நீரின் சலனம்


ஒரு விவசாய குடும்பத்தை கொலை செய்து கொள்ளை அடித்த ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.அவனின் தலை கிலெட்டினால் துண்டிக்கப்படப் போவதை காண ஆல்பர் காம்யூவின் தந்தை வைகறையில் எழுந்து செல்கிறார்.அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது சரிதான் என்று முதலில் நினைக்கிறார்.ஆனால் மரண தண்டனை அரங்கேற்றப்பட்டதை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர் யாருடனும் பேசாமல் கட்டிலில் படுக்கிறார்.சட்டென்று குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுக்கிறார்.இன்று மரண தண்டனைகள் பொதுவில் கொடுக்கப்படுவதில்லை.அவை சிறைகளுக்கு எடுத்துச்  செல்லப் பட்டுவிட்டன.இந்த சம்பவத்துடன் ஆல்பர் காம்யூ தன் Reflections on Guillotine என்ற கட்டுரையை தொடங்குகிறார்.  தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிரான தன் தர்க்கத்தை முன்வைக்கிறார்.

தர்க்கம்:

மரண தண்டனை பொது சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்க வேண்டுமென்றால் அது ஏன் பொதுவில் நிகழ்த்தப்படாமல் தனி அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.அது பயத்தை உருவாக்க வேண்டுமென்றால் அது பொதுவில் நிகழ்த்தப்பட்டு அதைப்பற்றிய விவரங்கள் நிறைவாக பத்திரிக்கைகளில் வருவது தானே சரி.ஆனால் அரசுக்கு இதில் ஏதோ ஒரு தயக்கம் இருக்கிறது.இது அவசியமானது என்று கருதுகிறது.ஆனால் அதை பொதுவில் வைக்கத் தயங்குகிறது.அப்படியென்றால் அது முன்வைக்கும் வாதத்தின் மீது அதற்கே நம்பிக்கை இல்லை.இதை முன்பு நிகழ்ந்து கொண்டிருந்தவற்றின் தொடர்ச்சியாக நிகழ்த்துவதற்கு மேல் இதில் அரசு கொள்ளும் கொள்கை என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
பொதுவாக இது போன்ற மரண தண்டனைகள் பற்றிய வாதங்களில் முக்கியாமனது அந்த தண்டனை இனி நிகழவிருக்கும் கொலைகளை தடுக்கும் என்பதுதான்.ஆனால் மேலும் மேலும் மரண தண்டனை அளிக்கப்படுகிறது.அப்படியென்றால் மேலும் மேலும் கொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் பத்து கொலைகள் நிகழ்ந்திருக்க வேண்டிய இடத்தில் எட்டு கொலைகள்தான் நிகழ்ந்திருக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படும்.அந்த இரண்டு கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.அந்த ஊகத்தின் அடிப்படையில் ஒரு நிச்சய மரணம் அரசால் நிகழ்த்தப்படுகிறது.

பெரும்பாலான கொலையாளிகள் காலை சவரம் செய்யும் போது கூட இன்று கொலை செய்யப்போகிறாம் என்று நினைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.அப்படியென்றால் அந்த தருணத்தில் அவர்களை இந்த மரண தண்டனை பயம் அந்த பெருங்குற்ற செயலை செய்ய தடுக்கவில்லை.மனிதனுக்கு உயிர் வாழ்வதற்கு இருக்கும் இச்சை போலவே தன்னையும் பிறரையும் அழித்துக்கொள்ளவும் இச்சை இருக்கிறது.மேலும் காதல், பயம்,வன்மம் இவை எல்லாம் மனிதனை எந்த மனத்தடையையும் உடைத்து தன் இலக்கை நோக்கி இழுத்துச்செல்பவை.அதனால் மரண தண்டனை பயத்தை உருவாக்கி பெருங்குற்றங்களை தடுக்கும் என்கிற வாதம் பிழையானது.அப்படி அது பயத்தை உருவாக்க வேண்டும் என்று அரசு நினைக்கும் என்றால் அதை அப்பட்டமாக செய்யலாம்.ஆனால் அதை செய்ய அரசு அவமானம் கொள்கிறது.

இன்று கொலைகளை பற்றி பேசும் போது மதுவின் விற்பனை குறித்தும் நாம் பேச வேண்டும்.திட்டமிட்ட கொலைகளில் மதுவின் தாக்கம் இருக்கிறது.சிறுவர்களை கொலை செய்தவர்களில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மதுவின் தாக்கத்தில் இருந்தனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது.அப்படியென்றால் இந்த மதுவகைகளை உற்பத்தி செய்து விற்கும்  சாராய வியாபாரிகளும் அவர்களை தடை செய்யாத அரசும் அந்த கொலைகளில் பங்கு வகிக்கின்றன.அப்படியென்றால் இந்த சமூகம் பழச்சாறை மட்டும் உட்கொள்ளும் வரை நாம் யாருக்கும் எந்த பொறுப்பும் இல்லை என்று விட்டுவிடலாமா.அப்படி இல்லை.நாம் இந்த பொறுப்புகளை அந்த கொலை செய்தவனின் தலையில் மட்டும் போட்டுவிட்டு தப்பித்துவிட வாய்ப்பில்லை.

