2018


2018 பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லாத மகிழ்ச்சியான வருடமாக அமைந்தது.இரண்டு வீடுகள் மாறினேன்.மகள் தாரா பிறந்தாள்.மகள் பிறக்க வேண்டும் என்று நானும் மனைவி லக்ஷ்மியும் ஆசைப்பட்டோம்.அப்படியே நிகழ்ந்தது.கெளதம் செய்யும் சேட்டைகளை பொறுத்துக்கொள்பவர் மிக விரைவிலேயே கெளதமர் ஆகிவிடுவார்.லேப்டாப் , மொபைல் போன் என்று உடைபடாத பொருள்கள் இல்லை.அவனை சமாளிப்பதே ஒரு நாளின் முக்கிய விஷயமாக இந்த வருடத்தில் இருந்தது.வேலையில் சின்னச்சின்ன சிக்கலகள்.அடுத்த வருடம் இனிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.வேலை சார்ந்தும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.

ஒரளவு நன்றாகவே இந்த வருடத்தில் வாசித்தேன்.குறைவாக எழுதினேன்.மணல் வீடு ஹரிகிருஷ்ணன் கேட்டதால் இரண்டு சிறுகதைகளை எழுத முடிந்தது.பிம்பம் என்ற சிறுகதை முதலில் அவருக்கு அனுப்பினேன்.அவருக்கு பிடிக்கவில்லை.பின்னர் காலச்சுவடுக்கு அனுப்பினேன்.பதிலில்லை.வலைதளத்தில் பிரசுரித்துவிட்டேன்.பிம்பம் சிறுகதை என்னளவில் முக்கிய முயற்சி.அதில் 30 வருடங்களுக்கு மேலான காலத்தை எழுதியிருக்கிறேன்.நான் பெரும்பாலும் தன்னிலையில் லீனியரான கதைகளையே எழுதியிருக்கிறேன்.இது படர்க்கையில் முன் பின் என்று ஒரு தந்தைக்கும் மகனுக்குமான தொடர்ச்சியான கதையாக எழுதினேன்.தினறல் இருந்தது.ஆனால் இனி அது போல எழுதும் கதைகளை எளிதாக எழுத முடியும் என்று நினைக்கிறேன்.பிளவு என்ற மற்றொரு சிறுகதையை மணல் வீடு இதழுக்கு அனுப்பினேன்.வரும் ஜனவரி இதழில் பிரசுரமாகும்.2019யில் என் முதல் சிறுகதை தொகுப்பை கொண்டு வருவேன்.ஒரு குறும்படம் எடுக்கும் ஆவல் இருக்கிறது.

கார்ல் யுங்கின் சில புத்தகங்களை வாசித்தது இந்த வருடத்தின் முக்கியமான விஷயம்.அது பல கதவுகளை திறந்து விட்டது.அவரை தொடர்ந்து வாசிக்க வேண்டும்.தமிழில் நாம் இலக்கியம் சார்ந்து வாசிக்கும் பல கருத்துகள் கார்ல் யுங் வழியாக பெற்றவையாக இருக்க வேண்டும்.ஓ.ரா.ந.கிருஷ்ணன்  எழுதிய Buddhism and Spinoza வாசித்தேன்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.தொடர்ந்து அவரை வாசிக்கிறேன்.தத்துவத்திற்கான இணைய இதழ் ஒன்றை துவங்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.அதைப்பற்றி கிருஷ்ணனிடம் பேசினேன்.ஒரிரு அடிகள் எடுத்து வைத்துவிட்டு நிறுத்திவிட்டேன்.அடுத்த வருடத்தில் அதை செயல்படுத்த இன்னும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.முதல் இதழை கொண்டு வருவதுதான் சிக்கல்.அடுத்தடுத்து கொண்டுவருவது எளிதாகிவிடும்.

