Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

ராஜ் கெளதமன்




பத்திரிக்கையாளர் ஞாநி சென்னையில் நடத்திய கேணி கூட்டத்திற்கு ஒரு முறை ராஜ் கெளதமன் வந்திருந்தார். 2012 என்று நினைக்கிறேன். அந்தப் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது.ஓர் ஆளுமையாக அவரை எனக்குப் பிடித்திருந்தது.தன் அறிவின் மீது இருக்கும் செருக்கும் கர்வமும் கவரக்கூடியதாக இருந்தது.

எண்பதுகளின் தமிழ்க் கலாச்சாரம் என்ற சிறிய நூலில் அன்றைக்கு வந்து கொண்டிருந்த பத்திரிக்கைகள் , சினிமா, இலக்கியம், திரைப்பாடல்கள் என்று பல துறைகளைப் பற்றிய கட்டுரைகளின் வழி அவர் முன்வைத்த  விமர்சனங்கள் நிபுணுத்துவம் கொண்டவை . அவரின் "கண்மூடி வழக்கமெலாம் மண்மூடி போக" என்ற வள்ளலார் பற்றிய நூலில் இராமலிங்க அடிகளார் ஒரு முருக பக்தராக இருந்து சிவ பக்தராக மாறி பின்னர் கூறுகின்ற சமயமெல்லாம் பிடித்து கூவுகின்றார் என்ற இடத்திற்கு நகர்ந்ததை பற்றிய தன் எண்ணத்தை எழுதியிருப்பார்.அவர் அதில் மிகவும் புறவயமாக வள்ளலாரை அணுகியிருப்பார். முற்றிலும் புறவயமானது என்பதால் அவரால் வள்ளலாரின் அந்த மெய்யியல் உலகத்திற்குள் செல்ல முடியவில்லை.மதகில் மோதி நிற்கும் வெள்ளம் போல அவரால் அதற்கு அப்பால் அந்த ஆழ்நிலையை தன் எழுத்தில் கொண்டு வர இயலவில்லை.

அவரிடம் இயல்பாகவே ஒரு பகடி செய்யும் தன்மை இருக்கிறது. அவர் எதையும் உன்னதமானதாக பார்க்க விரும்பவில்லை.மார்க்ஸிய நோக்கில் அவர் சமூகத்தை இலக்கியத்தை ஆராய்ந்தார். அந்தப் நோக்கு எனக்கு ஏற்புடையதாக இருந்தது. அவர் எரிக் ஃபிராம் நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.நான் மனவளமான சமுதாயம் நூலை வாசித்திருக்கிறேன். அவருக்கு ஏதோ ஒரு பற்றுதல் தேவைப்பட்டிருக்கிறது, அது எரிக் ஃபிராம்  வழி அவருக்கு கிடைத்திருக்கிறது.

என் அஞ்சலி.


பாரதி மணி

 

பாரதி மணி


பாரதி மணி அவர்களின் இறப்பு வருத்தமளிக்கிறது. நான் 2009யில் எடுத்த ராவ் சாஹிப் குறும்படத்தில் அவர் நடித்தார்.நவம்பரில் சென்னையில் இது போன்ற ஒரு மழைக்காலத்தில் திருவல்லிக்கேணி, அடையார் ஆகிய இடங்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் படத்தை எடுத்தோம். எனக்கு எந்த திரைத்துறை அனுபவமும் இல்லை. காட்சிகளை எப்படி ஷாட்டுகளாக மாற்ற வேண்டும் என்ற புரிதலும் இல்லை. ஏதோ எடுத்தேன். அவரும் அலிடாலியா ராஜாமணி அவர்களும் அந்த மழையிலும் வந்து நடித்துக்கொடுத்தார்கள்.சென்ற வருடம் இறந்து போன அருண்மொழி அந்தப் படத்திற்கு நிறைய உதவிகள் செய்தார்.அந்தப் படத்தை எடுத்த போதும் அதன் பிறகும் சில முறை விருகம்பாக்கத்தில் இருந்த அவரது இல்லத்தில் அவரை சந்தித்திருக்கிறேன்.நான் இயக்கிய இரண்டாவது குறும்படத்தில் அவரை நடிக்கக் கேட்டு 2013யில் ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்றேன். பிறகு அதில் எஸ்.எஸ்.ராமன் நடித்தார். அதன் பிறகு அவரை அதிகம் சந்திக்கவில்லை. 
 
எப்போதும் கையில் பைப்புடன் சாக்லெட் நறுமணம் தரும் புகையிலையை நிரப்பி அறையில் கம்பீரமாக அமர்ந்திருப்பார். தொலைக்காட்சியில் எதாவது செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருக்கும். இவ்வளவு தனியாக எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன்.நண்பர்கள் வருவார்கள், இசை கேட்பேன் என்று சொல்லியிருக்கிறார்.பல வருடங்கள் சென்னையில் தனியாக இருந்தார்.ஆனால் தனிமையிலும் அவர் நிறைவாகவே இருந்தார் என்பதே என் எண்ணம்.கடந்த நான்கு ஐந்து வருடங்களாகத்தான் அவர் பெங்களூரில் அவர்களின் மகள்கள் வீட்டில் வாழ்ந்து வந்தார்.கொரோனா காலத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்று சென்ற வருடம் அழைத்து நலம் விசாரித்தார்.நானும் கோரமங்களாவில் தான் இருக்கிறேன் என்றேன்.பின்னர் எல்லாம் சரியானபின் வந்து பாருங்கள் என்றார்.பண்பாளர்.
 
நாடகங்கள் மீது அவருக்கு பெரும் பற்று இருந்தது.செம்மீன் படத்தின் தேசிய விருதுக்கு அவரும் ஒரு காரணம்.உச்சரிப்பு குறித்து நிறைய கவனம் கொள்வார்.மோடி இல்லை மோதி , லல்லு இல்லை லாலு என்பார்.திண்டிவனம் என்பது Tindivanam என்கிற போது ஏன் பாரதி என்பது Bharathi ஆகிறது Bharati என்று தானே இருக்க வேண்டும் என்று கேட்பார். தன் பெயருக்கு முன் அவர் பாரதியை இணைத்துக்கொண்ட போது Bharati என்று தான் எழுதினார்.எதையும் திருத்தமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். லெனின் இயக்கிய ஊருக்கு நூறு பேர் படத்தில் நடித்திருப்பார். பாரதி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார்.ஷாயாஜி ஷிண்டேவை அவர் தான் தேர்வு செய்தார். பாரதி மணி அவர்களின் திரைப் பங்களிப்பில் முக்கியமான ஆக்கம் பாரதி திரைப்படம் . செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் முதலமைச்சர் வேடத்தில் அவர் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது.அந்தப் படத்தில் அவரது குரலைக்கூட சற்று மாற்றி பேசியிருப்பார் என்று எண்ணுகிறேன்.இறுதியாக சைக்கோ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
 
டெல்லியில் பல நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்.அவரே இறுதியில் ஒரு நிறுவனத்தை நடத்தினார்.பின்னர் எதன் பொருட்டோ அவர் அனைத்தையும் விட்டுவிட்டு சென்னையில் விருகம்பாக்கத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினார்.ஐம்பது வருடங்கள் இருந்த ஊரை விடுத்து அறுபது வயதுக்குப் பின்னர் தனியாக தங்க அவர் சென்னையை தேர்தெடுத்து வந்தது எனக்கு ஆச்சரியம் அளித்தது.பள்ளிப் படிப்பை முடித்து டெல்லி சென்று அக்கா வீட்டில் தங்கி பி.காம் , எம்.பி.ஏ என்று வேலை செய்து கொண்டே படித்து வாழ்க்கையில் முன்னேறியவர்.டெல்லியில் தேசிய நாடகப் பள்ளியில் இந்திய நாடகத்துறையில் புது பாய்ச்சலை கொண்டு வந்த மேதை இப்ராஹிம் அல்காஸியிடம் பயின்றார்.ஐம்பது வருடங்களுக்கு மேலாக நாடகங்களை இயற்றி நடித்தார்.இசை , திரைப்படங்கள் , நாடகங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். நன்கு சமைப்பார். கூர்மையான நினைவுத்திறன் கொண்டவர்.அவர் தனியாக இசைக்கேட்டுக் கொண்டு இருக்கும் சித்திரத்தின் அடிப்படையில் "நடிகர்" என்ற ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதையில் வரும் வாசுதேவன் கதாபாத்திரத்திற்கும் அவரின் குணத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனால் புறச்சித்திரமாக அவரை வரித்துக்கொண்டேன். இறந்த பின் எந்த சடங்குகளும் செய்யாமல் அவர் தன் உடலை புனித ஜோன்ஸ் மருத்துவமனைக்கு கொடுத்து விட சொல்லியிருக்கிறார்.அதன் படி அவரின் மகள்களும் அப்படியே செய்திருக்கிறார்கள்.அவர் டெல்லியில் இருந்த போது இறந்து போனவர்களுக்கு உதவியது குறித்து தில்லியில் நிகம்போத் காட் என்ற கட்டுரை எழுதியிருப்பார். அந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது.என் அஞ்சலி.
 

