அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களை பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை.சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை.அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவாவை உள்ளடக்கியவை நகுலனின் படைப்புகள்.நகுலனின் தன் படைப்புகள் வழி அவர் இந்த அடையாள அணித்திரள்விலிருந்து விடுவித்துக்கொள்வதை பற்றியே முதன்மையாக அக்கறை கொள்கிறார்.
கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தன் உடலை எடுத்து கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடும் எளிய கற்பனையிலிருந்து சாத்தியப்பட்ட கவிதைகள்.நாம் கோட்ஸ்டாண்டில் உடைகளை மாட்டுவோம்.உடலைக் கழற்றி தொங்கவிட்டால் என்ற சர்ரியலிஸ நோக்கே அந்தக் கவிதைகள் உருக்கொள்ள காரணம்.ஆனால் அந்தக் கவிதைகள் வழி அவர் ஒரு அரூப உலகை சிருஷ்டித்து வேடிக்கைக் காட்டி நின்று விட விரும்பவில்லை.அவை அந்தக் கவிதைகளின் நோக்கமும் அல்ல.அவர் தன் தத்துவத்தை அந்தக் கவிதைகள் வழி கூறுகிறார்.உடல் தான் அணைத்து வேறுபாடுகளுக்குமான துவக்கமாக இருக்கிறது.உடலைக் கழற்றுதல் என்ற இந்தக் கவிதைகள் உடல் பொய் என்ற தரிசனத்தை பேசவில்லை.நகுலன் உடல் மாயை என்று சொல்லும் அத்வைதி அல்ல.அத்வைதம் உடலை மறுத்து ஆன்மாவை பிரம்மத்தின் சூக்கும வடிவமாக மாற்றி ஏகம் அத்விதீயம் , ஒன்று இரண்டற்றது என்கிறது.நகுலன் உலகத்தை மாயமாக பார்க்கவில்லை.மனிதன் தன்னை மீறினால் ஒழிய ஒன்றும் முடியாது என்பது என் சித்தாந்தம் என்று நவீனன் நினைவுப்பாதையில் எண்ணிக்கொள்கிறான்.மனிதன் தன்னை மீற இருக்கும் பல்வேறு சாத்தியங்களில் ஒன்று உடலைக் கழற்றுதல்.அதுதான் கோட்ஸ்டாண்ட் கவிதைகள்.
மனிதன் தன்னை மீறுவது என்பது தன் அடையாளத்தை மீறுவதுதான்.அவன் எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறான் என்கிறார் நகுலன்.கலை வெளிப்பாடுகளில் உருவம் அருவம் இரண்டும் உள்ளன.உருவம் கொண்டு அருவம் கண்டு மறுபடியம் உருவத்தை பிரதிஷ்டை செய்கிறான் இன்றைய மனிதன்.
நினைவுப்பாதையில் நடராஜனுக்கும் நவீனனுக்கும் இடையிலான ஓர் உரையாடல்.
“என்ன செய்வது பார்க்கிறோம்,பேசுகிறோம்,சிந்திக்கிறோம்.கனவு காண்கிறோம்,நாகரிகம் வளர ,வளர நாற்காலியும் அதைச் செய்த தச்சனும் ஆதியில் ஒருவனும் ஒன்றும் பினணந்திருந்ததைப் போல இப்போது முடியாது.ஸமைன் வீல்…”
“யார் இந்த ஸமைன் வீல்”
“சச்சிதானந்தன் பிள்ளையை போல இன்னொரு பைத்தியம் என்று வைத்துக்கொள்”
“ஸமைன் சொன்னது போல தச்சனை விட எஞ்சினியர் மேல்.ஏனென்றால் அவனால் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடிவதால், சந்தேகங்கள் ஊடே சஞ்சரிக்க முடியுமென்பதால் இதெல்லாம் படைப்பு இலக்கியத்திற்கும் பொருந்தும்.மேலும் நீ இன்னும் என் நாவலைப் படிக்கவில்லை. ஆதலால் அதைப் பற்றி இப்பொழுதே எப்படி அபிப்பிராயம் சொல்ல முடியும்?”
