தஸ்தாயெவ்ஸ்கியின் இருத்தலியம்

 


இருத்தலியமும் மார்க்ஸியமும் நூலில் பாஸ்கலிலிருந்து சார்த்தர் வரையிலான இருத்தலியலாளர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. தஸ்தாயெவ்ஸ்கியைத் தவிர! ஆனால் புனைவு உலகில் இருத்தலியத்தை பேசியவர்களில் தஸ்தாயெவ்ஸ்கி முதன்மையானவர்.இருத்தலியத்தின் தந்தை என்று சொல்லப்படும் கீர்க்கேகார்ட் காலத்தில் வாழ்ந்தவர் தஸ்தாயெவ்ஸ்கி.

ஆல்பெர் காம்யு தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய பீடிக்கப்பட்டவர்கள் நாவலை அடிப்படையாகக் கொண்டு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரக்கூடிய நாடகம் ஒன்றை எழுதி இயக்கினார்.தஸ்தாயெவ்ஸ்கியின் மற்ற நாவல்களுடன் ஒப்பீடுகையில் இந்த பீடிக்கப்பட்டவர்கள் நாவலே எவ்வித மீட்சியும் அற்று முற்று பெறுகிறது, அதன் காரணமாகவே அதை நாடகமாக இயக்க தேர்வு செய்தேன் என்று நேர்காணல் ஒன்றில் கூறுகிறார் காம்யு.காம்யுவின் அந்நியன் நாவலில் வரும் மெர்சால்ட் “அனைத்து வாழ்க்கைநிலைகளும் மதிக்கத்தக்கதே” என்பான்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் திமித்ரி “எங்கும் வாழ்க்கை வாழ்க்கையே” என்று அல்யோஷாவிடம் கூறுவான்.ஆல்பெர் காம்யுவின் வீழ்ச்சி நாவல் நிலவறையிலிருந்து குறிப்புகள் நாவலின் தொடர்ச்சி என்று கூற முடியும்.ஆல்பெர் காம்யு இந்த வாழ்க்கை அபத்தமானது என்றும் அந்த அபத்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும் அப்படியான ஒரு சூழலில் மனிதர்களுக்கு மத்தியில் நேசமும் நட்பும் இருக்க முடியும் என்றும் தன் கோட்பாட்டை உருவாக்கினார்.ஆல்பெர் காம்யு தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுகளிலிருந்தும் தன் இருத்தலிய நோக்கை உருவாக்கிக் கொண்டார்.

இருத்தல் சாரம்சத்திற்கு முந்தையது.இதை இருத்திலியக் கோட்பாட்டின் சாரம் என்று கொள்ள முடியும்.அதாவது மனிதன் உன்னதமானவன் என்று நாம் சொல்லும் போது உன்னதம் எனும் சாரத்தை மனிதன் எனும் பொதுமைகள் (Universals) மீது ஏற்றுகிறோம்.அப்படியான எதையும் இருத்தலியம் மறுக்கிறது.அவனது இருத்தலே உங்களது சாரம்சங்களுக்கு முந்தையது என்று கூறுகிறது.மனிதனை வகுக்கவோ தொகுக்கவோ செய்யாதீர்கள் என்கிறது இருத்தலியம்.உணவு சேகரிப்பை வாழ்க்கை முறையாக கொண்டிருந்தவர்களின் காலத்திலும், நிலப்பிரபுத்துவ காலத்திலும் இருத்தலியத்தின் பங்கு என்ன? ஒன்றுமில்லை.இருத்தலிய கோட்பாடு தனிமனிதனை அலகாக கொண்டது.இத்தாலியில் கலைஞர்கள் மத்தியில் துவங்கிய மறுமலர்ச்சி இயக்கம் அதைத் தொடர்ந்து ஜெர்மனியில் உருவான சீர்த்திருத்தக் கிறிஸ்தவம், ஐரோப்பாவின் அறிவொளிக் காலம்,பிரெஞ்சுப் புரட்சி, நீராவி இயந்திரங்களும் அவை இங்கிலாந்தில் கொண்டுவந்த தொழில் சமூகங்களும் தனிமனிதனின் வருகையை உலகுக்கு அறிவித்தன.

தனிமனிதனின் வருகையே இருத்தலியக் கோட்பாட்டின் தத்துவத்தை உருவாக்கியது.நான் என் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும், எந்த வேலைக்கு செல்ல வேண்டும் , எந்த ஊரில் வாழ வேண்டும் , யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற வாழ்வின் முக்கிய முடிவுகளில் இன்று கூட இந்தியத் தனிமனிதன் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க இயலாது.அவன் பல்வேறு சமூக அழுத்தங்களுக்கு உட்பட்டே தன் தேர்வுகளை செய்கிறான். அதே நேரத்தில் அவனுக்கு இன்று ஓரளவு தேர்வுகள் இருக்கின்றன என்பதும் உண்மைதான்.ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூட இப்படியான எந்தத் தேர்வும் இந்தியக் குடிமகன்கள் பெரும்பாலோனருக்கு சாத்தியப்படவில்லை. திருமணம், குழந்தைகள் , வேலை, சமூக அடையாளம் ஆகியவற்றில் தனிமனிதனின் தேர்வு என்று எதுவும் அப்போது இருக்கவில்லை.ஏனேனில் அப்போது தனிமனிதன் பிறக்கவே இல்லை.