 

தந்தை

 

தந்தை இறந்துவிட்டார்.இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.பல வருடங்களாக பார்க்கின்ஸ்ன் நோயால் அவதிப்பட்டு வந்தார்.மரணம் அவருக்கு விடுதலையாக அமைந்தது என்று தோன்றுகிறது.என் தந்தை இறந்து போனது சில நேரங்களில் என்னை தலையற்ற முண்டமாக உணர வைக்கிறது.எந்த வயதனாலும் தந்தை தந்தை தான்.குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சமநாதன்பேட்டை என்ற ஊரில் வரதராஜூலு - பத்மாவதி தம்பதியினருக்கு  1945யில் முதல் மகனாக பிறந்தார் சடகோபன்.என் பாட்டனார் வரதராஜூலு பதினாறு ஏக்கர் நிலம் வைத்திருந்தார்.அவரது உறவினர் - அத்தை மகன் - அவரை இருக்கும் நிலத்தை விற்று வில்லியனூர் சென்றால் புது நிலம் வாங்கி இன்னும் செழிப்பாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.விற்ற நிலத்தின் காசை வாங்கிக்கொண்டு அத்தை மகன் வித்தை காட்டிவிட்டார்.கையில் காசு இல்லை, நிலம் இல்லை, குழந்தைகள். யாரோ உறங்குவதற்கு வில்லியனூரில் திண்ணையை கொடுத்திருக்கிறார்கள்.அங்கே என் பாட்டனார் விவசாயக் கூலியாக வேலை செய்திருக்கிறார்.அங்கே ஆரம்பப் பள்ளிக்கு சென்றார் என் தந்தை. பின்னர் புதுப்பேட்டை என்ற பண்ருட்டிக்கு அருகே இருக்கும் ஊருக்கு அவர் உயர்நிலைப் பள்ளி படிக்கும் போது வந்திருக்கிறார்கள்.அது சிறுநகரம்.அங்கு என் தாத்தா சில கூலி வேலைகளுக்கு சென்றிருக்கிறார்.

அங்கே தான் குடும்பம் ஓரளவு நிலைபெற்றிருக்கிறது.என் தந்தை புகுமுக வகுப்பு முடித்தப்பின்னர் கடலூர் அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் கற்றார்.பாட்டனார் என் தந்தையும் சிற்றப்பாவும் மைனராக இருந்த காலத்தில் விற்ற நிலத்தை மீட்பதற்காக மைனர் சூட் வழக்கு தொடுத்தார்கள்.அப்போது என் தந்தை வழக்கறிஞர் ஒருவரை அடிக்கடி சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அவர் என் தந்தையை இந்த புக்க எடு,அந்த புக்க எடு என்று ஏதோ சொல்லியபடி இருந்திருக்கிறார்.பிராமணர்.ஏதோ ஒரு வகையில் வக்கீல் தொழில் மீது என் தந்தைக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அந்த வழக்கில் வெற்றி பெற்று நிலம் திரும்ப கிடைத்திருக்கிறது.அதிலிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு ஐஸ் பேக்ட்டரி ஒன்றை பண்ருட்டியில் துவங்கினார்கள். பி.எஸ்.சி முடித்த என் தந்தை அதன் பின் வேலைக்கு செல்லவில்லை.அறுபதுகளின் இறுதியில் அவர் பி.எஸ்.சி முடித்துவிட்டார்.மிக எளிதில் வேலை கிடைத்திருக்கும்.ஆனால் செல்லவில்லை.வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணம் வேறூன்றிவிட்டது.என் சித்தப்பா, என் பாட்டனார், குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து என் தந்தையை வழக்கறிஞருக்கு படிக்க வைத்தார்கள்.பல பருக்கைகள் சேர்ந்து ஒரு கவளம் சோற்று உருண்டையை உருட்டி என் தந்தைக்கு அளித்திருக்கிறார்கள். சென்னையில் அவருக்கு சட்டம் படிக்க இடம் கிடைக்கவில்லை.பின்னர் பாண்டிச்சேரியில் அவருக்கு சீட் கிடைத்தது.அங்கு படித்தார்.பழைய காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.காங்கிரஸ் இரண்டாக உடைந்ததை அவரால் ஏற்கவே முடியவில்லை.இந்திரா காந்தி காமராஜரை கைது செய்ய முயன்றதை அவரால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.சரண்சிங் இந்திரா காந்தியை கைது செய்த போது சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர் அதை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்.கல்லூரிக்கு வேஷ்டி அணிந்துதான் சென்றிருக்கிறார்.

சட்டம் படித்து பின்னர் விழுப்புரத்தில் சில காலம் வழக்கறிஞராக இருந்திருக்கிறார்.அப்போது தான் ஒரு மூத்த வழக்கறிஞர் "நான் வாழவைப்பேன்" என்ற படம் வந்திருக்கிறது , அதில் ரஜினி என்று ஒருவன் நடித்திருக்கிறான் , போய் பார் என்று பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார்.காமராஜரின் மறைவுக்கு பின்னர் அரசியிலில் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளாமல் இருந்த என் தந்தை அப்படியாக ரஜினிகாந்தின் ரசிகரனார்.அவரால் ஏனோ திராவிட இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை.இந்திரா காங்கிரஸையும் ஏற்க முடியவில்லை.ஜனதா கட்சியில் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார்.கடலூர் மாவட்ட அளவில் ஏதோ பொறுப்பில் இருந்தார்.பின்னர் அதிலிருந்தும் விலகவிட்டார்.அதன் பின் அவர் அரசியில் கட்சி எதிலும் பங்கு கொள்ளவில்லை.வைகோ மீது அவருக்கு சற்று ஈடுபாடு இருந்தது.

பண்ருட்டியில் இருந்த காலத்தில் என் தந்தைக்கும் சிற்றப்பாவிற்கும் நிறைய மன கசப்பு ஏற்பட்டது.அப்போது என் தந்தைக்கு திருமணமும் நடந்திருந்தது.அதன் பின்னர் என் தந்தை நெய்வேலியில் புதிதாக தொடங்கப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கலாம் என்று முடிவு செய்து மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு 1983யில் நெய்வேலி வந்து சேர்ந்தார்.பிறந்தததிலிருந்து ஒரு சோப் வாங்கக்கூட கடைக்கு போகதவர் என் தந்தை.அவரை சுற்றியிருந்த குடும்பத்தினர் அவருக்காக அனைத்தையும் செய்தார்கள்.பின்னர் நெய்வேலியில் அடுத்த இருப்பத்தியைந்து வருடங்கள் வாழ்ந்தார். என் சித்தப்பா என் தந்தையை படிக்க வைத்தார் என்பதால் அடிக்கடி தொழில் தேவை என்று சொல்லி பணம் வாங்கிக் கொண்டார்.

என் தந்தைக்கு பணம் சேர்த்து சொத்து சம்பாத்திக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை.வரும் காசை வைத்து வாழ்ந்தார்.பிள்ளைகளை படிக்க வைத்தார்.மற்றபடி உலகம் அறியாதவர்.மனிதர்கள் மனக்கணக்குகளை உணராதவர்.தன்னை வாழ்க்கையில் உயர்த்திக்கொள்ள சாத்தியப்பட்ட பல ஏணிகளை அவராகவே தள்ளிவிட்டார்.உதறினார்.தனக்கென்று சில சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டார்.ஆக்ஸிடென்ட் கேஸ்களை எடுக்க மாட்டேன் என்பது அப்படியான ஒரு வரையறை.இப்படி பல வரையறைகளை வைத்துக்கொண்டு சம்பாதிப்பதற்கான வழிகளையும் தடுத்துக்கொண்டார்.ஊரில் இருக்கும் பணக்காரர்களூடன் நல்ல இணக்கமான உறவை வைத்துக்கொள்வதை பற்றி கவலையற்று இருந்தார்.தொண்ணூறுகளில் நோட்டரி பப்ளிக் ஆனார்.அதன் பின் தன்னை மேலும் சுருக்கிக்கொண்டார்.

