2022

 

இந்த வருடம் பெரும்பாலும் பெங்களூரில் இருந்தேன்.ஒரு மாதம் மட்டும் சென்னையில் தங்கினேன்.இரண்டு வருடங்களுக்குப் பிறகு அலுவலகம் சென்றேன்.பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சி எப்போதும் நெகிழ்ச்சி அடையச் செய்யக்கூடியதாகவே இருக்கிறது.வாழ்க்கை அதன் இயல்புக்கு இந்த வருடத்தில் திரும்பியிருக்கிறது.இது தொடர வேண்டும்.தந்தை அடிக்கடி நினைவுக்கு வருகிறார்.நண்பன் நேதாஜியின் மரணத்தை இன்று வரை என்னால் ஏற்க இயலவில்லை.

கடந்த ஆண்டு சிறுகதைகள் எழுதவில்லை.இந்த வருடம் மூன்று சிறுகதைகள் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.இரண்டு கதைகள் எழுதியிருக்கிறேன்.முதல் கதை வனம் இணைய இதழில் வெளிவந்தது.இரண்டாவது கதை மணல் வீடு இதழில் வெளியாகும்.வரும் வருடத்தில் நிறைய கதைகளை எழுத வேண்டும்.எழுத முடியும் என்று நினைக்கிறேன்.எப்போதும் ஒரு கதையை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.ஒரு கதையை முடித்தவுடன் அடுத்தக் கதையை தொடங்கி விட வேண்டும்.அதை முடிக்க வெகுகாலம் எடுத்துக்கொள்ளலாம் , ஆனால் தொடங்கி விட வேண்டும்.மனம் அதைச்சுற்றி சிந்தித்துக்கொண்டிருந்தால் போதுமானது.சிறுகதைகளில் சட்டகங்களை வைத்துக்கொள்ளாமல் எழுத வேண்டும்.நாவல் , குறுநாவல் போன்ற வடிவங்கள் பற்றி இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை.இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை 2024 அல்லது 2025யில் கொண்டு வருவேன்.அதன் பின் குறுநாவல்கள் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

பக்தீன் பற்றி எழுதிய கட்டுரைக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது.அது ஒரு நல்ல அனுபவம்.நான் இதுவரை எழுதிய வற்றில் பெரிய கட்டுரை அது தான்.இந்த வருடம் அதிகம் வாசிக்கவில்லை என்று படித்த நூல் பட்டியலை பார்க்கும் போது அறிய முடிகிறது.வாசித்தவரையில் கீதா ராமசாமியின் Land Guns Caste Woman நூலும் ஆனந்த் டெல்டும்டேவின் Republic of Caste நூலும் முக்கியமானவையாக இருந்தன.கீதா ராமாசியின் நூல் பற்றி எழுதிய கட்டுரை தளம் இதழில் வெளியாகி உள்ளது.வாசிப்பிலும் எழுத்திலும் ஒரு தொடர்ச்சியை வைத்துக்கொள்ள வேண்டும்.

Mahatma Gandhi in Tamil தொகை நூலில் என் மாற்று பொருளாதாரத்தின் குறியீடு கட்டுரை இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளித்தது.ஆனால் நான் இன்று காந்தியிடமிருந்து சற்று விலகிவிட்டேன் என்றும் தோன்றுகிறது.இந்தியச் சமூகம் பற்றி அம்பேத்கரின் பார்வை எனக்கு மிக அணுக்கமானதாக இருக்கிறது.தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய புத்தகத்தை 2023 அல்லது 2024யில் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.அவருடைய பெரும்பாலான முக்கிய நாவல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதிவிட்டேன்.பக்தீனின் பார்வையையும் எழுதிவிட்டேன்.இன்னும் சில நாவல்களைப் பற்றியும் சரிதைப்பற்றியும் எழுதிச் சேர்க்க வேண்டும்.இந்த வருடம் அவரது நூல்கள் பற்றி மூன்று கட்டுரைகள் எழுதுவேன்.

வேலையில் நான் விரும்பும் திசை நோக்கி பயணிக்க வேண்டும்.அதற்கான சாத்தியங்களை நான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.இந்த வருடம் அது நிகழ வேண்டும்.பெங்களூரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருடத்தில் அது சாத்தியமாகலாம்.அப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சி.உடலைப் பேண வேண்டும் என்ற அக்கறை அதிகரித்திருக்கிறது.அதற்கான வழிகளையும் கண்டடைந்திருக்கிறேன்.இந்த வருடத்தில் அவற்றை நிகழ்த்துவேன்.என் ஆளுமைச் சிக்கல்களிலிருந்து வெகுவாக விலகி வந்து விட்டேன் என்பதையும் இன்னும் விலக வேண்டியவற்றைப் பற்றிய தெளிவையும் கொண்டிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெங்களூரில் தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக் கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.அதைக் குறித்து ஏதேனும் செய்யமுடியுமா என்று இந்த வருடத்தில் பார்க்க வேண்டும்.திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.திரைப்படங்களை பார்க்க பிடிக்கவில்லை.தொடர்ந்து என்னையே கட்டாயப்படுத்திக்கொண்டு பார்ப்பதா அல்லது விட்டுவிடுவதா என்று தெரியவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கி  வாழ்க்கை ஒரு கொடை,வாழ்க்கை என்பது மகிழ்ச்சி என்று சொல்கிறார்.நமக்கு செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கும்.அது எப்போதும் இருக்கும்.போதாமைகள் இருக்கும்.ஆனால் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி பதற்றமின்றி பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் பயணிக்க வேண்டும்.தர்மாணந்த் கோஸாம்பி மன நிறைவுடன் அறிவுக்கான பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்கிறார்.நாம் மேற்கொள்வோம்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




ஆப்பிளுக்கு முன்

 

சி.சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ஆப்பிளுக்கு முன்.2017யில் எழுதியிருக்கிறார்.அதற்கு முன் 2016யில் பிரசுரமான இறுதி இரவு என்ற சிறுகதைத் தொகுப்பு அவரது முதல் புனைவு நூல்.ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய கேன்வாஸை எடுத்துக்கொள்கிறது.கஸ்தூரிபாவின் மரணம், நவகாளி பயணம், காந்தியின் பரிசோதனைகள்,வங்காளப் பயணம், தேசப் பிரிவினை,மதக் கலவரங்கள், பிர்லா இல்லத்தில் காந்தியின் தங்கல், அங்கே நிகழ்ந்த மரணம்,காந்தியின் மரணத்திற்கு பிறகு மநு நிராதரவாக நிற்கும் நிலை என்று வரலாற்றின் முக்கியத் தருணங்களை பின்புலமாக கொண்டுள்ளது இந்த நாவல்.

இத்தகைய பின்புலமே நாவலுக்கான களத்தை தந்து விடுகிறது.பெரும்பாலும் நல்ல களம் அமைந்து விட்டால் நல்ல கதைகளை எழுதிவிடலாம்.களங்களும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் அவர்கள் செய்யும் பணிகளுமே ஒரு கதையின் முக்கியத் தளமாக இருக்கிறது.கதை அல்ல!இவற்றை ஒரு ஆசிரியர் சரியாக அமைத்துவிட்டால் அதற்கு மேல் அவரது மொழி வளமும் கற்பனையும் அவரது நோக்கும் கதையை தீர்மானிக்கின்றன.

ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய களத்தை கொண்டிருந்தாலும் விரித்து எழுதுவதை விட சுருக்கி எழுதும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.பொதுவாக இத்தகைய பண்புகளை சிறுகதைகளே கொண்டிருக்கும்.அவற்றில் தான் நாம் கோடிட்டு காட்டி விட்டு அடுத்த பகுதிக்கு சென்று விடுவோம்.இந்த நாவலில் அத்தகைய முறைதான் பின்பற்றப்பட்டுள்ளது.

நாவல் ஆகா கான் அரண்மனையில் காந்தி சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்திலிருந்து அவரது மரணம் வரையான காலம் வரை  பயணிக்கிறது.காந்திக்கும் மநுக்கும் இடையிலான பரிசோதனைகளும் அதை முன்னிட்டு அவர்கள் கொள்ளும் உரையாடல்களும் பிறர் அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்களுமே நாவலின் முன்தளத்தில் அமைந்திருக்கின்றன.மற்றவை அனைத்தும் பின்னணியில் நிகழ்கின்றன.பின்னணியில் நிகழ்பவை மீது எந்த இடத்திலும் கவனம் குவியவில்லை.இந்தப் பரிசோதனைகள் குறித்து நாவல் எந்த விதமான பார்வையையும் முன்வைக்க விரும்பவில்லை.அதை சரி என்ற திசைக்கும் நாவல் எடுத்துச்செல்லவில்லை.தவறு என்றும் சொல்லவில்லை.ஒரு வகையில் அதை பதிவு மட்டுமே செய்கிறது.அந்தப் பரிசோதனைகள் மநுவையும் காந்தியையும் பாதிக்கிறது.இவற்றால் மநு உளநிலை வெகுவாக பாதிப்புக்குள்ளாகிறது.அவள் காந்தி சொல்வதை முழுமையாக ஏற்கிறாள்.கிட்டத்தட்ட நிஷ்களங்கமான ஒரு குழந்தையின் இடத்திற்கு அவள் செல்கிறாள்.ஆனால் அதே நேரத்தில் அவளை சுற்றி உள்ளோரின் கேள்விகளாலும் அழுத்தங்களாலும் அவள் குழப்பம் கொள்கிறாள்.தக்கர் பாபா தன் உரையாடல் வழி மநுவிடம் வெற்றி பெறுகிறார்.ஆனால் அது தற்காலிகமான வெற்றியாக அமைகிறது.

காந்தி எப்போதும் பிறரின் கோணத்தை பொருட்படுத்தாமல் தான் வாழ்ந்திருக்கிறார்.அவர் மநுவிடம் தன் பரிசோதனைகள் பாதியிலேயே நின்றுவிட்டதால்தான் நவகாளியில் தன்னால் அமைதியை கொண்டு வர இயலவில்லை என்று சொல்கிறார்.அவர் எப்போதும் தனிமனிதனின் தூய்மை புறத்தை பாதிக்கிறது என்ற கொள்கையை கொண்டிருந்தார்.சிறு விஷயங்களில் மட்டுமல்ல மிகப்பெரிய கொள்கை முடிவுகளில் கூட அதையே பின்பற்றினார்.சாதிய வேறுபாடுகள் , தீண்டாமை , நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றில் அவர் உயர் குடிகளின் தூய்மையைத்தான் வலியுறுத்தினார்.ஒடுக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொள்வதை தவிர வேறு பணிகள் எதுவும் காந்தியின் செயல்திட்டத்தில் இல்லை.காந்தியை பின்பற்றி வினோபா பாவே பல நிலச்சுவான்தார்களிடமிருந்து நிலத்தை தானமாக பெற்றார்.ஆனால் பூதான்  இயக்கம் தோல்வி என்றே நாம் அறிகிறோம்.

காந்தி தன்னை ஒரு அன்னையாக மாற்றிக்கொள்ள விரும்பினார் என்ற பார்வை நாவலில் உரையாடல்களில் மநுவின் எண்ணங்களில் தொடர்ந்து வருகிறது.காந்திக்கும் மநுவுக்குமான உறவு பிறரால் புரிந்து கொள்ள இயலாத ஆன்மிகமான தளத்தில் அமைந்திருப்பதான கோணத்தை நாவல் முன்வைக்க விரும்பி உள்ள அதே நேரத்தில் அப்படியான ஒரு கோணத்தை முழுமையாக பதிவு செய்யவும் விரும்பவில்லை.காந்தியும் மநுவும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள்.அவர்களுக்குள் ஆழமான பற்று இருக்கிறது.இது நாவலில் நன்கு வெளிப்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்த உறவில் உள்ள நோய்மையும் மநுவின் சோர்வின் வழி புலனாகிறது.

எப்போதும் உறவுகளில் நாம் மிகப்பெரிய உரையாடல்களை விளக்கங்களை நமக்கோ பிறருக்கோ அளிக்காமல் இருக்க முடிந்தால் அந்த உறவு இயல்பானதாக இருப்பதாக உணரலாம்.காந்திக்கும் மநுவுக்குமான உறவு இயல்பானதாக இல்லை என்பதை அவர்களுக்குள்ளான உரையாடலும் பிறருடன் அவர்கள் கொள்ளும் வாதங்களும் உணர்த்துகின்றன.தக்கர் பாபாவுக்கும் காந்திக்கும், தக்கர் பாபாவுக்கு மநுவுக்குமான விவாதங்கள் நாவலின் மையமாக அமைந்திருக்கிறது.இந்த வாதங்களை கூர்மையானதாக முன்வைக்க நாவலாசிரியர் விரும்பியிருக்கிறார்.ஆனால் அந்த வாதங்கள் தோய்ந்து போன தோள்கள் போல அமைந்திருக்கின்றன.அந்த வாதங்கள் மிக எளிமையாக நிகழ்கின்றன.அவை எந்த உக்கிரமும் கோபமும் நாடகத்தனமும் பாவனைகளும் இல்லாமல் இருக்கின்றன. ஒப்புநோக்க சுஷீலாவுக்கும் மநுவுக்குமான பேச்சு நன்றாக அமைந்திருந்தன.