“அதாவது ஸ்தூலமும் சூக்குமமும் ஒன்றிலொன்று இணையும் பொழுது மற்றொன்று தோன்றி அதன் முழு உருவத்தைத் தன் இயல்பில் எய்துகிறது என்கிறாய்”
நகுலன் கல்குதிரை நேர்காணலில் தன்னைக் கருத்துமுதல்வாதி அல்லது பொருள்முதல்வாதி என்று தொகுக்க இயலாது என்கிறார்.அவரை இயங்கியலாளர் என்று தொகுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.நிலப்பிரபுத்துவக் காலத்தில் தச்சன் இருந்தான்.முதலாளித்துவ அல்லது சோஷியலிசக் காலத்தில் பொறியியலாளன் வருகிறான்.தச்சன் நாற்காலியோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். பொறியியலாளன் தான் படைக்கும் பொருளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.பொதுவாக நாம் இதை அந்நியமாதல் என்ற கோட்பாடுடன் இணைத்து புரிந்து கொள்கிறோம்.தச்சன் தன் உழைப்பின் பருண்மை வடிவத்தை பார்க்க உணர முடிகிறது.அதன் பயனை அறிய இயல்கிறது.அவன் தச்சன் , ஆசாரி என்றே அழைக்கப்படுகிறான்.அவனுக்கு ஓர் அடையாளம் உண்டு.அவனது எல்லைகள் சில நூறு கீலோமீட்டருக்குள் அடங்கிவிடுபவை.ஆனால் ஒரு பொறியியலாளன் தான் அதுவரை கொண்டவற்றை கொண்டு அருவமான ஒரு கோட்பாட்டை உருவாக்குகிறான்.ஆற்றல் ஒன்றிலிருந்து ஒன்றாக மாற முடியும் , ஆனால் அழியாது என்பது வெப்ப இயக்கவியலின் முதல் விதி.இரண்டாம் விதி அதே நேரத்தில் ஒரு ஆற்றல் முழுமையாக வேறொன்றாக மாறாது , அவை வேறு ஆற்றல்களாக மாறி வீனாகவும் செய்யும் என்றும் சொல்கிறது.அதாவது மின்சாரத்தை கொண்டு மோட்டரை சுற்ற வைத்து பின் அதில் ஒரு ஜெனரேட்டரை இணைத்து அதே அளவிலான மின்சாரத்தை உருவாக்க இயலாது.அதில் ஆற்றல் வீனாகும்.இதற்கு இரண்டாம் வெப்ப இயக்கவியல் விதி என்று பெயரிடுகிறான்.விதி செய்கிறான் பொறியியலாளன்.அவன் உலகத்தை சோதனைக் கூடமாக மாற்றி அருவப்படுத்தி அதிலிருந்து விதி சமைத்து உருவங்கள் படைக்கிறான். இங்கே நாம் பொதுவாக சொல்லும் முதலாளித்துவ சமூகத்தில் அந்நியமாதல் உண்டு என்பதை கடந்து எப்படி இன்றைய மனிதனின் பெளதீக உலகம் அருவமாக அவனுள் உருக்கொள்கிறது என்கிறார் நகுலன்.இதனால் தான் ஆப்பிள் கிழே விழுந்ததை பார்த்து புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் நியூட்டன் என்பது எத்தனை எளிய அபத்த வாதம் என்கிறான் நவீனன்.புத்தர் மூன்று துயரக்காட்சிகளை கண்டு துறவறம் பூண்டார் என்ற அபத்த வாதத்தையும் நாம் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.மனிதன் சந்தேகங்கள் ஊடே சஞ்சரிப்பவன்.அப்படி சஞ்சரித்து பிரச்சனைகளைப் புரிந்து கொள்கிறான்.இந்தக் கருத்தை தமிழில் வேறு எழுத்தாளர்கள் எழுதி நான் கண்டதில்லை.நகுலனை இந்த அடிப்படையில் இயங்கியலாளர் என்று சொல்ல முடியும்.