2007யில் நானும் என் அண்ணணும் சென்னையில் வேலை வாங்கிய பின்னர் அவரும் வேறு வழியில்லாமல் ஒரு வருடம் கழித்து சென்னை வந்தார்.சென்னை அவருக்கு பிடிக்கவில்லை.நண்பர்களும் இல்லை.இங்கே உயர் நீதிமன்றம் , எழும்பூர் நீதிமன்றம் எல்லாம் சென்று பார்த்தார்.அவருக்கு எதுவும் சரியாகவரவில்லை.பின்னர் சைதை நீதிமன்றத்தில் சில வருடங்கள் சென்றார்.அவருக்கு வருமானம் என்று எதுவும் வரவில்லை என்றாலும் அவருக்கு அங்கு சில அறிமுகங்கள் கிடைத்தன.அவர் தன் கூச்சம், வெட்கம் போன்ற இறுக்கங்களிலிருந்து வெளியே வந்து ஒரு நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கியிருந்தால் இன்னும் சிறந்த வழக்கறிஞராக தன் வாழ்க்கையில் இருந்திருப்பார்.என் தந்தையை விட சட்டம் குறைவாக தெரிந்திருந்த வழக்கறிஞர்கள் நிறைய வருமானம் ஈட்டுவதை பார்த்திருக்கிறேன்.

நல்ல மனிதர்.Well Cultured Man.ஒரு முறை நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவரிடம் "இந்த வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறாய் நைனா" என்று கேட்டேன்.அவர் "எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்" என்று சொன்னார்.நான் கேட்டேன், அப்படின்னா நீ ஏமாந்துகீனு இருக்கியா நைனா .அவர் சிரித்தார்.மிகவும் அழுத்தமானவர்.வாழ்வில் பல்வேறு அவமானங்களை சந்தித்தவர்.மிகவும் தனித்துவிடப்பட்டவர்.சொந்தங்கள்,நட்பு என்று எந்த ஆதரவும் அவருக்கு வாழ்வின் இரண்டாம் பாகத்தில் இல்லை.அவர் அடைந்த பல அவமானங்களை அவர் ஒரு போதும் சொன்னதில்லை.அவர் வாழ்வின் வறுமை நிரம்பிய காலத்தை பற்றிக்கூட மிகச்சிறிய கீற்றுக்களைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.தேர்வுக்கு செல்லும் நாட்களில் கூட வீட்டில் சாப்பிட ஒன்றும் இருந்ததில்லை என்பதை சொல்லியிருக்கிறார்.

நான் என் வாழ்க்கையில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் பல முறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு இருந்திருக்கிறேன்.அவர் ஒரு முறை கூட அறிவுரை வழங்கியதில்லை.நான் ஒரு முறை இருக்கிற வேலையை விட்டுவிட்டு சட்டம் படிக்க முடிவு செய்த போது கூட அவர் எதுவும் சொல்லவில்லை.பின்னர் எப்போதோ என்னை விட என் பிள்ளைகள் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்று மட்டும் ஒரு முறை சொன்னார்.

வாழ்வில் எந்த சுகங்களுக்காகவும் ஏங்கியவர் அல்ல.ஒரு நல்ல காபி குடிக்க விரும்புவார்.நீதிமன்ற வளாகத்திலிருந்த கூரை வைய்ந்திருந்த கடையில் டீயும் வடையும் சாப்பிடுவார்.நெய்வேலி டவுன்ஷீப் மையின் பஸாரிலிருந்த இந்தியன் காபி ஹவுஸில் காபி சாப்பிடுவார்.எங்களையும் அழைத்து செல்வார்.சிவாஜி வரை ரஜினியின் படங்களை தியேட்டரில் சென்று பார்த்தார்.அதன் பின் அவருக்கு ரஜினிகூட பிடிக்காமல் போய்விட்டது.2009யில் பார்க்கின்ஸன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.பார்க்கின்ஸனுக்கு மருத்துவத்தில் தீர்வு இல்லை.மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.2021 ஏப்ரல் 21ஆம் தேதி மரணமடைந்தார்.எழுபத்தியைந்து வயது வாழ்க்கை.

பெளத்தத்தில் மறுபிறப்பு குறித்து சொல்கிறார்கள்.திருக்குறளில் கூட 

உறங்குவது போல சாக்காடு உறங்கி

விழிப்பது போல பிறப்பு 

என்று சொல்லப்பட்டிருக்கிறது.அவர் ஒரு வேளை மறுபடியும் பிறப்பதாக இருந்தால் இந்த வாழ்வில் அவர் கொண்ட இன்னல்கள் அற்ற இனிமையான வாழ்வு அவருக்கு சாத்தியப்படட்டும்.மகிழ்ச்சியும் நிறைவுமான வாழ்வை அவர் வாழட்டும்.

அவர் தன் வாழ் நாளில் ஒரு சதுர அடி நிலத்தைக் கூட வாங்கவில்லை.இதுவரை நானும் வாங்கவில்லை.வாடகை வீட்டில்  வாழ்ந்து இறந்து போனார்.அவர் உயிருடன் இருக்கும் போதே என் முதல் சிறுகதைத் தொகுப்பை கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.அதே போல கொண்டு வந்தேன்.அவருக்கு அந்த நூலை சமர்பித்தேன்.அவருக்கு நூலை காட்டினேன்.ஒரு நாள் முறையிட ஒரு கடவுள் என்ற பெயரைப் படித்தார்.பெயர் சர்வோத்தமன் சடகோபன் என்று எழுதப்பட்டிருப்பதை படித்தார்.ஆனால் அவரால் எதையும் தொகுத்துக்கொள்ள இயலவில்லை.இன்னும் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் என் தொகுப்பை கொண்டு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.அவருக்கு பெயர்கள் மறந்துவிட்டன.அவர் தன் தந்தை, தாயார் , தம்பி ஆகியோரின் பெயர்களைத்தான் இறுதிக்காலத்தில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.ஒரு முறை அவருக்கு மூளைக்கு பயிற்சியாக இருக்கட்டும் என்று எஸ்.வி.ராமகிருஷண்ன் எழுதிய ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லி கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னேன்.சிறிய பதிவு ஒன்றை எழுதினார்.நன்றாகத்தான் எழுதினார்.2014யில் என்று நினைவு.ஆனால் அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை.அவருக்கு பெரிதாக வாழ்வில் எதிலும் ஆர்வமில்லை.எப்போதும் ஒரு விலகலுடன் இருப்பார்.உறவுகள் மீது கூட பெரிய ஈடுபாடு இல்லை.பிள்ளைகள் மீது பெரும்பற்றுடன் இருந்தார்.அவருடைய ஒரே பற்று அது மட்டும்தான்.சென்னையை சேர்ந்த என் அம்மாவை 1980யில் திருமணம் செய்து கொண்டார்.

அவரைப்பற்றிய ஒரு சித்திரத்தை பிம்பம் என்ற கதையில் எழுதினேன்.அவரின் தொடர்ச்சியாக என்னைப் பார்த்தேன்.இப்போதும் அப்படியே பார்க்கிறேன்.என் தந்தை இனி நான் எழுதும் எத்தனையோ கதைகளில் வரப்போகிறார்.அவரை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன் என்பதால் அவரைக் குறித்து எழுத எனக்கு நிறைய இருக்கிறது.அவர் தட்டையானவர் இல்லை என்பதால் அவரைப்பற்றி நிறைய எழுத முடியும்.

ஒரு முறை ஒரு வழக்கு சம்பந்தமாக யாருடனோ பேசிக்கொண்டிருக்கையில் கத்தி வெட்டுக்கும் அருவாள் வெட்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது , அதை வைத்தே வழக்கில் வெல்லலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.என் தந்தை குறித்தே வேறு ஒரு சித்திரம் அப்போது எனக்கு கிடைத்தது.தன் எல்லைகளை சுருக்கிக் கொண்ட நல்ல மனிதர்.பண்பட்ட மனிதர்.அவருக்கு என் அஞ்சலி.

என் தந்தை 

என் மகன்

என் மகன் 

என் தந்தை

நான் தந்தை

நான் மகன்.



 

அருண்மொழி


அருண்மொழி இறந்துவிட்டார் என்ற செய்தியை படித்தேன்.மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.மிக நல்ல மனிதர்.அவர் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார்.அவருக்கு திரைத்துறையில் , அரசியலில், இலக்கிய, நாடகத்துறையில் இருக்கும் பலரை நன்கு தெரியும்.சென்னையின் எந்தப் பகுதிக்கும் கூகிள் மேப்பை விட சிறந்த வழி சொல்வார்.சென்னையில் எங்கு சென்றாலும் அங்கு சென்று சந்திக்க ஒரு நண்பர் இருப்பார்.

