Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

பிம்பங்களை வீழ்த்தும் பிம்பங்கள்

 




திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.அவருடைய கட்சி நூற்றியெட்டு இடங்களில் வென்று தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இது மிகவும் வியப்பை அளிக்கக்கூடிய தேர்தல் முடிவு. அநேகமாக அரசியல் தலைவர்கள் உட்பட யாரும் இதைக் கணிக்கவில்லை.பதினைந்து சதவிகித வாக்குகளை பெறுவார் , இருபதிலிருந்து முப்பது இடங்களில் வெற்றி பெறுவார் என்றே பலரும் ஊகித்தனர். இந்த முடிவுகள் திமுவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது. திமுகவின் ஆட்சியில் தொழில் மயம் அதிகரித்திருக்கிறது.பொதுக் கட்டமைப்பு வளர்ந்திருக்கிறது.தொழில் மயமும் , நகர மயமும் திமுகவின் ஆட்சியில் நன்றாக பேணப்பட்டன.இந்த ஆட்சி என்றில்லை , எப்போதும் திமுக ஆட்சியில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை பெற்று வந்திருக்கிறது என்பது தான் உண்மை.முதலீடுகள் பெருகியிருக்கின்றன.இன்றைய சென்னை இன்றைய சென்னையாக இருப்பதற்கு திமுக பெரும் பங்காற்றிருக்கிறது.எஸ்.நாராயண் தன் திராவிடர்களின் காலம் நூலில் இதைப்பற்றி விரிவாக எழுதுகிறார்.ஒப்புநோக்க அதிமுக ஆட்சியில் தொழில் துறையின் வளர்ச்சி குறைவாகவே இருந்திருக்கிறது.

இருந்த போதும் திமுக சென்னையிலேயே தோற்றிருக்கிறது.மேலும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தோற்றிருக்கிறார்.இதை அவரது அரசியல் எதிரிகள் கூட இதை எதிர்பார்க்கவில்லை.பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஓர் ஓட்டாவது விஜய்க்கு செலுத்தப்பட்டிருக்கிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இருந்திருக்கிறது என்றாலும் அனைத்து தரப்பினரும் வாக்களித்திருக்கிறார்கள்.ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார்.திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு பக்கம் என்றால் பாரதிய ஜனதா உடன் கூட்டணி சேர்ந்த அதிமுக மறு பக்கம் என்ற மும்முனை போட்டித் தளத்தில் முப்பத்தியைந்து சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறார் என்பது பெரும் வெற்றி.

தொழில் மயம், நகர மயம் , சுகாதாரம், மருத்துவம், பள்ளிக் கல்வி, தொழிற் கல்வி  போன்ற துறைகளில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. சென்னை என்று மட்டும் இல்லாமல் தமிழகம் இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமான மாநிலங்களில் முதன்மையானது. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி விட்டது என்பதும் மெய்யே.இங்கு தொழில் , பணம், சாதிப் பற்று என்பதற்கு அப்பால் ஒரு நல்ல பொதுப் பண்பாட்டு வெளி உருவாகவில்லை. ஒரு சமூகம் நகரமயமாகும் போது அங்கு பொதுப் பண்பாட்டு வெளிகள் மலர வேண்டும்.

கிராமத்து வாழ்க்கையில் கோயில்கள் சார்ந்த பண்பாட்டுத் தளம் இருந்தது.மேலும் சாதி பலரையும் கிராமங்களில் இணைக்கிறது.இன்று பெருநகரத்தில் அவை காணாமல் போகும் போது அதை ஈடு செய்ய பொதுவான பண்பாட்டுத் தளங்கள் உருப்பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டம் உண்மையில் அத்தகைய ஒரு வெளிக்கான போராட்டம் தான்.விளையாட்டும் , கலைகளும் தான் அத்தகைய சுற்றத்தை உருவாக்கும்.இப்போது திரை இயக்குனர் பா.ரஞ்சித் சென்னையில் அத்தகையை நிகழ்வுகளை நடத்துகிறார்.இது பெரிய அளவில் இன்னும் தொடர்ச்சியாக இளைஞர்களை வெகுவாக ஈர்க்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.பல்வேறு அமைப்புகள் இதை முன்னெடுக்க வேண்டும்.அது அத்தனை எளிதானதல்ல.ஐரோப்பிய நாடுகளில் பதினேழாவது நூற்றாண்டு வரை கேளிக்கையாட்டங்கள் மாதங்கள் கடந்து நடந்திருக்கின்றன.அத்தகைய கேளிக்கையாட்டங்களில் அந்த மக்கள் தங்கள் பிறப்பின் அடிப்படையிலான சமூக அடையாளங்களை கடக்க முடிந்திருக்கிறது.அது இந்த வாழ்வை மேலும் சுவராசியமானதாக மாற்றியிருக்கிறது.

அத்தகைய பண்பாட்டுத் தளங்கள் இல்லாமல் போனது தான் விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணம். அவரே அத்தகைய பொதுப் பண்பாட்டு வெளியின் இன்மை நாயகனாக இருந்து தான் இன்று வெற்றி பெற்றிருக்கிறார்.தன்னை கரைத்துக் கொள்ளக்கூடிய விளையாட்டும் கலைகளுமே மக்களை நல்வழி படுத்தி அவர்களை மேலும் பண்பட்டவர்களாக மாற்றும்.பெருநகரங்கள் அதைச் செய்யும் போது மக்கள் மேலும் அக மகிழ்வு கொள்வர்.

நான் எப்போதும் திமுவிற்குத்தான் வாக்களித்திருக்கிறேன்.இந்த முறையும் அவர்களுக்குத் தான் ஓட்டளித்தேன்.விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜா ஐந்தாண்டுகளாக என்ன செய்தார் என்று தெரியவில்லை.ஆனால் திமுக என்பதால் வாக்கை செலுத்தினேன்.ஆனால் தவெகவை சேர்ந்த சபரிநாதன் வெற்றி பெற்றிருக்கிறார்.திமுக போன்ற கட்டமைப்பையும் , ஊடகத்தையும், பிரச்சாரகர்களையும் கொண்டுள்ள இன்னொரு அமைப்பு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான்.லாட்டரி முதலாளி மார்டின் மட்டுமே திமுகவிற்கு அறநூறு கோடிக்கு மேல் கொடையாக கொடுத்திருக்கிறார்.மார்டின் இப்போது தவெகவில் இருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் மாமனார்.

இத்தகைய பெரிய கட்டமைப்பு , பணம், ஊடக பலம், கூட்டணி எண்ணிக்கை, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தும் இருந்தும் திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.திருமாவளவன் தங்களுக்கு இந்த முடிவுகள் பேரதிர்ச்சியை அளித்திருக்கிறது என்கிறார்.விஜய் ஒரு திரைப்பட நடிகர்.முதல் முறை களம் காண்கிறார்.ஆனால் யாரும் கணிக்காத வெற்றியை பெற்றிருக்கிறார்.இன்று சித்தாந்தம் , சாதிப்பற்று, கட்சி கட்டமைப்பு என்பதை தாண்டி பிம்பம் பெரும் பங்காற்றுகிறது.மோதியை வெற்றி பெற அதே பிம்பம் தான் உதவியது.மோதிக்கு அந்த பிம்பத்தை ஊடகங்கள் உருவாக்கி வழங்கின.அவர் பெரும் வீரர் என்றார்கள்.டிரம்பிற்கு எதிராக இன்று வரை ஒரு சொல் உதிர்க்காத தீரர் தான்.விஜய் அதை சினிமா மூலம் உருவாக்கிக் கொண்டார்.

விஜய் ரஜினிகாந்த் போட்ட பாதையில் தான் நடந்து வந்தார்.சினிமாவிலும் அரசியலிலும்.ஒரு எளிய மனிதர்.பலம் பொருந்திய எதிரி.சமூக நலன் பொருட்டு சத்ருவை துணிவுடன் எதிர்த்து இறுதியில் வெற்றி பெரும் பிம்பம்.மேலும் சற்று சுட்டியான பையன்.இதைத் தான் முரட்டுக்காளை முதல் ரஜினி செய்தார்.அதை விஜய் பின்தொடர்ந்தார்.ஆனால் அரசியலில் அவர் தயங்கி நின்ற இடத்தில் அவரை தாண்டிச் சென்றார் விஜய்.

கலைஞர் கருணாநிதியும் , செல்வி ஜெயலலிதாவும் இறந்தப் பின்னர் இனி அதிமுக அடுத்த நான்காண்டுகளில் முழுவதுமாக உடைந்துவிடும் என்று எண்ணிய ரஜினிகாந்த் (அவருக்கு யோசனை கூறியது சிந்தனையாளர் குருமூர்த்தி) தைரியம் பெற்று 2017யில் தான் கட்சி தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று தேர்தலை சந்தித்து ஆட்சியை கைப்பற்றுவேன் என்றார்.அவரின் கணக்கு அதிமுக வலுவிழந்து விடும் , திமுக மட்டும் தான் , அதை பாரதிய ஜனதா கட்சியின் மறைமுக ஆதரவுடன் எதிர்த்து வெற்றி பெறலாம் என்று நினைத்தார்.

ஆனால் அவர் சிந்தித்ததற்கு மாறாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவாக ஒன்றினைந்தது.இப்போது இரு பெரும் கட்சிகளுக்கு மத்தியில் தான் போட்டி போட்டால் பத்து சதவிகித ஓட்டுகளைத்தான் பெற முடியும் என்று அவருக்கு புரிந்துவிட்டது.மேலும் பாரதிய ஜனதா அவரது கையை முறுக்கி தனது கைப்பாவையாக மாற்றிவிடும் என்பதும் அவருக்கு விளங்கியது.இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று எண்ணியவருக்கு கோவிட் கைகொடுத்தது. தமிழருவி மணியன் “நான் நொந்து போய்விட்டேன்” என்று கண்ணீர் மல்கினார்.பாரதிய ஜனதா அனுப்பிய அர்ஜூன் கிருஷ்ணமூர்த்தி மறுபடியும் அங்கேயே சென்று சேர்ந்துவிட்டார்.

கிட்டத்தட்ட விஜய்யின் கணக்கும் அது தான்.அதிமுக இப்போது உண்மையிலேயே வலுவிழந்து தான் இருக்கிறது.அதனால் அவர் தனக்கு எதிரி திமுக தான் என்ற இருமையை கட்டமைத்தார்.ஒரு எளிய புதிய மனிதன்.பலம் பொருந்திய திமுகவை எதிர்க்கிறார்.அவரது சினிமா பிம்பம் சரியாக பொருந்தி வருகிறது.பிசிறுகள் அற்ற இருமை.ஆனால் அவருக்கு பின்னால் பாரதிய ஜனதா கட்சி இல்லை. அவருக்கு மத்தியிலும் மாநிலத்திலும் எதாவது வகையில் குடைச்சல்கள் திமுகவாலும் பாஜகவாலும் இருந்து கொண்டே இருந்தன.அவரின் தந்தை அவர் கட்சி தொடங்குவதை தவிர தப்பிப்பதற்கு வேறு வழி இல்லை என்றார்.தந்தையின் சொல்லை பொருட்படுத்தாமல் இருப்பது போல பாவனை செய்த விஜய் பின்னர் பிதா காட்டிய பாதையை தேர்ந்தார்.ரஜினிகாந்த் தொண்ணூற்றியாறில் வந்திருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்றிருக்கலாம்.கிட்டத்தட்ட அதே வயதில் அதே போன்ற ஒரு வாய்ப்பை ரஜினிகாந்த் தவிர்த்த வாய்ப்பை விஜய் சரியாக பற்றிக்கொண்டார்.

விஜய் இந்த முறை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் வந்திருப்பார் என்று சொல்ல இயலாது. ஆனால் இந்த முறை முழு வீச்சுடன் போட்டியிட வேண்டும் என்ற முடிவுடன் வந்தார்.இனி திரும்புவதில்லை என்ற வாக்கை தன் ரசிகர்களுக்கு கொடுத்தார்.அதற்கு பின்னர் நடந்தவை எல்லாம் தன் போக்கில் அரங்கேறின.அவர் இத்தனை பெரிய வெற்றி பெறுவார் என்று அவர் எதிர்பார்த்திருக்க எந்தச் சாத்தியமும் இல்லை.ஏனேனில் அப்படியான தரவுகள் எங்கும் யாருக்கும் கிடைக்கவில்லை.பாரதிய ஜனதாவின் அமித் ஷாவிற்கே தெரியவில்லை.அவர் ஓரளவு பெறுவார் என்றே அவரும் ஊகித்திருப்பார்.அவருக்கு இளைஞர்கள் மத்தியிலும் , பெண்கள் மத்தியிலும் இருந்த ஆதரவு , மக்கள் கூட்டம் அனைவரையும் குழப்பியது.

