உரையாடல்


முந்தைய To Negate என்ற கட்டுரை சார்ந்து அபிலாஷூடன் நடத்திய சின்ன உரையாடல்.
அபிலாஷ் - சர்வோத்தமன் நான் பேசியது மாநகரத்தில் சாதி கடந்து மணப்பது சாதனையா என்றல்ல; சொந்தக்காரர்கள் எப்படி சாதியை தக்க வைக்கிறார்கள்; அவர்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்பது உண்மையா என்பதே. மனிதன் அந்நியமாதலால் சாதியை பற்றிக் கொள்வதாக நான் நம்பவில்லை. அதிகாரத்துக்காகத் தான் சாதியை தொடர்கிறான். அது மேல் கீழ் சாதிகளுக்கு ஒருசேர பொருந்துகிறது. ஒரு அடையாளமாக சாதிக்கு சின்ன இடம் தான். அதுவும் படைப்பூக்கமும் சுயசிந்தனையும் இல்லாதவர்களுக்கே தேவைப்படுகிறது. எனக்கு அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. hollow men!

நான் - அபிலாஷ் , சாதி என்ற கருத்தில் இனத்தூய்மை , அந்நியமாதல், அதிகாரம் (அரசியல் அதிகாரமும் இதில் அடங்கும்) ஆகிய மூன்று விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். பெருநகரத்தில் தனித்துபோய் நிற்கும் ஒருவன் ஒரு அடையாளத்திற்காகவும் சாதியை பற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் நான் எழுதியதின் முக்கிய விஷயம் இன்று மாற்று சாதி திருமணங்கள் கருத்தியல் வெற்றிகளால் அடையப்பெற்ற ஒன்றல்ல என்பதே.அவை மாநகரங்களில் பொருளாதார மாற்றங்களால் அடையப்பெற்றவை.அப்படியென்றால் கருத்தியல் தளத்தில் தமிழ் அறிவுஜீவி சமூகம் செய்துகொண்டிருப்பது என்ன என்பதே நான் கேட்டுக்கொண்ட கேள்வி.

அபிலாஷ் - சர்வோத்தமன் கருத்து முதலிலும் செயல் தொடர்ந்தும் நிகழும் என நான் நம்பவில்லை. பொருளியல், உளவியல்ம், சமூகவியல் காரணங்களுக்காக பல்வேறு விசயங்களை செய்கிறோம். அதற்கு நியாயமும் அர்த்தமும் வழங்கத் தான் கருத்தியல். சாதியை ஒழிக்கவென்று யாரும் மணம் புரிவதாக நானும் நம்பவில்லை. சாதி கடந்த திருமணங்கள் சாதியை ஒழிக்குமா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. சாதியை நான் குறுகின மனப்பான்மை என புரிந்து கொள்கிறேன். குறுகின மனப்பான்மையை வெளியில் இருக்கிற ஒன்றைக்கொண்டு அழிக்க முடியாது.

