நீர் வழி படூஉம் புணை
நான் கடவுள் படத்தில் ஒரு காட்சி

எழுத்தாளர் சுஜாதா விகடனில் ஒரு கட்டுரையில் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே என்று எழுதியவர் ஒரு இளைஞராகத்தான் இருந்திருப்பார் என்று எழுதியிருந்தார்.எனது உறவினர் ஒருவருக்கு சோரியாஸிஸ் என்ற சரும நோய் இருக்கிறது.அவரிடம் அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்துக்கொண்டிருந்த போது ஏதோ நான் செஞ்ச கர்மம்(செயல்கள்).அதன் பலன்களை அனுபவிக்கிறேன்.இந்த ஜென்மத்தோடு அந்த பாவக்கணக்கு தீர்ந்துவிட்டால் நல்லதுதான் என்றார்.அவர் தன் நோயிற்கான காரணமாக தன் செயல்களை முன்வைக்கிறார்.பரவலாக நம் சமூகத்தில் அவன் விதி அப்படி அதற்கு நாம என்ன செய்ய முடியும் என்று நோய்வாய்ப்பட்டவர்களை , இள வயதில் இறந்துபோகுவர்களை , தங்களுடைய தவறு என்று எதுவுமே இல்லாமல் பெருந்துன்பத்திற்கு உள்ளாகுபவர்களை பிச்சைகாரர்களை பார்க்கும் போது சொல்லி கடந்து செல்கிறோம்.நாம் அவர்களை கடந்துசெல்ல விரும்புகிறோம், அதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது, விதி என்ற கருத்து நமக்கு அந்த கடந்துசெல்லுதலை எளிதாக்குகிறது.நம்முடைய பிரச்சனைகளையும் நாம் இந்த விதி என்ற கருத்து மூலமாக கடந்துசெல்ல விரும்புகிறோம்.

விதி என்ற கருத்துக்கு மாற்றாக நம் மரபில் ஒரு கருத்து இருக்கிறது.ஊழ்.விதி முற்பிறவியில் செய்த பாவ புண்ணியம் பற்றி பேசும் அதே நேரத்தில் கடவுள் உருவாக்கும் விதியையும் உள்ளடக்கியிருக்கிறது.ஆனால் பெளதிகவாத தரிசனங்கள் விதி என்பதை மறுத்து ஊழ் என்பதை முன்வைக்கிறது.அது கடவுளையும் மறுக்கிறது.தமிழில் அதற்கு சிறந்த உதாரணமாக திகழும் பாடல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடல்தான்.இந்த பாடலை இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலில் ஆஜீவிகமரபு பற்றி சொல்லும் போது குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.

விதி என்பது செயலின் விளைவுகள்(நமது செயல்களின் விளைவுகள் பிரபஞ்ச செயலின் விளைவுகள்) என்ற தளத்தில் நின்று பேசும் போது ஊழ் நியதி குறித்து பேசுகிறது.அதாவது இந்த பிரபஞ்ச இயக்கமும் நம் வாழ்வும் ஒரு பெரிய நியதிக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.இதை யாதும் ஊரே பாடலில் மிக அழகாக பூங்குன்றனார் விளக்குகிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாதென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் அல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே.

இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் அற்புதமான தரிசனம். எல்லாம் நமது ஊரே.அனைவரும் நமது உறவினர்களே. நன்மை தீமை பிறரால் வருவதில்லை.நோதலும் அது தணிதலும் அதுபோன்றதே. மரணம் புதியதல்ல.வாழ்க்கை இனிதென்று மகிழவும் தேவையில்லை துயரமானது என்று துயரப்படவும் தேவையில்லை.ஊழ் குறித்த அழகான உவமை இதில் வருகிறது.மின்னல் வானத்திலிருந்து பொழியும் குளிரந்த நீரிலிருந்து உருவாகும் பெரிய ஆற்றின் வழியில் மிதகு செல்கிறது.அப்படித்தான் நமது வாழ்க்கையும்.இதை சான்றோர் சொல்லி கேட்டு தெளிந்திருக்கிறேன்.ஆகவே பெரியவர்களை பார்த்து வியப்பது தேவையற்றது அதுபோல சிறியோரை பார்த்து இகழவும் மாட்டோம் என்கிறார் பூங்குன்றனார்.கிட்டத்தட்ட பதினைந்து வரிகள் மட்டுமே கொண்ட இந்த கவிதையை வைத்துக்கொண்டு பத்து நாவல்கள் எழுதலாம்.

