இக்கணத்தில் பழையதும் புதியதும்இந்த வருடமும் இதுவரையான வருடங்களை போலத்தான் அமைந்தது.ஆனால் பெரும்பாலும் என் வாழ்க்கையில் ஒன்றுமே நிகழாது. மாறாக இந்த வருடம் சற்று நல்லதும் தீயதுமான சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.இன்மையின் பாடல் என்று நான் இயக்கிய குறும்படம் அகமகிழ்வை அளித்தது.அபிலாஷூடன் இணைந்து கவிதைக்கான இணைய இதழை தொடர்ந்து நடத்திவருவதும் இந்த வருடத்தின் மகிழ்ச்சியான விஷயம்.மதுரையில் அமுதன் நடத்திய திரைப்பட விழாவிற்கு சென்ற போது ஒரு எண்ணம் தோன்றியது.ஒரு திரைப்படம் அல்லது நாவல் போன்ற வடிவங்களில் பெரும்பாலானோர் கதையைத்தான் தேடுகிறார்கள்.கதை என்பது தொடக்கம் – முடிச்சு – முதிர்வு என்பதான ஒரு வடிவம்.ஒரு புனைவு அடிப்படையில் ஒரு கதையாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.அது ஒரு முக்கியமான கற்றல்.எனது வலைத்தளத்தில் ஆறு வருடங்களாக எழுதி வந்தாலும் இந்த வருடம் தான் ஓரளவு சரளமாக எழுத முடிந்தது.ஐந்து அல்லது ஆறு பக்க கட்டுரையை எழுதும் போது ஒரு தினறல் இல்லாமல் இப்போதுதான் எழுதுகிறேன்.ஒருவன் எழுத எழுத சொற்கள் அவனுக்காக திறந்துகொள்ளும்.அதன்பின் அவன் சொற்களுக்காக காத்துக்கொண்டிருக்க தேவையில்லை.

ஒட்டுமொத்தமாக இந்த வருடம் மகிழ்ச்சியான வருடம்தான்.மொத்த வருடத்தில் இரண்டு மாதங்கள் மனச்சோர்வோடு இருந்தேன்.அந்த மனச்சோர்வை பற்றிய கவிதைதான் குட்டிப்பெண்ணின் ஒற்றைச்செருப்பு.அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் அலுவலகத்தில் நல்ல நண்பர்கள் அமைந்தார்கள், பெங்களூரில் இந்த வருடம் என்னோடு வீட்டில் ஒரு நண்பர் தங்கினார், அவரின் தயவால் நன்றாக உண்டேன்.பணியில் பதவி உயர்வு கிடைத்தது.நான் என்னுடைய வாழ்க்கையில் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்பினேனோ அப்படியான ஒரு வாழ்க்கையைத்தான் இப்போது வாழ்கிறேன்.புகார்கள் ஒன்றுமில்லை.இந்த வருடம் காய்ச்சல்,தலைவலி என்று எந்த காரணம் கொண்டும் மருத்துவமனை செல்லவில்லை.எந்த பரிசோதனைக்காகவும் காத்திருக்கவில்லை.கிலாய்ட்ஸ் என்ற ஒரு சரும பிரச்சனைக்காக சென்னை மைலாப்பூரில் ஒரு மருத்துவமனைக்கு சென்று மாதமிருமுறை சிகிச்சை எடுத்துக்கொள்வேன்.கிலாய்ட்ஸ் இருப்பதால் திருமணம் செய்துகொள்வதை பற்றி நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன்.சிலர் இது ஒரு பிரச்சனையை இல்லை என்றும் சிலர் குணப்படுத்திக் கொண்ட பின் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள்.ஓரளவு குணமடைந்து விட்டது.அடுத்த வருடத்தில் அநேகமாக திருமணம் செய்துக்கொள்வேன்.ஏதாவது ஒரு பெண் சற்று குழப்பமாக திருமணம் செய்து கொள்ள சம்பதித்தால் உடனே திருமணம்தான்.அந்தப்பெண் நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று கவலைப்படுவதற்குள் ஒரு குழந்தை.அவ்வளவுதான் பிறகு அந்தப்பெண்ணால் தப்பிக்கவே முடியாது.இதுதான் அடுத்த வருடத்தின் பிரதான திட்டம்.

அதை தவிர்த்து பார்த்தால் ஆல்பர் காம்யூ பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பும், திரைப்படத்திற்கான திரைக்கதையும் ஒரு குறுநாவலும் எழுத வேண்டுமென்ற ஆசையிருக்கிறது.பெரிய கொந்தளிப்பான சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இன்றைய நாளை போல நாளையும் சென்றால் ஒரு புத்தகத்தையாவது அடுத்த வருடத்திற்குள் எழுதிவிடுவேன்.இந்த வருடம் எனக்கு அளித்த மிக முக்கியமான நம்பிக்கை என்னால் கதைகள் எழுத முடியும் என்பதே.

சென்னைக்கு மாற்றலாகி சென்றுவிடலாம் என்ற ஒரு எண்ணமிருந்தது.ஆனால் இங்கேயும் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது , அதனால் சில காலம் இங்கேயே இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.நான் பெங்களூரு வந்ததிலிருந்து இரண்டு விஷயங்களை கற்க ஆசைப்பட்டேன்.ஒன்று குங்பூ மற்றது கன்னடம்.

குங்பூ வகுப்புகள் காலை ஆறு மணிக்கு.என்னால் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அத்தனை காலையில் எழு முடியவில்லை.இரண்டு நாட்கள் செல்வேன் பின்னர் அவ்வளவுதான்.இப்படியாக சில மாதங்கள் சென்றேன்.பின்னர் விட்டுவிட்டேன்.ஒரு வேளை திருமணம் செய்துக்கொண்டால் அவசியம் செல்வேன் என்று நினைக்கிறேன். கன்னடம் ஒரளவு கற்றேன்.பெங்களூரை விட்டு செல்வதற்கு முன்னால் கன்னடத்தில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது.சென்னைக்கு செல்லும் போதெல்லாம் பெரும்பாலும் நண்பர் அபிலாஷை பார்த்துவிடுவேன்.இந்த வருடம் ஒரளவு மகிழ்ச்சியாக அமைந்ததற்கு முக்கிய காரணங்கள் நண்பர் அபிலாஷூம் என் சகோதரனின் மகளும்தான்.இந்த வருடத்தை போலவே அடுத்த வருடம் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.பார்க்கலாம்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இக்கணத்தில் பழையதும் புதியதும் - ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் தலைப்பு

அகப்போராட்டம்

யுத்த காலத்தின் போது ஒருவனுக்கு அறுவைச்சிகிச்சை செய்துக்கொண்டிருக்கும் போது மருத்துவருக்கு கையில் வெட்டுபட்டுவிடுகிறது.அந்த நோயாளியிடமிருந்து மருத்துவருக்கு சிபிலஸ் நோய் தொற்றிக்கொள்கிறது.அந்த மருத்துவர் ஒரு பெண்னை ஆறு வருடங்களுக்கு மேலாக காதலிப்பார்.இருவரும் யுத்தம் முடிந்தப்பின் திருமணம் செய்துக்கொள்ள இருப்பார்கள்.இந்த நிலையில் தனக்கு சிபிலஸ் நோய் வந்துவிட்டதால் அந்த மருத்துவர் அந்தப்பெண்ணிடம் நான் இப்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ள விரும்பில்லை என்று சொல்லிவிடுவார்.அந்த பெண் எவ்வளவு வற்புறுத்தியும் உண்மையான காரணத்தை சொல்லமாட்டார்.ஏனேனில் தனக்கு சிபிலஸ் நோய் இருக்கிறது என்றும் அதை குணப்படுத்த எப்படியும் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் எடுக்கும் என்று சொன்னால் அந்தப்பெண் நான் அதுவரை காத்திருக்கிறேன் என்று சொல்லிவிடுவார் என்பதை மருத்துவர் அறிந்திருப்பார்.அதனால் உண்மையான காரணத்தை இறுதிவரை அந்தப்பெண்ணிடம் சொல்ல மாட்டார்.அந்த மருத்துவமனையில் அவரது பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண் அவருக்கு சிபிலஸ் நோய் இருப்பதை அறிந்துக்கொண்டு அவரை மிகவும் கீழாக எண்ணுவாள்.பின்னர் அவருக்கு அது அறுவைச்சிகிச்சையின் போதான விபத்தால் ஏற்பட்டது என்று அறியும் போதும் அதன் காரணமாகவே அவர் தன் காதலை தியாகம் செய்திருக்கிறார் என்று அறியும் போதும் அந்த பெண்ணுக்கு அவர் மீது மதிப்பும் அன்பும் பெருகும்.

