயில் காண்பது என்று அந்தக் குழந்தை வளர்கிறது.அங்கே தாய் தந்தையர் செய்ய வேண்டியது உங்களுக்கான சிகிச்சையை அளிப்பது தான்.

இப்படி வளரும் குழந்தைகள் - பதின் பருவத்தில் இளைஞனாக வெளி உலகிற்கு வரும் போது பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.காபி வேண்டுமா டீ வேண்டுமா என்று கேட்டால் அவர்களால் சட்டென்று பதில் சொல்ல முடியாது.பிறர் என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்பார்கள்.சிலர் தங்கள் அனுபவங்களின் வழி இதிலிருந்து விடுபடலாம்.சிலர் தங்கள் வாழ்நாள் முழுதும் இந்த ஆளுமைச்சிக்கலூடே வாழ நேரலாம்.

இத்தகையோர் தாங்கள் எதிர் கொள்ளும் பேராளுமைகளுக்கு முன் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார்கள்,சரணடைகிறார்கள். அவர்களால் எந்த ஒன்றிலும் தெளிவான முடிவை நோக்கி எளிதில் நகர முடிவதில்லை.இத்தகையோர் தான் பெரும்பாலும் சுரண்டப்படுகிறார்கள்.பொருளாதார ரீதியில், உடல் அளவில் , உளவியல் ரீதியில் என்று இந்தச் சுரண்டல் அவர்கள் யாரிடம் சிக்குகிறார்கள் என்பது பொருத்து மாறுபடலாம்.வெகு சிலரே இந்த அனுபவங்கள் வழியாக தங்களை உடைத்துக்கொண்டு வெளியே வந்து புதிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.பலர் சிதறிப்போகிறார்கள்.

தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இத்தகைய இளைஞர்களைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.அவர்களை இவர்களால் எளிதில் குழப்ப முடிகிறது.தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இரண்டு வழிகளை கடைப்பிடிக்கிறார்கள்.ஒன்று தாங்கள் பரிதாபத்திற்கு உரிய ஜீவன் என்றும் கருணை காட்டப்பட வேண்டும் என்றும் கெஞ்சுவார்கள்.மற்றொரு முனையில் தாங்கள் எத்தனை பெரிய ஆளுமை என்றும் தன் அதிகாரம் எத்தகையது என்றும் வேஷம் கட்டுவார்கள்.அவர்கள் இந்த இருவேறு நிலைகளை மாறிமாறி நடிப்பார்கள்.தங்களுக்கு இரை சிக்குமா என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.அதே நேரத்தில் இத்தகையோர் சற்று தெளிவுடனும் இருப்பார்கள்.அந்த இரையை ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து விட்டால் அந்த இரையை விட்டுவிட்டு அடுத்த தேர்வுக்கு போய்விடுவார்கள்.

தன்பால் விழைவு கொண்டு பிறரை சுரண்ட முயல்வோர் பெரும்பாலும் பதினைந்து வயதிலிருந்து இருபத்தியைந்து வயதுக்குள் இருப்போரைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.தன்பால் விழைவு பிழையல்ல என்று தான் இன்றைய சட்டமும் , விஞ்ஞானமும் சொல்கிறது.ஆனால் உங்களுக்கான இணையை நீங்கள் தான் தேடிப் பெற வேண்டும்.இணை வேறு இரை வேறு.

இப்போது தமிழ் நவீன இலக்கிய சூழலில் வந்து கொண்டிருக்கும் புகார்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அதிர்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது.பிறரைச் சுரண்டும் அதிகாரம் யாருக்குமில்லை.எங்கெல்லாம் Cult குழுக்கள் உருவாகுகின்றனவோ அங்கெல்லாம் சுரண்டல்கள் நிகழ்கின்றன.நீங்கள் எந்த அமைப்பில் , குழுவில், மடத்தில் வேண்டுமானாலும் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.அந்த குழுவின் பேராளுமையை விதத்தோதுங்கள்.அவரே உலகை உய்விக்க வந்த தூதன் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் நீங்கள் ஒரு தனிமனிதன் என்பதையும் உங்களுக்கு என்று ஒரு ஆளுமை உண்டு என்பதையும் உணருங்கள்.உங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்.இந்த எல்லைக்கு மேல் ஒருவர் என்னை மனதளவில் ,உடல் அளவில் நெருங்க அனுமதிக்க இயலாது என்று உறுதி கொள்ளுங்கள்.கடவுளே என்றாலும் நான் அந்த கடவுளின் பகுதி அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள்.

பிறரைச் சுரண்டுவோர் வெகுளிகள் அல்ல.அவர்கள் நீங்கள் யார் , உங்கள் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள், உங்களின் சமூக அந்தஸ்து என்ன , திருப்பி அடிக்கும் சாத்தியம் கொண்டவரா என்பதை கவனிக்கிறார்கள்.உங்கள் உடல்மொழியை அவர்கள் மிகத் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.நீங்கள் மிகவும் கூச்சப்படக்கூடியவரா, அச்சப்படுபவரா, அதிர்ந்து பேசாதவரா என்று அனைத்தையும் அவர்கள் அளக்கிறார்கள்.அதன் பின்னர் தான் தங்கள் தந்திரங்களை துவங்குகிறார்கள்.அவை வெறும் Trial & Error அல்ல. கணக்கிடப்பட்ட Trial & Errors.

காரல் மார்க்ஸ் சமூகத்தில் மூலதனம்(சொத்து) மட்டுமே ஒருவனின் நிலையை தீர்மானிக்கிறது என்றார்.All relations are essentially financial relationships என்று சொன்னார்.ஆனால் மாக்ஸ் வெபர் சமூக அந்தஸ்து , சொத்து , அதிகாரம் ஆகியவைதான் சமூகத்தின் ஒருவனின் நிலையை தீர்மானிக்கின்றன என்று சொன்னார்.மாக்ஸ் வெபர் சொல்வது தான் சரி. இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த அவச் சூழல் இந்த பண்பாட்டு அதிகாரத்தின் வழியாக நிகழ்த்தப்பட்டுள்ளது.வெறும் தனி மனிதனாக இவர்கள் தங்கள் இரையை அடையவில்லை.அதற்கு பின்னால் அவர்கள் உருவாக்கிக்கொண்ட பண்பாட்டு அதிகாரம் அவர்களுக்கு உதவியிருக்கிறது.

இன்றைய சூழலில் உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.ஸ்வதர்மம் முக்கியமானது.நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

முடிந்தால் தஸ்தாயெவ்ஸ்கியின் The Adolescent நாவலை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.Underdeveloped Self பற்றி புரிந்துக்கொள்ள உதவும் நாவல்.


