நான் கொடுத்த ஸ்கிரிப்ட்டை
படித்தீர்களா என்று கேட்டேன்.ஆம் அல்லது இல்லை என்ற எதையும் புரிந்துகொள்ள இயலாத வகையில் தன் தலையை ஆட்டினார்
சார்வாகன்.புகையிலையை டீபாயிலிருந்த ஆஷ் ட்ரேயில் தட்டினார்.சாக்லெட் பேப்பரை திறந்து புகையிலையை பைப்பில் கொட்டினார்.சாக்லெட் பேப்பரை மடித்து தன் மஞ்சள் நிற டீசர்ட்டின் பாக்கெட்டுக்குள் வைத்தார்.மரத்தாலான லைய்ட்டரை எடுத்து பைப்பை பற்ற வைத்தார்.தன்
தலையை கோதியபடி கால்களை நீட்டி மர நாற்காலியில் வைத்தார்.பைப்பை
எடுத்து புகையை விட்டார்.சாக்லெட்டின் நறுமணம் அறை முழுதும் பரவியது.நீண்டிருந்த அவருடைய வெண்தாடியை நீவி விட்டுக்கொண்டார்.காற்றுச் சீரமைப்பியின் உறுமலான ஒசை கேட்டுக்கொண்டிருந்தது.மகாராஜபுரம் சந்தானத்தின் பாரதியார் பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தார்.அவரது மெல்லிய உடல் லேசாக நடுங்குவது போல எனக்குப் பட்டது.மர நாற்காலியிலிருந்த ஆணியில் அவரின் ட்ராக் பேண்ட்டின் நுணி மாட்டிக் கொண்டது.இழுத்த போது லேசாக காலில் சிராய்த்தது.காலை மடித்து யாருக்கோ
தேய்ப்பது போல தேய்த்துக்கொண்டார்.ஒரு இயந்திரம் போல அவரது இடதுகை
பைப்பை வாயில் வைப்பதும் புகையை விடுவதுமாக இருந்தது.
உங்கள் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டை
படித்தேன் என்று நடுங்கும் குரலில் சொன்னார்.அவரின் கழுத்தில் சின்னதாக கட்டி இருப்பது தெரிந்தது.நான் நடிக்கிறேன்.எனக்கு இங்மர் பெர்க்மேனின் வைல்ட்
ஸ்ட்ராபெர்ரீஸ் பிடிக்கவில்லை.கிட்டத்தட்ட உங்கள் கதையும் அந்த
தளத்தில் தான் பயணிக்கிறது என்று சொல்லி நிறுத்திக்கொண்டார்.ஒருவன்
வயோதிக்கத்தில் தன் பால்ய காலம்,இளமைக் காலம்,மத்திய வயது, தனது காதல்கள்,தோல்விகள்,வெற்றிகள்,குற்றங்கள்,நெகிழ்வான
தருணங்கள் இவற்றை நினைத்துப் பார்ப்பது இயல்பு தானே என்றேன்.நான்
நினைப்பதில்லை என்றார்.நினைப்பதே இல்லையா என்று வாய் பிளந்தேன்.அந்த நினைவுகள் வருவதுண்டு.ஆனால் நான் நினைவுகளை மீட்டுவதில்லை.நான் இங்கு சிந்திப்பதற்காக வரவில்லை.எனக்கு நெகிழ தெரியாது
என்றார்.எனக்கு என்ன பேசுவது என்றே புரிய இல்லை.சோர்வாக இருந்தது.பாரதியார் பாடல் முடிந்திருந்தது.ஹரிபிரஸாத் செளராஸியாவின் புல்லாங்குழலை ஒலிக்கவிட்டார்.நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொள்ளவில்லை.அவர் எங்கோ இருந்தார்.இந்த ஒசை உங்களை நெகிழ வைப்பதில்லையா என்றேன்.அவர் என்னைப்
பார்த்து,தலையசைத்து,நான் முயல்கிறேன்,ஆனால் முடிவதில்லை என்றார்.இசை என்னை நினைவுகளில் ஆழ்த்துவதில்லை
, எனக்கு அதனுடன் பயணம் செய்ய பிடிக்கும் என்றார்.பிறகு ஏன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறீர்கள் என்று புரியவில்லை
என்றேன்.நம் மக்களுக்கு பிடிக்கும் என்றார்.எனக்கு எழுந்து செல்லலாம் என்று தோன்றியது.ஆனால் உங்களுக்கு
பிடிக்காமல் ஒன்றாமல் எப்படி நடிக்க முடியும் என்று கேட்டேன்.எனக்கு நடிக்கத் தெரியும் என்று சொல்லி புகையிலையை ஆஷ் ட்ரேயில் தட்டினார்.