இந்த நாவலின் முடிவில் மநு பாவு என் அன்னை என்று எண்ணுகிறாள்.நாவல் இந்தப் பார்வையைத்தான் முன்வைக்க விரும்புகிறதா என்பது தெரியவில்லை.ஆனால் நாவலின் பயணம் இதற்கு மாறாக மநுவின் கையறு நிலையைத்தான் பதிவு செய்கிறது.இது காந்தியின் பரிசோதனைகள் என்பது பற்றிய நாவல் என்பதை விட மநுவின் கைவிடப்பட்ட நிலை பற்றிய நாவல் என்றே கொள்ள முடியும்.மிகப்பெரிய ஆளுமையின் முன் நாம் நம்மை முழுமையாக கரைத்துக்கொள்கிறோம்.அந்த ஆகிருதியின் நிழல் நமது நிழலை இல்லாமல் ஆக்குகிறது.நிழல் என்பது நமது அகங்காரம்.அந்த அகங்காரம் இல்லாத போது அந்த பேராளுமையின் பகுதியாக நாம் மாறுகிறோம்.பேராளுமையின் பகுதியாக இருக்கும் போது மகிழ்ச்சி இருக்கலாம்.குழப்பம் இருக்கலாம்.ஆனால் அந்தக் காலத்திற்கு பின்னர் அவை மிகுந்த மனச்சோர்வை மட்டுமே அளிக்கும்.நாம் பல ஆன்மிக மடங்களில் நிகழ்பவற்றை பற்றி படிக்கிறோம்.அவர்கள் எப்படி முழுமையாக மூளைச் சலவைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதை படித்து ஆச்சரியம் கொள்கிறோம்.அவை பெரும்பாலும் நமது விருப்பத்தாலேயே நிகழ்கிறது.நாம் நம்மை கரைத்துக்கொள்ள விரும்புகையிலேயே அத்தகைய சாத்தியங்கள் அரங்கேறுகின்றன.ஆனால் அவை குழப்பங்கள் ஊடேத்தான் நடக்கின்றன.

மநுவுக்கும் காந்திக்கும்  , காந்திக்கும் பிறருக்குமான பரிசோதனைகள் ஒரு வகை பாவனைகள்.அவை பாவனைகளாக இருப்பதாலேயே மனச்சோர்வு ஏற்படுகிறது.அவை இந்த நாவலில் பதிவாகி இருக்கிறது.மநுவின் வலியை பதிவு செய்த நாவலாக இதை பார்க்கத் தோன்றுகிறது.ஆப்பிளுக்கு முன் என்பது மனிதனுக்கு ஒரு போதும் சாத்தியம் ஆகாத இறந்தகாலம்.இந்த நாவலின் வெற்றி அதன் களம்.அதே நேரத்தில் நாவல் ஏதேனும் ஒரு கோணத்தை விரித்து எழுதியிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சி.சரவணகார்த்திகேயன் - ஆப்பிளுக்கு முன் - உயிர்மை வெளியீடு.

புகைப்படம் - https://www.bbc.com/news/world-asia-india-49848645

காங்கிரஸின் எதிர்காலம்

 

ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உனா நகரில் அவர் மேற்கொண்ட போராட்டமும் அதன் முறைமையும் தலித் போரட்டங்களில் மிகப் புதிதாகவும் படைப்பூக்கத்துடனும் அமைந்திருந்தது என்று ஆனந்த் டெல்டும்டே சொல்கிறார்.அவர் சென்ற முறை சுயேட்சையாக வெற்றி பெற்றார்.இந்த முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.அவரும் கன்னையா குமாரும் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார்கள்.கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது எனக்கு வருத்தத்தை அளித்தது.ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை எந்த வகையிலும் புதுப்பித்துக் கொள்ள தயாராக இல்லாத சூழலில் இளைஞர்களுக்கு வேறு வழியும் இல்லை.
 
இன்று ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவது மத்திய தர வர்க்கத்தினரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , ஊழல் அற்ற ஆட்சி என்பதற்கு அப்பால் ஆம் ஆத்மி எதையும் சொல்லவில்லை.மத்திய தர வர்க்கத்தினரும் வேறு எதையும் கோரவில்லை.அவர்களுக்கு என்று சித்தாந்தம் இல்லை.காங்கிரஸ் மற்றொரு ஆம் ஆத்மி கட்சியாக தன்னை காண்பித்துக் கொள்வதால் எந்தப் பயனையும் பெறப் போவதில்லை.ஆம் ஆத்மி எந்தளவு விரைவாக வளர்கிறதோ அதே அளவு விரைவாக சரியவும் கூடும்.மத்திய தர வர்க்கத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை என்பது தான் உண்மை.லிபரல்களுக்கும் வலதுசாரிகளுக்குமான தூரம் குறைவு தான்.
 
காங்கிரஸ் செய்ய வேண்டியது இஸ்லாமிய நிலையையும் தலித் நிலையையும் ஒன்றிணைத்து அதற்கான கதையாடலை உருவாக்குவது தான்.அப்படி செய்யும் போது மட்டுமே காங்கிரஸ் தனக்கான தனித்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அத்தகைய கதையாடல் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.எங்கெல்லாம் தலித் நிலை குறித்து பேசுகிறோமோ அங்கு இஸ்லாமியர்களின் நிலை குறித்தும் பேச வேண்டும்.இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும்.இன்று சிறைகளில் இருப்பவர்களில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இஸ்லாமியர்களாவகவும் பழங்குடிகளாகவும் தலித்துகளாகவும் இருக்கிறார்கள்.தலித்துகளும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் ஒரே போன்ற வசிப்பிடங்களில் வாழ்கிறார்கள்.இவைகள் குறித்து காங்கிரஸ் பேச வேண்டும்.
 
காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெறும் வேலைவாய்ப்பு , வளர்ச்சி என்பதை கொண்டு மட்டும் வாக்குகளை பெற முடியாது.அத்தகைய வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சியும் ஆம் ஆத்மியும் மேலும் திறன்பட செய்யும் என்று இளைஞர்கள் உட்பட பலரும் நினைக்கிறார்கள்.காங்கிரஸ் தாங்கள் மென்மையான வலதுசாரிகள் அல்ல தாங்கள் பாரதிய ஜனதா கட்சி உருவாக்கி உள்ள மற்றமையை நீர்த்துப் போகச் செய்யக்கூடியவர்கள் என்ற நிலைக்கு தங்களை நகர்த்த வேண்டும்.வளர்ச்சி, வேலைவாய்ப்பு , மதச்சார்பின்மை, விளிம்பு நிலையில் உள்ள இஸ்லாமியர்கள், தலித்துகள் , பழங்குடிகளின் நலன்கள் ,இந்திய அரசியலமைப்பை காப்பது ஆகியவை தான் தங்களின் முக்கியமான கொள்கைகள் என்று சொல்ல வேண்டும்.
 
