தமிழ் அடையாளம் என்கிற கதையாடல்






சமீபத்தில் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் சோழர்களின் ஆட்சிகாலம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையானது.தமிழ் என்கிற தூய உள்முரண்கள் அற்ற அடையாளத்தை அவர் ஏதோ ஒரு வகையில் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறார்.அவர் மீது நிறைய புகார்கள்.கேலி.சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூற்று பாடலைச் சொல்லி அர்த்தம் கேட்ட போது எந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினரும் எதுவும் சொல்லவில்லை.தமிழ் என்கிற அடையாளம் எப்படி கட்டி எழுப்பப்பட்டது.யார் தமிழர்கள். ந.முத்துமோகன் எழுதியுள்ள தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் என்ற நூல் தமிழ் அடையாளத்தின் துவக்கத்தையும் அதன் பாதையையும் பற்றி விரிவாக பேசுகிறது1.

ஒர் அடையாள அணித்திரட்சி அந்த அமைப்புக்குள் இருக்கும் உள்முரண்களை நீர்த்துப்போகச் செயது ஒற்றை அடையாளத்தை கோருகிறது.தமிழ் என்கிற அடையாளம் சாதி,திணை,பால்,மத வேறுபாடுகளை நீர்த்துப்போகச் செய்து தமிழ் என்கிற அடையாளத்தை உருவாக்குகிறது.அந்த ஒற்றை அடையாளத்திற்குள் வட வேங்கிடம் தொடங்கி தென்குமரி வரை இருக்கும் மக்கள் ஒன்றினைகிறார்கள்.மூத்த குடிகள், சங்கத் தமிழ்,சாதிகளற்ற சமூகம், ஆரியர் வருகை , நிலவுடைமை சமூகத்தில் சாதிகளின் துவக்கம் , மூவேந்தர் வரலாறு என்று நமக்கு ஒரு கதையாடல் கிடைக்கிறது.எல்லா அடையாள இயக்கங்களின் இறந்த காலமும் பொற்காலங்களே.இந்துத்துவ இயக்கங்களிலும் , திராவட இயக்கங்களிலும் , அயோத்திதாச பண்டிதர் முன்வைத்த பூர்வ பெளத்த இயக்கத்திலும் ஏதோ ஒரு காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.மறுபக்கம் இடதுசாரிகள் வருங்காலத்தில் பொற்காலத்தை தேடுகிறார்கள்.தஸ்தாவெய்ஸ்கியின் பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வலதுசாரி இயக்கங்கள் பற்றி ஷாடோவ் நிகோலய் சொன்னதாக சொல்வது வலதுசாரி இயக்கங்களுக்கு எப்போதும் பொருந்தும்.வலதுசாரி இயக்கங்கள் தேசத்தை கடவுளுடன் இணைக்கிறார்கள்.அந்தக் கடவுள் அந்த தேசத்திற்கே உரியவர்.இன்று ஸ்ரீலங்காவிலும், இஸ்ரேலிலும் , இந்தியாவிலும் , வரும் காலங்களில் தமிழ்நாட்டிலும் அதை நாம் பார்க்க முடியும்.அனைத்து அடையாள இயக்கங்களுக்கும் மற்றொரு பொது போக்கு இருக்கிறது.அவர்களுக்கு ஒர் எதிரி தேவைப்படுகிறான்.எதிரி இல்லாமல் அடையாளம் சாத்தியமில்லை.நாம் இருவரும் ஒர் அடையாளம் என்கிற போது இந்த அடையாளத்தை இறந்தகாலத்தில் அல்லது எதிர்காலத்தில் காலி செய்யப்போகும் எதிரி இருக்கிறான் என்றும் நாம் நமது அடையாளத்தை காப்பாற்றுவதன் வழி மட்டுமே தொடர முடியும் என்ற செய்தியும் அடையாள இயக்கத்தில் இருக்கிறது.