அவரின் குளிர் அறையை விட்டு
வந்ததால் உடல் அனலாக இருந்தது.வண்டியை கிளப்பினேன்.இவர் தான் படத்தின் மைய கதாபாத்திரம்.இதில் வைல்ட் ஸ்ட்ராபெர்ரீஸின் தாக்கம் இருக்கிறதா,தெரியவில்லை.ஆனால் எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது.ஏழேட்டு வருடங்களுக்கு
முன் கார்முகில் அமைப்பினர் நடத்திய சோசைட்டியில் பார்த்திருக்கிறேன்.அந்தப் படம் முடிந்த பின் அனந்தன் என்பவர் அதைப்பற்றி நிறைய நேரம் பேசினார்.அவர் கவிஞர் என்று ரஃபீக் சொன்னது நினைவில் இருக்கிறது. அந்த வயோதிகரின் இறுக்கத்தை பற்றி பேசினார் அனந்தன்.கொல்ட்னெஸ்
என்ற வார்த்தையை பிரயோகித்தார்.அவரின் மகனிடமும் தாயிடமும் அதே
இறுக்கம் இருப்பதை பற்றி பேசினார். அவர் அந்த நெகிழ்வை பற்றி
நிறைய நேரம் பேசினார்.ஒரு மனிதனால் நெகிழாமலே இருக்க முடியுமா.எனக்கு ஒன்றும் புரியவில்லை.இவரை வைத்து படத்தை இயக்குவதா,படத்தை இயக்குவதே சரிதானா,படத்தில் எதாவது பிரச்சனையா
என்று குழப்பமாக இருந்தது.வண்டி நின்றுவிட்டது.வண்டி ரீசர்வில் இருப்பது அப்போதுதான் உறைத்தது.தள்ளிக்கொண்டே
அறை வந்து சேர்ந்தேன்.அறைக்குள் நுழைந்து மின்விசிறியை போட்டு
நாற்காலியில் உட்கார்ந்தேன்.புழுக்கமாக இருந்தது.மறுபடியும் வைல்ட் ஸ்ட்ராபெர்ரீஸ் படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.வேண்டாம் என்றும் தோன்றியது.
ஆர்.கேவை அழைத்தேன்.ஒரு
ஸ்டீல் நிறுவனத்தின் விளம்பர படத்தின் ஒளிப்பதிவுக்கு வந்திருப்பதாக சொன்னார்.நமது திரைப்படத்தின் படப்படிப்பு தளங்களை முடிவு செய்ய ஆந்திராவுக்கு பயணிக்க
வேண்டியிருக்கும் என்றேன்.எந்த ஊர் என்று கேட்டார்.அப்படி எதையும் திட்டமிடவில்லை.ராயலசீமா பகுதிகளை பார்க்கலாம்
என்றேன்.ஆர்.கேவிடம் சார்வாகன் சொன்னதை
சொல்ல வேண்டும் என்று தோன்றியது.பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று
நினைத்துக்கொண்டேன்.சரி என்று சொல்லி வைத்துவிட்டேன்.
ஞாயிற்றுக்கிழமை காலையில்
ஆங்கில நாடகம் ஒன்றை பார்க்க அதில் நடிக்கும் நண்பன் அலையண்ஸ் ஃபிரான்சேஸூக்கு அழைத்திருந்தான்.எப்போதும் நாடக அரங்குகளில் பார்க்கும்
அதே மனிதர்கள்.அதே போன்ற உடைகள்.அரங்கின்
விளக்குகள் அணைக்கப்பட்டு கதாபாத்திரங்களின் மீது வெளிச்சம் விழுந்தது.சில வசனங்களின் போது அரங்கம் சிரித்தது.ஊஊஊ என்று கத்தியது.சிலர் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஆண் பெண் உறவை மையப்படுத்தி பெண்ணின் நிராகரிப்பு ஒருவனின் சுய மதிப்பை அழிப்பதில்லை
என்பதை போதித்தது நாடகம்.நாடகம் முடிந்ததும் அதைக்குறித்த எந்த
உரையாடலும் இல்லாமல் முடிந்தது ஆசுவாசமாக இருந்தது.
ஆண் பெண் உறவு இவ்வளவு எளிமையானதாக
இருந்தால் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்க தேவையில்லை என்று தோன்றியது.கேலரி போன்று அமைக்கப்பட்ட படிக்கட்டுகளில்
அமர்ந்து சில பெண்களும் ஆண்களும் பேசிக்கொண்டிருந்தார்கள்.யாருக்கோ
பிறந்தநாள்.கேக் வெட்டி முகங்களில் பூசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.ஒரு நாடக நடிகரை ஒரு தொலைக்காட்சி பேட்டி எடுத்துக்கொண்டிருந்தது.நாடகத்திற்காக உயர் ஆராய்ச்சியை விட்டுவிட்டேன் என்று தீவிரமான தொனியில்
சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது வெளிவந்த படத்தில்
சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.வெளியில் வந்து கல்லூரிச் சாலையில் நடந்தேன்.ஒரு டீக்கடைக்குள்
பிஸ்கெட்டுகளை எடுத்துக் கொண்டு டீ சொல்லி அமர்ந்தேன்.நாடகத்தில்
நடித்திருந்த நண்பன் நரேனும் கதாநாயகியின் தந்தையாக நடித்திருந்த வயதானவரும் வந்தார்கள்.எதிர்பார்த்தது போலவே நரேன் நாடகம் குறித்து கேட்டான்.நடிப்பு,ஒளி அமைப்பு,அரங்கு அமைப்பு,உடைகள்,வசன உச்சரிப்பு எல்லாமே நாடகத்திலிருந்து மிகவும்
அந்நியப்படுத்தியது என்றேன்.ஆண் பெண் உறவை தவிர நமக்கு பேச ஒன்றுமில்லையா
என்று கேட்டேன்.நரேன் தன் நீளமான தலைமூடியை இருபக்கமும் நீவிவிட்டான்.தாடியை தடவிக்கொண்டான்.அவன் ஒன்றும் சொல்லவில்லை.இருவருக்கும் டீ எடுத்துவந்தான் பையன்.தனக்கு ஒரு சமோசா
வேண்டும் என்று கேட்டார் அந்த வயோதிகர்.என்னைப் பார்த்து புன்னகைத்து
தன் பெயர் ஹரிதம் என்றார்.ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்திருந்தார்.ஜோல்னா பையை தொங்கவிட்டிருந்தார்.அந்த வயோதிகரிடம் என்னை
அறிமுகப்படுத்தினான் நண்பன்.
நான் கை கொடுத்தேன்.நீங்கள் சொல்வது சரிதான் என்றார்.பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி முடியும் வரை இதுபோன்ற நாடகங்களில் நடிப்பது தவறில்லை
என்று நரேனை பார்த்து ஹரிதம் சொன்னார்.அனைவரும் சிரித்தோம்.நரேன் என்னைப்பற்றி அவரிடம் சொன்னான்.சார்வாகனை தனக்குத்
தெரியும் என்றார்.அவர் இயற்பெயர் வாசுதேவன்.இருவரும் வங்கியில் ஒன்றாக பணிபுரிந்தோம் என்றார்.அவரை
எப்படி பிடித்தீர்கள் என்று கேட்டார்.எண்பதுகளில் வந்த ஒரு தெலுங்குப்
படத்தில் அவர் நடித்திருந்த்தை பார்திருக்கிறேன்.பிடித்திருந்தது.ஏதேர்ச்சையாக வெரைட்டி டேரக்ட்டரியை புரட்டிக்கொண்டிருந்த போது அவரது புகைப்படத்தை
பார்த்தேன்.அவரிடம் பேசினேன் என்றேன்.