ஒரிரு கவிதைகள் எழுதினேன்.கட்டுரைகள் எழுதினாலும் சிறப்பான கட்டுரை என்று எதுவும் இல்லை.தொடர்ந்து நிறைய வாசிக்க வேண்டும்.எழுத வேண்டும்.அதைத் தவிர்த்த பெரிய கனவுகள் எதுவும் இல்லை.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




ஜாதி மாற்று திருமணங்களும் மேல்நிலையாக்கமும்




இன்று பெருநகரங்களில் ஓரளவு ஜாதி மாற்று திருமணங்கள் நிகழ்கின்றன.சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் கூட நிகழ்கிறது.இந்த திருமணங்கள் நிகழ்வதால் ஜாதிய கட்டமைப்பு எந்தளவு மாறியிருக்கிறது.பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தரவுகளை சரி பார்க்காமலே சொல்ல முடியும்.ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளும் போது அவர்கள் உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களாக மாறுகிறார்கள்.அவர்கள் ஜாதியற்றவர்களாக மாறுவதில்லை.பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் ஆணோ பெண்ணோ அவர்களின் பெற்றோரிடமிருந்து மனதளவில் விலகுகிறார்கள்.அவர்களின் ஜாதியிலிருந்து அதன் சடங்குகளிலிருந்து அதன் உணவு பழக்கவழக்கங்களிலிருந்து அதன் குல தெய்வங்களிலிருந்து விலகுகிறார்கள்.அவர்கள் அதுவரை இருந்த ஜாதியிலிருந்து திருமணம் செய்துகொண்ட உயர்த்தப்பட்ட ஜாதிக்காரராக மாறுகிறார்கள்.இதை அவர்கள் விரும்பாமல் செய்யவில்லை.இதை அவர்கள் விரும்பியே செய்கிறார்கள்.அவர்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அருவெருக்கதக்க ஒன்றை சட்டையை கழற்றி வீசி விட்டு செல்வது போலவே செய்கிறார்கள்.

இடைநிலை ஜாதியை சேர்ந்தவர் பிராமண ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்யும் போது இடைநிலை சாதிக்காரர் பிராமணர் ஆகிறார்.அவர் அந்த ஜாதி மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் குழந்தைகள் பிறந்த பின்னர் இது நிகழ்கிறது.அந்தக் குழந்தைகளுக்கான சடங்குகள் அவர்கள் இருவரில் யார் உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் அடிப்படையிலேயே நிகழ்கிறது.இதே போல தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் இடைநிலை ஜாதியை சேர்ந்தவரையோ அல்லது பிராமணர் போன்ற உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரையோ திருமணம் செய்யும் போதும் இது நடக்கிறது.அங்கும் அவர்கள் எது உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் தெய்வங்கள் , சடங்குகள், உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஏற்கிறார்கள்.உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரின் உறவினர்கள் , பெற்றோர்கள் ஆகியோருடன்தான் அந்த தம்பதியினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரின் பெற்றோர்கள் , உறவினர்கள் , சுற்றோர் சிறிது சிறிதாக அந்தத் தம்பதிகளின் வீட்டிற்கு வருவது , பண்டிகைகளில் கலந்து கொள்வது ஆகியவை குறைந்து விடுகிறது.சின்னச் சின்ன அவமானங்களை அவர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள்.அவர்கள் சிறிது சிறிதாக அந்தக் தம்பதிகளிடமிருந்து விலகிவிடுகிறார்கள்.இது மெல்ல யாரும் சரியாக கவனிக்காத வண்ணம் நிகழ்ந்து முடிந்து விடுகிறது.

