புதுமைப்பித்தன் சிறுகதைகளை வாசிக்கும் போது அதிலுள்ள உயிர்த்துடிப்பு நம்மை மிகவும் பரவசமடைய வைக்கிறது. புதுமைப்பித்தனின் கதைகளை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அதை நம்பிக்கை வரட்சி என்ற சட்டகத்துக்குள் நாம் கொண்டு வரலாம். பாரதி கோபலயங்காருக்கும் ஒரு இடையர் பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை ஒரு லட்சியவாதத் தண்மையோடு முன்வைக்கையில் அதற்கு இரண்டாம் பாகம் எழுதுகிறார் புதுமைப்பித்தன். அப்படி லட்சியவாதத்தோடு நடந்த திருமணம் எப்படி இருக்கிறது என்கிற போது அதில் வரும் தினசரி உணவு பிரச்சனையை பேசுகிறார். லட்சியவாதம் என்று எழுதிவிடலாம்.ஆனால் அதை வாழும் போது ஏற்படும் தினசரி பிரச்சனைகள் புதுமைப்பித்தனின் அக்கறைகள் இருக்கின்றன. அவர் பலதரப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். டாக்டர் சம்பத், நானே கொண்றேன் , குற்றவாளி யார் போன்ற வெறும் துப்பறியும் கதைகள் எழுதியிருக்கிறார். கீழ் மத்தியத்தர வாழ்க்கையின் பிரச்சனைகள் என்று ஒரு நாள் கழிந்தது , வெளிப்பூச்சு, சுப்பையா பிள்ளையின் காதல்கள் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். பெண்களின் பாடுகள் என்ற ரீதியில் வழி,கலியாணி, வாடா மல்லிகை, பாட்டியின் தீபாவளி,சாப விமோசனம் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். கொடுக்காபுளி மரம் , புதிய கூண்டு , நியாயம் , அவதாரம் போன்றவை கிறுஸ்துவ மதத்தை சார்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் என்றும் சொல்லலாம்.அப்படியென்றால் அவர் ஹிந்து மத்த்தை விமர்சனம் செய்யவில்லையா என்றால் அப்படியல்ல.அவர் ஒரு மதமாற்றத்திற்கு புதிய கூண்டு என்று தான் பெயர் வைக்கிறார்.பழையது ஹிந்து மதம் என்றால் புதியது கிறுஸ்துவ மதம் என்கிற ரீதியில். பொன்னகரம், கவுந்தனும் காமனும்,மகாமசானம் போன்ற நகரத்தின் இருண்ட பக்கங்களை பற்றிய கதைகளையும் எழுதியிருக்கிறார். மனிதன் தன்னை ஒரு இயந்திரம் போல தினசரி வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்பவன் , அதிலிருந்து அவன் வெளியில் வருவது அவனே நினைத்தாலும் இயலாது. மனித யந்திரம் , இது மிஷின் யுகம் ! அது போன்ற கதைகள். புதுமைப்பித்தன் தொடர்ந்து ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கிறார். கருத்துதளத்தில் நீங்கள் பேசும் விஷயங்கள் எல்லாம் யதார்த்த தளத்தில் என்னவாக இருக்கின்றன என்று பாருங்கள்ளய்யா என்கிறார். இந்த கேள்வியை நீங்கள் ஜே.ஜே.சில குறிப்புகளிலும் பார்க்க முடியும்.இவருடைய கதைகளில் பரஸ்பர அன்பு ஒரு மனிதர் மீது மற்றொரு மனிதர் செலுத்தக்கூடியதாக வருகிறதென்றால் அது கணவன் மனைவி உறவே. செல்லம்மாள் , பொய்க் குதிரை , ஒரு நாள் கழிந்தது,உணர்ச்சியின் அடிமைகள் போன்ற கதைகளில் அன்பு , உறவில் ஒரு மலர்ச்சி இருப்பதை பார்க்க முடியும். பரஸ்பர அன்பு உருவாக முடியாமல் கணவன் மனைவி தனித்தனி உலகங்களில் வாழும் இரண்டு உலகங்கள் கதையையும் எழுதியிருக்கிறார். எதிர்மறையாக பால்வண்ணம் பிள்ளை கதையில் ஒரு ஆண் தன் அதிகாரத்தை குடும்பத்தில் எப்படி செலுத்துகிறான் என்பதையும் எழுதுகிறார். காந்தியை பற்றி , பெரியாரை பற்றி புதுமைப்பித்தன் என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை புதிய நந்தன் கதையில் நாம் பார்க்கலாம். இரண்டு போக்குகளையும் ஒரளவுக்கு ஆரோக்கியத்தோடே அவர் பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. மனிதனின் நண்மை குணங்கள் மீது அவருக்கு பெரிய அபிப்பிராயம் இல்லை தான் என்றாலும் சங்குத்தேவனின் தர்ம்ம் போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய ஹாஸ்ய கதை என்றால் அது திருக்குறள் செய்த திருக்கூத்து. ஆற்றங்கரைப் பிள்ளையார் கதையில் பிள்ளையார் என்பது மனிதன் என்பதன் குறியீடு. அதுவும் இந்திய பிரஜை என்பது முக்கியம்.அவனை சமன , புத்த, இஸ்லாமிய, சங்கர, ராமானுஜ, மாதவச்சாரிய தத்துவங்கள் , கிறுஸ்வ மதங்கள் போட்டு துன்புறுத்துகிறது என்று எழுதுகிறார். இதில் பிள்ளையார் என்பது மனிதன் என்பது போல ஆறு என்பது காலத்தின் குறியீடாக வருகிறது. ஒப்பந்தம் என்கிற கதையில் ஒரு வாசகனின் கற்பனைக்கு என்று அவர் எதையும் விட்டுவைக்கவில்லை.