இன்று வெற்று பிம்பங்கள் போதுமானவையாக இருக்கின்றன என்பதைத்தான் இந்தத் தேர்தல் காண்பிக்கிறது.ஆனால் வெற்று பிம்பங்களும் நல்ல பயன்களை அளிக்க இயலும்.விஜய்க்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத சூழலில் அவர் இடதுசாரிகள், காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி அமைக்கிறார்.இது நல்ல விளைவுகளை உருவாக்கும்.அவருக்கு இடதுசாரிகள் நல்ல அரணாக இருந்து வழி நடத்துவார்கள் என்று நம்புகிறேன்.ஆட்சியில் தங்களுக்கு பங்கு வேண்டாம் என்று இடதுசாரிகள் சொன்னது விஜய்யை வியப்படைய வைத்திருக்க வேண்டும்.அதனால் தான் செல்வப்பெருந்தகை உள்பட காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது அவர் அதற்கு மாறாக கம்யூனிஸ்டுகளை அவர்களது அலுவலகம் சென்று பார்த்தார்.

காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி வைத்தது அவர்கள் சமீப காலங்களில் எடுத்த துரிதமான சரியான முடிவு.தென்னிந்தியாவில் இதனால் அவர்களுக்கு மேலும் சில பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கும்.இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறி தவெக இடம்பெறும்.அது மட்டுமில்லாமல் இது இந்திய அளவில் மோதி என்ற வெற்று பிம்பத்தை மற்றொரு வெற்று பிம்பத்தை கொண்டு உடைக்க முடியும் என்ற சமிக்ஞையை அளித்திருக்கிறது.ஒரு வேளை தோனி போன்ற ஒருவர் (அல்லது அவரே) நாளை கட்சி தொடங்கினால் அவருக்கு இளைஞர்கள் பெருவாரியாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை இது அளித்திருக்கிறது.அவரைப் போன்றவர்கள் காங்கிரஸூடன் சேர்ந்தால் பாரதிய ஜனதாவை எளிதில் வீழ்த்தலாம்.

இன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.அதை எப்படி பெருக்குவது என்று எந்த ஆட்சியாளர்களுக்கும் புரியவில்லை.நொய்டாவில் பத்தாயிரம் மட்டுமே மாதச் சம்பளமாக பெறும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டுள்ளது.அதைக் குறித்த செய்திகள் ஊடகங்களில் எங்கும் இல்லை.தொழிலாளர் நலன் சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றப்படுகின்றன.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் திருத்தப்பட்டு மக்களுக்கு கிராமங்களில் கிடைத்த சிறு தொகையும் பறிக்கப்பட்டுள்ளது.உயர் சாதியினர் வர்க்கமாக ஒன்று திரண்டு தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த செய்யும் முன்னெடுப்புகள் தான் சட்டங்களாக முகில்கின்றன.முதலாளிகள் தங்கள் மூலதனத்தை மேலும் மேலும் குவிக்க வேண்டும் என்று வெறி கொண்டு உலகம் முழுக்க ஆட்டம் போடுகிறார்கள்.அவர்களை தடுக்கவோ கேள்வி கேட்கவோ எந்த அரசுக்கும் துப்பில்லை, திராணியில்லை, தெளிவில்லை.உலகெங்கும்.இந்தியாவில் அதில் உயர் சாதி என்ற வர்க்கமும் இணைந்து கொள்கிறது.ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுங்கிய நிலையிலேயே இருக்க வேண்டும் என்று அரசே விரும்புகிறது.ஏனேனில் அந்த அரசை நிர்ணயிப்பதே உயர் சாதியினர் தான்.

இன்றைய தேவை தொழிலாளர் நலன் , விவசாயிகளின் நலன், மருத்துவம் , சுகாதாரம் , கல்வி ஆகியவற்றில் அக்கறை கொண்ட இடதுசாரிப் பார்வை கொண்ட அரசு. அத்தகைய அரசு அமைவது மிகவும் கடினம்.ஏனேனில் முதலாளித்துவம் நீயும் முதலாளி ஆகலாம் என்ற மாயையை விரித்து மக்களை குழப்புகிறது.மேலும் நம்மை சிதறடிக்கக்கூடிய சாதியப்பற்றும் , மதப்பற்றுகளும் கடைவிரித்தாடுகின்றன.இதில் தொழில்நுட்பமும் இணைந்து கொண்டு நம்மை எதிலும் குவிக்க இயலாதவர்களாக திறன் அற்றவர்களாக சிந்திக்க இயலாதவர்களாக மாற்றியிருக்கிறது.தொழிற் மயமும் , நகர மயமும் பெருகும் சமூகங்களில் பாசிச எண்ணங்கள் மக்களை எளிதல் ஆட்கொள்கின்றன.ஏனேனில் பெருநகரத்தில் நாம் யாருமில்லாத அனாதை.நமக்கு மற்றமைகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் அதை உண்டு செரித்து நாளை கடத்திவிடுவோம்.அவன் கெட்டவன்.அவன் அயோக்கியன்.அவனை அழித்தால் உன் வாழ்வு சுபிட்சமாகும்.இது போதும்.கடலைப்பருப்பை மெல்வது போல நாம் இந்த எண்ணங்களை மெல்வோம்.ஆனால் நம் வாழ்வில் எந்த முன்னேற்றமும் நிகழாது.

இங்கு தான் நான் முன்பு சொன்ன விளையாட்டுகளுக்கும் , கலைகளுக்குமான தேவை உண்டாகிறது.அவை மற்றமை மீதான வெறுப்பை குறைக்கும்.மற்றமையை இல்லாமல் செய்யும்.ஒருவன் அக மகிழ்வு கொள்ளும் போது அவனுக்கு காழ்ப்பு குறைகிறது.உங்களது உடலும் மனமும் ஆக்கபூர்வமான இன்பத்தில் இளைப்பாறும் போது அங்கு சகோதரத்துவம் மிளிர்கிறது.

விஜய்யின் ஆட்சி தொழிலாளர்களுக்கு , விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை உருவாக்குமா என்று தெரியவில்லை.ஆனால் இந்த ஆட்சி உருவெடுத்திருப்பது நல்லது என்று தான் தோன்றுகிறது.விஜய் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு துறையில் உழைத்து பெரும் பெற்றி பெற்றிருக்கிறார்.அந்தத் துறையின் வணிகத்தை பெருக்கியிருக்கிறார்.முதன்மையான இடத்திற்கு நகர்ந்திருக்கிறார்.அது ஜனரஞ்சக ஊடகம்.அதனால் அவருக்கு அது பெரிய பலனை அளித்திருக்கிறது.இந்த உழைப்பை கூட அளிக்காத அளிக்கத் தெரியாத உதயநிதி நாளை முதலமைச்சர் ஆவதற்கு பதிலாக விஜய் முதலமைச்சர் ஆகலாம்.மேலும் அவருக்கு முழு பெரும்பான்மை கிடைக்காததால் அவர் தன் வெற்று பிம்பத்திலிருந்து வெளியே வரவும் வாய்ப்பு இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சனின் ஆரம்ப கால வாழ்வை பற்றிய சரிதை திரைப்படமாக வந்திருக்கிறது.அதில் அவர் ஓரிடத்தில் தன் வழக்கறிஞரிடம் சொல்வார்.நான் ஒரு போதும் ஊடகங்களை சந்திக்க மாட்டேன்.நேர்காணல்கள் அளிக்க மாட்டேன்.அது என்னைப் பற்றிய ஒரு மாய வெளியை உருவாக்கும்.என் வாழ்க்கை பற்றிய புனைவுகள் பெருக்கும்.அது பயன் அளிக்கும் என்கிறார்.அவருக்கு அது உதவியது என்றாலும் அவருக்கு அது தீங்கையும் பிற்காலத்தில் கொடுத்தது.ஊடகங்களை சந்திக்காமல் இருப்பது, உரையாடல்களை தவிர்ப்பதை மோதியும் செய்கிறார்.ஜெயலலிதா செய்தார்.அது பயன்களைத் தரும்.ஆனால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.அந்த வகையில் கலைஞர் கருணாநிதி போல இருக்க வேண்டும். பெ.சண்முகம் விஜய் எதையும் உடைத்து பேச வேண்டும் என்றார்.விஜய்க்கு இடதுசாரிகள் தலைமைக்கான நல்ல விழுமியங்களை கற்றுத் தரலாம்.ஏராளமான நல்ல உதாரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் ஆட்சி பொறுப்பில் இருந்த பதிமூன்று ஆண்டுகள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.திரைப்படங்களுக்கு எழுதினார், புத்தகங்களை வெளியிட்டார், தினமும் முரசொலி அலுவலகம் சென்றார், குங்குமம் பத்திரிக்கையை நடத்தினார், அவ்வவ் போது போராட்டங்களையும் நடத்தினார், கட்சியை தலைமை தாங்கினார்.கட்சி சிதறாமல் இருந்தது.அவர் பதறவில்லை.ஒரு முறை எண்பதில் இந்திரா காந்தியின் துணைக் கொண்டு எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்தார்.அதில் தோல்வியுற்ற பின் அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.அவருக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது.எண்பத்தியொன்பதில் தேசிய அரசியலில் பங்கு பெற்று விபிசிங் ஆட்சி வருவதற்கு துணை நின்றார்.அவருடைய பேரன் உதயநிதி இந்த முறை நேரடியாகவே மறைமுகமாகவோ தான் ஆட்சியில் இல்லாவிட்டால் இனி தன் வாழ்வில் அதிகாரத்தையே பார்க்க முடியாது என்று கதறுகிறார்.தன் தந்தை மீது உப்பு  மூட்டை சவாரி செய்து அப்படியே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பார்த்தவர் இனி தன்னால் எம்எல்ஏ கூட ஆக முடியாது என்று தவித்து தக்காளி விற்கிறார்.பாவம் , அவருக்கு அவர் மீதும் நம்பிக்கை இல்லை.இந்த முறை விட்டால் இனி கட்சியும் இல்லை ஆட்சியும் இல்லை என்பது அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது.திமுகவிற்கு ஒரு வேளை உதயநிதி இல்லாத ஒருவர் தலைவராக பிற்காலத்தில் வந்தால் அது உயிர்தெழும் சாத்தியமிருக்கிறது.அதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் உருவாக்கியிருக்கும் நிலக்கிழார்கள் மறைந்து திமுகவின் ஆரம்ப கால எழுச்சி மறுபடியும் மலரும் என்றால் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது.இல்லையென்றால் திமுகவிற்கு இனி உதயம் இல்லை.

இப்போதைக்கு விஜய்யின் ஆட்சிக்கு வாழ்த்துகள்.நல்லாட்சி வழங்கட்டும்.மக்கள் செழிப்புறட்டும்.

குறிப்பு – திருமாவளவன் விஜய்க்கு ஆதரவு அளிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.நேரம் – மே 9 – காலை 10:35. நிகழும் சம்பவங்களை பார்த்தால் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம் என்பது தெளிவாகிறது.அதிமுக திமுக கூட்டணியில் ஆட்சி அமைந்தால் அதில் திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் பங்கெடுத்தால் பங்குனி வெயில் பல்லைக் காட்டிக் கொண்டு அடிப்பது போல ஒரே ஜோராக இருக்கும்.தவெகதான் பாஜாவின் பி டீம் என்றார்கள்.நடக்கும் கூத்தைப் பார்த்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவெக தவிர அனைத்தும் பாஜகவின் பி டீம்கள் தான் போலும்.அண்ணா வளர்த்த கலைஞர் கட்டிக்காத்த கட்சி.இப்படி கிடந்து தவிப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.1949யில் தொடங்கப்பட்ட திமுக 1967யில் ஆட்சிக்கு வந்தது.அவர்கள் தேர்தல் அரசியலிலேயே 1957யில் தான் பங்கெடுத்தார்கள்.பொறுமையும் தீவிரமும் துணிச்சலும் சித்தாந்தமும் அவர்களுக்கு இருந்தது.ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றதை பார்த்த போது வருத்தமாக இருந்தது.இப்போது உதயநிதி சொல்வதற்கு அவர் செவி கொடுக்கிறார் என்பதை கவனிக்கும் போது அந்த வருத்தம் மறைந்து விட்டது.

போர் நிறுத்தம்

 

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் அல்யோஷாவிடம் நாளையின் பொற்காலத்தை முன்னிட்டு இன்று குழந்தைகள் துயரத்துக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பான். புரட்சிகள், வருங்காலத்தின் வசந்தங்களுக்காக இன்று குழுந்தைகள் துயரத்துக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்க்கிறான் இவான்.