நான் - அபிலாஷ் , சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று சொல்ல முடியாது.கோசாம்பி ராஸ் பேஸ் பார்தி என்ற பழங்குடியினர் பற்றிய ஆய்வில் பார்திகள் திருடுவதை குற்றம் என்று கருதுவது பாதிக்கப்பட்டவரும் அதே பழங்குடியை சேர்ந்தவர் என்றால் தான் என்று சொல்கிறார்.பேருந்து நிலையத்திற்கு ஒரு பேருந்து காலியாக வந்து நிற்கிறது.நாம் முட்டிமோதி முதலில் ஏறிவிடுகிறோம்.நம்மை போல வேறு சிலரும் ஏறுகிறார்கள்.அப்போது நமக்கு பக்கத்தில் ஒரு கைக்குட்டையை போட்டு என் நண்பர் வருகிறார் என்று சொல்கிறாம்.நமது நண்பர் நிதானமாக கடைசியில் ஏறி நமக்கு அருகில் அமர்ந்துகொள்கிறார்.நம்முடன் ஏறியவர் கடைசிவரை நின்று கொண்டு பயணம் செய்கிறார்.இதில் இருக்கும் மனநிலைக்கும் மேலே சொன்ன பார்தி பழங்குடியினர் பற்றிய மனநிலைக்கும் பெரிய வித்யாசம் இல்லை.ஆக சாதி என்பது ஒரு குறுகிய மணப்பாண்மை என்று மட்டும் சொல்லி விட முடியாது.அது ஒரு இனக்குழு சமூகத்தின் நாம்X பிறர் என்ற முரணில் இருக்கிறது.சாதிக்கு பல்வேறு அடுக்குகள் இருக்கிறது.கருத்தியல் ரீதியாக அதை எளிய அளவில் கூட நாம் இன்றும் அசைக்கவில்லை.சாதியை விட வேண்டும் சொல்லி விட்டால் சாதியை விட முடியாது.நேர்மையாக ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அதற்கு எதிராக தனக்குள் போராடி கொள்ள வேண்டும்.ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் இதே போல ஒரு பேருந்தில் எத்தனை இடம் காலியாக இருக்கிறது வெளியே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற ஒரு எளிய கணக்குகூட போட்டுகொள்ளாமல் இப்படி முட்டிமோதி கொள்கிறார்களே என்று ஜே.ஜே. கேட்கும் ஒரு கேள்வி வரும்.அதற்கு எளிய பதில், ஏனேனில் நின்று கொண்டிருப்பது ஒரு இனக்குழு சமூகம் என்று ஜே.ஜேவுக்கு நாம் சொல்லிவிடலாம்.

My Concern is that, is Tamil Literature just yet another Institution like School , College, Religion to facilitate the Industrialisation process of India.Is it just educating the people to understand the Civic Values an Industralized society needs? ஏன் ஒரு குரல் பேருந்தில் இருந்து கீழே இறங்கி வா நாம் இந்த மரநிழலில் அமர்ந்துகொண்டு சில பழங்கதைகளை பேசுவோம் என்று சொல்லவில்லை.ஆர்.நல்லகண்ணு தான் ஒரு பொதுவுடைமைவாதியாக மாறியதற்கு பாரதி கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பு ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறார்.நான் பார்த்தவரையில் அதன்பிறகு தமிழின் மிக சிறந்த ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் மட்டும் தான் தேவதேவனின் ஆளுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்.இங்கே தமிழில் பல தளங்களில் போராடிய பலரும் ஒன்று காந்தியவாதிகள் அல்லது இடதுசாரிகள்.இவர்களை மக்களுக்காக போராடிய தூண்டியது காந்தியும் மார்க்ஸூம் தான், தவிர எந்த நவீன தமிழ் இலக்கிய பிரதியும் அல்ல.ஒரு எழுத்தாளன் ஒரு சமூகத்தில் நேரடியாக பாதிப்பு செலுத்துவதில்லை.அவன் மூலமாக சில செயற்பாட்டாளர்கள் உருவாகுகிறார்கள்.அவர்கள் சமூகத்தை பாதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.அப்படி பாரதிக்கு பின் எத்தனை செயற்பாட்டாளர்களை நவீன தமிழ் இலக்கிய பிரதிகள் உருவாக்கியிருக்கின்றன.