அப்படி செய்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.ஆனால் காங்கிரஸ் அதன் வழி முக்கிய தரப்பாக இருக்கும்.தன் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும்.இல்லை என்றால் காங்கிரஸின் அவசியம் என்ன.ஒன்றுமில்லை.அந்த இடத்தை ஆம் ஆத்மி நிரப்பிவிடும்.வெற்றிடத்தை காற்று நிரப்புவது போல.ஆம் ஆத்மியின் வளர்ச்சி பாரதிய ஜனதா கட்சிக்கு அதன் சித்தாந்தத்திற்கு மாற்றே இல்லை என்ற நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்லும்.இரண்டில் எதை தேர்தெடுத்தாலும் ஒன்று தான் என்ற நிலைக்கு வாக்காளர்களும் செல்வார்கள்.இது ஒரு வகையில் இன்றைய நம் வாழ்க்கையின் உள்ளீடற்ற தன்மையின் வெளிப்பாடு தான்.மற்றமை மீதான அக்கறை அற்ற தன்மையின் புறத்தோற்றம் தான் இந்தக் கட்சிகளின் வெற்றிகள்.ஆனால் அது தனிமனிதர்களின் தோல்வி அல்ல.நகரமயமாக்கலும் , தனியார்மயமாக்கலும் உருவாக்கும் வெற்றிடத்தின் புறத்தோற்றம் இவை.ஆம் ஆத்மியும் பாரதிய ஜனதா கட்சியும் அதனால் பயன் அடையும் இரு முகங்கள்.காங்கிரஸ் தன்னை புதுப்பித்துக் கொண்டு இவர்களுக்கு மாற்றான சக்தியாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அதற்கான கதையாடல்களை கண்டடைய வேண்டும்.இடதுசாரிகளையும் மாநிலக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தல்களை சந்திக்க வேண்டும்.அவை நல்ல விளைவுகளை உருவாக்கும்.
 
 

இட ஒதுக்கீடு எனும் மாயை

 

ஆனந்த் டெல்டும்டே

கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை அளவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்திருக்கின்றன.கம்யூனிஸ்ட்கள் வர்க்க அடிப்படையில் மட்டுமே சமூகத்தை பார்க்க விரும்புகிறார்கள்.ஏழை X பணக்காரன்,முதலாளி X தொழிலாளி,ஆளும் வர்க்கம் X பாட்டாளி வர்க்கம் என்ற பிரிவினையின் அடிப்படையில் சமூகத்தை பகுத்து பார்க்கிறார்கள்.அவர்கள் சாதியின் அடிப்படையிலான வேறுபாடுகளை அங்கீகரிக்க விரும்புவதில்லை.இதற்கான காரணத்தை ஆனந்த் டெல்டும்டே தன் சாதியின் குடியரசு(Republic of caste) நூலில் விளக்குகிறார்.சமூகத்தை மார்க்ஸ் இரண்டாக பிரித்தார்.அவை அடித்தளமும் மேற்கட்டுமானமும்.அடித்தளம் என்பது பொருள் உற்பத்தி நிகழும் தளம்.மேற்கட்டுமானம் என்பது கருத்துத் தளம்.கருத்து உற்பத்தி தளம் என்று இதைச் சொல்லலாம்.மேற்கட்டுமானத்திற்கும் அடித்தளத்திற்குமான இயங்கியல் தான் சமூகத்தை இயக்குகிறது.பொருள் உற்பத்தி தளத்திலான மாற்றம் மேற்கட்டுமானத்தை பாதிக்கும் என்கிறது மார்க்ஸியம்.அதனால் தான் அது இயங்கியல் பொருள்முதல்வாதம்.பொருள் தான் முதன்மையானது.கருத்து அல்ல.ஆனால் கிராம்ஷி போன்ற சிந்தனையாளர்கள் கருத்து தளத்திலான மாற்றங்களும் அடித்தளத்தில் விளைவுகளை உருவாக்கும் என்று சொன்னார்கள்.அவர்கள் சொல்லி அரை நூற்றாண்டு கடந்து விட்டது.ஆனால் இன்று வரை இந்தியக் கட்சி கம்யூனிஸ்டுகள் அதைப்பற்றிய அக்கறையை வளர்த்துக்கொண்டதாக தெரியவில்லை.அவர்கள் சாதியை ஒரு கருத்தாக பார்க்கின்றனர்.அதாவது பொருள் உற்பத்தி தளத்திலான உற்பத்தி கருவிகளின் உடைமை மாற்றத்தால் சாதி மறைந்து போகும் என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகின்றனர்.ஆனால் சாதி வர்க்கத்தினுள் மற்றொரு வர்க்கமாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை அவர்கள் இன்று வரை ஏற்கத் தயாராக இல்லை.இதுவே அம்பேத்கரிய இயக்கங்களும் கம்யூனிஸ கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட இயலாமல் தடுக்கும் முக்கியச் சுவர்.கம்யூனிஸ்டுகள் இதை ஏற்றுக்கொள்ளத் தயங்குவற்கு இருக்கும் முக்கிய காரணம் இத்தகைய வேறுபாடுகள் பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கு பதிலாக பிரிக்கிறது என்பது தான்.

ஆனால் சாதி என்பது பண்பாட்டுத் தளத்திலானது அல்ல.அது ஒரு கருத்தல்ல.அது பொருள் உற்பத்தி தளத்திலான யதார்த்தம்.அது ஒரு பருப்பொருள் என்றே கொள்ள வேண்டும்.சாதியும் வர்க்கமும் ஒன்று தான்.இங்கு சாதி அடிப்படையிலேயே தொழில்கள் செய்யப்பட்டன.இன்று படிப்பு, திறமை என்பதன் அடிப்படையில் கிடைக்கும் வேலை அன்று சாதியின் அடிப்படையில் அளிக்கப்பட்டது.படிப்பு, திறமை ஆகியவற்றின் இடத்தில் சாதி இருந்தது.அது ஒரு வேலைப் பிரிவினைக்கான ஏற்பாடாகவும் இருந்திருக்கிறது.ஆகவே சாதியை வர்க்கமாகவே பார்க்க வேண்டும்.இன்று தலித் சமூகம் சந்தித்து வரும் இன்னல்கள் அவர்கள் தலித்துகள் என்பதாலேயே நிகழ்கின்றன.அவர்கள் ஏழைகள் என்பதால் அல்ல.அவர்கள் தலித்துகளால் இருப்பதால் ஏழைகளாக இருக்கிறார்கள்.ஏழைகளாக இருப்பதால் தலித்துகளாக இல்லை.கிராமங்களில் பெருநகரங்களில் பெரும்பாலான தலித்துகள் சேரிப்பகுதிகளில் தான் வாழ்கிறார்கள்.அவர்கள் கூலி வேலைதான் செய்கிறார்கள்.கிராமங்களின் பெருநகரங்களின் சேரிப்பகுதிகளின் அவல நிலைகள் நம்மை அறைந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் நாம் அந்த புற யதார்த்தத்தை காண விரும்பவில்லை, ஏற்க விரும்பில்லை.