ஒரு கிராமத்தின் கதை என்ற
படம் தானே என்று கேட்டார் ஹரிதம்.ஆமாம்,விசித்தரமான மனிதர் என்றேன்.அவருக்கு திருமணம் நடந்ததா என்று கேட்டேன்.ஒன்றில்லை.இரண்டு என்று சொல்லி சிரித்தார் ஹரிதம்.முதலில் அவர்
வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.விவாகரத்தாகிவிட்டது.பின்னர் எங்களோடு வங்கியில் வேலை செய்த பெண் இவரை திருமணம் செய்துக் கொண்டார்.சிறிது காலத்திலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.அவருக்கு
மொத்தம் இரண்டு மகன்கள் , இரண்டு மகள்கள்.ஒரு மகன் விபத்து ஒன்றில் இறந்துவிட்டான்.ஒரு மகள் மனப்பிறழ்வு
அடைந்து சமீபத்தில்தான் இறந்தாள்.மற்ற இருவர் நல்ல வேலையில் திருமணமாகி
நன்றாக இருக்கிறார்கள்.இவருடன் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை.அவருடைய விசித்தரமான ஆளுமை பலரையும் வசீகரிக்கக்கூடியது.ஆனால் நீண்ட காலம் அவருடன் யாரும் நட்பில் உறவில் இருக்க முடியாது.மிகவும் இறுக்கமானவர்.யாரையும் துன்புறுத்தமாட்டார்.யாரையும் சுரண்ட மாட்டார்.ஆனால் அவரால் ஒரு உறவில் இருக்க
முடியாது என்றார்.நாங்கள் வெளியே வந்தோம்.நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டார் ஹரிதம்.லிபர்டி திரையரங்கு அருகில் ஒரு அறை எடுத்து தங்கியிருப்பதாக சொன்னேன்.அவர்கள் இருவரும் மறுபடியும் நாடக அரங்குக்கு சென்றார்கள்.
அறைக்குச் செல்லும் படிக்கட்டுகளில்
யாரோ அமர்ந்திருப்பது போல இருந்தது.ரோகிணி அமர்ந்திருந்தாள்.நான் அவளை கடந்து சென்று அறையை
திறந்தேன்.அவள் அங்கேயே அமர்ந்திருந்தாள்.அவளை போ என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.எதுவும்
சொல்லாமல் அறைக்குள் நுழைந்தேன்.கதவை மூடலாம் என்ற எண்ணம் வந்தது.அப்படியே விட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன்.ரோகிணி
அறையின் வாசலில் வந்து நின்றாள்.நிழலுருவமாக தெரிந்தாள்.உள்ளே வந்து படுக்கையில் அமர்ந்தாள்.மெலிந்திருப்பது
போல தோன்றியது.நான் வாங்கிக் கொடுத்த சந்தன நிறத்திலான சுடிதாரை
அணிந்திருந்தாள்.என்னைப் பார்த்தாள்.நம்
உறவுதான் முடிந்துவிட்டதே என்றேன்.நீதிமன்றத் தீர்ப்பு எதுவும்
எனக்கு வரவில்லையே என்றாள்.நான் உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன்.நீங்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள்.அவள்
கைகளில் கூர்மையான கத்தி இருப்பது போல பட்டது.நான் உங்களை எப்போதும்
காதலிக்கவில்லை.நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருந்தால் நான் பொறுப்பில்லை.நான் உங்களை சுரண்டவில்லை.அவள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க
வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.நான் இனி உங்களை தொடர்பு கொள்ள மாட்டேன்.நாம் ஏற்கனேவே தொடர்பில் இல்லையே என்றேன்.ஆனால் நாம்
கோபத்தில் சண்டையிட்டு பிரிந்துவிட்டோம்.கூர்மையான குரூரமான வார்த்தைகளை
இருவரும் பிரயோகித்தோம்.அவளை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும்
என்ற எண்ணம் வந்தது.தொடர்ந்து உங்களுக்கு என் மீது மதிப்பில்லை.மதிப்பற்ற காதல் நீண்ட நாட்கள் நீடிக்காது என்றாள்.எழுந்து
செல் என்று சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்.ஆனால் அவள் உண்மையில்
எதற்காக வந்திருக்கிறாள் என்றே புரியவில்லை.வயிற்றில் ஒரு வெற்றிடத்தை
