ரஜினிகாந்தின் திரைப்படங்கள்
ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய கே.ஹரிஹரன் ரஜினிகாந்த் பற்றி கட்டுரைகள் எழுதினாலும் தொலைக்காட்சியில் பேசினாலும் ஒரு விஷயத்தை முக்கியமாக வலியுறுத்துகிறார்.ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் காரணம் அந்தக் காலகட்டம்தான் என்கிறார்.1975யில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மிகச் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகிறார்.அந்தக் காலகட்டத்தில் லட்சியவாதத்தின் மீது இளைஞர்களுக்கு உருவான நம்பிக்கையின்மையும் விரக்தியுமே ரஜினிகாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ஹரிஹரன்.இதில் ஒரளவு உண்மை இருக்கிறது.என் தந்தை பழைய காங்கிரஸில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.எழுபதுகளில் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் பழைய காங்கிரஸ் என்று உடைகிறது.இந்திரா காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றதில் உள்ள முக்கிய காரணம் காங்கிரஸ் அதுவரை உபயோகப்படுத்தி வந்த காளை சின்னத்தை பழைய காங்கிரஸால் தக்கவைத்துக்கொள்ள முடியாததுதான் என்று ஜெயகாந்தன் தன் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவ கட்டுரைகள் நூலில் எழுதுகிறார்.

பழைய காங்கிரஸ் கட்சியால் எந்த வகையிலும் மறுபடியும் எழுச்சி பெற முடியவில்லை.1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைகிறார்.என் தந்தை அடுத்த சில ஆண்டுகளில் ஜனதா கட்சியின் உறுப்பினரானார்.ஆனால் அதில் அவருக்கு பெரிய ஆர்வமோ ஈடுபாடோ இருந்ததாக தெரியவில்லை. விழுப்புரத்தில் ஜூனியர் வழக்கறிஞராக வேலை செய்துகொண்டிருந்தபோது அவருடைய சீனியர் வழக்கறிஞர் அவரை அழைத்து பத்து ரூபாய் கொடுத்து நான் வாழவைப்பேன் என்ற திரைப்படம் வந்திருக்கிறது, அதில் ஒருவன் நன்றாக நடித்திருக்கிறான் போய் பார் என்று சொல்லியிருக்கிறார்.அதில் ரஜினிகாந்த் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.சிவாஜிதான் ஹிரோ.காமராஜர் பக்தராக இருந்த என் தந்தை அப்படியாக ரஜினி ரசிகராக மாறுகிறார்.1980யில் என் தந்தைக்கு திருமணம்.அதுவரை இருந்த சிறிய அளவிலான அரசியல் ஈடுபாடும் அதன் பின் இல்லாமலானது.எனக்கு நினைவு தெரிந்து விழுப்புரம் , விருத்தாசலம், கடலூர் , சிதம்பரம் என்ற பல ஊர்களுக்கு ரஜினி திரைப்படம் வெளியாகும் முதல் நாள் முதல் அல்லது இரண்டாவது காட்சிக்கு நாங்கள் சென்றிருக்கிறோம்.தொண்ணூறுகளுக்கு பிறகு சிறிது சிறிதாக அது குறைந்தது.ஆனால் பாபா படம் வரை என் தந்தையும் திரைப்படங்களை பார்த்தார்.அதன்பின் அவர் திரையரங்களுக்கு செல்வதில்லை.இப்போது அவர் ரஜினி ரசிகராகவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.அந்த வகையில் கே.ஹரிஹரன் சொல்வதை ஒரளவு ஏற்க முடிகிறது.

ஒரு முறை ஆம்பூரில் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன்.என் நண்பனின் பெரியப்பா காவி வேஷ்டி கட்டி பெரிய ருத்திராட்ச மாலை அணிந்துகொண்டு சாய்வு நாற்காலியில் செளகரியமாக அமர்ந்து முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.அவருடைய நண்பர் அவரை பார்க்க வந்திருந்தார்.இருவரும் முள்ளும் மலரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.நானும் பார்த்தேன்.அப்போது அந்த நண்பர் அந்த வயோதிகரிடம் இந்த மாதிரி திரைப்படங்களில் நடித்ததால்தான் இவரை மக்கள் ஏற்றார்கள் என்றார்.இதுவும் முக்கியமான தரப்புதான்.