பாலஸ்தீனத்தில் பிறந்த குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.வீடுகளை இழந்து தாய் தந்தையரை இழந்து அனாதைகளாகின்றனர்.மிகப்பெரிய வன்முறைக்கான சாட்சியாக இருக்கின்றார்கள்.உயிர் பிழைத்தவர்களில் பலர் உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழந்து நிற்கின்றனர்.இந்தக் குழந்தைகள் என்ன பிழை செய்தனர். நாளை இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் குழந்தைகளை கொல்வதை எதன் அடிப்படையிலும் ஏற்க இயலாது.

ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸ் ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதல் வெற்றிடத்தில் நிகழவில்லை என்று சொன்னார்.அவர் அதைச் சொன்னதற்காக கண்டிக்கப்பட்டார்.இஸ்ரேல் அவர் பணியிலிருந்து நீங்க வேண்டும் என்று கூறியது.

இந்தப் போர் நிறுத்தப்பட்டு பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் நிலமும் உரிமையும் திரும்ப அளிக்கப்பட வேண்டும்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும்.பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதிகளில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் தங்கள் இடங்களை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.பாலஸ்தீனத்தின் குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம் இஸ்ரேலின் எந்த தலையிடும் இல்லாத முழுமையான தனி நாடாக அனைத்து உரிமைகளும் கொண்ட தனி நாடாக முகிழ வேண்டும். இவை நிகழ வேண்டும்.

இன்று உலகம் இந்த குரூரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்தக் குழந்தைகள் நாளை வளர்ந்து நீங்கள் எல்லோரும் என்ன பிடுங்கிக்கொண்டிருந்தீர்களா என்று கேட்பார்கள்.உங்கள் கைகளில் எங்களின் ரத்தக்கறை படிந்திருக்கிறது என்று கத்துவார்கள்.

அவர்களின் துயரத்தில் அனைவருக்கும் பங்குண்டு. கூட்டுப் பாவம்.நாம் நாகரீகம் அடைந்து விட்டோம் என்றெல்லாம் பலர் பேசும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.நாம் நாகரீக குகைவாசிகள் என்கிறார் ஆத்மாநாம்.ஆத்மாநாம் சொல்கிறார் "நம் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான், நம் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள், நாம் வேடிக்கை பார்க்காமல் ஏதாவது செய்யலாம், ஆத்திரப்படலாம், கோபப்படலாம், குண்டர்களின் வயிற்றை கிழிக்கலாம்.அல்லது மக்களிடம் விளக்கலாம், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கலைவதை பார்த்தபின் அவர்களை வேசியின் மக்களே என்று கூவலாம்.பிச்சைகாரனாய்ப் போய் கத்தலாம்.நம் கத்தல் பெருவெளியைக் கடக்கலாம்.மூக்கணாங்கயிற்றுடன் பிணைத்திருக்கும் கயிற்றை அவிழ்த்து இருப்பிடம் விட்டு நகரலாம்.குறைந்தபட்சம் பேனாவின் முனையின் உரசல் கேட்கும் வகையில் எழுதலாம்."

நாம் என்ன செய்யப் போகிறோம். என்ன செய்ய இயலும்.நாளை மற்றோரு நாளே என்று கடந்து போவோம்.வரும் ஆண்டு பாலிஸ்தீனர்களுக்கு உண்மையான புத்தாண்டாக அமைய வேண்டும்.அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சாத்தியங்கள் உருவாக வேண்டும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஆக்கங்களில் யூதர்கள் பற்றி எங்கும் நல்ல விதமாக எழுதப்படவில்லை.ஒரு வகை கிண்டல் , கேலி இருக்கும்.ஐரோப்பாவில் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் அவர்களுக்கு எதிரான ஒரு மனநிலை இருந்ததை இலக்கியத்தில் அறிய முடிகிறது.அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தனர்.அந்த துயரத்தை அறிந்தவர்கள் அதே துயரத்தை இன்னொரு இனத்திற்கு அளிக்கின்றனர்.இவை மாற வேண்டும்.

மாதிகா மக்களுடன் கீதா ராமசாமி


கீதா ராமசாமி


செயல்பாட்டாளர் கீதா ராமசாமி தன் இப்ராஹிம்பட்டினம் அனுபவங்களை மையப்படுத்தி நிலம்,தூப்பாக்கிகள்,சாதி,பெண் (Land,Guns Caste and Woman)என்ற நினைவுக்குறிப்புகள் நூலை எழுதியுள்ளார்.கீதா ராமசாமியின் பெற்றோர் தமிழர்கள் என்றாலும் அவர்களது பூர்விக இல்லங்கள் கேரளத்தில் இருந்தன.கீதா ராமசாமியின் தந்தை பொறியாளர்.அவருக்கு வேலையின் பொருட்டு இடப்பெயர்வுகள் இருந்தன.இதனால் கீதாவும் அவரது நான்கு சகோதரிகளும் பம்பாயிலும் சென்னையிலும் பின்னர் ஐதராபாத்திலும் பள்ளிப் படிப்பை படித்தனர்.சென்னையில் முதலில் சாந்தோமிலிருந்த ரோசரி கிறிஸ்துவப் பள்ளியில் படித்தவர் பின்னர் ராயப்பேட்டையிலிருந்த கேந்திரிய வித்யாலாவில் சேர்ந்தார்.அவருடைய பதினைந்தாவது வயதில் அவருடைய தந்தைக்கு ஐதராபாத்திற்கு மாற்றலானது.கீதா அங்கு கேந்திரிய வித்யாலாவில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.மத்திய உயர்நிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) புகுமுக தேர்வில் அனைத்திந்திய அளவில் தரவரிசையில் பத்து இடங்களுக்குள் தேர்வானார்.அன்று மத்திய கல்வி வாரியத்தின் தேர்வில் பத்து இடங்களுக்குள் வந்தவர்கள் ஐஐடியில் விண்ணப்பித்தால் இடம் கிடைப்பது உறுதி.அவர் ஐஐடியில் பொறியியல் படிக்க விரும்பினார்.ஆனால் அவருடைய தந்தை தன்னிடம் அந்தளவு பணம் இல்லை என்றும் மற்றொரு சகோதரி மருத்துவம் படித்து வருவதாலும் அவரை பொறியியல் படிக்க வைப்பது கடினம் என்று கூறி மறுத்துவிட்டார். கீதா ஐதராபாத்தில் கோடி பெண்கள் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்தார்.பின்னர் அங்கு தொடர விருப்பமில்லாமல் இரண்டாவது வருடம் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அறிவியல் பல்கலைக் கல்லூரியில் விண்ணபித்து இளங்கலை படிப்பைத் தொடர்ந்தார்.

1953ஆம் ஆண்டு பிறந்த கீதா ஏழுபதுகளில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.கீதா சேர்ந்த அந்த வருடம் ஜார்ஜ் ரெட்டி என்ற மாணவர் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களால் கொல்லப்பட்டார்.ஜார்ஜ் ரெட்டி முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் (பிடிஎஸ்யூ) என்ற இடதுசாரி அமைப்பை உருவாக்கியிருந்தார்.அந்த அமைப்பில் தான் பின்னர் கீதா இணைந்தார்.ஜார்ஜ் ரெட்டியின் சகோதரர் சிறில் ரெட்டி அவருக்கு அங்கு அறிமுகமானார்.ஏழுபதுகள் மாணவர்கள் பெருமளவில் நக்ஸல்பாரி அமைப்புகளில் இணைந்த காலம்.உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் நக்ஸல்பாரியின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.கீதா சந்திரா புல்லா ரெட்டியின் சிபிஐ(எம் எல்) அமைப்பில் இணைந்தார்.இளங்கலை முடித்து முதுகலையும் அங்கேயே படித்தார்.அவரது பெற்றோர் அவரது அரசியல் நடவடிக்கைகளால் நிம்மதியிழந்தனர்.அவருடைய தந்தை சென்னைக்கு மாற்றல் வாங்கி கீதாவையும் உடன் வர வற்புறுத்தினார்.கீதா ஐதராபாத்திலேயே இருக்க பிடிவாதமாக இருந்தார்.அவரை விட்டுவிட்டு குடும்பம் சென்னை சென்றது.

1975யில் அவசரக் காலம் அமுலானது.கீதாவும் மற்ற தோழர்களும் தலைமறைவாகினர்.இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கட்சி பற்றி இருந்த தோற்ற மயக்கங்கள் புலப்பட்டன.சந்திரா புல்லா ரெட்டி குடும்பத்துடன் ஒன்றாக தங்கும் போது அவர் அவரது மனைவியை நடத்தும் விதத்தை பார்த்து குழம்புகிறார் கீதா.சந்திரா புல்லா ரெட்டி நாம் (தலைவர்கள்) X அவர்கள் (மக்கள்) என்ற சொல்லாடலை தொடர்ந்து பயன்படுத்துகிறார்.கட்சியில் இருந்த இறுக்கமான படிநிலைகள் கீதாவுக்கும் அவரைப் போன்ற வேறு மாணவர்களுக்கும் புரியத் தொடங்குகிறது.இதற்கிடையில் ஒரு முறை கீதாவின் செல்திசையால் மிகுந்த கவலைக்கொண்ட அவரது பெற்றோர் அவரது அன்னைக்கு உடல் நலம் சரியில்லை என்று சொல்லி அவரை சென்னைக்கு வரச் சொல்கிறார்கள்.அவரும் செல்கிறார்.அங்கு சென்ற பின்னர் அது ஒரு நாடகம் என்று அவருக்குத் தெரிகிறது. அவரை ஒரு தனியறையில் அடைக்கிறார்கள். உளவியில் மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்று மின் வலிப்பு சிகிச்சை அளிக்கிறார்கள்.வாயில் உமிழ்நீருடன் சிகிச்சை முடிந்து வந்த சித்திரத்தை அவர் நினைவுகூர்கிறார்.அந்த சிகிச்சை அவரை மிகவும் பலவீனப்படுத்துகிறது.எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுடனே இருப்பதாக கீதா அவர்களுக்கு உறுதி அளிக்கிறார்.அதன் பின் அவரை தனியறையில் அவரது பெற்றோர் பூட்டி வைக்கவில்லை.ஒரு முறை வீட்டை விட்டு தப்பிக்க முயலும் போது ஐஐடி வளாகத்தில் வந்து அவரது தந்தை அழைத்துச் செல்கிறார். இரண்டாவது முறை அவரது நண்பர்களின் முயற்சியால் தப்பித்து விடுகிறார்.

மின் வலிப்பு சிகிச்சை அவரில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.அவர் கணிதத்தில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர்.சிகிச்சைக்கு பின்னர் அந்த நிபுணத்துவம் தன்னிடமிருந்து நிரந்தரமாக போய்விட்டது என்கிறார் கீதா.சென்னையில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்பே கீதாவும் சிறில் ரெட்டியும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்கள்.அவர் ஐதராபாத் திரும்பிச் சென்ற பின்னர் அவரால் சிறில் ரெட்டியைக்கூட முதலில் அடையாளம் காண இயலவில்லை.ஒரு நரம்பியல் மருத்துவர் அவரை பரிதோசித்து விட்டு நினைவுகளின் சில பகுதிகளை அவர் நிரந்தரமாக இழந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.1975 இறுதியில் கட்சி தலைவர்களின் முன்னிலையில் சிறில் ரெட்டியும் கீதாவும் திருமணம் செய்து கொண்டார்கள்.அப்போது சிறில் ரெட்டி உஸ்மானியாவில் பொறியியல் படிப்பு முடித்திருந்தார்.

கீதா குடும்பத்தினரிடமிருந்து விலகிவிட்டார்.கட்சியின் செயல்பாடுகளால் கசப்புற்று அவரும் சிறில் ரெட்டியும் கட்சியிலிருந்து வெளியேறினர்.கட்சியிலிருந்து வெளியேறியது அவர்களை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கியது.அங்கிருந்து சென்று சத்திஸ்கர்,டெல்லி,காஸியாபாத் ஆகிய நகரங்களில் தங்கினர்.சிறில் ரெட்டிக்கு டெல்லியில் வேலை கிடைத்தது.காஸியாபாத்திலிருந்த இருந்த பால்மீகி சமூகத்தின் பிள்ளைகளுக்கு அவர்கள் ஆங்கிலம் கற்றுத் தந்தனர். அவசரக்காலம் முடிந்து சில வருடங்கள் கழித்து 1980யில் அவர்கள் ஐதராபாத் திரும்பினர்.வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டிய இடத்தில் இருவரும் இருந்தனர்.

சிறில் ரெட்டி சட்டம் படிக்க முடிவெடுத்தார்.கீதா ஐதராபாத் புக் டிரஸ்ட் என்ற பதிப்பு நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.அதுவரை தெலுங்கில் வராத தலித் மார்க்ஸிய கண்ணோட்டம் கொண்ட புத்தகங்களை கொண்டு வந்தார்கள்.அவர்களின் புத்தகங்கள் நன்கு விற்பனை ஆகின. டேவிட் வெர்னர் எழுதிய Where there is no doctor என்ற புத்தகத்தை தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டனர்.அடுத்த நான்கு வருடங்களில் அவருடைய நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டது.

