மனித அகம்

 

மனித அகத்தில் ஒரு கூடுண்டு.ஒவ்வொருவரும் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தை அதில் தொகுத்து வைக்கின்றனர்.ஒரு குழந்தையின் மணல் வீடு போன்றது தான் அது. அந்தக் கூட்டில் தான் அவன் தன் புத்தாடை அணிந்து தலை வாரி மிட்டாயை மென்றவாறு தாய் தந்தையருடன் அமர்ந்திருக்கிறான்.அங்கு அவன் உலகம் பூரணமாக இருக்கிறது.அவன் யார் , இந்த உலகில் அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பது குறித்த தொகுப்பு அந்தக் கூட்டில் தான் உள்ளது.மனிதன் தன் ஒவ்வொரு நாளையும் அந்தக் கூட்டின் பிம்பத்தைக் கொண்டுதான் எதிர்கொள்கிறான்.அங்கு தான் நேற்றைக்கும் நாளைக்குமான தொடர்ச்சி அவனுக்குக் கிடைக்கிறது.வாழ்க்கை நிலையற்றது , அனைத்தும் மாறிக்கொண்டிருக்கிறது என்று அனைத்து சமயங்களும் கூவிக்கொண்டிருந்தாலும் அந்தக் கூட்டில் சலனமேதும் இருப்பதில்லை.
 
காதல், அவமானம்,இழப்பு,மரணம் ஆகியவை ஓரெல்லை வரை இந்தக் கூட்டின் மீது எறியப்படும் கற்கள்.உடைந்து போகும் கூடுடையோர் தான் பெரும்பாலும் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள்.தந்தி அறுபடும் நிலை.உடைந்த கூடுகளிலிருந்து பதறி வெளியே செல்லும் குருவிகள் போல மனிதன் பதற்றம் கொள்கிறான்.பல நேரங்களில் ஒரு அதிர்ச்சியான தகவலை நாம் காலம் தாழ்த்தி மெல்ல அதற்கான மனத்தயாரிப்புகளை உருவாக்கி ஒருவரிடம் சொன்னால் அவர் அதை எளிதல் உள்வாங்குவார்.அதற்கு காரணம் அந்தக் கூடு உடையாமல் இருப்பது தான். பத்மராஜனின் ஒரு படத்தின் தலைப்பு கூடு ஏவிடே.காதல் ஒரு வகையில் மனிதன் தன்னை நிரப்பிக்கொள்ள முன்வைக்கும் ஒரு மன்றாடல்.பக்திக் கவிதைகள் காதல் கவிதைகளாகவும் இருக்கின்றன.அனைத்துக் காதல் கவிதைகளும் பக்திக் கவிதைகளாவும் மாறும் சாத்தியங்களைக் கொண்டுள்ளன.காதல் தோல்வி சிலருக்கு அந்தக் கூட்டை நிரந்தரமாக சிதைத்து விடுகிறது.மனிதன் தன்னைப் பற்றிய சுயத்தை அந்தக் கூட்டில் தான் பொதித்து வைக்கிறான்.அந்த சுயம் கலைந்து விடுவது கண்ணாடியில் உங்கள் முகம் சரியாக தெரியாதது போலத்தான்.அவமானம் , இழப்பு ஆகியவையும் அந்த சுயத்தை அழிக்கிறது. அப்போது தண்ணீரிலிருந்து வெளியேறிவிடுகின்ற மீனைப் போல அவன் அல்லலுறுகிறான். மரம் கொள்ளும் வேர்களும் பறவைகளுக்கான சிறகுகளும் தான் மனிதனுக்கான கூடு.பல நேரங்களில் உடைந்த கூட்டை கட்டி எழுப்புவது அத்தனை எளிய காரியம் இல்லை. கடின உழைப்பும் கூர்மையான கவனமும் அதற்கு தேவைப்படுகிறது.
 
ஆனால் உடைந்த கூடுகள் செய்யம் முதல் வேலை கவனச்சிதறலை ஏற்படுத்துவது தான். ஓயாத மன உரையாடல்களை அவை உருவாக்கும்.ஓரிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு உட்கார இயலாத அவதியை இந்த சிதறிய கூடுகள் உருவாக்குகின்றன. ஒரு புத்தகத்தின் ஒரு வரியைப் படிப்பது மற்றவருடன் உரையாடுவது உட்பட பல எளிய விஷயங்களை இவை மாற்றுகின்றன. மனச்சோர்வு , ஏக்கம் என்று இவற்றை நவீன உளவியல் பெயரிட்டு அதற்கான தீர்வுகளை வழங்கினாலும் உடைந்த கூடுகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் கட்டியெழுப்பப்படாதவரை மனிதனுக்கு மீட்சியில்லை. விஷ்ணுபுரம் நாவலில் வரும் திருவடி, பிங்கலன்,சங்கர்ஷணன் அந்த உடைந்த சிதறிய கூடுகளை கொண்டிருந்தோர் தான். அவரவர் தன் வழி மீண்டும் அதை உருவாக்கிறார்கள். மனிதன் இதனால் அழிவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கலாப்ரியாவின் கவிதையொன்றில் அல்லலுறும் பறவைகளை குறிப்பிட்டு எனக்கு அதன் இடம் தெரியும் ஆனால் பாஷை தெரியாது என்று சொல்லப்பட்டிருக்கும்.அது போலத்தான் கூடுடைந்த கலைஞர்களும்.அதனை மீட்பதற்கான அனைத்து பாதைகளையும் அவர்கள் அறிவார்கள்.ஆனால் அந்த பாஷையைத்தான் அவன் தொலைத்துவிடுகிறான்.அன்பும் கருணையும் தான் மனிதனை மீட்பதற்கான வழிகள்.