உரையாடல்


முந்தைய To Negate என்ற கட்டுரை சார்ந்து அபிலாஷூடன் நடத்திய சின்ன உரையாடல்.
அபிலாஷ் - சர்வோத்தமன் நான் பேசியது மாநகரத்தில் சாதி கடந்து மணப்பது சாதனையா என்றல்ல; சொந்தக்காரர்கள் எப்படி சாதியை தக்க வைக்கிறார்கள்; அவர்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்பது உண்மையா என்பதே. மனிதன் அந்நியமாதலால் சாதியை பற்றிக் கொள்வதாக நான் நம்பவில்லை. அதிகாரத்துக்காகத் தான் சாதியை தொடர்கிறான். அது மேல் கீழ் சாதிகளுக்கு ஒருசேர பொருந்துகிறது. ஒரு அடையாளமாக சாதிக்கு சின்ன இடம் தான். அதுவும் படைப்பூக்கமும் சுயசிந்தனையும் இல்லாதவர்களுக்கே தேவைப்படுகிறது. எனக்கு அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. hollow men!

நான் - அபிலாஷ் , சாதி என்ற கருத்தில் இனத்தூய்மை , அந்நியமாதல், அதிகாரம் (அரசியல் அதிகாரமும் இதில் அடங்கும்) ஆகிய மூன்று விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். பெருநகரத்தில் தனித்துபோய் நிற்கும் ஒருவன் ஒரு அடையாளத்திற்காகவும் சாதியை பற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் எழுதியதின் முக்கிய விஷயம் இன்று மாற்று சாதி திருமணங்கள் கருத்தியல் வெற்றிகளால் அடையப்பெற்ற ஒன்றல்ல என்பதே.அவை மாநகரங்களில் பொருளாதார மாற்றங்களால் அடையப்பெற்றவை.அப்படியென்றால் கருத்தியல் தளத்தில் தமிழ் அறிவுஜீவி சமூகம் செய்துகொண்டிருப்பது என்ன என்பதே நான் கேட்டுக்கொண்ட கேள்வி.

அபிலாஷ் - சர்வோத்தமன் கருத்து முதலிலும் செயல் தொடர்ந்தும் நிகழும் என நான் நம்பவில்லை. பொருளியல், உளவியல்ம், சமூகவியல் காரணங்களுக்காக பல்வேறு விசயங்களை செய்கிறோம். அதற்கு நியாயமும் அர்த்தமும் வழங்கத் தான் கருத்தியல். சாதியை ஒழிக்கவென்று யாரும் மணம் புரிவதாக நானும் நம்பவில்லை. சாதி கடந்த திருமணங்கள் சாதியை ஒழிக்குமா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. சாதியை நான் குறுகின மனப்பான்மை என புரிந்து கொள்கிறேன். குறுகின மனப்பான்மையை வெளியில் இருக்கிற ஒன்றைக்கொண்டு அழிக்க முடியாது.

நான் - அபிலாஷ் , சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று சொல்ல முடியாது.கோசாம்பி ராஸ் பேஸ் பார்தி என்ற பழங்குடியினர் பற்றிய ஆய்வில் பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதே பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான் என்று சொல்கிறார்.பேருந்து நிலையத்திற்கு ஒரு பேருந்து காலியாக வந்து நிற்கிறது.நாம் முட்டிமோதி முதலில் ஏறிவிடுகிறோம்.நம்மை போல வேறு சிலரும் ஏறுகிறார்கள்.அப்போது நமக்கு பக்கத்தில் ஒரு கைக்குட்டையை போட்டு என் நண்பர் வருகிறார் என்று சொல்கிறாம்.நமது நண்பர் நிதானமாக கடைசியில் ஏறி நமக்கு அருகில் அமர்ந்துகொள்கிறார்.நம்முடன் ஏறியவர் கடைசிவரை நின்று கொண்டு பயணம் செய்கிறார்.இதில் இருக்கும் மனநிலைக்கும் மேலே சொன்ன பார்தி பழங்குடியினர் பற்றிய மனநிலைக்கும் பெரிய வித்யாசம் இல்லை.ஆக சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று மட்டும் சொல்லி விட முடியாது.அது ஒரு இனக்குழு சமூகத்தின் நாம்X பிறர் என்ற முரணில் இருக்கிறது.சாதிக்கு பல்வேறு அடுக்குகள் இருக்கிறது.கருத்தியல் ரீதியாக அதை எளிய அளவில் கூட நாம் இன்றும் அசைக்கவில்லை.சாதியை விட வேண்டும் சொல்லி விட்டால் சாதியை விட முடியாது.நேர்மையாக ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அதற்கு எதிராக தனக்குள் போராடி கொள்ள வேண்டும்.ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் இதே போல ஒரு பேருந்தில் எத்தனை இடம் காலியாக இருக்கிறது வெளியே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற ஒரு எளிய கணக்குகூட போட்டுகொள்ளாமல் இப்படி முட்டிமோதி கொள்கிறார்களே என்று ஜே.ஜே. கேட்கும் ஒரு கேள்வி வரும்.அதற்கு எளிய பதில், ஏனேனில் நின்று கொண்டிருப்பது ஒரு இனக்குழு சமூகம் என்று ஜே.ஜேவுக்கு நாம் சொல்லிவிடலாம்.

My Concern is that, is Tamil Literature just yet another Institution like School , College, Religion to facilitate the Industrialisation process of India.Is it just educating the people to understand the Civic Values an Industralized society needs? ஏன் ஒரு குரல் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வா நாம் இந்த மரநிழலில் அமர்ந்துகொண்டு சில பழங்கதைகளை பேசுவோம் என்று சொல்லவில்லை.ஆர்.நல்லகண்ணு தான் ஒரு பொதுவுடைமைவாதியாக மாறியதற்கு பாரதி கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பு ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார்.நான் பார்த்தவரையில் அதன்பிறகு தமிழின் மிக சிறந்த ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் மட்டும் தான் தேவதேவனின் ஆளுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்.இங்கே தமிழில் பல தளங்களில் போராடிய பலரும் ஒன்று காந்தியவாதிகள் அல்லது இடதுசாரிகள்.இவர்களை மக்களுக்காக போராடிய தூண்டியது காந்தியும் மார்க்ஸூம் தான், தவிர எந்த நவீன தமிழ் இலக்கிய பிரதியும் அல்ல.ஒரு எழுத்தாளன் ஒரு சமூகத்தில் நேரடியாக பாதிப்பு செலுத்துவதில்லை.அவன் மூலமாக சில செயற்பாட்டாளர்கள் உருவாகுகிறார்கள்.அவர்கள் சமூகத்தை பாதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.அப்படி பாரதிக்கு பின் எத்தனை செயற்பாட்டாளர்களை நவீன தமிழ் இலக்கிய பிரதிகள் உருவாக்கியிருக்கின்றன.

பாலாஜி சங்கர் என்ற இயற்கை விவசாயம் செய்யும் ஒருவரை பற்றி சில காலமாக நான் அறிவேன்.அவர் தன் அனுபவங்களை அவ்வவ்போது earth.org.in என்ற வலைதளத்தில் எழுதிவருகிறார்.இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் படித்துவிட்டு மிக நல்ல வருமானம் பெற்றுவந்த ஒருவர் சீர்காழி அருகில் சில ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்கிறார்.தன் பிள்ளைகளுக்கு மைய அமைப்பு வழி கல்வி கூடாது என்பதால் பள்ளிக்கு அனுப்பாமல் தானே கற்றுத்தந்தார்.பிறகு பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் பள்ளியில் சேர்த்தார்.இதை கற்பனை செய்து பார்த்தால் அந்த குடும்பம் இவரின் முடிவுகளால் எத்தனை கொந்தளிப்புக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாகியிருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும்.இவரை பாதித்தவர்கள் தோரேவும் மாசானபுவும் தான்.இவருக்கு நவீன தமிழ் இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கூட இல்லை.ஒரு மைய அமைப்பு இருக்கிறது.அந்த மைய அமைப்பின் திசையில் எல்லாம் பேசப்படுகிறது.அந்த மைய அமைப்பை மேலும் நல்ல விதமாக மாற்ற அந்த அமைப்புக்குள் நிறைய உரையாடல்கள் நடக்கும்.அதில் எந்த தவறும் இல்லை.ஆனால் அந்த குரல்களில் ஒன்றாக இலக்கியம் இருக்கக்கூடாது என்கிறேன்.அது இலக்கியத்தின் பணி அல்ல.நான் எழுதியுள்ள பதில் உளறல் போல தெரியலாம்.தாடி வளர்த்து காடுகளில் வாழ்ந்து ஆயுதம் ஏந்தி இலக்கியம் வளர்க்க சொல்லவில்லை.அக்கினிக்குஞ்சு இல்லை.கார்ப்ரேட் நிறுவணங்கள் ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் தொழில் மேலும் வளம்பெற நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.கல்வி சாலைகள் தொடங்குவது, சாலைகளை சீரமைப்பது, ஏழைகளுக்கு உதவுவது, நாட்டார் கலைகளுக்கு உதவுவது என்ற பல விஷயங்களை செய்கிறார்கள்.அவற்றில் இந்த சமூகத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் , தங்கள் தொழில் வளம்பெறுவதற்கு தேவையான விழுமியங்களை வளர்ப்பதும் முக்கிய விஷயங்கள்.இது போன்ற காரணங்களுக்கு இல்லாமல் ஒரு நிறுவணம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாது.அப்படிப்பட்ட கார்ப்ரேட்கள் தமிழ் இலக்கியத்தை கவனிக்க தொடங்கினால் நிச்சயம் நிறைய நீதி அளித்து அதை வளர்ப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு ஐரோப்பாவாவின் குடிமைச்சமூகச்சூழல் ஒரு இஷ்டலோகமாக இருக்கக்கூடாது.ஏனேனில் அடைவதற்கு அது இஷ்டலோகம்(Utopia) அல்ல.To Negate


மிக அதிக அளவில் தமிழ் இலக்கிய புத்தகங்களை வாசித்தும் எழுதியும் தன் வாழ்க்கையை தமிழ் இலக்கியத்திற்காக அர்ப்பணித்துவிடும் ஒருவருக்கும் அவரின் பக்கத்து வீட்டில் தினசரி செய்திதாள் தவிர வேறு எதுவும் வாசிக்காத ஒருவருக்கும் தினசரி வாழ்க்கைமுறை சார்ந்து என்ன வித்யாசம் இருக்கிறதென்று பார்த்தால் ஒன்றுமில்லை.அபிலாஷ் சமீபத்தில் எழுதிய குறிப்பொன்றில் மாற்று சாதியில் திருமணம் செய்துகொள்வது பற்றி எழுதியிருந்தார்.உண்மையில் சாதி மாறி திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயமா? பெருநகரங்களாக மாறிவிட்ட சென்னையில் வாழும் மத்தியதரவர்க்கத்தினை சேர்ந்த ஒருவர் எந்த மாற்று சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டாலும் அவரை யாரும் ஊர் விலக்கமோ சாதி விலக்கமோ செய்யப்போவதில்லை.இன்று இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கூட இல்லாத பலர் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.பெருநகரங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சாதி அதன் அர்த்தததை இழந்துவிட்டதுதான் உண்மையான காரணம்.அதே நேரத்தில் பெருநகரங்களில் வாழும் ஒருவர் சாதியை இறுக பற்றிக்கொள்வதற்கு முக்கிய காரணம் அந்நியமாதல்.இந்த அந்நியமாதல் அவரை ஏதோ ஒன்றோடு அடையாளபடுத்திக்கொள்ள வற்புறுத்துகிறது.அவருக்கு இலக்கிய எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தால் அவர் சாதியை விட்டுவிடுவது அவருக்கு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை.ஹெச்.ஜி.ரசூல் சில வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் பற்றி எழுதியதை தொடர்ந்து அவரை ஜமாத் ஊர் விலக்கம் செய்தது.சிறுநகரத்தில் வாழ்ந்துகொண்டு அதை அவர் நீதிமன்றத்தில் எதிர்த்தார்.வெற்றிபட்டார்.அதுதான் பெரிய விஷயம்.மற்றபடி மாற்று சாதி திருமணமெல்லாம் பெருநகரங்களில் பெரிய விஷயமே இல்லை.இன்று பெருநகரங்களில் ஒருவர் நன்றாக சம்பாதிப்பவராக இருந்தால் தனியாக வாழ்வதில் எந்த சிரமமும் இல்லை.சிறுநகரங்கள், கிராமங்களின் உலகமே வேறு.அங்கு நமக்கு ஒரு அடையாளம் இருக்கிறது.அங்கு வாழ்க்கை நடத்தும் ஒருவர் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்வது இன்றும் கொஞ்சம் சிரமமான காரியம் தான்.பெருநகரங்களில் இருக்கும் அடையளாமின்மை நமக்கு பல செளகரியங்களை தருகிறது.அந்த செளகரியத்தின் மூலமாக நாம் அடைந்த ஒன்றாகத்தான் மாற்று சாதி திருமணங்களை பார்க்க முடியுமே தவிர அதை ஒரு கலகமாகவோ மாற்றமாகவோ ஒரு கருத்தியல் வெற்றியாகவோ பார்க்க முடியாது.

கருத்தியல் வெற்றி என்கிற போது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.இன்று நடந்துவரும் பல மாற்றங்கள் கருத்தியல் ரீதியாக அடைந்த மாற்றங்கள்தானா. எண்பது தொண்ணூறுகளுக்கு பிறகு பின்நவீனத்துவம் தமிழில் அறிமுகமாகிறது.சிந்தனையின் பெருங்கதையாடல் நவீனத்துவம் என்றால் மையமற்ற சிறுகதையாடல் பின்நவீனத்துவமாகிறது.அதன் அடிப்படையில் மையத்திற்கு வெளியிலிருந்து தலித்தியம் , பெண்ணியம் என்ற தளங்களிலிருந்து பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள்.இன்று தலித்துகளும் பெண்களும் திருநங்கைகளும் அடைந்துவரும் மிக குறைந்த வெற்றிகள் இந்த பின்நவீனத்துவம் மூலமாக பெற்ற கருத்தியல் வெற்றிகள்தானா.உலகமயமாதலும் , அதன் மூலமாக அடைந்த தொழில்மய நகரமயமான சமூகம் இல்லாவிட்டால் இன்று மேற்சொன்னவர்கள் வாழ்க்கையில் மிக குறைந்த அளவிலான இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா?இந்த பொருளாதார மாற்றங்கள் இல்லாவிட்டால் தலித்துகளின் பெண்களின் திருநங்கைகளின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.அப்படியென்றால் நமது பெரும்பாலான எழுத்தாளர்களும் இதழ்களும் செய்துகொண்டிருப்பது என்ன? ஒரு சமூகத்தில் பண்பாடு மேற்கட்டுமானம் என்றால் பொருள் உற்பத்தி அடித்தளம் என்று பிரிக்கிறது மார்க்ஸியம்.இந்த மேற்கட்டுமானம் அடித்தளம் இவற்றுக்கிடையிலான முரணில் உருவாகுவது இயக்கம்.அடித்தளத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் , பொருள் உற்பத்தி இவற்றை தொடர தொழில்மய சமூக்த்திற்கு விழுமியங்கள் தேவை.அந்த விழுமியங்களை உருவாக்கவும் , தொடரவும் செய்ய மேற்கட்டுமானத்தில் உதவுபவை தான் சமயம் , கோவில் , பள்ளி ,கல்லூரி எல்லாம்.அவற்றில் ஒன்றாக இன்று முடங்கிபோனது தான் நவீன தமிழ் இலக்கியம் அல்லது பின்நவீனத்துவ தமிழ் இலக்கியம்.சாராம்சத்தில் இன்றைய தமிழ் எழுத்தாளர்களும் , இலக்கிய இதழ்களும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று பார்த்தால் நகரமயமான தொழில்மயமான சமூகம் நிலைத்திருக்க தேவைப்படும் தனிமனித விழுமியங்களை உருவாக்க போராடிகொண்டிருக்கிறார்கள்.Civic Sense அவ்வளவுதான்.பெங்களூரில் என் அலுவலகம் இருக்கும் சாலை பிரதான சாலை என்பதால் பாதசாரிகள் கடப்பதற்காக Traffic Lights பொருத்தப்பட்டது.ஒரு நாள் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிவதற்குமுன்பே போக்குவரத்தில் ஏற்பட்ட ஒரு இடைவெளியில் பலரும் சாலையை கடக்க முயன்றோம்.அப்போது ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ சேர்ந்த ஒரு வெளிநாட்டுக்காரர் Wait for the Signal என்று கத்தினார்.யாரும் பொருட்படுத்தவில்லை.ஒரு வகையில் நம் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் இதழ்களும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு இனக்குழு சமூகம் தனிமனிதர்களிலான சமூகமாக மாறிவரும்போது Transitionயில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இவை.பச்சை விளக்கு எரியும் போது சாலையை கடப்பதற்கான விழுமியங்களை பள்ளியில் கற்றுத்தர மறந்துவிட்டதால் இவர்கள் நமக்கு கற்றுத்தர விரும்புகிறார்கள், அவ்வளவுதான்.இந்த விழுமியங்களை காலப்போக்கில் பள்ளிகளே கற்றுத்தர ஆரம்பித்தால் நமது தமிழ் கூறும் நல்லுலகின் கருத்துலகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை.எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு மேடையில் கூடங்குளத்தின் எதிர்பாளர்களுக்கு ஆதரவாகவும் , ரஷ்ய தூதர் கூடங்குளம் எதிர்பாளர்கள் இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்கள் என்று சொல்கிற இன்னொரு மேடையில் அமரந்து அவர்கள் தரும் விருதை பெற்றுக்கொள்வதிலும் பிரச்சனையில்லை.ஜெயமோகனுக்கு காந்தியை பற்றி பேசிக்கொண்டே அப்துல் கலாம் கையால் விருது வாங்கிக்கொள்வதில் பிரச்சனையில்லை..சாரு நிவேதிதா கூடங்குளம் பற்றி விஞ்ஞானிகள் பேச வேண்டும் என்கிறார்.மனுஷ்யபுத்திரனுக்கு தொழில்மயமான சமூகத்திற்கு தேவையான நவீன விழுமியங்களை உருவாக்க நிறைய போராட்ட களன்களை சந்தித்துகொண்டிருக்கிறார்.காலச்சுவடு கண்ணனுக்கு தான் கூடங்குளம் எதிர்பாளர்களின் ஆதரவாளன் என்று சொல்லிக்கொள்வதிலும் , எஸ்.பி.உதயகுமாரிடம் காலச்சுவடு பற்றிய கருத்தை பதிவு செய்வதிலும் அக்கறை நிறைய இருக்கிறது.கனிமொழியின் முதல் பாராளுமன்ற உரையை பிரசுரித்தவர் அதன் முன்னோ பின்னோ எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் உரையை பிரசுரித்திருக்கிறார்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஜெயமோகன் எழுப்பிய கருத்தியல் உருவாக்கும் அதிகாரம் பற்ற கேள்விகள் தஸ்தாவெய்ஸ்கியால் நூற்றிஐம்பது வருடங்களுக்கு முன்பே கேட்கப்பட்டுவிட்டது.தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் நாவலில் , பேதை நாவலில் விஞ்ஞானம் குறித்து தொழில் மய சமூகம் உருவாக்கும் அறவீழ்ச்சியை பற்ற பேசியதை நெருங்கக்கூட இங்கு யாருமில்லை.உண்மையில் அதுதான் கலை.ஹெர்பர்ட் மார்க்யூஸா சொல்வது போல The Purpose of Art is to Negate.தமிழ் இலக்கியம் செய்து கொண்டிருப்பது To Permit.சரி அப்படியென்றால் தமிழ் அறிவுஜீவி பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் அளித்த கருத்து கொடை எதுவும் இல்லையா.இருக்கிறது.அவர்கள் அளித்த மிகப்பெரிய கருத்து கொடை- தமிழ் தேசியம்.நான் ஒரு ஒன்றுமில்லைபிரமிள்
வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்ட
வானம் எல்லையில்லாதது.

என்ற பிரமளின் கவிதையில் மழை பெய்து நீண்ட நாட்களாகி மண் வெடித்து வரண்டு கிடக்கும் நிலத்தில் ஒரு நாலு முழ வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு தலையில் முண்டாசுடன் ஏதையோ சிந்தித்தபடி சென்றுகொண்டிருக்கும் விவசாயி சட்டென்று நெற்றியில் கைவைத்து வானத்தை பார்க்கும் போது கண்டுகொள்கிறார் வானம் எத்தனை எல்லையில்லாதது என்று.மிகப்பெரிய தரிசனம் போல கிடைக்கும் மனவிரிவு.மிகச் சிறந்த கவிதை.இந்த கவிதையை ஒரு இந்திய மனதால் தான் எழுத முடியும் என்று தோன்றுகிறது.காக்கை குருவி எங்கள் ஜாதி , நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதி வரியின் தொடர்ச்சிதான் பிரமளின் இந்த கவிதையும்.ஒரு அத்வைத வாழ்க்கை நோக்கு.வானம் எவ்வளவு பெரியது.எவ்வளவு மனிதர்கள் , எவ்வளவு ஜீவராசிகள்.புறக்கண்ணால் வாழ்க்கையை அணுகி அதன் மூலம் அடையும் மிகப்பெரிய அகவிரிவு இந்த வாழ்க்கை நோக்கு.
நகுலன்

நகுலனின் புகழ்பெற்ற ஒரு கவிதை.

ராமச்சந்திரனா என்று கேட்டேன்.
ராமச்சந்திரன் என்றார்.
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை.
அவர் சொல்லவுமில்லை.

இந்த கவிதையை முதலில் படித்த போது ஒன்றும் புரியவில்லை.சில வருடங்கள் கழித்து இப்போது அந்த கவிதைக்கு நான் என் மனதில் சில வரிகளை சேர்த்து வாசிக்கிறேன்.ஏன் அவர் கேட்கவில்லை , ஏனேனில் அது அத்தனை முக்கியமில்லை, ஏன் அவர் சொல்லவில்லை, ஏனேனில் அதுவும் முக்கியமில்லை, ஏன் முக்கியமில்லை என்றால் சாராம்சத்தில் நாம் எந்த ராமச்சந்திரனாக இருந்தாலும் அது ஒன்றுமில்லை என்பது தான் அந்த வரிகள்.ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலில் மேலாளர் மெர்சால்டை அழைத்து பாரீஸில் வேலை இருக்கிறது , செல்ல விருப்பமா என்று கேட்பார்.அதற்கு மெர்சால்ட் சொல்வான் எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே.அங்கே செல்வது நல்லதுதான் , இங்கே இருப்பதும் நல்லது தான்,நான் இங்கேயே இருக்கிறேன் என்பான்.ஆல்பெர் காம்யூ இருத்தலிய துயர் பற்றியோ அவதி பற்றியோ பேசுவதில்லை.அவர் இருத்தலிய அபத்தத்தை பற்றி பேசுகிறார்.விஞ்ஞானத்தாலோ, சமயத்தாலோ நம் வாழ்க்கை குறித்தோ நம் இருப்பு குறித்தோ எந்த வித அர்த்தத்தையோ ஒரு காரணத்தையோ தர முடியவில்லை.அப்படி விளக்கப்பட்டாலும் நம் மனதின் அந்தரங்கம் அதை ஏற்பதில்லை.அதனால் ஆல்பெர் காம்யூ சொல்கிறார் இந்த வாழ்க்கை அபத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்த விளக்கமும் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாது.எதையும் பற்றிக்கொள்ள தேவையில்லை.நம்மை காப்பாற்றவோ , கரையேற்றவோ எந்த கரமும் வரப்போவதில்லை.இந்த பிரக்ஞையோடு வாழ்க்கையை அணுகவேண்டும்.இதன் ஒரு கருத்துருவகமே மெர்சால்ட்.ஆனால் நகுலன் ஆல்பெர் காம்யூவை தான்டி செல்கிறார்.நகுலன் முன்வைப்பது இருத்தலிய அபத்தத்தின் ஆன்மிக உச்சம்.இந்த மேலே சொன்ன நகுலன் கவிதைக்கு ஒரு தொடர்ச்சி உண்டு.புறநானூற்று பாடலான பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே என்பதன் தொடர்ச்சிதான் நகுலனின் ராமச்சந்திரன் கவிதை.சமயங்களில் முக்கியமானதாக பேசப்படும் நகுலனின் "யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம்" என்ற கவிதையை நாம் நகுலன் மூலமாக மட்டுமல்ல நவீன இயற்பியல் மூலமாக கூட சென்றடையலாம்.ஆனால் ராமச்சந்திரன் கவிதை அப்படியல்ல.அது ஒரு ஆன்மிக எல்லையை தொடுகிறது.பிரமளின் கவிதையும் ஒரு ஆன்மிக கவிதைதான்.ஆனால் அது முன்னர் சொன்னது போல புறக்கண் கொண்டு பார்பதால் உருவாகும் அகமனவிரிவு.ஆனால் நகுலன் சொல்வது அகத்தில் மீக நீண்ட தூரம் செல்லும் போது ஏற்படும் அபத்த நிலையின் உச்சம்.இரு வேறு உலகங்கள்.இரு வேறு நோக்கு.இரண்டிற்கும் இந்திய தத்துவத்தின் தொடர்ச்சி உண்டு.விஷ்ணுபுரம் நாவலில் முதல் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூன்றாவது அத்தியாயத்தில் ஐதிகங்களாக மாறிவிடுவார்கள்.நமது முன்னோர்களின் ஆசைகள், கனவுகள்,கண்ணீர், மகிழ்ச்சி எல்லாம் என்னவானது?நமது முன்னோரின் பெயர்கள் என்ன?நம்முடைய கனவுகள் , ஆசைகள் ,கண்ணீர் , மகிழ்ச்சி எல்லாம் என்னவாக போகிறது.ஒன்றுமில்லை.ஆம்.நான் ஒரு ஒன்றுமில்லை.இதை படிக்கும் நீங்கள் கூட ஒரு ஒன்றுமில்லை தான்.நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்.இது ஒரு உண்மை.இதை நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்தவர் நகுலன்.


பி.வி.காரந்த்பி.வி.காரந்த்

பூனே திரைப்படக்கல்லூரி மாணவரான ராமச்சந்திரா என்பவரால் எடுக்கப்பட்ட பி.வி.காரந்த் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.மேங்களூர் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த வெங்கடரமண காரந்த் நாடகத்துறையில் , இசையில் , திரைத்துறையில் எப்படி ஒரு முக்கியமான ஆளுமையாக மாறினார் என்ற சித்திரத்தை மிக அற்புதமாக இந்த ஆவணப்படம் பதிவுசெய்திருக்கிறது.பள்ளியில் சில நாடகங்களில் நடிக்கிறார் காரந்த்.எட்டாம் வகுப்புக்கு பிறகு தந்தையார் இனி படிக்க வைக்க பணம் இல்லை என்று சொல்லி பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் தங்கி அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு பாடம் சொல்லத்தர அனுப்புகிறார்.சிவராம காரந்த் போல தானும் எழுத வேண்டும் என்ற உந்துதலுடன் காரந்த் பல புத்தகங்களை வாங்கி படிக்கிறார்.சமயங்களில் புத்தகங்கள் வாங்க காசுக்காக திருடவும் செய்கிறார்.அப்படி ஒரு முறை திருடிய பின் அவர் தான் திருடினார் என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.அவரை வீட்டிலிருந்து நூறோ இருநூறோ தந்து வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பிவிடுகிறார்கள்.


மறுபடியும் வீட்டுக்கு செல்வதை அவமானமாக கருதும் காரந்த் மைசூர் செல்கிறார்.அங்கே ஒரு நாடகக் கம்பெனியின் போஸ்டரை பார்த்து அங்கே சென்று சேருகிறார்.முதலில் பலராமன் , கிருஷ்ணன் வேஷம் போடும் சிறுவன் ஒடிவிடவே கிருஷ்ணன் வேஷம், பின்னர் ஸ்திரிபார்ட் வேஷங்களில் நடிக்கிறார்.ஒரு கட்டத்தில் குரல் உடைகிறது.குரல் உடையும் போது சிறுவர்கள் நாடகக் கம்பெனியிலிருந்து ஒடிவிடுவார்கள்.அப்போது 1944 யில் வினோபாவே எல்லோரும் நமது தேசிய பாஷையான இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன செய்தியை படிக்கிறார்.இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் காசிக்கு செல்ல வேண்டும் என்று யாரோ சொன்னதை நினைத்துக்கொள்கிறார்.காசிக்கு சென்று பள்ளியில் சேர்கிறார்.பின்பு கல்லூரி.அங்கே இருக்கும் போது தென் இந்திய மாணவர்களோடு பழகுவதை விட அந்த பகுதி மக்களோடு பழகுவதையே அவர் பெரிதும் விரும்புகிறார்.ஏனேனில் அவரின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று இந்தியை முழுமையாக கற்பது.மாலை நேர வகுப்பில் இசையையும் கற்கிறார்.தனது ஆய்வு பாடமாக இசையை தேர்வு செய்ய இருக்கும் நேரத்தில் அவரின் ஒரு நாடகத்தை பார்க்கும் அவரது ஆசிரியர் அவரை நாடகத்தில் ஆய்வை செய்ய சொல்கிறார்.காரந்த் நாடகத்தில் ஆய்வை மேற்கொள்கிறார்.பிரேமா என்ற பெண்னை திருமணம் செய்து கொள்கிறார்.நீங்கள் தாடி இல்லாத ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று பெண் பார்க்கும் படலத்தின் போது பிரேமா சொல்வதற்கு என் படிப்பு முடிந்ததும் அப்படி செய்கிறேன் என்று சொல்கிறார்.பின்னர் 1958யில் திருமணம்.டில்லியில் கமலாதேவி சட்டோபத்யாயா தேசிய நாடகப்பள்ளியை துவங்குகிறார்.அதில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று காரந்த் முடிவு செய்கிறார்.அவருக்கு தெரியாமல் பிரேமா டில்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்து அது அவருக்கு கிடைக்கவும் செய்கிறது.ஆக காசி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.இப்போது அவர் ஹிந்தி பேசும் போது அவரை யாரும் கன்னடிகர் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரமாதமாக பேசுகிறார்.

டில்லி பயணம்.தேசிய நாடகப்பள்ளி.இரண்டு ஆண்டுகளின் முடிவில் இப்ராஹிம் அல்காஸி அங்கே வருவதை அறிந்த காரந்த் இன்னும் ஒரு வருடம் நீட்டித்து கொள்கிறார்.இப்ராஹிம் அல்காஸி மூலமாக நாடகம் குறித்த கலைச்சொற்களை முதல் முறையாக அறிகிறார்.பின்னர் ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை.அங்கே நாடகங்களையும் அரங்கேற்றுகிறார்.சங்கீத நாடக அகாதமி மூலமாக இந்தியா முழுவதும் பல நாடகப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.வம்சவிருக்ஷா என்ற எஸ்.எல்.பைரப்பா எழுதிய நாவலை கிரிஷ் கர்ணாடுடன் இனைந்து திரைப்படமாக இயக்குகிறார்.விஷ்ணுவர்தன் இந்தப் படத்தில் தான் சின்ன கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்திருப்பார்.மறுபடியும் தேசிய நாடகப்பள்ளி.இந்த முறை இயக்குநராக.தேசிய நாடக பள்ளியை டில்லியிலிருந்து இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் நீட்டிக்கிறார்.ஒரு முறை நடிகர் பாலா சிங்கை சந்தித்திருக்கிறேன்.அப்போது ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது தேசிய நாடகப்பள்ளியில் படித்தேன் என்று சொன்னார்.அவரே தொடர்ந்து டில்லி சென்று அல்ல மதுரையில் நடத்திய பயிற்சி வகுப்புகள் மூலம் என்று விளக்கினார்.இப்போது தான் புரிந்து கொள்கிறேன்.அது பி.வி.காரந்தின் முயற்சியால் என்று.இதனால் தான் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் காரந்தின் சுயசரிதை நூலின் சில முக்கிய வரிகளை இந்தியாவின் பல்வேறு நாடக நடிகர்கள் வாசிப்பதாக இந்த ஆவணப்படத்தை அமைத்திருக்கிறார்.அதன் மூலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காரந்த் எப்படி நாடகங்களை கொண்டு சேர்த்தார் என்பதும் அதன் மூலமாக உருவான எல்லோரும் காரந்த்தின் வடிவங்களே என்பதை சொல்ல இதை பயன்படுத்தியதாக இயக்குநர் பின்னர் உரையாடலின் போது சொன்னார். யக்ஷகானா என்ற கர்நாடக நிகழ்த்துக்கலை வடிவமும் நவீன நாடகத்தின் வடிவமும் முயங்கிய வகையிலேயே அவரின் நாடகங்கள் வெளிப்பட்டிருக்கிறது..ஷேகஸ்பியரின் நாடகங்களுக்கு அவர் அப்படிப்பட்ட வடிவத்தை தான் கொடுக்கிறார்.ஒரு அம்மையார் படத்தில் சொல்கிறார்.அவர் சிறுவயதிலேயே தன் கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்.ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர் தன் வீட்டை சுமந்துகொண்டுதான் எல்லா இடங்களுக்கும் சென்றார்.மிக நல்ல வரி.காரந்த்தின் ஆளுமையை இந்த வரி மிக அழகாக விவரிக்கிறது. அவர் நவீன நாடக வடிவங்களை கற்றாலும் சாரம்சாத்தில் அவர் கர்நாடக நாடக வடிவத்தை மெறுகேற்றினார் என்று கிரிஷ் கர்னாட் சொல்கிறார்.தன் நாடகங்களுக்கு அவரே இசை அமைத்திருக்கிறார்.அவர் தேசிய நாடகப்பள்ளியில் சேர்வதற்கு முன்பே நாடகம் குறித்த பல்வேறு விஷயங்களை ஆழமாக அறிந்திருந்தார்.இருந்தும் அவர் மேலும் மேலும் கற்க விரும்பினார் என்கிறார் தேசிய நாடக பள்ளியில் அவருடன் படித்தவரும் செம்மீன் திரைப்பட நாயகனுமான மாதவன் நாயர்.அவர் டில்லியில் தேசிய நாடகப்பள்ளியில் சேரும் போது அவருக்கு வயது 31.டில்லியில் இயக்குநராக இருந்த போது கிரிஷ் காஸரவள்ளியின் திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.ஒரு முறை ஒரு படத்திற்காக பணம் வாங்கும் போது மாணவர் ஒருவர் இந்த நேரத்தை எங்களுக்காக நீங்கள் செலவு செய்தால் நாங்கள் பயண் பெறுவோம் என்று சொல்கிறார்.அது காரந்த்தை மிக அதிக அளவில் பாதிக்கிறது.டில்லியில் தனக்கு வேலை பளூ அதிகமானதாலும் தான் விரும்புவது போல மாற்றங்களை செய்ய முடியாததாலும் வேலையை ராஜினாமா செய்கிறார்.

