மஞ்சள் வெயில்



நண்பர் ஒருவர் ஒருமுறை ஒரு ஐந்தாறு புத்தகங்களை ஒரு பாலிதீன் பையில் போட்டு என்னிடம் வந்து நீட்டினார். என்னவென்றேன். தன் இருப்பிடத்தில் புத்தகங்களை வைத்து கொள்ள இடமில்லாததால் இவற்றை உங்கள் வீட்டில் வைத்து கொள்ளுங்கள் என்றார். எனக்கு அவர் காரணம் பிடிக்கவில்லை. வாங்க மறுத்தேன். அவர் திணித்தார்.அதற்கு மேல் எதிர்ப்பை காட்டாமல் வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு ஒரத்தில் கிடத்தினேன். பிறகு சில நாட்கள் கழித்து அதில் உள்ள புத்தகங்களை எடுத்து என் புத்தக அலமாரியில் அடுக்கினேன். அப்போது பிரமளின் கவிதை தொகுப்பை எடுத்து புரட்டினேன். நிறைய கவிதைகள் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தின.அது போல ஏதேர்ச்சையாக இணைய தளங்களில் உலாவி கொண்டிருந்த போது இன்று என்ன செய்யலாம் என்று மணம் யோசித்து கொண்டிருந்தது. சட்டென்று புத்தக அலமாரியிலிருந்து நண்பர் கொடுத்திருந்த மஞ்சள் வெயில் புத்தகத்தை அடுக்குகளிலிருந்து உருவினேன். என் மிக நெருங்கிய நண்பர் பட்டுக்கோட்டை ஹவுசிங் யூனிட்டின் இரவுக் காவலராக இருந்த திரு.வி.கே.பாலகிருஷ்ணன் (நிறுவனர் : பழஞ்சூர் தமிழ் முற்றம்) அவர்களின் நினைவுக்கு அடிபணிந்து.... என்றிருந்தது. தொடர்ந்து வாசிக்கலாமா அல்லது வேறு எதாவது புத்தகத்தை வாசிக்கலாமா என்று எண்ணியவாறு அடுத்த பக்கத்தை புரட்டினேன். அன்பிற்குரிய ஜீவிதா... என்று ஆரம்பமான வரிகளை வாசித்த பின் தொடர்ந்து சில பக்கங்களை வாசிக்கலாம் என்று தோன்றியது. கவித்துவமான வரிகள்.சட்டென்று உள்ளிக்கப்பட்டேன். தொடர்ந்து வாசித்து முடித்தேன். தான் விரும்பிய பெண்ணுக்கு எழுதப்பட்ட கடிதம் தான் இந்த நாவல் அல்லது குறுநாவல். ஒரு தன்னிலை விளக்கம். கூச்ச சுபாவமும் வெட்கமும் பிறவி குணங்களாகி போன கதிரவன் ஒரு பெண்ணுக்கு எழுதிய கடிதமே இந்த மஞ்சள் வெயில்.இந்த புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் சிலவற்றில் நான் என்னை பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட கதிரவன் அளவுக்கே வெட்கமும் கூச்சமும் உடையவன் தான் நானும்.ஒரு மாதிரி வேலையிடங்களில் பொது இடங்களில் சமாளித்து கொள்வேன். அதுவே நாவலின் ஆரம்ப பக்கங்களில் வசீகரத்தை ஏற்படுத்தியது. பெண்களிடத்தில் மட்டும் கூச்சம் அடைகிறவர் அல்ல கதிரவன். ஒரு முறை தான் முகப்வோவியம் வரைந்த கவிதை புத்தக வெளியீட்டு விழாவில் தன்னை மேடைக்கு அழைக்கும் போது கூச்சம் மிகுந்து வெளிறி போகிறார் கதிரவன்.ஆக அது அவர் குணம். அவர் ஒரு தினச்செய்தி அலுவலகத்தில் ஃப்ரிலென்ஸர் ஒவியராக பணிபுரிகிறார்.அதே அலுவலகத்தில் கம்ப்யூட்டர் செக்ஷ்னில் பணிபுரியும் ஜீவிதா என்ற பெண்ணிற்கு அவரின் ஒவியங்கள் , கவிதைகள் பிடித்திருக்கிறது. அவரை சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். அங்கே தான் கதிரவனின் பதற்றம் ஆரம்பமாகிறது. சந்திப்பதில் ஏற்படுக்கூடும் கூச்சமும் வெட்கமும் காரணமாக சந்திப்பை தவிர்க்கிறார். பிறகு சந்தித்திருக்கலாமோ என்று கவலைப்படுகிறார். குடிக்கிறார். சீகரெட் பிடிக்கிறார்.கடற்கரையில் போய் உட்கார்ந்து கொள்கிறார். பின்பு சிலநாள் கழித்து தைரியத்தை வரவழைத்து கொண்டு ஒரு ஜனசந்தடி அற்ற டெலிபோன் பூத்திற்கு சென்று பேசிகிறார்.கடைசியில் பேசியும் விடுகிறார். அவளுக்கு ரோஜா ஒன்றை தருகிறார். அதை அவள் ஏற்றும் கொள்கிறாள். அவள் அவரை காதிலிப்பதாக அவர் நினைக்கிறார். இதற்கிடையில் அவள் அலுவலகம் வருவது நின்று விடுகிறது. விசாரிக்கையில் அவளின் சம்பளமும் அவள் மேல் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவள் என்பதும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவளை காதிலிப்பது பைத்தியாகாரத்தனம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கதிரவன் தொலைபேசியில் முயற்சித்தபடியே இருக்கிறார். பேசுகிறார். தன் விருப்பத்தை சொல்கிறார்.அவள் தான் அப்படி நினைக்கவில்லையே என்று மறுப்பு தெரிவிக்கிறாள். மறுநாள் ஒருவன் அவரை அழைத்து பேசுகிறான். அடிக்கவும் செய்கிறான். அவமானத்தால் ஊரை விட்டு போய்விடலாம் என்று நினைக்கும் போது மறுபடியும் அவளுக்கு தொலைபேசுகிறார். அவள் நாளை அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று பொய் சொல்கிறாள். அவளுக்காக தான் எழுதிய எல்லா கவிதைகளையும் ஒன்றாக்கி ஒரு காகித உறையில் சில ரோஜா இதழ்களை சேர்த்து அடுத்த நாள் அலுவலகத்திற்கு எடுத்து செல்கிறார். அவள் வரவில்லை.அவள் அமெரிக்கா சென்று விடுகிறாள். அதை அறிந்து தொடர்ந்து அவளுக்கு ஒரு வருடமாக வாழ்த்து அட்டைகளையும் , தான் வரைந்த ஒவியங்களையும் ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியபடியே இருக்கிறார். அவளின் எதிர்கால வாழ்க்கைகான வாழ்த்துகளுடனும் கடிதத்தை முடிக்கிறார் கதிரவன். நாவலும் முடிகிறது.

இந்த புத்தகத்தை யூமா வாசுகி பாலகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.பாலகிருஷ்ணன் இரவுக் காவலராகவே நாவிலும் வருகிறார்.சூரியோதத்தை கண்டு பரவசம் அடைபவராக,தன் பனைமரத்திலிருந்த பச்சைக்கிளிகளுக்காக பனைமரத்தை விற்பதற்கு மணமில்லதாவராக , தோழரே என்று கதிரவனை விளிப்பவராக மிக அற்புதமான நுண்ணுணர்வு கொண்டவராக இருக்கிறார் பாலகிருஷ்ணன். தன் மகள் நஜ்மா இறந்து போனதில் மனம் பிறழ்ந்தவராக அவள் எங்கேனும் விளையாட சென்றிருப்பாள் என்று நினைத்து தேடியபடியே இருக்கும் சுலைமான் சேட், நாடோடி உருதுப் பாடகனான கான் முகம்மது ,அவனை வீட்டு நீங்காதிருக்கும் பெரிய சிம்னிவிளக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியும் , நாவலில் தொடர்ந்து வந்தபடியே இருக்கும் குழந்தைகள், அக்குழந்தைகளுக்கு படம் வரைந்து தந்தபடியே இருக்கும் கதிரவன் , அலுவலகத்தில் சக ஊழியராக வரும் சந்திரன் என்று மிகவும் கவித்துவமான குறும்கதாபாத்திரங்களும் இடங்களும் நாவல் முழுதும் வருகின்றன.குழந்தைகள் என்னும் போது கதிரவன் மிகந்த பரவசமும் குழந்தைமையும் கொண்டவராக இருக்கிறார். இலக்கியா வந்து அங்கிள் நீங்கள் என் பூவை திருடிவிட்டீர்களா என்று கேட்குமிடம் மிக அற்பதமான இடம்.

நாவலின் இறுதியில் ஒரு கிழவி தன் மகன் கொலைசெய்யப்பட்டதையும் இருந்த குடிசையை ஒடித்து போட்டதையும் சொல்லி புலம்பியபடியே ரயிலில் வருகிறாள்.அவளில் தன்னை கண்டுகொள்கிறார் கதிரவன். ஜீவிதா இல்லாமல் தானும் அந்தக் கிழவியை போல அநாதையாக்க பட்டதாக உணர்கிறார். பல இடங்களில் தன்னை மரணத்திவிட்ட ஒருவனைபோலவும் கொடும்பாவி போலவும் நினைத்துகொள்கிறார். எப்போதும் லெளகீகம் தான் வெல்கிறது என்று ஒரு வரி வருகிறது. மிக நல்ல வரி. கதிரவன் எல்லா வற்றையும் புரிந்து கொள்கிறார்.ஆனால் அவரால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. அதைப்போல ஜீவிதா தான் காதலிக்கவேயில்லை என்றும் அமெரிக்கா செல்லும் அன்று அலுவலகம் வருவதாக பொய் சொன்னதை நினைத்து நீங்கள் சிறுபெண் என்று சொல்கிறார்.அதுவும் மிக நல்லதொரு இடம். மிகவும் மெண்மையானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். புதிய கூண்டு கதையில் மூத்த சகோதரனை மிகவும் மெண்மையானவனாக காண்பிக்கும் புதுமைப்பித்தன் அவனே காதல் வயப்படுபவனாகவும் மதமாறுபவனாகவும் வருவதை காட்டுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் தான் வெட்கமும் கூச்சமும் உடையவரகளாக இருக்கிறார்கள்.அவர்களே பெரும்பாலும் காதல் வயப்படவும் செய்கிறார்கள்.அவர்களே தங்களை வதைத்தும் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவரை பற்றிய தன்னிலை விளக்கமே மஞ்சள் வெயில்.யூமா வாசுகி கவிஞராக இருப்பது அவருக்கு இந்த நாவலை எளிதில் எழுத உதவியிருக்கக்கூடும்.வராந்தாவில் படரும் மஞ்சள் வெயில் தனிமையின் படிமம்.எல்லாவற்றாலும் தனிமையில் விடப்பட்ட தனிமையின் படிமம்.

மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி - அகல் வெளியீடு.



No comments: