டூலெட்
செழியனின் டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்று வருகிறது.விரைவில் தியேட்டர்களுக்கு வரும் என்று நினைக்கிறேன்.செழியன் பாலாவின் பரதேசி படத்திலும் தாரை தப்பட்டையிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார்.

ரவி சுப்பிரமணியன் இயக்கிய ஜெயகாந்தன் பற்றிய எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன்.தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக எப்போதும் அது இருக்கும்.விகடனில் உலக சினிமா கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.இசைப்பள்ளி ஒன்று நடத்துகிறார் என்று நினைக்கிறேன்.மேற்கத்திய இசை பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.தீவிர வாசகர்.பன்முக ஆளுமை.தன் பணிகளை தொடர்ந்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தீவிரமாக செய்து வருகிறார்.பி.சி.ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு கற்றவர்.

கவிஞர் விக்ரமாதித்தியன் நம்பியின் மகனும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் நம்பிராஜனும் ஷீலா ராஜ்குமாரும் மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.ராஜ்குமார் தம்பிச்சோழனின் இயற்பெயர்.தம்பி என்று அழைக்கப்படுவதை தவிர்க்க தம்பிசோழனை சோழன் என்று மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


காப்பி

தமிழகத்தில் தொடர்ந்து தமிழ் தேசியத்தை முன்வைக்கும் பல்வேறு அமைப்புகள் உருவானபடியே இருக்கின்றன.அனைத்து திட்டங்களும் தொழிற்சாலைகளும் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்கள்தான் என்று சொல்லப்படுகிறது.
இந்தியா சென்ற ஆண்டு பெற்ற முதலீட்டில் .79% மட்டுமே தமிழகத்திற்கான முதலீடு.இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் படித்து வரும் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்காது.சூழியல் போராட்டங்கள் ஏன் தமிழ் தேசியவாத கோஷங்களை முன்னேடுக்கிறது என்பது முக்கியமானது.நாளை தமிழ் தேசியம் அமையுமெனில் இதே சூழியல் பிரச்சனைகள் அப்போதும் இருக்கும்.தொழிற்சாலைகளுக்கு மண் வேண்டும்.மண் வேண்டுமென்றால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படவேண்டும்.தண்ணீர் வேண்டும்.நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.கழிவுகள் காற்றிலும் நீரிலும் கலந்துவிடப்படும்.நீர் மாசடையும்.காற்று மாசடையும்.இவைகளை குறைக்க வாரியங்கள் இருக்கின்றன.வாரியங்கள் திறம்பட செயல்பட்டால் முறையான கழிவு வெளியேற்றத்தை கொண்டு வரமுடியும்.

தொழிற்சாலைகள் வேண்டுமா என்பது வேறு தளத்திலான கேள்வி.நமது பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்பதும் தொழிற்சாலைகள் வேண்டுமா என்பதும் ஒரே கேள்வி.ராஜாஜி குலக்கல்வியை ஆதரித்தார் என்று அவரை விமர்சிப்பவர்கள் தமிழகத்தில் தொழில்சாலைகள் வருவதையும் விமர்சிக்கிறார்கள்.இரண்டும் முரணானவை இல்லையா.நீங்கள் ராஜாஜியை எதிர்த்தால் தொழிற்சாலைகளை ஆதிரிக்கத்தானே வேண்டும்.நாளை படித்து வரும் இளைஞனுக்கு தொழிற்சாலைதானே வேலை தரும்.தொழிற்சாலைகள் வேண்டாம் என்றால் நாம் ஏன் இத்தனை கல்லூரிகளை தொடங்கிக் கொண்டே இருக்கிறோம்.தந்தை வேலையை மகனும் செய்யாமல் தன் பாதையை தேர்ததெடுக்க கொடுக்கப்படுவது தானே இன்றைய கல்லி.இன்றைய கல்வியின் நோக்கமே வேலையை பெறுவதும் தொழில் தொடங்குவதும் தான்.