இந்தியாவில் பெருவாரியான தலித்துகளும் இஸ்லாமியர்களும் வறிய நிலையில் கொடூரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.சிறைகளிலும் அவர்களின் எண்ணிக்கையே அதிகம்.சிறைச்சாலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் இஸ்லாமியர்களாகவும் தலித்துகளாகவும் பழங்குடிகளாகவும் இருக்கிறார்கள்.தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு இழைக்கப்பட்ட இழைக்கப்படும் அநீதிகளுக்கு இந்திய சமூகம் செய்யும் பிராயச்சித்தம்.இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி ஆறாவது ஷரத்து அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிலும் முக்கியமாக பட்டியலினத்தவர்களின் பழங்குடியினரின் படிப்பிலும் பொருளாதாரத்திலும் அதிக அக்கறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.மேலும் அவர்களை அநீதியிலிருந்தும் சுரண்டலிருந்தும் காக்க வேண்டும் என்று சொல்கிறது.இவை அரசின் கொள்கைகளை நெறிப்படுத்தும் காரணிகள் பகுதியில் வரும் ஷரத்து.அதாவது இவை அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு ஆற்ற வேண்டும்.அவர்கள் சுரண்டப்பட்டார்கள், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.இவை காரணங்கள்.அதனால் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.அவர்கள் பின்தங்கிவிட்டார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.மாறாக இந்த சமூகம் அவர்களை ஒடுக்கியதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் மத்திய அரசு தொண்ணூறுகள் வரை பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த இட ஒதுக்கீட்டையும் தரவில்லை.வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் ஆணையம் தந்த பரிந்துரைகளின் படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை அமுல் படுத்தியது.அதுவரை பட்டியல் இனத்தவர்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டுமே மத்திய அரசு இட ஒதுக்கீடு அளித்தது.சாதி அடிப்படையிலான அரசியலுக்கு இது வித்திட்டது என்று சொல்லப்படுகிறது.மேலும் மண்டல் X கமண்டல் என்று மத அரசியல் பெரிய அளவில் இந்தியாவில் தொண்ணூறுகளுக்கு பின்னர் வளர்ந்ததற்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முக்கிய காரணமாக அமைந்தது.பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியம் தானா என்பதில் பல முரண்பட்ட வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.அடிப்படையில் இட ஒதுக்கீடு பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியனருக்கும் தான்.பிற்படுத்தப்பட்டவர்களில் பட்டியல் இனத்தவர்களை போலவே பொருளாதாரத்திலும் சமூக அடுக்கிலும் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள்.உயர்த்தப்பட்ட சாதியினரைவிட நல்ல பொருளாதாரச் சூழலிலும் சமூக அடுக்கிலும் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.பிற்படுத்தப்பட்டோரின் நிரை மிகப்பெரியது.அவர்களுக்கான இட ஒதுக்கீடு எப்போதும் விவாதங்களை உருவாக்க வல்லது தான்.அதில் இரு தரப்பிலும் நியாயங்கள் இருக்கின்றன.

வி.பி.சிங் தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததற்கு இரண்டு அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார் ஆனந்த்.ஒன்று அன்று வளர்ந்த வந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்து மதத் சொல்லாடலை பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நீர்த்துப்போகச் செய்யும் என்று அவர் எண்ணினார்.அதே போல காங்கிரஸூக்கு இந்தி பேசும் மாநிலங்களில் இருந்த வாக்கு வங்கியை அது குறைக்கும் என்று நினைத்தார்.ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவத்தை கொண்டு ஆட்சிக்கு வந்து விட்டது.நவதாராளவாதம் அவர்களுக்கு உதவியது.நவதாராளவாதம் மனிதனை கையறு நிலைக்குத் தள்ளுகிறது.கையறு நிலைக்குச் செல்பவன் சாதியிலும் மதத்திலும் அடைக்கலம் தேடுகிறான்.எங்கெல்லாம் முதலாளித்துவம் அதி வேகமாக வளர்கிறதோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையிலான வலதுசாரி அமைப்பு பெரும் சக்தியாக மாறும்.

ஆனால் இட ஒதுக்கீட்டில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் என்கிறார் ஆனந்த் டெல்டும்டே.இட ஒதுக்கீடு இன்று வரை அரசாங்க வேலைகளில், தேர்தலில், கல்லூரி படிப்புகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.தேர்தலில் இருக்கும் இட ஒதுக்கீடு உண்மையில் எந்த பலனையும் தரவில்லை.ஏனேனில் மைய நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் தான் தனித்தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.அவை தலித் மக்களுக்கு என்று எந்த கொள்கைகளையும் தனியாக வகுப்பதில்லை.பஞ்சாயத்து தேர்தல்களில் தலித் சமூகத்தினருக்கு அளிக்குப்படும் தொகுதிகளில் அவர்கள் போட்டியிடவும் வெல்லவும் பணிபுரியவும் பெரும் தடைகள் உள்ளன.தமிழகத்தில் மட்டுமே அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.அவற்றை தன் புத்தகத்தில் பட்டியலிடுகிறார் ஆனந்த்.பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கும் தனித் தொகுதிகளில் தலித் வகுப்பினர் மட்டும் ஓட்டு செலுத்தினால் வேட்பாளர் வெற்றி பெற இயலாது.எந்த தனித்தொகுதியிலும் தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கப் போவதுமில்லை.பிற சாதிகளின் ஆதரவும் வேட்பாளருக்கு தேவைப்படுகிறது.அப்படியென்றால் தலித் மக்களின் நலன் பொருட்டு மட்டுமே அவரோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ எவ்வாறு கொள்கை வகுக்க இயலும்.இன்று தேர்தலில் நாம் தேர்தெடுக்கும் தலித் வேட்பாளர்கள் தலித் சமூகத்தை பிரிதிநித்துவப் படுத்துவதில்லை.அவர்கள் ஒரு தலித் அடையாளத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள்.அது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருக்கிறது.அவ்வளவு தான் சாத்தியமாகவும் இருக்கிறது.அம்பேத்கர் தேர்தலில் தோற்றிருக்கிறார்.அம்பேத்கர் கொண்டு வந்த இரட்டை வாக்குரிமை தலித்துகளை சரியாக பிரதிநித்துவப் படுத்தும் திட்டமாக இருந்தது.ஆனால் காந்தி ஏர்வாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்து அதை பிடிவாதமாக மாற்றினார்.காந்தி நினைத்தது போலவே இன்று தலித் சமூகம் இந்து சமூகத்திலிருந்து பிரிந்து போகவும் இல்லை , பிரதிநித்துவப்படவும் இல்லை.