அந்த மருத்துவரின் தந்தையும் மகப்பேறு மருத்துவர்.அவர் முதலில் தன் மகன் இவ்வளவு கீழானவனாக இருக்கிறானே என்று நினைத்து வருந்துவார்.தன் மகனை கடிந்துக்கொள்வார்.பின்னர் உண்மையை அறிந்துக்கொண்ட பின் மன்னிப்பு கேட்பார்.தற்செயலாக தனக்கு இந்த நோயை அளித்தவனை அந்த மருத்துவர் சந்திப்பார்.அவன் சிபிலஸூக்கான எந்த மருத்துவமும் செய்துகொள்ளாமல் இருப்பான்.மேலும் அவன் திருமணம் செய்திருப்பான்.அவனுடைய மனைவி கர்ப்பம் தரித்திருப்பாள்.அந்த நோயாளியிடம் அவனும் அவனுடைய மனைவியும் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த மருத்துவர் இறைஞ்சுவார்.மேலும் முறையான சிகிச்சை செய்துக்கொண்டால் பிறக்க போகும் குழந்தையையும் காப்பாற்றலாம் என்பார்.ஆனால் அவன் அதை அலட்சியம் செய்துவிடுவான்.இறுதியில் பிறக்கும் குழந்தை இறந்து பிறக்கும்.கொடூரமாக பிறக்கும் அந்த குழந்தையை பார்க்கும் அதன் தந்தை புத்தி பேதலித்து நிற்பான்.அப்படி ஒரு நிலையில் அந்த குழந்தையை பார்த்ததுதான் அவன் புத்தி பேதலித்து விட்டதற்கு காரணம் என்று மருத்துவர் எண்ணும் போது அவருடைய தந்தை மாறாக சிபிலஸ்  நோயால்தான் அவன் மூளையை பாதித்துவிட்டது என்று சொல்வார்.

மருத்துவரின் காதலி மருத்துவரிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் மனதை மாற்றிக்கொள்ளாததால் தன் தந்தை நோய்வாய்பட்டிருக்கும் சூழலில் மாற்று வழியின்றி வேறொருவரை திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொள்வார்.இறுதியாக மருத்துவரை பார்க்க வரும் அவள் இப்போது கூட அவர் சம்மதம் தெரிவித்தால் எங்காவது ஓடிப்போய்விடலாம் என்பாள்.ஒரு நொடி தடுமாறும் மருத்துவர் பின்னர் சமநிலை அடைந்து அவள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வாள் என்று சொல்லி விடையளிப்பார்.

அந்த மருத்துவரின் பாதுகாப்பிலிருக்கும் பெண் செவிலியாக தேர்ச்சி பெற்று அந்த மருத்துவமனையிலேயே பணிபுரிவாள்.அவள் உங்களால் உங்களின் உடல் உணர்வுகளை அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்திக்கொள்ள இயல்கிறதா என்று கேட்பாள்.அப்போது வரை சமநிலையோடு இருக்கும் மருத்துவர் உடைந்து அழுவார்.நான் இதுநாள் வரை என் ஆசைகளை கட்டுப்படுத்தியே வந்திருக்கிறேன்.ஏனேனில் நான் என் காதலியை திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என்ற கனவிலிருந்தேன்.ஆனால் இந்த நோய் திடீரென்று வந்துவிட்டது.இப்போது நான் அவளை திருமணம் செய்து கொள்ள இயலாது.இப்போது நான் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்வது தவிர வேறு வழியில்லை என்று கதறுவார்.ஆனால் நான் ஏன் இந்த வாழ்க்கையில் இவ்வளவு நேர்மையாக இருந்தேன், நான் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி என்ன பலனை பெற்றேன் என்று புலம்புவார்.பின்னர் அமைதியோடு , ஆனால் நான் ஒரு மருத்துவன் , நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பார்.அப்போது அந்த பெண் நான் உங்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன் என்பாள்.தன் நிலையறிந்து அவர் அதை பொருட்படுத்தாது போல தன் வேலைகளை செய்ய சென்றுவிடுவார்.

அகிரா குரசோவா The Quiet Duel என்ற இந்த திரைப்படத்தில் ஒரு மருத்துவரின் அகப்போராட்டங்களை மிக அற்புதமாக சித்தரித்திருத்திருக்கிறார்.படத்தின் இறுதியில் ஒருவர் அந்த மருத்துவரின் தந்தையிடம் உங்கள் மகன் மருத்துவர்கள் மத்தியல் ஒரு துறவி போல வாழ்கிறார் என்பார்.அதற்கு அந்த தந்தை என் மகன் பெற்ற துன்பமே அவரை அவ்வாறு மாற்றியிருக்கிறது என்பார்.அவன் இந்த துன்பத்தை அனுபவிக்காமல் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் அவன் உள்ளீடற்ற போலி கெளரவத்தை கொண்டவனாக வாழ்ந்துகொண்டிருப்பான் என்பார்.

அந்த மருத்துவர் துன்பத்தை ஏற்பதன் மூலமே பிறரின் துன்பத்தை புரிந்துக்கொள்கிறார்.அதனாலே அவர் மிகவும் சிறந்த மருத்துவராக மாற்றம் கொள்கிறார்.அவரின் சேவை தூய அன்பின் நிலையை அடைகிறது.அது தன் சேவையின் பலனாக ஒன்றையும் கருதுவதில்லை.மேலும் தன் சேவை எண்ணத்தை எண்ணி அவர் கர்வம் கொள்வதில்லை.துன்பம் அந்த மருத்துவருக்கு மிகப்பெரிய கொடையாக மாறுகிறது.துன்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு மிகப்பெரிய வலிமை தேவைப்படுகிறது.பெரும்பாலும் துன்பமிகுதியாலேயே நாம் பிறரை துன்பத்திற்கே உள்ளாக்குகிறோம்.துன்பத்தின் போது மனம் ஒருநிலைப்படுகிறது.மனம் ஒரே விஷயத்தில் குவிகிறது.துன்பமற்ற மனம் சிதறுண்டு கிடக்கையில் துன்பப்பட்ட மனம் ஒடுங்குகிறது.ஒடுங்கிய மனம் பிறரின் துன்பத்தில் தன் துன்பத்தை அடையாளம் கண்டுகொள்கிறது.அப்படியாக அந்த மருத்துவர் சிறந்த மருத்துவராக சேவகனாக கர்ம யோகியாக மாறுகிறார்.நாளை அவருக்கு சிபிலஸ் குணமடைந்து திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கை அமைந்தாலும் இந்த அகப்போராட்டமும் அது அளித்த வலிமையும் அவரை இறுதிவரை பிறரின் துன்பத்தை புரிந்துக்கொள்ளக் கூடியவராக மேண்மையானவராக இருக்கச்செய்யும்.

ஷோபன்ஹர் துன்பமற்ற வாழ்க்கை வெறுமையானது என்கிறார்.அது ஒரு வகையில் உண்மை.துன்பமற்றவனின் மனம் ஒரு போதும் கீழ்மையையும் மேண்மையையும் கண்டுணராது.துன்பப்பட்டவன் தன் மனம் எத்தனை கீழான எண்ணங்களை அடைகிறது என்பதையும் அதே நேரத்தில் தன்னால் எத்தனை மேலான எண்ணங்களையும் அடைய முடிகிறது என்பதையும் புரிந்துக்கொள்கிறான்.ஒரு வகையில் அதன் மூலமாக அவன் மானுடத்தையே புரிந்துக்கொள்கிறான்.துன்பப்படாதவனின் மனம் ஒரு போதும் உக்கிரமான எண்ணங்களால் கொதிப்பதில்லை.துன்பப்பட்டவனின் தலை அவதியால் கிறங்கி அந்த வலி உடல் முழுவதும் பரவி அவன் உருக்குலைகிறான்.தன்னிடம் இவ்வளவு கீழ்மையும் தீமையும் உள்ளதை கண்டுகொள்பவன் பிறரிடத்தில் உள்ள கீழ்மையையும் தீமையையும் பொருட்படுத்த மாட்டான்.அவன் வலியுடன் புன்னகைக்கிறான்.அந்த புன்னகையே மானுடத்தின் மீதான கரிசனமாக விரிவு கொள்கிறது.


நண்மை தீமைக்கு அப்பால்

டெல்லியில் ஒரு பெண் மருத்துவர் மீது திராவகம் வீசிய செய்தி இன்றைய செய்திதாள்களில் வந்திருக்கிறது.அவர் மீது திராவகம் வீசச்செய்தவர் அந்த பெண்ணின் நெருங்கிய நண்பர் அசோக் யாதவ்.இருவரும் ரஷ்யாவில் ஒன்றாக மருத்துவம் படித்திருக்கிறார்கள்.பத்து வருடங்களுக்கும் மேலாக நீடித்த நட்பு.அந்த பெண் தன் மீது திராவகம் வீசப்பட்டவுடன் அந்த நண்பரைத்தான் அழைத்திருக்கிறார்.அவர்தான் அந்த பெண்னை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

அசோக் யாதவ் வைபவ் என்ற இருபது வயது இளைஞன் மூலமாக இந்த செயலை செய்திருக்கிறார்.வைபவ் இரண்டு சிறுவர்களை இதை செய்ய பணித்திருக்கிறார்.முதலில் அந்த இரண்டு சிறுவர்களையும் ஊசியில் நீரை நிறைத்து தன் மீது செலுத்தவைத்து எப்படி அந்த பெண் மீது திராவகம் வீசுவது என்று செயல்விளக்கம் அளித்திருக்கிறார் அசோக் யாதவ்.சம்பவத்தன்று அந்தப் பெண் தன் வீட்டிலிருந்து கூட்ட நெரிசல் மிகுந்த மார்கெட் பகுதிக்கு சென்ற போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடரந்த சிறுவர்கள் அவர் மீது ஊசி மூலம் திராவகத்தை செலுத்திவிட்டு தப்பிசென்றுவிட்டனர்.கண்காணிப்பு காமிராக்கள் இருந்தாலும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிரமமிருந்திருக்கிறது.ஆனால் இது திருட்டுக்காக செய்யப்படவில்லை என்பதில் காவல்துறையினர் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.பின்னர் மோட்டார் சைக்கிளையும், அந்த சிறுவர்களையும் அவர்கள் மூலமாக வைபவையும் பிடித்திருக்கிறார்கள்.

அந்த சிறுவர்கள் திராவகம் வீச உபயோகப்படுத்திய ஊசிகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.விசாரனையில் சிறுவர்கள் தங்களுக்கு அசோக் யாதவ் இந்த செயலுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் தருவதாக சொன்னதையும் அதில் முன்பணமாக இருபத்திரெண்டாயிரம் தந்துவிட்டதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.காவல் துறையினர் அசோக் யாதவை விசாரிக்க போகிறார்கள் என்று அறிந்த அந்த பெண் மருத்துவர் அவரை விசாரிப்பதாகயிருந்தால் நான் இந்த வழக்கையே திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.ஆனால் விசாரனையில் அவரே அனைத்துக்கும் காரணம் என்பதை அறிந்தபோது அந்த பெண்ணும் அவர்களது குடும்பத்தினரும் அதிர்ந்து விட்டனர்.

இந்த குற்றத்திற்கு பின்னான காரணம் அந்த பெண்ணிடம் அசோக் யாதவ் பலமுறை தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடியும் அவர் அதை மறுத்துவிட்டார் என்பதுதான்.அந்த பெண்ணுக்கு அவருடைய குடும்பத்தினர் வேறொருவரோடு திருமணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருப்பதை அறிந்த அசோக் அந்த பெண்னை பழிவாங்க இந்த செயலை செய்திருக்கிறார்.அந்த பெண் தன் மீது திராவகம் வீசப்பட்டதை விட தன் நண்பர் இப்படி ஒரு செயலை தனக்கு செய்துவிட்டதை எப்படி தொகுத்துக்கொள்வது என்று புரியாமல் வலியால் பதறியிருப்பார் என்றே தோன்றுகிறது.

ஒருவர் நம்மை தீய சொற்களால் ஏசும் போதோ கோபத்தால் தாக்கும் போதோ ஏற்படும் வலியை விட நாம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை உடையும் போது உண்டாகும் வலி பயங்கரமாகயிருக்கிறது.நம்பிக்கை உடைந்த உறவுகள் பின்னர் ஒருபோதும் முன்போல இருப்பதில்லை.எப்போதும் ஒரு உரசல் அந்த உறவிலிருக்கும்.அதன் பின் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துவிடுவதுதான் இருவருக்கும் நலம்.எவ்வளவுதான் இருவரும் முதிர்ச்சியடைந்தாலும் அந்த உறவு எப்போதும் சீரடையப்போவதில்லை.

அசோக் யாதவ் அந்த பெண் மீது மிகுந்த காதலை கொண்டிருந்திருக்கலாம்.அவர்கள் இருவர் மத்தியிலும் மலர்ச்சியானதொரு நட்பு இருந்திருக்கலாம்.ஆனால் அந்த பெண் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார்.திருமணம் செயதுக்கொள்ள மறுப்பதற்கும் அல்லது ஏற்பதற்கும் பின்னால் பெரிய தர்க்கமெல்லாம் இருப்பதாக தோன்றவில்லை.அது அந்த மனிதரின் அந்த காலத்தின் மன அவஸ்தையை பொறுத்தது.அதை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுவது நலம்.அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பது அசோக் யாதவின் அகங்காரத்தை சீண்டியிருக்கலாம்.அவர் அதை அவமானமாக கருதியிருக்கலாம்.அந்த பெண்ணிடம் நட்பு பாராட்டுவதை நிறுத்திவிட்டு நிரந்தரமாக விலகுவதே அவர் செய்திருக்கவேண்டிய செயல்.தன்னை நிராகரித்துவிட்டு வேறொருவனை ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளப்போகிறாள் என்னும் போது எந்த இந்திய ஆணுக்கும் கோபமும் எரிச்சலும் அவமானமும் வரத்தான் செய்யும்.ஆனால் சிலர் அந்த பெண்ணிடம் தங்கள் உறவை முறித்துக்கொள்ள இயலாமல் அதை நட்பாக தொடர்கிறார்கள்.அந்த நெருடல் எப்போது வேண்டுமானாலும் மிகுந்த வன்மம் கொண்டதாக மாறலாம்.

ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் அசோக் யாதவின் குற்றத்திற்கு பின்னான உளவியலை பற்றியதல்ல.அந்த பெண் பற்றியது.அந்த பெண் தன் மீது திராவகம் வீசப்பட்டவுடன் அசோக் யாதவை அலைபேசியில் அழைத்திருக்கிறார்.அவர் மீது அந்த பெண்ணுக்கு அத்தனை நம்பிக்கை.தான் அவனது காதலை மறுத்தாலும் தன் மீது அவன் அதே அன்புடன் இருப்பான் என்ற அந்தப்பெண்ணின் நம்பிக்கை வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.நம்மை மிகவும் புண்படுத்துபவர்கள் நம்மீது அன்பு செலுத்துபவர்களே.இது ஒரு உண்மை.

நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் மீதேனும் அதீத நம்பிக்கை வைத்துவிடுகிறோம்.அவர்கள் எந்த செயலை செய்தாலும் அதை நண்மையின் சட்டகத்தின் வழியாக மட்டுமே பார்க்க விரும்புகிறோம்.நாம் அடிப்படையில் ஏதேனும் ஒன்றை இறுகப்பற்றிக்கொள்ள விரும்புகிறோம். பற்றிக்கொண்டிருக்கும் பொருளோ மனிதரோ விஞ்ஞானக்கோட்பாடோ கடவுளோ மதமோ கருத்தோ நமக்கு பல அசெளகரியங்களையும் மனகசப்புகளையும் உருவாக்கினாலும் நாம் அந்த பற்றுதலை விட்டுவிடவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ விரும்புவதில்லை.ஏனேனில் அந்த பற்றுதலை விட்டுவிட்டால் நாம் பாலைவனத்தில் விழவேண்டியதுதான்.பற்றிக்கொள்ள வேறு எதுவுமிருக்காது.எங்கும் வெட்டவெளிதான்.வெட்டவெளி முழுதும் வெண்மணல்.அதில் தனியாக நடந்தால் பாதங்கள் எரிந்துவிடும்தான்.உடலே பற்றி எரிவதை விட பாதங்கள் எரியலாம்.நாம் எதிலும் அகப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அனைத்தையும் சற்றே அவநம்பிக்கையோடு அணுகவேண்டும்.இந்த உலகில் யார் ஒருவருக்கும் நம்மைப்பற்றி நம்மைவிட அதிக அக்கறை இருக்கும் என்ற எண்ணத்தை முழுவதுமாக ஒதுக்கவேண்டும்.பெற்றோர், உடன்பிறந்தவர்கள், ஆசிரியர்கள், காதலி, மனைவி, நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள், வயோதிகர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வணிகர்கள் என எல்லோரின் மீதும் சற்று அவநம்பிக்கையின் சாயத்தை பூச வேண்டும்.அப்போதுதான் அவர்கள் நிறம் மாறும் போது சட்டென்று கண்டுபிடிக்கவும் அவர்களிடமிருந்து விலகவும் ஏதுவாக இருக்கும்.

சந்தேகமற்ற நம்பிக்கை பிறர் மீது பொறுப்பை ஏற்றுகிறது.அவர்களின் நண்மையை நாம் மறைமுகமாக சுரண்டுகிறோம்.அதீதமான நம்பிக்கை மற்றொருவரை பதற்றம் கொள்ளச்செய்கிறது.பிறரை சந்தேகப்படுவதன் மூலம் நாம் அவரை இந்த மண்ணில் கால் பதித்து நடக்கும் மனிதனாக பாவிக்கிறோம்.அப்படியாக அவர்களுக்கு தங்கள் அளவில் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் ஏற்கிறோம்.

ஆனால் அப்படியிருப்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.அப்படி பிறரை சந்தேகப்படுவதன் மூலம் நாம் எப்போதும் பதற்றமாகத்தான் இருக்க இயலும்.ஒருவகை பாதுகாப்பின்மையான உணர்விருக்கும்.வேறு வழியில்லை.நாம் அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.


குட்டிப்பெண்ணின் ஒற்றைச்செருப்பு
மின் இறக்கையில்
தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வது
நிறைய வலிக்கலாம் என்பதால்
தூக்க மாத்திரைகளை பற்றி தெரிந்துக்கொள்ள
கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன்.
சாப்ட்டு தண்ணீயே குடிக்கலேயே
என்று நீர்குவளையை நீட்டினாள் அம்மா.

கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு
நிற்கும் குழந்தையை போல
நின்றிருந்த இருசக்கர வாகணத்தை பார்த்தப்பின்னர்தான்
அன்று வெள்ளை சட்டையும் வேஷ்டியும் அணிந்துக்கொண்டு
கடற்கரை சென்றேன்.

என் அருகில் ஒரு குட்டிப்பெண்ணின்
ஒற்றை குட்டிச்செருப்பில் ரோஜா பூத்திருந்தது.

நான் படுத்துக்கிடக்கையில்
ஒரு பறவை தன் அலகால் என் குதத்தை
குத்திக்கொண்டிருந்தது.
வலி பொறுக்காமல் தூக்கம் கலைந்து
சட்டென்று திரும்பி நீர்க்காக்கையின் கழுத்தை பற்றி
நெருக்கினேன்.

அதன் இறகுகள் கத்தரிக்கப்பட்டியிருப்பதை
அப்போதுதான் கவனித்தேன்.
நான் இறுக்கம் தளர்த்திய அந்த நொடியில்
அது என் மடியில் படுத்துக்கொண்டது.
இப்போது
பறவைகளுக்கு எப்படி செயற்கை இறக்கைகளை
தயாரிக்கமுடியும் என்று கூகிளில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பீடிக்கப்பட்டவர்களின் கதை

 


பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வார்வாரா என்ற பெண்மணியை இருபது வருடங்களாகக் காதலிப்பார். வார்வாரா அவரைப் பொருட்படுத்துவதேயில்லை. அவ்வவ்போது ஸ்டீபன், வார்வாராவுக்குத் தீவிரமான ஆவேசமான கடிதங்களை எழுதுவார். அவரது நண்பர் அவற்றைப் படித்துவிட்டு இவற்றைத் தயவுசெய்து அனுப்பாதீர்கள் என்று கெஞ்சுவார். ஆனால் ஸ்டீபன் அனுப்புவார். அதைப் படிக்கும் வார்வாரா எந்தச் சலனமும் இல்லாமல் மடித்துவைத்துவிடுவார். அவர் என்ன நினைக்கிறார் என்று ஸ்டீபனுக்கு புரிவதே இல்லை. நாவல் ஆரம்பிக்கும்போது ஸ்டீபனுக்கு ஐம்பத்து மூன்று வயது. முப்பத்து மூன்று வயதிலிருந்து வார்வாராவை காதலிப்பார். இறுதியில் மரணப்படுக்கையில் ஸ்டீபன், வார்வாராவிடம் ‘நான் உன்னை எவ்வளவு தீவிரமாகக் காதலித்தேன்’ என்று கதறுவார். வார்வாராவும் ஆம், நானும் உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டேன் என்று தனது அன்பை ஸ்டீபனின் மரணத்தின்போது வெளிப்படுத்துவார்.

இவான் துர்கனேவ் இருபது வருடங்களுக்கு மேலாக ஒரு பாடகியைக் காதலித்தார். அதன் கேலிச்சித்திரமாக ஸ்டீபனைப் பார்க்கலாம். தஸ்தாயேவ்ஸ்கியின் இந்த நாவலில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே கேலிச்சித்திரங்கள்தான். புனிதர் லூக்கின் வரிகளே நாவலின் கதை. இந்த நாவலின் தலைப்பு முக்கியம். அது பீடிக்கப்பட்டவர்கள் என்று இருக்கலாம் அல்லது பீடிப்பது அல்லது பீடிப்பவர் என்றுகூட மாற்றம் செய்யலாம். ஆங்கிலத்தில் இதை மொழியாக்கம் செய்யும்போது The Possessed என்பதை விட The Possessor அல்லது Devils அல்லது Demons என்று தான் மாற்றுகிறார்கள். அதாவது பீடிப்பதுதான் முக்கியம். இந்த நாவலில் தஸ்தயேவ்ஸ்கி கம்யூனிச சோஷியலிச சிந்தனைகளைப் பயங்கரமாகப் பகடி செய்கிறார்.

நாத்திகம், சோஷியலிசம், கம்யூனிசம், இருத்தலியவாதம், மறுப்புவாதம் ஆகிய சிந்தனைகளை அவருடைய எல்லா நாவல்களிலும் தொடர்ந்து எதிர்மறையாகவே தஸ்தயேவ்ஸ்கி சித்திரித்திருக்கிறார். கிட்டத்தட்ட நீட்சேவின் அதிமனிதன் போன்ற கருத்தை உடைய ரஸ்கோல்நிகோவ் இறுதியில் துயரத்தை ஏற்கிறான். கரமாஸவ் சகோதரர்கள் நாவலில் இவான் மனப்பிறழ்வு அடைகிறான். ஆனால் மற்ற நாவல்களுக்கும் இதற்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம் தொனி. இதில் அந்தக் காலத்தில் ரஷ்யாவில் புரட்சிகரச் சிந்தனைகளை முன்வைத்த பல உண்மையான மனிதர்களைக் கிண்டல் செய்திருக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி.