இதற்கு மாற்றான சிந்தனையை உருவாக்க வேண்டும் என்றால் காந்தியை நோக்கி நகர வேண்டும்.மார்டின் லூதர் கிங்,நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அவரை ஏற்றார்கள்.காந்தியை ஏற்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.மார்டின் லூதர் கிங்கின் எனக்குண்டு ஒர் கனவு ஒரு நாள் நனவாகும்.அவர் இறந்த இந்த ஐம்பது வருடங்களில் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் தமிழகத்தின் அரசியல் அமைப்புகள்,கட்சிகள் ஈ வே ராமசாமியை தங்களின் தலைவராக அறிவிக்கின்றன.தமிழகத்தி்ன் அறிவுஜீவிகள் பலர் அவரை முக்கியமான சிந்தனையாளராக முன்வைக்கிறார்கள்.பிராமணர்களை தொடர்ந்து வெளிப்படையாக விமர்சித்தவர் ஈவேரா.பிராமணர்கள் எப்போதும் உடல் ரீதி தாக்கப்பட்டதில்லை என்பது ஒர் அதிர்ஷ்டம்.அதற்கு முக்கியமான காரணமாக எனக்கு தோன்றுவது கலைஞர் கருணாநிதி.ஈவேராவை விட அண்ணாதுரையை விட பண்பானவர் , அறிஞர் கலைஞர்.அவர் எப்போதும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதில்லை.திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூட ஒரே ஒரு பிராமண முதலமைச்சர் தான் இருந்திருக்கிறார்.

அன்று பிராமணர்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் முயன்றன.இன்று பிற தென்னிந்திய மொழி பேசுபவர்களை நோக்கி அது நகர்ந்திருக்கிறது.இன்று பிராமணர்கள் அரசியல் அதிகாரத்தில் இல்லை.அதனால் இன்று திராவிடத்திலிருந்து தமிழ் தேசியம் நோக்கி சென்றாகி விட்டது.ஏனேனில் எதிரி இல்லாமல் ஏது தேசியம்.
ஜின்னா என்ற எந்த மக்கள் ஆதரவும் அற்ற ஒரு மனிதர் பிரிவினைவாத்ததை தூண்டி பாகிஸ்தானை உருவாக்கினார்.கல்கத்தாவில் direct action day என்று மிகப்பெரிய கலவரங்கள் அதற்காகவே உருவாக்கபட்டது.ஹேராம் அந்த கட்டத்தை பற்றிய திரைப்படம்தான்.தலைமுறைகளாக மேற்கு பாகிஸ்தானிலும் கிழக்கு பாகிஸ்தானிலும் இருந்த இந்துக்களும் இந்தியாவில் இருந்த இஸ்லாமியரும் செல்வதற்கு இடமற்று புலம் பெயர்ந்தார்கள்.எத்தனை பெரிய துயரம்.

எல்லா பிரிவினை போக்குகளும் வன்முறையை தூண்ட வல்லவை.இன்று தமிழகத்தில் வேலைவாய்ப்பு மிக குறைவாக இருக்கும் சூழலில் வன்முறைகள் எளிதில் பற்றிக்கொள்ளக் கூடியவை.வெற்றிமாறன் போன்று ஓரளவு சிந்திப்பவர் கூட அமீர்,பாரதிராஜா,சீமான் போன்றோருடன் இணைந்திருப்பது ஆச்சிரியம் தான்.மனித மனம் எளிதாக வெறுப்பை உருவாக்கிக் கொள்ளும்.

பாரதிராஜா வேதம் புதிது என்ற திரைப்படம் எடுத்தார்.அந்தப்படத்தில் ஒரு பிராமண பெண்ணுக்கும் தேவர் பையனுக்கும் காதல் மலர்கிறது.ஏன் பாரதிராஜா அதை ஒரு தேவர் பெண்ணுக்கும் தலித் பையனுக்குமான காதலாக வைத்திருக்கலாமே.தேவர் பெண்ணுக்கும் தலித் பையனுக்கும் என்று இல்லாமல் குறைந்தபட்சம் தேவர் பையனுக்கும் தலித் பெண்ணுக்குமான காதலாக அதை உருவாக்கியிருக்கலாமே.பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் பிராமண பெண்ணுக்கும் தலித் ஆணுக்குமான காதல் கதையை சொல்லியிருப்பார்.ஏன் அதே கதையை கவுண்டர் பெண்ணுக்கும் தலித் ஆணுக்குமான காதலாக முன்வைக்கவில்லை.

இடைநிலை சாதிகளை பற்றிய எந்த சிறு விமர்சனமும் தமிழ் சினிமாவில் வர முடியாது.கமல்ஹாசன் தேவர் மகன் எடுப்பதற்கு பதிலாக தலித் மகன் என்றோ பிராமணன் மகன் என்றோ எடுக்க மாட்டார்.அந்த இரு எல்லைகள் தான் திராவிட இயக்கங்களின் எல்லைகள்.

அசோகமித்திரன் தமிழ்நாட்டில் பிராமணர்கள் யுதர்கள் போல வாழ்ந்தார்கள் என்று சொன்ன நேர்கானல் மிகப் பெரிய சச்சரவை ஏற்படுத்தியது.அவர் அதைப்பற்றி விளக்கமும் கொடுத்தார்.ஆனால் அவர் உளவியல் ரீதியில் பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்ல முற்பட்டதாக அதை எடுத்துக்கொள்ளலாம்.அவருடயை சிறுகதை ஒன்று மஞ்சள் கயிறு என்று நினைக்கிறேன்,அதில் ஒரு ஏழை பிராமணின் சித்திரம் வருகிறது.அவனிடம் கடுமை காட்டப்படும் போது இப்படியான கடுமை இவரை போன்றவர்களிடம் தான் காட்ட முடியும் என்றும் எழுதுகிறார்.இன்று தமிழில் எழுதுபவர்களில் அநேகமாக யாரும் பிராமணர் இல்லை.வழக்கறிஞர்களில் பிராமணர்கள் இல்லை.அரசியல் அதிகாரத்தில் அவர்கள் இல்லை.பி.ஏ.கிருஷ்ணன் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு பிற தேசங்களுக்கு சென்ற பிராமணர்களின் புள்ளி விபரத்தை முன்வைத்து இந்த புலம் பெயர்தல் மிகப்பெரிய எண்ணிக்கை என்று சொல்லியிருந்தார்.தமிழகத்தில் தமிழ் தேசியவாதம் வளர்ந்தால் பிற தென்னந்திய மொழி பேசுபவர்களுக்கும் அதுவே நடக்கும்.

தமிழகத்தில் நான் தெலுங்கன்.கர்நாடகத்தில் நான் தமிழன்.ஒரு வேளை வெளிநாடு சென்றால் நான் இந்தியன் ஆவேன்.

அவரவர் சிலுவைகள்
கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய மற்றொராள் திரைப்படத்தில் கணவன்,குழந்தைகளை கைவிட்டு வேறொருவனுடன் சென்று விடுகிறாள் பெண்.பின்னர் சென்று சேர்ந்தவன் ஒரு ஸ்திரி லோலன் என்பதை அறிகிறாள்.கணவனிடம் திரும்பும் போது கணவன் கடற்கரையில் மார்பில் கத்தியால் தன்னையே குத்தி இறந்து கிடப்பதை பார்க்கிறாள்.ஒரு முறை அந்தக் கத்தியால் அவளை கொல்ல வேண்டும் என்று அவளை தேடிச்செல்லும் கணவன் அவளை கொல்லாமல் திரும்பி விடுகிறான்.தன் நண்பனிடம் பேசும் போது அவளை எப்படி கொள்வது ,அவள் ஆட்டுக்குட்டியை போன்றவள் என்கிறார்.அவளை ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த மெக்கானிக்கைத்தான் கொல்ல வேண்டும் என்கிறார்.அப்போது நண்பர் யாரையும் கொல்ல வேண்டாம் , உங்கள் மனைவி வந்தால் மறுபடி ஏற்றுக்கொள்வீர்களா எனும் போது அவள் திரும்ப வரும் வாய்ப்பு இருக்கிறதா என்று முகம் மலர்கிறார்.