இறுதியில் ஜாதி நிலைக்கொள்கிறது.அவர்களில் யார் உயர்த்தப்பட்ட ஜாதியனரோ அவர்களின் ஜாதியே அவர்களின் குழந்தைகளுக்கு செல்கிறது.பள்ளிகளில் அவர்கள் இதை பதிவு செய்வார்கள் என்று சொல்லவில்லை.அவர்கள் ஜாதி அற்றவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளக்கூடும். ஆனால் அவர்களின் தினசரிகளில் அது வந்துவிடுகிறது.அதை அவர்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம்.நமக்கு இயல்பாகவே ஜாதிய உயர்வு தாழ்வும் அதன் படிநிலைகளும் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.ஜாதி மாறி திருமணம் செய்யும் போது உயர்த்தப்பட்ட ஜாதிக்கு மாறும் ஒரு விஷயமாக இது முடிந்துவிடுகிறது.ஜாதிய கட்டமைப்பு அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.Status Quo.பெருநகரங்களில் இன்று ஜாதி மாற்று திருமணங்கள் நிறையவே நிகழ்கின்றது.கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மிக குறைந்த எண்ணிக்கையில் நிகழ்கிறது.உண்மையில் ஜாதி மாற்று திருமணங்களில் மேல்நிலையாக்கம் மட்டுமே நிகழ்கிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அவன் நான் யார் நான் யார் என்று கேட்டுக் கொள்கிறான்.அவனது தந்தையை இவர்தான் என் தந்தை என்று சொல்ல அவன் கூச்சப்படுகிறான்.இறுதியில் இவர்தான் என் தந்தை என்று சபையினர் முன் சொல்கிறான்.அவன் இது தான் என் தந்தை ,இது தான் ஊர், இது தான் என் ஜாதி,  இது தான் என் உணவு பழக்கவழக்கங்கள் , நான் படிக்க வந்திருக்கிறேன் , படிப்பேன் என்று அறிவிக்கிறான். மேல்நிலையாக்கத்தை
நோக்கி அவன் செல்லவில்லை.நான் நான் இருக்கும் இடத்திலிருந்தும் நீங்கள் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வந்து தேநீர் அருந்தலாம் என்கிறான்.அதற்கு நான் நீங்கள் ஆக வேண்டியதில்லை என்கிறான்.அவன் மேல்நிலையாக்கத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறான்.நான் நானாக இருந்து கொண்டே எனக்கானவற்றை பெற்றுக்கொள்கிறேன் என்கிறான்.அவன் தன்ணுணர்வு கொள்கிறான்.தன் சுயத்தை கண்டுகொள்கிறான்.ஜாதி மாற்று திருமணங்களில் வெற்றி அவை ஜாதி மாற்று திருமணங்களாக மட்டும் இருப்பதில் இல்லை.அதன் பிறகு அதில் எது உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் அடையாளங்களை இருவருமே நிராகரிப்பது.அல்லது இரண்டையும் சமமாக பார்ப்பது.அந்தத் தம்பதியினர் எந்த ஜாதியை தேர்வு செய்கின்றனர் என்பதை சமூக மதிப்பீடு முடிவு செய்கிறது.அந்த சமூக மதிப்பீட்டை உடைத்து உங்களுக்கான விழுமியங்களை உருவாக்கிக்கொள்ளா விட்டால் ஜாதி மாற்று திருமணங்களால் பெரிய பலன் ஒன்றுமில்லை.

மேல்நிலையாக்கத்தின் மூலம் ஒருவர் நான் ஜாதியை வெறுக்கிறேன், என் பெற்றோரை வெறுக்கிறேன், என் குலதெய்வத்தை , உணவு பழக்கவழக்கங்களை வெறுக்கிறேன் என்று அறிவிக்கிறார்.அவர் மற்றொருவரின் ஜாதியை உயர்ந்த ஜாதி என்று ஏற்கிறார்.உண்மையில் அவர் அந்த சமூக மதிப்பீட்டை ஏற்கிறார்.ஜாதிய ஏற்றத்தாழ்வை ஏற்கிறார்.அவர்களின் பெற்றோர் தன் பெற்றோரை விட சிறந்தவர்கள் என்கிறார்.அவர்களின் உணவு பழக்கங்கள் , தினசரி செயல்பாடுகள் உயர்ந்தவை என்கிறார்.அவர் சுயம் அற்றவர் ஆகிறார்.அவர் தொலைந்து போய்விடுகிறார்.இது உண்மையில் மிகவும் பரிதாபத்திற்குரியது.