பாலாஜி சங்கர் என்ற இயற்கை விவசாயம் செய்யும் ஒருவரை பற்றி சில காலமாக நான் அறிவேன்.அவர் தன் அனுபவங்களை அவ்வவ்போது earth.org.in என்ற வலைதளத்தில் எழுதிவருகிறார்.இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் படித்துவிட்டு மிக நல்ல வருமானம் பெற்றுவந்த ஒருவர் சீர்காழி அருகில் சில ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்கிறார்.தன் பிள்ளைகளுக்கு மைய அமைப்பு வழி கல்வி கூடாது என்பதால் பள்ளிக்கு அனுப்பாமல் தானே கற்றுத்தந்தார்.பிறகு பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் பள்ளியில் சேர்த்தார்.இதை கற்பனை செய்து பார்த்தால் அந்த குடும்பம் இவரின் முடிவுகளால் எத்தனை கொந்தளிப்புக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாகியிருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும்.இவரை பாதித்தவர்கள் தோரேவும் மாசானபுவும் தான்.இவருக்கு நவீன தமிழ் இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கூட இல்லை.ஒரு மைய அமைப்பு இருக்கிறது.அந்த மைய அமைப்பின் திசையில் எல்லாம் பேசப்படுகிறது.அந்த மைய அமைப்பை மேலும் நல்ல விதமாக மாற்ற அந்த அமைப்புக்குள் நிறைய உரையாடல்கள் நடக்கும்.அதில் எந்த தவறும் இல்லை.ஆனால் அந்த குரல்களில் ஒன்றாக இலக்கியம் இருக்கக்கூடாது என்கிறேன்.அது இலக்கியத்தின் பணி அல்ல.நான் எழுதியுள்ள பதில் உளறல் போல தெரியலாம்.தாடி வளர்த்து காடுகளில் வாழ்ந்து ஆயுதம் ஏந்தி இலக்கியம் வளர்க்க சொல்லவில்லை.அக்கினிக்குஞ்சு இல்லை.கார்ப்ரேட் நிறுவணங்கள் ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் தொழில் மேலும் வளம்பெற நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.கல்வி சாலைகள் தொடங்குவது, சாலைகளை சீரமைப்பது, ஏழைகளுக்கு உதவுவது, நாட்டார் கலைகளுக்கு உதவுவது என்ற பல விஷயங்களை செய்கிறார்கள்.அவற்றில் இந்த சமூகத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் , தங்கள் தொழில் வளம்பெறுவதற்கு தேவையான விழுமியங்களை வளர்ப்பதும் முக்கிய விஷயங்கள்.இது போன்ற காரணங்களுக்கு இல்லாமல் ஒரு நிறுவணம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாது.அப்படிப்பட்ட கார்ப்ரேட்கள் தமிழ் இலக்கியத்தை கவனிக்க தொடங்கினால் நிச்சயம் நிறைய நீதி அளித்து அதை வளர்ப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு ஐரோப்பாவாவின் குடிமைச்சமூகச்சூழல் ஒரு இஷ்டலோகமாக இருக்கக்கூடாது.ஏனேனில் அடைவதற்கு அது இஷ்டலோகம்(Utopia) அல்ல.To Negate