இருபது வருடங்களாக ஒரே பெண்ணை, அவர் சற்றும் பொருட்படுத்தாதபோதும் தொடர்ந்து காதலித்துக்கொண்டிருக்கும் ஸ்டீபன் ட்ரோபிமோவிச்சின் மாணவன் நிகோலய். நிகோலய் வார்வாராவின் மகன். ஸ்டீபனின் மகன் பீட்டர். நிகோலயின் நண்பர்கள் அல்லது மாணவர்கள் கிரிலோவ் மற்றும் ஷாடோவ். பெரும்பாலும் கதை இவர்களைச் சுற்றியே நிகழ்கிறது. இந்த நாவலின் மையப்பாத்திரம் நிகோலய் என்று சொல்லலாம். ரஷ்யாவில் ஒரு சிறுநகரத்தில் நிகோலய் மற்றும் பீட்டர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்படுகிறது. உண்மையில் அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் நான்கு வருடங்களுக்கு முன்னர் பீட்டர்ஸ்பர்கில் ஒன்றாக இருப்பார்கள். அதில் கிரிலோவும் ஷாடோவும் சில வருடங்கள் ஒன்றாக அமெரிக்காவில் வசிப்பார்கள். அந்தக் குழுவின் நோக்கம் அந்த நகரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்குவது. அதுபோலப் பல நகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது. அந்த எண்ணத்தைப் பயன்படுத்தி புதிய புரட்சிகர சோஷியலிச அரசாங்கத்தை நிறுவுவது.

நிகோலய், பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கும்போது பதினான்கு வயது சிறுமியுடன் வல்லுறவு கொள்கிறான். அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அந்தக் குற்றவுணர்வு அவனைப் பீடிக்கிறது. அவன் ஒருமுறை தன் நகரிலுள்ள பாதிரியாரை சந்தித்து தன் தவறுகள் அனைத்தையும் சொல்கிறான். பின்னர் அதை ஒரு அறிக்கையாக்கி பத்திரிகையில் பிரசுரத்திற்கு அனுப்பப்போவதாகச் சொல்கிறான். பாதிரியார் டிகோன் அவனிடம், ‘குற்றங்களில் இரண்டுவகைகள் இருக்கின்றன. ஒன்று குரூரமான குற்றங்கள். அத்தகைய குற்றங்களைச் செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளும்போது அவர்கள்மீது வன்மமும் அதேநேரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டான் என்பதால் அனுதாபமும் தோன்றலாம். ஆனால் வேறுசில குற்றங்கள் இருக்கின்றன. அவற்றைச் செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளும்போது அவர்கள்மீது கோபம் வருவதில்லை; மாறாக அது ஒரு கேலிப்புன்னகையையே உருவாக்குகிறது. உன்னுடைய குற்றம் அத்தகையது. நீ இதை ஒப்புக்கொள்வதால் உனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக நீ ஊருக்கு வெளியே நான் சொல்லும் பாதிரியாரிடம் சென்று ஏழு வருடங்கள் அவருடன் தங்கி ஊழியம் செய், அதுவே உனக்கு நன்மைபயக்கும், என்பார். அது முடியாது என்பான் நிகோலய். அப்போது அவனிடம் பாதிரியார் டிகோன் நான் உன்னை நினைத்து அச்சம்கொள்கிறேன், நீ இறுதியில் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதில்லை; மாறாக இந்த அவமானத்தால் இதைவிடப் பெரிய குற்றத்தைச் செய்யப்போகிறாய் என்பார். நீங்கள் ஒரு உளவியல் நிபுணர் என்று கத்தியவாறு நிகோலய் பாதிரியாரின் அறையிலிருந்து ஓடுவான்.

நிகோலய் சிறுவயதில் ஸ்டீபனிடம் பயின்றவன். அச்சமற்றவன். அவன் பீட்டர்ஸ்பர்க்கில் செய்த குற்றம் அவனை அவனது மரணம்வரை துரத்துகிறது. நிகோலய், பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும்போது புரட்சிகர சிந்தனைகளுக்கு அறிமுகமாகிறான். அவனுடன் இருக்கும் கிரிலோவ், ஷாடோவ், பீட்டர் ஆகியோரும் அந்தச் சிந்தனைகளுக்கு அறிமுகமாகிறார்கள்.

இதில் கிரிலோவும் ஷாடோவும் சிறுநகரத்திற்கு வந்தபின் குழுவிலிருந்தாலும் அதில் முனைப்பற்று இருக்கிறார்கள். கிரிலோவ் ஒரு எண்ணத்தால் பீடிக்கப்படுகிறான். அவன் மனிதர்கள் தங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் மனிதக்கடவுளாக மாற்றமடைய முடியும் என்று நம்புகிறான். சுய மனவிருப்பம் அல்லது சுய இச்சையை முன்வைக்கிறான். அதாவது முழுவதும் சுதந்திரமானவன். சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டவன். விட்டு விடுதலையாகி நிற்பவன். அந்த எண்ணத்தை முன்வைத்து அவன் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்கிறான். அவன் தற்கொலை செய்துகொள்வதன் மூலம் ஒருவகை அதிமனிதனாக மாற்றம் கொள்ளமுடியும் என்று தீர்மானிக்கிறான்.

மறுபுறம் ஷாடோவின் துணைவி ஒரு கட்டத்தில் ஷாடோவை விடுத்து நிகோலயுடன் பீட்டர்ஸ்பர்கில் வாழ்கிறாள். அவள் நிகோலயின் மூலமாகக் கர்ப்பம் தரிக்கிறாள். ஷாடோவ் கிரிலோவ் வாழும் அதே வீட்டின் கீழ் அறையில் வாழ்கிறான். இருவரும் அநேகமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை.

நிகோலய், மரியா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை தனது குற்றவுணர்வு காரணமாக பீட்டர்ஸ்பர்க்கில் வாழும்போது திருமணம் செய்துகொள்கிறான். அவளுடன் அவளது சகோதரன் லேப்யாட்கினும் வாழ்கிறான். நிகோலய் மரியாவை திருமணம் செய்துகொண்டது பீட்டருக்கும் கிரிலோவுக்கு மட்டுமே தெரியும். மரியாவும் அவளது சகோதரனும் நிகோலயின் பராமரிப்பில் சிறுநகரில் வாழ்கிறார்கள்.

நிகோலயை பல பெண்கள் நேசிக்கிறார்கள். அவனது அன்னை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று ஆசைப்படும் லிசாவிட்டா, வார்வாரா இல்லத்தில் வளரும் தார்யா (இவள் ஷாடோவின் தங்கை), மற்றும் ஷாடோவின் மனைவி, அவன் வல்லுறவு கொள்ளும் பதினான்கு வயது சிறுமி, மனநிலை பாதிக்கப்பட்ட மரியா ஆகிய அனைவருமே அவனை நேசிக்கிறார்கள்.

பீட்டர் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற இச்சை கொண்டவன். அவனுக்கு நிகோலய் தேவை. நிகோலய் அச்சமற்றவன். அவனை தேவதூதன் போன்ற ஒரு இடத்திற்குக் கொண்டுசென்று அவனே மாற்றத்தின் திருவுரு என்று மக்களை ஏற்கவைக்கவும் அதே நேரத்தில் அதிகாரம் முழுக்க தன்னிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவனாகவும் பீட்டர் இருக்கிறான். அவனை பீட்டர்ஸ்பர்க்கில் ஷாடோவ் அவமானப்படுத்திவிடுகிறான். சிறுநகரத்தில் அந்தக் குழு ஒன்றாக இருக்கும்பட்சத்திலும் சற்று ஒழுங்கற்று இருக்கிறது. அதை ஒன்றிணைக்க அவனுக்கு ஒரு கொலை தேவைப்படுகிறது. ரத்தம் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று பீட்டர் முடிவுசெய்கிறான். ஷாடோவ் தங்கள் குழுவைப்பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்துவிடக்கூடும் என்ற அச்சத்தை குழுவில் பீட்டர் உருவாக்குகிறான். அச்சத்தின் காரணமாக குழுவினரும் பீட்டர் தலைமையில் ஷாடோவை கொலை செய்கிறார்கள். மறுபுறம் அந்த நகரின் கவர்னர் மனைவி ஏற்பாடு செய்யும் விழாவை கேலிக்கூத்தாக மாற்றுகிறான் பீட்டர். அதே நேரத்தில் அந்த நகரத்தின் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சனையைத் திசைமாற்றி ஆற்றை ஒட்டியிருக்கும் வீடுகளில் ஆட்களை வைத்து தீ வைக்கிறான். அதேபோல மரியாவையும் அவனது சகோதரன் லேப்யாட்கினையும் பெட்கா என்ற திருடனை வைத்து கொலை செய்கிறான்.

