உடைபடும் கண்ணாடிகளும் சிதைவுறும் ஆன்மாக்களும்

 


நாம் எல்லோரும் சமமானவர்கள்.மனிதர்கள்.உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொள்ளுதல் கூடாது என்று பயிற்றுவிக்கப்படுகிறோம்.ஆனால் நடைமுறையில் இது எந்தளவு சாத்தியம்.அன்பு, நேசம், மனிதாபிமானம் இவற்றைப் பற்றி நாம் பேசினாலும் அதை முன்னிட்டு சீர்திருத்தங்களை முன்வைத்தாலும் அதிகாரத்திற்கு கீழ்படிதலும் அதிகாரம் செலுத்துதலும் மனித உறவுகளில் முதன்மையான பங்களிப்பை ஆற்றுகிறது.நான் உன்னை விட மேலானவன் என்பது மனிதனுக்கு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.சமூக அமைப்பில் சமத்துவம் , சகோதரத்துவம் ஆகியவை முக்கியமானவைதான்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதும் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பிற்கான அலகுகள்.ஆனால் சமத்துவம் , சகோதரத்துவம் ஒரு விழுமியமாக இஷ்டலோகமாகவே செயல்பட இயலும்.அதே நேரத்தில் எந்த ஒரு அமைப்பும் அதிகாரம் இல்லாமலோ அதற்கான சடங்குகள் இல்லாமலோ இயங்க இயலாது.உங்கள் உயர் அதிகாரியை நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம் ,ஒன்றாக சென்று உணவருந்தலாம், ஆனால் அவரும் நீங்களும் நண்பர்கள் அல்ல.ஒரு போதும் உங்கள் நண்பனுடன் பேசுவது போல நீங்கள் உங்கள் உயரதிகாரியுடன் பேசப்போவதில்லை.அதை குறிப்புணர்த்தும் சமிக்ஞைகள் சடங்குகள் அந்த உறவில் இருந்து கொண்டே இருக்கும். அவர் உங்களை காபி சாப்பிடலாம் வா என்று ஒரு நாள் அழைக்கலாம் , அதற்காக மறுநாள் நீங்கள் சென்று அழைக்க முடியாது.அப்படி அசட்டுத்தனமாக நீங்கள் அழைத்தாலும் அதை மறுத்து அவர் தன் இடத்தை உங்கள் இடத்தை குறிப்பால் உணர்த்தக்கூடும்.தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு ஆயாசமான நிகழ்வு (A Nasty Anecdote) கதையில் இவான் இலியச் என்ற உயரதிகாரி மனிதாபிமானம், மானுட நேசம் போன்ற விழுமியங்கள் வழி அனைத்து சீர்திருத்த சிக்கல்களையும் தீர்த்துவிடலாம் என்கிறார். நாம் தாக்குப் பிடிக்கமாட்டோம் என்கிறார் இன்னொரு உயரதிகாரி.

அன்று இரவு இவான் இலியச் அலுவலகத்தில் அவருக்கு கீழ் பணிபுரியும் குமாஸ்தாவின் திருமணத்திற்கு தற்செயலாகச் சென்று சேர்கிறார்.குமாஸ்தா இவான் இலியச்சைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார்.நான் உங்களை விட உயர்வானவன், ஆனால் அதே நேரத்தில் உங்களைச் சமமாக பாவித்து உங்கள் திருமண நிகழ்வுக்கு வந்திருக்கிறேன்.இதுவே மானுட நேசம் , மனிதம் மீது மனிதன் கொள்ளும் அபிமானம் என்று பிரசங்கிக்க விரும்புகிறார்.ஆனால் அவர் எண்ணியத்திற்கு மாறாக அங்கு நிகழும் பல்வேறு சம்பவங்களால் இவான் இலியச் ஒரு கோமாளி போல ஆகிவிடுகிறார்.ஆரம்பத்தில் அவர் வருகையால் எப்படி நடந்து கொள்வது என்று குழம்பும் கூட்டத்தினர் பின்னர் அவரை பொருட்படுத்தாமல் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.அவரும் வோட்கா குடித்து மயங்கி கீழே விழுந்துவிடுகிறார்.அந்த சம்பவத்திற்குப் பிறகு இவான் இலியச் இனி எப்படி அலுவலகம் செல்வது என்று குழம்புகிறார்.அவர் தன்னைத் தொகுத்துக்கொண்டு செல்லும் போது அங்கு அந்த குமாஸ்தா தன்னை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்திருப்பதை பார்க்கிறார்.ஆம் , என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று தன்னிடமே ஒப்புக்கொள்கிறார் இவான் இலியச்.மனித உறவுகளில் நாம் அந்தப் பாத்திரத்திற்கான உடல்மொழியை வரையறைகளை ஏற்கிறோம்.அவை மாறும் போது வேறு ஒரு வரைமுறை உருவாகுகிறது.போலித்தனமான மனிதாபிமான முயற்சிகள் பாவனைகள் கோமாளித்தனத்தில் தான் சென்று முடியும்.