மிக அதிக அளவில் தமிழ் இலக்கிய புத்தகங்களை வாசித்தும் எழுதியும் தன் வாழ்க்கையை தமிழ் இலக்கியத்திற்காக அர்ப்பணித்துவிடும் ஒருவருக்கும் அவரின் பக்கத்து வீட்டில் தினசரி செய்திதாள் தவிர வேறு எதுவும் வாசிக்காத ஒருவருக்கும் தினசரி வாழ்க்கைமுறை சார்ந்து என்ன வித்யாசம் இருக்கிறதென்று பார்த்தால் ஒன்றுமில்லை.அபிலாஷ் சமீபத்தில் எழுதிய குறிப்பொன்றில் மாற்று சாதியில் திருமணம் செய்துகொள்வது பற்றி எழுதியிருந்தார்.உண்மையில் சாதி மாறி திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயமா? பெருநகரங்களாக மாறிவிட்ட சென்னையில் வாழும் மத்தியதரவர்க்கத்தினை சேர்ந்த ஒருவர் எந்த மாற்று சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டாலும் அவரை யாரும் ஊர் விலக்கமோ சாதி விலக்கமோ செய்யப்போவதில்லை.இன்று இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கூட இல்லாத பலர் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.பெருநகரங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சாதி அதன் அர்த்தததை இழந்துவிட்டதுதான் உண்மையான காரணம்.அதே நேரத்தில் பெருநகரங்களில் வாழும் ஒருவர் சாதியை இறுக பற்றிக்கொள்வதற்கு முக்கிய காரணம் அந்நியமாதல்.இந்த அந்நியமாதல் அவரை ஏதோ ஒன்றோடு அடையாளபடுத்திக்கொள்ள வற்புறுத்துகிறது.அவருக்கு இலக்கிய எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தால் அவர் சாதியை விட்டுவிடுவது அவருக்கு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை.ஹெச்.ஜி.ரசூல் சில வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் பற்றி எழுதியதை தொடர்ந்து அவரை ஜமாத் ஊர் விலக்கம் செய்தது.சிறுநகரத்தில் வாழ்ந்துகொண்டு அதை அவர் நீதிமன்றத்தில் எதிர்த்தார்.வெற்றிபட்டார்.அதுதான் பெரிய விஷயம்.மற்றபடி மாற்று சாதி திருமணமெல்லாம் பெருநகரங்களில் பெரிய விஷயமே இல்லை.இன்று பெருநகரங்களில் ஒருவர் நன்றாக சம்பாதிப்பவராக இருந்தால் தனியாக வாழ்வதில் எந்த சிரமமும் இல்லை.சிறுநகரங்கள், கிராமங்களின் உலகமே வேறு.அங்கு நமக்கு ஒரு அடையாளம் இருக்கிறது.அங்கு வாழ்க்கை நடத்தும் ஒருவர் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்வது இன்றும் கொஞ்சம் சிரமமான காரியம் தான்.பெருநகரங்களில் இருக்கும் அடையளாமின்மை நமக்கு பல செளகரியங்களை தருகிறது.அந்த செளகரியத்தின் மூலமாக நாம் அடைந்த ஒன்றாகத்தான் மாற்று சாதி திருமணங்களை பார்க்க முடியுமே தவிர அதை ஒரு கலகமாகவோ மாற்றமாகவோ ஒரு கருத்தியல் வெற்றியாகவோ பார்க்க முடியாது.

கருத்தியல் வெற்றி என்கிற போது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.இன்று நடந்துவரும் பல மாற்றங்கள் கருத்தியல் ரீதியாக அடைந்த மாற்றங்கள்தானா. எண்பது தொண்ணூறுகளுக்கு பிறகு பின்நவீனத்துவம் தமிழில் அறிமுகமாகிறது.சிந்தனையின் பெருங்கதையாடல் நவீனத்துவம் என்றால் மையமற்ற சிறுகதையாடல் பின்நவீனத்துவமாகிறது.அதன் அடிப்படையில் மையத்திற்கு வெளியிலிருந்து தலித்தியம் , பெண்ணியம் என்ற தளங்களிலிருந்து பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள்.இன்று தலித்துகளும் பெண்களும் திருநங்கைகளும் அடைந்துவரும் மிக குறைந்த வெற்றிகள் இந்த பின்நவீனத்துவம் மூலமாக பெற்ற கருத்தியல் வெற்றிகள்தானா.