இருத்தலியம் மனிதனை சுதந்திரமானவனாக கருதுகிறது.அவன் தனிமனிதன் என்கிறது.அவனது செயல்களுக்கு அவனே பொறுப்பு என்று சொல்கிறது.நகுலன் இருத்தலியவாதத்தை தன் கவிதைகள் வழி நாவல்கள் வழி முன்வைத்தார் என்று சொல்ல இயலும்.தனிமையை இருத்தலிய அவதியை தன் கவிதைகள் வழி முன்வைத்தார்,அவரது நாவல்களில் வரும் பிளவுண்ட ஆளுமை அந்த அந்நியமாதலால் உருவாக்கிய ஒன்றுதான் என்றும் சிலர் சொல்லக்கூடும்.ஆனால் நகுலன் இருத்தலியவாதியும் அல்ல, நவீனத்துவரும் அல்ல.உண்மையில் நகுலன் அதன் மறுதரப்பை சொல்ல முனைந்தார்.
நினைவுப்பாதை நாவலில் - மேல்நாட்டில் மனிதனின் ஆற்றலை மிகைப்படுத்துகிறார்கள் என்கிறான் நவீனன்.மனிதன் கட்டுண்டவன்.நினைவுப்பாதையில் நவீனன் சிவன் , நடராஜன் என்ற இலக்கிய நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடுகிறான்.நவீனன் சுசீலா என்ற பெண்னை விரும்புகிறான்.அவளுக்கு வேறு யாருடனோ திருமணம் நிகழ்கிறது.நவீனன் தன்னைப்பற்றிய தன் நண்பர்களைப் பற்றிய சுசீலா குறித்த நாவலை டயரி வடிவில் எழுதுகிறான்.ஏன் டயரி வடிவில் எழுத வேண்டும்.ஏனேனில் நாட்குறிப்பு உண்மைக்கு மிக அருகில் வருகிறது.நவீனன் நகுலனுடன் மனம் விட்டு பேச பிரியப்படுகிறான்.ஆனால் நேரடியாக பேச இயலவில்லை.ஏனேனில் உண்மையை நேரடியாக எதிர்கொள்ளும் தைரியம் மனிதனுக்கு இருப்பதில்லை.அதனால் நாட்குறிப்பாக எழுதுகிறான்.இறுதியில் நவீனன் சில நாட்கள் மனநலவிடுதியில் இருக்கிறான்.குணமாகி வீடு திரும்புகிறான்.தன்னை அழிப்பது , கரைத்துக்கொள்வது , விடுவித்துக்கொள்வது , மழை மண்ணை புணர்வது போல இரண்டரக்கலப்பது என்று தனிமனித இருப்பை கடந்த நிலையை நகுலன் முன்வைக்கிறார்.
நகுலன் என்ற பெயர் குறித்து எம்.டி.முத்துகுமாரசாமி தன் பெயரில் என்ன இருக்கிறது என்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.நகுலன் பாண்டவர்களில் ஒருவன்.ஆனால் அர்ஜூனன் போல பீமன் போல தனித்த அடையாளம் அற்றவன்.அவன் பாண்டவர்களின் நிழல்.நிழல்கள் தனித்த இருப்பு இல்லாதவை.நகுலனின் பிளவுண்ட ஆளுமை நவீனன்.மற்றமையாகவே தன்னை காணுதல் தான் நவீனன்.நவீனனின் மனம் நதி தன் பாதை மாறி பிரவாகிப்பது போல கோர்வையற்று பாய்கிறது.மழை மரம் காற்று கவிதையில் இவ்வாறு எழுதுகிறார்.
கண்ணாடிகள் சூழநான் ஏன் பிறந்தேன்
பகல் பொழுது
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது
ராத்திரியில்
ஒவ்வொரு நக்ஷத்திரமும்
என்னை ப்ரசவிக்கிறது
நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை
தன் தனிமனிதப் பிரக்ஞையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவாவுதல் நகுலனின் படைப்புகளில் தொடர்ந்து வருகிறது.நினைவுப்பாதை – பார்க்க பயமாக இருக்கிறது / பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை என்று நினைவுப்பாதையை கூறுகிறார்.நம் நினைவுகள் நம்மை கரைந்து செல்ல இயலாமல் தடுக்கின்றன.நமது பிரக்ஞை நினைவுகளின் வழியே விழிப்புடன் இருக்கிறது.நினைவுகளையே நாம் அறிவு என்றும் கூறுகிறோம்.இந்த எண்ணம் நகுலன் எழுத்தில் மட்டும் அல்ல சமீபத்தில் எழுதும் சபரிநாதன் எழுத்தில் கூட தென்படுகிறது.
