தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் புகழ்பெற்றது. தமிழ் இலக்கியத்தோடு எளிய அறிமுகம் கொண்டவர்கள்கூட வாசித்திருக்காவிட்டாலும் அறிந்த கதை மோகமுள். ஆக கதையை விவரிக்க தேவையில்லை.இந்த நாவலில் வரும் வெங்கட்ராமன் என்ற கதாபாத்திரம் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களை முன்வைத்து எழுதியதா என்று தோன்றுகிறது.
பாவுவின் பக்கத்து வீட்டில் ஒரு கிழவருக்கு இரண்டாம் தாரமாக வரும் தங்கம்மாள் தான் பாபு என்ற கதாபாத்திரத்தின் கீழ்மையின் உச்சம்.ரங்கண்ணா மேண்மையின் உச்சம்.நமக்கு இருக்கும் அதே பலஹினம் கொண்ட வேறு ஒரு மனிதரை போல நாம் இந்த புவியில் வேறு யாரையும் வெறுப்பதில்லை. பாபு தங்கம்மாளை முழுக்க வெறுக்கிறான். குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ் கதாபாத்திரத்தின் கீழ்மையின் உச்சம் ஸ்விட்ரிகைலோவ். அதே போலத்தான் பாபுவும் தங்கம்மாளும். தங்கம்மாள் கொள்ளும் அதே உரிமையைத்தான் பாபு யமுனாவிடம் கொள்கிறான். இதில் என்ன தவறு இருக்கிறது.எனக்கு இது தவறாகவே படவில்லையே என்று எண்ணுகிறான் பாபு.அக்டோபர் இரண்டு அன்று காந்தியின் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கும்போது கூட பாபு யமுனாவிடம் இப்போது கூட எனக்கு இது தவறாக படவில்லை என்கிறான். அதே எண்ணத்தை பாபு தங்கம்மாளிடம் மூர்க்கமாக நிராகரிக்கும் போது அவள் தற்கொலை செய்து கொள்கிறான்.முதல் முறையாக தன்னுடைய எண்ணத்தை யமுனாவிடம் சொல்லும்போது யமுனா வேண்டாம் பாபு வேண்டாம் என்று கெஞ்சத்தான் செய்கிறாள்.மூர்க்கம் கொள்ளவில்லை.கொண்டிருந்தால் தங்கம்மாளின் கதியே பாபுவுக்கும் நடந்திருக்கக்கூடும். ஆனால் தங்கம்மாளுக்கு இல்லாத ஒன்று பாபுவுக்கு இருக்கிறது.அது சங்கீதமும் ரங்கண்ணாவும்.
ரங்கண்ணாவிடம் ஆறேழு வருடங்கள் சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு ரங்கண்ணா போலவே கச்சேரி செய்ய வேண்டும் என்று ஆர்வம் காட்டவில்லை. ரங்கண்ணா அவர் இறப்பதற்கு முன் அவனிடம் அப்படி கச்சேரி செய்ய வேண்டாம் என்று சொல்வதை கணக்கில் கொண்டாலும் அவனும் அதில் உடன்படவே செய்கிறான்.இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பாலூர் ராமு. கிட்டத்தட்ட முற்றிலும் லெளகீகமான மனிதர் என்ற கதியில் அறிமுகம் ஆகும் அவர் போகப்போக முற்றிலும் வேறு விதமாக தெரிகிறார். பாபு பாடுவதை கேட்டு அடிக்கடி அவன் அறைக்கு வருகிறார்.பேசுகிறார். உரையாடுகிறார். ராமு தான் பாபு ஆகிவிட முடியாதா என்று தான் கஷ்டப்படுகிறார். ஒரு இடத்தில் அழுகிறார். கச்சேரி கச்சேரி என்று அவர் இருக்கும் போதிலும் பாபு வடநாட்டுக்கு சென்று குரலை இன்னும் மேம்படுத்திக்கொள்ள எண்ணுவதை தெரிந்துகொள்ளும் போது ராமு தனக்கு அது போல சாத்தியப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே ஏங்குகிறார்.இதில் சங்கீதத்தில் ஞானம் முக்கியமா குரல் முக்கியமா என்ற விவாதம் ராமுவுக்கும் பாபுவுக்கும் தொடர்ந்து நிகழ்கிறது. இசை அறிந்தவர்கள் இதை பற்றி எழுதலாம்.எழுதியிருக்கக்கூடும்.