நான் அவரை அவர் பிரசாத் ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டிருந்த போது சந்தித்தேன்.அவர் தான் நான் இயக்கிய ராவ் சாஹிப் என்ற குறும்படத்திற்கு பல உதவிகள் செய்தார்.அவரின் உதவி இல்லாதிருந்திருந்தால் அந்த குறும்படத்தை எடுத்திருப்பேனா என்று தெரியவில்லை.யாரையும் சுரண்டாதவர்.சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.சில மாதங்களுக்கு முன்னர் ஏதோ விடுமுறைக்கு சென்னைக்கு சென்றிருந்த போது , மகனுக்கு பேராக்கு காட்ட சாலிக்கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது அவரும் இரு சக்கர வாகனத்தில் எதிரில் வந்தார்.பார்த்து பேசினேன்.அது தான் கடைசியாக பேசியது என்று நினைக்கிறேன்.சென்னை செல்லும் போது அவர் நடத்தி வரும் நடிப்பு பள்ளிக்கு சென்று அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.அது இனி நடக்காது என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.மூன்று முழு நீளத் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.ஏழாவது மனிதன் படத்திற்கு அவர் வசனம் எழுதினார்.திருநங்கைகளின் பிரச்சனைகள் பற்றி உண்மையான அக்கறை அவருக்கு இருந்தது.அதை சார்ந்து சில படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார்.சமீபத்தில் நடிப்பு பள்ளி நடத்தி வந்தார்.அவர் நாளை காலை பத்து மணிக்கு வருகிறேன் என்று பத்து பேரிடம் சொல்வார்.இறுதியில் பதினொராவதாக ஒருவரை பார்க்க சென்று விடுவார்.அவருக்கு என் அஞ்சலி.

(நவம்பர் 9ஆம் தேதி பேஸ்புக்கில் எழுதிய பதிவு)

 

 

Kalignar Karunanidhi

Kalaignar Karunanidhi was very keen on two projects in his last term.One was the secretariat and the other was Anna Centenary Library.It was unfair that the building built for secretariat was converted to hospital.Anna Centenary Library survived.This library has became very helpful for people from various walks of life.It is very useful for people students involved in Research.Abilash Chandran  spent lot of his time during his Ph.D in this library.

If Chennai has grown now to what it is today it is because of him.Various Infrastructure Projects were done in Chennai during the Vajpayee Government of which DMK held lot of important portfolios.

Vaiko made biggest mistake of his life by creating People welfare front in 2016 assembly elections.I'm not sure what he had achieved by it now.Kalaignar Karunanidhi would have died as Tamilnadu Chief Minister.If there was a mistake Kalaignar Karunanidhi did it was expelling Vaiko for the benefit of his son.

I think Parasakthi was a fine movie.I liked the political statements in that movie.There has been various criticisms that the movie is too loud.Pather Panchali was made around the same time. Nevertheless, it is a good film.It gave a brief outline of what was Dravidian Politics.It was a political statement.

Writer Jeyakanthan had told in his interviews that more than Periyar or Anna Kalaignar Karunanidhi was a genius.He was always right on forming alliances for parliamentary elections.His introduction of 3% internal reservation for Arunthathiyars was an important one.It would take decades for Tamilnadu to witness a charismatic leader like him.It would be very difficult for Tamilnadu to see a leader who was very keen that a world class library was built for the benefit of general public.He had a wonderful life with various happenings.May his soul rest in peace.

ஞாநி


ஞாநி கோலங்கள் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டி சுயாதீன திரைப்படங்களை எடுக்க விரும்பினார். அந்த அமைப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா,பாலசந்தர்,மகேந்திரன் வந்திருந்தார்கள்.அவர் அதுவரை இயக்கிய குறும்படங்களை திரையிட்டனர்.அவருடைய குறும்படங்கள் அனைத்தும் குறைப்படங்கள்.திலீப்குமார் எழுதிய நிகழ மறுத்த அற்புதம் கதையின் குறும்பட வடிவமான திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் அவருடைய திரை முயற்சிகளில் முக்கியமானது.அவர் விரும்பிய திரை மொழி அவருக்கு அந்தப் படத்தில் தான் கைக்கூடியது என்று நினைக்கிறேன்.சமீபத்தில் சிறுவர்களுக்கான ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.அது இன்னும் வெளியாகவில்லை.அவருடைய நாடகங்கள் முதிர்ச்சியற்றவை.அவர் நம்பிய அரசியல் சரிகளை மையப்படுத்தி நாடகங்களை எடுத்தார்.அதை இன்னும் Subtleஆக தீவிரமாக ஆழமாக செய்வதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை என்று தோன்றுகிறது.

அவருக்கு வைகோ மீது ஆழமான கசப்பு இருந்தது.முரசொலி மாறன் மீது மதிப்பு வைத்திருந்தார்.அவருடைய கட்டுரைகளில் தன் கருத்துகளை அவரால் தீவிரமாக முன்வைக்க முடிந்தது.2009யிலிருந்து 2011வரை அவரும் பாஸ்கர் சக்தியும் இணைந்து ஏற்பாடு செய்த கேணி கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.பல எழுத்தாளர்கள்,இசை கலைஞர்களின் பேச்சை அங்கு கேட்க முடிந்தது.ராஜ் கெளதமனின் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது.எல்லா எழுத்தாளர்களும் ஞாநி மீதிருந்த அன்பால்தான் தொலைவிலிருந்து வந்து நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவருக்கு திரைத்துறையில் தான் விரும்பும் படங்களை வெற்றிகரமாக இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்க வேண்டும்.அவருடைய மகன் மனுஷ் நந்தன் திரைத்துறையில் வெற்றிபெற்றிருக்கிறார்.சில சமயங்களில் சில கனவுகள் தலைமுறைகளை கடந்து சாத்தியமடைகிறது.தன் மகன் விரும்பினார் என்று +1 வகுப்பில் சேர்க்கும் போது நிழற்படக்கலை பாடமும் உள்ள பிரிவில் அவரை சேர்த்திருக்கிறார்.அது அவர் இன்று ஒளிப்பதிவாளராக வெற்றி பெற்றுள்ளதற்கு பெரும் உதவி செய்திருக்கும்.அசோகமித்திரன் மீது ஆழமாக பற்றுடன் இருந்தார்.அவருக்கு என் அஞ்சலி.


ச.சீ.கண்ணன்




ச.சீ.கண்ணன் பற்றி காலச்சுவடு இதழில் பொன்.தனசேகரன் எழுதியுள்ள கட்டுரை அற்புதமாக இருக்கிறது.ஜவஹர் என்பவர் ஃப்ரண்ட்லைன் இதழிலும் எழுதியிருந்தார்.ஆச்சரியமான வாழ்க்கை.ச.சீ.கண்ணனுக்கு கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் அவரை பனாரஸ் இந்து பல்கலையில் அவர் தந்தை சேர்க்கிறார்.அது அவர் ஆளுமையில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது என்று தோன்றுகிறது.அங்கு தான் அவருக்கு கம்யூனிஸம் அறிமுகமாகியிருக்கிறது.எம்.பி.ஸ்ரீனிவாசன்,பி.ராமமூர்த்தி போன்றோர் அங்கு அவருடன் படித்திருக்கிறார்கள்.நம்மால் அரை மணி நேரம் கூட இன்னொருவருக்கு செலவழிக்க முடியாத போது எப்படி இவரை போன்றவர்கள் இவ்வளவு நேரத்தை பிறரின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை.அபாரமான லட்சியவாதி.இந்தியாவில் இடதுசாரி சிந்தனையை ஏற்ற பலர் காந்தியத்தின் எளிமையையும் ஏற்று வாழ்ந்திருக்கிறார்கள்.கண்ணன் அப்படியான ஒருவர்.எத்தனை பேரின் வாழ்வை மாற்றியிருக்கிறார்.

உண்மையில் சுதந்திரம் அடைந்த போது அபாரமான லட்சியவாதம் எங்கும் இருந்தருக்கிறது.அப்போது இளமையில் இருந்த பலருக்கு அந்த லட்சியவாதம் வாழ்வின் ,தங்களின் ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறியிருக்கிறது.தம்பையா போன்ற மருத்துவர்கள் அப்படியான தலைமுறையால் உருவானார்கள்.எழுபதுகளில் எண்பதுகளில் லட்சியவாதத்தின் தோல்வியை எதிர்கொண்ட ஒரு தலைமுறையினர் உருவானார்கள்.அரவிந்தனின் உத்ராயணம் படத்தில் ரவி அப்படியான ஒரு கதாபாத்திரம்.அரவிந்தனுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவராக இருந்திருக்கிறார்.எண்பதுகளில் இளமையிலிருந்த பலருக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி அப்படித்தான் இருந்திருக்கிறார்.அவர்களிடம் ஒரு தீவிரம் இருந்திருக்கிறது.நக்ஸல்பாரி அமைப்புகளில் சேர்ந்தார்கள்.ஒரு அவதி இருந்திருக்கிறது.இருத்தலிய துயரம் இருந்திருக்கி்றது.ஆனால் அவர்களிலிருந்து ஒரு கண்ணன் உருவாகவில்லை.

இன்று அதற்கு அடுத்த தலைமுறையினர் அந்த எழுபதுகளின் எண்பதுகளின் இறுக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு அந்த இறுக்கத்தை கேலி செய்துகொண்டு மதுபானக்கடையில்,காபி,டீ கடைகளில் லட்சியவாதத்தை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு அடுத்த தலைமுறையினர் என்ன செய்வார்கள் என்று பார்க்க அமர்ந்துவிட்டார்கள்.