சிறில் ரெட்டியும் சட்டம் முடித்து வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.ஏழை மக்களுக்கு சட்ட ரீதியில் உதவக்கூடிய சலஹா என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார்.1984யில் ஒரு புத்தகத்தின் வேலையை முன்னிட்டு கீதா ரெங்காரெட்டி மாவட்டத்தில் இருந்த இப்ராஹிம்பட்டனம் தாலுக்காவிற்கு பயணித்தார்.ஐதராபாத்திலிருந்து முப்பது கீலோமீட்டர் தொலைவில் இருந்தது இப்ராஹிம்பட்டினம் தாலூக்கா.

தெலுங்கானாவில் ரெட்டிகளிடமே நிலம் இருந்தது.அங்கே பெரும்பாலும் விவசாயக் கூலியாக வேலை செய்தவர்கள் மாதிகா இனத்தவர்கள்.தெலுங்கானாவில் ரெட்டிகளிடம் இருந்த நிலங்கள் வாழையடி வாழையாக அவர்களுக்கு வந்தவை அல்ல.தெலுங்கானாவில் நிஜாம் ஆட்சி முடிந்து இந்திய அரசு தெலுங்கானாவை கைப்பற்றிய போது அங்கிருந்த இஸ்லாமிய நிலச்சுவான்தார்களிடம் பறித்தவை தான் அந்தச் சொத்துகள்.பத்து லட்சம் கேள்விகள் – பெண்களின் நலம், பண்பாடு , அரசியல் என்ற புத்தகப் பணியின் பொருட்டு இப்ராஹிம்பட்டினம் சென்ற கீதா அங்கு மாதிகா இனத்தவர்களுடன் இணைந்து பணி புரிய ஆரம்பித்தார்.மாதிகா இனத்தவர்கள் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.இப்ராஹிம்பட்டினத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் அவர் பயணித்த அடுத்த பத்து வருடங்கள் கீதா வாழ்வின் பொற்காலமாக அமைந்தது.

இப்ராஹிம்பட்டினத்தில் ஜலல்மியாபள்ளெ என்ற கிராமத்தில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவரின் வீட்டில் முதலில் தங்கினார் கீதா.அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சைக்கிளில் இலக்கற்று பயணித்தார்.பிறகு குங்கல் என்ற கிராமத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.கிராமத்து மக்களுடன் புத்தகப் பணியை காரணமாக கூறி உரையாடினார்.பெருநகரங்களில் மத்திய தர வர்க்கத்தில் வளர்ந்த கீதா முதல் முறையாக கிராம அமைப்பையும் நிலப்பிரபுத்துவத்தையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் நேரடியாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.




டிசம்பர் 1984யில் ஒரு முறை ஐதராபாத் சென்ற கீதா அங்கு சிறில் ரெட்டி நடத்திய பயிலரங்கில் கலந்து கொண்டார்.குறைந்த பட்ச ஊதியம், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றை பற்றி அந்த கருத்தரங்கில் விவாதிக்கிறார்கள்.அப்போது தான் இப்ராஹிம்பட்டினம் தாலுக்காவில் இருக்கும் மாதிகா மக்கள் பெறும் ஊதியத்தையும் அளிக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச ஊதியத்தையும் ஒப்பிட்டு பார்க்கிறார்.அவர் தங்கியிருந்த குங்கல் கிராமத்தின் அருகிலிருந்த சீதத் கிராமத்தில் மாதிகா ஆண்களுக்கு ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு ரூபாயும், பெண்களுக்கு எட்டாணாவிலிருந்து இரண்டு ரூபாயும் , பண்ணையடிமைகளுக்கு இரண்டு ரூபாயும் ஊதியமாக கொடுக்கப்பட்டன.குறைந்த பட்ச ஊதியம் ஆண்களுக்கு எட்டு ரூபாய் தர வேண்டும் என்று சொன்னது.இந்தச் சட்டத்தை பற்றி சீதத் கிராமத்தின் மாதிகா மக்களிடம் விளக்கிச் சொன்னார் கீதா.இந்த அறிதல் கிராமத்து மக்களை பற்றிக்கொள்கிறது.மறுநாள் மாதிகா மக்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.இதை சற்றும் எதிர்பாராத நிலச்சுவான்தார்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள்.மூன்றே நாட்களில் சமரசத்திற்கு தயாராகிறார்கள்.அதன் படி பெண்களுக்கு மூன்றுமுதல் ஐந்து ரூபாயும் , ஆண்களுக்கு ஆறு முதல் ஏழு ரூபாயும் , பண்ணையடிமைகளுக்கு மாதத்திற்கு அறுபதிலிருந்து எண்பது ரூபாயும் அளிக்கப்படும் என்று முடிவாகிறது.

முதல் வெற்றி மாதிகா மக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.இந்த வெற்றியை அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் பண்ணையடிமைகள் விவசாயக்கூலிகளுடன் இணைய வேண்டும். ஏனேனில் பண்ணையடிமைகள் இருக்கும் வரை நிலச்சுவான்தார்களுக்கு வேலை செய்ய ஆட்கள் இருந்தார்கள்.அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடியாது.கொத்தடிமை தடைச் சட்டத்தை பற்றி பண்ணையடிமைகளிடம் விளக்குகிறார்கள்.இவர்கள் முதலில் நிலச்சுவான்தார்களை எதிர்க்க அஞ்சுகிறார்கள்.பின்னர் சிலர் மட்டும் தாசில்தாரிடம் மனு அளிக்கிறார்கள்.மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கிறார்கள்.மாவட்ட ஆட்சியர் வரை விஷயம் சென்று விட்டதால் தாசில்தார் கிராம பஞ்சாயத்துகளில் இது குறித்து விசாரிக்கிறார். கிராம பஞ்சாயத்துகளாலும் நிலச்சுவான்தார்களாலும் பண்ணையடிமைகள் மிரட்டப்படுகிறார்கள்.பலர் பின்வாங்குகிறார்கள்.இறுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் உறுதியாக நின்ற பத்து பதினைந்து பேர் மட்டும் பண்ணையடிமை முறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இது மற்றவர்களுக்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

இந்த இரண்டு வெற்றிகள் இப்ராஹிம்பட்டினம் விவசாயக்கூலிகளிடம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.இனியும் அவர்கள் உதிரியாக செயல்பட இயலாது என்று முடிவு செய்து தொழிற்சங்கத்தை உருவாக்குகிறார்கள்.இப்ராஹிம்பட்டினம் தாலூக்கா விவசாயக் கூலி சங்கம் என்று அதை பதிவு செய்கிறார்கள்.அதற்கு சீதத் கிராமத்தை சேர்ந்த சங்கரய்யா தலைவராக பொறுப்பேற்கிறார்.கீதா பொதுச் செயலாளராகிறார்.இந்தச் சங்கம் இரண்டு விஷயங்களை தீவிரமாக எடுத்துச் செல்கிறது.ஒன்று குறைந்த பட்ச ஊதியம் மற்றது பண்ணையடிமை ஒழிப்பு.இரண்டிலும் சட்டத்தின் துணைக்கொண்டு அவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கின்றன.

1984யில் என்.டி.ஆர். ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி பொறுப்பேற்றார்.1985யில் வருவாய்த் துறையில் முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார்.அந்த மாற்றத்தின் மூலம் தாலூக்காக்கள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டன.தாலூக்காவிற்கு தாசில்தார் இருப்பது போல மண்டலங்களுக்கு மண்டல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இப்ராஹிம்பட்டினம் தாலூக்கா இப்ராஹிம்பட்டினம்,மஞ்சள் , யாச்சரம், மகேஸ்வரம்,கண்டுகூர் என்று ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.பண்ணையடிமை முறைக்கு எதிராக மண்டல் அதிகாரிகளிடம் நிறைய கிராம மக்கள் மனு அளிக்கிறார்கள்.அதே நேரத்தில் அவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுகிறார்கள்.மண்டல் அதிகாரிகள் மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத போது உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்கிறார்கள்.மறுபடியும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்குகிறது.பண்ணையடிமை முறையிலிருந்து விடுவிக்கப்படுகையில் ஒவ்வொருவருக்கும் நிவாரணத் தொகையாக ஐநூறு ரூபாயும் புனர்வாழ்வுக்கு நான்காயிரம் ரூபாயும் அளிக்கப்பட்டது.குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் துணைக்கொண்டு பின் ஊதியமும் கணக்கிடப்பட்டு கொடுக்கபட்டது.

இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவிலிருந்த யாச்சரம் மண்டலத்தில் சங்கத்தினர் செய்த பணிகளையும் அதில் கிடைத்த வெற்றிகளையும் தாலூக்காவின் பிற மண்டலங்களில் இருக்கும் மக்கள் அறிய வருகிறார்கள்.இவர்கள் தங்கள் சங்கத்தின் நிதித்தேவைகளுக்காக ஒவ்வொரு உறுப்பினரிடமும் ஒரு ரூபாய் வசூலிக்கிறார்கள்.மேலும் தனி நபர்களிடம் கீதா ஓரளவு நிதி வசூலிக்கிறார்.ஆனால் எந்த நிறுவனத்திடமிருந்தும் அமைப்பிடமிருந்தும் பணம் பெற்றுக்கொள்வதில்லை என்பதில் கீதா உறுதியாக இருந்திருக்கிறார்.பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டு குழந்தைகள் விடுவிக்கப்பட்ட பின் அவர்களுக்கான கல்வி குறித்த கேள்வி உருவாகிறது.அந்தக் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் நல விடுதிகளில் சேர்க்கப்பட்டனர்.ரெங்கா ரெட்டி, மகபூப்நகர், நல்கொண்டா மாவட்டங்களிலிருந்த சமூக நல தங்கும் விடுதிகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்ராஹிம்பட்டினம் விவாசயக் கூலி சங்கம் பண்ணையடிமை ஒழிப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றிற்கு மட்டுமே போராடினார்.இந்த மண்டலங்களில் உள்ள மக்கள் நிலம் சார்ந்த சில பிரச்சனைகளை கொண்டு வந்த போது முதலில் சங்கத்தினர் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கினர்.பல அரசாங்க நிலங்களை , நில உச்சவரம்பு சட்டத்தின் வழி பெறப்பட்ட நிலங்களை அந்தப் பகுதியின் பண்ணையார்கள் தங்களின் நிலமாகவே பாவித்து வந்தார்கள்.கண்டுகூர் மண்டலத்தில் ஜாபர்குடெம் கிராமத்தில் புபால் ரெட்டி என்ற பண்ணையார் 107 ஏக்கர் அரசாங்க நிலத்தை தன்னுடைய நிலம் என்று கூறி அந்த நிலத்தின் மீது தடை உத்தரவு பெற்றிருந்தார்.இத்தகைய சூழலில் 1986ஆம் ஆண்டு அந்த நிலத்தில் பயரிட ஜாபர்குடெம் மக்கள் முடிவு செய்தார்கள்.

ரெட்டிகளுக்கும் கிராம மக்களுக்கும் நிகழ்ந்து வந்த பூசல்களை கவனித்து வந்த அரசு நிர்வாகம் நிலைமை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவை பிறப்பித்தது.ஆனால் அந்த நிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததின் வழி அந்த நிலத்தின் உடைமையை பண்ணையார்கள் இழந்தனர்.கிராமத்து மக்கள் பயிரிட்ட சோளத்தை வேலையாட்களை வைத்து அறுவடை செய்ய மண்டல் அதிகாரி உத்தரவிட்டார்.வேலையாட்களுக்கான ஊதியத்தை கிராமத்து மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.ஆனாலும் நில உடைமை பண்ணையாரிடமிருந்து பறிக்கப்பட்டதும் கிராமத்து மக்கள் அங்கு பயிர் செய்து அறுவடை செய்ய இயன்றதும் முக்கிய வெற்றிகளாக அமைந்தன.யாராலும் எதிர்க்க இயலாத புபால் ரெட்டி குடும்பத்தை ஜாபர்குடெம் மக்கள் எதிர்த்து வெற்றி பெற்றனர் என்பது அங்குள்ள பிற கிராமத்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சமிக்ஞையாக அமைந்தது.