ஒரு ஆயாசமான கதையின் மற்றொரு வடிவம் ஒரு கோமாளியின் கனவு.(A dream of a ridiculous Man).தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவுடன் சாலையில் நடந்துச் செல்லும் இளைஞனை நோக்கி விரைந்து வரும் சிறு பெண் அவனிடம் உதவி கேட்டு மன்றாடுகிறாள்.தான் தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவு எடுத்திருப்பதால் தன் அளவில் இனி இந்த உலகிற்கு அர்த்தமில்லை என்று எண்ணுபவன் அந்தக் குழந்தைக்கு உதவி செய்யாமல் போய்விடுகிறான்.அவன் அறையில் ஒரு துப்பாக்கியை மேஜை மீது எடுத்து வைக்கிறான்.நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கி விடுகிறான். கனவில் அவன் தற்கொலை செய்துக் கொள்கிறான்.பூமியை போலவே இருக்கும் வேறு ஒரு உலகத்திற்கு செல்கிறான்.அங்கே மனிதர்கள் பொய் சொல்வதில்லை.விலங்குகளை துன்புறுத்துவதில்லை.ஒருவர் மீது ஒருவர் நேசத்துடன் இருக்கிறார்கள்.அன்பும் நேசமும் ப்ரியமும் காற்றைப் போல அந்த மண்ணைச் சூழ்ந்திருக்கிறது.பின்னர் இந்த பூமி மனிதன் அவர்களை பிறழச் செய்கிறான்.அது ஒரு விளையாட்டாக உருவாகிவிட்டது என்கிறான்.பிறழ்வின் துவக்கமாக அமைவது புலனுணர்வு.புலனுணர்விலிருந்து பொறாமை.அங்கிருந்து குரூரம்.அதன் பின் அந்த புத்துலகத்தில் முதன் முறையாக ரத்தம் சிந்தப்படுகிறது.அவர்கள் குற்றவுணர்வு கொள்கிறார்கள்.குற்றவுணர்வு ஒரு விழுமியமாக மாறுகிறது.கெளரவமும் மரியாதையும் பெருமையும் பிறக்கிறது.விலங்குகளை துன்புறுத்துகிறார்கள்.அவர்களுக்கு துயரம் அறிமுகமாகிறது.பின்னர் துயரத்திலிருந்தே உண்மையை அறிய முடியும் என்று சொல்லத் துவங்குகிறார்கள்.விஞ்ஞானம் பிறக்கிறது.அவர்கள் பிறழ்ந்த பின்னர் மனிதாபிமானம் குறித்தும் சகோதரத்துவம் குறித்தும் பேசுகிறார்கள்.அவர்கள் குற்றவாளிகளானதால் நீதி அமைப்பை கண்டுபிடிக்கிறார்கள்.அந்த சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கில்லட்டினை அமைக்கிறார்கள்.முன்னர் இருந்த அறியாமையை கனவு போல பாவிக்கிறார்கள்.பின்னர் அவனை அந்த புத்துலகத்தை சேர்ந்தவர்கள் மனநிலை விடுதியில் சேர்க்கப்போவதாக மிரட்டுகிறார்கள்.அவன் கனவு கலைந்து விடுகிறது.