பாபுவின் பெரியப்பா பிள்ளையாக வரும் சங்கு மிகப்பெரிய ஆளுமையாக வரக்கூடும் என்று ராஜமும் பாபுவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதியில் ஆஸ்பத்திரிக்கு கூட பணம் இல்லாமல் பாபுவிற்கு எழுதுகிறான் சங்கு.விளையாட்டும் துடுக்கத்தனமும் நல்ல கணித அறிவும் உள்ள சங்கு ஏன் இப்படி ஆகிவிடுகிறான்.அதுவும் பாபு ஆகியிருக்கக்கூடிய ஒரு உச்சம் தான்.
ஒரு நீளமான கோடு வரைந்து கொண்டு அதன் நடுவில் பாபுவை வைத்தால் அதன் வலதுபக்கத்தில் இடது வலதாக பார்க்கும் போது அதில் சுந்தரம், நண்பன் ராஜம், தந்தை வைத்தி , வெங்கட்ராமன், சித்தர் ராஜூ , மங்கள்வாடியிலிருந்து வந்து பாடும் பாடகர்கள், உச்சமாக அவனுடைய குரு ரங்கண்ணா வருகிறார்கள். இடது பக்கத்தில் வலது இடமாக பார்த்தால் அதில் பாலூர் ராமு முதலில் வருகிறார். ஆம்.லெளகீக தளத்தில் தன் திறமையை கொண்டு அவன் அடைய சாத்தியப்படக்கூடிய உச்சத்தையும் ஆனால் அதில் உள்ள வெறுமையையும் அவன் பாலூர் ராமுவிடமே தெரிந்து கொள்கிறான். உண்மையில் முதல்முறையாக யமுனா பாபுவை பார்க்க வரும் அதே ஞாயிற்றுக்கிழமை அன்று வந்து அவனை பாடச்சொல்லி விக்கித்து போய் நின்று பாராட்டி செல்லும்போதே பாபு தன் இடத்தை உணர்கிறான். அடுத்த படியாக சங்கு.தங்கம்மாளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட கிழவர். உச்சமாக தங்கம்மாள். இதில் இருபக்கத்திலும் வைக்க முடியாத முக்கியமான கதாபாத்திரம் யமுனா. பாபுவை போல அல்லாமல் யமுனா மிகவும் அழுத்தமானவள். ஆழமானவள். அவள் ஏழேட்டு வருடங்கள் கழித்து பாபுவை பார்க்க சென்னை வரும் போது அவளிடம் இருக்கும் ஒரே பிரச்சனை பசி. அது இல்லாவிட்டால் அவள் பாபுவை சந்தித்திருக்கவே மாட்டாள். அவள் அவனுடைய ஆசையை ஏற்றுக்கொள்ளும் போது அதில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை. வருத்தம் இல்லை. ஒரு உணர்ச்சியும் இல்லை என்று கூட சொல்லலாம். அவளை பாபு உயர்வாகவே எண்ணுகிறான். அவள் பெரிய அளவில் இதில் குற்றவுணர்வு கூட கொள்ளவில்லை. இருக்கும் சிறு நெருடல் கூட காஞ்சிபுரத்தில் அவளுக்கு இல்லாமல் போகிறது.
இந்த மேலே வரைந்த கோட்டை பார்க்கும் போது இந்த பிரிவில் உள்ள முக்கிய அம்சம் லெளகீகம். அப்படியென்றால் சுந்தரம் ஏன் வலது பக்கம் இருக்கிறான். ஏனேனில் லெளகீகத்தின் அவஸ்தையயை , உழைப்பை அதன் தரிசனத்தை அவன் சுந்திரத்திடமிருந்தே பெறுகிறான். அவன் மேல் கோபம் இல்லாமல் இல்லை.வருத்தம் இல்லாமல் இல்லை.ஆனால் லெளகீகத்தின் நியாயத்தை அவன் சுந்திரத்திடமிருந்து தான் கற்றுக்கொள்கிறான். அதை அவனுக்கு அவன் தந்தையோ , ராஜமோ, ரங்கண்ணாவோ யாரும் சொல்வதேயில்லை.லெளகீகத்திலிருந்து பிரிந்து ஏதோ ஒரு வகையில் அவன் வரையில் முன்னோக்கி சென்றவர்கள் ஒரு உச்சம் எனில் லெளகீத்திலே தன்னை முழுதும் செலுத்திக்கொண்ட மற்றவர்கள் இன்னொரு உச்சம். இந்த கீழ்மைக்கும் மேண்மைக்குமான ஊசலாட்டமே பாபு.