ஒரு வகையில் மரண தண்டனை ஒரு பழிவாங்கும் செயல் என்று கொள்ளலாம்.ஆனால் பழிவாங்கும் போது ஒரு கண்ணுக்கு ஒரு கண்தான் வாங்கப்படுகிறது.இங்கு இரண்டு கண்களும் பறிக்கப்படுகிறது.அவனுக்கு மரணத்திற்கான நாள் நிர்ணயிக்கப்படுகிறது.அது நாள் வரை அவன் காத்திருக்க வேண்டும்.இதற்கிடையில் அவன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம்.ஆனால் அது வரலாம்.வராமல் போகலாம்.அந்த நிச்சயமின்மை அவனை மிகவும் பதறச்செய்கிறது.இறுதியில் அவனது உடல் இரண்டு துண்டுகளாகும் மரணம் அவனுக்கு வழங்கப்படுகிறது.இது அவன் செய்த கொலையை விட பெரிய தண்டனை.இந்தக் காலத்தில் அவன் ஒரு பொருள் போல இருக்கிறான்.அவனுக்கு என்று தேர்வுகள் இல்லை.அவன் உணவு உட்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு நிச்சயமான மாற்ற சாத்தியமற்ற மரண தண்டனையை வழங்க அந்த சமூகத்திற்கு அரசுக்கு அந்த தார்மீகம் இருக்க வேண்டும்.ஆனால் அப்படியான தார்மீகம் நம் சமூகத்திற்கு இல்லை.ஒரு சமூகம் தன் தகுதிக்கு ஏற்ற குற்றவாளிகளை உருவாக்குகிறது.சமூகம் ஒன்றும் அறியாமை நிரம்பிய ஆட்டுக்குட்டி இல்லை.இந்த குற்றவாளியை நீக்கிவிட்டால் அது தூய்மை பெற்றுவிடாது. நாம் நிச்சயமான தூய்மையான அரசாகவும் சமூகமாகவும் இல்லாத போது இந்த மரண தண்டனை எதை தரப்போகிறது.ஒன்றுமில்லை.அதற்காக மனிதாபிமானம் என்ற பெயரில் தண்டனை வழங்கக்கூடாது என்றுமில்லை.வாழ்நாள் முழுக்க கடும் வேலை செய்ய வேண்டிய தண்டனையை வழங்கலாம்.ஒரு குற்றத்திற்கு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இந்த சமூகத்திற்கு இல்லை.ஏனேனில் இங்கு அப்படியான நீதிபதிகள் யாரும் இல்லை.

மரண தண்டனையின் முக்கிய சிக்கல் அது திருத்த சாத்தியமற்றது என்பதுதான்.விஞ்ஞானத்திற்கு முன்னான காலத்தில் மரண தண்டனை வழங்கப்பட்ட போது அது இறுதி தீர்ப்பாக இல்லை.அவனுக்கான இறுதி தீர்ப்பு இன்னும் இருந்தது.ஆனால் இன்று அப்படியான மேல் உலகங்கள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை.அப்படி இருக்கையில் இதுவே இறுதி தீர்ப்பாகிறது.அப்படியான இறுதி தீர்ப்பு மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

மறுமலர்ச்சி காலத்தில் மனிதன் அடிப்படையில் நல்லவன் என்பதால் அவனுக்கு மரண தண்டனை தேவையில்லை என்ற வாதம் இருந்தது.ஆனால் மனிதன் அடிப்படையில் தீயவன்.அதனாலேயே அவனுக்கு மரண தண்டனை கூடாது என்கிறார்.தண்டனை கூடாது என்றல்ல.ஒரு சமூகம் பரிணாம வளர்ச்சி அடைய தேவையற்றவர்களை நீக்கலாம் என்ற நோக்கம் மேல் எழுந்துள்ளது.ஆனால் அவனை நீக்கிவிட்டால் சமூகம் தூய்மை அடைந்துவிடுவதில்லை.சமூகத்திலிருந்தே அந்த மனிதன் வந்திருக்கிறான்.நாம் எல்லோரும் ஒரளவு பொறுப்பற்று இருக்க வேண்டியிருக்கிறது.அதனால் இறுதியான தீர்மானமான முடிவுகளை எடுக்க நாம் தகுதியற்றவர்கள்.

மொத்த மானுட இனத்தின் இருப்பே மரணத்திற்கு எதிரானதுதான் என்கிறார் காம்யூ.இந்தக் கட்டுரையின் இன்னொரு வடிவம் தான் அவருடைய வீழ்ச்சி நாவல்.அறியாமையின் ஆட்டுக்குட்டி திருடப்பட்டுவிட்டதால் நாம் பிறரின் மீதி தீர்மானமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அந்த நாவலில் சொல்கிறார்.