அதே போல கண்டுகூர் மண்டலில் இருந்த புலிமாமிடி என்ற கிராமத்தில் இராமச்சந்திர ரெட்டியின் குடும்பத்தினருக்கு இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம் இருந்தது.ஆந்திர நில உச்சவரம்பு சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகப்பட்சம் ஐம்பத்தியைந்து ஏக்கர் தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.இதனால் இராமச்சந்திர ரெட்டி நிலங்களை பினாமிகளுக்கு மாற்றினார்.ஒரே நாளில் 50B என்ற விற்பனை பத்திரத்தின் மூலம் எண்ணூறு ஏக்கர் நிலம் பினாமிகளுக்கு மாற்றப்பட்டது.240 ஏக்கர் நிலத்தை கோயில் பெயருக்கு மாற்றினார்.1986யில் புலிமாமிடி ஊர் மக்கள் இராமச்சந்திர ரெட்டி குடும்பத்திற்கு எதிராக சமூக விலக்க போராட்டத்தை மேற்கொண்டார்கள்.அவர்கள் வீட்டிற்கு பால் விநியோகம், முடி திருத்தம், சமையல், துணி துவைத்தல் , வீடு சுத்தம் செய்தல் என்று எந்த பணிக்கும் ஆட்கள் செல்லவில்லை. அவர்களுக்கு ஏழு கோழி பண்ணைகள் இருந்தன.மக்கள் போராட்டத்தால் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டன.அவர்கள் அனைவரும் சமூக விலக்கத்தை எதிர் கொள்ள இயலாமல் ஐதராபாத் சென்றனர்.

ஜாபர்குடெம் , புலிமாமிடி ஆகிய கிராமங்களில் சங்கத்திற்கு போராட்டங்கள் வழி முன்னகர்வு சாத்தியப்பட்டது. அதே போல இப்ராஹிம்பட்டினம் மாவட்டத்தில் மண்டலங்கள் வாரியாக 1954யில் நில அளவீடு செய்து உருவாக்கப்பட்ட காஸ்ரா பஹானி என்ற நில ஆவணங்களும்  வரைபடங்களையும் பெறப்பட்டன.சங்கத்து உறுப்பினர்கள் நில ஆவணங்களையும் வரைபடங்களையும் வைத்து நிலங்களை அளந்து பண்ணையார்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்தார்கள்.மக்கள் வாய்மொழியில் சொன்ன ஆக்கிரமிப்புகளும் ஆவணங்கள் வழி கண்டறிந்தவையும் பொருந்தி போயின.

இதற்கு அடுத்தபடியாக அவர்கள் குத்தகைகாரர் பாதுகாப்புச் சட்டத்தின் படி குத்தகைகாரர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.மேலே உள்ள மூன்று விஷயங்களுக்கும் நான்காவதுக்கும் முக்கிய வித்யாசம் இருந்தது.முதல் மூன்றில் அந்தப் போராட்டங்கள் வழி பயன் பெறுபவர்கள் தலித் சமூகத்தினராக இருந்தனர்.முக்கியமாக இப்ராஹிம்பட்டினரத்தின் மாதிகா இனத்து மக்கள். ஆனால் நான்காவது போராட்டம் தனி ஒருவருக்காக செய்யப்பட வேண்டிய போராட்டமாக இருந்தது.இதில் பெரும்பாலும் அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.முதலில் சங்கத்தினர் இதில் தலையீட தயக்கம் காட்டினர்.பின்னர் பல்வேறு மக்கள் தொடர்ந்து இதன் பொருட்டு அவர்களை அணுகவும் அதன் முக்கியத்துவத்தையும் நியாயமான உரிமை தான் என்ற அடிப்படையிலும் அத்தகைய மீட்பு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.அத்தகைய மக்களுக்கு மறுபடியும் நிலத்தின் உரிமையை பெற சங்கம் வழக்குகள் தொடுத்தது.

அரசாங்க நில ஆக்கிரமிப்பு, பண்ணையடிமை ஒழிப்பு , குறைந்த பட்ச ஊதியம் ஆகிய போராட்டங்களில் அவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன.புலிமாமிடி, மீர்கான்பேட், தண்டமல்காபுரம் ஆகிய இடங்களில் பண்ணையார்கள், காவல் துறை, வருவாய்த்துறை , அரசியல்வாதிகள் என்ற பல வழிகளில் இடர்கள் இருந்தன.மக்கள் காவல் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டனர்.அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன.அனைத்து தருணங்களிலும் கீதா அவர்களை உடனடியாக ஜாமீனில் கொண்டு வந்தார்.கீதாவின் கணவர் சிறில் ரெட்டி தன்னுடன் பணிபுரிந்த வழக்கறிஞர்களுடன் இணைந்து உருவாக்கிய சலஹா என்ற அமைப்பின் வழி அவர்களுக்கு சட்ட உதவிகள் கிடைத்தன.

இத்தகைய போராட்டங்கள் மட்டுமில்லாமல் மக்கள் நலம் சார்ந்த முன்னெடுப்புகளையும் சங்கத்தினர் முன்னெடுத்தனர்.பல வருடங்கள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் கல்விக்காக செய்யுதா (கை கொடு) என்ற சொசைட்டியை உருவாக்கினார் கீதா.இதன் வழி அவர்கள் ஏழாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுத முடிந்தது.இந்த அமைப்பின் வழி இருபத்தியைந்து முறை சாரா கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டன.இந்த அமைப்பிற்கு அரசாங்கத்தின் நிதி பெறப்பட்டது.சங்கத்தின் முழு நேர உறுப்பினர்கள் இதில் மேற்பார்வையாளராக பணி புரிந்தார்கள்.அதன் வழி அவர்களுக்கு ஊதியம் கிடைத்தது.பகுதி நேர ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தார்கள்.இத்தகைய முயற்சிகள் வழி இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டது.இவர்களில் சிலர் பின்னர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாகவும் கிராம பஞ்சாயத்து தலைவர்களாகவும் வந்தார்கள் என்று குறிப்பிடுகிறார் கீதா.

மேலும் மக்களுக்கு கிராமத்தில் செய்ய சாத்தியப்பட்ட தொழில்களுக்கு கடனுதவி பெற உதவினர்.யாச்சரம் மண்டலில் இருபத்தி மூன்று ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு இருபத்தி மூன்று முன்னாள் பண்ணையடிமைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன.இந்த இருபத்தி மூன்று ஏக்கர் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு , பால் பண்ணை அமைக்கப்பட்டன.கூட்டுறவு அமைப்பின் வழி குடும்ப கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு அதன் வழி நிலம் பண்படுத்தப்பட்டது.இப்ராஹிம்பட்டினம் மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக கீதா தனது மருத்துவத்துறை நண்பர்களை வாரம் ஒருமுறை இப்ராஹிம்பட்டினத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.பொதுநல மருத்துவர்கள் வாரம் ஒரு முறை ஐதரபாத்திலிருந்து இப்ராஹிம்பட்டினம் வந்து சென்றார்கள்.மருத்துவ முகாம்களும் நிகழ்த்தப்பட்டன.மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கம் தொடங்கப்பட்டு அவர்களுக்கான உரிமைகளை பெற முயற்சித்தனர்.விவசாய வேலைகள் செய்ய சாத்தியமற்ற கிராமத்தினருக்காக காதி நூல் நூற்றல் கிடங்கு தொடங்கப்பட்டது.இதன் மூலம் பல பெண்கள் பயன் பெற்றனர்.இந்தக் கிடங்கு நான்காண்டுகள் தொடர்ந்து இயக்கப்பட்டது.பண்ணையடிமைகளாக இருந்தவர்களுக்கு வாழ்வதாரத்திற்காக தரப்பட்ட நான்காயிரம் ரூபாயில் அவர்களுக்கு முதலில் மண்டல் அதிகாரிகள் காளைகளை வாங்கித் தந்தனர்.ஆனால் அதனால் பெரிய பயன் இல்லை என்று அறிந்த சங்கத்தினர் அந்தத் தொகையை கொண்டு நிலத்தை வாங்கித் தந்தனர்.மேலும் யாச்சரம் மண்டலில் முதல் முறையாக 52 வீடுகளை கட்ட சங்கம் உதவியது.மக்கள் தாங்களாகவே இந்த வீடுகளை கட்டிக் கொண்டனர்.பொதுவாக அரசாங்கம் கட்டித் தரும் வீடுகள் கான்கிரீட் கட்டிடங்களாக இருந்தன.இவை இரண்டு அறைகளும் ஒரு கழிப்பறையும் கொண்டிருந்தன.அதற்கு மாற்றாக சங்கத்தினர் ஒரு பெரிய அறை கொண்ட ஓட்டு வீடுகளை கட்டினர்.இவை மழைக்காலங்களில் கால்நடைகளை வீட்டுக்குள் கட்டி வைக்க உதவியாக இருந்தன.

புலிமாமடி என்ற கிராமத்தில் இராமச்சந்திர ரெட்டியின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மக்களுக்கே தர அப்போதைய முதலமைச்சர் சென்னா ரெட்டியின் வீட்டில் அவருடைய மகன்கள் சஷிதர் ரெட்டியுடனும் ரவிந்தீர் ரெட்டியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.பேச்சுவார்த்தை வெற்றி பெற்றாலும் மக்கள் பெயருக்கு நிலங்கள் மாற்றப்படவில்லை.ஆனால் சங்கத்திற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

1991யில் புலிமாமிடியின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பல பண்ணையார்கள் தாங்கள் ஆக்கிரமித்திருந்த நிலங்களை அவர்களாகவே மக்களுக்கு தர முன்வந்தனர்.மக்கள் யுத்தக் குழுவினர் அருகிலிருந்த மாவட்டங்களில் இருந்ததும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இந்த நிலங்களை முதலில் பண்ணையார்கள் அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்கள்.பின்னர் அரசாங்கம் இந்த நிலங்களை மக்களுக்கு பிரித்து தந்தது.நேரடியாக நிலங்கள் மக்களுக்கு மாற்றப்பட்டால் பத்திரப்பதிவு செலவை மக்களால் ஏற்க இயன்றிருக்காது என்கிறார் கீதா.இந்த வெற்றிகள் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் ஆகின.அப்போதைய ஆந்திர ஆளுநர் கிருஷ்ணகாந்த் தலைமையில் மக்களுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டன.அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

1991யில் நிலச் சீர்த்திருத்தம் பற்றிய ஒரு ஆய்வுக்காக தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்த முப்பத்தி மூன்று மண்டல்களில் நில அளவை செய்தது.கீதா அதில் பங்கெடுத்தார்.சர்ச்சைக்கு உரிய நிலங்களில் நில அளவை செய்ய பல்வேறு அமைப்புகளை கீதா ஒருங்கிணைத்தார்.இந்த ஆய்வின் மூலம் நில ஆவணங்களையும் உண்மையில் அவற்றை உடைமை கொண்டாடுபவரையும் பதிவு செய்தனர்.இதில் அரசாங்க நிலங்கள் , நில உச்சவரம்புக்கு அதிகமான நிலங்கள், பாதுகாக்கப்பட்ட குத்தகைகாரர் நிலங்கள் ஆகியவை அடங்கும்.இந்த நில அளவை முடிவுகள் மிகப்பெரிய அளவில் பல்வேறு வகையிலான நிலங்கள் நிலச்சுவான்தார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை ஆவணப்படுத்தின.

சங்கம் நிலம்,ஊதியம் சார்ந்த உரிமை போரட்டங்களில் பங்கெடுத்தாலும் அதன் வழி வேறு சில மாற்றங்களும் மக்கள் மத்தியில் நிகழ்ந்தன.கிராமங்களில் மக்கள் சாதிகளின் வெளிக்கு அப்பால் செல்ல ,மற்றவர்களை சந்திக்க, உரையாட இந்தச் சங்கத்து பணிகள் அவர்களுக்கு உதவின.அவர்களுக்குள் சகோதரத்துவம் மிளிர்ந்தது.மேலும் அவர்கள் இதன் மூலம் தங்களின் உரிமைகளை அறியத் தொடங்கினர்.அதை அவர்கள் சங்கம் வழி அடைந்தனர்.

ஆந்திரத்தில் 1985யில் நிகழ்ந்த கரம்சேடு படுகொலை முக்கியமான ஒரு துர் நிகழ்வாக அமைந்தது.அதுவரை தலித்துகள் ஒடுக்கப்படுவதை ஒரு வர்க்கம் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பார்த்தவர்கள் அதற்குப் பின்னர் வர்க்கப் பிரிவினைக்குள் மற்றொரு பிரிவாக சாதியப் பாகுபாட்டை அங்கீகரிக்கத் தொடங்கினர்.கீதா கரம்சேடு படுகொலைக்குப் பின்னர் அந்த ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தார்.இந்த நிகழ்வு தலித்துகள் ஒரு சிக்கலை ஒரு நிகழ்வை எப்படி பார்ப்பார்களோ அதே போல தன்னை பார்க்கத் தூண்டியது என்கிறார்.இப்ராஹிம்பட்டினம் தாலுக்காவில் அவர் பெரும்பாலும் மாதிகா இனத்து மக்களுடன் தான் பணியாற்றினார்.மாதிகா இனத்து மக்கள் வறியவர்களிலும் மிக வறியவர்களாக இருந்தனர் என்பது தான் அவர்களுடன் பணி புரிய முக்கிய காரணம் என்கிறார் கீதா.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீதாவின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து எதிரப்பு தெரிவித்தது.சங்கத்து கூட்டங்களை ஊருக்குள் நடத்தாமல் ஊருக்கு வெளியே சேரிகளில் நடத்துவதை கண்டித்தனர்.ஆனால் ஊருக்குள் நடத்தினால் உயர்த்தப்பட்ட சாதியினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ மாதிகா மக்களை கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவாறு செய்யக்கூடும் என்பதால் கீதா கூட்டங்களை சேரிகளிலே நடத்தினார்.மாதிகா மக்களுடன் பணி புரியத் தொடங்கிய பின்னர் அவர்கள் மெல்ல கீதாவை ஏற்றுக்கொண்டனர்.கீதா அந்த மக்கள் மீது காட்டிய அன்பை அவர்களும் அவர் மீது பொழிந்தனர்.அத்தனை வறுமையிலும் , துயரத்திலும் , சுரண்டலுக்கு மத்தியிலும் , தங்கள் குழந்தைகள் பசியால் இறந்த போதும் , பண்ணையார்களால் தங்களின் பெண்களும் மனைவிகளும் வன்புணர்வு செய்யப்பட்ட போதும் , ஊட்டச்சத்து குறைப்பட்டால் நாற்பது வயதிலேயே வயதோகித்தை அடைந்த போதும் , கடுமையான வேலைகளும் , எவ்வித மருத்துவ வசதியும் இல்லாத போதும் அவர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்களாகவும் மன்னிக்க கூடியவர்களாகவும் இருந்தனர் என்கிறார் கீதா.அவர்கள் வாழ்க்கையை விரும்பினர் , மக்களை விரும்பினர்.அவர்களுக்கான இடத்தை அவர்கள் அடைய உதவும் போது உதவுபவர்கள் மீது அவர்கள் அன்பு செலுத்தினர்.அவர்கள் அசாத்தியமான திறமைகள் கொண்டிருந்தனர்.வீட்டில் திருமணம், மரணம் , கொண்டாட்டம் என்று எந்த சடங்கின் போதும் அவர்கள் பறை அடித்தனர்.குச்சியாட்டம் போன்ற நடனங்களில் சிறந்து விளங்கினர்.மாதிகா பெண்கள் சுதந்திரமானவர்களாக இருந்தனர் என்கிறார்.

1992யில் கீதா இப்ராஹிம்பட்டினத்தில் தன் பணிகளை நிறுத்திக்கொண்டார்.இப்ராஹிம்பட்டினத்தில் ஆளுநர் முன்னிலையில் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிகழ்வுடன் ஓரளவு அவர்கள் தங்கள் பணிகளை முடித்திருந்தனர்.தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் நில அளவையைக் கொண்டு மேலும் பல முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.ஆனால் ஆந்திரத்தின் முப்பத்தி மூன்று மண்டல்களில் அதை யார் செய்வது.மறுபடியும் அனைத்தையும் முதலில் இருந்தே தொடங்க இயலாது என்ற சோர்வுக்கு வந்து சேர்ந்தார் கீதா.

அந்தந்த மண்டல்களில் இது போன்ற சங்கங்கள் உருவாகி தங்களுக்கான உரிமைகளுக்கு போராடியிருக்க வேண்டும்.அப்படியான ஒரு அமைப்பு உருவாகவில்லை.மேலும் இப்ராஹிம்பட்டினத்தில் ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் அதுவரை இருந்த இலக்குகளை விட்டுவிட்டு புதிய இலக்குகளை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.எத்தகைய இலக்குகளை தேர்வு செய்வது என்ற கேள்வி அவர் முன் எழுந்தது.விவசாயம் மட்டும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை.இயற்கை வளத்தை முழுமையாக சுரண்டும் தொழில் நிறுவனங்களும் நீண்ட கால அளவில் ஒரு மாற்றான தேர்வாக இல்லை.அரசு நிர்வாகத்தில் மக்களுக்கு போதிய பங்கு இல்லை.இது மாற வேண்டுமென்றால் வேறு வகையான புரட்சி தேவைப்பட்டது.ஆனால் அது எம்.எல். அமைப்புகள் முன்வைக்கும் புரட்சி அல்ல.நீடித்த வளர்ச்சிக்கான பாதை தேவைப்பட்டது.ஆனால் அதை முன்னெடுப்பது எப்படி என்று கேள்வியுடன் தன் இப்ராஹிம்பட்டினம் பயணத்தை முடித்துக் கொள்கிறார் கீதா.

கிட்டத்தட்ட பத்து வருடங்களில் அவர் மாதிகா மக்களுடன் இணைந்து பல வெற்றிகளைப் பெற்றார்.அவருக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது.அவர் பலரால் அறியப்பட்ட ஒரு ஆளுமையானார்.ஈநாடு இராமோஜி ராவ் அவரைப் பற்றிய திரைப்படத்தை எடுக்க விரும்பினார்.ஆனால் இது மக்கள் போராட்டம்.வெற்றி அவர்களுடையது என்று அதிலிருந்து முழுக்க விலகிவிட்டார் கீதா.நாற்பது வயதை நெருங்கிய கீதா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து அடுத்த ஒரு வருடத்தில் லீலா என்ற பெண் மகவை பெற்றெடுத்தார்.

கீதா இந்தப் புத்தகத்தில் மறுபடி மறுபடி ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவில் மக்கள் தங்கள் போராட்ட முறைகளை அவர்களே கண்டுபிடித்தனர்.அவர்களுக்கு ஒரு முகமை தேவைப்பட்டது.அந்த முகமை அவர்களுக்கான உரிமைகள் பற்றிய அறிதல்களை அவர்களுக்கு தந்து அவர்களோடு இருக்கும் போது அங்கு அன்பு சாத்தியப்பட்டது.அவர் ஒரு போதும் அது தன்னால் நிகழ்ந்த வெற்றி என்று பறைசாற்றிக் கொள்ளவில்லை.கிட்டத்தட்ட ஏழு மண்டல்களில் விவசாயச் சங்கத்தின் பணிகள் நடைபெற்றன.1990களில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் ஏக்கர் நிலம் ,நிலம் அற்ற ஏழை மக்களால் பயரிடப்பட்டது.இதில் பெரும்பகுதி நிலம் ,பண்ணையார்கள் நிலங்களை கைதுறந்தபின்னர் மக்களின் பெயருக்கு மாற்றப்பட்டன.கீதா தங்கள் சங்கத்தின் வழி அடைந்த சில வெற்றிகளை பட்டியலிடுகிறார்.

அதிகாரபூர்வமாக 1500 பண்ணையடிமைகள் பண்ணையடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அவர்களுக்கு நிவாரணத் தொகையும் புனர்வாழ்வுக்கு பணமும் தரப்பட்டன.இதைத்தவிர 1420 பண்ணையடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.இவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பெண்களுக்கு எட்டு அணா முதல் இரண்டு ரூபாய் என்றிருந்த கூலித்தொகை நான்கிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்ந்தது.ஆண்களுக்கு ஆறு முதல் ஏழு ரூபாயிலிருந்து பன்னிரெண்டு முதல் பதினைந்து ரூபாயாக உயர்ந்தது.பண்ணையடிமைகளாக இருந்தவர்களுக்கு அறுபதிலிருந்து எண்பதுரூபாய் என்பதலிருந்து நூற்றியெண்பது முதல் மூந்நூறு ரூபாயாக உயர்ந்தது.விவசாயக் கூலிகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் பின் ஊதியத் தொகையாக கொடுப்பட்டது.அறுபத்தி ஆறாயிரம் ரூபாய் அவர்களுக்கு வேலையின் போது ஏற்பட்ட காயங்களுக்கு நிவாரணத் தொகையாக கொடுக்கப்பட்டது.இன்று இப்ராஹிம்பட்டினம் தாலூக்காவில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு எண்பது லட்சத்திலிருந்து ஐந்து கோடி வரை போகிறது என்கிறார் கீதா.அந்த அடிப்படையில் பார்க்கும் போது சங்கம் 11,200 கோடியிலிருந்து 70,000 கோடி வரை மதிப்புள்ள நிலத்தை மக்களுக்கு இந்தப் போரட்டங்கள் வழி பெற்றுத்தந்திருக்கிறது சங்கம் என்கிறார்.

வன்முறையற்று மக்களை திரட்டி போராடுவதன் வழி மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு கீதாவின் நிலம்,தூப்பாக்கிகள்,சாதி,பெண் என்ற இந்தப் புத்தகம் ஒரு சாட்சி.ஆனால் இந்திய அரசியலமைப்பும் சட்டங்களும் அளிக்கும் உரிமைகள் வறியவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்பதற்கும் அதற்கு சங்கங்களும் வலிமையான மக்கள் போராட்டங்களும் தேவைப்படுகின்றன என்பதற்கும் இந்தப் புத்தகமே சாட்சி.ஆனால் நீடித்த வளர்ச்சி போன்ற பெரிய திட்டங்களுக்கு சங்கங்களும் மக்கள் போராட்டங்களும் மட்டுமே போதுமானவை அல்ல என்ற குறிப்புடன் இந்தப் புத்தகம் தன் வாதத்தை நிறைவு செய்து கொள்கிறது.

பின் குறிப்பு : கீதா ராமசாமி(Gita Ramaswamy) ஐதராபாத் புக் டிரஸ்ட் என்ற பதிப்பு நிறுவனத்தை 1980யில் நண்பர்களுடன் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.400க்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.அவரின் நிலம்,தூப்பாக்கிகள்,சாதி,பெண் (Land,Guns,Caste,Woman) என்ற இந்தப் புத்தகத்தை நவயானா(Navayana) பதிப்பகம் பிரசுரித்துள்ளது.


- தளம் இதழில் பிரசுரமான கட்டுரை.



காங்கிரஸின் எதிர்காலம்

 

ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உனா நகரில் அவர் மேற்கொண்ட போராட்டமும் அதன் முறைமையும் தலித் போரட்டங்களில் மிகப் புதிதாகவும் படைப்பூக்கத்துடனும் அமைந்திருந்தது என்று ஆனந்த் டெல்டும்டே சொல்கிறார்.அவர் சென்ற முறை சுயேட்சையாக வெற்றி பெற்றார்.இந்த முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.அவரும் கன்னையா குமாரும் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார்கள்.கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது.ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை எந்த வகையிலும் புதுப்பித்துக் கொள்ள தயாராக இல்லாத சூழலில் இளைஞர்களுக்கு வேறு வழியும் இல்லை.
 
இன்று ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவது மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , ஊழல் அற்ற ஆட்சி என்பதற்கு அப்பால் ஆம் ஆத்மி எதையும் சொல்லவில்லை.மத்திய தர வர்க்கத்தினரும் வேறு எதையும் கோரவில்லை.அவர்களுக்கு என்று சித்தாந்தம் இல்லை.காங்கிரஸ் மற்றொரு ஆம் ஆத்மி கட்சியாக தன்னை காண்பித்துக் கொள்வதால் எந்தப் பயனையும் பெறப் போவதில்லை.ஆம் ஆத்மி எந்தளவு விரைவாக வளர்கிறதோ அதே அளவு விரைவாக சரியவும் கூடும்.மத்திய தர வர்க்கத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை என்பது தான் உண்மை.லிபரல்களுக்கும் வலதுசாரிகளுக்குமான தூரம் குறைவு தான்.
 
காங்கிரஸ் செய்ய வேண்டியது இஸ்லாமிய நிலையையும் தலித் நிலையையும் ஒன்றிணைத்து அதற்கான கதையாடலை உருவாக்குவது தான்.அப்படி செய்யும் போது மட்டுமே காங்கிரஸ் தனக்கான தனித்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அத்தகைய கதையாடல் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.எங்கெல்லாம் தலித் நிலை குறித்து பேசுகிறோமோ அங்கு இஸ்லாமியர்களின் நிலை குறித்தும் பேச வேண்டும்.இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும்.இன்று சிறைகளில் இருப்பவர்களில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இஸ்லாமியர்களாவகவும் பழங்குடிகளாகவும் தலித்துகளாகவும் இருக்கிறார்கள்.தலித்துகளும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் ஒரே போன்ற வசிப்பிடங்களில் வாழ்கிறார்கள்.இவைகள் குறித்து காங்கிரஸ் பேச வேண்டும்.
 
காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெறும் வேலைவாய்ப்பு , வளர்ச்சி என்பதை கொண்டு மட்டும் வாக்குகளை பெற முடியாது.அத்தகைய வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சியும் ஆம் ஆத்மியும் மேலும் திறன்பட செய்யும் என்று இளைஞர்கள் உட்பட பலரும் நினைக்கிறார்கள்.காங்கிரஸ் தாங்கள் மென்மையான வலதுசாரிகள் அல்ல தாங்கள் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கி உள்ள மற்றமையை நீர்த்துப் போகச் செய்யக்கூடியவர்கள் என்ற நிலைக்கு தங்களை நகர்த்த வேண்டும்.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , மதச்சார்பின்மை, விளிம்பு நிலையில் உள்ள இஸ்லாமியர்கள், தலித்துகள் , பழங்குடிகளின் நலன்கள் ,இந்திய அரசியலமைப்பை காப்பது ஆகியவை தான் தங்களின் முக்கியமான கொள்கைகள் என்று சொல்ல வேண்டும்.
 
அப்படி செய்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.ஆனால் காங்கிரஸ் அதன் வழி முக்கிய தரப்பாக இருக்கும்.தன் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும்.இல்லை என்றால் காங்கிரஸின் அவசியம் என்ன.ஒன்றுமில்லை.அந்த இடத்தை ஆம் ஆத்மி நிரப்பிவிடும்.வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல.ஆம் ஆத்மியின் வளர்ச்சி பாரதிய ஜனதா கட்சிக்கு அதன் சித்தாந்தத்திற்கு மாற்றே இல்லை என்ற நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்லும்.இரண்டில் எதை தேர்தெடுத்தாலும் ஒன்று தான் என்ற நிலைக்கு வாக்காளர்களும் செல்வார்கள்.இது ஒரு வகையில் இன்றைய நம் வாழ்க்கையின் உள்ளீடற்ற தன்மையின் வெளிப்பாடு தான்.மற்றமை மீதான அக்கறை அற்ற தன்மையின் புறத்தோற்றம் தான் இந்தக் கட்சிகளின் வெற்றிகள்.ஆனால் அது தனிமனிதர்களின் தோல்வி அல்ல.நகரமயமாக்கலும் , தனியார்மயமாக்கலும் உருவாக்கும் வெற்றிடத்தின் புறத்தோற்றம் இவை.ஆம் ஆத்மியும் பாரதிய ஜனதா கட்சியும் அதனால் பயன் அடையும் இரு முகங்கள்.காங்கிரஸ் தன்னை புதுப்பித்துக் கொண்டு இவர்களுக்கு மாற்றான சக்தியாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அதற்கான கதையாடல்களை கண்டடைய வேண்டும்.இடதுசாரிகளையும் மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தல்களை சந்திக்க வேண்டும்.அவை நல்ல விளைவுகளை உருவாக்கும்.
 
 

இட ஒதுக்கீடு எனும் மாயை

 

ஆனந்த் டெல்டும்டே

கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை அளவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்திருக்கின்றன.கம்யூனிஸ்ட்கள் வர்க்க அடிப்படையில் மட்டுமே சமூகத்தை பார்க்க விரும்புகிறார்கள்.ஏழை X பணக்காரன்,முதலாளி X தொழிலாளி,ஆளும் வர்க்கம் X பாட்டாளி வர்க்கம் என்ற பிரிவினையின் அடிப்படையில் சமூகத்தை பகுத்து பார்க்கிறார்கள்.அவர்கள் சாதியின் அடிப்படையிலான வேறுபாடுகளை அங்கீகரிக்க விரும்புவதில்லை.இதற்கான காரணத்தை ஆனந்த் டெல்டும்டே தன் சாதியின் குடியரசு(Republic of caste) நூலில் விளக்குகிறார்.சமூகத்தை மார்க்ஸ் இரண்டாக பிரித்தார்.அவை அடித்தளமும் மேற்கட்டுமானமும்.அடித்தளம் என்பது பொருள் உற்பத்தி நிகழும் தளம்.மேற்கட்டுமானம் என்பது கருத்துத் தளம்.கருத்து உற்பத்தி தளம் என்று இதைச் சொல்லலாம்.மேற்கட்டுமானத்திற்கும் அடித்தளத்திற்குமான இயங்கியல் தான் சமூகத்தை இயக்குகிறது.பொருள் உற்பத்தி தளத்திலான மாற்றம் மேற்கட்டுமானத்தை பாதிக்கும் என்கிறது மார்க்ஸியம்.அதனால் தான் அது இயங்கியல் பொருள்முதல்வாதம்.பொருள் தான் முதன்மையானது.கருத்து அல்ல.ஆனால் கிராம்ஷி போன்ற சிந்தனையாளர்கள் கருத்து தளத்திலான மாற்றங்களும் அடித்தளத்தில் விளைவுகளை உருவாக்கும் என்று சொன்னார்கள்.அவர்கள் சொல்லி அரை நூற்றாண்டு கடந்து விட்டது.ஆனால் இன்று வரை இந்தியக் கட்சி கம்யூனிஸ்டுகள் அதைப்பற்றிய அக்கறையை வளர்த்துக்கொண்டதாக தெரியவில்லை.அவர்கள் சாதியை ஒரு கருத்தாக பார்க்கின்றனர்.அதாவது பொருள் உற்பத்தி தளத்திலான உற்பத்தி கருவிகளின் உடைமை மாற்றத்தால் சாதி மறைந்து போகும் என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகின்றனர்.ஆனால் சாதி வர்க்கத்தினுள் மற்றொரு வர்க்கமாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை அவர்கள் இன்று வரை ஏற்கத் தயாராக இல்லை.இதுவே அம்பேத்கரிய இயக்கங்களும் கம்யூனிஸ கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட இயலாமல் தடுக்கும் முக்கியச் சுவர்.கம்யூனிஸ்டுகள் இதை ஏற்றுக்கொள்ளத் தயங்குவற்கு இருக்கும் முக்கிய காரணம் இத்தகைய வேறுபாடுகள் பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கு பதிலாக பிரிக்கிறது என்பது தான்.

ஆனால் சாதி என்பது பண்பாட்டுத் தளத்திலானது அல்ல.அது ஒரு கருத்தல்ல.அது பொருள் உற்பத்தி தளத்திலான யதார்த்தம்.அது ஒரு பருப்பொருள் என்றே கொள்ள வேண்டும்.சாதியும் வர்க்கமும் ஒன்று தான்.இங்கு சாதி அடிப்படையிலேயே தொழில்கள் செய்யப்பட்டன.இன்று படிப்பு, திறமை என்பதன் அடிப்படையில் கிடைக்கும் வேலை அன்று சாதியின் அடிப்படையில் அளிக்கப்பட்டது.படிப்பு, திறமை ஆகியவற்றின் இடத்தில் சாதி இருந்தது.அது ஒரு வேலைப் பிரிவினைக்கான ஏற்பாடாகவும் இருந்திருக்கிறது.ஆகவே சாதியை வர்க்கமாகவே பார்க்க வேண்டும்.இன்று தலித் சமூகம் சந்தித்து வரும் இன்னல்கள் அவர்கள் தலித்துகள் என்பதாலேயே நிகழ்கின்றன.அவர்கள் ஏழைகள் என்பதால் அல்ல.அவர்கள் தலித்துகளால் இருப்பதால் ஏழைகளாக இருக்கிறார்கள்.ஏழைகளாக இருப்பதால் தலித்துகளாக இல்லை.கிராமங்களில் பெருநகரங்களில் பெரும்பாலான தலித்துகள் சேரிப்பகுதிகளில் தான் வாழ்கிறார்கள்.அவர்கள் கூலி வேலைதான் செய்கிறார்கள்.கிராமங்களின் பெருநகரங்களின் சேரிப்பகுதிகளின் அவல நிலைகள் நம்மை அறைந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் நாம் அந்த புற யதார்த்தத்தை காண விரும்பவில்லை, ஏற்க விரும்பில்லை.

இந்தியாவில் பெருவாரியான தலித்துகளும் இஸ்லாமியர்களும் வறிய நிலையில் கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.சிறைகளிலும் அவர்களின் எண்ணிக்கையே அதிகம்.சிறைச்சாலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் இஸ்லாமியர்களாகவும் தலித்துகளாகவும் பழங்குடிகளாகவும் இருக்கிறார்கள்.தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்படும் அநீதிகளுக்கு இந்திய சமூகம் செய்யும் பிராயச்சித்தம்.இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி ஆறாவது ஷரத்து அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிலும் முக்கியமாக பட்டியலினத்தவர்களின் பழங்குடியினரின் படிப்பிலும் பொருளாதாரத்திலும் அதிக அக்கறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.மேலும் அவர்களை அநீதியிலிருந்தும் சுரண்டலிருந்தும் காக்க வேண்டும் என்று சொல்கிறது.இவை அரசின் கொள்கைகளை நெறிப்படுத்தும் காரணிகள் பகுதியில் வரும் ஷரத்து.அதாவது இவை அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு ஆற்ற வேண்டும்.அவர்கள் சுரண்டப்பட்டார்கள், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.இவை காரணங்கள்.அதனால் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.அவர்கள் பின்தங்கிவிட்டார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.மாறாக இந்த சமூகம் அவர்களை ஒடுக்கியதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் மத்திய அரசு தொண்ணூறுகள் வரை பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த இட ஒதுக்கீட்டையும் தரவில்லை.வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் ஆணையம் தந்த பரிந்துரைகளின் படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமுல் படுத்தியது.அதுவரை பட்டியல் இனத்தவர்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டுமே மத்திய அரசு இட ஒதுக்கீடு அளித்தது.சாதி அடிப்படையிலான அரசியலுக்கு இது வித்திட்டது என்று சொல்லப்படுகிறது.மேலும் மண்டல் X கமண்டல் என்று மத அரசியல் பெரிய அளவில் இந்தியாவில் தொண்ணூறுகளுக்கு பின்னர் வளர்ந்ததற்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முக்கிய காரணமாக அமைந்தது.பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியம் தானா என்பதில் பல முரண்பட்ட வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.அடிப்படையில் இட ஒதுக்கீடு பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியனருக்கும் தான்.பிற்படுத்தப்பட்டவர்களில் பட்டியல் இனத்தவர்களை போலவே பொருளாதாரத்திலும் சமூக அடுக்கிலும் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள்.உயர்த்தப்பட்ட சாதியினரைவிட நல்ல பொருளாதாரச் சூழலிலும் சமூக அடுக்கிலும் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.பிற்படுத்தப்பட்டோரின் நிரை மிகப்பெரியது.அவர்களுக்கான இட ஒதுக்கீடு எப்போதும் விவாதங்களை உருவாக்க வல்லது தான்.அதில் இரு தரப்பிலும் நியாயங்கள் இருக்கின்றன.

வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததற்கு இரண்டு அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார் ஆனந்த்.ஒன்று அன்று வளர்ந்த வந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்து மதத் சொல்லாடலை பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நீர்த்துப்போகச் செய்யும் என்று அவர் எண்ணினார்.அதே போல காங்கிரஸூக்கு இந்தி பேசும் மாநிலங்களில் இருந்த வாக்கு வங்கியை அது குறைக்கும் என்று நினைத்தார்.ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவத்தை கொண்டு ஆட்சிக்கு வந்து விட்டது.நவதாராளவாதம் அவர்களுக்கு உதவியது.நவதாராளவாதம் மனிதனை கையறு நிலைக்குத் தள்ளுகிறது.கையறு நிலைக்குச் செல்பவன் சாதியிலும் மதத்திலும் அடைக்கலம் தேடுகிறான்.எங்கெல்லாம் முதலாளித்துவம் அதி வேகமாக வளர்கிறதோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையிலான வலதுசாரி அமைப்பு பெரும் சக்தியாக மாறும்.