உணர்ந்தேன்.பழிவாங்க போகிறாள் என்று தோன்றியது.யாரையோ போனில் அழைத்தாள்.முதுகுத்தண்டு சில்லிட்டது.ஜீன்ஸூம் டீசர்ட்டும் அணிந்து கையில் ஹெல்மேட்டுடன் ஒருவன் அறைக்குள் வந்தான்.நான் இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றாள்.அவன் அவள் அருகில் அமர்ந்தான்.அவன் அவளை பார்த்து சிரித்தான்.நான் உங்களோடு எப்போதும் நட்பில் இருக்கவே பிரியப்படுகிறேன் என்றாள்.ஒரு பெரிய கத்தியை கொண்டு பொறுமையாக அழகாக என்னை பிளந்தாள்.நாங்கள் புறப்படுகிறோம் என்றான் அவன்.அறிமுகப்படுத்தவில்லையே,
இவர் மென்பொருள் நிறுவனத்தில் டேட்டா சயின்டிஸ்டாக பணிபுரிகிறார்.இவரை சந்தித்ததின் மூலம் என் வாழ்வின் அமைதியை அடைந்தேன் என்று படுக்கையிலிருந்து
எழுந்தவாறு சொன்னாள்.நீங்கள் அற்புதமான சிந்தனையாளர்.திரைத்துறையில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றாள்.இருவரும் சிரித்தவாறு கிளம்பி சென்றார்கள்.அவளை ஏன் முன்பே
வெளியே செல்ல சொல்ல இயலவில்லை என்று நினைத்தவாறு படுத்தேன்.என்னால்
அப்படி சொல்ல முடியாது என்பதை அவள் உணர்ந்திருந்தாள் என்பது புரிந்தது.உடல் முழுதும் வலித்தது.இடதுகை பயங்கரமாக குடைந்தது.தூங்க முயன்றேன்.முடியவில்லை.அப்படியே
எழுந்து ஒடிச்சென்று
அவளைப் பிடித்து கத்தியால் குத்தி வயிற்றை கிழிக்க வேண்டும் என்று தோன்றியது.
அவளைப் பிடித்து கத்தியால் குத்தி வயிற்றை கிழிக்க வேண்டும் என்று தோன்றியது.
மாலையின் மஞ்சள் வெளிச்சம்
ஜன்னலில் படர்ந்தது.பெல்ட்டை எடுத்து மின்விசிறியில்
மாட்டி கழுத்தை நுழைத்தேன்.நிறைய வலிக்கும் என்று தோன்றி கீழே இறங்கினேன்.கைப்பேசியை
எடுத்து மின்னஞ்சல்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.எனது ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருப்பதாக
அனுராக் பதில் போட்டிருந்தார்.படத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை அவசியம் செய்வதாக
சொல்லியிருந்தார்.எழுந்து வெளியே வந்து படிக்கட்டுகளில் அமர்ந்தேன்.கீரில் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன்.ஹிரதம்.மேலே படிக்கட்டுகளில் ஏறி வந்தார்.சிநேகமாக புன்னகை செய்தார்.நான் தாம்பரம் சானிடோரியம்
வரை செல்கிறேன்.லிபர்டி அருகே வந்த போது உங்கள் ஞாபகம் வந்தது.வந்தேன் என்றார்.வீடு எப்படி தெரியும் என்று கேட்டேன்.நரேன் சொன்னான்.அறைக்குள் சென்று அவருக்கு ஒரு மடக்கு
நாற்காலியை எடுத்து வந்து வெளியில் வைத்து அவரை அமரச்சென்னேன்.நான் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டேன்.சிதறியிருந்த
என் முகத்தை பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார்.அடகுக்கடையில்
என் தலையை வைத்தால் பத்து லட்சம் தருவார்களாம்.அது எனக்கு பயனுள்ளதாக
இருக்கும் என்று ஒருவள் சொல்லிச் சென்றாள் என்றேன்.புரியவில்லை
என்றார்.சொன்னேன்.அவள் உங்களை துன்புறுத்த
ஏன் அனுமதித்தீர்கள் என்று கேட்டார்.நான் ஒன்றும் சொல்லவில்லை.அவரும் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.நாம் சற்று நடந்து
செல்லலாமே,ஏதேனும் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.இல்லை என்று சொன்னேன்.உணவகம் சென்றோம்.எனக்கு ஆனியன் தோசை சொல்லிவிட்டு தனக்கு காபி என்றார்.சார்வாகன் ஒரு முறை அவரை மிகவும் நச்சரித்த காசாளர் ஒருவரை கத்தியால் குத்தினார்.அதிர்ஷடவசமாக காசாளர் உயிர் தப்பினார்.அதன்பின் அந்த காசாளர் வேறு ஒரு கிளைக்கு மாற்றலாகி சென்று விட்டார்.போலீஸ் கேஸ் ஆகிவிட வாய்ப்பிருந்தது.காசாளரிடம் மன்னிப்பு