இறுதியில் நண்பர் அழைத்து வரும் அந்த அந்தியில் கடற்கரையில் தன்னையே குத்தி இறந்து கிடக்கிறார்.இதில் அவர் இரக்கத்தை கோரவில்லை.ஆனால் தன் மனைவியின் தவறுக்கான காரணமாக தன்னைக் கருதுகிறார்.நிஷ்களங்கம் நிரம்பிய ஆட்டுக்குட்டியின் திசைமாறிய பயணத்தின் பிறழ்வின் காரணம் தான் என்று அவர் உணர்கிறார்.அவர் தன் மனைவியின் சிலுவையை சுமக்கிறார்.

இந்தப் படத்தின் திரைக்கதை , காட்சி அமைப்புகள்,நடிப்பு, இசை அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது.ஒரு சிற்றருவி செல்வது போல எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செல்லும் திரைக்கதை.விக்ரம வேதா போன்ற திரைப்படங்களை அப்போதைக்கு ரசிக்கலாம்.ஆனால் அதில் திரைக்கதையை அமைக்க அவர்கள் தலையை பிய்த்துக்கொண்டு போராடி உள்ளதை நாம் உணரலாம்.மாறாக இந்தப் படத்தில் காலை எழுந்து காபி குடித்து விட்டு குளித்து காலை உணவை அருந்தும் போது துள்ளி குதித்து உங்கள் மடியில் அமரும் நாய்க்குட்டி போல அத்தனை இயல்பாக இருக்கிறது திரைக்கதை.

சத்யஜித் ரே இயக்கிய சாருலதா திரைப்படத்தில் சாருலதா அன்னையாக விரும்புகிறாள்.ஒரு உக்கிரமான காதலுக்கு அவள் மனம் அவாவுகிறது.ஆனால் இதில் அந்தக் கணவன் பத்திரிக்கையே கதியாக இருப்பதும் காட்டப்படுகிறது.ஏதோ ஒரு வகையில் இவைகளுக்கு மத்தயில் முடிச்சு போடப்படுகிறது.

மற்றொராள் படத்தில் அந்தப் பெண் கடற்கரையில் கணவனுடன் அமர்ந்திருக்கும் போது கொஞ்சிக் கொண்டு செல்லும் இளஞ் ஜோடிகளை பார்த்து கற்பனையில் திளைக்கிறாள்.அவளும் கைகளை பற்றிக்கொண்டு கடற்கரையில் தன் காதலனுடன் குதூகலித்து அவன் தோளில் வெட்கிச் சாய்ந்து பரவசமடைய விரும்புகிறாள்.
இரண்டு திரைப்படங்களிலும் கணவன் காதலை கொண்டாடுபவனாக இல்லை.அவளின் பிறழ்வுக்கு அவனின் முசுடுத்தனம் காரணமாகிறது.

சமீபத்தில் வந்த தரமணி திரைப்படத்தில் கணவனை தவிர்த்து வேறு ஆண்களுடன் பெண்கள் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான காரணம் கணவனின் ஆணாதிக்க மனோபாவம் என்று அவரே சொல்லிவிடுகிறார்.நிச்சயம் மேலே சொன்ன இரண்டு திரைப்படங்களின் subtlety தரமணியில் இல்லை.ஆனால் இந்தப் படங்களில் ஒரு பொதுச்சரடு உள்ளது.அது ஒரு பெண்ணின் சிலுவையை ஆணின் தோளில் ஏற்றுவது.
ஒரே கடல் என்ற மலையாளப் படத்தில் அந்தப் பெண்ணுக்கு மற்றொருவரை பிடித்துவிடுகிறது.அவளின் பிறழ்வுக்கு அவளின் கணவன் காரணம் என்று சொல்லப்படவில்லை.அதே போல அசோகமித்திரனின் மானசரோவர் நாவலில் ஜம்பகத்தின் பிறழ்வு கோபால் மீது ஏற்றப்படவில்லை.ஏன் அவரவர் சிலுவையை அவரவர் சுமக்கக்கூடாது.