ஆனால் இட ஒதுக்கீட்டில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் என்கிறார் ஆனந்த் டெல்டும்டே.இட ஒதுக்கீடு இன்று வரை அரசாங்க வேலைகளில், தேர்தலில், கல்லூரி படிப்புகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.தேர்தலில் இருக்கும் இட ஒதுக்கீடு உண்மையில் எந்த பலனையும் தரவில்லை.ஏனேனில் மைய நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் தான் தனித்தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.அவை தலித் மக்களுக்கு என்று எந்த கொள்கைகளையும் தனியாக வகுப்பதில்லை.பஞ்சாயத்து தேர்தல்களில் தலித் சமூகத்தினருக்கு அளிக்குப்படும் தொகுதிகளில் அவர்கள் போட்டியிடவும் வெல்லவும் பணிபுரியவும் பெரும் தடைகள் உள்ளன.தமிழகத்தில் மட்டுமே அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.அவற்றை தன் புத்தகத்தில் பட்டியலிடுகிறார் ஆனந்த்.பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கும் தனித் தொகுதிகளில் தலித் வகுப்பினர் மட்டும் ஓட்டு செலுத்தினால் வேட்பாளர் வெற்றி பெற இயலாது.எந்த தனித்தொகுதியிலும் தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கப் போவதுமில்லை.பிற சாதிகளின் ஆதரவும் வேட்பாளருக்கு தேவைப்படுகிறது.அப்படியென்றால் தலித் மக்களின் நலன் பொருட்டு மட்டுமே அவரோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ எவ்வாறு கொள்கை வகுக்க இயலும்.இன்று தேர்தலில் நாம் தேர்தெடுக்கும் தலித் வேட்பாளர்கள் தலித் சமூகத்தை பிரிதிநித்துவப் படுத்துவதில்லை.அவர்கள் ஒரு தலித் அடையாளத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள்.அது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருக்கிறது.அவ்வளவு தான் சாத்தியமாகவும் இருக்கிறது.அம்பேத்கர் தேர்தலில் தோற்றிருக்கிறார்.அம்பேத்கர் கொண்டு வந்த இரட்டை வாக்குரிமை தலித்துகளை சரியாக பிரதிநித்துவப் படுத்தும் திட்டமாக இருந்தது.ஆனால் காந்தி ஏர்வாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்து அதை பிடிவாதமாக மாற்றினார்.காந்தி நினைத்தது போலவே இன்று தலித் சமூகம் இந்து சமூகத்திலிருந்து பிரிந்து போகவும் இல்லை , பிரதிநித்துவப்படவும் இல்லை.

தனித் தொகுதிகள் உண்மையில் அடையாளச் சின்னங்கள் போல மட்டுமே செயல்படுகின்றன.தலித் சமூகங்களின் விகிதாச்சாரத்தின் அளவுக்கு அவர்கள் பிரதிநித்துவப் படுத்தப்படுவதில்லை.அதாவது ஒருவர் எப்படி பிராமணராக இருப்பதாலேயே பிராமண சமூகத்தை பிரதிநித்துவப் படுத்த இயலாதோ அதே போல ஒருவர் தலித்தாக இருப்பதாலேயே தலித் சமூகத்தை பிரதிநித்துவப் படுத்த இயலாது.அவர் தலித் மக்களால் மட்டுமே தேர்தெடுக்கப்படுகையிலேயே அவர் தலித் மக்களை பிரதிநித்துவப்படுத்துகிறார் என்று கொள்ள முடியும்.இன்றைய நாடாளுமன்ற , சட்டமன்ற , பஞ்சாயத்து தேர்தல்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை.அந்தத் தொகுதியின் பெருவாரியான மக்கள் யாரை தேர்தெடுக்குகிறார்களோ அவர்களே பிரதிநிதி.அவர் தொகுதியின் பிரதிநிதி மட்டுமே.தலித்துகள் பிரதிநிதி அல்ல.

இரண்டாவது வேலை.தனியார் துறையில் வேலையில் இட ஒதுக்கீடு இல்லை.அரசு ஒரு வருடத்தில் எத்தனை வேலைகளை உற்பத்தி செய்யப்போகிறது.இந்த இட ஒதுக்கீட்டால் உண்மையில் எத்தனை மக்கள் பயன் அடைகிறார்கள்.அமைப்பு சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்கள் இந்தியாவில் 6 சதவிகிதம்(Formal Organized Sector).அதில் பொதுத் துறை நிறுவனங்களில் 4 சதவிகிதத்தினர் வேலை செய்கிறார்கள்.குரூப் “ஏ” வில் 1.7 சதவிகிதத்தினரும் “பி” யில் 3.5 சதவிகிதத்தினரும் “சி”யில் 65 சதவிகிதத்தினரும் “டி” யில் 30 சதவிகிதத்தினரும் வேலை செய்கிறார்கள். இதில் “ஏ” பிரிவிலும் “பி” பிரிவிலும் இருப்பவற்றை சேர்த்தால் மொத்த அமைப்பு சார்ந்த பணி இடங்களில் 0.208 சதவிகித இடங்கள் தான் இருக்கின்றன.அதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் .104 மட்டுமே.இன்று பொதுத் துறை நிறுவனங்கள் கூட பல வேலைளை ஒப்பந்த பணிகளாக மாற்றி அமைத்துள்ளன.அதில் இட ஒதுக்கீடு இல்லை.மேலும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக மாற்றப்படுகின்றன.நீதித்துறை போன்ற சில துறைகளில் இட ஒதுக்கீடு இல்லை.அப்படி இருக்கையில் இந்த இட ஒதுக்கீட்டால் உண்மையில் எந்தளவு பட்டியல் இனத்தவர்கள் வேலையில் பயன் பெறுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார் ஆனந்த்.

ஆனால் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பயன் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும் பள்ளிப்படிப்பில் சமச்சீரான பாடத்திட்டங்களை இந்தியா முழுமைக்கும் இன்றுவரை கொண்டு வர முடியவில்லை.பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நுழைவுத் தேர்வுகள் உயர் கல்விக்கு ஒரே போல உருவாக்கப்படுகிறது.பெருநகரத்து பள்ளிக்குழந்தைகளுக்கும் சிறு நகரத்து பள்ளிக் குழந்தைகளுக்கும், உயர்த்தப்பட்ட சாதி பள்ளிக்குழந்தைக்கும் தாழ்த்தப்பட்ட சாதி பள்ளிக் குழந்தைகளுக்கும் இங்கு பாடத்திட்டங்கள் ஒன்று போல இல்லை.ஆசிரியர்கள் ஒன்று போல இல்லை.பள்ளி கட்டமைப்பு ஒன்று போல இல்லை.அவர்களின் சமூக மூலதனம் ஒன்று போல இல்லை.அவர்களின் சமூக அஸ்தஸ்து ஒன்று போல இல்லை.அவர்களின் வாங்கும் சக்தி ஒன்று போல இல்லை.ஆனால் நுழைவுத்தேர்வு ஒன்று போல இருக்கிறது.கல்லூரி படிப்பை ஒரு தாழ்த்தப்பட்டவர் அடைய பல்வேறு தடைகள் இருக்கின்றன.அத்தனை தடைகளையும் கடந்து தான் ஒருவர் கல்லூரிப்படிப்பை அடைய முடிகிறது.தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் பொது பிரிவுக்குமான கட் ஆஃப் மதிப்பெண்களின் வித்யாசம் குறைவாகத்தான் இருக்கின்றன.சிறப்பு வகுப்புகள் வழியாகவும் சமூக மூலதனத்தின் வழியாகவும் மற்ற பிரிவினர் கல்லூரிகளுக்கு செல்வதை விட தலித் சமூகத்தினர் அதிலும் கிராமப்புறங்களிலிருந்து செல்வது சாதனைதான் என்கிறார் ஆனந்த்.

இன்று உயர் வகுப்பினருக்கான பத்து சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் யோகேந்திர யாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள் ஒரு முக்கியமான கோணத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.எப்போதும் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களில் தகுதி பிரதான வாதப்பொருளாக இருக்கிறது.இட ஒதுக்கீட்டால் தகுதி அற்றவர்கள் வேலைக்கு வந்து விடுகிறார்கள், பதவி உயர்வு பெறுகிறார்கள் என்று சிலர் கூச்சலிடுகின்றனர்.இதனால் பணியின் தரம் குறைந்துவிடுகிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.இப்போது உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால் அதே தரமும் தகுதியும் குறையும் என்று முன்பு கூச்சலிட்டவர்கள் சொல்லவில்லை.அப்படியென்றால் இத்தனை நாள் நீங்கள் போட்ட கோஷங்கள், மண்டல் ஆணையம் அமுலுக்கு வந்த போது செய்த போராட்டங்கள் அவை உங்களுக்கு இல்லை என்பதால் தான் என்பது நிரூபணம் ஆகிறது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இட ஒதுக்கீடு மற்றொரு முக்கியமான விவாதத்தை உருவாக்குகிறது. இட ஒதுக்கீட்டில் எப்போதும் ஒடுக்கப்பட்ட பிரிவில் இருக்கும் முன்னேறிய சமூகங்கள் குடும்பங்கள் தான் அதிக பலனை அடைகிறார்கள்.பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைத்து இட ஒதுக்கீடு இடங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் தான் தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.அருந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது.கலைஞர் கருணாநிதி தன் ஆட்சியில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினார்.கலைஞர் கருணாநிதிக்கு புகழ் சேர்க்க இந்த ஒரு முடிவு போதுமானது.ஆனால் இட ஒதுக்கீட்டில் எப்போதும் முன்னேறிய சமூகங்களும் குடும்பங்களும் அடுத்தடுத்த தலைமுறையிலும் இடங்களை பெறுவது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.இதை தடுக்க ஏதேனும் வழி இருக்குமா என்று விவாதிக்க அம்பேத்கரின் மகன் பிரகாஷ் அம்பேத்கர் ஒரு கருத்தரங்கை நடத்தினார்.அதில் இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களே மறுபடி மறுபடி பயன் பெறுகிறார்கள்.அதை எப்படி தடுப்பது என்பது குறித்து விவாதித்தார்கள்.சாதியை இட ஒதுக்கீட்டுக்கான அலகாக கொள்ளாமல் ஒரு தனிக்குடும்பத்தை அலகாக கொள்ள வேண்டும்.இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற பட்டியல் இனத்தவர்கள் பயன் பெறாத பட்டியல் இனத்தவர்கள் என்று அவர்கள் இரண்டாக வகுக்கப்பட வேண்டும்.படிப்பு , வேலை ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டால் பயன் அடையாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இறுதியாக இடங்கள் இருந்தால் அவற்றை அளிக்கலாம் என்ற தீர்மானத்தை அவர்கள் அடைகிறார்கள்.இது ஓரளவு பயன் அளிக்கும் எண்ணம் தான் என்கிறார் ஆனந்த்.இதன் வழி இட ஒதுக்கீடு என்பது எப்போதைக்குமானது என்பது மாற்றத்திற்கு உள்ளாகிறது.இட ஒதுக்கீட்டால் பயன் பெறாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போது மெல்ல சாதி மீதான பிடிமானங்களை இழக்க வேண்டிய அவசியத்தை அது உருவாக்கும் என்கிறார் ஆனந்த்.இதை பிற்படுத்தப்பட்டோருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இட ஒதுக்கீடு உண்மையில் பெரும் பலனை அளிக்கும் ஒரே துறை கல்லூரிப் படிப்பு மட்டும் தான். சாதி ஒழிய வேண்டும் என்றால் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு எப்போதும் ஒரு சாதியினருக்கு நிலையானதாக இருக்காத வகையில் அதை மாற்ற வேண்டும்.அப்படி மாற்ற வேண்டும் என்றால் அதன் அலகு சாதி என்பதிலிருந்து குடும்பம் என்பதற்கு மாற வேண்டும்.ஒரு குடும்பத்தின் தாய் தந்தையர் இட ஒதுக்கீட்டை பெற்றிருந்தால் பிள்ளைகளுக்கு முன்னுரிமை இல்லை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டால் இட ஒதுக்கீடு அது எவருக்கு அவசியமோ அவருக்கு சென்று சேரும்.இனி தான் சார்ந்திருக்கும் சாதியால் தனக்கு பயன் இல்லை என்பவர் சாதி சங்கங்களில் இருப்பதை தவிர்ப்பார்.காலச்சக்கரத்தின் சூழற்சியில் அது சாதி ஒழிப்புக்கு பயன் அளிக்கக்கூடும்.அதே நேரத்தில் சாதிகள் அற்ற , சாதி சங்கங்கள் அற்ற இந்தியா இருக்க முடியும் என்பதை நமது அரசியல்வாதிகளால் கற்பனை கூட செய்ய முடியாது என்பது உண்மை தான்.ஆனால் ஒரு குடிமைச் சமூகம் தன் வாதங்களை முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.அவை எப்போதாவது நிறைவேறக்கூடும்.

குறிப்பு – ஆனந்த் டெல்டும்டே எழுதிய சாதிகளின் குடியரசு நூலில் இட ஒதுக்கீடு பற்றியும் , சாதி வர்க்க முரணியக்கம் பற்றியும் எழுதியுள்ள கட்டுரைகளில் உள்ள தகவல்கள் , கருத்துகள், தர்க்கங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.அவரின் வாதங்கள் மிகவும் கூர்மையானவையாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் எனக்குத் தோன்றுகிறது.சில இடங்களில் என்னுடைய கருத்துகள் இருந்தாலும் இந்தக் கட்டுரை பெரும்பாலும் அவரின் கருத்துகளையே எதிரொலிக்கிறது,சுருக்கிக் கூறுகிறது.