Photograph : https://www.deviantart.com/m-lucia/art/dialogue-144416688

எஸ்.ராமகிருஷ்ணன்






2004யில் திருவல்லிக்கேணி மேன்சனில் இருந்த போது தொடர்ந்து விகடன் வாங்கினேன்.அப்போது அதில் இரண்டு முக்கியமான தொடர் கட்டுரைகள் வந்தது.ஒன்று பாலாவின் இவன் தான் பாலா என்ற தொடர்.மற்றது துணையெழுத்து.இரண்டும் பிடித்திருந்தது.அதன் பிறகு 2005யில் உயிர்மை பத்திரிக்கையை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகே இருக்கும் பேப்பர் கடையில் பார்த்து வாங்கினேன்.அதிலும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிக்கொண்டிருந்தார்.அப்போது உயிர்மையின் உள்ளடக்கம் வித்யாசமாக இருந்தது.இப்போது போல இல்லை.ஐன்ஸ்டின் ஒரு அறிவுத் திருடரா என்ற கட்டுரை வந்திருத்தது.ரவி ஸ்ரீனிவாஸ் எழுதியிருந்தார்.புகைப்படம் பதிப்புரிமை உலகமயமாதல் என்று சே குவேராவின் புகைப்படம் சார்ந்து ஒரு கட்டுரை வந்திருந்தது.இந்த கட்டுரைகளின் தலைப்புகள் தான் முகப்பு பக்கங்களாக இருந்தன.இன்று உயிர்மை முற்றிலும் மாறிவிட்டது.அப்போது தொடர்ச்சியாக எஸ்.ராமிகிருஷ்ணன், ஜெயமோகன் (காய்தல் உவர்த்தல்!) , சாரு நிவேதிதா எழுதிக்கொண்டிருந்தார்கள்.ஷாஜி உயிர்மையில் இசை பற்றி எழுதிய கட்டுரைகளின் வழி புகழ் பெற்றார்.ஆரம்பத்தில் அவருடைய கட்டுரைகளை ஜெயமோகன் மொழிபெயர்த்தார்.ஆனால் பத்திரிக்கையில் தமிழில் ஜெ என்று இருக்கும்.ஜெயமோகன் என்று இருக்காது.

2005 அல்லது 2006யில் உயிர்மையில் நெடுங்குருதி நாவல் பற்றிய குறிப்பு பார்த்தேன்.அபிராமபுரத்தில் இருந்த மனுஷ்யபுத்திரன் வீட்டிற்கு சென்று புத்தகம் வாங்கினேன்.அந்த நாவல் நான் வாசித்த அற்புதமான நாவல்களில் ஒன்று.நாவல் வாசித்து முடித்த அன்று தொண்டையில் ஏதோ வலி ஏற்பட்டு மன அழுத்தம் கொண்டு அழுதது நினைவில் இருக்கிறது.எஸ்.ராமகிருஷ்ணனின் மிக முக்கியமான நாவலாக நெடுங்குருதி இருக்கும்.அவரின் மொத்த வாழ்க்கையும் தேடலும் அந்த நாவலில் இருப்பதாக எனக்கு தோன்றும்.அந்த கிராமத்து மக்கள் குற்றப் பரம்பரையினராக அடையாளம் காணப்பட்டிருப்பார்கள்.அந்த கிராமம் ஒரு சுழுல் போல அந்த மனிதர்களை அந்த கிராமம் நோக்கி மறுபடி மறுபடி இழுத்து வரும்.ரத்னாவதி இறக்கும் போது இந்த உலகில் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவாறு தற்கொலை செய்து கொள்வாள்.

அவருடைய உறுபசி அதிக எழுத்துப்பிழைகளுடன் பிரசுரமானது.ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதோ ஒரு லட்சியவாதம் இளைஞர்களை கவர்கிறது.ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர்கள் என்னவாகுகிறார்கள்.ஒரு வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் அக்கறை உதிரி மனிதர்கள் பற்றிய அக்கறை. அவருடயை ஜன்னலை தட்டாதே அஷ்ரப் சிறுகதை அப்படியான உதிரி மனிதனை பற்றியதுதான்.
சம்பத் திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் முடிந்து போன காலத்தில் சிதறி போகிறான்.பின்தொடரும் நிழலின் குரல் , அபிலாஷ் எழுதிய ரசிகன் ஆகிய நாவல்களோடு இணைத்து வாசித்து பார்க்க வேண்டிய நாவல் உறுபசி.சம்பத்துக்கும் , ரசிகனின் சாதிக்குக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது.