வாழ்வும் வசந்தமும்நமது தமிழ் சினிமாக்களில் எப்போதும் ஆண்கள் பெண்களை துரத்துகிறார்கள்.மன்றாடி காலில் விழுந்து காதலை திரும்ப பெறுகிறார்கள்.ஆனால் நிஜ உலகில் எல்லாம் தலைகீழாக இருப்பதாக தோன்றுகிறது.பெண்களிடம் ஆண்கள் காதலை தெரிவிக்கிறார்கள்.பெண்ணுக்கும் பிடித்திருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்கிறாள்.

ஆனால் அதன்பின் அந்த ஆண் அந்தப் பெண்ணிடமிருந்து ஓட அந்தப் பெண் ஆணை துரத்துகிறாள்.காதலிப்பதை விட என்னுடன் பேசிக்கொண்டிருப்பதை விட ஒன்றாக உணவு அருந்துவதை விட இவனுக்கு வேறு என்ன வேலை என்று பெண்ணுக்கு புரிவதில்லை.ஏன் இந்தப் பெண்ணை காதலித்தோம் என்று ஆணுக்கும் புரிவதில்லை.

இப்படியான கசப்புகளில் சென்று சேரும் நிலையில் பெண் சினம் கொள்கிறாள்.பெண் காத்திருப்பதை நினைத்து சலித்து உறவை முறிக்கிறாள்.ஒரு வகையில் தப்பித்துவிட்டோம் இன்னொரு வகையில் தொலைத்துவிட்டோம் என்றும் ஆண் புலம்புகிறான்.ஆண் நண்ணீரில் புகலிடம் தேடுகிறான்.பெண் மனச்சோர்வு கொள்கிறாள்.

பெண்களுக்கு திருமணம் குறித்து இருக்கும் கனவுகளை தமிழ் சினிமா இனிதான் எடுக்க வேண்டும்.ஆண்களை விட பெண்கள்தான் காதலிக்க அதிகம் விரும்புகிறார்கள்,ஏங்குகிறார்கள்.இன்றைய இந்திய பெண்ணும் தன் மீது அதிகாரம் செலுத்தும் ஆணைத்தான் தேர்வு செய்ய விரும்பிகிறாள்.சமத்துவத்தை பேணுபவனாக பாவனை செய்தால் போதுமானதாக இருக்கிறது.

இன்றைய ஆண்கள் குழப்பத்துடன் காதலிக்கிறார்கள் ,குழப்பத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள்.பெண்களுக்கு அவனைப் பிடித்திருந்தால் அவர்கள் அதிகம் குழம்புவதில்லை,அலட்டிக் கொள்வதில்லை.இன்றைய ஆண் பெண்ணுடன் நிறைய பேசி இனி என்ன பேசுவது என்று சலிப்படைகிறான்.அவனுக்கு அவளைப் பற்றி அறிந்து கொள்ள பரவசமடைய ஒன்றுமில்லை.

முப்பது வயது வரை ஆண்களுக்கு தங்களை விட வயதில் மூத்த பெண்னை பிடிக்கிறது.நாற்பதுகளில் தன்னை விட வயது குறைவான பெண்ணின் மீது ஈர்ப்பு துவங்குகிறது.நாற்பதுகளில் தன் எதிரில் அழகான இளம் நங்கை வந்து அமரும் போது உறங்கத் துவங்குகையில் அவன் சுந்தர ராமசாமியின் வாழ்வும் வசந்தமும் கதையில் வருவது போல ஞானியும் ஆகிறான்.

Photo Courtesy : https://niakd.deviantart.com/art/spring-love-118361140