கவிஞர் சபரிநாதன்


கவிஞர் சபரிநாதனுக்கு இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ளது.அவரை சென்னையில் சென்ற வருடம் மெரினா கடற்கரையில் இதே மாதத்தில் சந்தித்து நிறைய நேரம் பேசினேன்.வெகுவாக வாசித்திருக்கிறார்.தான் கவிஞராக தொடர்வதற்கான வகையில் தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டுள்ளார்.

அவருடைய வால் தொகுப்பை பல முறை வாசித்திருக்கிறேன்.மிக நல்ல தொகுப்பு.அவருடைய தொகுப்பில் அவருடைய ஆளுமை முழுமையாக வெளிப்படுகிறது.ஒரு பக்கம் தீர்மானங்கள் அற்ற தத்துவ பளுவற்ற நிஷ்களங்கம் நிரம்பிய சிறுவன் அவருடைய கவிதைகளில் வருகிறான்.அவன் தான் உலகத்தை காப்பாற்ற போகும் சிறுவன்.தன் நிழலிலிருந்து தன்னை காப்பாற்ற பிராத்திக்கும் இளைஞனும் அவருடைய கவிதைகளில் இருக்கிறான்.மறுபக்கம் சராசரித்தனமான அறிவும் வாழ்க்கையும் கொண்ட மனிதர்கள் மீது ஏளனம் கொண்ட கவிதைகளும் அவருடைய தொகுப்பில் இருக்கிறது.மூன்றுமே அவர் ஆளுமையிலும் இருப்பதாக அவருடன் பேசிக்கொண்டிருந்த போது தோன்றியது.அனைத்தையும் பற்றி அவரிடம் கூரான கச்சிதமான கருத்து இருக்கிறது.கவிதைகள் மீது பெரும் கனவு கொண்டுள்ளார்.வெகு தூரம் பயணிப்பார் என்றே நினைக்கிறேன்.அவருக்கு வாழ்த்துககள்.