யாமம் நாவல் சென்னையை மையப்படுத்தியது.மிளகு வரலாற்றை மாற்றிவிடுகிறது.இந்த நாவலை வாசித்துவிட்டு பாரீஸ் கார்னரில் இருக்கும் ஆர்மேனியன் சர்ச்சை சென்று பார்த்தேன்.இந்த நாவலில் ஏதோ ஒரு வகையில் எல்லோரும் பிறழ்ந்து விடுகிறார்கள்.இதுவும் உதிரி மனிதர்களை பற்றிய நாவல் தான்.இந்த நாவலின் மொழி நம்மை மிகவும் வசீகரிக்கக்கூடியது.

அதன் பின் அவருடைய நாவல்களை வாசிக்கவில்லை.வாசிக்க தோன்றவில்லை.அவருடைய அபுனைவு மிகவும் பலவீனமானது.அவரால் தன் எண்ணங்களை தொகுத்து தர்க்கப்படுத்தி ஏன் இவர் முக்கியமான எழுத்தாளர் , ஏன் இல்லை என்று சொல்ல முடியாது.சில நெகிழ்ச்சியான வரிகள்.சில தகவல்கள்.அவரால் ஒரு போதும் நல்ல கட்டுரையை எழுத முடிந்ததில்லை.அவரின் நல்ல கட்டுரை தொகுப்பு துணையெழுத்து மட்டும் தான்.விழித்திருப்பவனின் இரவு வாசித்திருக்கிறேன்.ஆனால் அதன் வழி நீங்கள் தகவல்களை மட்டுமே பெற முடியும்.சில்வியா பிளாத் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்கு ஜெயமோகன் வாசகர் கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது.அதில் ஜெயமோகன் எப்படி பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி அவர்களை பிரபலப்படுத்துகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து இலக்கிய கூட்டங்களில் பேசுபவர்.அவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.பேசியிருக்கிறார்.ஆனால் அவை பெரும்பாலும் நெகிழ்ச்சியை மட்டுமே முதன்மைபடுத்துபவை.நீங்கள் அந்தக் கட்டுரைகளின் வழி தஸ்தாயெவ்ஸ்கி பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியாது.ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க தூண்டுபவை.Pakistan என்பதை bakistan என்று உச்சரிப்பார்.

ஜெயமோகன் போல ஒரு வாசகர் வட்டத்தை அவர் உருவாக்கவில்லை.அல்லது அப்படி எதுவும் உருவாகவில்லை.குறும்படங்கள் , தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்திருக்கிறார்.நானும் பல ஆண்டுகளாக வடபழனியிலும் சாலிக்கிராமத்திலும் வசித்திருந்தாலும் அவரை சென்று சந்தித்ததில்லை.அபிலாஷ் அவர் எப்படி அட்டவனை போட்டு தன் ஒரு நாளை வகுத்திருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.தன் நேரத்தை மிகவும் கவனமாக செலவு செய்பவர்.இல்லை என்றால் இத்தனை தொடர்ச்சியாக எழுதியிருக்க முடியாது.அவருக்கு திரைப்படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக இருக்க விழைவது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம்.உறவினர்கள் மத்தியில் மட்டுமே எத்தனை அவமானங்கள்.அத்தனையும் மீறி முழு நேர எழுத்தாளராக இருந்து வாழ்வில் வெற்றி பெற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன்.விருதுநகர் அவரின் சொந்த ஊர் என்றாலும் சாலிக்கிராமத்தில் ஒரு சொந்த வீடு வாங்கியது அவருக்கு மிகுந்த நிறைவை அளித்தது என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

சாகித்திய அகாடமி ஒரு நாவலை முன்னிட்டு விருது அளித்தாலும் அது அந்த எழுத்தாளரின் அதுவரையான எழுத்து செயல்பாட்டை அங்கீகரிக்கும் ஒன்றாகவே பார்க்க முடியும்.எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இந்து என்ற அடையாளம்