ரஜினிகாந்த் 1975யில் பாலசந்தர் மூலமாக அறிமுகமாகிறார்.அவர் திரைப்படக்கல்லூரியில் நடிப்புத்துறையில் பயிற்சி பெற்றவர்.தொடர்ந்து அவர்கள், மூன்று முடிச்சு என்று பாலசந்தர் படங்களில் ஒப்பந்தமாகிறார்.பூவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் கதாநாயகனாகிறார். இந்த காலத்தில் அவருக்கு பல்வேறு அகச்சிக்கல்கள் ஏற்படுகிறது.சட்டென்று நிறைய பணம் , ஒரே நேரத்தில் ஏகப்பட்ட படங்கள், அலைச்சல், தனிமை என்று அவர் சிதறுகிறார்.சில காலம் சிகிச்சையும் பெறுகிறார்.அபிலாஷ் புருஸ் லீ பற்றி எழுதிய புத்தகத்தில் லீ எப்படி தன் வெற்றியால் முற்றிலுமாக சிதறுகிறார் என்று எழுதுகிறார்.கிட்டத்தட்ட அதனோடு ரஜினிகாந்தையும் ஒப்பிடலாம்.ஆனால் ரஜினி மீள்கிறார்.ஒரு பத்திரிக்கையாளர் ரஜினி பற்றி சமீபத்தில் எழுதியிருந்தார்.1980களில் அவருடைய திருமணத்திற்கு முன்பே அவர் ஒரளவு நிலையானவராக மாறியிருந்தார் என்கிறார்.பேச்சில் எப்போதும் ரமணரை பற்றி குறிப்பிட்டுயிருக்கிறார்.நாம் அதைப்பற்றி பேசுவோமே என்று பத்திரிக்கையாளரிடம் சொல்கிறார்.அதற்கு அவர் அதையெல்லாம் பிரசுரித்தால் யாரும் வாசிக்கமாட்டார்கள் என்கிறார்.

தர்மயுத்தம் அவர் கதாநாயகனாக நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற படம்.1979ஆம் ஆண்டு முள்ளும் மலரும் வெளியானது.ஒரு நல்ல நடிகர் என்ற எண்ணத்தை அவர் பெறுகிறார்.1980யில்  ஜானி,முரட்டுகாளை, பில்லா போன்ற படங்களில் நடிக்கிறார்.அவர் சூப்பர் ஸ்டாராக ஆகிறார்.1975யிலிருந்து 85வரையான பத்துவருடங்களுக்குள் அவர் நூறு படங்கள் நடித்திருக்கிறார்.அதன்பின் இந்த முப்பது வருடங்களில் அவர் ஐம்பது படங்கள்தான் நடித்திருக்கிறார்.அவர் என்பதுகளிலிருந்து தொண்ணூறுகள்வரையான காலத்தில் நடித்த பல வெற்றி படங்கள் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்தவை.பில்லா, தீ, மிஸ்டர் பாரத் போன்ற படங்கள் எல்லாமே இந்தியில் வெற்றி பெற்று பின்னர் தமிழில் வந்தவை.அவருடைய கதைப்படங்கள் பெரும்பாலும் இந்த காலத்தில் வந்தவைதான்.முள்ளும் மலரும்,ஜானி,கை கொடுத்த கை, ஆறிலிருந்து அறுபது வரை, தம்பிக்கு எந்த ஊரு, தில்லுமுல்லு, குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் எல்லாமே கதைப் படங்கள்.இதில் அவர் கதையை தீர்மானிப்பவராக இல்லை.இந்த படங்களில் பொது சரடாகவும் எதுவும் பெரிதாக இல்லை.ஒரே பொது சரடு என்றால் அது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது தட்டிக்கேட்பவர்,பெண்கள் பின்னால் சுற்றாதவர், எளிய குடும்பத்தில் பிறந்தவர் போன்றவை.இவற்றை ஒரளவு விஜயகாந்தும் பிற்காலத்தில் செய்தார்.ஆக, ரஜினி இந்த காலத்தில் நடித்தவை முழுக்க வெகுஜன படங்கள் அல்லது கதைப்படங்கள் என்ற அளவிலேயே இருந்தன.