கனவில் இருந்து மீள்பவன் தான் உண்மையைக் கண்டு கொண்டதாக சொல்கிறான்.மனிதர்கள் அழகாக மகிழ்ச்சியாக இந்த பூமியில் வாழ முடியும் என்பதே அவன் கண்டுகொண்ட உண்மை.இந்த பூமியில் வாழ ஒருவன் பிறழத்தான் வேண்டும் என்ற அவசியமில்லை.தீமை தான் மனித இயல்பு என்பதை தான் ஏற்கவில்லை என்கிறான் கோமாளி மனிதன்.இனி தான் அந்தச் சிறுபெண்னைக் கண்டுபிடித்து அவளுக்கு உதவப் போவதாகச் சொல்கிறான்.அறிவுக்கு முந்தைய குழந்தைமை, மகிழ்ச்சி பற்றிய பிரக்ஞைக்கு முந்தைய குதூகலம், விஞ்ஞானத்திற்கு முந்தைய ஞானம் ஆகியவையே மனிதனின் இயல்புகள் என்கிறான் கனவு மனிதன்.விலங்கைப் போன்ற குழந்தைமை நிரம்பிய உயிரியல் பிண்டமாக சமூக அமைப்பில் மனிதன் இருக்க முடியம்.அதைக் குறித்து நான் அனைவருக்கும் உரைக்கப் போகிறேன் என்கிறான்.ஒரு வகையில் உண்ணக்கூடாத பழத்தை உண்டதால் உருவான பிறழ்வு என்பது போன்றதே இந்தக் கதை.ஆனால் முந்தைய தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு ஆயாசமான நிகழ்வுக்கு மறுப்பு சொல்லும் கதை ஒரு கோமாளியின் கனவு.நாம் பிறழ்ந்து பின்னர் அதன் மேல் ஒரு புத்துலகத்தை கட்ட விரும்புகிறோம்.மாறாக நாம் அந்த பிறழ்விலிருந்து நம் உண்மையான இயல்புகளுக்கு திரும்பினால் வேறொரு புத்துலகம் சாத்தியம் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

நேற்றிரவு உங்களுடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிவிட்டு வீடு திரும்பிய நண்பர் காலையில் தற்கொலை செய்துக்கொண்டார் என்ற செய்தியை கேட்கும் போது உங்களுக்குள் ஒரு துணுக்குறல் எழுகிறது.நேற்று ஏன் அவன் நம்முடன் தன் துயரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.அவனுடன் பேசும் போதும் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு இருக்கும் என்பதையே உங்களால் ஊகிக்க இயலாமல் போனது உங்களை உறைந்து போகச் செய்யும்.சிசிபஸின் தொன்மம் கட்டுரையில் ஆல்பர் காம்யு கொலை செய்பவர்கள் பலரும் அன்று கொலை செய்வார்கள் என்பதை அன்று காலை சவரம் செய்யும் போது கூட உணராதுதான் இருக்கிறார்கள் என்கிறார்.சமீபத்தில் செய்தித்தாளில் ஒரு செய்தி. ஜாமீனில் ஒருவன் வெளியில் வந்திருக்கிறான்.வந்தவன் தன் நண்பர்களை வீட்டுக்குச் சாராயம் குடிக்க அழைத்திருக்கிறான்.குடித்துக்கொண்டிருக்கையில் என்னை ஏன் நீங்கள் ஜாமீனில் எடுக்க முயலவில்லை என்று அவர்களுடன் சண்டை போட்டிருக்கிறான்.இரண்டு நண்பர்கள் குடித்து முடித்தப்பின் அவர்களின் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்.மூன்றாவது நண்பன் அங்கேயே தூங்கிவிட்டான்.ஜாமீனில் வந்தவன் பெரிய கல்லை எடுத்து நண்பனின் தலையில் போட்டு கொலை செய்து விட்டான்.அவன் அன்று காலையோ அல்லது குடிக்கும் போதோ அப்படி செய்ய வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.அப்படி இருந்திருந்தால் அவன் அதற்கென்று ஆயுதங்களை தயார் செய்து வைத்திருப்பான்.கிடைத்த கல்லை கொண்டு கொலை செய்திருக்க மாட்டான்.நம்முள் இருக்கும் சலிப்பு, எரிச்சல், அவமானம் , இழப்பு, உடல்நிலை, தட்பவெட்பம் என்று பலவும் நம்மை ஒரு முடிவை நோக்கி நகர்த்துகிறது.நாம் பல நேரம் அதை உணர்வதே இல்லை.என்னை மீறி அப்படி பேசிவிட்டேன் , என்னை மீறி அடித்துவிட்டேன் என்று நாம் அடிக்கடி சொல்கிறோம்.நம்மால் அறிந்து தொகுத்து புரிந்து கொள்ள இயலாத செயல்கள் பலவற்றை நாம் செய்கிறோம்.அந்த அறியமுடியாமையின் வேர் எது.அந்த அறியமுடியாமையின் சிக்கல்கள் என்ன.தஸ்தாயெவ்ஸ்கியின் பல அக்கறைகளில் இந்த அறியமுடியாமையும் ஒன்று.