அப்படியென்றால் லெளகீக தளத்திலேயே நாம் வைத்திருக்கும் இந்த உடல்பசி. அதை பாபு எப்படி எதிர்கொள்கிறான்.யமுனா அவனிடம் இதற்குத்தானா , இதற்குத்தான் என்று சொல்லிச்சென்ற பின் அதைப்பற்றி யோசிக்கும் போது அவன் அடையும் தெளிவு மிக முக்கியம்.'உடலைப் படைத்தது உதறி எறிவதற்காகவா? அதுவும் என்னில் ஒரு பகுதிதான். அதுவே எல்லாம் இல்லாமல் இருக்கலாம்.அதுவும் ஒரு பகுதிதான். இரட்டைச் சக்கரத்தில் ஒன்று.' என்று தெளிவு கொள்கிறான். இங்குதான் அவன் உண்மையில் பாலூர் ராமு, தந்தை வைத்தி, சித்தர் ராஜூ , குரு ரங்கண்ணா எல்லோரும் சொல்லும் ஒழுக்கத்தை எதிர்கொள்கிறான்.தைரியமாக எதிர்கொள்கிறான். மீறுகிறான். ராமு ஒரு முறை பிரம்மச்சரியம் குறித்து பேசும் போது இந்த உடல் என்ன பாபம் செய்தது? என்று கேட்டு கொள்கிறான். அங்கே அவன் தங்கம்மாளை சந்திக்கிறான்.இப்போது அவன் மிக தெளிவு அடைந்தவனாக மங்கள்வாடி செல்கிறான்.ராமுவிடம் யமுனாவை வீட்டுக்காரி என்று அறிமுகம் செய்கிறான். உடலை பொருட்படுத்தலாம் என்ற தரிசனத்தை பாபு அடைகிறான்.
தங்கம்மாள் இறந்து போனது, தன்னால் இறந்து போனதை பாபு யமுனாவிடமோ , ராஜத்திடமோ சொல்லவில்லை.முக்கியமாக யமுனாவிடம் சொல்லவில்லை.சொல்லியதற்கான தடயங்கள் நாவலில் இல்லை. சொல்லியிருந்தால் அது நாவலின் முக்கிய தருணமாக இருந்திருக்கும்.அது ஒரு குறை என்றே நினைக்கிறேன்.
தி.ஜானகிராமன் எந்த வித அகங்காரமும் இல்லாத எழுத்தாளர் என்றுதான் தோன்றுகிறது. இசை, காவேரி, கும்பகோணம் சொல்லி மாளவில்லை அவருக்கு. இந்த அளவுக்கு ஒருவரால் வாழ்வை அதன் அழகை ரசிக்கமுடியுமென்றால் வேறு என்ன வேண்டும் இந்த வாழ்க்கையில்.
நாவல் இப்படி முடிகிறது.
வெண்கலச் சிலைபோல் அவள்(யமுனா) அசைவற்று நின்றது, மோகத்தை காலடியில் மிதிப்பது போலிருந்தது.
அடிவானத்திலுள்ள மரங்கள்கூட நகர்ந்து வந்தன .வானையும் வின்னையும் சேர்த்தன அம்மரங்கள்.
பூமி வானைத்த தொட்டது. வானம் பூமியை தொட்டது.
ஐப்பசி காற்று ஜில்லென்று வீசியது.
தங்கம்மாளை பூமியெனக் கொண்டால் ரங்கண்ணாவை வானம் எனக் கொண்டால் பாபு இரண்டுக்கும் இடைமையாக நிற்கிறான்.இது இந்த நாவலை பற்றிய விமர்சனம் அல்ல.வாசிப்பு மட்டுமே. எல்லா வாசிப்பும் முக்கியமானவையே.
No comments:
Post a Comment