ரோஹித் வெமுலாவின் மரணம்








ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா ஜனவரியில் தற்கொலை செய்து கொண்டது இன்றும் முக்கிய செய்தியாக இருக்கிறது.ஐதாராபாத் தேசிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த இருபத்தியேழு வயது மட்டுமே நிரம்பிய ரோஹித் வெமுலா மரணமடைந்தது ஓர் துர் சம்பவம்.பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த தந்தைக்கும் ஒரு தலித் அன்னைக்கும் பிறந்தவர் ரோஹித்.ரோஹித்தின் அன்னை ராதிகா ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணால் தத்தெடுக்கப்பட்டார் என்ற செய்தியும் இருக்கிறது.ரோஹித் தலித் பிரிவைச் சேர்ந்தவரா இல்லையா என்பது முக்கிய பிரச்சனை இல்லை.அவர் தன்னை தலித்தாக அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்.ரோஹித்தின் இறுதி கடிதத்தை வாசிக்கும் எவருமே அவர் ஆழமான அறிவுத்தேடல் கொண்டவர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.அத்தகைய கடிதத்தை பாவனைகளோடு எழுத முடியாது.தற்கொலை பாவனைகளால் செய்ய முடிந்த செயலும் இல்லை.தற்கொலை என்பது உடலும் மனமும் தீப்பற்றி எரியும் தருணம்.அல்லது வயிற்றில் ஒரு பெரும் ஓட்டையை உணரும் தருணம்.இரண்டடையும் நானும் உணர்ந்திருக்கிறேன்.ஒரு முறை 2009யில் தற்கொலை பற்றி நினைத்துக்கொண்டே வடபழனியிலிருது நாவலூரில் இருக்கும் என் அலுவலகம் வரை பாதசாரியின் காசி சிறுகதையை வாசித்துக் கொண்டே சென்றேன்.வெறுமைதான் காரணம்.பேருந்திலிருந்து இறங்கும் போது சிறுகதையை வாசித்து முடிந்திருந்தேன்.தற்கொலை எண்ணமும் காணாமால் போய்விட்டது.மற்றது 2014யில்.பெரும்பற்று கொண்டிருந்த பெண் முற்றிலுமாக விலகி சென்ற தருணம்.உடலும் மனமும் தீப்பற்றி எரிந்தது.இனி இந்த வாழ்க்கை சாத்தியமில்லை என்று தோன்றியது.தூக்கிட்டு தற்கொலை செய்வது நிறைய வலிக்கலாம் என்பதால் தூக்க மாத்திரை பற்றி தெரிந்துகொள்ள மடிக்கணிணியை திறந்தேன்.அப்போது பேஸ்புக்கில் கவிஞர் சுகுமாரன் என் அலைபேசி எண்ணைக் கேட்டார்.கொடுத்தேன்.அழைத்தார்.காலச்சுவடு கொண்டுவர இருக்கும் காகித மலர்கள் நாவலுக்கு முன்னுரை எழுத முடியுமா என்று பாருங்கள் என்று சொன்னார்.மன அழுத்தம் அப்படியே இருந்தது.ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் போய்விட்டது.அன்று புரசைவாக்கத்தில் ஒரு ஜோசியரை கூட சென்று பார்த்தேன்.உங்கள் வாழ்க்கையில் வாழ்க்கையை தவிர பிற எல்லாமே நன்றாக இருக்கும் என்றார் ஜோசியர்!!

தற்கொலை மிக முக்கியமான தத்துவ பிரச்சனை என்கிறார் ஆல்பர் காம்யூ.முனிசிபாலிட்டி தண்ணீர் விடவில்லை என்பதற்காகவோ உலகமயமாக்கல் நமது பண்பாட்டை சீரழிக்கிறது என்பதற்காகவோ யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.எனக்கு தெரிந்து அவமானம்,நெருங்கிய மனிதரின் மரணம்,பெரும் இழப்பு இது மூன்றும் தான் ஒருவரை மரணம் வரை இட்டுச் செல்லும்.ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு இழப்பே காரணம்.அவருக்கு தொலைந்து போன பால்ய காலம் இருக்கிறது.அவர் தன் கடிதத்தில் தன் பால்ய காலத்தின் தனிமையை சொல்லியிருக்கிறார்.பால்ய காலத்தை தொலைத்தவர்கள் இளமையில் மகிழ்ச்சியை நோக்கி செல்ல மிகுந்த அவசரம் கொள்வார்கள்.மிக விரைவில் படிப்பை முடித்து , வேலையில் சேர்ந்து , திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.அல்லது தங்கள் துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.அவர்கள் இழந்து போன நாட்களை ஈடுசெய்ய விரும்புவார்கள்.ரோஹித்தின் மரணத்திற்கும் அவரின் தொலைந்து போன பால்ய காலத்திற்கும் தொடர்பு உள்ளது.அவர் நிச்சயமாக போராட்டத்தால் தற்கொலை செய்து கொள்ளவில்லை.ஏனேனில் அவரை நிர்வாகத்தால் அவமானப்படுத்த முடியவில்லை.அவரின் மரணத்திற்கு காரணம் அவர் தொலைந்து போய்விட்டார் என்பதே.அவமானப்பட்டவரின் கடிதத்தில் வெறுப்பின் குரல் இருக்கும்.இதில் இருப்பது தொலைந்து போய்விட்டதின் சோர்வும் தனிமையும்.அவர் கார்ல் சாகன் போல ஒரு அறிவியல் எழுத்தாளராக விரும்பியிருக்கிறார்.அவர் கடிதமே அதை அவர் அடைந்திருக்ககூடும் என்பதற்கான சாட்சி. தேசிய பல்கலைகழகத்தில் அறிவியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக சேரும் ரோஹித் தன் பேஸ்புக் பக்கத்தில் அப்போது விவேகானந்தரின் மேற்கோள்களை பகிர்கிறார். பின்னர் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் இணைகிறார்.அவர் ஏன் இதை செய்கிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.அவர் ஆராய்ச்சி முடித்து சிறப்பான வாழ்வை வாழ்வதை பற்றி சிந்திக்காமல் ஏன் அரசியல் களத்திற்கு செல்கிறார்.இதற்கான பதில் அவர் கடிதத்திலேயே இருக்கிறது.

மனிதன் தன் உடலால்,சாதியால்,பாலினத்தால் அடையாளப்படுத்தப் படுகிறான்.அந்த அடையாள அணி சேர்வுகளிலிருந்து அவனால் விலக முடிவதில்லை.அவன் ஒரு ஓட்டாக, எண்ணாக மாற்றப்படுகிறான்.அப்படி மாற்றப்படுபவன் தன்னை ஒரு இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.ஆனால், அப்படி அமைப்பில் சென்று தன்னை இணைத்துக் கொள்வதற்கான தேவை பல்கலைகழக சூழலில் நிலவுகிறது என்பதே முக்கியமான விஷயம்.தமிழ்நாட்டை போல அல்லாமல் ஆந்திராவில் கல்லூரிகளில் சாதிய அடையாளம் மிக பெரிய விஷயமாக இருக்கிறது.பெரும்பாலான கல்லூரிகளில் கம்மாக்களும் ,ரெட்டுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.பிற சாதியினருக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை.அதனால் தலித்துகள் தங்களை அமைப்பாக்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை.

2015 ஆகஸ்டு மாதத்தில் யாகூப் மேனன் தூக்கலிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடுத்துகிறார்கள் அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த மாணவர்கள்.இதைப்பற்றி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தலைவர் சுஷில் குமார் பேஸ்புக்கில் கேலி செய்து எழுதுகிறார்.அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் வற்புறுத்துகிறார்கள்.சண்டையில் சுஷிலின் சட்டை கிழிகிறது.சில சிராய்ப்புகள்.அவர் மன்னிப்பு கேட்கிறார்.பின்னர் அதை பேஸ்புக்கில் பதிவேற்ற சொல்கிறார்கள்.அதையும் செய்கிறார் சுஷில்.பின்னர் அடுத்தநாள் மருத்துவமணையில் குடல்வால் அழற்சிக்கான சிகிச்சை பெறுகிறார்.அதற்கு காரணம் முன்னிரவு நடந்த சம்பவம் என்று புகார் தெரிவிக்கிறார்.அதன் பின் நிகழ்ந்த சம்பவங்களின் ஊடாக ரோஹித் மரணமடைகிறார்.