நிரந்தர கணவன்(The Eternal Husband) என்ற குறுநாவலில் நடாலியா என்ற பெண் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறாள்.நடாலியாவின் கணவன் பாவல் அவளது மரணத்திற்கு பிறகு அவளது தனிப்பெட்டி ஒன்றில் இருந்த பழையக் கடிதங்களைப் பார்க்கிறான்.அவற்றை படிக்கையில் அவளுக்கு இருந்தக் காதல்கள் பற்றி அறிகிறான்.அவனது மகள் லிசா அவனுக்கு பிறந்த குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொள்கிறான்.அந்தக் குழந்தையின் உயிரியல் தந்தை அலெக்ஸி இவானோவிச்.அலெக்ஸி இவானோவிச்சை சந்திக்க மகள் லிசாவை அழைத்துக்கொண்டு பீட்டர்ஸ்பர்க் வருகிறான்.அலெக்ஸியை சந்திக்கிறான்.ஆனால் அவன் நேரடியாக எதையும் அலெக்ஸியிடம் கேட்கவில்லை.பாவல் குழந்தை லிசாவிடம் கடுமையாக நடந்துக் கொள்கிறான்.அலெக்ஸி குழந்தையை அழைத்து சென்று தன் நண்பர் வீட்டில் தங்க வைக்கிறான்.தாய் தந்தையரிடமிருந்து பிரியும் குழந்தை லிசா நோயுண்டு இறக்கிறாள்.அலெக்ஸியையும் பாவலையும் அந்த மரணம் பெரிய அளவில் உலுக்கவில்லை.அவர்கள் அதை கடக்கிறார்கள்.பாவலுக்கு எந்தளவு தன் காதல் பற்றிய உண்மைத் தெரியும் என்பதை அலெக்ஸியால் அறிந்துகொள்ள இயலவில்லை.அவனால் அதை கேட்டு அறிந்து கொள்ளவும் முடியவில்லை.அவன் நடாலியாவிற்கு எந்தக் கடிதத்தையும் எழுதவில்லை.லிசாவின் மரணத்திற்கு பிறகு அலெக்ஸி வீட்டில் ஓர் இரவு தங்கும் பாவல் அவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது சவரக்கத்தியால் அவனைக் கொல்ல முற்படுகிறான்.ஆனால் அலெக்ஸி அவனைத் தடுத்து கீழே தள்ளி கைகளை பின்பக்கம் மடக்கி கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கிறான்.பாவல் கொலை திட்டத்துடன் அன்று அங்கு தங்கவில்லை.அவன் அங்கிருக்கும் சவரக்கத்தியை கொண்டே கொலை செய்ய முயல்கிறான்.அந்த கொலை முயற்சி அவனுள் வடிவம் பெறாமல் இருந்த எண்ணத்தின் வெளிப்பாடாக அமைகிறது.இந்த நிகழ்வுக்கு பிறகு தன் மனைவி நடாலியா அலெக்ஸிக்கு எழுதி அனுப்பாமல் இருந்த கடிதத்தை பாவல் வேறொருவன் வழி அலெக்ஸியிடம் கொண்டு சேர்க்கிறான்.பின்னர் பாவல் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து சென்று விடுகிறான்.அவர்கள் அதன் பின் வெகுகாலம் சந்திக்கவில்லை.இரண்டு வருடம் கழித்து அவன் வேறு ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொள்கிறான்.தற்செயலாக பாவலும் அலெக்ஸியும் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு மத்தியில் லிசாவின் மரணம் இருக்கிறது. இங்கே பாவல் தன் புதுமனைவி அலெக்ஸியிடம் பேசுவதை கண்டு அஞ்சுகிறான்.ஒரு போதும் தன் வீட்டுக்கு வரக்கூடாது என்ற வாக்குறுதியை வாங்கிக்கொண்டு பாவல் ரயில் ஏறுகிறான்.மறுபடியும் அவர்களை அறியாமலேயே அவர்கள் தங்கள் பழைய கதாபாத்திரங்களை ஏற்கிறார்கள்.இருவரும் தங்கள் கதாபாத்திரங்களை தங்களின் ஏற்பு இல்லாமல் வகிக்கிறார்கள்.நாம் ஒரு குறிப்பிட்ட சூழலில் மறுபடி மறுபடி ஒரே போலத்தான் நடந்து கொள்கிறோம்.நாம் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