இதில் அவர் வெறும் பெரிய ஆறு என்று எழுதவில்லை.வானத்திலிருந்து பொழியும் குளிர்ந்த நீரால் பெருக்கெடுக்கும் ஆறு என்கிறார்.அந்த ஆற்றின் வழி மிதகு செல்கிறது.அதாவது எல்லாமே பெரிய நியதியின் வழி செல்கிறது.நாம் ஏதோ ஒரு சமூகத்தில் பிறக்கிறோம்.அந்த சமூகத்தின் விழுமியங்களை ஏற்கிறோம்.வளர்கிறோம்.வாழ்கிறோம்.இறக்கிறோம்.இங்கே நமது செயல்களால் உருவாகும் வாழ்க்கை மாற்றங்கள் என்பது அநேகமாக ஏதுமில்லை.நம் வாழ்க்கை ஒரு நியதியின் வழியால் இழுத்துச்செல்லப்படுகிறது.அப்படியென்றால் இது செயலின்மை என்ற தளத்தை அடைகிறதா என்று நாம் குழம்புகிறோம்.இந்த கவிதை வாழ்வை கொண்டாடவும் தேவையில்லை அதே நேரத்தில் நோய் , மரணம், அவமானம் போன்ற காரணங்களால் முடங்கி போகவும் தேவையில்லை என்கிறது.ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் நீயும் நானும் ஒன்றுதான்.செய்யும் வேலைகளாலோ செயல்களாலோ யாரும் உயர்ந்தவர்கள் ஆவதும் இல்லை.யாரும் தாழ்ந்தவர்கள் ஆவதும் இல்லை.அதனால் ஒருவர் செய்த செயல்களை வைத்து அவரை அதிகமாக புகழவும் தேவையில்லை.அதே நேரத்தில் தீய செயல்களை செய்தவர்களை இகழவும் தேவையில்லை.மரணத்தை கண்டு அஞ்சவும் தேவையில்லை.

இந்த கவிதை செயல்களை ஒரு பற்றின்மையோடு செய்யும் தளத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறது.வேற்றுமையின்மை என்ற தரிசனத்தை அது அடைகிறது.நாம் சற்று சலனமற்று நிம்மதியாக இளைப்பாறலாம் என்கிறது.ஒவ்வொரு முறையும் இந்த கவிதையை படிக்கும் போது மனம் அபாரமான எழுச்சி கொள்கிறது.எத்தனை துயரமும் வலியும் இருந்தாலும் இந்த கவிதை என் அனைத்து கவலைகளையும் மறக்க வைத்துவிடுகிறது.புத்துயிர் கொண்ட உடலை போன்ற உணர்வை அளிக்கிறது.அந்த நேரங்களில் இந்த கவிதையை எழுதிய மூதாதையின் கரங்களை பற்றிக்கொள்கிறேன்.என்னால் அவனை அடையாளம் காண முடிகிறது.அவன் இளைஞன்தான்.அவனை யாரோ அவமானப்படுத்தியிருக்கலாம்.அவன் பொருட்செல்வம் அற்றவனாக இருந்திருக்கலாம்.அவன் லெளகீக ஞானம் அற்றவனாக இருந்திருக்கலாம்.ஆனால் அவன் தான் கண்டடைந்த தரிசனம் மூலமாக தன்னை இகழ்ந்தவர்களை தன்னை அவமானப்படுத்தியவர்களை கடந்து ஒரு ஆன்மிக வாழ்வை வாழ்கிறான்.அவன் தன் செயல்களை தன்னை சுற்றியுள்ள சமூகத்தை பற்றிய எந்த கவலை இல்லாமல் தொடர்கிறான்.அதன் மூலம் மிகவும் வலிமையானவாக மாறுகிறான்.அவனை இந்த உலகத்தில் யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது.புகழ் , பெண் , செல்வம் எதுவுமே அவனுக்கு பொருட்டே இல்லை.அவன் அனைத்தையும் கடந்து புன்னகையோடு தான் சமைத்து தானே உண்பதற்கு விறகுகளை உடைக்கிறான்.இதோ இன்று மாலை அவன் வேறு ஏதோ ஊருக்கு வெறுமன வேடிக்கை பார்க்க தன் பயணத்தை ஆரம்பிக்கிறான்.அவன் கையில் பணம் கூட இல்லை.

குட்டிப்பெண்

குட்டி பட்டுப்பாவடையும் சட்டையும் அணிந்திருந்த குட்டிப்பெண் இரட்டை ஜடையை கைகளால் வலதும் இடதுமாக இழுத்தவாறு கோளரங்கத்திலிருந்து குட்டி பாதங்களால் தை தை என்று நடை வைத்து வெளியே ஒடினாள்.ஏன் கிரகங்களையும் சூரியனையும் நட்சத்திரங்களையும் பால்வெளியையும் மேலே திரையில் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று எழுந்து இறை வாழ்த்து பாடினாய் என்று கேட்டேன்.மறுபடியம் ஜடையை இடது வலதுமாக இழுத்தவாறு தலையை ஒரு பக்கம் சாய்த்து பொக்கை பல் தெரிய புன்னகைத்தாள்.அவளை தூக்கி என் மோட்டார் சைக்கிளில் உட்காரவைத்தேன்.அவள் வண்டியை ஒட்டும் தோரணையில் ஹேண்டில் பார்களை பிடித்துக்கொண்டு 'டுர் டுர்' என்று சத்தம் எழுப்பினாள்.வண்டியை கிளப்புகையில் ஒரு பிச்சைகாரன் வந்தான்.அவன் முகம் கோரமாக இருந்தது.அருவெருப்பில் நான் முகத்தை திருப்பிகொண்டேன்.பூக்குட்டி மறுபடியும் இறைவாழ்த்து பாட ஆரம்பித்தாள்.எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும் இடம் என்று எண்ணியவாறு வண்டியை கிளப்பினேன்.