ரோஹித்தும் அவரது நண்பர்களும் சுஷிலிடம் அப்படி நடந்து கொண்டது சரிதானா என்று கேட்டால் பதில் இல்லைதான்.சஷில் சிலருடன் சேர்ந்து பதிலுக்கு ரோஹித் மற்றும் பிறரின் சட்டையை கிழித்து சில சிராய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம்.ஆனால் அவர்களின் திட்டங்கள் வேறாக இருக்கிறது.அவர்கள் முழுமையாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.அந்த கோரிக்கை சிறிது மாற்றப்பட்டு  பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளுக்கு செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப் படுகிறது.ரோஹித்தும் பிற மாணவர்களும் அதற்கு எதிராக பல்கலைகழகத்தின் வடக்கு வளாகத்தின் நுழைவாயிலில் முகாமிடுகிறார்கள்.அதன்பின் ஒரு மாதம் கழித்து ரோஹித் தற்கொலை செய்து கொள்கிறார்.

ரோஹித் மற்றும் பிற மாணவர்கள் மீது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஏன் இத்தனை தீவிரம் காட்டப்பட்டது என்பதே முக்கியமான கேள்வி.இது இரண்டு மாணவர் அமைப்புக்கு இடையில் நிகழும் சண்டை.அதற்கு சில நாட்கள் இடைநீக்கம் செய்யலாம்.கண்டிக்கலாம்.அவ்வளவுதான்.இந்த கல்லூரி வாழ்க்கை முடிந்து வெளியே சென்று அவர்கள் பெருவாழ்வு வாழ வேண்டும்.இதுபோன்ற போராட்டங்கள், கோஷங்கள், அரசியல் பங்கெடுப்புகள் கல்லூரிகளில் இருப்பதில் தவறில்லை.அது எல்லை மீறும் போதும் கல்லூரி நிர்வாகமே தண்டனைகள் வழங்கலாம்.அது அந்த மாணவரின் வாழ்வையே சூன்யமாக்கி விடாதவாறு இருக்க வேண்டும்.ஆனால் இங்குதான் நமது சாதிய மனநிலை செயல்படுகிறது.இவன் எப்படி நம் சட்டையை கிழித்து மிரட்டி பணிய வைக்க முடியும் என்ற எரிச்சல்,வன்மம் இதில் இருக்கிறது.நான் பதிமூன்று வருடங்களுக்கு முன்னால் சென்னைக்கு வேலை தேடி வந்த போது இரண்டு மனிதர்கள் எனக்கு கேட்கும் வகையில் பேசிக் கொண்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் ,தலித் பிரிவை சேர்ந்த இருவர் சபரிமலை செல்ல  நன்கொடை கேட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்.செல்லும் போது கமினாட்டி என்று சொல்லி சென்றுவிட்டார்கள்.

இவருக்கு கோபம்.ஒரு தலித் என்னை கமினாட்டி என்று திட்டிவிட்டான் என்பதை நினைத்து இவரால் தூங்க முடியவில்லை.தன் பகுதி காவல் நிலையத்தின் ஆய்வாளரை அழைத்திருக்கிறார்.அவர் வீட்டுக்கு வந்து அங்கிருந்து அந்த இரண்டு பேரை போனில் அழைத்திருக்கிறார்.அவர்கள் வந்திருக்கிறார்கள்.அவர்களை உள்ளாடையோடு முட்டி போட வைத்து மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.இந்த கமினாட்டி என்ற வார்த்தையை அவருடைய சாதியை சேர்ந்த ஒருவர் சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை செய்திருக்க மாட்டார்.ஆக அவருடைய கோபம் ஒரு தலித் எப்படி அதை சொல்லலாம் என்பதுதான்.பிரச்சனை சாதிய மனநிலையில் இருக்கிறது.இதே மனநிலைதான் ரோஹித் விஷயத்திலும் நிகழ்ந்திருக்கிறது.அது அம்பேத்கர் மாணவர் அமைப்பு.அது உயர்த்தப்பட்ட சாதி மாணவர்களை கொண்ட ஒரு இடதுசாரி அமைப்பாக இருந்தால் பிரச்சனை இதே போலத்தான் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

தான் எதற்காக அந்தப் பல்கலைகழகத்திற்கு வந்தோமோ அதிலிருந்து விலகி அடையாள அரசியலில் சிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை நினைத்து ரோஹித் சோர்வடைகிறார்.அதலிருந்து மீளவும் வழியில்லை.இருக்கவும் வழியில்லை.காலம் கடந்துகொண்டிருக்கிறது.இனி இழப்பதற்கு நேரம் இல்லை என்று மனம் சொல்கிறது.தொலைந்து போன பால்ய காலத்தை கொண்ட ரோஹித் தான் ஒரு எண்ணாக, ஓட்டாக மாறியிருக்கும் அவஸ்தையால் சலிப்படைகிறார்.இனியும் காலத்தை இழக்க முடியாது.இழந்தவை போதும் என்று நினைக்கிறார்.இனி இதிலிருந்து மீட்சி இல்லை என்று கருதுகிறார்.அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.தற்கொலை என்பது ஒரு அறிவிப்பு.நான் இந்த வாழ்வை எப்படி வாழ விரும்பினேனோ அப்படி வாழ இயலாமல் போய்விட்டது.நான் அதை இன்னதாக அர்த்தப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.ஆனால் வாழ்க்கை என்னை இந்த வகையில் இழுத்து சென்று விட்டது.அதை நான் மறுக்கிறேன் என்பதன் அறிவிப்பு அது.இந்த வாதத்தை நீட்டித்துதான் ஆல்பர் காம்யூ வாழ்வை எந்த மாதிரியும் அர்த்தப் படுத்திக்கொள்ளாமல் அபத்தமாக பார்க்கலாம் என்கிறார்.அப்படி அபத்தமாக பார்க்கும் போது எதுவுமே பிரச்சனை அற்றதாக மாறுகிறது.அபத்த வாழ்வில் அனைத்தும் அபத்தமாக மாறுகிறது.அர்த்தம் தேடி செல்ல வேண்டியதில்லை.அப்படி அபத்தமாக பார்க்கும் போது நமது அடையாளங்கள் அர்த்தமிழந்து ஒரு சொரூப நிலைக்கு செல்லலாம் என்கிறார் நகுலன்.நகுலன் எனும் பெருங்கவிஞர் கண்டுபிடித்த பெரும் தரிசனம் அது.

ரோஹித் வெமுலாவின் பேஸ்புக் பக்கத்தில் மரியான் திரைப்படத்தின் ஒரு பாடலின் சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை படித்தேன்.காதலியுடன் சிரித்துப் பேசி தன் துறையில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டிய மனித உயிர்.அவருக்கு கவிஞர் சுகுமாரன் போன்ற ஒருவர் அந்த நேரத்தில் அழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.அது நிகழவில்லை.ரோஹித் வெமுலா தன் தற்கொலையின் மூலம் தான் எதை விரும்பினேன் என்பதை சொல்லி சென்றிருக்கிறார்.அவர் நினைத்தவை நிகழ வேண்டும்.அறிவியலிலும் , சமூக சிந்தனைகளிலும் பெரும் பங்களிப்பை ஆற்றியிருக்கக் கூடியவர் ரோஹித்.அவரை நாம் இழந்துவிட்டோம்.அவருக்கு என் அஞ்சலி.


அருணா ஷன்பக்







ஒரு மாதத்திற்கு முன் அருணா ஷன்பக் மரணமடைந்த செய்தி பல செய்திதாள்களில் தலைப்புச்செய்தியாக வந்தது.நாற்பது வருடங்களுக்கு மேலாக செயலற்று உணர்வற்று காய்கறி போல , அவர் செவிலியராக வேலை செய்த மருத்துவமனையிலேயே படுக்கையில் இருந்தவர் சென்ற மாதம் மரணமடைந்தார்.அவர் செவிலியராக வேலை செய்த மருத்துவமனையில் துப்பரவு வேலை செய்த ஒப்பந்த தொழிலாளி சோகன் லால், மருத்துவனையின் அடித்தளத்தில் அருணா வேலை முடிந்து உடைமாற்றிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை பாலியில் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான்.அவர் மாதவிடாய் காலத்திலிருந்தால் அவரை ஆசனவாயில் புணர்ந்திருக்கிறான்.அப்போது அவர் தப்பிக்க முயற்சித்ததாலோ அல்லது அவரை கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கதினாலோ சங்கிலியால் அவரது கழுத்தை இறுக்கியிருக்கிறான்.அந்த செயலால் அவருக்கு மூளைக்கு செல்லும் பிராண வாயு தடைப்பட்டிருக்கிறது.சில செய்திதாள்கள் அருணா அந்தத் தொழிலாளியை அவன் நாய்களுக்காக வைத்திருந்த உணவை திருடுவதை பார்த்து அதைப் போல மறுபடியும் செய்தால் புகார் அளித்துவிடக்கூடும் என்ற சொன்னதால் அவரை திட்டமிட்டு அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்கின்றன.