ஆனால் தொண்ணூருகளுக்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை பார்க்க முடியும்.அவர் ஏழையாக பிறப்பார்.அவர் தன் பிறப்பின் மூலமாகவோ உழைப்பின் மூலமாகவோ மந்திரத்தின் மூலமாகவோ மிகப்பெரிய பணக்காரராக , அதிகாரம் கொண்டவராக மாறுவார்.ஆனால் இறுதியில் அந்த பணத்தை, அதிகாரத்தை விட்டுவிட்டு எளிய மனிதராக பற்றற்ற நிலையில் வாழவிரும்புவார்.தாய், நண்பன் தவிர்த்த பிற உறவுகள் மீது ஒரு பற்றற்ற மனநிலை அவருக்குள் இருக்கும்.பணக்காரன், உழைப்பாளி, முத்து, வீரா, பாட்ஷா, பாபா, லிங்கா என்று எந்த திரைப்படத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த சட்டகம் அதிலிருக்கும்.

எஜமான் திரைப்படம் முடிந்து வள்ளி படத்தின் திரைக்கதையை இளையராஜாவிடம் சொன்ன போது , இளையராஜா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஒரு இயக்குனர் போல கதை சொன்னதை கேட்டு வியந்ததாக அவரே ஒரு மேடையில் சொன்னார்.அப்போது அவர் ரஜினியிடம் இனி உங்கள் திரைப்படங்களில் கதையை நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.இளையராஜா சொன்னதால் ரஜினிகாந்த் அப்படி செய்தார் என்று சொல்ல முடியாது, ஆனால் தொண்ணூறுகளுக்கு பிறகு அநேகமாக எல்லா திரைப்படங்களிலும் கதையை அவரை முடிவு செய்திருக்கிறார்.யார் இயக்க வேண்டும் யார் தயாரிக்க வேண்டும் என்ற விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவராக மாறியிருக்கிறார்.இதன் மூலமாக கதையில் தான் விரும்பக்கூடிய ஒரு சட்டகம் இருப்பதாக பார்த்துக்கொண்டார்.இந்த சட்டகம் கிட்டத்தட்ட ரஜினிகாந்த் தன் வாழ்க்கையை பற்றி தானே விரும்பும் ஒரு பார்வைதான்.அவர் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்.அவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கிறது, பெரிய நடிகராகிறார், ஆனால் அதன் மீது அவருக்கு பற்றோ, மகிழ்ச்சியோ இல்லை.திரையில் ஒடும் பிம்பங்களுக்கும் தொலைக்காட்சிக்கும் சம்மந்தமில்லை என்பதுபோல தன் வாழ்வில் தான் பற்றற்று இருக்கிறேன் என்பது போன்ற ஒரு சித்திரத்தை அவர் உண்மையிலேயே நம்புகிறார்.இதில் உண்மையில்லாமல் இல்லை.சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன் பால்ய கால நண்பர்களை பார்க்க வந்திருக்கிறார் ரஜினிகாந்த்.அப்போது அவர் வந்திருந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டம் கூடிவிட்டது.செய்திதாளில் அடுத்தநாள் செய்தியும் வந்தது.இதில் உள்ள விஷயம் தன்னை ரஜினிகாந்தாக அல்லாமல் சிவாஜிராவாக மட்டுமே அறிந்த தன் பால்ய கால நண்பர்களோடு .நேரம் செலவழிக்க அவர் விரும்புகிறார்.ஏதோ ஒரு வகையில் அவர் இந்த நடிகர் என்ற வளையத்திலிருந்து தப்பித்து வெளியே சென்று சில காலம் இருக்க விரும்புகிறார்.அவருடைய இமயமலை பயணம் போன்ற விஷயங்களுக்கு பின்னால் ஆன்மிகம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த ரஜினிகாந்திலிருந்து தப்பித்து போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதே நேரத்தில் தான் தன் திரைத்துறையில் அடைந்த இடத்தை விடவும் அவருக்கு மனமில்லை.லிங்கா வெற்றி படம் என்றோ தோல்வி படம் என்றோ சொல்ல முடியாது.ஆனால் பெரிய வெற்றி இல்லை.இப்போது அவர் நிச்சயம் அடுத்த படம் செய்வார்.ஏனேனில் ஒரு வெற்றிப்படம்தான் தன் அதுவரையான படங்களின் கடைசிப்படமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.அதன்மூலமாக திரைத்துறையில் தன் இடத்தை அவர் பற்றிக்கொள்ள விரும்புகிறார்.