ஷாடோவின் மனைவி, நிகோலயின் பிள்ளையை கருவில் சுமந்து இறுதியில் ஷாடோவின் இல்லத்திற்கு வருகிறாள். இந்த நாவலில் மிக அற்புதமான கவித்துமான மலர்ச்சியான பக்கங்கள் ஷாடோவிற்கும் அவனது மனைவிக்கும் மலரும் அந்தக் காதல். அத்தனை துரோகத்திற்குப் பிறகும் ஷாடோவ் அவளைக் காதலிக்கிறான். அவள் பிரசவவலியால் துடிப்பதைப் பார்த்து செவிலித்தாயை அழைத்துவர அந்த இரவில் பித்துப்பிடித்தவன் போல ஓடுகிறான். அவன் அவனது மனைவியைப் பிரிந்துவாழும் மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூட அவளை நினைக்காமல் இருக்கவில்லை. செவிலித்தாய், ஷாடோவின் பித்துக் காதலைப் பார்த்து கேலி செய்கிறாள். பிள்ளைப்பேற்றின் பின் அவன் மனைவி ஷாடோவின் நெற்றியில் முத்தமிடுகிறாள். பிறக்கும் குழந்தையை எங்கெனும் சேர்த்துவிடலாம் என்று செவிலித்தாய் யோசனை தெரிவிக்கும்போது ஷாடோவ் இது என் குழந்தை, நானே இதன் தந்தை, நான் இதை வளர்ப்பேன் என்கிறான். தன் மகனுக்கு இவான் என்று பெயர் சூட்டுகிறான். அன்று முழுவதும் அவள் உறங்கும்போது ஷாடோவின் உள்ளங்கைகளைப் பற்றிக்கொண்டு உறங்குகிறாள். அன்றிரவுதான் பீட்டரும் அவனது குழுவினரும் சேர்ந்து ஷாடோவை கொலை செய்துவிடுகிறார்கள். கிரிலோவ் எப்படியும் தற்கொலை செய்துகொள்ள போகிறான், ஷாடோவின் மரணத்தை ஏற்றுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள பீட்டர் வற்புறுத்துகிறான். கிரிலோவும் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகிறான். பிறந்த குழந்தை குளிரால் இறந்துபோகிறது. அதன்பின் நிகோலயின் காதலி லிசாவிட்டா தீப்பற்றி எரிந்த வீடுகளைப் பார்த்துக்கொண்டு நிற்கும்போது கூட்டத்தினர் தாக்கி இறந்து போகிறாள். நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் அது அவ்வாறே நிகழப்போகிறது என்று அறிந்திருக்கும் நிகோலய் அதைத்தடுக்க எதுவும் செய்யவில்லை. இறுதியில் அவன் தன்னால் இறந்துபோன சிறுமியை போலத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறான்.

தன் நீண்டநாள் காதலைப் புரிந்துகொள்ளாத வார்வாராவைவிட்டு விலகி ஸ்டீபன் தன் இறுதி நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். அவர் வழியில் உடல் நலிவுற்று இறந்துபோகிறார். அவர் இறக்கும்போது பாவ மன்னிப்பு கோருகிறார். அவர் கடவுளை ஏற்கிறார். பீட்டரின் குற்றங்களை அரசாங்கம் அறியும்முன் அவன் ஸ்விஸர்லாந்து தப்பிச்செல்கிறான். ஷாடோவின் கொலையில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்படுகிறார்கள். கரமாஸவ் சகோதரர்கள் நாவலுக்கும் இதற்கும் இருக்கும் முக்கிய வித்யாசம் இது எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் முடிகிறது என்பதுதான். கரமாஸவ் சகோதரர்கள் நாவலில் அல்யோஷா சிறுவர்களோடு நிகழ்த்தும் உரையாடலோடு நாவல் முற்றுப் பெறுகிறது. ஆனால் இந்த நாவலில் பிறந்த குழந்தைகூட இறந்துவிடுகிறது. இந்த நாவலை காம்யு நாடகமாக மாற்றி அவரே இயக்கி அரங்யிருக்கிறார். தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களிலேயே ஒரு அரசியல் பிரகடனம் போன்ற நாவல் இந்தப் பீடிக்கப்பட்டவர்களின் கதை.

தஸ்தாயேவ்ஸ்கியை ஸ்லேவோவிரும்பி (Slavophile) என்று சொல்லலாம். அதாவது அவர் தன் ரஷ்ய மண்ணில் ரஷ்ய மரபு கிறிஸ்துவம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் ரோமன் கத்தோலிக்கத்தை வெறுத்தார். ரோமன் கத்தோலிக்கத்தின் மீதான விரக்தியில் உருவான எதிர்மறை விளைவே நாத்திகம் என அவர் நம்பினார். நாத்திகத்தின் விளைவுகளே அனைத்து முற்போக்கு சிந்தனைகளும் என்று அவர் தீர்மானமான எண்ணம் கொண்டார். இதை ஒரு அறிக்கைபோல தி இடியட் நாவலில் மிஷ்கின் சொல்கிறான். இந்த நாவலை முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு குழுவையும் அந்தக் குழுவின் ஆசிரியரையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றிய கேலிச்சித்திரமாகக் கொள்ளலாம்.

குழுவின் ஆசிரியர் ஸ்டீபன். அவருடைய பிரச்சனை இருபது வருடங்களாகக் காதலித்தும் தன்னைப் பொருட்படுத்தாத வார்வாரா. அவரது அனைத்து சிந்தனைகளும் இந்தப் பொருட்படுத்தாத காதலால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்னும் கேலிச்சித்திரத்தை தஸ்தாயேவ்ஸ்கி உருவாக்குகிறார். அதேபோல நிகோலய் ஒரு பதினான்கு வயது சிறுமியின் தற்கொலைக்குக் காரணமாக இருப்பது அவனை உண்மையை ஒருபோதும் நெருங்கவிடாமல் செய்துவிடுகிறது என்று இன்னொரு கேலிச்சித்திரத்தை உருவாக்குகிறார். தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கநெறியின்மை உருவாக்கும் அவமானமே பொதுவாழ்க்கையில் முற்போக்கு சிந்தனைகளை முன்வைப்பதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணம் என்ற சித்திரம் இந்த நாவலில் இருக்கிறது. அதாவது அத்தகைய அவமானத்தால் சிதறுண்டு கிடப்பவர்களைச் சாத்தானைப் போன்ற இந்த முற்போக்குச் சிந்தனைகள் எளிதில் பீடித்துக்கொள்கிறது, அது மிகப்பெரிய அழிவுகளை உருவாக்குகிறது என்கிறார்.

லூக்கா எழுதிய சுவிசேஷ வரிகளில் பன்றிக்கூட்டமும் அதன் மேய்ப்பனும் மலையில் இருக்கிறார்கள். சாத்தான் மேய்ப்பனுக்குள் நுழைந்து அவனை துன்புறுத்துகிறது. பின்னர் அந்த மனிதனிலிருந்து விலகி பன்றிக்கூட்டத்திற்குள் நுழைகிறது. பன்றிக்கூட்டம் வெறித்தனமாக ஓடி ஏரியில் விழுந்து மூச்சடைத்து இறக்கிறது. சாத்தான் நீங்கிய பன்றிமேய்ப்பன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருக்கிறான். அதைப்பார்த்து ஊர்க்காரர்கள் அச்சம் கொள்கின்றனர்.(லூக்கா எழுதிய சுவிசேஷம் 8ஆம் அத்தியாயம் 32 முதலான வரிகளில் இடம்பெறும் இந்த உருவகமே நாவலின் கதை).

ஸ்டீபன் பன்றி மேய்ப்பாளன். பன்றிக்கூட்டம் நிகோலய், பீட்டர், ஷாடோவ், கிரிலோவ் மற்றும் அந்த முற்போக்குக் குழுவின் அங்கத்தினர். ஸ்டீபனை முதலில் பற்றும் சிந்தனைகள் அவர் மூலமாக அவரது மாணவர்களையும் பற்றுகிறது. பற்றிய சிந்தனைகளால் வெறித்தனமாகக் குற்றங்களைச் செய்யும் பன்றிக்கூட்டத்தினர் பின்னர் மடிந்துபோகிறார்கள். அவர்கள் வெறித்தனமாக ஓடியதில் பலர் இறந்துபோகிறார்கள். பல அழிவுகளை உருவாக்குகிறார்கள். இறுதியில் பன்றி மேய்ப்பாளனான ஸ்டீபன் பாவமன்னிப்பு பெற்று இறந்து போகிறார்.புரட்சிக்குப்பின்னான ரஷ்ய அரசாங்கத்தால் இந்த நாவல் தடைசெய்யப்படவில்லை. சில பகுதிகள் மட்டுமே நீக்கப்பட்டன. இந்த நாவலை நாடகமாக மாற்றிய ஆல்பர் காம்யு அதற்கான முக்கிய காரணம் அது முன்வைக்கும் நம்பிக்கையின்மையே என்கிறார். அதுவே இன்றைய மனிதனுக்கு மிகவும் நெருக்கமானதாக இந்த நாவலை மாற்றுகிறது என்கிறார் காம்யு.

இந்த நாவலை இன்று வாசிக்கு போது ஒரு விஷயம் நிச்சயமாகச் சொல்லமுடிகிறது. எத்தனை பெரிய முற்போக்குச் சிந்தனையும் மனிதனாலே முன்வைக்கப்படுகிறது. அவை தேவதூதனின் ஆசிர்வாதம் அல்ல. மனிதன் அதிகாரம், இச்சை மற்றும் கீழ்மையின் குணங்களாலானவன். எந்த முற்போக்குச் சிந்தனையும் மனிதனின் மண்டைக்குள்சென்று வெளிவரும் போது அது அதிகாரத்தின் இச்சையின் கீழ்மையின் குணங்களைக் கொண்டதாகவே இருக்கமுடியும். சாத்தானின் பிடியிலிருந்து விடுபட்டு நாம் இயேசு கிறிஸ்துவின் பாதங்களில் அமரக்கூடிய நாட்கள் இன்று இல்லை. இன்று நமக்கு சாத்தானும் இல்லை, கடவுளும் இல்லை. முற்போக்குப் பிற்போக்கு நவீனத்துவ பின்நவீனத்துவ அமைப்புவாத பின்அமைப்புவாத சிந்தனைகளின் பித்தசுழற்சியின் மத்தியில் நிற்கும் மனிதன் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறான்.


சூட்சம புள்ளியாய் மனிதன்

தெகார்தே 'நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்' என்றார்.அதாவது ஒரு மனிதனின் இருப்பு அவன் சிந்தனையே என்றார்.சிந்தனை என்பது ஒரு உடலற்ற ஒரு புள்ளியாக மாறுகிறது.அதாவது அது பரிமாணங்கள் அற்றது.கணிதவியலில் நாம் குறிப்பிடும் Cartesian coordinates முப்பரிமாண உலகில் ஒரு புள்ளியை குறிப்பட பயண்படுகிறது.தெகார்தே தத்துவ துறையில் நான் சிந்திக்கிறேன் , அதனால் நான் இருக்கிறேன் என்று சொல்லும் போது புலன்களை அவர் மறுக்கிறார்.சிந்தனையே இருப்புக்கான நியாயம் என்கிறார்.நம் இருப்பை அவர் ஒரு சூட்சம புள்ளியாக மாற்றும் போது அந்த புள்ளியை முப்பரிமாண உலகில் நிலைநிறுத்துவது எப்படி என்று கேள்வி வருகிறது.அப்படித்தான் Cartesian Coordinates உருவானது என்று நினைக்கிறேன்.அதாவது அவருடைய சிந்தனையில் இப்படியாக Cartesian Coordinates உருவாகியிருக்கலாம் என்கிறேன்.

நம் தமிழ் சூழலில் தத்துவம் போலவும் கலைகள் போலவும் விஞ்ஞானம் பார்க்கப்படுவதில்லை.விஞ்ஞானம் தத்துவத்தோடும் கலைகளோடும் உரையாடும் மற்றொரு அறிவுத்துறை மட்டுமே.விஞ்ஞானத்திற்கு நாம் உயர்ந்த அந்தஸ்து அளித்திருக்கிறோம்.அதை உள்வாங்கியவர்கள் அதிக பொருள் ஈட்டுகிறார்கள் என்பதனால் இருக்கலாம்.அது பெரிய விஷயம் என்கிறோம்.அதனால் அதை இலக்கியம் போலவோ , இசை போலவோ பேச தயங்குகிறோம்.

நிச்சயம் ஐன்ஸ்டீன் இருபதாம் நூற்றாண்டில் தான் உருவாகியிருக்க முடியும்.அவரது சிந்தனை தத்துவம் , கலை மற்றும் விஞ்ஞானத்திற்கு இடையில் நடந்த உரையாடலில் உருவானதுதான்.அவர் தேவதூதன் அல்ல.நியூட்டனின் காலத்தில் ஐன்ஸ்டீன் உருவாகியிருக்க வாய்ப்பில்லை.ஐன்ஸ்டீன் உருவாக இம்மானுவேல் காண்ட், நிட்ஷே, தஸ்தாவெய்ஸ்கி ஆகியோர் இந்த மண்ணில் தோன்றியிருக்க வேண்டும்.அந்த உரையாடல்களை கிரகித்த பின்னர்தான் ஐன்ஸ்டீன் தன் துறையில் சில புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்.

தமிழில் தத்துவமும், விஞ்ஞானமும் , கலைகளும் ஒன்றுடன் ஒன்று உரையாட வேண்டும்.அத்தகைய இதழ்கள் வரவேண்டும்.விஞ்ஞானம் ஒரு அறிவுத்துறை என்பதற்கு அப்பால் அதற்கு வேறு சிறப்புகள் கிடையாது என்று இலக்கியவாதிகள் உணர வேண்டும்.தொடர்ச்சியாக பல்வேறு அறிவுத்துறைகளுக்கு மத்தியில் உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமே நாம் நமது சிந்தனைகளை விஸ்திரிக்கமுடியும்.அதன் மூலம் இன்னும் சிறந்த இஷ்டலோகத்தை நோக்கி நாம் செல்ல முடியும்.அல்லது இப்போது இருப்பதே இஷ்டலோகம்தான் என்பதையாவது நிறுவமுடியும்.


மகேந்திரனின் திரைப்படங்கள்


மகேந்திரனின் நண்டு திரைப்படம் பெரிய அளவில் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.இதில் மைய கதாபாத்திரத்தில் நடித்தவர் அதற்கு முன்னோ பின்னோ வேறு படங்களில் நடித்ததாகவும் தெரியவில்லை.அவருக்கு சரத்பாபு குரல் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.படத்தின் கதை கூட அத்தனை வலுவானதில்லை.நல்லவர்களை துயரம் உருக்குலைக்காது என்பதுதான் கதை.படத்தில் டைட்டில் கார்டில் மகேந்திரனின் பெயர் தமிழ் , ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் வரும்.ஏன் ஹிந்தியிலும் பெயர் போட்டார்கள் என்று பார்த்த போது படத்தின் நாயகனின் சொந்த ஊர் லக்னோ.அந்த ஊருக்கு தன் மனைவியை முதல் முறையாக அழைத்துச்சென்று ஊர் சுற்றிக்காட்டும் போது வருவதுதான் அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா பாடல்.படத்தில் ஒரு ஹிந்தி பாடல் கூட வரும்.படத்தில் லக்னோ சம்பந்தப்பட்ட காட்சிகள் அத்தனை அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.அசோக்குமார்தான் ஒளிப்பதிவாளர்.கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் போன்ற காட்சி அமைப்புகளும் வசனங்களும் கொண்டதாக லக்னோ பகுதி இந்த படத்தில் வருகிறது.மற்றபடி இந்த படத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

மகேந்திரன் மிகச்சிறப்பான படங்களை எடுத்திருக்கிறார்.ஆனால் அவருடைய நுண்ணுனர்வு சமயங்களில் மிக சாதாரணமானதாக இருப்பதை சில காட்சிகளில் கண்டுபிடித்துவிடலாம்.நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் மோகன் சுஹாசினியை காதலிப்பார்.பின்னர் மோகனின் தவறான வார்த்தைகளால் புண்பட்டு சுஹாசினி பிரதாப் போத்தனை மணப்பார்.ஆனால் அவரால் பிரதாப் போத்தனோடு சேர்ந்து வாழ இயலாது.மோகனை தேடிச்செல்வார்.மோகன் ஒரு ஊனமுற்ற பெண்னை திருமணம் செய்திருப்பார்.மேலும் மோகன் சுஹாசினிக்கு நான் உனக்கு செய்த துரோகத்திற்காகத்தான் இந்த ஊனமுற்ற பெண்னை திருமணம் செய்துக்கொண்டேன் என்பார்.மிக வேடிக்கையான காட்சி.தன் தியாகத்தை பறைசாற்ற ஒரு ஊனமுற்ற பெண்னை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியை வைத்ததும் அதை வசனம் மூலமாக விளக்குவதும் மிக அபத்தமான விஷயம்.சமயங்களில் நாம் Playing to the gallery என்பதற்காக சில விஷயங்களை செய்கிறோம்.யாருக்கோ நம்மை நிரூப்பித்துக்கொண்டு என்ற மனுஷ்யபுத்திரன் வரியைப்போல.எல்லாவற்றையும் நம்மால் கச்சிதமாக விளக்க முடிந்துவிட்டால் நாம் குற்றவுணர்விலிருந்து தப்பித்துவிடலாம் என்பதுபோன்ற மனக்கணக்கு.கிட்டத்தட்ட மோகனின் செயலும் அத்தகையதுதான்.