உலகமயமாதலும் , அதன் மூலமாக அடைந்த தொழில்மய நகரமயமான சமூகம் இல்லாவிட்டால் இன்று மேற்சொன்னவர்கள் வாழ்க்கையில் மிக குறைந்த அளவிலான இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா?இந்த பொருளாதார மாற்றங்கள் இல்லாவிட்டால் தலித்துகளின் பெண்களின் திருநங்கைகளின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.அப்படியென்றால் நமது பெரும்பாலான எழுத்தாளர்களும் இதழ்களும் செய்துகொண்டிருப்பது என்ன? ஒரு சமூகத்தில் பண்பாடு மேற்கட்டுமானம் என்றால் பொருள் உற்பத்தி அடித்தளம் என்று பிரிக்கிறது மார்க்ஸியம்.இந்த மேற்கட்டுமானம் அடித்தளம் இவற்றுக்கிடையிலான முரணில் உருவாகுவது இயக்கம்.அடித்தளத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் , பொருள் உற்பத்தி இவற்றை தொடர தொழில்மய சமூக்த்திற்கு விழுமியங்கள் தேவை.அந்த விழுமியங்களை உருவாக்கவும் , தொடரவும் செய்ய மேற்கட்டுமானத்தில் உதவுபவை தான் சமயம் , கோவில் , பள்ளி ,கல்லூரி எல்லாம்.அவற்றில் ஒன்றாக இன்று முடங்கிபோனது தான் நவீன தமிழ் இலக்கியம் அல்லது பின்நவீனத்துவ தமிழ் இலக்கியம்.சாராம்சத்தில் இன்றைய தமிழ் எழுத்தாளர்களும் , இலக்கிய இதழ்களும் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று பார்த்தால் நகரமயமான தொழில்மயமான சமூகம் நிலைத்திருக்க தேவைப்படும் தனிமனித விழுமியங்களை உருவாக்க போராடிகொண்டிருக்கிறார்கள்.Civic Sense அவ்வளவுதான்.பெங்களூரில் என் அலுவலகம் இருக்கும் சாலை பிரதான சாலை என்பதால் பாதசாரிகள் கடப்பதற்காக Traffic Lights பொருத்தப்பட்டது.ஒரு நாள் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிவதற்குமுன்பே போக்குவரத்தில் ஏற்பட்ட ஒரு இடைவெளியில் பலரும் சாலையை கடக்க முயன்றோம்.அப்போது ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ சேர்ந்த ஒரு வெளிநாட்டுக்காரர் Wait for the Signal என்று கத்தினார்.யாரும் பொருட்படுத்தவில்லை.ஒரு வகையில் நம் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களும் இதழ்களும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு இனக்குழு சமூகம் தனிமனிதர்களிலான சமூகமாக மாறிவரும்போது Transitionயில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இவை.பச்சை விளக்கு எரியும் போது சாலையை கடப்பதற்கான விழுமியங்களை பள்ளியில் கற்றுத்தர மறந்துவிட்டதால் இவர்கள் நமக்கு கற்றுத்தர விரும்புகிறார்கள், அவ்வளவுதான்.இந்த விழுமியங்களை காலப்போக்கில் பள்ளிகளே கற்றுத்தர ஆரம்பித்தால் நமது தமிழ் கூறும் நல்லுலகின் கருத்துலகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை.எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ஒரு மேடையில் கூடங்குளத்தின் எதிர்பாளர்களுக்கு ஆதரவாகவும் , ரஷ்ய தூதர் கூடங்குளம் எதிர்பாளர்கள் இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்கள் என்று சொல்கிற இன்னொரு மேடையில் அமரந்து அவர்கள் தரும் விருதை பெற்றுக்கொள்வதிலும் பிரச்சனையில்லை.