குற்றங்களும் பிம்பங்களும்

 

பொதுவாக குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் ஏன் பல வருட நட்பு இருந்தது அல்லது தொடர்பு இருந்தது என்ற கேள்வி  அனைத்து வகை சுரண்டல் சார்ந்த குற்றங்களிலும் முன்வைக்கப்படுகிறது.பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல் , உணர்வுச் சுரண்டல் என்று பல வகையான சுரண்டல்களில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.உண்மையில் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் உருவாகும் உறவும் ஆழமான பிணைப்பு கொண்டது தான்.காதல் போன்ற பந்தம்.அந்தப் பிணைப்பு பல நேரங்களில் வலுவானதாகவும் அமைகிறது.அந்த உறவு ஒரு விஷ சுழற்சி போல இயங்குகிறது.அதில் சில நேரங்களில் குற்றவாளியும் மகிழ்ச்சியின்றி பயணிக்கிறார்,குற்றமிழைக்கப்பட்டவரும் பயணிக்கிறார்.காதல் கொண்ட இருவர் ஒருவரை ஒருவரை அறிந்துக் கொள்வது போலவே இது போன்ற துர் உறவுகளிலும் அறிதல் நிகழ்கின்றது.

நாம் யார் என்பது குறித்து நம்மிடையே ஒரு பிம்பம் இருக்கிறது.நான் சர்வோத்தமன் , நெய்வேலியில் வளர்ந்தேன், பொறியியல் படித்தேன், கணினித்துறையில் வேலை செய்கிறேன்,  மனைவி குழந்தைகளுடன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறேன், கதைகள் கட்டுரைகள் எழுதுவேன் என்று ஒரு பட்டியல் கொண்ட பிம்பத்தை நான் என்னில் சேகரித்து வைத்திருக்கிறேன்.இவற்றுடன் நான் கொண்ட விழுமியங்களும் நம்பிக்கைகளும் அதில் இருக்கும்.ஆங்கிலத்தில் Spirit என்று சொல்லலாம்.ஆனால் இது ஆன்மா அல்ல.ஆடி பிம்பம்.இது தான் ஒரு மனிதன் தனது நேற்றையும் நாளையையும் இன்றையும் இணைத்து ஓர் இணைவை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.இதுதான் ஒரு அறுபடாத தொடர்ச்சியை தக்க வைக்க உதவுகிறது.

இந்த பிம்பத்தில் ஒருவன் சிறுவனாக பவுடர் பூசி தலை வாரி மிட்டாய் மென்றவாறு தன் தாய் தந்தையருடன் அமர்ந்திருக்கிறான்.அங்கு அவன் மிக பாதுகாப்பாக இருக்கிறான்.இந்த பிம்பம் உடைபடாத வரை மனிதனுக்கு பிரச்சனையில்லை.ஆனால் அந்த ஆடியில் அவன் காணாமல் போய்விட்டால் அவன் சிதறுகிறான்.காவல் நிலையங்களில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது சில நேரங்களில் உடைகள் அற்று நிர்வாணமாக நிறுத்தப்படுகின்றனர்.அது அவனை அவமானம் கொள்ளச் செய்வதற்காக மட்டும் நிகழ்த்தப்படுவது அல்ல.அவன் தன்னுள் கொண்டுள்ள அந்த பிம்பத்தை உடைப்பதற்காகவும் தான்.அதனால் தான் காவல் நிலையங்களிலிருந்து பின்னர் வெளிவரும் பலர் சில காலத்திற்கு எந்தச் செயலிலும் ஈடுபட முடியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.ஒருவன் தன்னைப்பற்றி கொண்டுள்ள சமூக மதிப்பீடு , பிம்பத்தை நொறுக்குவது தான் இத்தகைய தண்டனைகளுக்கு பின்னால் உள்ள உளவியல்.அவன் வெளியே சென்று தன் பழைய செயல்களை செய்யக்கூடாது என்பதற்காக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறை.

பெண்களும் ஆண்களும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் சில நேரங்களில் இது காரணமாக அமைகிறது.அவனது ஆன்மாவை (ஸ்பிரிட்) கொன்று இனி நீ ஒன்றுமில்லை  , நீ ஒரு சக்கை என்று சொல்வது தான் இந்தச் செயலுக்கு பின்னால் உள்ள காரணம்.பெரும்பாலான சுரண்டல்களும் இதைத்தான் செய்கின்றன.ஆனால் அதை பெளதிகமான பருப்பொருளாக நம்மால் சில நேரங்களில் காண இயலாது.சுரண்டல்களின் ஆதார விசை பிம்ப வழிபாடும், நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் தான்.சில நேரங்களில் சிலர் வேலையின் பொருட்டு , ஒரு வாய்ப்பின் பொருட்டு சுரண்டலை பொறுத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் அது நம்பிக்கையால் நிகழலாம்.பொருளாதாரச் சுரண்டல்கள் அப்படித்தான் நிகழ்கின்றன.வேறு சில தந்தை , குரு , ஆசிரியர் போன்ற பிம்ப வழிபாட்டால் நிகழ்பவை.

இதில் சுரண்டுபவர் முதலில் செய்வது சுரண்டுபவரை ஆராய்வது தான்.பின்னர் தன் சுரண்டலை மெல்லத் துவங்குகிறார்.பாதிக்கப்படுபவர் தன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என்பதை கவனிக்கிறார்.எதிர்ப்பு இல்லாத போது அதை தொடர்கிறார்.இதில் பாதிக்கப்படுவர்களுக்கு தாங்கள் எதையோ இழக்கிறோம் என்ற எண்ணம் இத்தகைய உறவின் துவக்கத்திலேயே இருக்கும்.ஆனால் அது இன்னது என்று அவர்களால் சொல்ல இயலாது.குழப்பம் அடைவார்கள்.எப்போதும் இந்தச் சுரண்டும் நபரை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.குற்றவாளியின் தரப்பு நியாயத்தை தங்களுக்குள் விளக்கிக்கொள்வார்கள்.தர்க்கப்படுத்தி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது , நாம் தான் தேவையின்றி அலட்டிக்கொள்கிறோம் என்று சமாதானம் கொள்வார்கள்.ஆனால் அவர்களால் அந்த உறவு தொடங்குவதற்கு முன்னர் இருந்தது போல மகிழ்ச்சியாக இருக்க இயவவில்லை என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.மன அழுத்தம் கொள்வார்கள்.எப்போதும் அவர்களுக்குள் ஓர் உரையாடல் இருக்கும்.அவர் தான் அணிந்திருக்கும் உடைகளை யாரோ தனக்குத் தெரியாமல் திருடுகிறார்கள் என்ற எண்ணத்தை அடைவார்.ஆனால் உண்மையில் அப்படித்தானா என்ற குழப்பமும் அவருக்கு இருக்கும்.மேலே சொன்ன நம்பிக்கை போன்ற காரணங்களால் அந்த உறவு நீடிக்கவும் செய்யும்.