ரஜினிகாந்தின் பிற்கால திரைப்படங்களான சிவாஜியில் கூட இந்த சட்டகம் ஒரளவு இருக்கிறது.பாபா திரைப்படம் அநேகமாக ரஜினிகாந்த் பார்வையில் அவருடைய சுயசரிதை.அவர் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொள்கிறார் என்று தோன்றுகிறது.அவர் தெய்வீக அம்சங்கள் கொண்ட பிறவி.தன் சூழலில் கெட்ட நண்பர்களோடு ஏற்படும் தோழமையால் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்.பின்னர் அவருக்கு மந்திரங்கள் கற்றுத்தரப்படுகின்றன.அவர் அதிகாரத்தின் அருகில் செல்கிறார்.அந்த அதிகாரத்தை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் மக்களுக்காக பயன்படுத்த விரும்புகிறார்.தான் நேரடியாக அதிகாரத்திற்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை.ஒரு நல்ல மனிதரை அதிகாரத்திற்கு கொண்டுவருவதாலும் அதை செய்ய முடியும் என்று நினைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மந்திரம் என்பதற்கு பதிலாக சினிமா என்று மாற்றினால் அது அநேகமாக ரஜினியின் கதை.ஆனால் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வில்லை.யாரும் யாருக்கும் தீய பழக்கங்களையோ நல்ல பழக்கங்களையோ கற்றுத்தர முடியாது.ஒரளவுக்கு வற்புறுத்தலாம்.ஆனால் அதை பழக்கமாக மாற்றிக்கொள்வது அந்த தனிப்பட்ட மனிதரை பொறுத்த விஷயம்.நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.

சமீபத்தில் சாபு சிரிலின் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன்.அப்போது பேட்டி எடுத்தவர் சாபு சிரிலிடம் ரஜினிகாந்த் பற்றி ஏதாவது சொல்லச்சொன்னார்.அதற்கு சிரில் ரஜினிகாந்தை பொறுத்தவரை இந்த பிரபஞ்சமே அவரது வெற்றிக்காக பாடுபடுகிறது என்றுதான் தோன்றுகிறது என்றார்.

கே.ஹரிஹரன் சொல்வதில் உண்மை இருக்கிறது.அந்த காலகட்டத்தில் இளைஞர்களின் மத்தியிலிருந்த ஒரு வித கிளர்ச்சி(Rebel) மனநிலைக்கு ரஜினியின் பிம்பம் பொருத்தமாக இருந்திருக்கலாம்.அவர்கள் ரஜினியோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.அது ஒரு முக்கிய விஷயம்.இரண்டாவது காரணம் அவர் கதைப்படங்களில் நடித்ததும் தன்னை ஒரு நல்ல நடிகர் என்று நிரூபித்ததும்.மூன்றாவது அவருடைய இயல்பான உடல்மொழி.ஒரு நடிகரின் உடல்மொழிதான் அவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.No Man’s Land என்ற திரைப்படத்தில் நடித்த  Branko Duric என்ற நடிகரின் நடிப்பை பார்த்த போது சட்டென்று ரஜினியின் ஞாபகம் வந்தது.அந்த நடிகரின் நடிப்பு வசீகரமாக இருந்தது.கமலஹாசனின் உடல்மொழி தமிழ் வெகுமக்களுக்கு முற்றிலும் அந்நியமாக இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.Wild strawberries படத்தில் நடித்த இங்கிரட் துலின் என்ற நடிகையின் உடல்மொழி நம்மை அபாராமாக வசீகரிக்கிறது.அப்படியொரு அசாதாதரமாண நடிப்பும் உடல்மொழியும் நம்மை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.இன்றைய நடிகர்களில் தனுஷ் வெற்றி பெறுவதறகு பின்னால் அந்த உடல்மொழி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மேலே சொன்ன மூன்று விஷயங்களிலும் இல்லாத வேறொரு விஷயமும் ரஜினிகாந்த் விஷயத்தில் இருக்கிறது.அதைத்தான் சாபு சிரில் சொல்லியிருக்கிறார்.அதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அதிருஷ்டம்.திருஷ்டம் என்றால் பார்ப்பது, தெரிவது.அதிர்ஷடம் என்றால் தெரியாதது,அறியாதது.அந்த வகையில் ரஜினியின் வெற்றிக்கு பின்னால் இந்த அதிர்ஷடம் என்ற விஷயமும் இருக்கிறது.

ரஜினிகாந்த் கே.பாலசந்தரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் அடுத்த ஐம்பது வருடங்களுக்கு பிறகு தான் நடித்த திரைப்படங்களில் ராகவேந்திரா, பாட்ஷா , எந்திரன் போன்ற படங்கள் பார்க்கப்படும் என்றார்.ஆனால் உண்மையில் அடுத்த ஐம்பது வருடங்கள் கழித்து அவரின் முள்ளும் மலரும், ஜானி , தில்லுமுல்லு போன்ற படங்கள்தான் நிறைய பார்க்கப்படும் என்று தோன்றுகிறது.


பாவனைகள்


இந்த வாரம் தந்தி டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர் ருத்ரன் மனநலம் குறித்த நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.நல்ல நிகழ்ச்சி.ருத்ரன் நன்றாக பேசினார்.எனக்கு அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த போது சில எண்ணங்கள் தோன்றியது.ஒரு பெண் தன் கணவரை காரணம் இல்லாமல் மிக கடுமையாக திட்டுகிறேன் என்றார்.அவர் மீது சந்தேகம் வருகிறது என்றும் ஆனால் அது தேவையற்ற சந்தேகம் என்று தனக்கு தெரிந்தே அவ்வாறு செய்கிறேன் என்றும் சொன்னார்.வேறொரு பெண் தன் கணவர் தன்னை இந்த வேலையை செய்து முடிக்க வில்லையா என்பது போன்ற சாதாரண கேள்விகளை கேட்டால் கூட தன்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை , மிக ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறேன் என்றார்.முதல் பெண் நான் இப்படி நடந்து கொள்வது எனக்கு தவறு என்று தெரிகிறது. பிள்ளைகளும் வளர்ந்துவிட்டார்கள், அப்படி இருக்கையில் இது போல தவறாக சந்தேகிக்கும் தொனியில் நடந்து கொள்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்.தன்னுடைய தாய் தான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே இறந்துவிட்டதாகவும் அப்போது தன் வீட்டுக்கு சித்தியாக வந்தவரின் வருகை தன்னை பாதித்தாகவும் அவர் சொல்ல முயன்றார்.அதற்குள் ருத்ரன் நீங்கள் சித்தியை எல்லாம் இதற்குள் இழுக்காதீர்கள், இது ஒரு சாதாரண விஷயம் என்று சில அறிவுரைகள் சொன்னார்.

தன்னுடைய சித்தி தவறான வழியில் வீட்டுக்குள் வந்தவர் என்றும் அதைப்போன்ற சில பெண்கள் தன் கணவருடன் பணிபுரியலாம் என்றும் அந்தப் பெண்ணுக்கு தோன்றியிருக்கலாம்.அப்படியான ஒரு முடிச்சை தான் அவர் போட விரும்பினார் என்று எனக்கு தோன்றியது.எப்படியும் இருக்கலாம்.ஒரு ஆண் நேயர் அழைத்து தனக்கு வயதாகி வருவதாகவும் திருமணம் நடக்கவில்லை என்றும் மனச்சோர்வு அதிகரித்து இருப்பதாகவும் வருந்தினார்.எந்த பெண்னை பார்த்தாலும் இந்தப் பெண் நமக்கு சரியாக வரமாட்டார் என்ற எண்ணம் தோன்றி விடுவதாகவும் சொன்னார்.தான் ஒரு பெண்னை காதலித்ததாகவும் அந்தப் பெண் ஒரு ஐம்பது வயது நிரம்பிய ஆணுடன் நட்பு வைத்திருப்பதாகவும் சொன்னார்.அவரே தொடர்ந்து நட்பாக பழகுவது ஒன்றும் தவறில்லைதான் ஆனால் எனக்கு ஏனோ அதை ஏற்றுக்கொள்ள தெரியவில்லை என்றார்.ருத்ரன் அந்த நேயரின் பிரச்சனைக்கு தன்னமிக்கையின்மையே முக்கிய காரணம் என்றார்.எனக்கு ருத்ரன் சொன்னது பிடித்திருந்தது.