நான் கடவுள் படத்தில் வரும் காட்சி


சமீபத்திய ப்ரண்ட்லைன் இதழில் காசியில் காசி விஸ்வாநாதர் ஆலயத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மிக துரிதமாக நிகழ்ந்து வருவதை பற்றி கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறது.சில நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டிடங்கள் , கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன.இந்த பணியின் நோக்கம் கங்கையிலிருந்து காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடையில் எந்த ஆக்கிரமிப்புகளும் இருக்கக்கூடாது என்பதாகும்.மத்தியிலும் , உத்தர் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது.இடிக்கப்படுவதில் கோயில்கள் இருக்கிறது.அப்படியென்றால் இவர்களுக்கு எந்தளவு இறை நம்பிக்கை உள்ளது.இந்த செயல் திட்டத்தின் உள்நோக்கம் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் மசூதியை மையப்படுத்தியதாக இருக்குமோ என்ற ஊகமும் பதற்றமும் எழுந்துள்ளது.

உண்மையில் பாரதிய ஜனதா கட்சியிலும் ராஷ்டிரிய ஸ்வயம்ஸேவக் சங்கிலும் , விஷ்ய இந்து பரிஷத்திலும், பிற இந்துத்துவ அமைப்புகளிலும் இருப்பவர்கள் எந்தளவு இந்துக்கள்.இவர்கள் எந்தளவு இறை நம்பிக்கையாளர்கள்.இவர்கள் எந்தளவு இறைவனின் மீது நம்பிக்கை வைத்து பாவ புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள்.இவை முக்கியமான கேள்விகள்.

இடது சாரி அமைப்புகள் வர்க்க அடிப்படையில் பாட்டாளி மக்களை ஒருங்கிணைத்து பாட்டாளி சர்வாதிகாரம் என்ற அரசு இயந்திரத்தை உருவாக்க முனைகிறது.உலக பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்று அது கூக்குரலிடுகிறது.பாட்டாளிகள் அனைவரும் ஒன்று என்று அது உலக பாட்டாளிகளை ஒரே ஜனத்திரளாக ஒர் அமைப்பாக ஒர் இயக்கமாக மாற்ற முற்படுகிறது.அதற்காக சமூகத்தை முதலாளி X தொழிலாளி என்ற வர்க்க அடிப்படையில் பிரிக்கிறது.பாட்டாளியின் உழைப்பே முதலாளியின் லாபமாக மாறுகிறது.பாட்டாளிகள் ஒன்றிணைந்து மூலதனத்தை கைப்பற்றும் போது வர்க்க வேறுபாடுகள் அற்ற ஆன்மிகமான சமூகம் உருவாகும் என்று அது நம்புகிறது.அத்தகைய சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் இருக்காது.இது பாட்டாளிகள் ஒன்றிணையாமல் நிகழாது.இதனால் தொழிற்சங்கங்கள் உருவானது.கம்யூனிச அரசாங்கங்கள்  உலகில் தோன்றியது. ஆனால் இன்று நவீன முதலாளித்துவத்தில் தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. இடதுசாரிகள் பாட்டாளிகளை இனி அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்று சொல்லி ஒருங்கிணைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது.ஏனேனில் இன்று சுரண்டப்படும் தொழிலாளி நாளை சுரண்டும் முதலாளியாகலாம்.அதற்கான வாசல்கள் திறந்திருக்கிறது என்று அவன் உண்மையிலேயே நம்புகிறான்.இன்று அதிகாரத்தை ஒன்று முன்வாசல் வழி அடையலாம் அல்லது பின்வாசல் வழி அடையலாம்.இரண்டிலும் வெற்றி அடையும் வரைதான் போராட்டம்.வெற்றி பெற்ற பின் முன்வாசல் வழி வந்தவர் பின் வாசல் வழி வந்தவர் வரவேற்பரையில் அமர்ந்து தேநீர் அருந்துகின்றனர்.