முதலாளித்துவ சமூகங்களும் , பெருநகரங்களுமே தனிமனிதர்களை உருவாக்கின.தனக்கு என்று குழு இல்லாமல் பெருநகரத்தில் தனிமனிதன் தனித்து விடப்படுகிறான்.இருத்தலிய கோட்பாடுகளை நாம் அப்படியான ஒரு வரலாற்று சூழலில் வைத்துதான் பார்க்க முடியும்.இருத்தலியம் எப்போதைக்குமான கோட்பாடு அல்ல.முதலாளித்துவ சமூகத்தில் தனிமனிதன் தன் தேர்வுகளை தானே செய்து கொள்ள இயலும், தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ள இயலும் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.அது தோற்றம் மட்டுமே.ஆனால் உங்களின் வேலை நேரத்தை மட்டுமல்ல உங்களின் ஓய்வு நேரத்தையும் சமூகமே பார்த்துக்கொள்கிறது என்கிறார் நவ மார்க்ஸியர் ஹெர்பர்ட் மார்க்யூஸா ஒற்றை பரிமாண மனிதன் நூலில்.சார்த்தர் தனிமனிதன் தன் தேர்வுகளை செய்வதற்கு எந்தத் தளையும் இல்லை, அவன் எப்போதும் எந்தத் தேர்வையும் மேற்கொள்வதற்கு முழு சுதந்திரம் உண்டு என்கிறார்.அவன் தன் தேர்வுகளை தானே செய்வதால் அதற்கான முழு பொறுப்பையும் அவனே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.இது அவனை மேலும் எடை கொண்டவனாக ஆக்குகிறது.

கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷே எழுதியது அவரின் புகழ் பெற்ற வாக்கியம்.கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷே சொல்வதை இரண்டு வகையில் புரிந்து கொள்ளலாம்.கடவுள் இல்லை என்றால் கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்ட நன்மை X தீமை, சொர்க்கம் X நரகம் ஆகிய இருமைகள் இல்லாமல் போகின்றன.அவரின் ஒரு நூலின் பெயர் நன்மை தீமைக்கு அப்பால்.இப்படியான அற விழுமியங்கள் இல்லாமல் ஆகும் போது மனிதன் தன் செயலை எதன் அடிப்படையின் மேற்கொள்வான்.இன்னொருவனை கொலை செய்யக்கூடாது என்பதை எதன் அடிப்படையில் பிழை என்று சொல்வான்.இது ஒரு பார்வை.மற்றொரு பார்வை அற விழுமியங்கள் என்ற எந்தத் தளையும் இல்லை என்பதால் ஒரு தனிமனிதனுக்கு எந்தச் செயலையும் செய்வதற்கு தடையில்லை என்ற நோக்கு.செயற்கையாக உருவாக்கப்பட்ட அற விழுமியத் தளைகளை அறுத்தெறிந்து தனிமனிதன் அதிமனிதன் ஆக முடியும்.இது இரண்டாவது பார்வை.சர்வாதிகாரத்தின் , ஃபாசிசத்தின் , விஞ்ஞானத்தின், கொடுங்கோல் அரசுகளின் ஊற்றுமுகம் இந்தப் பார்வையில் இருக்கிறது.

எந்தவித ஒழுக்க நெறிகளும் இல்லை என்றால் எதையும் செய்யலாம்.உங்களுக்கு தேர்வுகளை மேற்கொள்வதில் எவ்வித தடையும் இல்லை.சார்த்தர் சொல்லும் முழு சுதந்திரம் கடவுள் இறந்துவிட்டார் என்பதன் வழி சாத்தியமாகிறது.கடவுள் இல்லையென்றால் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையே என்று தஸ்தாயெவ்ஸ்கி எழுதியது நீட்ஷேவின் கடவுள் இறந்துவிட்டாருக்கு இணையான வாக்கியம்.இரண்டின் பொருளும் ஒன்றுதான்.தஸ்தாயெவ்ஸ்கியின் குரலில் பதற்றம் உள்ளது மட்டுமே இரண்டுக்குமான வித்யாசம்.குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ் நான் நெப்போலியனாக விரும்பினேன், அதனால் கொலை செய்தேன் என்கிறான்.ரஸ்கோல்நிகோவ் தனக்கு அதுவரை உருவாக்கி தரப்பட்ட நெறிகளை புறந்தள்ளி அந்தக் கொலைகளை செய்கிறான்.தனிமனிதனாக அவன் அந்தத் தேர்வை மேற்கொள்கிறான்.

கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்ஷேவின் இசை வாக்கியம் போல தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளிலும் நாம் வேறு சிலவற்றை பார்க்க இயலும்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் அல்யோஷாவிடம் நான் கடவுளை ஏற்கவில்லை என்று சொல்லவில்லை மாறாக எனது நுழைவுச்சீட்டை திருப்பிக்கொடுக்கிறேன் என்று மட்டுமே சொல்கிறேன் என்று தனது நிலைப்பாட்டை கூறுகிறான் இவான் கரமசோவ்.நாளை உருவாகக்கூடிய பொன்னுலகத்தை முன்னிட்டு இன்றின் துயரங்களை நியாயப்படுத்துவதை தன்னால் ஏற்க இயலாது என்றும் மற்ற துயரங்களை கூட விட்டுவிடலாம், குழந்தைகள் அடையும் துயரத்தை எந்த வகையிலும் நாளைய பொற்காலத்திற்காக பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறான்.

பொற்காலம் வருங்காலத்திலிருந்தால் அது இடதுசாரிப் பார்வை , இறந்தகாலத்தில் இருந்தால் அது வலதுசாரிப் பார்வை.தஸ்தாயெவ்ஸ்கி நாளைய பொற்காலத்தை ஏற்க விரும்பவில்லை. இறந்தகாலத்திற்கும் செல்ல விரும்பவில்லை.அவர் அப்போதைய நிலையே தொடரட்டும் என்று எண்ணத்தை கொண்டிருந்தார் என்று சொல்ல முடியும்.ஆனால் காலம் கண்ணாடியாக கரைகிறது என்ற நகுலனின் வரி போல அவர் தன் காலுக்கு கீழேயே பழைய உலகத்திற்கும் புத்துலகத்திற்கும் இடையே பெரும் பிளவு உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதையும் நன்கு அறிந்திருந்தார். இங்கிலாந்தை போன்ற தொழில்மய சமூகங்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் காலத்தில் ரஷ்யாவில் உருவாகவில்லை.ஆனால் அப்போது ஐரோப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.அவர் அவற்றை கூர்ந்து நோக்கினார்.ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.அங்கே தங்கியிருக்கிறார்.அவரின் அநேக நாவல்களில் தந்தை X மகன் மைய கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.அவருடைய தந்தை X மகன் என்ற இருமை உண்மையில் ரஷ்யா X ஐரோப்பா என்ற இருமையின் கருத்துருவகங்களே.

கீர்க்கேகார்ட்,பாஸ்கல், நீட்ஷே, ஹைடெக்கர் , காம்யு ,சார்த்தர் என்று பல்வேறு இருத்தலியலாளர்களுக்கு மத்தியில் ஒரு மையச்சரடாக தனிமனிதனும் அவனது சுதந்திர விருப்புறுதியும் இருந்தாலும் அவர்களின் பார்வைகளில் வேறுபாடுகளும் இருந்தன.ஒரு தனிமனிதன் முன் இருக்கும் தேர்வுகளில் எதைத் தேர்வது என்பது அவனது முடிவு என்பதால் அவன் தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலை வருகிற போது பதற்றம் கொள்கிறான்.அவன் மேற்கொள்ளும் தேர்வுகளுக்கு அவனே பொறுப்பு என்பதால் அவன் கையறுநிலையை அடைகிறான்.அப்போது அவனுக்கு ஒரு கடவுள் தேவைப்படுகிறார்.இதுவே அவனது அக வாழ்க்கைக்கான விடுதலையை,மீட்சியை அளிக்கிறது.இதை கிறிஸ்தவ இருத்தலியவாதம் என்று கூறலாம்.இதை நாம் கீர்க்கேகார்ட் , பாஸ்கல் போன்றவர்களிடம் பார்க்கலாம்.கிறிஸ்தவ கருத்தியலிலேயே நாம் செயல்-குற்றம்-பாவம்-மன்னிப்பு-தியாகம்-மீட்சி என்ற சட்டகத்தை பார்க்க முடியும்.கீர்க்கேகார்ட் ரெஜினா என்ற பெண்னை காதலித்தார்.அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சியக்கப்படுகிறது.ஆனால் இறுதியில் கீர்க்கேகார்ட் அந்த திருமண நிச்சயத்தை முறித்துவிடுகிறார்.ரெஜினா பின்னர் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறார்.இந்த தேர்வுக்கான குழப்பத்திலிருந்தும் பதற்றத்திலிருந்தும் , தேர்வின் பின்னான பொறுப்புகளிலிருந்தும் கையறுநிலையிலிருந்தும் கீர்க்கேகார்ட்டின் இருத்தலியம் துவக்கம் கொள்கிறது.அபிலாஷ் எழுதிய ரசிகன் நாவல் கீர்க்கேகார்ட்டின் வாழ்க்கையின் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.அதிலும் அந்தப் பெண்ணின் பெயர் ரெஜினா தான்.சாதிக் ரெஜினாவை காதலித்து இறுதியில் திருமண நிச்சயத்தை முறித்துவிடுகிறான்.ஆனால் அதன் பின் நாவல் கீர்க்கேகார்ட்டின் தத்துவ விசாரணையின் வழியில் செல்லவில்லை.

காம்யுவின் இருத்தலியவாதம் வாழ்வின் அபத்தத்தை முதன்மையாக கொண்டது.அறிவியல் கொண்டோ , சமயத்தை கொண்டோ நம்மால் இந்த பிரபஞ்தத்தை புரிந்து கொள்ள முடியாது.நாம் ஏன் இங்கு இருக்கிறோம், இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் மனிதனின் இருப்பு எந்த வகையில் அர்த்தம் கொள்கிறது என்பதை நம்மால் ஒரு போதும் விளங்கிக் கொள்ள இயலாது. அதனால் அவர் சிசிபஸின் தொன்மத்தை விளக்கி அதே போல நாமும் நம் தினசரியை வாழ வேண்டும் என்றார்.அதாவது இந்த வாழ்க்கை அபத்தமானது என்ற அறிதலுடன்,பிரக்ஞையுடன் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும் என்றார் காம்யு.

சார்த்தரின் இருத்தலியவாதம் சுதந்திரத்தை பற்றி பேசுகிறது.அவன் எந்தத் தேர்வை மேற்கொள்வதற்கும் அவனுக்கு எவ்வித தடையும் இல்லை.அவர் சுதந்திரத்தை அதிகம் வலுயுறுத்துவதாலேயே அவர் தனிமனிதன் ஒர் அமைப்பை சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்கிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.ஏனேனில் அவர் சொல்லும் சுதந்திர தேர்வு தான் அமைப்புகளுக்கு எதிரான அவரது தனிமனித புரட்சி.

நீட்ஷேவின் தனிமனிதன் கடவுள் இறந்துவிட்டதால் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அதிமனிதனாகி அவன் விரும்பும் வகையில் இந்த உலகத்தை மாற்றி அமைக்கலாம்.நீட்ஷேவின் அதிமனிதன் சோதனைக்கூடத்தில் உருவாக்கப்படும் மாதிரி போல உலகத்தை உருவகித்து அவன் விரும்பும் சமூக அமைப்பை உருவாக்கலாம்.அவன் எத்தனை மனித கொலைகள் வேண்டுமானாலும் செய்யலாம்.இயற்கையை அவன் எப்படி வேண்டுமானாலும் புனரமைக்கலாம்.இயந்திரங்கள் படைக்கலாம். விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் இணைக்கலாம்.எதுவும் சாத்தியம்.நீட்ஷேவின் இந்த அதிமனித நோக்கை ரஸ்கோல்நிகோவ் குற்றமும் தண்டனையும் நாவலில் மிக விரிவாக பேசுகிறான்.பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் கிரிலோவ் தற்கொலை செய்து கொள்கிறான்.ஆனால் அவன் அந்த தற்கொலையை ஒரு தேர்வாகவே முன்வைக்கிறான்.வாழ்க்கையின் மீதான சோர்வின் எதிர் வினையாக அல்ல.என் வாழ்வை நானே முடிவு செய்கிறேன் என்பதன் நீட்சியாகவே அந்த தற்கொலையை அவன் மேற்கொள்கிறான்.என் வாழ்வை நானே முடிவு செய்வதால் நானே கடவுளற்ற உலகின் கடவுள் என்கிறான்.நீட்ஷே இந்த அதிமனித பார்வையை தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்தும் பெற்றிருப்பதற்கான அனைத்து சாத்தியப்பாடுகளும் உண்டு.

மேலே சொன்ன அனைத்து இருத்திலியலாளர்களிடமிருந்து தஸ்தாயெவ்ஸ்கி முக்கியமான சரடில் வேறுபடுகிறார்.அவர் பேசியதும் ஒரு வகையில் கிறிஸ்தவ இருத்தலியவாதம் தான்.ஆனால் அது கீர்க்கேகார்ட், பாஸ்கல் போன்றோர் முன்வைத்த இருத்தலியவாதம் அல்ல.அவர் ஐரோப்பாவில் அன்று உருவாகிவந்த விஞ்ஞான அறிவை கூர்ந்து அவதானித்தார்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் நான்காவது பரிமாணம் குறித்தும் , ஒளியின் வேகம் குறித்துமான உரையாடல்கள் இருக்கின்றன.அவர் பொறியியல் கற்றவர்.சோசியலிச சித்தாந்தங்களின் தோற்றத்தை குறித்து கேள்வி எழுப்பினார்.அவர் கத்தொலிக்க திருச்சபையின் ஆன்மிக வறுமையிலிருந்தே நாத்திகம் தோன்றியதென்றும் அவற்றிலிருந்தே சோஷியலிச சிந்தனைகள் உருவானதென்றும் எண்ணினார்.அதனால் அவர் கத்தொலிக்க திருச்சபையை நிராகரித்து ரஷ்ய மக்கள் மரபான ரஷ்ய கிறிஸ்தவத்தை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சோஷியலிச,முற்போக்கு சிந்தனைகளை ஏன் தஸ்தாயெவ்ஸ்கி சந்தேகித்தார்.அவரே தன் இளம் வயதில் அப்படியான ஒரு குழுவில் இருந்தவர்தான்.அதன் பொருட்டு சிறை சென்றவர் தான்.அப்படியானால் பிற்காலத்தில் அவர் ஏன் அதே சிந்தனைகளை சந்தேகிக்க வேண்டும்.அவர் ரஷ்ய திருச்சபைக்கும் , அன்றைய ஜார் மன்னர்களுக்கும் விசுவாசமிக்கவராக இருக்க வேண்டும் என்பதால் அப்படியான ஒரு பார்வையை உருவாக்கிக் கொண்டார் என்று நாம் சொல்ல முடியும்.பீடிக்கப்பட்டவர்கள் நாவலின் பிரதியை அவர் மன்னருக்கு அனுப்பினார் என்று சொல்கிறார்கள்.ஆனால் அதற்கு பதிலாக அவர் மிக எளிய கதைக்கருக்களை கொண்ட நாவல்களை எழுதியிருக்க இயலும்.அவர் ஏன் அத்தனை சிரத்தைக்கொண்டு கடினமான நாவல்களை எழுதினார். தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகில் ஒரு உடைவு உண்டு என்று ரிச்சர்ட் பிவியர் தஸ்தாயெவ்ஸ்கியின் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நிலவறையிலிருந்து குறிப்புகள் நாவலுக்கு பின்னர் தஸ்தாயெவ்ஸ்கியின் பார்வையில் மிகப்பெரிய உடைவு உண்டாகுகிறது.புனைவில் உருவான முதல் இருத்தலியவாதி நிலவறையாளனாக இருக்கலாம்.தனிமனிதன் என்ற அலகு உருவான பின்னர் உருக்கொண்டவன் நிலவறையாளன்.அவன் மனிதன் எப்போது எந்த முடிவை எடுப்பான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்கிறான்.மனிதனை ஒரு வகைமாதிரியாக தொகுக்க இயலாது, மனிதனின் செயல்களிலிருந்து அவனது சிந்தனைகளை வகுக்க முடியாது என்கிறான்.இன்றைய தரவுகள் சூழ் உலகில் மனிதனை ஒரு மாதிரிக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்றே நாம் நினைக்கிறோம்.இதுவரை நீங்கள் வாங்கிய பொருட்கள்,உங்களின் ஊர், உங்களின் பாலினம்,இணையத்தில் உங்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் நீங்கள் அடுத்து என்ன பொருட்களை வாங்குவீர்கள் என்பதை ஒரு படிமுறை தீர்மானிக்கிறது.இதை வாங்கியவர்கள் இதையெல்லாம் வாங்கினார்கள் என்று உங்களை நோக்கி கடை விரிக்கிறது.உங்களை ஒரு வகைமாதிரியாக தொகுக்கிறது.மனிதர்களை தொகுத்து அவர்களுக்கான தனிச்சந்தையை உருவாக்கித்தருவதான தோற்றத்தை தருவதும் அவர்களின் அடுத்த செயல்பாடுகளை நிர்ணயிப்பதும் தான் தரவு விஞ்ஞானத்தின் நோக்கம்.

இப்படியான வகைமாதிரிகள் எதிலும் தன்னை தொகுத்துக்கொள்ள இயலாது என்பதிலிருந்துதான் நிலைவறையாளன் தன் தரப்பை சொல்லத் துவங்குகிறான்.பிறழ்வே1 தஸ்தாயெவ்ஸ்கியை மற்ற இருத்தலியலாளர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.அவர் பிறழ்வே மனிதனை தொகுக்க இயலாதவனாக மாற்றுகிறது என்கிறார்.மூன்றும் மூன்றும் ஆறு என்பது போலன்றி மனிதனின் அடுத்த நடவடிக்கையை நம்மால் கணிக்க இயலாது என்கிறார்.மனிதன் கிளர்ச்சியாளன் (Man is a rebel) என்ற வரி கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வருகிறது.மனிதன் இந்த உலகில் எதற்கு மிகவும் அஞ்சுகிறான், இன்னொரு மனிதனுக்குத்தான் என்று ஓரிடத்தில் தஸ்தாயெவ்ஸ்கி எழுதுகிறார்.மனிதனால் தன் அகங்காரத்தை முழுவதுமாக விட்டுக்கொடுத்து இன்னொரு மனிதனிடம் சரணடைய இயலுவதில்லை.ஏனேனில் மனிதனால் இன்னொரு மனிதனை முழுவதும் பற்றிக்கொள்வது சாத்தியமில்லாமல் இருக்கிறது.அவன் எப்போது மாறுவான் எப்போது நம்மை உதுறுவான் என்பதை நம்மால் ஒருபோதும் அறிந்துகொள்ள இயலாத வகையில் தான் மனிதன் இருக்கிறான்.