ஆனால் இந்த அனைத்து அடையாள இயக்கங்கள் பிற்போக்குதனமானவை என்று நாம் தொகுத்து சொல்லி அடையாள இயக்கங்கள் தேவையற்றவை என்று தீர்ப்பு கூற  முடியாது.ஏனேனில் ஒர் அடையாள இயக்கம் எத்தகைய வர்க்க நலன்களை சார்ந்து நிற்கிறது என்பது அதன் போக்கை தீர்மானிக்கிறது.அயோத்திதாச பண்டிதர் பூர்வ பெளத்தம் என்ற கதையாடலை உருவாக்கினார்.உழைக்கும் மக்கள் அனைவரும் பூர்வ பெளத்தர்கள், சாதிகள் அற்றவர்கள்.பின்னர் இங்கு உருவான சாதியத்தால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் என்கிறார்.இங்கு அடையாளம் உழைக்கும் மக்களின் வர்க்க நலன்களை அவர்களுக்கான ஆன்மிகத்தை ,எதிர்காலத்தை அளிக்கும் வேலையை செய்கிறது.நீதிக் கட்சியின் அடையாள அணித்திரள்வு முதலாளித்துவத்தின் சலுகைகளை தன் மேட்டுகுடி சமூகத்துக்கு பெறுவதற்கான ஒரு ஏற்பாடாக இருந்தது. தொடர்ந்த திராவிட முன்னேற்ற கழகம் நிலவுடைமை சமூக அமைப்பையும் , முதலாளித்துவ சமூக அமைப்பையும் எந்த விமர்சனமும் இல்லாமல் அல்லது பெரிய விமர்சனங்கள் இல்லாமல் ஆதரித்து எதிரியை கட்டமைத்து அதே நேரத்தில் ஒரு பிசிறு அற்ற தமிழ் அடையாளத்தை உருவாக்கி அந்த அடையாளத்தின் வழி ஆட்சியை பற்றியது.

அம்பேத்கரின் வழியிலும் , அயோத்திதாசரின் வழியிலும் தலித் இயக்கம் பெளத்த அடையாள மீட்டுருவாக்கத்தை பற்றி தொண்ணூறுகளுக்கு பிறகு பேசத் துவங்கியது.அது அடிப்படையில் வர்க்கத் தளத்தில் உழைக்கும் மக்களின் , விளிம்பு நிலை மக்களின் அடையாள அணித்திரள்வாக மாற்றம் கொண்டது.கடந்த இருபது முப்பது வருடங்களில் தலித் இயக்கங்கள் தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய அளவிலான பாய்ச்சல்களை செய்திருக்கிறது.முதல் முறையாக தலித் சமூகம் அரசியல் அதிகாரம் நோக்கி நகர்ந்து வருகிறது.இங்கு அடையாள இயக்கங்களின் முக்கியமான சிக்கல் ஒன்றும் உள்ளது.ஒர் அடையாள இயக்கம் ஏதோ ஒரு வகையில் அந்த அடையாளத்தை விட்டு வெளியே வர முடியாததாக மாறி விடுகிறது.அதனால் மானுடம் தழுவிய ஒர் சித்தாந்தமாக மாற முடிவதில்லை.அதே நேரத்தில் அந்த இயக்கம் வர்க்கத் தளத்தில் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் செயல் திட்டத்தை கொண்டிருக்கும் போது அது விரிந்த தளத்தை அடைய முடிகிறது.

செவ்வியல் மார்க்சியம் சமூகத்தை இரண்டு வர்க்கங்களாக பிரிக்கிறது.தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள்.இந்த இரண்டு துருவ வர்க்கங்கள் தோன்ற முதலாளித்துவ சமூகம் உருவாக வேண்டும்.முதலாளித்துவ சமூகத்தில் மட்டுமே மற்ற அனைத்து வேறுபாடுகளும் மறைந்து இரண்டு வர்க்கங்கள் மட்டும் நிலை கொள்கிறது.0 அல்லது 1. அத்தகைய சமூகத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு பாட்டாளி சர்வாதிகாரம் தோன்றும் என்பது பாலபாடம்.ஆனால் இது ஐரோப்பாவில் கூட எங்கும் நிகழவில்லை.கம்யூனிஸ இயக்கங்கள் எங்கெல்லாம் வெற்றி பெற்றதோ அங்கெல்லாம் முதலாளித்துவ சமூகம் அதன் முறுக்கிய நிலையில் இருக்கவில்லை.ரஷ்யா, சீனா , கியூபா போன்ற நாடுகளில் புரட்சி ஏற்பட்ட போது முதலாளித்துவ சமூகம் ஐரோப்பா போல இருக்க வில்லை.ஆனால் அங்கு புரட்சி ஏற்பட்டது.