தனித் தொகுதிகள் உண்மையில் அடையாளச் சின்னங்கள் போல மட்டுமே செயல்படுகின்றன.தலித் சமூகங்களின் விகிதாச்சாரத்தின் அளவுக்கு அவர்கள் பிரதிநித்துவப் படுத்தப்படுவதில்லை.அதாவது ஒருவர் எப்படி பிராமணராக இருப்பதாலேயே பிராமண சமூகத்தை பிரதிநித்துவப் படுத்த இயலாதோ அதே போல ஒருவர் தலித்தாக இருப்பதாலேயே தலித் சமூகத்தை பிரதிநித்துவப் படுத்த இயலாது.அவர் தலித் மக்களால் மட்டுமே தேர்தெடுக்கப்படுகையிலேயே அவர் தலித் மக்களை பிரதிநித்துவப்படுத்துகிறார் என்று கொள்ள முடியும்.இன்றைய நாடாளுமன்ற , சட்டமன்ற , பஞ்சாயத்து தேர்தல்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை.அந்தத் தொகுதியின் பெருவாரியான மக்கள் யாரை தேர்தெடுக்குகிறார்களோ அவர்களே பிரதிநிதி.அவர் தொகுதியின் பிரதிநிதி மட்டுமே.தலித்துகள் பிரதிநிதி அல்ல.

இரண்டாவது வேலை.தனியார் துறையில் வேலையில் இட ஒதுக்கீடு இல்லை.அரசு ஒரு வருடத்தில் எத்தனை வேலைகளை உற்பத்தி செய்யப்போகிறது.இந்த இட ஒதுக்கீட்டால் உண்மையில் எத்தனை மக்கள் பயன் அடைகிறார்கள்.அமைப்பு சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்கள் இந்தியாவில் 6 சதவிகிதம்(Formal Organized Sector).அதில் பொதுத் துறை நிறுவனங்களில் 4 சதவிகிதத்தினர் வேலை செய்கிறார்கள்.குரூப் “ஏ” வில் 1.7 சதவிகிதத்தினரும் “பி” யில் 3.5 சதவிகிதத்தினரும் “சி”யில் 65 சதவிகிதத்தினரும் “டி” யில் 30 சதவிகிதத்தினரும் வேலை செய்கிறார்கள். இதில் “ஏ” பிரிவிலும் “பி” பிரிவிலும் இருப்பவற்றை சேர்த்தால் மொத்த அமைப்பு சார்ந்த பணி இடங்களில் 0.208 சதவிகித இடங்கள் தான் இருக்கின்றன.அதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் .104 மட்டுமே.இன்று பொதுத் துறை நிறுவனங்கள் கூட பல வேலைளை ஒப்பந்த பணிகளாக மாற்றி அமைத்துள்ளன.அதில் இட ஒதுக்கீடு இல்லை.மேலும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக மாற்றப்படுகின்றன.நீதித்துறை போன்ற சில துறைகளில் இட ஒதுக்கீடு இல்லை.அப்படி இருக்கையில் இந்த இட ஒதுக்கீட்டால் உண்மையில் எந்தளவு பட்டியல் இனத்தவர்கள் வேலையில் பயன் பெறுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார் ஆனந்த்.

ஆனால் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பயன் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும் பள்ளிப்படிப்பில் சமச்சீரான பாடத்திட்டங்களை இந்தியா முழுமைக்கும் இன்றுவரை கொண்டு வர முடியவில்லை.பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நுழைவுத் தேர்வுகள் உயர் கல்விக்கு ஒரே போல உருவாக்கப்படுகிறது.பெருநகரத்து பள்ளிக்குழந்தைகளுக்கும் சிறு நகரத்து பள்ளிக் குழந்தைகளுக்கும், உயர்த்தப்பட்ட சாதி பள்ளிக்குழந்தைக்கும் தாழ்த்தப்பட்ட சாதி பள்ளிக் குழந்தைகளுக்கும் இங்கு பாடத்திட்டங்கள் ஒன்று போல இல்லை.ஆசிரியர்கள் ஒன்று போல இல்லை.பள்ளி கட்டமைப்பு ஒன்று போல இல்லை.அவர்களின் சமூக மூலதனம் ஒன்று போல இல்லை.அவர்களின் சமூக அஸ்தஸ்து ஒன்று போல இல்லை.அவர்களின் வாங்கும் சக்தி ஒன்று போல இல்லை.ஆனால் நுழைவுத்தேர்வு ஒன்று போல இருக்கிறது.கல்லூரி படிப்பை ஒரு தாழ்த்தப்பட்டவர் அடைய பல்வேறு தடைகள் இருக்கின்றன.அத்தனை தடைகளையும் கடந்து தான் ஒருவர் கல்லூரிப்படிப்பை அடைய முடிகிறது.தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் பொது பிரிவுக்குமான கட் ஆஃப் மதிப்பெண்களின் வித்யாசம் குறைவாகத்தான் இருக்கின்றன.சிறப்பு வகுப்புகள் வழியாகவும் சமூக மூலதனத்தின் வழியாகவும் மற்ற பிரிவினர் கல்லூரிகளுக்கு செல்வதை விட தலித் சமூகத்தினர் அதிலும் கிராமப்புறங்களிலிருந்து செல்வது சாதனைதான் என்கிறார் ஆனந்த்.