இந்த பிறழ்வே தஸ்தாயெவ்ஸ்கியின் பிந்தைய நாவல்களின் முக்கிய பேசுபொருளாக இருந்தன.ரஸ்கோல்நிகோவ் தான் நெப்போலியான விரும்பினேன் என்று சொல்லி இரண்டு கொலைகளை செய்கிறான்.அவன் பீட்டர்ஸ்பர்க் நகரில் எவ்வித அதிகாரமும் அற்று ஏழ்மையில் உழலும் கல்லூரி மாணவன்.அவனை பற்றும் ஒரு கருத்தியலும் அது அளிக்கும் தர்க்கமும் அவனை இரண்டு கொலைகளை செய்ய வைக்கிறது.இயல்பிலேயே பிறழ்வான மனிதன் கருத்தியலின் துணை வருகிற போது அழிவுகளை உருவாக்குகிறான்.அவற்றை அதிகாரத்தின் துணைக்கொண்டு செயல்படுத்துகையில் அவை பேரழிவுகளாக மாறுகின்றன.சூதாடி நாவலில் அலெக்ஸி சூதாட்டத்தில் தன்னை முழுக்க இழக்கிறான்.அவனால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.அந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதை பற்றித்தான் ஆராய்ந்திருப்பார்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும்.அதீத விருப்பத்தால் உந்தப்பட்டு தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாமல் அந்த விருப்பத்தையே பின்தொடர்பவர்கள் அவரின் நாவல்களில் தொடர்ந்து வருகிறார்கள்.அலெக்ஸி போலவே திமித்ரியும் ரிகோஸினும் அதீத விருப்பத்தால் துரத்தப்படுபவர்களே.பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் நிகோலய் ஒரு சிறுமியுடன் வல்லுறவு கொள்கிறான்.பின்னர் அந்த சிறுமியை போலவே அவனும் தற்கொலை செய்து கொள்கிறான்.நிகோலய் ஒரு புரட்சிக்குழுவின் தலைவன்.அந்தக் புரட்சிக்குழு அந்த சிறுநகரத்தில் செய்யும் அழிவுகளையே இந்த நாவல் பேசுகிறது.பேதை நாவலில் ரிகோஸின் அவன் பெரிதும் விரும்பும் நாஸ்டாஸியாவை கொலை செய்கிறான்.அந்தக் கொலையால் அதிர்ச்சியுறும் மிஷ்கின் மறுபடியும் மனப்பிறழ்வு அடைகிறான்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் தன் தந்தையின் கொலைக்கு காரணமாக இருக்கிறான்.அவனை போலவே தோற்றம் கொண்ட சாத்தனுடன் அவன் உரையாடுகிறான்.அது அவனது அற விழுமியங்களின் தளைகளை மெல்ல அறுக்கிறது.இறுதியில் அவன் மனநல பாதிப்புக்கு உள்ளாகிறான்.பதின் நாவலில் அர்காடி என்ற பத்தொன்பது வயது இளைஞன் தான் சூதாட்ட விடுதியில் அடைந்த அவமானத்தை எண்ணி அன்றிரவு அந்த நகரத்தையே எரித்துவிட வேண்டும் என்று வன்மம் கொள்கிறான்.

இந்த நாவல்கள் அனைத்திலும் பிறழ்வு முக்கியச்சரடாக உள்ளது.அதுவரை மனிதனின் பிறழ்வு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாத வண்ணம் சமூகம் கட்டமைக்கப்பட்டிருந்தது.ஈரம் காயாத விறகுகள் இருந்தால் அவை தூக்கி எறியப்பட்டன.தனிமனிதன் என்ற அலகு உருவான பின்னர் அவன் முழுவதும் சுதந்திரமானவனாக மாறிவிட்டதாக எண்ணத் தலைப்படுகிறான்.அப்படியான சுதந்திரத்துடன் அவன் செய்யும் செயல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தஸ்தாயெவ்ஸ்கி எண்ணினார்.இடதுசாரி கருத்தியல்கள் எதிர்காலத்தின் வசந்தத்தை பற்றி பேசுகின்றன.வருங்காலத்தின் வசந்தத்திற்காக இன்றைய மனிதன் தியாகங்கள் செய்யலாம் என்கிறது இடதுசாரி இயக்கங்கள்.அப்படியான ஒர் இடதுசாரி குழுவை சேர்ந்தவர்களை பற்றிய நாவலே பீடிக்கப்பட்டவர்கள்.அதில் அந்த குழுவின் தனிமனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி பிறழ்கிறார்கள், கேலிக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்று சற்று தீவிர தொனியில் எழுதுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி.அப்படி பிறழ்பவர்கள் உருவாக்கும் கருத்தியல் சட்டகங்கள் எப்படி வருங்காலத்தில் பொன்னுலகத்தை உருவாக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.அதுவும் பிறழ்வான ஓர் அமைப்பாகவே இருக்க இயலும் என்பதே அந்த நாவல் முன்வைக்கும் வாதம்.

சமூகவியலாளர் மேக்ஸ் வெபர் சீர்திருத்த கிறிஸ்தவம் அதிலும் முக்கியமாக கால்வினிசம் எப்படி முதலாளித்துவதற்கான எழுச்சியை அளித்தது என்று எழுதியிருக்கிறார்.சீர்திருத்த கிறிஸ்தவம் தனிமனித உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது.மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் யாருமில்லை ,தனிமனிதன் நேரடியாக கடவுளிடம் பேசலாம், கோரிக்கை வைக்கலாம், மன்றாடலாம் என்று மனிதனுக்கு இருந்த அமைப்பின் தடுப்புகளை முதலில் உடைத்தது சீர்திருத்த கிறிஸ்தவம்.அதுவே முதலாளித்துவ சமூகங்கள் உருவாவதற்கும் மூலதன குவிப்புக்கும் வழிவகுத்தது.ஆடம் ஸ்மித்திலிருந்து கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து பொருளாதார சிந்தனையாளர்களும் தனிமனிதனின் இச்சை குறித்த நம்பிக்கைகளிலிருந்தே தங்களின் பொருளாதார கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.தனிமனிதனின் தீமை மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது!

இந்த சீர்திருத்தக் கிறிஸ்தவம் உருவாவதற்கும் கத்தொலிக்க திருச்சபையே காரணமாக அமைந்திருந்தது.அதனாலேயே கத்தொலிக்க திருச்சபைக்கு மாற்றாக ரஷ்ய மரபான கிறிஸ்தவத்தை தஸ்தாயெவ்ஸ்கி தன் மக்களுக்கு பரிந்துரைத்தார்.அது உங்களை வேர்கள் கொண்ட மனிதனாக நிலைக்கச் செய்யும் என்றார்.அதன் வழி தனிமனித அலகுகளை வெட்டிவிடலாம் என்று சொன்னார்.அவர் ரஷ்ய மரபு கிறிஸ்தவத்தின் அமைப்பை சேர்ந்த மனிதனை எத்தனித்தார்.இரண்டாவது அவர் ரஷ்யர்கள் தங்களை ஐரோப்பியர்களாக மாற்றிக் கொள்ள விரும்புவதை தந்தை X மகன் என்ற கருத்துருவகங்களை கொண்டு விளக்கினார்.பதின் நாவலில் அர்காடி தன் உயிரியல் தந்தை விரும்பும் பெண்னையே அவனும் விரும்புகிறான்.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் திமித்ரியும் அவனது தந்தை பியோதர் கரமசோவும் குருஷன்கா என்ற பெண்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.பதின் நாவலில் தான் தஸ்தாயெவ்ஸ்கி அர்காடி என்ற இளைஞன் வழி ரஷ்யா ஐரோப்பியமயமாவதின் பாதிப்புகளை விரிவாக சொல்கிறார்.அது ஒரு வகையில் ஒரு மனிதன் தனித்த சுயம் அற்று இருப்பது போன்றது என்கிறார்.அர்காடி தனக்கென்று தனித்த சுயம் அற்று இருக்கிறான்.அவனது உயிரியல் தந்தை மீது அன்பு செலுத்துபவனாகவும் வெறுப்பை உமிழ்பவனாகவுமே அவன் இருக்கிறான்.அவன் தனக்கென்று ஒரு நிலையான இடத்தில் நின்று தன் தந்தையை மதிப்பிடுவதில்லை.மாறாக அவன் அவரின் பகுதியாக இருக்கிறான்.அவன் அவரில் அவனைப் பார்க்கிறான்.சுயத்தின் கோடுகள் அழிக்கப்பட்டு மற்றொரு சுயத்தில் தன்னை கானும் ஆளுமைச்சிக்கல் (இதை ஆங்கிலத்தில் Enmeshment என்கிறார்கள்) குறித்து எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையானது பதின் நாவல்.தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த கதையாடல்கள் பிராய்டிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கின என்று நாம் சொல்ல முடியும்.

ஐரோப்பியர்களாக தங்களை உணர்வது , கத்தொலிக்க திருச்சபையை ஏற்பது போன்றவை ஒருவனை ஆன்மிக வறுமைக்கே ஈட்டுச் செல்லும் என்று தஸ்தாயெவ்ஸ்கி கருதினார்.அதனால் அவன் வெகு விரைவில் முற்போக்கு சிந்தனைகள் என்று சொல்லப்படும் கருத்தியல் கோட்டுபாடுகளை ஏற்று தன் ஆன்மிக வறுமையை ஈடேற்றம் செய்ய முயல்வான் என்கிறார்.அதாவது மற்ற இருத்தலியலாளர்கள் தனிமனிதன் என்ற அலகு உருவானதால் இனியான உலகத்தை எப்படி எதிர்கொள்வது என்று பேசினார்கள்.தஸ்தாயெவ்ஸ்கி தனிமனிதன் என்ற அலகை உடைத்துவிடக்கூடிய ஒர் உலகுக்கு எப்படி திரும்புவது என்று சிந்தித்தார்.

மனிதன் பிறழ்ந்தால் என்ன? அவனது வேர்கள் அறுபட்டால் என்ன ? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்.தனிமனிதன் எந்தத் தளைகளும் அற்றவன் என்பதால் அவன் அறிவின் துணைக்கொண்டு உலகை வெல்ல முற்படுவான்.உலகை வெல்ல முற்படுபவனின் கருவி விஞ்ஞானம்.எப்படி தனிமனிதனுக்கு அறச்சட்டகம் இல்லையோ அதே போல விஞ்ஞானத்திற்கும் எவ்வித அறச்சட்டகமும் இல்லை.மனிதன், உலகம் , பிரபஞ்சம் அனைத்தும் புறவயமானது , புரிந்துகொள்ள சாத்தியமானது என்ற அடிப்படையிலேயே விஞ்ஞானம் தன் எல்லைகளை விஸ்தரிக்கிறது.அதனாலேயே டார்வினால் மனிதன் கடவுளால் நேரடியாக உலகுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை சொல்ல முடிந்தது.கோபர்நிகஸாலும் கலிலீயோவாலும் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று நிறுவ முடிந்தது.கலிலீயோ இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள ஒருவருக்கு கணித மொழி தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.கலிலீயோ, தெகார்தே, ஸ்பினோஸா போன்றவர்கள் இந்த பிரபஞ்சம் கணித கோட்பாடுகளை போலவே இயங்குகின்றது என்கிறார்கள்.அதாவது பிரபஞ்ச இயக்கதில் ஒரு நிர்ணயவாதம் இருக்கிறது என்பது தான் அவர்களின் எண்ணம்.பெளத்தம் கூட நிர்ணயவாதத்தை ஏற்கிறது.ஆஜிவிகம் போன்ற மரபுகள் முழுமையான நிர்ணயவாதத்தை முன்வைக்கின்றன.பெளத்தம் கூறும் நிர்ணயவாதத்தில் மனிதனின் பங்கு உள்ளது.தற்செயல் , காரண-காரிய தொடர்பற்ற இயக்கம், தன்னிச்சையான செயல் போன்றவற்றை பெளத்தமும் ஸ்பினோஸா போன்ற தத்துவவாதிகளும் மறுக்கிறார்கள்.