பெளத்தமும் ஸ்பினோஸாவும்


பெளத்தத்தையும் ஸ்பினோஸாவின் தத்துவத்தையும் ஒப்பீடு செய்து ஓ.ரா.ந.கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள Buddhism and Spinoza புத்தகம் பெளத்த சிந்தனைகளையும் ஸ்பினோஸாவின் சிந்தனைகளையும் பல தளங்களில் ஒன்று போல இருப்பதை  இரண்டையும் ஒப்பிட்டு சொல்கிறது.ஸ்பினோஸாவின் Ethics நூலை முதன்மையானதாக கொண்டுள்ளார் நூலாசிரியர்.முக்கியமாக எப்படி இரண்டு சிந்தனைகளும் தர்க்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்வை நோக்கச் சொல்கிறது என்பதை நிறுவுகிறார்.நாம் நமது சுயம் என்று கொள்வது எந்தளவு நமதற்றது என்று இரண்டு சிந்தனை பள்ளிகளும் நிறுவுகிறது என்று சொல்கிறார்.மறுபிறப்பு குறித்து ஸ்பினோஸாவும் பெளத்த சிந்தனைகளும் ஒன்று போல இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இருத்தலியத்தின் முதல் விஷயமான சுதந்திர இச்சை (Free will) என்ற ஒன்று உண்மையில் இல்லை.இரண்டு சிந்தனை தளங்களுமே பிரபஞ்ச நியதியை (Universal determinism) ஏற்பவை.மனிதன் எந்த வகையிலும் தனியானவன் அல்ல.அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கிறது.இங்கு ஒரு கல் ஒரிடத்தில் இருப்பதற்கு அது அங்கு இருக்க வேண்டும் என்ற இச்சை அதனுள் இருக்கிறது.அனைத்து உயிரினங்களுக்குள்ளும் தன்னை நிறுவிக் கொள்வதற்கான இச்சை இருக்கிறது.பசி பசி என்று அது ஓலமிடுகிறது.(ஜெயமோகனின் நினைவின் நதியில் வரும் வரி).

இங்கு மனிதன் பல்வேறு எண்ணில் அடங்கா காரண காரியங்களுக்கு ஆட்பட்டு வாழ்கிறான்.இங்கு அனைத்தும் திட்டமிட்ட கணித கோட்பாடுகளாக இயங்குகின்றன.அதனால் தான் ஸ்பினோஸா Ethics நூலை கணித நூல் போல எழுதுகிறார்.ஸ்பினோஸா நமது அறிவை மூன்றாக பிரிக்கிறார்.முதலாவது ஊக அறிவு.இரண்டாவது தர்க்க அறிவு.மூன்றாவது உள்ளுணர்வு.இரண்டாவது அறிவை கொண்டு நாம் புரிந்து கொள்பவை காலப்போக்கில் ஒருவனது உள்ளுணர்வாக மாற வாய்ப்பு உண்டு என்கிறார்.பிரக்ஞைபூர்வமாக வாழ்வை எதிர்கொள்வதன் வழி மனிதன் தன் அகங்காரத்திலிருந்து விலகி நடப்பவற்றை காரண காரிய ரீதியில் புரிந்தும் வாழலாம் என்கிறார்.அவர் நமது இச்சைகளை பல்வேறாக பட்டியல் போட்டு பிரித்திருப்பது பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.இதை பெளத்தத்தோடு ஒப்பிடுகிறார் கிருஷ்ணன்.

இந்த கணித கோட்பாடான பிரபஞ்சமே கடவுள் என்கிறார் ஸ்பினோஸா.அங்கு உணர்வுகளுக்கு இடமில்லை.சொர்க்கம் நரகம் இல்லை.பிரபஞ்ச நியதி படி இயங்கும் உலகில் மனிதன் தன் பிரக்ஞையின் துணைக்கொண்டு தேர்கிறான்.இங்கு உண்மையில் நண்மை தீமை என்று எதுவும் இல்லை.பெளத்தம் முன்வைக்கும் விபஸ்ஸானா தியானம் போலவே இருக்கிறது ஸ்பினோஸாவின் உளச்சிகிச்சை முறைகள் என்கிறார் கிருஷ்ணன்.

மேலும் மஹாயான பெளத்தமும் நாகார்ஜூனரின் சூனியாவாதமும் ஸ்பினோஸாவின் சிந்தனைகளோடு சரியாக பொருந்துகின்றன என்று நிறுவுகிறார்.பொருளும் எண்ணமும் வெவ்வாறானவை என்று இரண்டு சிந்தனைகளும் ஏற்கின்றன.இதன் மூலம் இரண்டு சிந்தனைகளும் எப்படி மறுபிறப்பை முன்வைக்கின்றன என்கிறார்.

ஸ்பினோஸா குறித்து தமிழில் ஏதேனும் புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.இதை  மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

Buddhism and Spinoza - O.N.Krishnan - Metta Publications.