உடல் அளவில் நிர்வாணப்படுத்தி தண்டிப்பது , வன்புணர்வு செய்து தண்டிப்பது போன்றது தான் சுரண்டலும்.இது போன்ற சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர் மனச்சோர்வு , தனிமை, குற்றவுணர்வு , அவமானம் , தற்கொலை உணர்வு, உடல் வலி , வன்மம்  ஆகியவற்றை அனுபவக்கின்றனர்.இதில் உளவியல் ரீதியில் அவரது பிம்பம் உடைக்கப்படுகிறது.சிலர் இத்தகைய உறவில் ஈடுபடத்துவங்கிய ஆரம்ப நாட்களில் வெகுவாக எடை இழப்பார்கள்.தங்களை சுருக்கிக்கொள்வார்கள்.நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவார்கள்.உடைக்கப்பட்ட ஆடியில் அவர் கேலிச்சித்திரமாகிறார்.ஏதோ ஒரு தருணத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தான் பாதிக்கப்படுகிறோம் என்று புரியத் துவங்கும்.இந்த உறவில் சிக்கல் இருக்கிறது என்று உணர்வார்கள்.ஆனால் பாதிக்கப்பட்டவரின் பிம்பம் உடைந்துவிட்டது.அதை மறுபடியும் கட்டியெழுப்பதற்கான கச்சாப்பொருட்கள் சுரண்டப்பட்டவரிடம் இருப்பதாக அவர் நம்புகிறார்.கிட்டத்தட்ட தன் உடலை மறைக்க தேவையான உடை தன்னைச் சுரண்டியவரிடம் மட்டுமே இருப்பதாக அவர் நம்பத் தலைப்படுகிறார்.அது வெளியில் கிடைக்காது என்கிற வகையிலேயே அவரின் உரையாடல்கள் அமையும்.அவர் தன்னைச் சுரண்டியவரிடம் இறைஞ்சுவார்.மிரட்டுவார்.தன்னால் இயன்ற அனைத்து வழிமுறைகளையும் செய்துப் பார்ப்பார்.சுரண்டுபவர் அவரைப் பார்த்து இளித்தப்படியே இருப்பார்.அல்லது மேலும் குழப்புவார்.உடையை கொடுப்பது போல கொடுத்து பிடுங்கிக் கொள்வார்.அது ஒரு விஷச் சுழற்சி போலச் சுழன்றபடியே இருக்கும்.பின்னர் ஏதோ ஒரு கட்டத்தில் இருவரும் உறவை முறித்துக்கொள்வார்கள்.பெரும்பாலும் சுரண்டுபவர் தான் உறவை முறிப்பார்.ஏனேனில் அவருக்கு அடுத்த இரை கிடைத்திருக்கும்.இந்த விடைபெறுதலுக்குப் பிறகும் இந்த உறவுகள் இருவர் நினைவிலும் நீடிக்கும்.

பாதிக்கப்பட்டவர் அந்த உறவின் முடிவில் தான் முழுமையற்றவராக மாறிவிட்டோம் என்பதை உணர்வார்.கண்ணாடியில் முகம் பார்க்கும் போது தன்னில் ஏதோ ஒன்று குறைகிறது என்று கவலை கொள்வார்.அவர் கோபம், அவமானம், துயரம் , குற்றவுணர்வு என்று பல்வேறு உணர்வு நிலையில் தகித்தப் படியே இருப்பார்.ஓர் இடத்தில் அமர இயலாமல் தவிப்பார்கள்.ஏனேனில் அவரது பிம்பம் உடைக்கப்பட்ட நிலையிலேயே நொறுக்கப்பட்ட நிலையிலேயே தான் இருக்கிறது.அதை அவரால் மீட்க இயலவில்லை.மெல்ல தன்னைச் சுரண்டியவரை எப்படி பழிவாங்கலாம் என்று எண்ணத் துவங்குவார்.

1. உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது.

2. பொருளாதாரத் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது. வேலையில் இருந்து நீக்க வைப்பது அல்லது தொழிலை முடக்க முனைவது.

3. சுரண்டியவருக்கு தெரிந்த நபர்களுக்கு அவரைப்பற்றிய சுய ரூபத்தை தெரியப்படுத்துவது.

4. பொதுவில் முன்வைப்பது.

5. புறக்கணித்து முன்செல்வது.

6.  மன்னிப்பை கோருவது.

இதில் பாதிக்கப்பட்டவர் தன்னால் இயன்ற வகையில் ஒன்று பழிவாங்குவார் அல்லது புறக்கணித்துச் செல்வார் அல்லது மன்னிப்பை கோருவார்.இதனால் தான் பல நேரங்களில் பத்து வருடங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தவை சட்டென்று வெளியில் வருகின்றன.பாதிக்கப்பட்டோரை பொறுத்தவரை அவை எப்போதோ நிகழ்ந்தவை அல்ல , அவர்களுக்கு அது முந்தைய நாள் நடந்த நிகழ்வு போல இருக்கும்.அந்த உரையாடல்கள் அவர்களுக்குள் நிகழ்ந்தபடியே இருக்கும்.சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர் கோருவதெல்லாம் எந்த ஆனாலும் இல்லாத ஒரு எளிய மன்னிப்பை மட்டுமே.ஏனேனில் அது பாதிக்கப்பட்டவரை ஒரு மனிதராக பொருட்படுத்துகிறது.அவரின் கேலிச்சித்திரம் நேர் செய்யப்படுகிறது.அவர் தன் ஆடி பிம்பத்தை மறுபடியும் பெறுகிறார்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு சிலர் தங்கள் முந்தைய பிம்பத்தை திரும்ப பெறுகின்றனர்.அவர் தன் தாய் தந்தையருடன் அமர்ந்து மிட்டாய் மென்றவாறு பேராக்கு பார்க்கத் துவங்குகிறார்.மனம் அந்த ஏகாந்த நிலையை அடையும் போது அவர் தன் வேலைகளை முன் போல செய்யத் தொடங்குவார்.சிலர் ஒரு போதும் முன் போல் இயங்க இயலாத வகையில் முழுமையாக சிதறிப்போய் விடுகின்றனர்.சிலர் தன்னைச் சுரண்டியவரிடமே சென்று சேர்ந்துவிடுகிறார்கள்.ஜெயகாந்தனின் கதை ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை பாதித்தவனிடமே சென்று சேர்கிறார்.

ஆனால் எப்போதும் சுரண்டியவருக்கும் பாதிக்கப்பட்டவருக்குமான அந்த உறவு ஒரு பிணைப்பு நீடித்துக்கொண்டே தான் இருக்கும்.சுரண்டியவரின் துணை அறியாத சில இரகசியங்களை பாதிக்கப்பட்டவர் அறிவார்.சிலர் சில காலம் கழித்து அணைத்தையும் மறந்து எளிமையாக உரையாடக் கூடியவர்களாகவும் மாற்றம் கொள்வார்கள்.காலம் சிலரை கனிய வைக்கும்.மறக்க வைக்கும்.சுரண்டுபவரும் எல்லா நேரங்களிலும் திட்டமிட்டு இவற்றை நிகழ்த்துவதில்லை.அது நிகழத் துவங்குகையில் அவர் திட்டமிடத் துவங்கிறார்.ஆனால் பல நேரங்களில் சுரண்டுபவர்களிடம் ஒரு Pattern இருக்கும் என்றே உளவியலில் சொல்லப்படுகிறது.அனைத்தையும் கறுப்பு வெள்ளையில் நம்மால் அடைக்க முடியாது என்பதும் உண்மைதான் .உறவுகள் அது அப்படித்தான் என்ற சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்று இருக்கிறது.அது இத்தகைய விஷச் சுழற்சி கொண்ட உறவுகளுக்கும் பொருந்தும்.