ஜெயமோகனுக்கு காந்தியை பற்றி பேசிக்கொண்டே அப்துல் கலாம் கையால் விருது வாங்கிக்கொள்வதில் பிரச்சனையில்லை..சாரு நிவேதிதா கூடங்குளம் பற்றி விஞ்ஞானிகள் பேச வேண்டும் என்கிறார்.மனுஷ்யபுத்திரனுக்கு தொழில்மயமான சமூகத்திற்கு தேவையான நவீன விழுமியங்களை உருவாக்க நிறைய போராட்ட களன்களை சந்தித்துகொண்டிருக்கிறார்.காலச்சுவடு கண்ணனுக்கு தான் கூடங்குளம் எதிர்பாளர்களின் ஆதரவாளன் என்று சொல்லிக்கொள்வதிலும் , எஸ்.பி.உதயகுமாரிடம் காலச்சுவடு பற்றிய கருத்தை பதிவு செய்வதிலும் அக்கறை நிறைய இருக்கிறது.கனிமொழியின் முதல் பாராளுமன்ற உரையை பிரசுரித்தவர் அதன் முன்னோ பின்னோ எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் உரையை பிரசுரித்திருக்கிறார்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஜெயமோகன் எழுப்பிய கருத்தியல் உருவாக்கும் அதிகாரம் பற்ற கேள்விகள் தஸ்தாவெய்ஸ்கியால் நூற்றிஐம்பது வருடங்களுக்கு முன்பே கேட்கப்பட்டுவிட்டது.தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் நாவலில் , பேதை நாவலில் விஞ்ஞானம் குறித்து தொழில் மய சமூகம் உருவாக்கும் அறவீழ்ச்சியை பற்ற பேசியதை நெருங்கக்கூட இங்கு யாருமில்லை.உண்மையில் அதுதான் கலை.ஹெர்பர்ட் மார்க்யூஸா சொல்வது போல The Purpose of Art is to Negate.தமிழ் இலக்கியம் செய்து கொண்டிருப்பது To Permit.சரி அப்படியென்றால் தமிழ் அறிவுஜீவி பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் அளித்த கருத்து கொடை எதுவும் இல்லையா.இருக்கிறது.அவர்கள் அளித்த மிகப்பெரிய கருத்து கொடை- தமிழ் தேசியம்.நான் ஒரு ஒன்றுமில்லைபிரமிள்
வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்ட
வானம் எல்லையில்லாதது.

என்ற பிரமளின் கவிதையில் மழை பெய்து நீண்ட நாட்களாகி மண் வெடித்து வரண்டு கிடக்கும் நிலத்தில் ஒரு நாலு முழ வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு தலையில் முண்டாசுடன் ஏதையோ சிந்தித்தபடி சென்றுகொண்டிருக்கும் விவசாயி சட்டென்று நெற்றியில் கைவைத்து வானத்தை பார்க்கும் போது கண்டுகொள்கிறார் வானம் எத்தனை எல்லையில்லாதது என்று.மிகப்பெரிய தரிசனம் போல கிடைக்கும் மனவிரிவு.மிகச் சிறந்த கவிதை.இந்த கவிதையை ஒரு இந்திய மனதால் தான் எழுத முடியும் என்று தோன்றுகிறது.காக்கை குருவி எங்கள் ஜாதி , நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதி வரியின் தொடர்ச்சிதான் பிரமளின் இந்த கவிதையும்.ஒரு அத்வைத வாழ்க்கை நோக்கு.வானம் எவ்வளவு பெரியது.எவ்வளவு மனிதர்கள் , எவ்வளவு ஜீவராசிகள்.புறக்கண்ணால் வாழ்க்கையை அணுகி அதன் மூலம் அடையும் மிகப்பெரிய அகவிரிவு இந்த வாழ்க்கை நோக்கு.
நகுலன்

நகுலனின் புகழ்பெற்ற ஒரு கவிதை.

ராமச்சந்திரனா என்று கேட்டேன்.
ராமச்சந்திரன் என்றார்.
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை.
அவர் சொல்லவுமில்லை.

இந்த கவிதையை முதலில் படித்த போது ஒன்றும் புரியவில்லை.சில வருடங்கள் கழித்து இப்போது அந்த கவிதைக்கு நான் என் மனதில் சில வரிகளை சேர்த்து வாசிக்கிறேன்.ஏன் அவர் கேட்கவில்லை , ஏனேனில் அது அத்தனை முக்கியமில்லை, ஏன் அவர் சொல்லவில்லை, ஏனேனில் அதுவும் முக்கியமில்லை, ஏன் முக்கியமில்லை என்றால் சாராம்சத்தில் நாம் எந்த ராமச்சந்திரனாக இருந்தாலும் அது ஒன்றுமில்லை என்பது தான் அந்த வரிகள்.ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலில் மேலாளர் மெர்சால்டை அழைத்து பாரீஸில் வேலை இருக்கிறது , செல்ல விருப்பமா என்று கேட்பார்.அதற்கு மெர்சால்ட் சொல்வான் எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே.அங்கே செல்வது நல்லதுதான் , இங்கே இருப்பதும் நல்லது தான்,நான் இங்கேயே இருக்கிறேன் என்பான்.ஆல்பெர் காம்யூ இருத்தலிய துயர் பற்றியோ அவதி பற்றியோ பேசுவதில்லை.அவர் இருத்தலிய அபத்தத்தை பற்றி பேசுகிறார்.விஞ்ஞானத்தாலோ, சமயத்தாலோ நம் வாழ்க்கை குறித்தோ நம் இருப்பு குறித்தோ எந்த வித அர்த்தத்தையோ ஒரு காரணத்தையோ தர முடியவில்லை.அப்படி விளக்கப்பட்டாலும் நம் மனதின் அந்தரங்கம் அதை ஏற்பதில்லை.அதனால் ஆல்பெர் காம்யூ சொல்கிறார் இந்த வாழ்க்கை அபத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்த விளக்கமும் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாது.எதையும் பற்றிக்கொள்ள தேவையில்லை.நம்மை காப்பாற்றவோ , கரையேற்றவோ எந்த கரமும் வரப்போவதில்லை.இந்த பிரக்ஞையோடு வாழ்க்கையை அணுகவேண்டும்.இதன் ஒரு கருத்துருவகமே மெர்சால்ட்.ஆனால் நகுலன் ஆல்பெர் காம்யூவை தான்டி செல்கிறார்.நகுலன் முன்வைப்பது இருத்தலிய அபத்தத்தின் ஆன்மிக உச்சம்.இந்த மேலே சொன்ன நகுலன் கவிதைக்கு ஒரு தொடர்ச்சி உண்டு.புறநானூற்று பாடலான பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே என்பதன் தொடர்ச்சிதான் நகுலனின் ராமச்சந்திரன் கவிதை.சமயங்களில் முக்கியமானதாக பேசப்படும் நகுலனின் "யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம்" என்ற கவிதையை நாம் நகுலன் மூலமாக மட்டுமல்ல நவீன இயற்பியல் மூலமாக கூட சென்றடையலாம்.ஆனால் ராமச்சந்திரன் கவிதை அப்படியல்ல.அது ஒரு ஆன்மிக எல்லையை தொடுகிறது.பிரமளின் கவிதையும் ஒரு ஆன்மிக கவிதைதான்.ஆனால் அது முன்னர் சொன்னது போல புறக்கண் கொண்டு பார்பதால் உருவாகும் அகமனவிரிவு.ஆனால் நகுலன் சொல்வது அகத்தில் மீக நீண்ட தூரம் செல்லும் போது ஏற்படும் அபத்த நிலையின் உச்சம்.இரு வேறு உலகங்கள்.இரு வேறு நோக்கு.இரண்டிற்கும் இந்திய தத்துவத்தின் தொடர்ச்சி உண்டு.விஷ்ணுபுரம் நாவலில் முதல் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூன்றாவது அத்தியாயத்தில் ஐதிகங்களாக மாறிவிடுவார்கள்.நமது முன்னோர்களின் ஆசைகள், கனவுகள்,கண்ணீர், மகிழ்ச்சி எல்லாம் என்னவானது?நமது முன்னோரின் பெயர்கள் என்ன?நம்முடைய கனவுகள் , ஆசைகள் ,கண்ணீர் , மகிழ்ச்சி எல்லாம் என்னவாக போகிறது.ஒன்றுமில்லை.ஆம்.நான் ஒரு ஒன்றுமில்லை.இதை படிக்கும் நீங்கள் கூட ஒரு ஒன்றுமில்லை தான்.நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்.இது ஒரு உண்மை.இதை நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்தவர் நகுலன்.