மகேந்திரன் இயக்கிய படங்களில் மிக அற்புதமான திரைப்படங்கள் ஜானியும் முள்ளும் மலரும் தான்.உதிரிப்பூக்கள் நிச்சயம் சிறந்த திரைப்படம் இல்லை.அந்த திரைக்கதையில் ஒரு தினறல் இருக்கும்.ஒரு தீயவனை அந்த ஊரே சேர்ந்து இறுதியில் கொல்கிறது.அவன் ஒரு பெண்னை குரூரமாக அவமானப்படுத்துகிறான்.அதன் பொருட்டு தண்டிக்கப்படுகிறான்.இது ஒரு எளிமையான கதை.அந்த தீயவனின் செயல்கள் அதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் சற்று Subtle ஆக சொல்லப்பட்டிருக்கும்.அந்த ஊருக்கு பதிலாக அந்த இடத்தில் ரஜினிகாந்த் அந்த ஊருக்கு ஆசிரியராக வருவது போல காட்டி அவர் அந்த தீயவனை கொலை செய்வது போல இருந்தால் அது ஒரு சாதாரண படமாக இருந்திருக்கும்.சற்று குரலை தாழ்த்தி உணர்ச்சிகளை கொட்டாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற வகையில் தான் உதிரிப்பூக்கள் மிகவும் கொண்டாடப்பட்டது , கொண்டாடப்படுகிறது.ஆனால் மற்றபடி அது மிக எளிய கதையை கொண்ட ஒரு திரைப்படம் தான்.

கை கொடுக்கும் கை மகேந்திரனின் திரையுலக வாழ்வின் கீழ்நோக்கு பயணத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்த திரைப்படம்.ரஜினிகாந்த் நடித்தார்.மைய கதாபாத்திரத்தின் மனைவியான பார்வையற்ற பெண்னை ஏமாற்றி  அவளோடு ஒருவன் வல்லுறவு கொள்கிறான்.பின்னர் தன் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டவனை கொலை செய்ய செல்லும் நாயகன் தவறிழைத்தவனின் மனைவியின் கதறலுக்கு இனங்கி அவனை கொலை செய்யாமல் விட்டுவிடுகிறான்.இறுதியில் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊர் விட்டு செல்கிறான் நாயகன்.இந்த படம் மிகப்பெரிய தோல்வி.அதன் பிறகு மகேந்திரனின் திரையுலக வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது.ஒரு வேளை படத்தின் நாயகன் தவறிழைத்தவனை கொலை செய்திருந்தால் இந்தப்படம் வெற்றி பெற்றிருக்கலாம்.தெரியவில்லை.

மெட்டி திரைப்படமும் தோல்விதான் என்று நினைக்கிறேன்.திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள்.மூத்தவள் தவறான ஒருவனை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் அவனால் சித்ரவதைக்கு உள்ளாகி வீடு திரும்புகிறாள்.வாதம் தாக்கி அவள் ஒரு போதும் நடக்கமுடியாதவளாகிறாள்.இளையவளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் அண்ணன் திருமணத்தன்று மெட்டி வாங்க செல்லும் வழியில் லாரியில் அடிப்பட்டு இறந்து போகிறான்.கடைசிவரை அந்த வீட்டில் மெட்டி ஒலி கேட்பதே இல்லை.இளையவள் முதல்முறையாக இறந்துபோன தன் அண்ணனை அண்ணா என்று அழைக்கிறாள்.மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட என்ற பாடல் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டியிருக்கும்.மற்றபடி பெண்கள் காலில் மெட்டி அணிந்து வீட்டில் நடக்கும் ஒலியை கேட்க ஆசைப்படும் அண்ணன்களும் இன்று இல்லை,தங்கைகளும் இன்று இல்லை.அது எப்போதோ முடிந்து போன ஒரு காலகட்டத்தின் திரைப்படம்.அந்த உணர்வுகள் இன்று நிச்சயம் எவராலும் ஏற்றுக்கொள்ளவோ, ஒப்பிட்டுக்கொள்ளவோ முடியாது.

ஆனால் முள்ளும் மலரும் மிகச்சிறந்த திரைப்படம்.காளி கதாபாத்திரம் தமிழில் இதுவரை வேறு எந்த படத்திலும் வந்ததில்லை.என்ஜினியர் தன்னை அவமானப்படுத்தியதாக கற்பனை செய்துக்கொண்டு துயரம் கொள்கிறான் காளி.என்ஜினியர் தன் தங்கையை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சொல்லும் போது காளிக்கு என்ஜினியரை அவமானப்படுத்த அற்புதமான சந்தர்ப்பம் அமைகிறது.அவன் வேறு ஒருவனுக்கு தன் தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறான்.இங்கும் அந்த ஊரே காளியின் முட்டாள்தனமான செயலை சகித்துக்கொள்ள முடியாமல் அவனுடைய தங்கையை அந்த என்ஜினியருக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறது. ஊரே திரண்டு என்ஜீனியருக்கு தன் தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில் ஒரு கை இல்லாத காளியால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.அவன் மரணித்து விட்டவனை போல நிற்கிறான்.அவனால் தன் தங்கை தன்னைவிட்டு செல்வாள் என்பதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.ஆனால் அவள் ஊர் மக்களை தவிர்த்து அவனிடம் ஒடி வந்து மார்பில் சாய்ந்து அழுகிறாள்.அப்போது காளி மலர்கிறான்.அவனுக்குளிருந்த முள் மலர்கிறது.அவன் அந்த கர்வத்தில் தன் தங்கையை அந்த என்ஜியிருக்கு திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவிக்கிறான்.அவமானம், பழிவாங்குதல், மலர்ச்சி என்ற எளிய மனித உணர்வுகள் மிக அற்புதமாக இந்த திரைப்படத்தில் பதிவாகியிருக்கும்.ரஜினிகாந்த் சிறந்த நடிகர் என்பதை வெளிகொணர்ந்த படம்.

அதே போல ஜானியும் கீழ்நோக்கிய பயணத்தை மேற்கொள்பவனின்  வாழ்வை திசைதிருப்பும் இசையின் மேண்மையை எடுத்துரைக்கும் படம். இரண்டுமே ரஜினிகாந்த் நடித்தவை.இரண்டுக்கும் அசோக்குமாரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை.மகேந்திரனின் மிகச்சிறந்த படங்களாக இவை இரண்டும் காலத்தில் நிற்கும்.

மகேந்திரனின் மிக முக்கியமான பங்களிப்பு என்றால் தோய்வற்ற திரைக்கதை, குரலை மேல் எழுப்பாமல் கதை சொல்லும் முறை, அசோக்குமாரையும் இளையராஜாவையும் சரியாக பயணப்படுத்திக்கொண்டது, ரஜினிகாந்திற்குள் இருக்கும் சிறந்த நடிகரை வெளிகொணர்ந்தது ஆகியவைதான்.மனித உணர்வுகளை குரல் உயர்த்தாமல் அதுவரை தமிழ் சினிமா செய்த நாடகீயத்தருணங்களை விடுத்து மிக எளிமையாக சொல்ல முயன்றது அவரின் சாதனை.