இத்தகைய விஷயங்களை சரியாக சொல்வதற்கு புனைவு தான் சரியான வாகனம் என்று இதை எழுதும் போது உணர்கிறேன்.உளவியலாளர்களால் இன்னும் நன்றாக விளக்க முடியும்  என்று நினைக்கிறேன்.

தமிழகம்

















 

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009யில் வேதியியலில் நோபல் பரிசு பெற்றார்.இவர் இங்கிலாந்தில் வாழ்கிறார்.இவர் நோபல் பரிசு பெற்ற போது இவர் சிதம்பரத்தை சேர்ந்தவர், பரோடாவில் படித்தவர் என்பது பல இந்தியர்களுக்கு தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.அப்போது சென்னைப் பல்கலைகழகத்திற்கு ஏதோ ஒரு கருத்தரங்குக்காக வந்திருந்தார்.அவரை பார்க்க நிறைய கூட்டம்.அன்றைய பேச்சில் அவர் இதே சென்னைப் பல்கலைகழகத்தில் பேச நான் சென்ற ஆண்டும் வந்தேன்.அப்போது கூட்டமே இல்லை.இப்போது ஒரு அகாடமி எனக்கு விருது கொடுத்தவுடன் ஏன் இப்படி கூட்டம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.மேலும் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு ஒன்றில் எனக்கு நிறைய வாழ்த்து மின்னஞ்சல்கள் வருகிறது.இவர்கள் எல்லாம் யார் , இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள், இவர்களின் மின்னஞ்சல்கள் குவிவதால் முக்கியமான மின்னஞ்சலகளை தவறவிடுகிறேன் என்று புலம்பினார்.யாரோ ஒரு ஆசிரியர் சிதம்பரத்தில் வெங்கட்ராமன் என்னிடம் பள்ளியில் படித்தார் என்று நினைவுபிசகாக சொன்னதும் நான் சிதம்பரத்தில் படிக்கவே இல்லை என்று சொல்லி இப்படியான உரிமை கோருதல்களை நக்கலடித்தார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் விஞ்ஞானி.அதிகம் போனால் ஒரு மாதம் அவர் மீது ஊடக வெளிச்சம் இருந்திருக்கும்.அதைக்கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவருடைய அத்தனை பேச்சிலும் ஒரு Condescending attitude இருந்ததை பார்க்க முடிந்தது.ஒரு அகாடமியின் அங்கீகாரத்தின் பின் மட்டும் ஏன் என்னை மொய்க்கிறீர்கள், இதற்கு முன் எங்கிருந்தீர்கள் என்ற கேள்வி முக்கியமானது தான் .அப்படியென்றால் உங்கள் அக்கறைகள் விஞ்ஞானத்தின் மீதா அல்லது அகாடமியின் விருதின் மீதா என்ற கேள்வி அதை உணர்பவரின் சுயத்தை சீண்டக்கூடியது.நமது இந்திய சமூகம் பணம்,பதவி,செளகரியங்கள்,விருதுகள்,அங்கீகாரம் இவற்றிற்கு அளிக்கும் கெளவரத்தை அதிகாரத்தை பெறாத அறிவுக்கு அளிப்பதில்லை.ஆனால் அதே இந்திய சமூகம் மேலே சொன்னவற்றை துறந்து வாழ்பவர்களை வணங்குகிறது.இது இந்திய மனதின் உளவியல்.இதைக்கூட அவரால் புரிந்து கொண்டு சாதாரணமாக நடந்துகொள்ள முடியவில்லை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது,ஏனேனில் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று எஸ்.பி.உதயகுமார் சொல்கிறார்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்ற ஒரு விஞ்ஞானி வருவதை விட ரஜினிகாந்த் போன்ற ஒரு நடிகர் வருவது ஆரோக்கியமானது.ஒரு விஞ்ஞானிக்கு சோதனைக்கூடத்திற்கு அப்பால் சமூகத்தை பற்றி தெரிந்ததை விட நடிகர்களுக்கு ஒரளவு தெரியும்.ஒரு இஸ்ரோ விஞ்ஞானியை விட, இயற்பியல் அறிஞரை விட , மருத்துவரை விட வழக்கறிஞர்கள்,வியாபாரிகள்.கலைஞர்கள்,செயல்பாட்டாளர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது.அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் கூட்டு உளவியல் புரிகிறது,தெரிகிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் என்ன பெரிய மாற்றம் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் எப்படியும் தமிழகம் ஒரு வலுவான நல்லாட்சியை பெற வேண்டும்.கடந்த பத்து வருடங்களில் தேங்கியிருக்கும் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல ஸ்டாலின் வந்தால் நன்றாக இருக்கும்.ஆனால் அவர் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளாமல் பழம் கனிந்து தன் மடியில் விழ வேண்டும் என்று எதிர்பார்கிறார்.பழம் கனியும் நேரத்தில் வேறு யாராவது வந்து தட்டி பறிப்பது இயல்பானது.ஒரு சிக்கலான தருணத்தில் தன் வியூகங்களின் வழி அதிகாரத்தை அடைபவர்களிடம் தான் கூட்டம் தலை வணங்கும்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் போராடி தன் இடத்தை பிடித்தார்.தேர்தலில் சில இடங்களில் வென்றார்.அதிமுகவை கைப்பற்றினார்.ஜானகி தன் அரசியல் வாழ்வை அத்தோடு முடித்துக்கொண்டார்.குஷ்பு சொன்ன ஒரு கருத்துக்காக அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியாலும்,பாட்டாளி மக்கள் கட்சியாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.அவர் மீது பல வழக்குகள்.அனைத்திலிருந்தும் போராடி வென்றார்.தன் கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை.தன்னை எதிர்த்த கட்சிகளுடன் சமரசம் பேசவில்லை.அவர் வழக்குகளிலிருந்து வென்றவுடன் திமுகவில் சேர்ந்தார்.அங்கு தன் வளர்ச்சி தடுக்கப்படுவதை புரிந்துகொண்டு காங்கிரஸில் சேர்ந்தார்.