விஞ்ஞானத்தின் அடிப்படையும் நிர்ணயவாதமே.மூன்றும் மூன்றும் என்றும் ஆறு என்பது நிர்ணயவாதமே.அது எப்போதும் வேறொன்றாக மாற முடியாது.அப்படியாக இயற்கையை,சோதனைக்கூடத்தின் மாதிரிகள் போன்று சமூகத்தை , மனிதர்களை அனைத்தையும் நிர்ணயிக்க முடியும் என்கிறது விஞ்ஞானம்.மார்க்ஸியம் நிர்ணயவாத தத்துவம்.இருத்தலியம் சுதந்திர விருப்புறுதியை முன்வைக்கும் கோட்பாடு.முற்போக்கு கருத்தியல்கள் அனைத்தும் நிர்ணயவாதத்தை ஏற்பவையே.ஏனேனில் அவை அறிவின் துணைக்கொண்டு உலகை நோக்குபவை.தனிமனித அலகை நிராகிரப்பவை.மனிதனால் பிறழ முடியும் என்கிற போது உலகத்தை புரிந்து கொள்ள நீங்கள் புனையும் கணித கோட்பாடுகளும் பிறழும் என்பது தான் தஸ்தாயெவ்ஸ்கியின் இருத்தலியம்.அப்படி பிறழக்கூடியதின் அடிப்படையில் வருங்காலத்தை உருவாக்கினால் அது பேரழிவுகளுக்கு ஈட்டுச் செல்லும் என்று அஞ்சினார் தஸ்தாயெவ்ஸ்கி.

எஸ்.என்.நாகராஜன் தன் கீழை மார்க்ஸியம் நூலில் இதை விரிவாக எழுதியிருக்கிறார்.விஞ்ஞானம் வர்க்கச் சார்புடையது என்பதையும் அதன் சட்டகத்தில் விழுமியங்களே இல்லை என்பதையும் எஸ்.என்.நாகராஜன் தன் வாதங்களின் வழி அழுத்தமாக நிறுவுகிறார்.இருத்தலியம் அந்நியமாதலை மனிதனின் முக்கியமான சிக்கலாக பார்க்கிறது.அந்நியமாதலை இரண்டாக பிரிக்கலாம்.ஒன்று தனிமனிதன் தன் தொழில் வாழ்க்கையில் வேலை பிரிவினையால் அடையும் அந்நியமாதல் மற்றது பண்பாட்டு ரீதியிலான அந்நியமாதல்.

இதில் தஸ்தாயெவ்ஸ்கி பண்பாட்டு ரீதியிலான அந்நியமாதலை பற்றிய தன் புனைவுகளில் பேசுகிறார்.வேலை பிரிவினையால் உருவாகும் அந்நியமாதல் அப்போதைய ரஷ்ய சமூகத்தில் இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.பண்பாட்டு ரீதியில் மனிதன் தன் வேர்களை தொலைக்கும் போது அவன் அந்நியப்படுகிறான்.அந்த அந்நியமாதலும் அவனை பிறழச் செய்கிறது.ஆளுமை குறைபாடு உள்ளவனாக ஆக்குகிறது.அதிலிருந்து அவனை காப்பாற்றவும் கடவுள் தேவைப்படுகிறார்.மனிதனால் தன்னை தாங்கிக் கொள்ள இயலாது என்று மகர் இவனோவிச் பதின் நாவலில் சொல்கிறார்.

கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் பெரும் விசாரணையாளர் பகுதியில் கிறிஸ்துவின் வருகை நிறுவனமயமான அமைப்புகளுக்கு எத்தகைய பதற்றத்தை அளிக்கின்றன என்று கூறுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி. தஸ்தாயெவ்ஸ்கியின் கிறிஸ்து அமைப்புகளை சாராதவர்.எளியவர்.தூய அன்பின் வடிவானவர்.அவரால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.லாசரஸை உயிர்பிக்க இயலாது.எதையும் நிகழ்த்த முடியாது.நிகழாமல் தடுக்கவும் முடியாது.ஆனால் மனிதனால் அவரிடம் மண்டியிட முடியும்.கதறி அழ முடியும்.முறையிட முடியும்.தன் ஐரோப்பிய பயணத்தின் போது ஹான்ஸ் ஹோல்பினின் கிறிஸ்து வரைப்படத்தை பார்க்கும் தஸ்தாயெவ்ஸ்கியால் அதை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.உடைந்துவிடுகிறார்.அறிவின் துணைக்கொண்டு புனரமைக்கப்படும் உலகில் கிறிஸ்துவின் நிலை அது தானோ என்று உருக்குலைகிறார்.அந்த பாதிப்பின் விளைவே பேதை நாவலில் நாம் கானும் மிஷ்கின்.

