கறுப்பு அன்னம்
Black Swan என்றொரு திரைப்படத்தை ஒரிவு தனிமையில் தொலைக்காட்சியில் பார்த்தேன்.அன்று தூக்கத்தில் ஏதோ ஒரு பறவை என்னை கொத்துவது போன்ற ஒரு கனவை கண்டேன்.நான் எழுந்து பறவையை விரட்ட பார்க்கிறேன்.ஆனால் மறுபுறம் என்னை யாரோ இழுப்பது போல இருந்துது, பதறி எழுந்தேன்.பறவை கானேன்.சில நாட்கள் கழித்து நண்பர் ஒருவரிடம் படத்தை பற்றியும் அந்த கனவை பற்றியும் சொன்னேன்.அவர் அந்த படத்தை ஏற்கனவே பார்த்திருந்தார்.இறுக்கமும் கச்சிதமானதும் வெள்ளை அன்னம் என்றால் இலகுத்தன்மையும் நெகிழ்வுமே கறுப்பு அன்னம் என்றார்.அந்த மைய கதாபாத்திரம் அவள் நடிக்கும் நாடக கதாபாத்திரத்தில் இறுக்கமான கச்சிதமான உடல்மொழியை கோரும் பகுதியை சிறப்பாக செய்கிறார்.இலகுத்தன்மையை கோரும் நாடகத்தின் மற்றொரு பகுதியை அவரால் செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்.நாடக இயக்குனர் அவள் தன் இறுக்கத்தை விட வேண்டும் என்கிறார்.அவள் எவ்வளவு முயற்சித்தும் அவளால் தன் இறுக்கத்தை கைவிட முடியவில்லை. நாடக அரங்கேற்றித்தின் போது தன் அறையில் தன்னை தானே கத்தியால் குத்திக்கொள்கிறாள்.அவள் தன் இறுக்கத்தை தன்னிலிருந்து வெட்டி எடுக்கிறாள்.அதன் பின் அவள் இலகுத்தன்மையை அடைகிறாள்.அவள் நெகிழ்வு கொள்கிறாள்.அவள் கறுப்பு அன்னமாகிறாள்.

நான் தாம்பரத்தில் ஒரு வீட்டிலிருந்தபோது அருகிலிருந்த வீட்டில் ஒரு பெண் கதவருகில் நின்றுகொண்டு தலைவாரி கொண்டிருக்கும் சித்திரத்தை காலையில் அலுவலகம் செல்லும்போது பார்ப்பேன்.அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன.கணவர் ஏதோ ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.எனக்கு அந்த பெண்னை பார்க்கும் போதெல்லாம் இந்த பெண்ணுக்கு கணவர் இருக்கிறார், குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் இந்த பெண் இவைகளுக்கு அப்பால் வேறு ஏதோ ஒரு அகமகிழ்வுக்காக ஏங்குகிறார் என்று தோன்றும்.She doesn’t belong here என்று நினைத்துக்கொள்வேன்.ஒரு நாள் அந்த வீடு காலிசெய்யப்பட்டது.அந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்பது கணவருக்கு தெரிந்துவிட்டதால் கணவர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார்.மணைவியை அவருடைய அம்மா வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டார்.

அந்த பெண் ஏதோ ஒரு வகையில் அவர் கணவர் அதை அறிவதற்கு முன்னும் குற்றவுணர்வு கொண்டிருந்திருப்பார்தான்.வெளியில் மிகவும் இறுக்கமான விழுமியங்களை முன்வைக்கும் நம் சமூகத்தில் இத்தகைய விஷயம் அந்த கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அந்த பெண்ணுக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்.ஒரு திருமணத்திற்கு செல்ல முடியாது.உறவினர்களை சந்திக்க முடியாது.நண்பர்களில் சிலர் காதுபடவே கேலி செய்யலாம்.அதை கடப்பதும் அவ்வளவு எளிது அல்ல.அந்த பெண்ணுக்கும் அவர் செய்த செயல் குறித்த எவ்வித நியாயப்படுத்தலும் இல்லாமல் இருக்கலாம்.அவரை அழுத்தமான ஒரு குற்றவுணர்வு பற்றிக்கொள்ளலாம்.அந்த குழந்தைகள் தாயார் இல்லாமல் கதறி அழுதிருக்கக்கூடும்.ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் ஒரு எளிய நெகிழ்வும் , இலகுத்தன்மையும் சாத்தியப்பட்டால் அந்த கணவர் தன்னை சுற்றியுள்ள மனிதர்களை பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளை வளர்த்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழலாம்தான்.அது அவ்வளவு எளிதல்ல.அதற்கு நம் இறுக்கத்தை நாம் நம்மிலிருந்து வெட்டி எடுக்க வேண்டும்.அந்த பெண் மிகவும் இறுக்கமாக தன் தடுமாற்றங்களை அசைபோட்டுக்கொண்டே இருந்தால் அவர் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்.மாறாக அவருக்கு நெகிழ்வு சாத்தியப்பட்டால் அதன் பின்னான தன் வாழ்க்கையை அவர் அமைத்துக்கொள்ள முடியும்.அவர் செய்தது தவறென உணர்ந்தால் மன்னிப்பு கேட்கலாம்.ஆனால் மன்றாட தேவையில்லை.மன்றாடியும் கண்ணீர் விட்டும் கதறியும் மனச்சோர்வடைந்தும் இறுக்கமாக இருப்பதை விட அந்த பிரச்சனையை கடந்து ஒரு எளிய வாழ்வை அவர் தேர்வு செய்யலாம்.ஒரு கடந்த செயலை நியாயப்படுத்துவதன் மூலம் அல்லது அர்த்தப்படுத்துவதுன் மூலம் நாம் ஏதோ ஒரு வகையில் நம் சமூகத்தின் விழுமியங்களுக்குள் மறுபடியும் நுழைய பார்க்கிறோம்.அல்லாது போனால் நாம் சமூகத்திற்கு வெளியில் இருப்பவர்கள் போல உணர்கிறோம்.அந்நியர்கள் போல.புறக்கணிப்பட்டவர்கள் போல.நாம் வேலை இல்லாமல் இருக்கும் காலத்தில் இந்த உலகத்தில் காலையில் எழுந்ததுமே எல்லாருக்கும் செல்ல அலுவலகம் இருக்கிறது, நாம் எங்கு செல்வது என்று நினைப்பதுபோல.அப்படி அல்லாது அதை கடந்துசென்றால் செர்ரி பழுங்களை சொரியும் மரத்திற்கு கீழே அவர் ஒரு நிம்மதியான வாழ்வை கண்டடையமுடியும்.நாம் பிறரின் நற்சான்றிதழுக்காக காத்திருக்க தேவையில்லை.இந்த வாழ்வை நீங்கள் எப்படி வாழ்ந்தாலும் சாராம்சத்தில் அது வாழ்க்கையே.

இந்தியர்களாகிய நாம் இனக்குழு சமூக முறையிலிருந்து தனிமனிதர்களாக இந்த நூற்றாண்டில்தான் சரியான அர்த்தத்தில் மாறி வருகிறோம்.ஐரோப்பிய சமூகம் தனிமனித விழுமியங்களை ஏற்று சில நூற்றாண்டுகள் ஆகின்றது.ஆனால் ஒட்டுமொத்த மனித சமூகமும் சட்டென்று தன் வேட்டை மனநிலையை அடைவதற்கு தேவைப்படும் நேரம் மின்னற் பொழுது தான்.நின்றால் தீவு அசைந்தால் தோனி, இரண்டுக்கும் மின்னற் பொழுதே தூரம் என்ற தேவதேவன் வரிதான் மனித மனதின் இரு எல்லைகள்.இதே விஷயத்தை அசோகமித்தரனின் பிரயாணம் சிறுகதையில் ஒரு துறவி தன்னை காப்பாற்றி கொள்ள ஒநாய்களோடு காட்டில் சண்டை போடும் கதையோடு இணைத்துப்பார்க்கலாம்.வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் கொண்ட ஒரு மனம் கூட சட்டென்று ஒரு தூய உயிரியல் பிண்டமாக எப்போதும் மாற முடியும்.ஒரு தூய உயிரியல் பிண்டம் தன் சக மனிதர்களை வேட்டையாடும், உண்ணும் , உறங்கும், கலவி கொள்ளும்.ஹெமிங்கவேவின் கதாபாத்திரம் போல.அதனால் சமயங்களில் நாம் நம்மை நோக்கியே கேட்டுக்கொள்ளும் ‘நாமா இப்படி செய்துவிட்டோம், நம் வாழ்க்கை கரை படிந்துவிட்டதே, நாம் இப்படி ஒரு செயலை எப்படி செய்தோம்,’ என்பதில் உள்ள நான் என்ற கர்வத்திற்கு சாராம்சத்தில் பெரிய அர்த்தமெல்லாம் ஒன்றுமில்லை.உண்மையில் அந்த கர்வம்தான் மிகப்பெரிய சுமை.உயிரியல் ரீதியாக இந்த உலகத்தில் எந்த மனிதர் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் நாமும் செய்யக்கூடும் என்பதே உண்மை.கீழ்மையும் தீமையும் மனிதனின் ஆதார குணங்கள் என்பது தன் உடலின் வேட்கையை உணர்ந்தவனின் தரிசனம். 

நாம் பிறந்து வளரும் சமூகத்தில் நமக்கு சிறுவயதிலிருந்தே அந்த சமூகத்திற்கான விழுமியங்கள் கற்றுத்தரப்படுகின்றன.அந்த விழுமியங்களை உள்ளடக்கிய வாழ்வை வாழும் வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் நாம் இறுக்கமாக பற்றிக்கொண்டு நிற்கும் விழுமியங்களை கடந்து ஏதோ ஒன்று வாழ்வில் சமயங்களில் நிகழவே செய்கிறது.பாலியல் ரீதியாக , ஒழுக்கவியல் ரீதியாக என்று ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு கற்றுத்தரப்பட்ட விழுமியங்களுக்கு அப்பால் நம் வாழ்க்கை சென்றுவிடுகிறதுதான்.ஏன் சென்றுவிடுகிறது என்றால் செல்வதற்கான தூரம் அதிகம் இல்லை என்பதால்தான்.அஞ்சலை நாவலில் முன்னுரையில் கண்மணி குணசேகரன் காய்ந்த விறகுகளோடு தற்செயலாக சேர்ந்துகொண்ட ஈரம் காயாத விறகுதான் புகைக்கான காரணம் , அதைப்பற்றியதே இந்த நாவல் என்று எழுதியிருப்பார்.பழுங்குடி சமூகத்திலிருந்து இன்றைய மிகவும் முன்னேறிய ஜனநாயக பண்புகள் கொண்ட எந்த சமூகமாக இருந்தாலும் அதற்கென்று ஏதோ ஒரு கட்டுப்பாடு உண்டு.ஈரம் காயாத விறகை வெளியே எடுப்பதற்கான உரிமை அந்த பழங்குடி இனக்குழுவின் மூப்பருக்கு உண்டுதான்.ஆனால் கறுப்பு அன்னம் முன்வைக்கும் நெகிழ்வும் இலகுத்தன்மையும் ஒரு சமூகத்தை நோக்கியது அல்ல.அது உங்களையும் என்னையும் சற்றே நெகிழ்ந்திருக்கலாம் என்று சொல்கிறது.அவ்வளவே.கறுப்பு அன்னம் குற்றம் செய்ய சொல்லவில்லை.குற்றம் செய்துவிட்டால் பரவாயில்லை அதை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறது.ஏன் பரவாயில்லை என்றால் நாம் மனிதர்கள் அதனால் என்று சொல்கிறது.அந்த பெண் யாரிடமும் பாவ மன்னிப்பு கேட்க தேவையில்லை.ஏனேனில் அவர் பாவ மன்னிப்பு கேட்கும் மனிதரும் அவர் செய்த அதே குற்றத்தை செய்யக்கூடியவர் தான்.அவர் ஏன் செய்யவில்லை என்றால் அவருக்கு ஒரு வேளை திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம்.அவ்வளவுதான்.

படத்தை பற்றி என் நண்பர் சொல்லிமுடித்தப்பின் நான் - ஆனால் இலகுத்தன்மை என்றால் என்ன என்று கேட்டேன்.உன் போன்ற முட்டாளுக்கு இதற்குமேல் சொல்லி புரியவைக்கமுடியாது என்று சொல்லவிட்டார்.கறுப்பு அன்னத்திற்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.