அடையாள அரசியல் பிறர் என்ற கதையாடலை கட்டி எழுப்புகிறது.இன்றைய தனிமனிதர்கள் உலகமே அடையாள அரசியலின் அடித்தளம்.தனிமனிதப் பிரக்ஞை இல்லையேல் அடையாள அணித்திரள்வு சாத்தியமில்லை.ஏனேனில் அங்கு பிறர் சாத்தியமில்லை.பிறர் என்பது நரகம் என்று மீள முடியுமா நாடகத்தில் சார்த்தர் எழுதியது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.இருத்திலியத்தின் இருண்ட பக்கங்கள் பிறர் குறித்த அதன் எண்ணங்கள்.
நினைவுப்பாதையில் நடராஜன் எழுதிய அனுபவ சத்தியங்கள் என்ற நாவல் வெளியிடப்படுகிறது.நாவலின் முன்னுரையில் நடராஜன் 20ஆம் நூற்றாண்டில் எப்படிப் பொருளாதாரம், பதவிமோகம்,புகழாசை ஆட்சி செலுத்துகின்றன என்பது குறித்து எழுதியிருக்கிறான். “பிதாவே எங்களை மன்னித்துவிடு , எங்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாது” என்று சச்சிதானந்தம் பிள்ளை சொல்லக்கூடும் என்று நினைத்துக்கொள்கிறான் நவீனன்.மனிதனை மீறியது ஒன்றுமில்லை என்கிறான் நடராஜன். எப்படி அனுபவத்தை அழிப்பது என்று தனக்குத் தெரியவில்லை , ஆனால் அதுவே தன் பாதை என்று எண்ணுகிறான் நவீனன்.
உடலை கோட்ஸ்டாண்டில் தொங்கவிடுவதின் வழி மற்றும் மனம் பிரக்ஞையிலிருந்து தப்பிப்பது ஆகியவற்றின் வழி நகுலன் வேண்டுவது அடையாளங்களிலிருந்து அனுபவங்களிலிருந்து நினைவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதையைத்தான்.இதன் பயன் என்ன.பிறருக்கும் தனக்குமான எல்லைகளை அறுத்து அடையாளமற்ற பெருவெளியை உருவாக்க முனைகிறார் நகுலன்.அப்படியான அடையாளமற்ற பெருவெளி மற்றமை என்பதை இல்லாமல் செய்யும்.
ஆல்பர் காம்யூவும் இப்படியான ஒரு மானுட நேசத்தை முன்வைக்கிறார்.ஆனால் காம்யூ அதை மனிதன் தன் முழுப் பிரக்ஞை வழி அடைய வேண்டும் என்கிறார்.நீங்கள் இந்த உலகம் அபத்தம் என்று ஏற்க வேண்டும். இந்த அபத்த உலகை உங்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ள வேண்டும்.அனைத்தும் அபத்தம் என்பதால் அதற்கு எதிரான கிளர்ச்சியே நமது இருப்பை அர்த்தப்படுத்துகிறது.அப்படியாக மானுட நேசம் சாத்தியம் என்கிறார் காம்யூ.ஆனால் நகுலன் வாழ்க்கை அபத்தமானது என்று சொல்லவில்லை.அவர் பிறர் என்ற ஒன்று இல்லை என்ற என்ற நிலைக்கான தாவுதலை பற்றியே பேசுகிறார்.