இந்த இடதுசாரி இயக்கங்களின் மறுபக்கம் வலதுசாரி அமைப்புகள்.இவர்களுக்கு மதத்தின் மீதும் மொழியின் மீதும் சாதியின் மீதும் இனத்தின் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஆனால் இதை கொண்டு பண்பாட்டு தளத்தில் ஜனத்திரளை ஒருங்கிணைக்க முடியும் என்பதை வலதுசாரி இயக்கங்கள் தொடர்ச்சியாக கண்டு உணர்ந்து பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளன.இதன் தலைவர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொள்வார்கள்.தங்கள் பிள்ளைகளுக்கு வேறு சாதியில் மதத்தில் திருமணம் செய்து வைப்பார்கள்.பண்பாட்டு தளத்தில் மக்களை ஒருங்கிணைப்பது , எதிரியை கட்டமைப்பது , வெறுப்பை உருவாக்குவது  அதிகாரத்தை கைப்பற்றுவது இது வலதுசாரி இயக்கங்களின் பணி.இன்று
ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதனால் உருவாக்கப்பட்ட இயக்கங்களும் இந்து என்ற அடையாளத்தை கொண்டு இதை செய்கிறது.இவர்களுக்கு இந்து சமயம் மீதோ அதன் உண்மையான வரலாற்றின் மீதோ அக்கறை இல்லை.இவர்கள் ஒரு புனைவான வரலாற்றை உருவாக்குகிறார்கள்.அதில் ஒரு எதிரி கட்டமைக்கப்படுகிறான்.அந்த எதிரியால் தாங்கள் பிரிதிநித்துவப்படுத்தும் ஜனத்திரள் வரலாற்றில் எந்தளவு பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறது.பின்னர் நிகழ் காலத்தில் இந்த எதிரி தொடர்ந்து வளர்ந்து வருவதால் தாங்கள் பிரிதிநித்துவப்படுத்தும் ஜனத்திரள் தங்களின் பண்பாட்டு அடையாளங்களை தொலைத்துவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறது.அவர்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது.அவர்களுக்கு அந்த வலதுசாரி அமைப்பு ஒர் அடையாளத்தை அளிக்கிறது.மக்கள் பண்பாட்டு தளத்தில் ஒருங்கிணைகிறார்கள்.அந்த வலதுசாரி அமைப்பு அதிகாரத்தை அடைகிறது.

ஒரு முறை அபிலாஷூடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் தொண்ணூறுகளின் உலகமயமாக்கல் கொள்கைக்கு பின்னர்தான் பாரதிய ஜனதா வளர்ந்தது என்றார்.அது மிக முக்கியமான அவதானிப்பு.உலகமயமாக்கல் கிராமத்து , சிறுநகரத்து மனிதனை பெருநகருக்கு அழைத்து வருகிறது.பெருநகரத்து மனிதன் அடையாளமற்றவன்.அந்நியன்.அவன் இந்திய அளவிலான ஒர் அடையாளத்தை ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் வழி  பெறுகிறான்.அவன் தமிழனற்ற இந்தியன்.கிராம தெய்வங்கள் அற்ற பெருந் தெய்வங்களை கொண்ட இந்தியன்.ஹிந்தியை ஏற்கும் இந்தியன்.மொழி வழி மாநிலங்கள் என்பவை நிர்வாகத்தின் தேவை கருதிதானே தவிர அதில் உண்மையான கூட்டாட்சி அமைப்பு என்று எதுவும் இல்லை என்று கருதுபவன்.மொழி வேறுபாடுகள் அற்று சாதி வேறுபாடுகள் அற்று ஒரு மதத்தின் கீழ் ஒருங்கிணைப்படும் ஜனத்திரள்  பெரும் ஜனசக்தி.அந்த ஜன சக்தி அதிகாரத்தை அடைவதற்கான வழி.பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது.