மன அழுத்தம் தரும் நெருக்கடியான சூழலில் அதை போராடி வெல்பவர்தான் அரசியலில் வெல்கிறார்.நடிகர்களின் மோகத்தால் தமிழகம் சீரழிகிறது என்கிறார்கள்.ஒன்றாக இருந்த ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சியின் முக்கிய காரணம் தெலுகு தேசம் கட்சி.அதை உருவாக்கியவர் என்.டி.ராமராவ்.இன்று அந்தக் கட்சி பிரிந்துவிட்ட ஆந்திரத்தையும் அடுத்த பத்து வருடங்களில் நன்கு வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றிவிடும்.

ஸ்டாலின் தனக்கு நிகராக கட்சியில் யாரும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.அது எல்லா தலைவர்களுக்கும் இருக்கும் எண்ணம் தான்.அதில் தவறில்லை.ஆனால் தன்னால் மட்டுமே தலைமையில் இருக்க முடியும் என்கிறபடியான சமிக்ஞைகளைஅவர் தொடர்ந்து உருவாக்க வேண்டும்.இன்றைய ஆட்சி சூழலில் பல்வேறு போரட்டங்களை அவர் செய்யலாம்.ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கலாம்.கட்சியை உடைக்க
முயலலாம்.அவர் எதையும் செய்ய தயங்குகிறார்.அவர் இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது கடினம்.தமிழகத்தில் வேறு தலைவர்கள் இல்லை.ஸ்டாலின் தவிர்த்து ரஜினிகாந்த் மட்டுமே மக்கள் அறிந்த கட்சி தலைவராக அடுத்த சட்டமன்ற தேர்தலில் இருப்பார்.டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார்.ஆனால் அவரால் ஆர்.கே.நகரின் வெற்றியை தமிழகம் முழுக்க விரிக்க இயலாது.அவரை மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றது.விடுதலை சிறுத்தைகள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது அடுத்த தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்.பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.வழக்கம் போல கடலூர்,விழுப்புரம்,தருமபுரி,சேலம் தாண்டி அவர்களால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாது.அவர்களால் தங்களின் சாதிய அடையாளத்தை தாண்டி வரவே முடியாது.

பாரதிய ஜனதா கட்சியுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைக்கப்போவதில்லை.அதனால் இப்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சியை கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை சந்திக்க பா.ஜ.க முயலாது.டிடிவி தினகரன் பக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.அப்படி சென்றால் ஆட்சி கவிழும்.தேர்தல் சீக்கிரம் வரலாம்.காங்கிரஸூம் திமுகவும் கூட்டணியில் தொடரலாம்.அல்லது அந்தக் கூட்டணி மாறலாம்.எப்படியிருந்தாலும் திமுகவிற்கு முக்கிய கூட்டணி கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.ரவிக்குமார் ரஜினிகாந்தை விமர்சித்து பேசியிருந்தாலும் திருமாவளவன் நல்ல விதமாகத்தான் பேசியிருக்கிறார்.எதுவும் நடக்கலாம்.ரஜினிகாந்த் சில இடங்களை வெல்லக்கூடும்.ஆட்சியை பிடிப்பாரா என்று யாருக்கும் தெரியாது.பார்க்கலாம்.தமிழகத்தில் இந்த ஆண்டில் நல்லாட்சி மலரட்டும்.

சிறுநகரத்து காதல்கள்


Woman gazing out of a window contemplating, 2004 (b/w photo), Spiller, Stephen (Contemporary Artist) / Private Collection / The Bridgeman Art Library



சங்கரின் கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.அடுத்தடுத்த முறையீடுகளில் இது குறையலாம்.இந்தக் கொலையை திட்டமிட்டு கூலிப்படையை கொண்டு செய்தது முக்கிய விஷயமாக இருக்கிறது.இளவரசன் – திவ்யா காதலில் இளவரசனும் பெண்ணின் தந்தையும் இறந்து போனார்கள்.இந்த வழக்கிலும் மரண தண்டனை நிறைவேறினால் அதுவே நடக்கும்.இரண்டிலும் காதலித்த ஆண்கள் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள்.திவ்யா வண்ணியர் பிரிவை சேர்ந்தவர்.கெளசல்யா தேவர் சாதியை சேர்ந்தவர்.இரண்டு வழக்குகளிலும் ஆண்கள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்.ஏன் ஆண்கள் மட்டும் இறக்கிறார்கள்.ஏன் பெண்கள் இறப்பதில்லை.இதுவே காதலித்த ஆண்கள் தலித் வகுப்பை தவிர்த்த வேறு சாதியாக இருந்தால் இத்தகைய மரணங்கள் நிகழாமல் இருந்திருக்குமா.இவர்கள் இருவரும் சிறுநகரத்தில் இருந்திருக்கிறார்கள்.இதுவே இவர்கள் பெருநகரங்களில் பிறந்து காதலித்திருந்தால் இந்த மரணங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு.கிராமங்களும் சிறுநகரங்களும் சாதியால் கட்டுண்டவை.அங்கே நிலப்பிரபுத்துவ மனநிலைதான் செயலாற்றுகிறது.நிலப்பிரபுத்துவ மனநிலையில் விஸ்வாசம்,செய்நன்றி,பிறப்பு சார்ந்த அடையாளங்கள்,உடைமை மனநிலை,சாதிய சடங்குகள்,குல தெய்வங்கள் அணைத்தும் இருக்கின்றன.அங்கு ஆசிரியர் வேலையில் இருக்கும் ஒருவர் ஆசிரியராக மட்டும் பார்க்கப்படுவதில்லை.வழக்கறிஞர் வெறும் வழக்கறிஞர் இல்லை.அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில்தான் அவருக்கான க்ளைண்ட் வருகிறார்.அங்கு வேலை கொடுப்பவருக்கும் வேலை செய்பவருக்கும் இருக்கும் உறவு படிநிலை கொண்டது.வேலை செய்பவரின் வாழ்வாதாரம் வேலை கொடுப்பவரால் உறுதி செய்யப்படுகிறது.தன் உழைப்பை விற்று ஊதியம் பெற்றாலும் அவர் வேலை கொடுப்பவருக்கு நன்றியுடனும்,விஸ்வாசத்துடனும்,மரியாதையுடனும் நடந்து கொள்கிறார்.அங்கு எல்லோருக்கும் சமூக அடையாளம் இருக்கிறது.குழு மனநிலை எளிதல் செயல்புரிகிறது.