கேட்டுவிட்டால் போலீஸ் கேஸ் தரமாட்டார் என்று எல்லோரும் சார்வாகனிடம் சொன்னார்கள்.தந்தால் தரட்டும்.வேலை
போனால் போகட்டும் என்றார் சார்வாகன்.அந்த காசாளர் வழக்கு தொடுக்கவில்லை.வங்கியில் புகாரும் சொல்லவில்லை.நீண்ட விடுப்பு எடுத்தார்.அவர் மன்னிப்பு கேட்காத போதும் நீங்கள் ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று ஒருமுறை
அந்த காசாளரிடம் கேட்டேன்.அவர் பக்கம் நியாயமிருந்தது என்றார்.நம்மை துன்புறுத்துவர்களை , சுரண்டுபவர்களை நாம் தான்
அனுமதிக்கிறோம் என்று தோன்றுகிறது என்று சொல்லி என்னைப் பார்த்து கண்களை சிமட்டினார்
ஹரிதம்.நீங்கள் எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அறிவரை கூறாவிட்டால்
நாம் அடிக்கடி சந்திக்கலாம் என்றேன்.வேகமாக இல்லை என்பது போல
தலையசைத்து ஹரிதம் சிரித்தார்.சார்வாகன் பேசுவதற்கு சுவாரசியமானவர்
இல்லை.ஆனால் அவரைப் பற்றி சுவாரசியமாக பேச முடிகிறது என்றேன்.சிரித்தார்.அவருடன் பழகும் எல்லோருக்குமே அவரைப் பற்றி
சொல்ல ஏதேனும் இருக்கிறது என்று ஆமோதித்தார் ஹரிதம்.
மதியம் எழுந்து நீண்ட நேரம்
என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தேன்.நாளிதழை புரட்டினேன்.முதல்முறையாக சிகரெட்
பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.வைரமுத்துவின் வீட்டை
அடுத்திருந்த தெருவில் இருந்த சார்வாகன் வீட்டிற்கு சென்றேன்.வருவேன் என்று சொல்லியிருக்கவில்லை.கண்ணாடியை அணிந்தவாறு
கதவை திறந்தார்.தூங்கிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது.அவரின் நாற்காலியில் அமர்ந்துவாறு என்னை அமரச் சொன்னார்.தூங்கிங்கொண்டிருந்தீர்களா என்று கேட்டேன்.ஆமாம் என்றார்.தொந்தரவு செய்துவிட்டேனா என்று தயங்கியவாறு கேட்டேன்.தொந்தரவாக தோன்றியிருந்தால் நீங்கள் போய்ட்டு நாளைக்கு வாங்க என்று சொல்லியிருப்பேன்
என்றார்.இப்போது அவரது பேச்சு அதிகம் ஆச்சரியமளிக்கவில்லை.உங்கள் இயற்பெயர் வாசுதேவனா என்றேன்.தலையசைத்தார்.ஒரு கிராமத்தின் கதையில் கூட அந்தப் பெயரை பார்த்தது ஞாபகமிருக்கிறது என்றேன்.எப்போது சார்வாகன் என்று மாற்றிக்கொண்டீர்கள் என்று கேட்டேன்.மாற்றிக் கொள்ளவெல்லாம் இல்லை என்று சொல்லி புகையிலையை பற்றவைத்தார்.யாராவது கூப்பிட்டால் மறுபடியும் நடிக்கலாம் என்று தோன்றியது.வெரைட்டியில் பெயர் கொடுக்கும் போது புதிதாக இருக்கட்டுமே என்று சார்வாகனை
வைத்துக்கொண்டேன் என்று சொல்லியவாறு அருகிலிருந்து இசை சிடிகளை எடுத்து பார்த்தார்.அப்படி ஒரு எழுத்தாளர் கூட இருந்தார் என்றேன்.கேள்வி
பட்டிருக்கிறேன்,கையை நீட்டி ஏதோ யோசித்தவாறு பத்மஸ்ரீ கொடுப்பட்டது
இல்லையா என்றார்.ஆமாம்,அவரின் மருத்துவ
பங்களிப்புக்கு என்றேன்.தலையாட்டியவாறு மதுரை சோமுவின் சிடியை
தேர்தெடுத்தார்.சார்வாகனின் இயற்பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருந்தார்
என்றார்.தெரியும் என்றேன்.வங்கியிலிருந்த
போது தொழிற்சங்க காரணங்களுக்காக சந்தித்திருக்கிறேன்.ஸ்ரீனிவாசன்
உருவாக்கிய மெட்ராஸ் யூத் காயரில் சில காலம் பாடியிருக்கிறேன் என்றார்.ஆச்சரியமாக பார்த்தேன்.சிறுவயதில் ஒரளவு சாஸ்திரீய இசை
கற்றுக்கொண்டேன் என்றார்.