ராமச்சந்திரன் கவிதையில் ராமச்சந்திரன் என்பதன் அடையாளம் இல்லாமல் போகிறது.யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு நகுலன் எல்லாம் என்கிறார்.இந்த உலகத்தை மாற்றுவது தான் நம் வேலை என்று மார்க்ஸ சொன்னதை மறுப்பவை நகுலன் கவிதைகள்.மனிதன் நீங்கள் எண்ணுவது போல அத்தனை பெரிய ஆளெல்லாம் இல்லை என்கிறார் நகுலன்.
நினைவுப்பாதை நாவலில் வரும் கொல்லிப்பாவை – 1 என்ற கவிதையின் தொடக்க வரிகள் இவை.
திரெளபதி அவள்வந்து போகும் அர்ச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண்வளைத்துக் குறிவிழ்த்தி
செளரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்
ஆனால்
வந்து போகும் அர்ச்சுனன் நான்
நாக்கடித்து வாய்ப்பறை கொட்டி
வோதாந்தக் கயிறு திரித்துக்
குறிதான் ஏதுமின்றி
ஆண்மை தோற்று
பேடியெனப் பால்திரிந்து
அவள் உருக் கண்டு
உள்ளங் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அர்ச்சுனன் நான்
திரெளபதியை நாண்வளைத்துச் காதல் பெற்ற அர்ச்சுனன் அல்ல தான், அடையாளம் அற்று வந்து போகும் அர்ச்சுனன் நான் என்கிறான் நவீனன். இங்கும் தன்னிலை அற்று மற்றொன்றில் தன்னை கரைத்துக்கொள்ளும் நிலை தான் கவிதையில் வருகிறது.நகுலனின் மனிதர்கள் முழுமையானவர்கள் அல்ல.அவர்கள் பிறிதொடு இணைந்து முழுமைக்கு வேண்டுகிறார்கள்.பிறிது இல்லாமல் முழுமை சாத்தியமில்லை.தன்னை அழித்து மற்றமையில் தன்னை கண்டுகொள்ள விரும்புகிறார்கள் நகுலனின் தனிமனிதர்கள்.நகுலனே நவீனனாக பிளவு கொள்கிறான்.பிறரில் தன்னை காண விரும்புபவர்களே பிளவுண்ட ஆளுமையாகுகிறார்கள்.நாம் நமது அகங்காரத்தை முழுமையாக இழந்து பிறருடன் – அவர் உங்கள் காதலியாகவோ மனைவியாகவோ நண்பனாகவோ இருக்கலாம் – ஆனால் எந்த எல்லை வரை அதை உங்களால் செய்ய முடியும். நீங்கள் யாரையோ ஏமாற்றியதைப் பற்றி அப்பட்டமாக இன்னொருவருடன் - அவர் உங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவர் என்றாலும் – உங்களால் பகிரந்து கொள்ள இயலாது.அப்படியே பகிரந்துகொண்டாலும் அதை எந்தளவு முழுமையாக சொல்ல முடியும். உண்மைக்கு மிக அருகில் செல்லும் போது நீங்கள் உங்களை நியாயப்படுத்த ஏதேனும் ஒரு புனைவை உருவாக்கி விடுவீர்கள்.மனிதனால் அப்பட்டமாக பிறிதொடு இணைவது சாத்தியமில்லை.நகுலன் நவீனன் என்ற பிளவுண்ட ஆளுமை இந்த உண்மையை மிக அருகில் பார்ப்பதற்கான ஓர் ஏற்பாடாகவும் கொள்ள முடியும்.
உடல் அற்று போதல், அறிவு தான் நினைவு என்றால் நினைவு இல்லாது போதல், மனம் பிறழ்ந்து போதல், பால் திரிந்து பிறிதொடு ஒன்றாகுதல் ஆகியவைதான் நகுலன் முன்வைக்கும் விடுதலைக்கான பாதை.இருத்தலியத்தில் பிறர் என்பது நரகம் என்ற பிறழ்வு நிகழும் போது நகுலன் தான்Xபிறர் என்ற எல்லைகளை கடக்கும் விடுதலையை இணக்கத்தைப் பற்றி பேசுகிறார்.