சிறுநகரத்தில் , கிராமத்தில் தன் வீட்டின் பெண் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞனின் உடைமை ஆவது கொந்தளிப்பை உருவாக்குகிறது.ஒரு வகையில் அந்த இளைஞனின செயல் பெண் வீட்டாரின் ஆண்களின் ஆண்மையை கேலி செய்கிறது.அவர்களை அவமானப்படுத்துகிறது.அந்த இளைஞனின் செயல் , பெண் வீட்டின் ஆண்களை தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் வென்றதன் குறியீடாகிறது.அவள் அவளது சாதி இளைஞர்களை மறுத்து தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை தேர்வு செய்யும் போது அந்தப் பகுதியை சேர்ந்த அவளது சாதி இளைஞர்களும் கொந்தளிக்கிறார்கள்.பெண் வீட்டில் இருப்பவர்கள் அவமானத்தால் வன்மம் கொள்கிறார்கள்.திவ்யாவின் தந்தை தற்கொலை மூலம் தன் பெண்னை பழிவாங்கினார்.கெளசல்யாவின் தந்தை சங்கரை கொலை செய்து பழிவாங்கி தன் அவமானத்தை துடைத்துக்கொண்டார்.சிறுநகரங்களில் கிராமங்களில் பெண் அந்த வீட்டின் ஆண்களால் தங்களின் உடைமையாகத்தான் பார்க்கப்படுகிறாள்.உங்கள் வீட்டின் இருசக்கர வாகனத்தை ஒருவன் வீட்டிலிருந்து உங்களின் அனுமதியின்று எடுத்து சென்று தனதாக்கிக் கொண்டு தினமும் ஊரில் அதை ஓட்டினால் , அதை நீங்கள் கேட்காமல் அமைதியாக இருந்தால் ஊர் உங்களை கேலி செய்யும்.இதிலும் அதே மனநிலை செயல்புரிகிறது.நம் ஊரில் இன்றும் கூட ஒரு பெண் ஆணின் காதலை ஏற்றுக்கொண்டதும் அவனது நண்பர்கள் "அவன் அந்தப் பொண்ண கரேக்ட் பண்ணிட்டான் தெரியுமா" என்று பேசிக்கொள்கிறார்கள்.இத்தகைய மனநிலை சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் அதிகம் இருக்கிறது.இந்தக் காரணத்தால் தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்ற வேண்டும் என்கிறார்.அதன் பின் ஒரு பெண்னை அவ்வளவு எளிதில் பிற சாதி குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் தங்கள் வசீகர பேச்சால் கவர்ந்துவிட முடியாது என்று நம்புகிறார்.

கிராமங்களில் இன்றும் காலனி பகுதி என்று தனியாகத்தான் இருக்கிறது.அந்தப் பிரிவு புறத்தில் எப்படி இருக்கிறதோ அதே போல அகத்திலும் இருக்கிறது.பெருநகரங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வண்ணியரும்,தேவரும்,தலித்தும்,பிராமணரும் ஒன்றாக வாழ்வதற்காக சாத்தியங்கள் இருக்கின்றன.அவர்களின் பிள்ளைகள் ஒரே பள்ளியில் படிக்கலாம்.அவர்கள் காதலிக்கலாம்.திருமணமும் செய்து கொள்ள இயலும்.அங்கே பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.ஆனால் அங்கு குழு மனநிலை இல்லை.உடைமை மனநிலை குறைவாக இருக்கிறது.பெருநகரத்தில் உங்கள் இருசக்கர வாகனத்தை உங்கள் அனுமதியின்றி ஒருவன் எடுத்து ஓட்டினால் அது உங்கள் வண்டி என்று யாருக்கும் தெரியாது.அதனால் உங்களிடம் வந்து யாரும் அதைப்பற்றி கேட்கப் போவதில்லை.ஏனேனில் உங்களையே யாருக்கும் தெரியாது.மேலும் தன் வீட்டின் பெண் தன் வண்டி போன்ற ஒரு உடைமை அல்ல என்ற முதிர்ச்சி பெருநகரங்களில் ஒரளவு இருக்கிறது.
பெருநகரத்தில் வேலை செய்பவர் வேலை கொடுப்பவரிடம் செய்நன்றியுடனும்,விசுவாசத்துடனும்,மரியாதையுடனும் நடந்துகொள்வதில்லை.அவர் பணிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.தன் உழைப்புக்கு இதை விட அதிக ஊதியம் கிடைக்கும் என்றால் அவர் அங்கு சென்று விடுகிறார்.வேலை கொடுத்தவரும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

கிராமங்கள்,சிறுநகரங்கள் பெருநகரங்களை போன்ற தனிமனித சமூகமாக மாறும் போது மட்டுமே இத்தகைய சிக்கல்கள் குறையும்.மேலும்,பெண் குறித்த பல்வேறு மனப் பதிவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே இருக்கிறது.தொடர்ச்சியாக நம் திரைப்படங்களின் வழி பெண் தன்னளவிலேயே ஒருவன் மீது காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.அவளை தன் சாகசங்கள் மூலம், அறிவின் மூலம் ஆண் தன் பக்கம் ஈர்க்கிறான்.அடுத்து சூழலின் அழுத்தத்தால் பெண் தன் மனதை சட்டென்று மாற்றிக்கொள்ளக் கூடியவள் என்கிற மனப்பதிவும் நம்மிடம் உள்ளது.இது போன்ற கொலைகளுக்கு பின்னால் தன் வீட்டின் பெண் காலப்போக்கில் இந்தக் காதலை மறந்து தான் பார்த்து வைக்கும் பையனை திருமணம் செய்து கொண்டு வாழ்வாள் என்கிற மனநிலை உள்ளது.

நம் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் ஆண் பெண் உறவு சமீப காலம் வரை எளிமையான ஒன்றாக இல்லை.பெருநகரங்களில் ஆண்களும் பெண்களும் எளிதாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.தனக்கு பிடித்த ஆணிடம் காதலை தெரிவிப்பதும், தன் காதல் மறுக்கப்படும் போது உருக்குலைவதும் பெண்ணுக்கும் சாத்தியம் என்பதை பெருநகரத்து மனிதன் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கருத்து நிலைகளும், சிந்திக்கும் திறனும்,காதல் உணர்வுகளும்,குரூரமும் அன்பும்,அதிகார படிநிலைகளில் முன்னே செல்வதற்கான விருப்புறுதி என்று எல்லாமே ஆண்களை போல பெண்களுக்கும் உள்ளது என்று பெருநகரம் புரிந்துகொள்கிறது.அவள் தனி மனுஷி என்பதும் யாருடைய உடைமையும் அல்ல என்பதும் மெல்ல பெருநகரம் உணரும் உண்மைகள்.சமீபத்தில் கோரமங்களாவில் வீடு தேடிக்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு வீட்டிற்கு சென்ற போது அங்கே இரண்டு மூன்று தாடி வைத்த யுவன்கள், யுவதிகள்,வீட்டின் மத்தியில் ஒரு நாய்,எங்கும் பீர் பாட்டில்கள் இருப்பதை பார்த்தேன்.அவர்கள் சகஜமாக இருந்தார்கள்.அந்தப் பகுதி முழுக்க குடும்பங்கள் சிறு குழந்தைகளுடன் இருக்கின்றது.இவர்கள் அடிக்கடி பார்ட்டிகளில் ஈடுபடுவதால் அது மற்றவர்களை தொந்தரவு செய்வதாக அவர்களே உணர்ந்து வீட்டை காலி செய்வதாக வீட்டுக்காரரிடம் சொல்லியிருக்கிறார்கள்.அங்கே சுற்றியிருப்பவர்கள் இதை புகாராக வீட்டுக்காரரிடம் சொல்லவில்லை.இந்த யுவன் யுவதிகளை யாரும் கேள்வி கேட்கவில்லை.தொந்தரவு செய்யவில்லை.இது போன்ற ஒரு காட்சியை நீங்கள் சிறுநகரத்தில் கிராமத்தில் பார்ப்பது அநேகமாக சாத்தியமில்லை.

பெருநகரங்கள் சொர்க்கங்கள் இல்லை.சென்னையில் செம்மஞ்சேரி,கண்ணகி நகர் போன்ற பகுதிகள் உருவாகி வந்திருப்பதை பார்க்க முடிகிறது.ஆனால் ஒரே பொருளாதார நிலையில் இருக்கும் இருவேறு சாதியினர் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு அதிகம் பெருநகரங்களில் உள்ளது.தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த என் நண்பன் ஒருவன் இடைநிலை சாதியை சேர்ந்த பெண்னை அவர்களின் வீட்டின் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டான்.அவர்கள் இருவரும் சென்னையில் வேலை செய்தார்கள்.இரண்டு மூன்று வருடங்கள் கழித்து பெண் வீட்டார் இவர்களை ஏற்றுக்கொண்டார்கள்.பெண்ணின் தந்தை என் நண்பனிடம் நாங்கள் நினைத்திருந்தால் உன்னை எதுவும் செய்திருக்க முடியும் , ஆனால் நாங்கள் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்.என் நண்பன் பெரிய சிக்கல்கள் இல்லாமல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பெருநகரம் அவனுக்கு உதவியது என்றே எனக்கு தோன்றுகிறது.பெருநகரத்து தனிமனித மனநிலைதான் அனைவருக்குமான வாழ்வுரிமையை அளிப்பதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளது. 
 


சுய மதிப்பீடு





ஜெயகாந்தனை பற்றி ரவி சுப்பரமணியன் எடுத்த ‘எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்ற ஆவணப்படத்தில் ,  உலகமயமாக்கல் குறித்த கேள்வி ஒன்றிற்கு அதன் நேர்மறையான அம்சங்களை பதிலாக சொல்வார் ஜெயகாந்தன்.ஆனால் அதனால் உருவாகும் வேறு பாதிப்புகளை பற்றிய அடுத்த கேள்விக்கு, I’m not a scientist, I’m not a ruler, I’m a dreamer என்று பதிலளிப்பார்.இந்த சமூகத்தில் தன்னுடைய பங்கு,வேலை என்ன என்பது குறித்த ஒரு தெளிவு அவரின் பதிலில் இருக்கிறது.அவருடைய இரண்டு கட்டுரை தொகுதிகளின் தலைப்புகள் ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவக் கட்டுரைகள்’ மற்றும் ‘ஒரு இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்’ என்பதும்தான்.அவர் சினிமா எடுக்கும் போது, அரசியல் மேடைகளில் பேசும் போது, ஆன்மிக அனுபவங்களை சொல்லும் போதும் - தன்னை ஒரு இலக்கியவாதியாகத்தான் முன்வைக்கிறார்.அவர் எப்போதும் தன் வேலை குறித்த, தன் அடையாளம் குறித்த தன்னுணர்வுடன்  இருந்திருக்கிறார்.இது ஒருவர் தன்னை குறித்து சரியான சுய மதிப்பீடை செய்து கொள்வதால் உருவாவது.

ரஜினிகாந்த் உடல்நலம் குன்றி மீண்டுவந்து ஒரு கூட்டத்தில் பேசும் போது நான் இயக்குனர் அல்ல, எழுத்தாளன் அல்ல, நடிகன்.என் உடல்நலமும் வேகமும் குன்றிவிட்டால் தான் நடிப்பதில் பொருளில்லை என்றார்.அவருக்கு தன்னை குறித்த சரியான மதிப்பீடு இருக்கிறது.அவர் திரையில் தோன்றினாலே படம் வெற்றி அடைந்துவிடும் என்ற கற்பனைகள் சிறிதளவும் அவருக்கில்லை.

மகிழ்ச்சியாக இருப்பதற்கும் சுய மதிப்பீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.தன்னை சரியாக மதிப்பீட்டு கொள்ளத் தெரிந்தவர் தனக்கு தெரியாத ஒரு விஷயத்தை செய்வதில்லை.ஒரு தவறிழைத்து விட்டால் சட்டென்று அந்த குற்றவுணர்விலிருந்து தண்ணீர் மறுபடியும் தன்னிலையை அடைவது போல விடுபடுகிறார்.பெரும்பாலும் இத்தகையவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த தங்களால் செய்ய இயன்ற விஷயங்களை மட்டும்தான் செய்கிறார்கள்.இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.இவர்கள் சட்டென்று பாதை மாறி புதிதாக ஒரு விஷயத்தை செய்ய மாட்டார்கள்.தங்களுக்கு சம்மந்தமற்ற இடத்தில் தங்களை பொருத்திக் கொள்ளமாட்டார்கள்.அதனால் இவர்கள் அவமானப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதில்லை.

ஆனால் இதனால் இவர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை என்பதையும் பாரக்க வேண்டும்.தங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து செய்வதால் அவர்களின் துறைகளில் அநேகமாக வெற்றியும் பெறுகிறார்கள்.மாறாக தாழ்வான சுய மதிப்பீடு கொண்டவர்கள் தங்களால் எதை சரியாக செய்ய இயலும எதை செய்ய இயலாது என்பதில் குழப்பம் கொள்கிறார்கள்.அதனால் முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார்கள்.தவறான மதிப்பீட்டால் சமயங்களில் அவமானப்படுகிறார்கள்.தாழ்வான சுய மதிப்பீடு கொண்டவர்கள் அவமானப்படும் போது பயங்கரமாக புண்படுகிறார்கள்.பிறருடன் எப்போது தங்களை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்.சின்ன சின்ன அவமானங்கள் கூட அவர்களை பெரிய அளவில் பாதிக்கிறது.எப்போதும் பிறரின் மதிப்பீட்டை எதிர்பார்ப்பதால் உருவாகும் அவஸ்தை இது.அதே போல ஒரு சின்ன குற்றத்திற்கு கூட அதிக குற்றவுணர்வு கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் இவர்கள் சுவர்கள் போல இறுக்கமாக மாறி விடுகிறார்கள்.உடைந்தால் அவ்வளவுதான்.மீண்டெழுவது பெரிய விஷயமாகிறது.முக்கியமாக இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

தாழ்வான சுய மதிப்பீட்டிற்கும் - பயம், வெட்கம், மனச்சோர்வு, ஏக்கம் மற்றும் சஞ்சலம்,தாழ்வு மனப்பான்மை ஆகிய மனநிலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.ஒரு செயல் குழப்பமான மதிப்பீட்டுடன் செய்யப்படும் போது அதன் விளைவுகளும் குழப்பங்களை உருவாக்குகிறது.தன்னைப் பற்றிய சரியான மதிப்பீடு இல்லாததால் அவர்களால் வேறு எதையும் சரியாக மதிப்பீடு செய்ய முடிவதில்லை.ஆனால் தாழ்வான சுய மதிப்பீடு உள்ளவர்களுக்கு எப்போதும் நல்லூழ் ஒன்று உண்டு.அவர்களால் தங்களை சரியாக கணிக்க முடியாததால் புதிதான ஒன்றை தங்களுக்கு சற்றும் தெரியாத ஒன்றை செய்துவிடுகிறார்கள்.அது வெற்றி அடையும் போது , மகிழ்ச்சியை அளிக்கும் போது தங்களால் அதை செய்ய இயலும் என்பதை அறியும் போது , அவர்களின் வாழ்வில் முதல் முறையாக வசந்தம் சாத்தியப்படுகிறது.புதிய பயணம் உருவாகுகிறது.மற்றொரு விஷயம் அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்.அதனால் இத்தகையவர்களே கலைஞர்கள் ஆகிறார்கள்.விதிவிலக்குகள் இருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்து உயர் சுய மதிப்பீடு கொண்டு கலைஞராக இருக்கும் ஒரே எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும்தான்!! உயர் மதிப்பீடு கொண்டவர்கள் செயல்பாட்டாளர்களாகவும்,தாழ்வு மதிப்பீடு கொண்டவர்கள் கலைஞர்கள் ஆவதும் தான் இயற்கை.ஏனேனில் உயர் மதிப்பீடு கொண்டவர்களுக்கு இயல்பாகவே தங்கள் முடிவுகளின் மேல் பிடிவாதம் இருக்கிறது.

ஆனால் அதீத உயர் மதிப்பீடு கொண்டவர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. அவர்கள் தங்களை தாக்குபவர்களை மிகத் தீவிரமாக திருப்பி புண்படுத்துகிறார்கள்.ஜெயமோகனிடம் இதைப் பார்க்கலாம்.ஒரு முறை வண்ணநிலவன் சொல்வனத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயமோகன் எல்லாவற்றையும் கதையாக்கி விடுகிறார், உதாரணமாக நீங்கள் ஒரு செய்திதாளை கொடுத்தால் அதையும் கதையாக்கி விடுவார் என்று சொல்லியிருந்தார்.அடுத்த சில நாட்களில் ஒரு கட்டுரையில் ஜெயமோகன் - கடல்புரத்தில் நாவல் ஆண் பெண் சல்லாபத்தை பற்றிய எளிய நாவல் என்று எழுதியிருந்தார்.அந்த நாவல் மரபான உற்பத்தி முறை இருக்கும் போது தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய உற்பத்தி முறை மனித உறவுகளுக்கு மத்தியில் உருவாக்கும் நெருக்கடியை பேசும் நாவல்.சுமாரான வாசிப்புப் பழக்கம் உள்ளவர் கூட அதை உணரலாம்.ஜெயமோகன் அதை நன்கு அறிவார்.ஆனால் அந்த நேரத்தில் அவர் வண்ணநிலவனை பற்றி அப்படி எழுதியாக வேண்டிய தளத்திற்கு சென்று சேர்கிறார்.அது அதீத உயர் மதிப்பீட்டால் உருவாகும் பிரச்சனையும் கூட.

கலைத்துறையை அல்லது விஞ்ஞானத்துறையை சாராத ஒருவர் தாழ்வு மதிப்பீடு கொண்டவராக இருந்தால் அது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கும்.கலைத்துறையினருக்கும் விஞ்ஞானிகளுக்கும் மாறாக அது பயன் அளிக்கிறது.ஏனேனில் அவர்கள் தாழ்வு மதிப்பீடால் தாங்கள் செய்வதை மிகச் சரியாக செய்ய முனைகிறார்கள்.பிறர் முதலில் தங்களுக்கு அப்படியான ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.ஒரளவுக்கு சுய பரிசீலனை செய்ய முடிந்தால் அதைக் கண்டுபிடித்து விடலாம்.பிறகு அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து ஆராயலாம்.

தாழ்வான சுய மதிப்பீடு உருவாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.பால்ய காலத்தில் உருவாகும் தனிமை, பாலியல் சிக்கல்கள், அடையாள சிக்கல்கள்,கொடூரமான அவமானம், இவைகள் முக்கியமானவை.எல்லாவற்றையும் விட ஒருவரின் இயல்பான குணம்.ஒரே போன்ற அனுபவங்களை கொள்ளும் இருவரில் ஒருவர் அதனால் புண்படுவதும் மற்றவர் அதை இயல்பான விஷயமாக பார்ப்பதற்கும் குணத்திலிருந்து வரும் சுய மதிப்பீடும் காரணம்.சமூக மதிப்பீட்டிற்கும் சுய மதிப்பீட்டிற்கும் கூட உறவு இருக்கிறது.சிலர் தங்களின் கிராம பெயரை குல தெய்வத்தின் பெயரை சொல்வதற்கு வெடகப்படுவதை பார்த்திருக்கிறேன்.இந்த தாழ்வு மனப்பான்மை தன்னை குறித்து பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலிருந்து உருவாவது.தன்னை தாழ்வாகவும் பிறரை உயர்வாகவும் கருதும் எண்ணம் இதிலிருக்கிறது.தாழ்வு மதிப்பீட்டின் முக்கியமான பிரச்சனை தனக்கு எதையும் சரியாக செய்யத் தெரியாது என்ற எண்ணம்தான்.நகரத்து மனிதர்கள் விஷயம் அறிந்தவர்கள், கிராமத்தவர்கள் விஷயம் அறியாதவர்கள் என்ற சமூக மதிப்பீடு ஒருவர் தன்னைப்பற்றி கொள்ளும் தாழ்வு மதிப்பீடாக உருமாறலாம்.இங்கு தாழ்வின் காரணம் நகரம் X கிராமம் என்ற எதிரடைவுகள்தான்.சமூகத்தின் வரலாற்று போக்கை புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு இந்த தாழ்வு மதிப்பீடும் அதனாலான தாழ்வு மனப்பான்மையும் விலகலாம்.இந்த மதிப்பீடுகள் பல்வேறு அடுக்குகளை கொண்ட மனம் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கல்.ஆனால் ஒருவர் அதை உணரும் போதே பாதி சிக்கலை கடந்துவிடுகிறார்.அதன் பின் அவர் செய்ய வேண்டியது சுய பரிசீலனை.பிறகு ஆலோசனைகளும் புத்தகங்களும் உதவலாம்.ஒரு நல்ல வெற்றி அவருக்கு தன்னை குறித்த நம்பிக்கையை அளிக்கலாம். மேலே சொன்னது போல குணம் கூட முக்கிய காரணம்தான். ஆனால் தன்னுணர்வுதான் இந்த சிக்கலிலிருந்து விடுபட முதல் படி.