ஒரு கிராமத்தின் கதைக்கு
ஸ்ரீனிவாசனா இசை அமைத்தார் என்று கேட்டேன்.இல்லை.வங்காளி ஒருவர் இசை அமைத்தார்.இடதுகையை பைப்புடன் தலை அருகே வந்து மெதுவாக சுழற்றினார்.பெயரை மீட்க முயன்று தோற்றார்.இயக்குனர்
கூட வங்காளி என்றார்.அது தெரியும் என்று சொல்லி சிரித்தேன்.ஆமாம் அவரை தெரிந்திருப்பதால் தானே என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
என்று சொல்லி அவரும் அநேகமாக முதல்முறை சிரித்தார்.அந்தப் படம்
எனக்கு உண்மையிலேயே பிடித்திருந்தது என்றார்.அவனின் மகன் இறக்கும்
போது அவன் கதறி அழுவதில்லை.அவன் வெறுமன கடவுளை எங்களுக்கு எல்லா
வளங்களையும் கொடு என் இறைஞ்சுகிறான்.இறுதியில் வெறுமன வெறித்து
பார்க்கிறான்.அது தான் சரியான முடிவு என்றார்.நான் ஒன்றும் சொல்லவில்லை.அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டிருந்தார்
என்று தோன்றியது.ஆனால் அடுத்த நிமிடமே எழுந்து மதுரை சோமுவின்
இசை தட்டை ஒலிக்கவிட்டார்.இசைக்கு நீ தெய்வம் என்று சோமு பாடிக்கொண்டிருந்தார்.இசை என்பது இச்சை என்று ஒலித்தது.யாரோ நன்றாக பாக்கு
மென்று பாடுவது போல இருந்தது.
அவர் அதன்பின் எதுவும் பேசவில்லை.எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.நான் ரோகிணி விஷயத்தை இவராக இருந்தால் எப்படி கையாண்டிருப்பார் என்று யோசித்தேன்.நீங்கள் உங்களுடன் பணிபுரிந்த காசாளாரை கத்தியால் குத்தினீர்களாமே என்று கேட்டேன்.அவர் என்னை சட்டென்று திரும்பிப் பார்த்தார்.தலையை அசைத்தவாறு கண்ணாடியை கழற்றினார்.பைப்பை கீழே டீபாயில் வைத்தார்.சாய்வு நாற்காலியில் முழுக்க
சாய்ந்தார்.மறுபடியும் என்னைப் பார்த்தார்.பிறகு எங்கோ பார்த்தார். அவன் நான் பெரும் பித்துடன்
காதலித்த பெண்னை அவன் பக்கம் திருப்பிவிட்டான் என்று கைகளை நீட்டி கத்தினார்.
தலையை ஆட்டினார்.அவரின் கண்கள் கசிந்தது.சில நிமிடங்களில் அவர் கண்களிலிருந்து நீர் கொட்டியது. எனக்கு கேட்காதவாறு தனக்குள் சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டார்.நான் எழுந்து நின்றேன்.அவரின் தோள்களை தொட்டேன்.அவர் என் கரங்களை பற்றிக்கொண்டு மேலும் அழுதார்.நான்
எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.இருமினார்.சோமு பாடிக்கொண்டிருந்தார்.சட்டென்று அழுகையை நிறுத்தினார்
சார்வாகன்.என்னைப் நிமிர்ந்து பார்த்தார்.பற்றிக் கொண்டிருந்த என் கரங்களை உதறினார்.நாற்காலியின்
கைப்பிடியிலிருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தார்.எழுந்து
சென்று முகம் கழவி வந்து அமர்ந்தார்.கண்ணாடியை எடுத்து மாட்டினார்.பைப்பிலிருந்த புகையிலையை எடுத்து ஆஷ் ட்ரேயில் கொட்டிவிட்டு புதிதாக புகையிலையை
ஈட்டு பற்றவைத்தார்.நீண்ட நேரம் இழுத்து புகையை விட்டார்.
(தளம் சிற்றிதழில் வெளியான சிறுகதை)