புத்தகங்கள்


நாம் எத்தனையோ புத்தகங்களை வாசித்தாலும் சில புத்தகங்கள் நம்மை வெகுவாக பாதித்துவிடுகிறது.நாம் அந்த புத்தகங்களைத்தான் திரும்ப திரும்ப மனதில் அசை போடுகிறோம்.அதை சார்ந்தே சிந்திக்கிறோம்.ஒரு தொன்மக் கதை போல அதன் மீது ஏறி பயனம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். ஒரு Frame of reference ஆக அவை நம்முடன் இருக்கின்றன.நாம் வேறு எந்த புத்தகத்தை வாசித்தாலும் திரைப்படம் பார்த்தாலும் புது அனுபவத்தை எதிர்கொண்டாலும் அதை இவைகளுடன் ஒப்பிடுகிறோம்.என் வரையில் அப்படி டி.ஆர்.நாகராஜ் எழுதிய எரியும் பாதம் இந்திய சமூகம் பற்றிய மாற்று பார்வையை அளித்தது.அதுவரை நாம் கேட்ட உரையாடல்களிலிருந்து அது புதிய கோணத்தில் இருந்தது.இப்போது வரை சாதி பற்றிய எனது எண்ணத்தில் அந்த புத்தகத்தின் தாக்கம் வலுவாக உள்ளது.

அது போல ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதிய ஒற்றை பரிமாண மனிதன் புத்தகம் நவ முதலாளித்துவ சமூகத்தில் எப்படி உலக மனிதர்கள் கலாச்சார தளத்தில் ஒற்றை பரிமாண மனிதர்களாக மாறி விடுகிறார்கள், எப்படி நமது கலைகள் , இலக்கியங்களில் மறுதலிப்பது இல்லாமல் ஆகிவிடும் என்பதை பேசியது.இந்தப் புத்தகம் 1960களில் எழுதப்பட்டது.இந்தியாவில் தமிழகத்தில் ஏழுபதுகளில் எண்பதுகளில் தீவிரமாக தாடி வளர்த்து கலகம் செய்தவர்கள் அனைத்து அதிகார தளங்களையும் மறுதலித்தவர்கள் தொண்ணூறுகளுக்கு பிறகு தாடியை எடுத்தார்கள், ஆடைகளை மாற்றினார்கள்.எந்த மேடைகளை எதிர்த்தார்களோ அதே மேடைகளில் சென்று அமர்ந்தார்கள். சிறு பத்திரிக்கைகளில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் சென்று அமர்ந்தார்கள்.

இலக்கியத்தில் கலையில் புரட்சி என்பது வேடிக்கை சொல் ஆகியது.இந்தப் புத்தகம் இவை எல்லாவற்றையும் பேசியது.நமது கனவுகளை , பொழுதுகளை இந்த நவ முதலாளித்துவம் கைப்பற்றும் என்று ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதினார்.இந்தப் புத்தகத்தை படித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது.இன்று நாம் பார்ப்பதெல்லாவற்றையும் அந்தப் புத்தகம் முன்னறிவித்தது.

கவிதைகளில் என்னை பாதித்தவர் நகுலன்.அவரின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் ஒரு வகை ஆன்மிக தரிசனங்கள்.மனித அடையாளம் சார்ந்த என் பார்வையை அது முற்றிலுமாக மாற்றியது.அந்த பாதிப்பில் தான் இன்மையின் பாடல் என்ற குறும்படத்தை எடுத்தேன்.அவரின் ராமச்சந்திரன் கவிதை தான் கதை.படத்தை யாரும் பார்க்கவில்லை.ஆனால் எனக்கு அது முக்கியமான குறும்படம்.நகுலனுக்கு நான் செய்த சம்ர்ப்பணம்.ஒரு மனிதன் தன்னுள்யே விரிந்து கொண்டிருந்தால் தான் அப்படியான கவிதைகளை எழுத முடியும்.இன்றைய அடையாளங்கள் சூழ் உலகின் எதிர்க்குரல் நகுலனின் கவிதைகள்.

நகுலனின் அதே தளத்தில் என்னை பாதித்தவர் அசோகமித்திரன்.அநேகமாக நகுலனும் அசோகமித்தரனும் ஒரே விஷயத்தை தான் எழுதினார்கள்.நகுலன் தன் பார்வையை சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்துவிடுவார்.அசோகமித்திரன் அதே பார்வையை சொல்லிவிட்டு தண்ணீர் லாரிக்காக நிற்க வேண்டியதையும் எழுதுவார்.அவரின் பதினெட்டாவது அட்சக்கோடு நகுலனின் உலகத்தோடு அசோகமித்திரனை பொருத்திப் பார்ப்பதற்கான சிறந்த புத்தகம்.இவர்கள் இருவரையும் சேர்த்து அதே கோணத்தில் என்னை சிந்திக்கத்தூண்டியவர் ஆல்பர் காம்யூ.

