ஒரு துண்டு வானம்ராஜன் தனது நினைவுகளை மீட்டான். மலம் என்றால் புனிதமற்றது.அமலம் என்றால் புனிதமானது.அழுக்கற்றது.அமலா என்றால் புனிதமானவள்.உண்மையில் புனிதமானது புனிதமற்றது என்ற பிரிவினைகள் உண்டோ? உண்டோ என்றால் இப்போது உண்டா அல்லது எப்போதும் இருந்ததா என்ற கேள்வி கேட்டு கொண்டான். இருந்திருக்கலாம் , ஆனால் நிச்சயம் இப்போது இல்லை. ஒரு பெரிய பாறை போல கனத்தது காலம். இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாக வேண்டும். வாழ்ந்தாகத்தான் வேண்டுமா? மனிதன் இறக்கும் போது தனியாக மரணத்தை சந்திக்கிறான்.அப்போது அதுவரை அவனோடு வந்த சித்தாந்தங்கள் , தூக்கி கொண்டு நடந்த லட்சியவாதங்கள் தள்ளி நின்று எக்களிக்கின்றன.ராஜன் தனியாக நின்றான்.அமலா பேசும் போது ஒரு முறை அவனிடம் சொன்னாள். ராஜன் நேற்று நிலப்பிரத்துவ காலத்தின் ஆண் பெண் இருந்தார்கள் , இன்று முதலாளித்துவத்தின் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அப்போது அவளை பெண்ணியவாதி என்று கிண்டல் செய்தான் ராஜன். அவள் சொன்னாள் நீ எப்போது புரிந்து கொள்வாயோ தெரியவில்லை ராஜன், எல்லாம் மாறிவிட்டது.பிறகு அன்று அவள் எதுவும் பேசவில்லை. ராஜனை விட்டு விலகிவிடலாம் என்று அவள் முடிவு செய்துவிட்ட நாட்கள் அவை. ராஜனுக்கு அவை புரியாமல் இல்லை. ஆனால் அது வெறும் கருத்துதளத்தில் நின்ற போது அவன் சற்று சமாதானம் செய்து கொண்டான்.ஆனால் இன்று எல்லாமே பருண்மை வடிவில் வெளிப்பட்டாகிவிட்டது. அமலா அவனை எவ்வித கருணையும் இல்லாமல் நிராகரித்து விட்டாள். அவள் கடைசியில் நேர் சந்திப்பில் சொன்னது - எல்லாம் மாறிவிட்டது ராஜன் புரிந்துகொள் சேகுவராவும் பாப் மார்லியும் இன்று முதலாளித்துவத்தின் குறியீடுகள்.சடை வளர்த்து கொள்வதும் , தாடி வைத்துக்கொள்வதும் இன்று எதிர் கலாச்சாரம் அல்ல.அவை வெறும் மோஸ்தர் அவ்வளவே.


உண்மையில் ராஜன் தாடி வைத்துக்கொள்ளவோ சடை வளர்த்துக்கொண்டதோ இல்லை.ராஜன் அடிக்கடி சோதனைக்கூடத்திலேயே நினைவிழந்துவிடுவான்.அப்படி ஒரு முறை நினைவிழந்தபோது அவனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி போய்விட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியேறி வேலைக்கு செல்லாமலே இருந்தான். அவனது நண்பர்கள் அவனது உடல் நலமின்மையால்தான் அவன் வேலைக்கு வரவில்லை என நினைத்துக்கொண்டனர். ராஜன் அந்த நாட்களின் பின் மதியப் பொழுதுகளில் எங்கேங்கோ அழைந்து திரிந்தான். ஒரு முறை அப்படி அலைந்து திரிந்த போது காலத்திலிருந்து அவன் விலகிவிட்டது போல உணர்ந்தான் .அவன் முன் மனிதர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.சைக்கிள்கள் மோட்டார்கள் எல்லாம் ஒடிக்கொண்டிருநதன்.ஆனால் அவை எல்லாம் வெகு அப்பால் பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நடப்பது போல உணர்ந்தான். ராஜன் அதன்பின் சில நாட்களில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.சோதனைக்கூடத்தில் ஒரு நாள் எதையும் செய்யாமல் அமர்ந்திருந்த போது நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. ராஜன் வெளியே வந்து வானத்தை பார்த்தான் . கீறல்கள் இல்லாத நீல வானம். மறுபடி சோதனைகூடத்துக்குள் சென்றான்.ஜன்னலின் வழியாக பார்த்த போது ஒரு துண்டு வானம் தெரிந்த்து. சிரித்துக் கொண்டான்.மேலதிகாரியிடம் சென்று நான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்றான். அவர் உட்பட அனைவரும் அவனை பைத்தியக்காரன் என கேலி செய்தனர்.நீங்கள் எல்லோரும் துண்டு வானத்தை பாருங்கள் என்று சொல்லி வெளியேறினான் ராஜன்.

இந்த சமயங்களில் தான் அமலா அவன் மேல் எரிச்சல் கொண்டாள். ராஜன் அவளை சமாதானம் செய்யவில்லை. இனி என்னதான் செய்ய போகிறாய் என்று அவள் கேட்கும் போது எனது பயணம் முழுமையை நோக்கி இருக்கும் என்பான். அவள் மேலும் எரிச்சல் கொண்டாள். இயற்கை விவசாயம் குறித்து அவன் ஒரு முறை சொன்ன போது விவசாயத்தில் என்ன இயற்கை அது உண்மையில் இயற்கையை நம் விருப்பத்திற்கு புணரமைப்பது தான் வேண்டுமானால் கானகம் சென்று உணவு சேகரிப்பில் ஈடுபடு என்று அவனை கேலி செய்தாள்.வெயிலில் ஒரு முறை அலைந்து திரிந்த போது நினைவிழந்து கீழே விழுந்துவிட்டான். எழுந்தால் ஒரு பழைய புத்தக கடையில் நாற்காலியில் அமர்நதிருநதான். எழுந்து கெட்டி அட்டை போட்ட ஒரு புத்தகத்தை கையில் எடுத்தான். பிரித்து பார்த்த போது அவன் படம் அதிலிருந்தது. அவனை போன்ற படம்.


ராஜன் அந்த புத்தகத்தை எழுதியவரின் பெயரை பார்த்த போது அதிலும் ராஜன் என்ற பெயரே இருந்தது. புத்தகத்தின் தலைப்பு வருங்காலங்களின் வரலாறு. காசி பனாரஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியில் இருந்தவர் எழுதியது. அதற்கு ஒரு முன்னுரை எழுதப்பட்டுயிருந்தது. அதை எழுதியவர் இது இந்தியாவின் வரலாறு. ஒரு மாற்றம்.இது இந்தியாவின் இறந்த கால வரலாறு அல்ல.மாறாக எதிர்கால இந்தியாவின் வரலாறு என்பதாக இருந்தது. இதை எழுதியவர் பிற்காலத்தில் காணாமல் போய்விட்டார் என்றும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மிக குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட இந்த புத்தகம் மறுபதிப்பு காணுமா என்பது இதை வாசிப்பவர் கைகளில் தான் இருக்கிறது என்றும் இருந்தது. ராஜன் ஐநூறு பக்கங்களுக்கு மேல் நீண்ட அந்த புத்தகத்தை ஒரே இரவில் வாசித்து முடித்தான்.

புத்தகத்தில் மொத்தமாக இருந்தது இதுதான். லட்சியவதாங்களின் தலைமுறை முடிவுக்கு வந்து முதலாளித்துவம் உருவாக்கும் பெரிய வலையில் மத்திய தர வர்க்கமும் உள்ளே நுழைந்து தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்ற நிலை உருவாகும் .அதுவே பொதுமையாக்கலின் காலமாக இருக்கும். அந்த காலத்தின் அரசன் உண்மையில் தொழில்நுட்பமே என்றும் இருந்தது. அதன் பின்னான காலகட்டத்தில் மனிதர்கள் சலமின்றி வாழ்வார்கள்.அப்போது அவர்கள் முற்றிலும் தொழில்நுட்பத்தால் கட்டுபடுத்தப்பட்டுயிருப்பார்கள்.அந்த காலத்தில்
அவர்கள் இயந்திரங்களாகவும் மாறி போயிருப்பார்கள். அதற்கு அடுத்த காலகட்டம் தான் The Era of Great Refusal காலகட்டம்.அந்த காலகட்டத்தில் மனிதர்கள் பெரிதாக எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஆனால் வீடுகளை விட்டு வெளியில் வந்து சாலையில் இருப்பார்கள்.அந்த காலகட்டத்தில் மனிதர்கள் மின்சாரத்தை துறப்பார்கள்.அதுவே மறுப்பின் காலகட்டம். அதன்பின்னான வரலாறு வேறு விதமாக இருக்கும்.இதுவே இந்தியாவின் அடுத்த நூறாண்டுகளின் வரலாறு என்று முடிந்திருந்தார் ராஜன். புத்தகம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதாம் வருடம் வெளிவந்திருக்கிறது.

பின்னர் ஒரு நாள் இந்த புத்தகத்தை அமலாவிடம் கொடுத்த போது அவள் அதை படித்துவிட்டு மிகுந்த சலிப்புடன் சொன்னாள். இந்த ராஜன் சொல்வது போல இது பொதுமையாக்கலின் காலகட்டம் . நீயும் உள்ளே நுழைந்து அதுனுள் இரு.அப்போது மிகுந்த எதிர்வினையாற்றிய ராஜனை பார்த்து அவள் சொன்னவைதான் எல்லாம் மாறிவிட்டது ராஜன் என்பது.மிகுந்த அலைகழிதல்களுக்கு பின் ஒரு நாளில் ராஜன் மறுபடியும் ஒரு துண்டு வானத்தை பார்க்க ஆரம்பித்தான்.ஆம் இந்த தலைமுறைக்கு சாத்தியப்பட்டது ஒரு துண்டு வானம் தான். ஆனால் அமலா அவனை விட்டு எப்போதைக்குமாக விலகியிருந்தாள்.


No comments: