மானுடம் வெல்லும்



1735ம் ஆண்டிலிருந்து 1740 வரை புதுச்சேரியை ஆண்ட குவர்னர் துய்மா துரையின் காலத்தில் புதுச்சேரி , தஞ்சை , திருச்சி , ஆற்காடு , மராத்தியர் அரசாங்களை பற்றிய ஒரு குறுக்குவெட்டு பார்வை என்று மானுடம் வெல்லும் நாவலை பற்றி சொல்லலாம்.துரை துய்மாவின் சின்ன துபாஷியான  ஆனந்தரங்கப் பிள்ளை நாள் தோறும் எழுதிய நாட்குறிப்புகளில் 1735யிலிருந்து 1742வரையான நாட்குறிப்புகளின் தொகுப்பே இந்த மானுடம் வெல்லும். இதில் முக்கியமாக பதிவாகியிருப்பது காரைக்கால் மற்றும் அதை சுற்றிய ஊர்கள் எப்படி புதுச்சேரி வசமானது என்ற வரலாறு, மதுரையை ராணி மீனாட்சி அம்மாளிடமிருந்து ஏமாற்றி பறித்த சந்தா சாயபு என்ற ஆற்காடு நவாபின் மருமகன் பற்றிய வரலாறு, தஞ்சையை ஆண்ட காட்டு ராஜா சித்துஜி அவரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் சாயாஜி மன்னர் பற்றியும் அவரை கொன்று ஆட்சியை கைப்பற்றும் பிரதாப் சிங்கின் வரலாறும், இந்த மூன்று நிலங்களின் எளிய மக்களின் வரலாறும் சேர்ந்தது தான் பிரபஞ்சன் எழுதிய நாவல் மானுடம் வெல்லுமின் சாரம்.இந்த நாவலை அவர் வெறும் அரசியல் விளையாட்டுகளை பற்றியதாக மட்டுமானதாக எழுதியிருக்கலாம்.அது எளிதும் கூட. ஆனால் கோகிலாம்பாள் எனும் தாசியிலிருந்து , வெள்ளைபூண்டு என்ற விவசாயிலிருந்து , குருசு , வரதன் என்ற ஊழியனிலிருந்து பல சிறு சிறு கதாபாத்திரங்களாக வரும் எளிய மனிதர்கள் வரலாறும் இதில் பதிவாகியிருக்கிறது.அதுவே இந்த நாவலின் பலம்.ஏன் பிரபஞ்சன் இப்படி செய்தார் என்பதற்கு அவரே முன்னுரையில் விளக்கம் அளித்துள்ளார்.வரலாறு என்பது சாமான்ய மக்களின் கதை என்று. இது ஒரு மார்க்சியப் பார்வை. வரலாறு என்பது ஆட்சியாளர்களின் காலங்களை பிரிப்பது அல்ல.அது எளிய மக்களின் வாழ்க்கையில் இருக்கும் உற்பத்தி உறவுகள் , உற்பத்தி சக்திகளை பற்றிய ஆவணமே என்று கோசாம்பி முதலான மார்க்சிய வரலாற்றாசியர்கள் சொல்ல ஆரம்பித்தனர். கோசாம்பி ஒர் இடத்தில் இந்த மார்க்சியப் பார்வையை ஏன் உபயோகபடுத்துகிறேன் என்றால் இது வேலை செய்கிறது என்பதால் தான் என்கிறார்.ஆட்சியாளர்களின் மாற்றமும் , ஆட்சி மாற்றமும் சாமான்யன் வாழ்க்கையில் எந்த உற்பத்தி முறையிலான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பதே உண்மை.இந்த பார்வையை பிரபஞ்சன் ஏற்றுக்கொண்டு தன் படைப்பில முயன்றிருக்கார் என்பதே இந்த நாவலின் வெற்றி. ஆனால் இது முழுமையான வெற்றியா என்கிற போது ஒரு கேள்வி எழுகிறது. பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாக வைத்தே தன் நாவலை எழுதியிருக்கார்.ஆனால் அதிலிருந்து சிறிதளவு கூட தகவல்களில் பிசிறி விடக்கூடாது என்று பிரபஞ்சன் பதறியிருக்கார் என்பதாக படுகிறது.இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக அவர் செயல்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நாவலின் முக்கியமான தரிசனமாக எனக்கு படுவது இதுதான். நாம் இருத்தலியம் என்கிறோம், மறுப்புவாதம் என்கிறோம் , ஆனால் அந்த காலத்தில் போர்களின் போது எளிய மனிதர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு தரிசனம் மேலெழுந்து வருகிறது.நேற்றைய மனிதர்கள் ஏதோ கிராமங்களில் எழில்சார்ந்த சூழலில் சுகமாக வாழ்ந்தார்கள் என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் இருக்கிறது. அது எத்தனை முட்டாள்தனமானது என்று மானுடம் வெல்லும் நாவல் பல்வேறு வாழ்க்கைகள் முழுமாக தொடர்ந்து நிரூபித்திருக்கிறது.எழில் நிறைந்த கிராமிய சுழல்கள் எப்படி சுரண்டல் நிறைந்ததாக இருந்தது என்பதும் அடிமைகள் பண்டங்கள் போல மாற்றப்பட்டார்கள் என்பதும் மிக முக்கியமான ஆவணங்கள்.மிக முக்கியமான வரலாற்று நாவல்.பிரபஞ்சனின் உழைப்பு வணக்கத்திற்குரியது.



மானுடம் வெல்லும் - எழுத்தாளர் பிரபஞ்சன் - கவிதா வெளியீடு.

No comments: