2020

 

இந்த வருடம் எவருக்கும் மறக்க இயலாத வருடமாக இருக்கும்.மார்ச் மாதத்திலிருந்து வீட்டிலிருந்து பணிபுரிந்தேன். இந்த வருடம் வேலை பளு இதற்கு முந்தைய வருடங்களை விட அதிகமாக இருந்தது. மாலைகளும் வார இறுதிகளும் வேலையில் கழிந்தன. நிறைய வாசிக்கவோ எழுதவோ இயலவில்லை.தனிப்பெருங்கருணை சிறுகதை தமிழினியில் பிரசுரமானது.இந்த வருடம் வேறு எதுவும் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கவில்லை.சென்ற வருடத்தில் எழுதிய ஜனனம் கதை மணல் வீடு இதழில் பிரசுரமானது.மற்றபடி முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாவது உற்சாகத்தை அளித்துள்ளது.

கோவிட் காரணமாக எண்ணற்ற உயிரிழப்புகள்.எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தத்தின் மரணம் அயர்ச்சியை அளித்தது.பலருக்கு தொழில்கள் முடங்கின.வேலை இழப்பு.வரும் வருடம் அனைவருக்கும் நல்லாண்டாக அமைய வேண்டும்.

குழந்தைகளின் சேஷ்டைகள் இந்த வருடம் கண் பிதுங்க வைத்துவிட்டது.அதுவும் வீட்டிலிருந்த வேலை செய்வதால் இவர்களின் சேஷ்டைகள் மேலும் அழுத்தத்தை  அளித்தது.குழந்தைகள் வீட்டிலிலேயே முடங்கி இருந்ததால் மிகவும் சிரமப்பட்டனர்.டிசம்பரில் சென்னை வந்தேன்.சென்னை வந்தது புத்துணர்வை அளித்திருக்கிறது.எழுதுபவன் தொடர்ந்து எழுதவும் வாசிக்கவும் வேண்டும்.வரும் வருடத்தில் அதை முறையாக செய்ய வேண்டும்.தொடர்ச்சி அறுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் எப்போதும் முடிவுகள் எடுக்கும் போது இரண்டு விஷயங்கள் முன்னே நிற்கின்றன.ஒன்று தெளிவானது , குழப்பமற்றது, எளிதானது.மற்றது தெளிவற்றது, குழப்பங்கள் நிறைந்தது,எளிதற்றது.நாம் எடுக்கும் அநேகமான முடிவுகளில் இந்த இரண்டு தரப்பும் இருக்கும்.நாம் எதை தேர்கிறோம் என்பது நம் வாழ்வை முடிவு செய்கிறது.

வாழ்க்கை நம்மை ஒரு திசையில் இழுக்கும், நாம் வாழ்வை ஒரு திசையில் இழுப்போம்.அப்போது எடுக்கும் முடிவுகள் அடுத்தடுத்த பயணங்கள் தீர்மானிக்கின்றன.அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தை தவிர்த்து எடுக்கும் முடிவுகள் நம்மை மேலெற்றும் அல்லது சிதறிப்போகச் செய்யும்.ஆனால் அதில் நிச்சயமின்மை உள்ளது.அது வாழ்வை சுவாரசியமானதாக மாற்றுகிறது.

வரும் ஆண்டில் ஒரு குறும்படம் எடுக்கும் ஆர்வம் அள்ளது.குறும்படம் எடுக்காவிட்டாலும் அதற்கான திரைக்கதையை வரும் வருடத்தில் எழுதிவிடுவேன். தஸ்தாவெய்ஸ்கி பற்றி தொடர்ந்து எழுதுவேன்.அடுத்தடுத்த ஆண்டுகளில் அதை புத்தகமாக கொண்டு வருவேன்.தொடர்ந்து சிறுகதை எழுதவேண்டும்.

இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கட்டும்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


முறையிட ஒரு கடவுள்

 

என் முதல் சிறுகதைத் தொகுப்பு முறையிட ஒரு கடவுள் வருகிற ஜனவரி 10ஆம் தேதி கோவில்பட்டியில் மணல் வீடு இலக்கிய வட்டம் நூல் வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்படுகிறது. 2009 - 10இல் இரண்டு கதைகளை எழுதினேன்.மற்ற கதைகள் 2015க்கு பின்னர் எழுதப்பட்டவை.மொத்தமாக பதினான்கு கதைகள் கொண்ட தொகுப்பு. மொத்தமாக வாழ்நாளில் ஐந்து புத்தகங்கள் கொண்டு வந்தால் போதும் என்பது என் எண்ணம்.தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எப்படியும் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து விடுவேன்.இன்னும் சில கட்டுரைகள் சேர்க்க வேண்டும். மற்றபடி மூன்று புத்தகங்கள் எழுதுவேன்.அதற்கு அப்பாலும் எழுதினால் மகிழ்ச்சிதான்.எழுத்து சார்ந்து ஒரு நிதானம் வந்திருக்கிறது.ஒரு வரைவு மனதில் உண்டாகியிருப்பதை உணர முடிகிறது.பெரிய ஆர்ப்பாட்டங்கள் , வெளிச்சங்கள் எதுவும் இல்லாமல் இங்கு தொடர்ந்து எழுத முடியும்.இந்த பத்து வருடங்களில் அவதியான மனநிலையிலிருந்து மெல்ல வெளியேறியிருக்கிறேன். இந்த தொகுப்பில் உள்ள கதைகளை போல இனி எழுத முடியாது.அந்த மனநிலை முடிந்துவிட்டது. 

எனக்கு மாய தந்திரக் கதைகளை எழுத வேண்டும் என்ற ஆவல் உள்ளது. நாவல் எழுத முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் குறுநாவல் எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்டுரைகள் எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது.வரும் ஆண்டுகளில் நிறைய வாசிக்க வேண்டும் தொடர்ச்சியாக எழுத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.இந்தத் தொகுப்பு வெளியாவதில் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

முறையிட ஒரு கடவுள் - மணல் வீடு பதிப்பகம்