மார்க்சியம் சொல்லும் சமூக அமைப்பில் மேற்கட்டுமானம் அடித்தளம் என்ற இரண்டு அமைப்புகள் இருக்கின்றது.கிராம்சி அந்த மேற்கட்டுமானத்தை இரண்டாக வகுக்கிறார்.அதில் ஒன்று நாம் கண்கூடாக பார்க்கும் அதிகார அமைப்பு.மற்றது நுண்தளத்தில் இயங்கும் கலாச்சார அமைப்பு.இந்த இரண்டாவதை பற்றி அவர் பேசியது அடையாள இயக்கங்களின் அரசியல் பற்றிய விளக்கங்களை அளிக்கிறது.மனிதர்கள் அடிப்படையில் தனிமனிதர்கள் அல்லர்.முதலாளித்துவ சமூகத்திலும் அதன் உடன் தொடர்ச்சியான சோஷியலிச சமூகத்திலும் தனிமனிதர்கள் தோன்றுகிறார்கள்.தனிமனிதர்கள் தோன்றும் போது தனிமனித உரிமைகளின் கோஷங்களும் மேலெழுகிறது.முதலாளித்துவ சமூகம் தனி மனித உரிமைகளை ஆதிரிக்கிறது.ஏனேனில் முதலாளித்துவ சமூகத்திற்கு தனி மனிதர்கள் வேண்டும்.நவீன முதலாளித்துவம் தொடர்ந்து நிலை பெற திணை கடந்த, சாதி கடந்த , மதம் கடந்த , அரசாங்கம் கடந்த, தேசம் கடந்த தனிமனிதன் தேவை.அவனே நவீன முதலாளித்துவத்தை தொடரச் செய்வான்.சுந்தர் பிச்சை அமெரிக்கரும் அல்ல , இந்தியரும் அல்ல.அவர் தேசம் கடந்தவர்.கடவுள் அற்றவர்.சாதியை துறந்தவர்.அவர் தனிமனிதர்.

ஆனால் மறுபுறம் மனிதன் அடிப்படையில் தன் மூத்தாரையும் நீத்தாரையும் வேரையும் அதன் வழி தன் அடையாளத்தையும் தேடி அலைகிறான்.அயோத்திதாசர் இங்கு தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படும் சமூகம் ஆதியில் பூர்வ பெளத்தர்கள் என்று சொன்னார்.அம்பேத்கர் பெளத்தமே சாதியத்திலிருந்து விடுதலை அளிக்கும் வழி என்றார்.அவர்களுக்கு ஒர் அடையாளம் கிடைத்தது.அடையாளம் என்பதன் ஆங்கில சொல் Identity.Identity Identical என்கிற வார்த்தையில் இருந்து வந்தது என்கிறார் முத்துமோகன். 

அ =  ஆ என்று சொல்லும் போது அங்கு இரண்டும் சமம் ஆகிறது.ஆ என்பது ஒர் மாறிலி என்றால் அ அந்த மாறிலியை போன்றது என்றாகிறது.சமூகத்தில் இவர்கள் இந்த அடையாளத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லும் போது அங்கு தனிமனிதர்கள் மறைகிறார்கள்.உள் முரண்கள் மறைகிறது.அடையாளத்தின் கோஷம் முன்னுக்கு வருகிறது.ஒரு ஜனசக்தி உருவாகுகிறது.அந்த ஐனசக்தி எந்த வர்க்க நலன்களை ஆதிரித்து நிற்கிறது என்கிற அடிப்படையில் அது மேற்கட்டுமானத்திலும் அடித்தளத்திலும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதனை நாம் ஊகிக்கலாம்.

தலித் இயக்கமும் அடையாள இயக்கம் தான், இந்துத்துவ இயக்கமும் அடையாள இயக்கம் தான்.ஆனால் இரண்டின் வர்க்க நோக்கங்கள் வேறு.கம்யூனிச இயக்கங்களும் இந்துத்துவ இயக்கங்களும் ஒரே காலத்தில் 1925யில் தோன்றியவை.இந்துத்துவ இயக்கம் இன்று ஆட்சியில் இருக்கிறது.கம்யூனிஸ கட்சிகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள்.இன்று இந்தியா பெருநகர தனிமனிதர்கள் நிரம்பிய சமூகம்.கிராம , சிறுநகர மக்கள் தொகை மெல்ல குறைந்து பெருநகர சமூகம் மேலெழுகிறது.அதுவரை சாதி, திணை , மொழி என்ற அடையாளத்தை தன்னுணர்வு அற்று கொண்டிருந்த மக்கள் பெருநகரத்தில் அதை இழக்கிறார்கள்.கலாச்சார தளத்தில் இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தோன்றும் என்று சொன்னவாறு தொண்ணூறுகளில் அத்வானி ரத யாத்திரை சென்றார்.இந்திய தேசத்தின் கடவுள் ராமன்,அவரின் ராஜ்ஜியம் மறுபடியும் இந்த மண்ணில் தோன்றும் என்று பெருநகரத்தின் தனிமனிதர்கள் நம்பத் தொடங்கினார்கள்.இங்கு அடுத்த இருபது வருடங்களில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து இருக்கிறது2.

இந்த இந்துத்துவ இயக்கம் பெருநகர தனிமனிதர்களின் அடையாளமாக மாறியது.வர்க்கத் தளத்தில் இந்த இந்துத்துவ இயக்கம் உயர்த்தப்பட்ட ஜாதி இந்துக்களின் வர்க்க நலன்களை சார்ந்து நிற்கிறது.இந்த உயர்த்தப்பட்ட ஜாதி இந்துக்கள் ஜாதி அற்றவர்கள், மொழி அற்றவர்கள், திணை அற்றவர்கள்.ஜாதியற்ற ஒரு ஜாதியும் பெருநகரத்தில் உயர்த்தப்பட்ட ஜாதி இந்துக்களின் மத்தியில் உருவாகுகிறது.”இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா” என்று பேசத்துவங்குகிறார்கள்.பற்பல உயர்சாதிகள் இணைந்து ஒற்றை சாதி ஆகிறது.அவர்களின் மொழி ஹிந்தி ஆகிறது.கடவுள் ராமர் ஆகிறார்.இந்த பூமி ராம ஜென்ம பூமி ஆகிறது.எதிரி கட்டமைக்கபடுகிறான்.இங்கு ராம ராஜ்ஜியம் நிகழ வேண்டும்.நாம் எல்லோரும் ஒர் இன, ஒரு மொழி , ஒரே தேசிய இன மக்கள்.அனைத்து உள்முரண்களும் இல்லாமல் ஆகிறது.இப்போது இந்த பெருநகர தனிமனிதர்களின் வர்க்க நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.தொடர்ச்சியாக பெருநகரத்தின் உயர் சாதி இந்துக்களின் வர்க்க நலன்களை பாதுகாக்கும் ஒர் அரசாக பாரதிய ஜனதா கட்சியின் அரசு இருக்கும்.இன்று கிராம , சிறு நகர உயர்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட இந்துக்கள், சிறுபாண்மையினர்  நாளை , பெருநகர உயர்த்தப்பட்ட சாதி இந்துக்களுக்கு வேலை செய்யும் இடத்திற்கு சென்று சேர்வார்கள்.இப்படியாக இந்துத்துவ கலாச்சார அரசியல் மேற்கட்டுமானத்தில் மாற்றங்களை செய்து அதன் வழி சமூக அடுக்கை உறுதி செய்யும்.இந்துத்துவ அரசியலின் வழி நாம் அடையாள அரசியலின் உளவியல் ஆக்கிரமிப்பையும் அதனால் மேற்கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் , அடித்தளத்தில் அதன் பாதிப்பையும் காண்கிறோம்.

ஆறுமுக நாவலர் யாழ்ப்பானத்தில் மேற்கொண்ட சைவ மீட்டுருவாக்க கதையாடலும் அதன் வழி உருவான சைவ வேளாளர் வர்க்க நலன்களும், கால்டுவெல் முன்வைத்த ஆரியர் திராவிடர் கதையாடலும் அதன் வழி கட்டமைக்கப்பட்ட எதிரியும், வள்ளலாரின் பெருங்கருணை என்ற மத்திய தர வர்க்க கதையாடலும் அதன் விரிவும், அயோத்திதாச பண்டிதரின் வழி உருவான பூர்வ பெளத்தம் என்ற உழைக்கும் வர்க்க மக்கள் கதையாடலும்,நீதிக்கட்சியின் வழி உருவான பிரமானரல்லாதவர்களின் வர்க்க நலன் கதையாடலும், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய தனிமனித கதையாடலும் , தோழர் ஜீவா முன்வைத்த பண்பாட்டு மார்க்சியமும் சிங்காரவேலர் முன்வைத்த அரசியல் பொருளாதார மார்க்சியமும் அதன் பின் திராவிட முன்னேற்ற இயக்கம் வழியாக இங்கு உருவான பிசிறுகள் அற்ற தமிழ் அடையாள கதையாடல் என்று தமிழ் அடையாள அரசியலின் இயங்கியலின் பாதையை சொல்லிச் செல்கிறார் ந.முத்துமோகன்.

இன்று நாம் வந்து அடைந்திருக்கும் தமிழ் அடையாளம் உள்முரண்களை கண்டுகொள்ளாத விளிம்புகளை பற்றி கவலைப்படாத நிலப்பிரபுத்துவ , முதலாளித்துவ நலன்களை பாதுகாக்கும் தமிழ் அடையாளம்.இந்த தமிழ் அடையாளத்தின் போதாமைகளிலிருந்து தொண்ணூறுகளில் தலித் இயக்கங்கள் தோன்றின.அவை தனக்கான கதையாடலை அயோத்திதாசர் வழியாக அம்பேத்கர் வழியாக பெற்றன.அடையாள இயக்கங்கள் மார்க்சிய இயக்கங்கள் அளிக்க இயலாத உளவியல் சக்தியை ஒரு ஜனத்தொகைக்கு அளிக்கிறது.அதுவே அடையாள இயக்கங்களின் தொடர்வுக்கான காரணமாக அமைகிறது.அதே நேரத்தில் இந்த அடையாள இயக்கங்கள் சார்ந்து நிற்கும் வர்க்க நலன்கள் அவை மேற்கட்டுமானத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்க வல்லது என்பதையும் சுட்டிநிற்கிறது. வெறுமன வர்க்க முரண்பாட்டை பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் அடையாள அணித்திரட்சியின் அவசியத்தை இந்திய மார்க்சியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பல இடங்களில் முத்துமோகன் சொல்கிறார்.

பிரம்மம் என்கிற கருத்து வழி உலக மாயை என்கிற கதையாடலும் ஆன்மா என்கிற கருத்து வழி உடல் தீட்டானது என்ற கதையாடலும் உருவாக்கப்பட்டது.பெளத்தம் இந்த கதையாடலுக்கு எதிரான ஒரு மாற்று கதையாடலை உருவாக்கியது.அது அனான்மத்தை பற்றி பேசியது.தனிமனிதர்கள் என்ற கருத்தை எதிர்த்து சங்கத்தை முன்னிறுத்தியது.மத்திம மார்க்கத்தை பற்றி பேசியது.எல்லா மார்க்கங்களும் ஏதோ ஒரு வகையில் நாம் தனிமனிதர்கள் என்ற கருத்தை நிராகரித்தன.அதன் வழி ஒர் அடையாளத்தை அந்த மக்களுக்கு வழங்கியது.மனிதர்களுக்கு அடையாளம் தேவைப்படுகிறது.அதுவே அவர்களுக்கான இச்சா சக்தியாக அமைகிறது.அதுவே அவர்களை தியாகம் செய்ய வைக்கிறது.அதுவே தன்னலத்தை போற்றுவதை குறைக்கச் சொல்கிறது.அதுவே சமூகமாக வாழ வழி செய்கிறது.அந்த அடையாள அணித்திரட்சியின் வர்க்க நலன் விளிம்பு நிலை மக்கள் சார்பானதாக இருக்கும் போது அது இடதுசாரி தளத்திலும் அதுவே மேட்டுகுடி மக்களின் சார்பானதாக மாறும் போது வலதுசாரி தளத்திலும் சென்று அமர்கிறது.ஆனால் இந்திய போன்ற சமூகத்தில் அடையாள அரசியல் அற்ற வர்க்க அரசியல் சாத்தியமில்லை என்பதே முத்துமோகன் நூலின் முக்கிய செய்தி.தமிழ் அடையாளம் என்ற கதையாடல் இனி எத்திசை நோக்கி செல்லும்.நாம் பார்ப்போம்.

1 - தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் – ந.முத்துமோகன் – என்.சி.பி.எச் வெளியீடு

2 – ஒர் உரையாடலில் அபிலாஷ் உலகமயமாக்கலுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி 
தொடர்ச்சியாக முன்னேறி வந்தது.அதற்கான காரணம் பெருநகரங்களில் வந்து குவிந்த மக்களே என்றார்.முக்கிய அவதானிப்பு.


Photo by Tom Barrett on Unsplash