தஸ்தாயெவ்ஸ்கியின் மிஷ்கின், சோனியா, அல்யோஷா , மகர் இவானோவிச் , ஷோசிமா போன்ற கதாபாத்திரங்களின் வழி அவர் மனிதனுக்கு எந்த வித அந்நியத்தையும் அளிக்காத அலங்காரங்கள் அற்ற எளிய தன் மண்ணில் வேர் கொண்ட கிறிஸ்துவை அளிக்கிறார்.அதை பற்றிக்கொண்டு மனிதன் இந்த வாழ்வை கடக்க இயலும் என்று எண்ணுகிறார்.தமிழில் ஜெயமோகன் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் இறுதியில் வரும் கிறிஸ்து தஸ்தாயெவ்ஸ்கியின் கிறிஸ்து தான்.பின்தொடரும் நிழலின் குரல் நாவல் பின்நவீனத்துவ பிரதி என்று சொல்லப்பட்டாலும் அதுவும் இருத்தலிய கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட நாவல்தான்.பின்நவீனத்துவம் பெரும் கதையாடலுக்கு எதிரான சிறு கதையாடல் என்றால் இருத்தலியம் சித்தாந்தங்கள் , கருத்தியல்கள், தத்துவங்கள் மனிதனுக்கு எந்த மீட்சியையும் அளிக்க சாத்தியமில்லை என்று சொல்பவை.இரண்டும் அந்த நாவலில் உண்டு.

தொகுத்துப் பார்க்கையில் தஸ்தாயெவ்ஸ்கி முன்வைக்கும் இருத்தலியம் விஞ்ஞானம்,கருத்தியல்கள் உருவாக்கக்கூடிய பேரழிவுகளிலிருந்து , பண்பாட்டு அந்நியமாதலிலிருந்து மனிதனை காப்பாற்ற அவர் முன்வைத்த ஒரு மாற்று ஏற்பாடு.ஒரு வகையில் அது வரலாற்று போக்குக்கு எதிரான தரப்பு.ஆனால் அன்றைய வரலாற்று தருணத்தில் அதற்கான எதிர்வினையும் கூட.அதே நேரத்தில் அவர் அறிவின் சாத்தியப்பாடுகளின் பாலும் ஈர்க்கப்பட்டார்.அதனாலேயே அவரின் நாவல்களில் நாம் பல்வேறு எதிர்வாதங்களை பார்க்கிறோம்.அவர் அறிவை முழுக்க விதந்தோதும் விதமாக ஒரு வாதத்தை முதலில் முன்வைக்கிறார்.பின்னர் முந்தைய அறிவுவாதத்தை மறத்து மற்றொரு குரலை ஒலிக்கவிடுகிறார்.பெரும் விசாரணையை தொடர்ந்து புனிதர் ஜோஷிமாவின் வாழ்க்கை பற்றிய பகுதி வருகிறது.இவை ஒன்றை மறத்து மற்றொன்று பேசப்பட்டு இறுதியில் ஒரு முன்னகர்வு சாத்தியமாகும் வகையில் பின்னப்பட்டுள்ளது.இதுவே தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் மிகப்பெரிய தாக்கத்தை நம்மில் ஏற்படுத்துவதற்கான காரணம்.தஸ்தாயெவ்ஸ்கி முன்வைத்த இருத்தலியத்தை தஸ்தாயெவ்ஸ்கியின் இருத்தலியம் என்று பெயரிடலாம்.ஏனேனில் கீர்க்கேகார்ட், பாஸ்கல் போன்றோர் முன்வைத்த கிறிஸ்தவ இருத்திலயத்திலிருந்து இது விலகிச் செல்கிறது.இது ஒருவனின் அகத்தை காப்பதற்கான ஏற்பாடாக தஸ்தாயெவ்ஸ்கி பார்க்கவில்லை.மாறாக அவனின் வாழ்வை ஈடேற்றுவதற்கான வழியாக வருங்காலத்தில் இந்த பூலோகத்தில் மானுடர்கள் வாழ்வதை சாத்தியப்படுத்துவதற்கான வழியாக கண்டார்.

ஹெர்பர்ட் மார்க்யூஸா தன் ஒற்றை பரிமாண மனிதன் நூலில் கலையின் நோக்கம் மறுதலிப்பது (The Purpose of art is to negate) என்கிறார்.தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் அனைத்தும் அன்றைய ஐரோப்பிய சமூகங்களில் உருவான கருத்தியல்களுக்கு எதிரான மறுதலிப்பு தான்.தஸ்தாயெவ்ஸ்கியின் பார்வையை நாம் காந்தி,டால்ஸ்டாய்,மாவோ போன்றவர்களின் கோட்பாடுகளுடனும் ஒப்பிட்டு பார்க்கலாம்.அது நமக்கு பயனளிக்கும்.

 

குறிப்பு

1.  1.   பிறழ்வு என்ற சொல் ஒழுங்கின்மை என்ற பொருளில் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.மனப்பிறழ்வு என்ற பொருளில் அல்ல.

இந்தக் கட்டுரையை எழுத கீழ்க்கண்ட நூல்கள் உதவின

  1. இருத்தலியமும் மார்க்ஸியமும் - எஸ்.வி.ராஜதுரை – விடியல் பதிப்பகம் 
  2. What is Science – Sundar Sarukkai – NBT
  3. கீழை மார்க்ஸியம் – எஸ்.என்.நாகராஜன் – காவ்யா பதிப்பகம்
  4. ஆல்பெர் காம்யுவின் நாவல்கள் , கட்டுரைகள் , சிறுகதைகள்
  5. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள்
  6. ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் – நீட்ஷே – தமிழில் குவளைக் கண்ணன் – காலச்சுவடு பதிப்பகம்
  7. One Dimensional Man – Herbert Marcuse - Beacon Press
  8. The Protestant Ethic and the spirit of capitalism – Max Weber – Routledge Classics
  9. ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை – எஸ்.நீலகண்டன் - காலச்சுவடு பதிப்பகம். 
  10. Buddhism and Spinoza – O.N.Krishnan – Metta Publications

நிழற்படம் - By Corradox - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=9382696

2021 மார்ச் மாத தமிழினி இணைய இதழில்  பிரசுரமான கட்டுரை.

2.