மத்திய பிரதேச தலைநகர் போபால் செல்கிறார்.அங்கே பாரத் பவனில் ரங்கமண்டல் ரேப்பர்டோரி ஆரம்பிக்கிறார்.அங்கே காரந்த் நாடகங்களிலும் நடிக்கவும் செய்கிறார்.அங்கே உள்ள வட்டார வழக்கை மிகவும் ரசித்து கற்றுக்கொள்கிறார்.காலம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கையில் ஒரு சம்பவம் அவர் வாழ்வில் நிகழ்கிறது.அந்த நாடகப்பள்ளியின் பெண் ஆசிரியை வீட்டிற்கு காலை பதினோரு வாக்கில் செல்கிறார்.அன்று கிங் லியர் நாடகம் அரங்கேற்றப்பட இருக்கிறது.அந்த ஆசிரியை திடீரென்று தனக்கு சரியாக சம்பளம் தரப்படுவதில்லை என்று கத்துகிறார்.சமையலறை சென்று உடலில் மண்ணென்னையை ஊற்றி தீமூட்டி கொள்கிறார்.தீயை அணைக்க முயலும் காரந்தின் கைகளிலும் தீக்காயம் ஏற்படுகிறது.காவலர்கள் மறுபடி மறுபடி அவரை கேள்விகளால் துளைத்தெடுக்க நான் தான் கொலை செய்ய மண்ணென்னை ஊற்றி தீமூட்டினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.ஆனால் அந்த ஆசிரியை அவர் மீது எந்த தவறும் இல்லை என்று வாக்குமூலம் அளிக்கிறார்.இரண்டு மாதம் சிறை.அங்கே ஒரு நாடகத்தை நடத்துகிறார்.வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்கிறார்.வெளியே வரும் காரந்த்திற்கு அதே மத்திய பிரதேச அரசு காளிதாஸ் சம்மான் விருது வழங்குகிறது.

ஆனால் அதன்பிறகு அவர் போபாலில்இருக்க விரும்பாமல் மைசூர் செல்கிறார்.அங்கே ரங்காயணா ரேப்பர்டோரி ஆரம்பிக்கிறார்.அது எப்படி வளர வேண்டும் என்று வரைவை உருவாக்குகிறார்.ஆனால் மூன்று ஆண்டுகளில் அங்கே பயிலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கின்றனர்.ஒரு முறை ஏதோ சொல்ல வரும்போது ஒரு மாணவர் 'Please keep quiet , sir' என்கிறார்.தன் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று உணர்கிறார்.வேலை ராஜினாமா செய்கிறார்.தன்னை மிக சுதந்திரமாக உணர்கிறார்.ஆனால் காரந்த் மதுவுக்கு மிகவும் அடிமையானவராக மாறுகிறார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார்.ஒரளவு குணம் அடைந்து வரும் நிலையில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.இரண்டாயிரத்து இரண்டில் மரணம் அடைகிறார்.

படத்தில் அவரை பற்றி சில சுவாரசியமான சம்பங்கள் இருக்கின்றன.ஒரு முறை எங்கோ நாடகத்திற்கு சென்ற போது சாலையில் ஒருவன் அவர்களிடமிருந்து பணத்தை திருடிக்கொண்டு ஒடுகிறான்.காரந்துடன் இருந்தவர்கள் அவன் பணத்தை எடுத்து கொண்டு ஒடுகிறான் என்று கத்தும் போது அவர் அவன் எப்படி ஒடுகிறான் பாருங்கள் என்று சொல்கிறார்.மைசூரில் இருந்த போது அவர் மாணவர்களுக்கு சொல்லும் முக்கிய அறிவரை மக்கள் கூடும் சந்தை பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு சென்று அங்கே கேட்டும் விதவிதமான ஒசைகளை அவதானிக்க வேண்டும்.பின்னர் பட்டறையில் அந்த ஒசைகளை பயிற்சி செய்ய வேண்டும் என்பது தான்.அவர் எப்போதும் மக்களோடு வாழ்ந்திருக்கிறார்.இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறார்.தேசிய நாடக பள்ளியில் இயக்குநராக இருந்த போது காலை ஐந்து மணிக்கெல்லாம் வளாகத்தில் மாணவர்களின் பயிற்சிகளை பார்வையிடுகிறார்.அந்த காலகட்டத்தில் தான் அவரை பாபா என்ற பெயரால் மாணவர்கள் அழைக்க ஆரம்பிக்கிறார்கள்.ஒரு முறை தான் ஏன் இப்ராஹிம் அல்காஸியை போன்று இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.காந்தியை போல இந்தியா முழுவதும் பயணித்தவர் காரந்த் என்கிறார் பிரசண்ணா என்ற நாடக இயக்குநர்.இறுதியில் காரந்த் ஒரு உருவகம் , உருவகங்கள் அழிவதில்லை என்று முடிக்கிறார் பிரசண்ணா .மைசூரில் ஆரம்பித்த அவரின் நாடக வாழ்க்கை மைசூரில் முடிகிறது.அவரின் பல்வேறு முயற்சிகள் மூலமாக நாடகங்களுக்கு வந்த பல நூறு மாணவர்கள் வழியாக காரந்த் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார்.

நான் அறிந்த வரை தமிழில் இந்த ஆவணப்படத்தில் வரும் பல நாடக ஆளுமைகளை நேரடியாக அறிந்தவரும் நட்பு பாராட்டியவரும் பாரதி மணி மட்டும் தான்.பாரதி மணியும் இப்ராஹிம் அல்காஸியின் மாணவர்.பாரதி மணி அவர்கள் தன் டில்லி நாடக வாழ்க்கையை பற்றியும் இந்த ஆளுமைகளை பற்றியும் நிச்சயம் எழுத வேண்டும்.

பெங்களூரில் சுசித்ரா திரைப்பட அமைப்பில் தான் இந்த ஆவணப்படத்தை பார்த்தேன்.இந்த திரைப்பட அமைப்பு இருக்கும் சாலையின் பெயர் பி.வி.காரந்த் சாலை.இந்த திரைப்பட அமைப்பின் முக்கிய சிறப்பு இது சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது.இது போல சென்னையில் ஒரு திரைப்பட அமைப்பு தன் சொந்த கட்டிடத்தில் இயங்குமென்றால் அது மிக நிச்சயமாக ஆவணப்பட குறும்பட மாற்று திரைப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.ஆனால் அப்படி ஒரு கட்டிடத்தை இனி யாராலும் சென்னையில் உருவாக்க முடியாது.அது சாத்தியமில்லை.சென்னையில் இருக்கும் ஏதேனும் ஒரு பெரிய பங்களாவுக்கு சொந்தக்காரர் இதுபோன்ற விஷயங்களில் ஆர்வமுள்ளவராகவும் இருந்து அவருக்கு வாரிசுகள் இல்லாமல் இருந்தால் சென்னையில் ஒரு மாற்று திரைப்படங்களுக்கான கட்டிடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!ஒரு ஊரின் கதைஎம்.வி.வாசுதேவ ராவ்
                                                         


அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் கொடியேற்றம்.அதில் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் கோபி சிறிது சிறிதாக ஒரு பொறுப்புள்ள மனிதராக மாறுகிறார்.ஒக ஊரி கதா என்ற மிருனாள் சென் திரைப்படத்திலும் ஒரு கிராமம் வருகிறது. அதில் ஒரு இளைஞன் வருகிறான்.அவனுக்கு திருமணம் நடக்கிறது.அவள் கர்ப்பவதி ஆகிறாள்.இறந்தும் போகிறாள்.அவன் கடைசி வரை பொறுப்புள்ள இளைஞனாக மாறவில்லை. அந்த இளைஞனின் தந்தையாக நடித்தவர் எம்.வி.வாசுதேவ ராவ்.அற்புதமான நடிகர்.நாயகன் படத்தில் ஹூசைன் பாயாக நடித்திருப்பார்.படம் நெடிகிலும் அவர் தன் மகனிடம் சொல்வது இதுதான்.திருமணம் செய்து கொள்ளாதே.நம் நிலையில் அது சரியான முடிவு இல்லை என்பார்.வேலைக்கு சென்றால் அது உன்னை விழுங்கிவிடும்.அதன் பிறகு நீ வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.தப்பிக்க வாய்ப்பே இல்லை.ஆனால் மகன் ஆசைப்படுகிறான்.திருமணம் செய்து கொள்கிறான்.தந்தைக்கு வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை.அந்த ஊர் முழுவதும் அந்த ஊரின் நிலப்பிரபுவின் கட்டளைக்கு கட்டுப்பட்டது.அந்த நிலப்பிரபு அந்த கிராமத்தில் தனக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்வார்.ஒரு முறை தங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்பதற்காக அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் இருக்கும் ஆடுகளை நிலப்பிரபுவின் ஆட்கள் அந்த பெண் எவ்வளவு மன்றாடியும் இழுத்து செல்வார்கள்.அப்போது வாசுதேவ ராவ் சொல்வார், இவர்கள் எல்லாவற்றையும் எடுத்துகொள்வார்கள்.என் பாட்டானார் காலத்தில் அவருடைய நிலங்களை பிடுங்கிகொண்டார்கள்.என் தந்தை காலத்தில் வீட்டை பிடுங்கிகொண்டார்கள்.இனி ஒன்றும் இல்லை.கடுமையாக வேலை செய்து பெற்ற காசில் தனக்காக எதையாவது செய்துகொண்டால் அதையும் பிற்காலத்தில் அவர்கள் பிடுங்கிக்கொள்ளலாம்.அதனால் அவர் வேலை செய்வது இல்லை.மகனையும் வேலை செய்ய அனுமதிப்பதில்லை.அவ்வவ்போது குடித்துவிட்டு பாடுவார்.நாம் வேலை செய்து வேலை செய்து சாகிறோம்.அவன் உழைப்பை பெற்று தின்று தின்று பருக்கிறான் என்று. வரும் பெண் ஆண்கள் இருவரும் வேலைக்கு செல்லாததால் அவள் செல்கிறாள்.அங்கே வேலை கொடுப்பதும் நிலப்பிரபுதான்.ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றால் நாலு ரூபாய் தான் கொடுப்பார்கள்.இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம்.தந்தையும் மகனும் செய்வதில்லை.குடிப்பார்கள்.திருடுவார்கள்.தூங்குவார்கள்.காலம் கழிப்பார்கள்.வந்த பெண்ணிற்கு பிரசவத்தின் போது சிக்கலாகிவிடவே மருத்துவச்சியை அழைத்து வந்து பார்க்க சொல்வார்கள் கிராமத்து ஆட்கள்.ஆனால் இவர்களிடம் பணம் இல்லை.அப்போது வாசுதேவ ராவ் மகனிடம் சொல்வார்.போ போய் தூங்கு .ஒன்றும் ஆகாது.காலையில் குழந்தை இறந்து பிறக்கலாம்.அல்லது நன்றாக பிறக்கலாம்.எனக்கு இதெல்லாம் பழகிவிட்டது.எனக்கு நிறைய குழந்தைகள் பிறந்தன.சில குழந்தைகள் இறந்து பிறந்தன.சில பிறந்து சில நாட்கள் கழித்து இறந்தன.நான் கொண்டு போய் ஈடுகாட்டில் புதைத்துவிட்டு வருவேன்.போ போய் தூங்கு என்பார்.இருவரும் தூங்குவார்கள்.காலையில் சென்று பார்த்தால் இல்லாள் இறந்து கிடப்பாள்.அவளுக்கு இறுதி சடங்கு செய்ய அவளுக்கு புடவை வாங்க வேண்டும். அதற்கு காசு வேண்டும்.அதற்கு நிலப்பிரபுவிடம், அந்த ஊரின் பெரிய மனிதர்களிடம் சென்று பிச்சை கேட்பார்கள்.நிறைய சில்லறைகள் கிடைக்கும்.ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு வாங்கிய காசையெல்லாம் இரு கைகளாலும் இறுக பற்றியபடி வாசுதேவ ராவ் கடவுளிடம் வேண்டுவார்.எப்போதும் எங்களுக்கு இதுபோல கைநிறைய காசு கொடு.வாழ நல்ல வீடு கொடு.இறந்து போன பெண்னை திருப்பிக்கொடு. கொடு.கொடு.எல்லாம் கொடு.வாசுதேவ ராவுக்கும் அவரது மகனுக்கும் படம் முழுவதும் ஒரே உடைதான்.வாசுதேவ ராவ் கீழ்பாச்சி வேஷ்டி கட்டியிருப்பார்.அது ஒரு மாதிரி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கொடியேற்றம் ஒரு Coming of age படம்.ஒக ஊரி கதா ஒரு காலகட்டத்தின் சமூக அவலத்தை முன்வைத்த படம்.நக்சல்பாரி அமைப்புகள் முளைப்பதற்கான காரணங்களை முன்வைத்த படம்.மிருனாள் சென்னுக்கு முன் அடூர் கோபாலகிருஷ்ணனும் சத்யஜித்ரேவும் பின் நகர்கிறார்கள்.மிருனாள் சென் மிக சிறந்த சிந்தனையாளர். அவரைவிட ஜி.அரவிந்தன்.ஏனேனில் அவர் சிந்தனையாளர் மட்டுமல்ல.குழுந்தைமையின் நிஷ்களங்கமும் கொண்டவர்.அந்த கண்கள் அரவிந்தனிடம் இருந்திருக்கின்றன.அந்த நிஷ்களங்கத்தை வேறு சொல்லால் அழைக்க வேண்டும் என்றால் அது ஆன்மிகம்.

கே.ஜி.கண்ணபிரான்,கே.பாலகோபால்


2009ஆம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு சட்டம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவ்வவ்போது இப்படி எதாவது தோன்றும்.அப்போது இரண்டு கல்லூரிகளை முடிவு செய்தேன்.ஒன்று டெல்லி சட்டக் கல்லூரி மற்றது பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்.ஒரு வரிசைப்பட்டியலை பார்த்து அந்த முடிவுக்கு வந்தேன்.விண்ணப்பிக்கவும் செய்தேன்.நுழைவுச்சீட்டு கூட வந்தது.வீட்டில் ஒரே ரகளை.சண்டை.அழுகை.கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் கே.பாலகோபால் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.கே.ஜி.கண்ணபிரான் அவரைப்பற்றி EPWவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அதை படித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.அதில் முதல் பகுதி பரவாயில்லை.இரண்டாவது பகுதியில் மாலை நேர வகுப்புகள் இருக்கக்கூடிய சட்டக்கல்லூரிகள் எவை என்றும் கேட்டு எழுதினேன்.அதை ஏன் அவரிடம் கேட்டேன் என்று புரியவில்லை.அவர் கடிதத்தின் முதல் பகுதிக்கு பதில் எழுதியிருந்தார்.நீண்ட பதில்.என்னுடைய கடிதமும் அவருடைய கடிதமும் கீழே.


Mr.Kannabiran,

This particular mail is for obtaining information for personal reasons.So you can ignore the mail if you find it as nuissance.I read your article about Balagopal recently in EPW.I beleive that through the Court of Law lot of cases with regard to Human rights violations can be fought and justice be obtained.But anyway , recently i read a article by Balagopal "Beyond Violence and non-violence" , in which he questions the comman man belief in Legal system who is convinced that the Violent means will bear no fruit and goes further questioning the ignorance of comman man on not being aware of the class the Judges represent.He concludes the particular article that only mass people movements can do the changes.But I would like to know if there any law colleges that provide Part-time LLB courses through which after completion i will be able to practise law.As far as the information I got , it seems the bar council only accepts the Full time Law courses.Please let me know if you have information about it.

Thanks
Sarwothaman.

DEAR FREIND , you are welcome write to me and if I am not tired and not out of moods I will
try to answer querie. I have set out in bare outline what I thought are his views on law and human rights.
I have not read this article referred to by you.I entered the Rights Movement a decade earlier before him
from the time Naxalite movemnt in the state of AP. We brothers were beleivers in Marx and I am associated with the Communists from my college days . Those were days one sixth of the word was Socialist.
Infact the Arch Bishop Canrerburry in the Forties was called Red Dean.

That was the first Socilist wave ,I need not go in to its history.It survived for about six to eight decades.
Because of the promises it held out when it fell it was characterised as a "Collapse". In the Short life span
it imposed a threat to western imperialist countries.Winston Churchil on the death of Stalin said Stalin came to power when there was only a wooden plough , when he left it was the foremost Nuclear power.His authoritarian Rule was christened Totalitarian Dictatorship.It foundered on the human rights violations reported . Human Rights as a concept was evolved after the fall of Germany and after the Rise of Socialist Countries.The western powers never measured governance with this yard stick.They used this Yards stick
to stalin more than to any other government.US violation of human rights has been legion.Destroyed a system which if allowed to exist could have rectified its governance and provided the people a
better world.

Coming to the issue raised by you he was disillusioned by the judges and their attitudes towards peoples problems.Even at the young age of 21 I was aware of quality and character of the institution and had Balagopal joined at an early stage he would have felt so. He was prodigy in Maths. Witnessing relentless brutality by the Young Naxal movement he decide to fight it. As long as there was a vision of social change attached to the Rights movement the fight had a goal and was inspiring. But he perceived the distortions in the movement things changed for him. He structured a new Human Rights organisation.He was basically poor peoples Advocate and very rarely the poor get such brillant lawyers.The statement he made is true.People beleive that Courts can do something for them.

This faith in courts is a phenomenon after the 1975 Emergency. After the courts shameful performance that led to the Emergency and the MISA and their upholding of the Detention led to tremendous loss of credibility . After people voted out Indira Gandhi out of power the court recovered their lost place in the sun suddenly and to expiate their sins of culpable ommissions they devised the public interest litigation. THIS GOT THEM SOME NAME.LAWYERS NEED SOME BRIEF AND LAWYERS LIKE US THOUGHT THINGS CAN BRING ABOUT CHANGES IN GOVERNANCE THROUGH COURTS LITTLE BY LITTLE.

This hope was belied.That must be what he has intended. His illusion he transferrred on to peoples faith.
Yet pitched upon the idea of creating awareness of rights in the people which would make the rights awareness in the people discipline Governance. He worked on this principle with tremendous courage and conviction. With a profession with very minimal awareness of their responsibilities to the society which nourished sheltered them in comfort. I think I will stop here. I can go on and on. I am eighty plus .

Thank you regards kgk
K.G. KANNABIRAN
National President, PUCL
கோமாளிமாலையில் என் பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு நகர வீதிகளில் உலாவினேன்.வித்தைகள் பல செய்துகொண்டிருந்த கோமாளியை பார்த்ததும் குழந்தை அங்கேயே நின்றுகொண்டாள்.அவன் எது செய்தாலும் குழந்தை சிரித்தாள்.மறுநாள் சென்றபோது ஒரு கழைக்கூத்தாடியின் உடலை வைத்துக்கொண்டு கோமாளி அழுதுகொண்டிருந்தான்.கழைக்கூத்தாடி அவனது மகனாக இருக்க வேண்டும்.வித்தையின் போதான விபத்தை குறித்து நிறைய சொன்னார்கள் அருகிலிருந்தவர்கள்.குழந்தை கோமாளியை நோக்கி கையை ஆட்டியபடி சிரித்தபடி இருந்தாள்.வீடு திரும்பும் போது குழந்தையிடம் சொல்லத்தோன்றியது - 'பூக்குட்டியே,   நமக்கு கோமாளிகளிடம் பழக தெரிந்திருக்க வேண்டும்.கோமாளிகள் கோமாளிகள் மட்டும் இல்லை என்ற ரீதியில்'.பூக்குட்டி வீடு வந்ததும் எதையோ சொல்ல உற்சாகத்தோடு உள்ளே ஒடினாள்.

கோடைக்காலம்


சுகுமாரனின் கவிதை ஒன்றில் இப்படி ஒரு வரி வரும்

திரும்ப முடியுமா பறவைகள் முட்டைகளுக்கு

ரஸ்கோல்நிகோவ் - சோனியா
நாம் நம் கருப்பையின் பாதுகாப்பிற்கு

சுயம்புலிங்கத்தின் கவிதைகள் இரண்டு இப்படி இருக்கும்

1. அதோ காற்று மேகத்தை இழுத்து செல்கிறது

மேகத்தை பிடி மடக்கு பணிய வை.

2.பறவை நம் தானியங்களை திண்கிறது.

இரக்கம் காட்டாதே

தெறி. 

                                                                                           

சொற்கள் சரியாக நினைவில்லை.ஆனால் மேலேயுள்ள சுகுமாரனின் கவிதைகளுக்கும் , சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்கும் நெருக்கம் உண்டு.

கருப்பையின் பாதுகாப்பிற்கு திரும்ப யத்தனிக்கும் ஒருவன் ஒரு கட்டத்தில் தானியங்களை கொத்தி திண்ணும் பறவையை தெறிக்கிறான்.மேகத்தை பணிய வைக்கிறான்.பற்றிக்கொள்ள ஒரு கரத்தை எதிர்பார்த்து தவிக்கும் ஒருவன் வாழ்வின் கருணையற்ற கொடிய கரங்கள் முன் குரூரத்தின், வன்மத்தின் பாதையை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.மிகவும் வன்மம் கொண்டவர்களையும் இறுக்காமானவர்களையும் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.அவர்கள் எதையும் செய்யும் துணிச்சல்கொண்டவர்கள் போல இருப்பார்கள்.ஆனால் அவர்கள் உண்மையில் மிகுந்த அச்சத்தோடும், பாதுகாப்பின்மையோடும் இருப்பதை அவதானித்திருக்கிறேன்.என் உறவினர் ஒருவரை நான் சிறுவயதிலிருந்து பார்த்துவருகிறேன்.மிகவும் இறுக்கமானவர்.கோபக்காரர்.அவர் எதற்கும் அச்சப்பட மாட்டார் என்றுதான் சிறுவயதில் நினைத்திருந்தேன்.ஆனால் அவர் வாழ்வின் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிலிருந்ததாகவும் அவரது சகோதரரின் முயற்சியால் மீண்டதாகவும் தெரிந்துகொண்டேன்.இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவருடைய சகோதரர் எதை பற்றியும் கவலைபடாதவர் போல் காட்சியளிப்பார்.ஆனால் அவர்தான் என் உறவினரின் வாழ்வின் சிக்கல்களை எளிதாக அனுகுவதற்கான மூளையாக செயல்பட்டிருக்கிறார்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் மனப்பிறழ்வு நிலைக்கு செல்லும் அருணாச்சலம் நாகம்மை மூலம் மீள்கிறார்.நாம் நம் கருப்பையின் பாதுகாப்பிற்கு என்ற சுகுமாரனின் வரியும் அருணாச்சலம் நாகம்மையிடம் அடையும் மீட்பும் நெருக்கமானவை.

Strength comes from Strength என்று கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஒரு வரி வரும்.நாம் நம்மை வாழ்வின் நெருக்கடி காரணமாக வேறொருவராக உருமாற்றிக்கொள்கிறோம்.குரூரத்தோடும் வன்மத்தோடும் வாழ்க்கையை கடத்தும் ஒவ்வொருவரும் பாதுக்காப்பின்மை காரணமாகத்தான் அப்படி செய்கிறார்களா.இருக்கலாம்.ஏனேனில் நாம் எப்போதும் வாழ்வது கோடைக்காலத்தில் இல்லையா.

பற்றுதல்முறையிட ஒரு கடவுள்
நம்ப ஒரு சித்தாந்தம்
உலவ ஒரு வெளி
வாழ ஒரு கனவு
கதை கேட்க ஒரு செவி
அடையாளத்திற்கு ஒரு பணி
பற்றிக்கொள்ள ஒரு கரம்மேலே உள்ள புலம்பல் , அந்த இயேசு கிறுஸ்துவின் படம் எல்லாமே ஒரு மாதிரி சோகமயமாக இருக்கிறதல்லவா.எழுதி முடித்து பார்த்த போது எனக்கும் அப்படிதான் தோன்றியது.இந்த பாடலை கேளுங்கள்.தெலுங்கு பாடல்.

தமிழில் வந்த மிஸ்ஸியம்மா படத்தின் தெலுங்கு Version.ஆம் என்றால் இல்லை, இல்லை என்றால் ஆம்,பெண்களின் பேச்சுகளுக்கு அர்த்தங்கள் வேறு...அர்த்தங்கள் வேறு....இது தான் பல்லவியில் வரும் வரிகளின் அர்த்தம்.புகழ்பெற்ற பாடல்.நிறைய முறை கேட்டேன்.
 


சலனம்
ஒரு கலைஞனாகவோ , விஞ்ஞானியாகவோ , மெய்ஞானியாகவோ, அரசியல்வாதியாகவோ , அதிகாரம் செய்பவர்களாகவோ இருக்க வேண்டும் என்று இன்று அநேகமாக எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.உண்மையில் ஒரு கலைஞனாகவோ ஒரு விஞ்ஞானியாகவோ உருவாகுவது சாதனையா ? பெரிய விஷயமா? விஞ்ஞானம் ,கலை ஏன் அதிகாரம் எல்லாமே மொழியோடு சம்பந்தப்பட்டவை.அதிகாரத்தை நோக்கி விழைபவன் ஒரு சமூக மொழியை அறிந்தவனாக இருக்கிறான். அவனுக்கு மக்களை ஒரு திரளை ஆளத்தெரிந்திரிக்கிறது.மக்களின் கூட்டு மொழி தெரிந்ததால் அவன் அதிகாரத்தை நோக்கி செல்கிறான். ஒரு விஞ்ஞானியோ கலைஞனோ அவர் அவர்களுக்கான மொழியை புரிந்துகொள்வதற்கான மன அமைப்பை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அந்த மொழியிலேயே அவர் சிந்திக்கிறார்கள்.பிறகு அதில் தங்களை ஒருமுகப்படுத்திக்கொள்பவர்கள் சில புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திகிறார்கள்.அதற்கு அப்பால் அவர்கள் எளிமையானவர்கள்தான்.சாதாரணமானவர்கள் தான். இவர்களில் ஒருவனாக இருப்பது உண்மையில் பெரிய விஷயம் அல்ல.உண்மையில் பெரிய விஷயம் வேறு.அது சாமனியர்களின் வாழ்க்கை.ஒரு பெண் காலையில் எழுந்து இருபது தோசைகள் சுடுகிறார், மதியம் சோறு வைத்து சாம்பார் , ரசம் மற்றும் ஏதோ ஒரு பொரியல் செய்கிறார்.மாலை வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பும் போது அவர்களுக்கு காபி தருகிறார். இரவு இட்லி ,சப்பாத்தி தருகிறார்.இதற்கிடையில் வீட்டை சுத்தம் செய்கிறார், ஒட்டடை அடிக்கிறார் ,துணி துவைக்கிறார் , பாத்திரங்கள் கழுவுகிறார், வீட்டில் உள்ளவர்களை பராமறிக்கிறார்.மறுநாள் மறுபடியும் இதையே செய்கிறார். இதையே முப்பது நாற்பது வருடங்கள் செய்கிறார்.இவர்களுக்கு விடுமுறைகள் இல்லை.வேறொருவரை எடுத்து கொள்வோம். இவர் வீடு அம்பத்தூரில் இருக்கலாம்.அம்பத்தூரிலிருந்து பயணித்து சென்ட்ரல் வந்து அங்கிருந்து ஜோலார்பேட்டை வண்டியை அதிகாலை ஆறுமணிக்கு பிடித்து அரக்கோணத்திற்கு வேலைக்கு செல்லலாம்.மறுபடியும் சாய்ந்திரம் அதே வண்டியில் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பலாம்.ஒரு எழுத்தாளராக இருப்பதை விட ஒரு கலைஞனாக இருப்பதை விட விஞ்ஞானியாக இருப்பதை விட இந்த வாழ்க்கை மிக மிக கடினமானது.இதை வாழ்வதற்கு ஒருவருக்கு தேவைபடுவதெல்லாம் சின்ன சின்ன ஆசைகள் , எளிய கனவுகள் , சிறு கடவுள்கள், அவ்வளவுதான்.இதை வைத்துக்கொண்டு அவர்கள் முப்பது நாற்பது வருடங்களின் ஒரே போன்ற நாட்களை மாதங்களை வருடங்களை எளிமையாக கடந்துவிடுகிறார்கள்.எவரேஸ்ட் சிகரத்தை தொடுவதை விடுவும் இது தான் சிரமமான காரியம்.ஏனேனில் இதில் தொடுவதற்கு சிகரங்கள் இல்லை.இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு போதும் மேடை ஏறுவது இல்லை.அப்படி ஏறினால் ஒரு வேலை அது அவர்களின் வேலையின் கடைசி நாளாக இருக்கலாம்.

இன்றைய உலகமயமாதல் சூழலின்,பெருநகரமயமாதலின் சூழலின் மிக முக்கிய பிரச்சனை இந்த எளிய மனிதர்கள் வாழ்வில் உருவாகியிருக்கும் சலனங்கள்.இவர்கள் மேடைகளில் ஏற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.இவர்களின் குழந்தைகளை பாடகர்களாக , நடனக்கலைஞர்களாக , விஞ்ஞானிகளாக(நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளாக) , அதிகாரத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.வேறு எப்போதையும் விட தங்கள் உடல் குறித்து மிகுந்த மன உளைச்சல் கொள்கிறார்கள்.இன்று ஒருவர் மன உளைச்சல் அடைவதற்கு அவருக்கு சுமாராக தொந்தி இருந்தால் போதும்.அவர் ஒவ்வொரு நாளும் தன் நேரத்தின் எந்தப்பகுதியை நடைப்பயணம் மேற்கொள்வதற்கான நேரமாக மாற்றலாம் என்று யோசித்தபடியே இருக்கிறார்.ஒவ்வொரு நாளும் அது முடியாமல் போவதால் அவதிக்குள்ளாகிறார்.உடற்பயிற்சி கூடங்களும் ,யோகாசன மையங்களும் நிரம்பியபடியே இருக்கின்றன.தாங்கள் உட்கொள்ளும் உணவு குறித்த குற்றவுணர்வு அடைகிறார்கள்.எளிய மகிழ்ச்சிகளும் நிகழ்வுகள் இல்லாமல் ஆகுகின்றன.திரையில் பார்க்கும் கட்டுக்கோப்பான நாயகனின் உடல் பிம்பம் அவர்களை நிம்மதி இழக்க செய்கிறது.மிகப்பெரிய அளவில் வேறு எப்போதையும் விட நாம் உடல் ரீதியிலான வன்முறைக்கு உள்ளாகியிருக்கிறோம்.குழந்தைகளின் இயல்பான பால்ய காலம் நிராகரிக்கப்பட்டு அவர்கள் தங்களை ஒரு அறிவுஜீவிகளாகவோ கலைஞர்களாகவோ நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தை அடைகிறார்கள்.மனிதர்கள் சாதாரணமாக வாழ்வது கடினமாகிகொண்டிருக்கிறது.அவர்களின் சாதாரணத்தனம் கேலி செய்யப்படுகிறது.அவர்கள் மீது மிகப்பெரிய அளவில் வன்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.அப்போது அவர்கள் தேடும் வடிகால்கள் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.இது ஒரு முக்கியமான சமூகவியல் , உளவியல் பிரச்சனை.கோடிக்கணக்கான சாமானியர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.அவர்கள் நிம்மதியிண்மையிலிருப்பதும் அவதி கொள்வதும் ஒரு சமூகத்திற்கு நல்லதல்ல.இன்று அவர்களுடைய சின்ன சின்ன ஆசைகள் பெரிய பெரிய ஆசைகளாகவும் சிறிய கனவுகள் பெரிய கனவுகளாகவும் சிறு கடவுள்கள் பெரிய கடவுள்களாகவும் மாறிவிட்டனர்.ஒரு கலைஞன் உருவாவதற்கு மிக முக்கியமான காரணம் அவனுக்கு சாதாரணமாக வாழத்தெரியவில்லை என்பது தான்.சாதாரணமாக வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை என்பதே தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களின் நாம் பெறும் தரிசனம்.வரும் ஆண்டு அந்த உண்மையை நோக்கிய ஒரு சிறு நகர்தலையாவது செய்யட்டும்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.