வரதட்சனை பற்றிய மிக தீவரமான விமர்சனத்தை முன்வைக்கும் கதை அது. கோபல்லயங்காரின் மனைவி போல தனி ஒருவனுக்கு என்ற கதையில் தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி எழுதியதற்கு ஒரு எதிர்வினை போலவே தனி ஒருவன் உணவில்லாமல் இறந்து விடுவதும் , அதன்பின் பாரதி பாடலை தாங்கள் கேட்டு ரசிப்பதையும் பதிவு செய்கிறார். தெரு விளக்கு என்று ஒரு கதை .ஒரு கிழவனையும் ஒரு தெரு விளக்கையும் பற்றியது. கிழவனுக்கு என்று இருந்த தெரு விளக்கு உடைந்து போகிறது. ஒரே இருள். அடுத்த நாள் கிழவன் இறந்து போகிறான். இவ்வளவுதான் கதை. ரா.ஸ்ரீ.தேசிகன் இதற்கு விளக்கம் எழுதுகையில் வாழ்க்கையில் இருளில் விடப்பட்ட அனாதைகள் பற்றிய கதை என்று எழுதுகிறார். இப்படியொரு வாசிப்பு எனக்கு எப்போது சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. சாப விமோசனம் , தனி ஒருவனுக்கு, கோபாலயங்ங்காரின் மனைவி,நன்மை பயக்குமெனின்,அகல்யை போன்ற கதைகள் அவரின் வாசிப்பின் மீது சமூக யதார்த்த்த்தில் நின்று செய்யும் எதிர்வினை என்றும் கொள்ளலாம.சிற்பியின் நரகம் கதை பைலார்க்ஸ் சாத்தனிடம் அதற்கு நீ இந்த சிலையை போட்டு உடைக்கலாம் என்று சொல்வது போல இறுதியில் சாத்தன் கானும் கனவில் முடிகிறது.கனவில் அவன் சிலையை போட்டு உடைக்கிறான்.காஞ்சனை போன்ற சில அமானுஷ்ய தன்மையிலான கதைகளையும் எழுதியிருக்கார். சட்டென்று தினசரி வாழ்வை விட்டு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் கதாபாத்திரங்களை கொண்ட உபசேதம், சித்தி, அவதாரம்,ஞானக்குகை போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார்.மிகவும் சாதாரண மனிதர்கள் அதிகார பீடங்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் என்கிற ரீதியில் மனக்குகை ஒவியங்கள், காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் , வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகள் வருகின்றன.ஒரு வகையில் அவரின் கதைகளை தொகுத்து பார்க்கும் தளத்தில் தான் இவற்றை மேலே தொகுத்திருக்கிறேன். மற்றபடி ஒவ்வொரு கதையையும் பற்றி தனித்தனியே பலரும் எழுதியிருக்கிறார்கள்.
நாம் விரும்பும் இஷ்ட லோகத்திற்கும் , துஷ்ட லோகத்திற்குமான (தற்போதைய நிலைமை) ஒரு முரணியக்கம் தான் படைப்பு என்று ஹெர்பர்ட் மார்க்யூஸா எழுதியிருப்பார். புதுமைப்பித்தனுக்கும் ஒரு இஷ்ட லோகம் உண்டு. ஆனால் அவர் லட்சியவாதி அல்ல. இஷ்டலோகம் என்பதெல்லாம் சரி.தற்போதைய நிலைமை இப்படித்தானே இருக்கிறது. மனிதன் இப்படித்தானே இருக்கிறான் என்று வினவுகிறார். நிறைய புத்தகம் படிக்கும் ஒருவர். தான் செய்யும் ஆராய்ச்சிக்காக ஒரு புத்தகத்தை நூலகத்திலிருந்து பக்கத்து வீட்டு நண்பரின் மகனை எடுத்து வரச்செய்கிறார்.பின்பு அது தொலைந்து போய்விட்டது என்று பொய் சொல்ல சொல்கிறார்.இந்த கதைக்கு அவர் தரும் தலைப்பு நன்மை பயக்குமெனின். பொய்மையும் வாய்மை இடத்த நன்மை பயக்குமெனின் என்பதை கிண்டல் செய்கிறார். இவர் அநேகமாக எல்லாவற்றையும் கிண்டலும் கேலியும் செய்கிறார். அதன் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்.புத்தகம் வாசிப்பது , ஆராய்ச்சி செய்வது அறிவு அபிவிருத்திக்காக என்கிற போது இந்த பொய்யின் மூலம் அப்படி புத்தகம் வாசித்து என்ன அவர் அறிவு அபிவிருத்தி கண்டுவிட்டார் என்று அவர் கேள்வி எழுப்புகிறார் என்றும் கொள்ளலாம். கிண்டலும் , கேலியும் இருந்தாலும் அதற்கு பின்னால் அவருக்கு மனிதர்கள் மீது அன்பு இருக்கிறது. அதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். இப்படி இருக்கிறதே என்று தான் அவர் ஆதங்கப்படுகிறார்.அந்த ஆதங்கம் தான் கிண்டலாகவும் , கேலியாகவும்,விமர்சனமாகவும் வெளி வருகிறது.இதை உணர்ந்து விட்டால் நாம் புதுமைப்பித்தனோடு எளிதாக உரையாடலாம். அவர் கரங்களை பற்றிக்கொண்டு அவருடைய ஆதங்கத்தில் நாமும் பங்கு கொள்ளலாம்.
No comments:
Post a Comment