மனக்குழப்பங்கள் , சோர்வு அல்லது மனநலம் சார்ந்த வேறு பிரச்சனைகள் வரும் போது மனநல மருத்துவரை நாடுவது நல்ல செயல்தான்.எனக்கு ஒரு விஷயம் தான் குழப்பமாக இருக்கிறது.இந்த மேலே சொன்ன மூன்று பேரும் தங்கள் கருத்துகளை மிக நிதானமாக தெளிவாக ருத்ரனிடம் சொன்னார்கள்.அதிலும் அந்த இரு பெண்கள் மிக தெளிவாக பேசினார்கள்.அவர்கள் பேசுவதை கேட்கும் போது நமக்கு கூட இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களே என்ற எண்ணம் வரும்.இதில் ஒரு பொறி இருக்கிறது.நாம் நமது சிந்தனைகளை மொழியாக்கி நம்மிடமே சில முறை சொல்லி ஒரு தொனியை உருவாக்கித்தான் பிறரிடம் சொல்கிறோம்.நானும் இந்த கட்டுரையில் ஒரு தொனியை உருவாக்குகிறேன்.நாம் மொழி கொண்டு செய்யும் எதிலுமே அப்படி ஒரு தொனி இருக்கத்தான் செய்யும்.ஆனால் மனநல பிரச்சனைகள் நம்முடையவை.நாம் மட்டுமே அறிந்தவை.அதை பிறரிடம் சொல்லும் போது நாம் வேண்டுமென்றே ஒரு பாவனையை உருவாக்குகிறோம்.எனக்கு அந்த இரு பெண்கள் பேசுவதை பார்க்கும் போது அதில் மிகப்பெரிய அளவில் பாவனை இருப்பதாக தோன்றியது.”நான் நல்ல பெண், நான் செய்வது சரியான செயல் இல்லை, அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் இது தொடர்வதை நான் விரும்பவில்லை” -இந்த பாவனை அவர்களின் பேச்சில் இருக்கிறது.ஆனால் அப்பட்டமாக அதை பார்த்தால் அந்தப் பெண் தன் கணவர் மீது சந்தேகப்படுகிறார்.மற்றொரு பெண் தன் கணவர் தன்மீது செலுத்தும் அதிகாரத்தை சகித்து கொள்ள விரும்பாதவராக இருக்கிறார்.இது என்னுடைய பார்வை.அது ஒரு வேளை உண்மையாக இருந்தாலும் அதை அப்படியே அப்பட்டமாக அவர்கள் ஏற்க மாட்டார்கள்.நம் மனம் நாம் விரும்பும் வகையில் ஒரு சித்திரத்தை உருவாக்கும்.அதை நாம் ஏற்போம்.பின்பு அதை மட்டுமே உண்மை என நம்புவோம்.

அந்த ஆண் நேயர் தான் காதலித்த பெண் ஐம்பது வயது ஆணுடன் பழகுவது நெருடலாக இருக்கிறது என்றும் ஆனால் அப்படி நெருடலாக இருப்பது தவறு என்று புரிகிறது என்றும் சொன்னார்.இந்திய குடும்ப சூழலில் வளர்ந்த ஒரு ஆணுக்கு தான் காதலிக்கும் பெண் இன்னொரு ஆணுடன் நட்பாகவே பழகினாலும் தவறாக தோன்றுவதற்கான வாய்ப்புதான் நிறைய இருக்கிறது.அது இயல்பு.அவர் தன் நெருடலை ஒதுக்கிவிட்டுத்தான் அந்த பெண்னை காதலிக்க வேண்டும் என்றில்லை.அந்தப் பெண்ணிடம் சொல்லிப்பார்க்கலாம்.அந்தப்பெண்ணுக்கு எது முக்கியம் என்று அந்தப் பெண் முடிவு செய்யலாம்.இப்படியான நெருடல்களுடன் கூடிய துணை தனக்கு தேவையில்லை என்று அந்தப் பெண் முடிவு செய்தால் அந்தப் பெண்னை விலகலாம்.நம்மை வருத்திக்கொண்டு நாம் பிறருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டியதில்லை.நாம் முக்கியம் என்பவர்கள் நாம் முக்கியமாக கருதுவதை பரிசீலிப்பார்கள்.ஏது முக்கியம் யார் முக்கியம் என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது.அவரும் ஒரு பாவனையைத்தான் முன்வைக்கிறார்.தான் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட ஆண்தான் என்றும் ஆனால் இந்த நெருடலை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் புலம்பினார்.உறவுகளில் முற்போக்கு பிற்போக்கெல்லாம் இல்லை.நமக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுதான் பிரதானம்.மற்றவை எல்லாம் பின்னே தானே வரும்.பிடிக்கவில்லையா விட்டுவிடலாம்.பிரச்சனை பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பதில் இல்லை.பிரச்சனை பாவனைகளில் இருக்கிறது.நாம் வேறு ஏதோ ஒன்றாக நம்மை காட்டிக்கொள்ள விரும்புவதால் உருவாகும் பிரச்சனைகள் இவை.நம்மால் மிக சாதாரணமாக அலட்டிக்கொள்ளாமல் ஒரு உறவில் இருக்க முடியும் என்றால் அந்த உறவு நமக்கு பிடித்திருக்கிறது என்று பொருள்.அதற்கு அப்பால் உறவுகளை பற்றி நிறைய குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.திருமணம் போன்ற சட்டப்படியான உறவுக்குள் சென்றுவிட்டால் பிரிவதை பற்றி நிறைய யோசிக்கலாம்.ஏனேனில் அந்த உறவை விட்டு விலகினாலும் மற்றொரு உறவைத்தான் பெறப்போகிறோம்.அது நல்ல உறவாக இருக்கும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை.என் நண்பன் ஒருவனுக்கு சமீபத்தில் விவாகம் ரத்தாகிவிட்டது.என் நண்பன் எவ்வளவு மன்றாடியும் அந்தப்பெண் விவாகரத்தை பெற்ற திருவேன் என்ற உறுதியுடன் இருந்தார்.அந்தப் பெண்ணுக்கு என் நண்பன் மீது என்ன புகார்.என் நண்பனுக்கு ஹோட்டலில் ஒழுங்காக சாப்பிட தெரியவில்லை.ஒரு நிகழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.லெளகீக சாமர்த்தியம் போதவில்லை என்பது போன்ற சில புகார்கள்.நான் என் நண்பனிடம் இவை உன்னுடைய பிரச்சனைகள் இல்லை, அந்தப் பெண்ணின் பிரச்சனைகள் என்றேன்.அவன் சோர்வாக சிரித்தான்.அந்தப்பெண் ஒரு வேளை ஹோட்டலில் நன்றாக சாப்பிடக்கூடிய , கூட்டத்தில் நன்றாக நடந்துகொள்ள தெரிந்த ஒரு ஆணை பிற்காலத்தில் தேர்தெடுக்கலாம்.அவருக்கு நாம் நம் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

நாம் நம் அகச்சிக்கல்களை பிறரிடம் சொல்லும் போது அதில் ஏதோ ஒரு பாவனை கலந்துவிடுகிறது என்றுதான் தோன்றுகிறது.நாம் அதைச்சொல்லும் போதே எதிர்தரப்பில் இருப்பவர்கள் இதைக்குறித்து என்ன கருதுவார்கள் என்ற எண்ணத்தோடே தான் நாம் வாக்கியங்களையும்,காரணங்களையும்,தொனியையும் உருவாக்குகிறோம்.பாவனைகளை கலைந்து நம்மால் ஒரு விஷயத்தை சொல்ல முடியுமா என்று சிந்திக்கலாம். சாத்தியமே இல்லைதான்.ஆனால் மனநல மருத்துவர்கள் போன்றவர்களிடம் பேசும் போது அதை ஒரளவுக்கு அப்பட்டமாக சொல்ல முடியுமா என்று பார்க்கலாம்.ஏனேனில் நாம் அவர்களிடம் பாவனையோடு பேசி அடையப்போவது ஒன்றுமில்லை.

என் நண்பன் ஒருவன் நல்ல வேலையில் இருந்தான்.இப்போது வேலையை விட்டுவிட்டான்.கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிறது.எந்த வேலைக்கும் போகவில்லை.தனக்கு ஏதோ மிகப்பெரிய அகச்சிக்கல் இருப்பதாவும் அதனாலேயே தன்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் சொன்னான்.இரண்டு மூன்று மனநல மருத்துவர்களை பார்த்தான்.பின்னர் அந்த மனநல மருத்துவர்கள் தன்னுடைய பிரச்சனையை சுத்தமாக புரிந்துகொள்ளாமல் ஏதோ கவனச்சிதறல் என்ற வகையில் மாத்திரைகளும் பயிற்சியும் அளிக்கிறார்கள் என்றான்.தனக்கு இருக்கும் சிக்கல் மிகப்பெரியது என்றும் அதை குணப்படுத்தினால் மட்டுமே தன்னால் சரியாக வேலைக்கு செல்ல முடியும் என்று புலம்பினான்.என்னால் மிக நிச்சயமாக சொல்ல முடியும், அவனுக்கு எந்த மனச்சிக்கலும் இல்லை.அவனுக்கு வேலையில் பிறரை எதிர்கொள்வதில் பயம் இருக்கிறது, கூச்சம் இருக்கிறது.வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க பொறுப்பு கூடுவது இயல்பு.அது அவனுக்கு அச்சத்தை உருவாக்கியது.வேலையை விட்டுவிட்டான்.அவ்வளவுதான் பிரச்சனை.இதை அவனிடம் சொன்னால் மிக பயங்கரமாக கோபப்படுகிறான்.அவனுக்கு புரிய வைக்கவே முடியவில்லை.அவனாக ஏதோ ஒரு தருணத்தில் அதை அறிந்து கொள்வதை தவிர அவனுக்கு வேறு விடியல் இல்லை.பாவனைகள் பொல்லாதவை.என் நண்பனுக்கு சொன்ன அதே பிரச்சனைகள் சிறிய அளவில் எனக்கும் இருந்தன.நான் ஒரு கட்டத்தில் முடிவு செய்தேன்.நான் கோழை.அது தான் சிக்கல்.பெருநகரம் X சிறுநகரம், லட்சியவாதம் X நுகர்வு, விவசாயம் X தொழில், விஞ்ஞானம் X இயற்கை,காந்தி X மார்க்ஸ்,மாசானோபு X ஐன்ஸ்டீன் இவை அல்ல என் சிக்கல் என்று.அதற்கு பின் வேலைக்கு செல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.அந்தப் பெண் தன் கணவரை தான் சந்தேப்படுவது தவறு, தன் கணவர் தன்னை சந்தேகப்பட்டால் தான் எந்தளவுக்கு புண்படுவோம் என்று சிந்தித்துபார்த்தால் இந்த பிரச்சனையை வேறு வகையில் அவரால் அணுகமுடியும்.

அப்படியான புரிதலுடன் அதை அப்பட்டமாக ஒரு மனநல மருத்துவரிடம் சொல்ல முடியும் என்றால் நமக்கான சிகிச்சையும் எளிதாகும்.சரி இதை ஒரு மனநல மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாதா என்று கேள்வி உருவாகலாம்.நிச்சயம் எந்த மனநல மருத்துவருக்கும் அது தெரியும்.ஆனால் பாவனைகளுக்கு பின்னால் உள்ள அப்பட்டமான உண்மை என்ன என்பதை அவர்களாலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது என்றே நிணைக்கிறேன்.