இதில் இரண்டாவதுதான் பெரும்பாலும் உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது.ஏனேனில் இந்த சம்பவத்திற்கு ஏழு வருட தண்டனை பெற்று பின்னர் விடுதலை அடைந்த சோகன் லாலை கண்டுபிடித்து அவனது கிராமத்திற்கு சென்ற ஒரு செய்தியாளர் அங்கிருந்த மக்களுக்கு இந்த விவரம் எதுவுமே தெரியவில்லை என்கிறார்.அப்படியென்றால் சோகன் லால் மறுபடியும் அந்த கிராமத்திலோ அல்லது வேறு எங்கோ அது போல வேறு எந்த பெண்ணுடனும் நடந்து கொள்ளவில்லை என்று கொள்ளலாம்.பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட விதமாக நடந்து கொள்ளும் நாம் அதே சூழல் மறுபடியும் வந்தால் அதே போலத்தான் நடந்து கொள்கிறோம்.இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து பொய் குற்றச்சாட்டால் சிறை சென்ற நம்பி நாராயணன் ஒரு பேட்டியில் நாம் மறுபடி மறுபடி ஒரே போலத்தான் நடந்து கொள்கிறோம் என்கிறார்.அப்படிச் செய்யாமல் மாற்றம் அடைவது என்பது நாம் உடைந்து மறுபடியும் எழுவது போன்றது.மிகப்பெரிய அனுபவங்கள் , சிதைவு , பிறழ்வுக்கு பின்னால் அத்தகைய ஒரு மாற்றம் சாத்தியமாகலாம்.சட்டத்தில் Habitual Offenders என்று சொல்லப்படுகிறது.இதை தனி மனிதர்களுக்காக அல்லாமல் சாதி ரீதியானதாக ஆங்கில ஆட்சியில் இருந்ததை நாம் அறிவோம்.எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி அப்படி குற்றம் சாட்டப்பட்ட குற்றப்பரம்பரையினரை பற்றியதுதான்.  

இன்றைய சூழலில் ஒருவரின் குற்றத்தை ஆராயும் போது அவர் இது போன்ற குற்றங்களை இதற்கு முன் செய்திருக்கிறாரா அல்லது இதுதான் முதல் முறையா என்பது முக்கியமான விஷயம்.தற்செயலாக முதல்முறையாக ஒரு குற்றத்தை செய்வதற்கும் இரண்டாவது முறையோ அல்லது அதற்கும் மேலோ அதை செய்வதற்கும் வித்யாசம் இருக்கிறது.முதல் முறை எனும் போது தண்டனையை குறைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

சோகன் லால் , அருணா ஷன்பக் நாய்களுக்காக வைத்திருந்த உணவை திருடியதை கண்டித்ததால் அவரை பழிவாங்கும், அவமானப்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்திருக்கிறான் என்பதில் உண்மை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அப்படி இல்லாமல் அவன் எளிதில் தவறிழைப்பவனாக இருந்திருந்தால் அவன் அந்த ஒற்றைச் சம்பவத்தோடு நின்றிருக்க மாட்டான்.சோகன் லால் அந்தப் பெண்ணிடம் தன் ஆண்மையை நிறுவ வேண்டும் என்ற மூர்க்கத்தனத்தின் வெளிப்பாடே அந்தச் செயல்.கர்நாடகத்தில் சரஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்த அருணா ஷன்பக் படித்து செவிலியராக மும்பையில் கெயிஎம் மருத்துவமணையில் பணிபுரிந்திருக்கிறார்.இந்தச் சம்பவம் நடக்கும் போது அவருக்கு வயது இருபத்தியைந்து.அந்த மருத்துவமணையில் வேலை செய்த இளநிலை மருத்துவர் ஒருவரை காதலித்திருக்கிறார்.இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருந்தார்கள்.எத்தனை அழகான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கக்கூடும்.சோகன் லாலின் மகன் செய்தியாளர்களிடம் என் தந்தை அந்தச் செயலை செய்யவே இல்லை ,அது அவர் மீது திட்டமிட்டு செய்யப்பட்ட புகார் என்று சொல்லியிருக்கிறார்.

மருத்துவமனை புகாரில் அது ஒரு திருட்டு மற்றும் கொலைக்கான முயற்சி என்று தான் சொல்லியிருக்கிறது.வல்லுறவை பற்றிச் சொன்னால் அது அந்தப் பெண்னையும் அவரது எதிர்கால திருமண வாழ்வையும் பாதிக்கும் என்று மருத்துவமனையினர் நினைத்திருக்கிறார்கள்.ஆனால் அதன் பிறகு அருணா ஒருபோதும் படுக்கையை விட்டு எழவே இல்லை.ஒரு முறை அவரை கருணைக்கொலை செய்யச்சொல்லி பிங்கி விரானி என்பவர் உச்சநீதி மன்றத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.கெயிஎம் மருத்தவமணையின் செவிலியர்கள் அவரை நன்றாக பார்த்துக்கொண்டார்கள் என்கிறார்கள்.எவ்வித செயலுமற்று உணர்வுமற்று நாற்பது ஆண்டுகளுக்காக மேலாக படுக்கையில் இருந்தவரை கருணைக்கொலை செய்யாமல் பார்த்துக்கொண்டதுதான் மனிதாபிமானமா.தெரியவில்லை.அவருக்கான உணவு முழுவதும் நிறுத்தப்பட்டு அவரை இறக்க அனுமதித்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.அதுதானே ஒரு மனிதர் என்ற முறையில் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.உயிர் வாழ்தல் மட்டும் அல்ல கண்ணியத்தோடு உயிர் வாழ்தலும் வேண்டும்.அது சாத்திமே இல்லாமல் போன அருணா ஷன்பக்கை நாம் நமது பாவனைகள் கலந்த மனிதாபிமானத்தை ஒதுக்கிவிட்டு இறக்கச் செய்திருக்கலாம்.

சோகன் லால் தன் எளிய அகங்காரச் சீண்டலால் செய்த ஒரு செயல் ஒரு பெண்ணின் வாழ்வையே பாதித்திருக்கிறது.சோகன் லால் வெறும் ஏழு வருடங்கள் சிறையிலிருந்து விட்டு வெளியே வந்துவிட்டான்.அவனது செயலால் பாதிக்கப்பட்ட அருணா நாற்பது வருடங்களுக்கு மேலாக எந்த தவறுமே செய்யாமல் துயரத்தை அனுபவித்து மரணமடைந்திருக்கிறார்.நாம் நமது கோபத்தால் , அகங்காரச் சீண்டலால் , விரக்தியால் , சோம்பலால் , எரிச்சலால் செய்யும் எத்தனையோ செயல்கள் பிறரின் வாழ்வை எப்படியெல்லாம் பாதித்துவிடுகிறது.குடித்துவிட்டு வண்டி ஓட்டிச்சென்ற சல்மான்கான் வீடு இல்லாமல் நடைபாதையில் படுத்தியிருந்தவர் மீது வண்டி ஏற்றுகிறார்.அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளக்கூட அவரால் இயலவில்லை.அவரின் பிரச்சனை என்ன.எதற்காக குடித்துவிட்டு வண்டி ஓட்ட வேண்டும்.ஏன் அடிப்படையான சமூக ஒழுங்கு இல்லாமல் போனது.இறந்துபோனவருக்காக அவர் வருத்தப்பட்டாரா, அல்லது குற்றவுணர்வுக்கு உள்ளானாரா என்று கூட தெரியவில்லை.ஒரு தவறை மறைக்க மற்றொன்று.இறுதியில் அவர் சிறைக்கு செல்லவே இல்லை.

பெரும்பாலான பாலியல் வல்லுறவுக்களுக்கு பின்னால் இருப்பது ஒரு ஆணின் அகங்காரம் மட்டுமே.காமம் இல்லை.டெல்லியில் பேருந்தில் நடந்த குற்றத்தில் அந்தப் பெண் இரவு ஒன்பது மணிக்கு தன் கணவன் அல்லாத தந்தை அல்லாத வேறு ஒரு ஆணுடன் வந்திருக்கிறார்.அந்தப் பெண் மீது செலுத்தப்பட்ட அடக்குமுறை மற்றும் ஆணின் அதிகாரமே அந்தச் செயல்.சோகன் லால் விஷயத்திலும் டெல்லி சம்பவத்திலும் நாம் வர்க்க வேற்றுமை இருப்பதையும் பார்க்கலாம்.பெரும்பாலும் ஒரு பெண் தான் காதலிக்கும் அல்லது திருமணம் செய்துக்கொண்ட ஆணை சீண்ட வேண்டும் என்று நினைக்கும் போது அவனால் பணம் சம்பாதிக்க இயலாததை, குடும்பம் நடத்த தெரியாததை, லெளகீக ஞானம் இல்லாததை, ஏதோ ஒரு சம்பவத்தில் அவன் தன் உயர் அதிகாரிகளிடமோ அல்லது பிறரிடமோ அச்சப்பட்டு மண்டியிட்ட கோழைத்தனத்தைதான் பட்டியலிடுகிறாள்.இதற்கு பின்னால் இருப்பது ஒரு ஆண் என்பவன் வீரமானவாகவும், லெளகீக ஞானம் உள்ளவனாகவும், குடும்பம் நடத்த தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.அடிப்படையில் இரண்டு விஷயங்கள் ஒன்று பணம் மற்றது வீரம்.இந்த இரண்டு விஷயங்களை வைத்துக்கொண்டுதான் ஒரு பெண் ஆணை குரூரமாக காயப்படுத்துகிறாள்.அவனை சீண்டி சண்டைக்கு இழுக்கிறாள்.பல குடும்பங்களில் இது நிகழ்கிறது.பணமும்,லெளகீக ஞானமும் உள்ளவர்களிடத்தில் பெரும்பாலான பெண்கள் சரணடைகிறார்கள்.அவனுடைய அத்தனை அடக்குமுறைகளையும் , அதிகாரத்தையும் மறுகேள்வி இல்லாமல் ஏற்கிறார்கள்.நாம் ஒரு ஆணின் மீது ஏற்றி வைக்கும் இந்த விழுமியங்கள் ஆண்களிடமும் பெண்களிடமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.மாற்றம் இருவரிடமும் நிகழ வேண்டும்.ஆண் குழுந்தைகளையும் பெண் குழுந்தைகளையும் ஒரே போல வளர்ப்பதும் , பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படும் விழுமியங்களின் மூலமாகவும்தான் இந்த மாற்றங்கள் சாத்தியமாகும்.கறுப்பு தாழ்வான நிறம் என்ற எண்ணம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கிறது.சிவப்பு என்பதை அழகின் நிறமாக நாம் ஏற்கிறோம்.இது எப்படி நிகழ்கிறது.குழுந்தைகளுக்காக உருவாக்கப்படும் கேலிச்சித்திரங்களில் கூட தீயவன் கறுப்பு நிறத்திலிக்கிறான்.ஏன் அவன் வெள்ளை நிறத்திலோ சிவப்பு நிறத்திலோ இருப்பதில்லை.இது போன்ற ஒரு பிரச்சனை தான் ஆணின் அகங்காரமும் அதன் வெளிப்பாடுகளும்.

அருணாவை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றிருந்த மருத்துவர் அருணா சிகிச்சையில் எந்த முன்னேற்றத்தையும் அடையாததை பார்த்து சிறிது காலம் கழித்து வெளிநாடு சென்று திருமணம் செய்துக்கொண்டார்.எவ்வித தவறும் செய்யாமல் பெரும் வலியையும் அவதியையும் அனுபவித்த அருணா ஷன்பக் என்ற இருபத்தியைந்து வயது வரை மட்டுமே வாழ்ந்த அந்த பெண்ணிற்கு அஞ்சலி.



என் பால்ய காலத்தின் மனிதர்




பால்ய காலத்தில் நெய்வேலியில் இருந்தபோது சில விடுமுறைகளின் போது பண்ருட்டியிலிருந்த என் சித்தப்பா வீட்டில் சென்று நாங்கள் தங்குவது வழக்கம்.என் சித்தப்பா பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர சபை செயலாளராக இருந்தார்.சிலர் அவரை தலைவரே என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.வீட்டில் இரண்டு அடி அகலமும் ஒரடி நீளமும் கொண்ட லெனின் , மார்க்ஸ், ஸ்டாலின் புகைப்படங்களும் அதில் ஏதோ வாசகங்களும் இருக்கும்.சமயங்களில் கட்சி கூட்டத்திற்காக அவருடைய வீட்டிற்கு வெளியே கம்பங்களை கிடத்தி அதில் கட்சி கொடியை கட்டிக்கொண்டிருப்பார்கள்.ஏதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட்கள் என்றால் நல்லவர்கள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள் என்ற பிம்பம் அப்போது மனதில் பதிந்துவிட்டது.ஒரு கட்டத்தில் கட்சியில் சேரலாமா என்ற எண்ணம் இருந்தது.இந்த பிம்பம் அநேகமாக 2007யில் என்னுடைய இருபத்தியைந்தாவது வயது வரை இருந்தது.அப்போது மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த நந்திகிராம் சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.அப்போது வாசித்த ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் புத்தகம், லட்சியவாதங்களுக்கு பின்னால் இருக்கும் கோர முகம் என்று பல விஷயங்கள் பயங்கரமாக குழப்பிவிட்டது.அதன்பிறகு சிறிதுசிறதாக கம்யூனிஸம் போன்ற விஷயங்களின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு போய்விட்டது.ஆனால் இப்போதும் நான் வாக்களிக்கும் தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் நின்றால் அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவேன்.அநேகமாக 2007யில் நிகழ்ந்த கயர்லாஞ்சி சம்பவம் என்னை இன்னொரு வகையில் பயங்கரமாக உலுக்கிவிட்டது.அந்த சம்பவம் , அந்த கிராமத்து மனிதர்கள், உயர் சாதி பெண்கள் அதை வேடிக்கை பார்த்தது என்று மனிதர்கள் மீதான நம்பிக்கையெல்லாம் தகரும் முதல் தருணமாக அது இருந்தது.

என் சித்தப்பா சென்ற வாரம் மரணமடைந்தார்.இயற்கை மரணம். பண்ருட்டியில் அவருடைய வீட்டில் ஒரு கட்டத்தில் ஒன்றோ இரண்டோ பசுமாடுகள் இருந்தன.பேரிங் வியாபாரம் வெகு ஜோராக சென்றுகொண்டிருந்தது. இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.நிம்மதியான குடும்ப வாழ்க்கை.விவசாய நிலங்கள் வாங்கினார்.அவரின் கடையில் நான்கைந்து நபர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.கட்சியில் நல்ல பொறுப்பு..அந்த காலகட்டம்தான் அவர் வாழ்வின் பொற்காலம்.அவரும் என் தந்தையும் இளமையில் மிகவும் வறுமையில் இருந்தனர்.முதலில் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை என்ற ஊரில் இருந்தார்கள்.பின்னர் பண்ருட்டி  வந்தார்கள்.என் தந்தை சட்டம் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஐஸ் பேக்டரி வைத்து இருவரும் நடத்தினார்கள்.பின்னர் பேரிங் வியாபாரம்.என் தந்தையின் திருமணம்.ஏதோ மனகசப்புகளால் என் தந்தை நெய்வேலி வந்துவிட்டார்.மிகவும் வறுமையிலிருந்து ஒரளவு நல்ல நிலைமைக்கு வந்த என் சித்தப்பாவிற்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது.அதிலிருந்துதான் அவரின் பொருளாதார சரிவு ஏற்பட்டது.மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்டது.நோய்மை அளிக்கும் மனகசப்புகளால் அவரின் வாழ்க்கை நோக்கு மாறிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.பின்னர் அதிலிருந்து வெளியே வந்து ஒரளவு நன்றாகத்தான் இருந்தார்.ஆனால் பொருளாதார ரீதியாக அவரால் மீளவே முடியவில்லை.ஒரு வகையில் அவருடைய வாழ்க்கை மிகப்பெரிய வாழ்க்கைதான்.சிலம்பம் கற்றிருந்தார்.வீட்டில் சாட்டை வைத்திருந்தார்.பெரிய மீசை வைத்திருப்பார்.மிகவும் இறுக்கமானவர்.அநேகமாக எப்போதும் வேஷ்டிதான் அணிந்திருப்பார்.அவர் என்னிடம் எப்போதும் பெரிதாக பேசியதாக எனக்கு நினைவில்லை.

கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் அவர் உடல் எரியூட்டப்பட்டது.தீ சட்டென்று வைக்கோலை பற்றிக்கொள்கிறது. ஒரு மனிதினின் உடல் எரிகிறது.முப்பதே வருடங்கள் நிரம்பிய என் வாழ்க்கையில் மனிதர்கள் மீதும் சித்தாந்தங்கள் மீதும் கடவுள் மீதும் எந்த நம்பிக்கையும் அற்ற ஒரு இருண்ட பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.என் பால்ய காலத்தில் லட்சிய வாழ்க்கையின் மீதும் நன்நெறிமீதும் எளிமை மீதும் ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பை உருவாக்கிய அந்த மனிதரை நினைத்துக்கொள்கிறேன்.அந்த நாட்களின் அறியாமை என் வாழ்க்கையை மறுபடியும் பற்றிக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அது ஒருவகையில் நான் அவர் மீள் எழுந்து வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வது போலத்தான்.என் வாழ்க்கையில் ஒளி நிரம்பிய காலத்தில் நான் பார்த்து வியந்த ஒரு மனிதர் மறைந்துவிட்டார்.அவருக்கு என் அஞ்சலி.