இருப்பதற்கென்று தான் வருகிறோம் / இல்லாமல் போகிறாம் என்பது வருத்தத்தை தனிமையை சொல்லும் நிலை அல்ல.மாறாக தனிமனிதன் என்ற உணர்வு இல்லாது போதலே நகுலன் முன்வைக்கும் சாத்தியம்.வானத்தின் பகுதியாகிவிடும் பறவை போல அல்ல மண்ணின் பகுதியாகிவிடும் உடல் போல.
அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் பதினெட்டு வயது இளைஞன் தான் சுமந்து நிற்கும் அடையாளங்களே தன்னை ஒரு சிறுமியிடம் எதிரியாக காண்பிக்கிறது என்பதை உணர்கிறான்.அவன் தான் சுமந்து நிற்கும் அடையாளங்களை கண்டு அருவெருப்பு அடைகிறான்.அவன் அங்கிருந்து ஓடுகிறான்.தன் அடையாளங்களிலிருந்து ஒடுகிறான். அவன் அமைப்புகளில் தன்னை பொருத்திக்கொள்ள இயலாத தனிமனிதன் ஆகிறான்.நகுலனும் அந்த அடையாள அழிப்பை தான் முன்வைக்கிறார்.ஆனால் அவர் அடையாளம் அழித்து தனிமனிதன் ஆவதை பேசவில்லை. அடையாளம் அழித்து , உடல் அழித்து, நினைவுகளிலிருந்து தப்பி, பிறிதாகும் நிலை பற்றி பேசுகிறார்.அந்தப் பதினெட்டு வயது இளைஞன் சிறுமியாகும் நிலை.இந்த இடத்தில் அசோகமித்திரனும் நகுலனும் மாறுபாடுகிறார்கள்.அசோகமித்திரனும் நகுலன் ஓரெல்லை வரை ஒன்றாகி பிறகு பிரிகிறார்கள்.நான் கவனித்தவரை அசோகமித்திரனும் நகுலனும் தமிழில் தங்கள் இலக்கியங்களின் வழி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள்.இவை எளிதானவை அல்ல.மிகப்பெரிய சாதனை.அரிதாகவே நிகழக்கூடியவை.நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் அப்படியான ஒரு நிகழ்த்துதல் சாத்தியமில்லை.ஏனேனில் அது பழகிய பாதை அல்ல.
நகுலன் இருத்தலியவாதியோ , நவீனத்துவரோ அல்ல, அத்வைதியோ அல்ல.அவரை பின்நவீனத்துவர் என்று சொல்ல முடியும்.இயங்கியலாளர் எனலாம்.தனிமனிதன் மீது எதையும் ஏற்றாதவர் என்பதால் அவர் இருத்தலியவாதி அல்ல.உடல் பொய் என்ற வேதாந்தம் பேசமால் உடல் கடந்து பிறிதொடு ஐக்கியமாகும் நிலையை அவர் பேசினார்.அதனால் அவர் அத்வைதியும் அல்ல.இது நகுலனின் நூற்றாண்டு.தமிழில் நகுலன் குறித்து எழுதப்பட்டவற்றுள் பெரும்பாலானவை அவரை எப்படி தொகுத்துக் கொள்வது என்று தெரியாமல் விக்கித்து நிற்பவை.அல்லது நகுலன் எளிய விஷயங்களை புரியாத வகையில் பேசுகிறார் என்று புறம் ஒதுக்குபவை.நகுலன் தன் கவிதைகள் வழி, தன் நாவல்களின் மொழி வழி ,கண்டுபிடிப்புகள் வழி தமிழின் மகத்தான படைப்பாளியாக வீற்றிருக்கிறார்.அவரது நோக்கு, தத்துவம் அவரது நாவல்களில் , கவிதைகளில் , கதைகளில் எளிதில் கண்டுகொள்ளும் வகையிலேயே இருக்கின்றன.நாம் தான் நம் அகங்காரங்களை களைந்து அவர் சொல்வதை புரிந்துகொள்ள முயல வேண்டும்.இன்றைய அடையாளங்கள் சூழ் உலகின் ,தனிமனித உரிமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் உலகின் எதிர்க்குரல் நகுலன்.
கனலி இணைய இதழில் பிரசுரமான கட்டுரை.