இன்று உயர் வகுப்பினருக்கான பத்து சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் யோகேந்திர யாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள் ஒரு முக்கியமான கோணத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.எப்போதும் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களில் தகுதி பிரதான வாதப்பொருளாக இருக்கிறது.இட ஒதுக்கீட்டால் தகுதி அற்றவர்கள் வேலைக்கு வந்து விடுகிறார்கள், பதவி உயர்வு பெறுகிறார்கள் என்று சிலர் கூச்சலிடுகின்றனர்.இதனால் பணியின் தரம் குறைந்துவிடுகிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.இப்போது உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால் அதே தரமும் தகுதியும் குறையும் என்று முன்பு கூச்சலிட்டவர்கள் சொல்லவில்லை.அப்படியென்றால் இத்தனை நாள் நீங்கள் போட்ட கோஷங்கள், மண்டல் ஆணையம் அமுலுக்கு வந்த போது செய்த போராட்டங்கள் அவை உங்களுக்கு இல்லை என்பதால் தான் என்பது நிரூபணம் ஆகிறது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இட ஒதுக்கீடு மற்றொரு முக்கியமான விவாதத்தை உருவாக்குகிறது. இட ஒதுக்கீட்டில் எப்போதும் ஒடுக்கப்பட்ட பிரிவில் இருக்கும் முன்னேறிய சமூகங்கள் குடும்பங்கள் தான் அதிக பலனை அடைகிறார்கள்.பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைத்து இட ஒதுக்கீடு இடங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் தான் தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.அருந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது.கலைஞர் கருணாநிதி தன் ஆட்சியில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினார்.கலைஞர் கருணாநிதிக்கு புகழ் சேர்க்க இந்த ஒரு முடிவு போதுமானது.ஆனால் இட ஒதுக்கீட்டில் எப்போதும் முன்னேறிய சமூகங்களும் குடும்பங்களும் அடுத்தடுத்த தலைமுறையிலும் இடங்களை பெறுவது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.இதை தடுக்க ஏதேனும் வழி இருக்குமா என்று விவாதிக்க அம்பேத்கரின் மகன் பிரகாஷ் அம்பேத்கர் ஒரு கருத்தரங்கை நடத்தினார்.அதில் இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களே மறுபடி மறுபடி பயன் பெறுகிறார்கள்.அதை எப்படி தடுப்பது என்பது குறித்து விவாதித்தார்கள்.சாதியை இட ஒதுக்கீட்டுக்கான அலகாக கொள்ளாமல் ஒரு தனிக்குடும்பத்தை அலகாக கொள்ள வேண்டும்.இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற பட்டியல் இனத்தவர்கள் பயன் பெறாத பட்டியல் இனத்தவர்கள் என்று அவர்கள் இரண்டாக வகுக்கப்பட வேண்டும்.படிப்பு , வேலை ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டால் பயன் அடையாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இட ஒதுக்கீட்டால் பயன் பெற்ற குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இறுதியாக இடங்கள் இருந்தால் அவற்றை அளிக்கலாம் என்ற தீர்மானத்தை அவர்கள் அடைகிறார்கள்.இது ஓரளவு பயன் அளிக்கும் எண்ணம் தான் என்கிறார் ஆனந்த்.இதன் வழி இட ஒதுக்கீடு என்பது எப்போதைக்குமானது என்பது மாற்றத்திற்கு உள்ளாகிறது.இட ஒதுக்கீட்டால் பயன் பெறாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போது மெல்ல சாதி மீதான பிடிமானங்களை இழக்க வேண்டிய அவசியத்தை அது உருவாக்கும் என்கிறார் ஆனந்த்.இதை பிற்படுத்தப்பட்டோருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இட ஒதுக்கீடு உண்மையில் பெரும் பலனை அளிக்கும் ஒரே துறை கல்லூரிப் படிப்பு மட்டும் தான். சாதி ஒழிய வேண்டும் என்றால் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு எப்போதும் ஒரு சாதியினருக்கு நிலையானதாக இருக்காத வகையில் அதை மாற்ற வேண்டும்.அப்படி மாற்ற வேண்டும் என்றால் அதன் அலகு சாதி என்பதிலிருந்து குடும்பம் என்பதற்கு மாற வேண்டும்.ஒரு குடும்பத்தின் தாய் தந்தையர் இட ஒதுக்கீட்டை பெற்றிருந்தால் பிள்ளைகளுக்கு முன்னுரிமை இல்லை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டால் இட ஒதுக்கீடு அது எவருக்கு அவசியமோ அவருக்கு சென்று சேரும்.இனி தான் சார்ந்திருக்கும் சாதியால் தனக்கு பயன் இல்லை என்பவர் சாதி சங்கங்களில் இருப்பதை தவிர்ப்பார்.காலச்சக்கரத்தின் சூழற்சியில் அது சாதி ஒழிப்புக்கு பயன் அளிக்கக்கூடும்.அதே நேரத்தில் சாதிகள் அற்ற , சாதி சங்கங்கள் அற்ற இந்தியா இருக்க முடியும் என்பதை நமது அரசியல்வாதிகளால் கற்பனை கூட செய்ய முடியாது என்பது உண்மை தான்.ஆனால் ஒரு குடிமைச் சமூகம் தன் வாதங்களை முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.அவை எப்போதாவது நிறைவேறக்கூடும்.

குறிப்பு – ஆனந்த் டெல்டும்டே எழுதிய சாதிகளின் குடியரசு நூலில் இட ஒதுக்கீடு பற்றியும் , சாதி வர்க்க முரணியக்கம் பற்றியும் எழுதியுள்ள கட்டுரைகளில் உள்ள தகவல்கள் , கருத்துகள், தர்க்கங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.அவரின் வாதங்கள் மிகவும் கூர்மையானவையாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் எனக்குத் தோன்றுகிறது.சில இடங்களில் என்னுடைய கருத்துகள் இருந்தாலும் இந்தக் கட்டுரை பெரும்பாலும் அவரின் கருத்துகளையே எதிரொலிக்கிறது,சுருக்கிக் கூறுகிறது.

 

இடக்கை

 


எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல் ஒளரங்கசீப்பின் இறுதிக்காலத்திலிருந்து அவரது மரணத்திற்கு பின்னான காலம் வரையான காலமாற்றத்தை பற்றிய வரைவை அளிக்கிறது.நாவலில் தூமகேது என்ற ஒடுக்கப்பட்டவர் செய்யாத தவறுக்காக தண்டனை அளிக்கப்படுகிறார்.காலா என்ற சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.அவரின் தொழில் ஆட்டுத் தோலை பதப்படுத்துவது.சாமர் என்ற இனத்தை சேர்ந்தவர்.யாரோ ஒருவரின் ஆட்டைத் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.நிகிலி என்ற ஊரில் அவரின் மூதாதையர்கள் ஊரை துப்புரவு செய்வதற்காக அழைத்து வரப்படுகிறார்கள்.அவர்கள் சத்கர் என்ற நாட்டில் வாழ்கிறார்கள்.அந்த நாட்டின் அரசன் பிஷாடன் ஒரு மூடன்.நாவலின் இறுதியில் பிஷாடன் கண்கள் பிடுங்கப்பட்டு கைகால்கள் துண்டிக்கப்பட்டு இறக்க அனுமதிக்கப்படுகிறான்.சத்கரை தற்காலிகமாக ஆளும் ரெமியஸ் என்ற வணிகனை கிழக்கிந்திய கம்பெனி தூக்கிலிடுகிறது.சத்கரின் பஜார் விக்டோரியா பஜார் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.ஒளரங்கசீப்பின் மரணத்தின் பின்னர் டெல்லியில் நிலையான அரசு உருவாகவில்லை.முதலில் அவரது மூன்றாவது மகன் ஆட்சி பொறுப்பேற்கிறார்.பின்னர் பகதூர் ஷா ஆட்சிக்கு வருகிறார்.ஒளரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகு அவரது  பணிப்பெண்ணாக இருந்த அஜ்யா என்ற திருநங்கை சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.அவர் ஒளரங்கசீப் கொடுத்த புதையலின் ஆட்டுத் தோல் வரைப்படத்தை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.ஆனால் ஒளரங்கசீப் தான் கையால் தைத்த ஒரு குல்லாவையும் சிறிது தங்க நாணயங்களையும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.அந்த வேண்டுகோளை நிறைவேற்ற விரும்புகிறார் அஜ்யா.ஆனால் அந்த தங்கநாணயங்களை அஜ்யா நியமித்த பெண்ணிடமிருந்து ஒரு திருடன் பறித்து விடுகிறான்.அவர் புதையலுக்கான வரைப்படத்தை மறைத்து வைத்திருக்கிறார் என்று எண்ணுகிற அரசாங்கம் அவரை சிறையில் அடைத்து மரண தண்டனை அளிக்கிறது.நாவலில் மற்றொரு துணைக்கதையாக ஒரு படகோட்டியின் கதை வருகிறது.அவனுக்கு புதையல் கிடைக்கிறது.அவன் அதை வைத்து செல்வந்தனாக ஆகிறான்.ஆனால் அவன் இறுதியில் கடல் பயணத்தின் போது இறந்து போகிறான்.

இந்த நாவல் நீதி மறுக்கப்படுவதன் அவலத்தை பேசும் நாவல்.தூமகேது தன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து அனுபவித்த இன்னல்களை பதிவு செய்கிறது.ஆனால் நாவலின் முக்கியமான குறையாக நான் கருதுவது நாவலில் அனைவரும் வாழ்வின் பிரதான கேள்விகளான நீதி , மரணம் போன்றவற்றை பற்றி தொடர்ந்து பேசுவது தான்.அந்த பெயர்வு சட்டென்று நிகழ்கிறது.அது உரையாடல் வழி யதார்த்த தளத்திலிருந்து தத்துவத் தளத்திற்கு தர்க்க தளத்திற்கு மீபொருண்மை தளத்திற்கு செல்ல வேண்டும்.அது நாவலில் நிகழவில்லை.எந்தக் கதாபாத்திரமும் எதையும் பேசலாம் என்பது உண்மைதான்.ஆனால் அதற்கான சாத்தியங்களை அவர்களின் உரையாடல் தளம் உருவாக்க வேண்டும்.அது யதார்த்த தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு நகர்ந்து அங்கு அத்தகைய தத்துவ உரையாடல்கள் நிகழ வேண்டும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களில் யாமம்,நெடுங்குருதி,இடக்கை ஆகியவை முகலாய அரசின் இறுதிக் காலங்களிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னான காலம் வரையான காலகட்டத்தை பற்றியும் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எளிய மனிதர்களின் வாழ்வை பேசும் நாவல்களாகவும் இருக்கின்றன.அவரின் நாவல்கள் எளிய மனிதர்களின் வாழ்க்கையை தனித்த ஒன்றாக பேசுவதில்லை.அவர்களை அமைப்பின் மனிதர்களாகவே முன்வைக்கிறது.அவர்களின் வாழ்வில் நடப்பவை தற்செயலால் நிகழ்பவை அல்ல.அது அமைப்பின் சிக்கல்களால் நடக்கின்றன.உதாரணமாக தூமகேது ஆட்டைத் திருடிவிட்டான் என்று குற்றம் சாட்டப்படுகிறான்.குற்றம் சாட்டப்படுவது பிழையில்லை.ஆனால் அந்த அமைப்பில் அவன் குற்றமற்றவன் என்று நிரூபித்து வெளியேறுவதற்கான சாளரங்களே இல்லை.அது பிழை.பிஷாடன் என்ற மூடனுக்கு அது குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லை.அதனால் தான் தூமகேது அவதிப்படுகிறான்.இந்த அமைப்பை பிரதிநித்துவப் படுத்துபவனாகத்தான் தூமகேது வருகிறான்.ஓர் ஒடுக்கப்பட்டவனை பிரிதிநித்துவப் படுத்தி அதன் வழி அந்தக் காலகட்டத்தின் நீதியை அரசாங்கத்தை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை பேசும் நாவலாக இடக்கை அமைகிறது.அதை போலவே அவரின் மற்ற நாவல்களையும் நாம் பார்க்க முடியும்.அவை தனிமனிதர்களின் வாதைகளை பேசும் நாவல்கள் அல்ல.அவை அமைப்பின் மனிதர்களை பிரதிநித்துவப்படுத்தும் நாவல்கள்.

நெடுங்குருதியில் வரும் குற்றப் பரம்பரையினர், யாமம் நாவலில் வரும் சென்னை நகரவாசிகள்,இடக்கையில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள்,உறுபதி நாவலில் வரும் சம்பத் அனைவரும் உதிரி மனிதர்கள் என்று தோற்றம் உருவாக்கப்படுகிறது.ஆனால் அவர்கள் யாரும் தனிமனிதர்கள் அல்ல, உதிரி மனிதர்களும் அல்ல.நெடுங்குருதியில் வேம்பலை மறுபடி மறுபடி அந்த மனிதர்களை தன் மாயக் கரங்களால் தன் வசம் இழுத்துக்கொள்கிறது.அவர்களால் அந்த அமைப்பிலிருந்து வெளியேற முடியவில்லை.எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் தனிமனிதர்களை விதத்தோதவோ அவர்களின் வீழ்ச்சியை கழிவிரக்கத்துடன் முன்வைக்கவோ முயற்சிப்பதில்லை.அவர் எந்த சிக்கலையும் தொன்மத்துடன் இணைப்பதில்லை.எந்த தனிமனிதனும் தன் உளவியல் சிக்கலுக்கான யதார்த்த வாழ்வின் சிக்கலுக்கான விடையை தொன்மத்தில் கண்டடைவதில்லை.அவரது நாவல்கள் அந்த நாவல் முன்வைக்கும் அமைப்பில் நிகழ சாத்தியமானவற்றை கதாபாத்திரங்கள் வழி பிரதிநித்துவப் படுத்துகிறது.அதன் வழி அந்த அமைப்பை ஆராய்கிறது.தீவிரமாக விமர்சிக்கிறது.அதுவே எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களின் தளமாக அமைகிறது.