தஸ்தாவெய்ஸ்யின் பெரும் நாவல்கள் அனைத்தையும் வாசித்திருந்தாலும் எனக்கு மிக முக்கியமானது அவரின் பதின் நாவல் தான்.ஆங்கிலத்தில் The Adolescent.தமிழில் இதுவரை மொழியாக்கம் செய்யப்படவில்லை.மற்ற புத்தகங்கள் இந்திய சமூகம், முதலாளித்துவம், அடையாளமின்மை குறித்த பார்வையை அளித்த போது இது என் ஆளுமையில் வெகுவான தாக்கத்தை செலுத்தியது.ஒட்டு மொத்தமாக என்னை அது மாற்றியது.கடந்த மூன்று வருடங்கள் முன்னர் தான் இந்த புத்தகத்தை வாசித்தேன்.நான் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எழுதிய கட்டுரைகளில் இந்த நூலை பற்றி எழுதிய கட்டுரைதான் எனக்கு மிகவும் பிடித்தமானது.Enmeshment மற்றும் undeveloped/underdeveloped self பற்றிய அபாரமான திறப்பை இந்த புத்தகம் அளித்தது.நான் தஸ்தாவெய்ஸ்கியிடம் இருந்து பெற்றுக்கொண்டதில் இதுவே மிக முக்கியமானது.என்னை முழுவதும் உருக்கி வேறு ஒன்றாக மாற்றியது.என் ஆளுமை சிக்கல்கள் என்ன என்பதையும் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதற்கும் எனக்கு உதவிய உளவியல் புத்தகம்.எனது எல்லைகளை அறியவும் விஸ்தரிக்கவும் உதவிய நூல்.அதே போல ஆத்மாநாமின் கவிதைகள் நமது அரசியல், கோட்பாடுகளின் உலகம் குறித்த எனது பார்வையை வலுப்படுத்தின.

ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் அதை வாசித்த போது பெரும் அதிர்வை ஏற்படுத்திய நூல்.இன்று வாசித்தால் அந்த அதிர்வு இருக்க வாய்ப்பில்லை.ஆனாலும் வாசித்த நாட்களில் என்னை அலைக்கழித்த புத்தகம்.நான் ஜெயமோகனை தொடரந்து வாசித்தாலும் அவர் என்னுடைய எழுத்தாளர் அல்ல.அவர் எழுத்தின் நாடகீயத்தருணங்களும் அடர்த்தியும் எனக்கு அத்தனை உவப்பானதல்ல.அவரின் புத்தங்களின் வழி நான் புதிய திறப்புகளை அடைந்ததில்லை.தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களிலும் இத்தகைய நாடகீயத்தருணங்களும் அடர்த்தியும் இருக்கும்,ஆனால் அதை தாண்டிய நோக்கின் காரணத்தால் அவர் எனக்கு முக்கியமானவர் ஆகிறார்.

ஹெமிங்வேவின் ஆயுதங்ளுக்கு விடை கொடுத்தல் அதே போல எனக்கு மனிதன் என்பவன் அடிப்படையில் தூய உயிரியல் பிண்டமும் கூட என்பது குறித்த தெளிவை அளித்த புத்தகம்.ஏனோ அவரின் Sun also Rises எனக்கு அதிகம் பிடிக்கவில்லை.

இவைகளுக்கு அப்பால் ஓ.ரா.கிருஷ்ணன் வழி பெளத்தம் குறித்த அறிமுகம் கிடைத்தது.அவரின் Buddhism and Spinoza புத்தகத்தை நான் முழுதாக புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அது தான் எனக்கு பெளத்தம் குறித்த முதல் அறிவை கொடுத்த புத்தகம்.அதன் பின்னர் தொடர்ந்து பெளத்தம் குறித்து ஏதேனும் ஒரு நூலை வாசித்து வருகிறேன்.மறுபிறப்பு குறித்த பெளத்தம் அளிக்கும் பார்வை , பிரக்ஞையின் வழி நம் முன் இருக்கும் வாழ்க்கையை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கு எனக்கு விடுதலையை அளித்தது.நான் தொடர்ந்து பெளத்தம் கற்கிறேன்.விஷ்ணுபுரம் நூலுக்கு அவர் எழுதிய மறுப்பு பெளத்தம் பற்றிய கிருஷ்ணனின் முக்கிய நூல்.

நான் பெரும்பாலும் ஒரு பார்வையை நோக்கை தரிசனத்தை அளிக்கும் புத்தங்களைத்தான் தேடி வாசித்தேன்.எனக்கு சமயம் சார்ந்த நம்பிக்கை இல்லாததால் எனக்கான ஒரு வாழ்க்கை நோக்கை தேடிக்கொண்டிருந்தேன்.அது இந்த நூல்களின் வழி எனக்கு கிடைத்தது.அதன் வழி நான் கொண்டிருந்த அவதிகளிலிருந்து மீண்டேன்.இப்போது வாசிக்கும் நூல்களின் அத்தகைய பார்வைகள் எனக்குத் தேவைப்படுவதில்லை.புனைவுகளுக்காக புனைவுகளை வாசிக்கலாம் என்ற எண்ணமே உள்ளது.ஆனால் நைபால் எழுதிய A house for Mr.Biswas போன்ற புத்தகங்களை வாசிக்கும் போது பெரும் சலிப்பு ஏற்படுகிறது.

இவைத் தவிர்த்து எனக்கு எப்போதும் ஆளுமைகள் மீது ஈர்ப்பு உண்டு.மாசனோபு, லாரி பேக்கர், காந்தி, நீதியரசர் சந்துரு , ச.சீ.கண்ணன் போன்றவர்களின் வாழ்க்கை கதைகள் எனக்கு உத்வேகம் அளிப்பவையாக இருந்துள்ளது.

நீங்கள் உங்களுக்கான பார்வையை உருவாக்கிக்கொண்ட பின்னர் புனைவுகளுக்காக புனைவுகளை நோக்கி செல்லலாம்.அவை சுவாரசியமானவை.