பாரதிய ஜனதா கட்சி பெருநகரத்தின் தனிமனிதனின் கட்சி.பெருநகரத்தின் உயர்த்தப்பட்ட இந்துக்கள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியை ஆதிரிக்கிறார்கள்.அவர்கள் கிராம தெய்வங்கள் அற்றவர்கள்.மொழி அற்றவர்கள்.வேர் அற்றவர்கள்.ஜாதி அற்றவர்களும் கூட.அவர்களின் அடையாளம் , அரண் இந்துத்துவ அமைப்புகள்.உண்மையில் இன்று நமது மொழி , பண்பாட்டு வழக்கங்கள் , கிராம பொருளாதாரம் , கிராம தெய்வங்கள்  , நாட்டார் கலைகள் அழிந்து போவது தொழிற்மயத்தை முன்வைக்கும் உலகமயமாக்கல் கொள்கையால்தான்.அது வேறு எந்த எதிரியாலும் இல்லை.ஆனால் ஒரு பக்கம் இந்து என்ற அடையாளத்தை முன்வைத்தவாறு புஷ்பக விமானம் அன்றே இருந்தது என்று பிதற்றிக்கொண்டு மறுபக்கம் கிராம பொருளாதாரத்தை முழுமையாக வேரறுத்து வருகிறோம்.

வலதுசாரி அமைப்புகள் இந்துக்கள் அல்ல.அவர்கள் இந்துத்துவம் என்ற கோட்பாட்டை முன்வைத்து பண்பாட்டு தளத்தில் மக்களை ஒருங்கிணைத்து அதிகாரத்தை அடைய விரும்பும் அமைப்பு ,அவ்வளவுதான்.தொடர்ந்து கல்வி மாநில அரசின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிகள் தமிழக அரசின் பாடத்திட்டத்திலிருந்து மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.மாநிலங்களின் உரிமைகள் சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு தமிழகத்தில் இருப்பது போல ஒரு அதிகாரமற்ற அரசை இந்திய அளவில் உருவாக்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.முற்றிலும் தொழிற்மயமான பெருநகரங்களை கொண்டு சிறு நகரங்களில் உள்ள தொழில்கள் நசுக்கப்பட்டு கிராம பொருளாதாரம் முழுமையாக இல்லாமல் செய்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது மட்டுமே ஒருவனுக்கான வாழ்வாதாரம் என்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது.இதனால் பண்பாட்டு தளத்தில் முற்றிலும் வேர்கள் அற்ற மனிதர்கள் முளைத்து வருவார்கள்.இந்த வேர்கள் அற்ற மனிதர்களுக்கு பண்பாட்டு தளத்தில் அடையாளத்தை அளிக்கும் இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும்.அவர்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த படி இருப்பார்கள்.

இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் உயர்த்தப்பட்ட பெருநகரத்தை சேர்ந்த குழுந்தைகள் மட்டும் மருத்துவம் , பொறியியல் போன்ற படிப்புகளை படித்தால் போதும் என்று நினைக்கிறது.கிராம சிறு நகரத்து பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அதிகாரத்தை அடையும் மக்களுக்கு சேவகர்களாக இருந்து செத்து மடிய வேண்டியதுதான்.நீட் போன்ற இந்திய அளவிலான மருத்துவ தேர்வுக்கு உண்மையான நோக்கம் என்ன.இவை கிராம சிறு நகரத்து பிள்ளைகளை மருத்துவம் படிக்க விடாமல் செய்கிறது.இது பிற படிப்புகளுக்கும் தொடரும்.உயர்த்தப்பட்ட பெருநகரத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்தை அடைவார்கள்.அவர்கள் அதிகாரத்தை உருவாக்குவர்கள்.பிறர் வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக மாற்றம் உண்மையில் மாநில கட்சிகளின் கூட்டமைப்பு.அது உருவாக வேண்டும்.பண்பாட்டு தளத்தில் பெருநகர் சார்ந்த மாற்று கலாச்சார வெளிகள் உருவாக வேண்டும்.கிராம  சிறு நகர தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.கல்வி முழுக்க முழுக்க மாநில உரிமைக்கு மாற வேண்டும்.இவை நிகழ வேண்டும். மண் பயனுற வேண்டும்.