நம்முள் இருக்கும் வன்மம் பல நேரங்களில் நேரடியாக வெளிப்படுவதில்லை.நாம் ஏமாற்றப்பட்டதும் கோமாளி ஆக்கப்பட்டதும் அவமானத்திற்கு உள்ளானதும் நம்முள் நொதித்துக் கொண்டிருக்கலாம்.ஆனால் நம்மால் எதிராளியை நோக்கி வன்மத்துடன் பாய இயலுவதில்லை.நம்முள்ளேயே பல்வேறு உரையாடல்கள் குழப்பங்கள் இருக்கலாம்.நாம் யாரை வெகுவாக வெறுக்கிறோமோ அவர்கள் மீது மிகுந்த பற்றுக்கொள்கிறோம்.பாவல் அலெக்ஸி உடல்நலம் குன்றி அவதிப்படும் போது அவனுக்கு சிகிச்சை அளித்து வலியிலிருந்து மீட்கிறான்.மனிதனுள் ஒரு அறியமுடியாமை உள்ளது.அதை நம்மாலேயே பல நேரங்களில் புரிந்துகொள்ள முடிவதில்லை.பெரும்பாலும் நேரடியாக தாக்கப்படும் போது நாம் எதிர்த்து பேசிவிடலாம்,அடித்துவிடலாம்.ஆனால் நீங்கள் முழுமையாக உடைந்துவிடக்கூடிய சிதறிவிடக்கூடிய ஒரு விஷயம் உங்களை எப்படியான எதிர்வினை புரிவது என்பதைக் குறித்த குழப்பத்தை ஏற்படத்தும்.உங்கள் மனம் தொடர்ந்து பல்வேறு உரையாடல்கள் வழி அலைபாய்ந்துக் கொண்டே இருக்கும்.தர்க்கம் அற்று மனம் பல்வேறு எண்ணங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி குழப்பிக்கொள்ளும்.மிகுதியான சோர்வும் சலிப்பும் ஆயாசமும் இருக்கும்.பாவலால் அலெக்ஸியை எதிர்த்து நேரடியாக எதையும் கேட்க முடியவில்லை.அது அவனை மேலும் அவமானப்படுத்தும்.ஆனால் அந்த நெருப்பையும் அவனால் முழுக்க முழுங்க முடியவில்லை.இந்த குறுநாவல் தீவிரமான தொனியில் எழுதப்படவில்லை.மாறாக பாவல் பற்றிய ஒரு கேலிச்சித்திரத்தை உருவாக்குகிறது.அலெக்ஸிக்கும் பாவலுக்குமான உறவை ஒரு விளையாட்டாக மாற்றுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

இதற்கு மாறாக மனிதனின் அறியமுடியாமை குறித்த சற்று தீவிர தொனியில் எழுதப்பட்ட சிறுகதை உள்ளோடங்கியள் (A meek one).பதினாறு வயது நிரம்பிய பெண் தன் வீட்டின் வறுமை காரணமாக ஒரு நகை அடகுக்கடைக்கு பல்வேறு மதிப்பிழந்த பொருட்களை அடகு வைக்க அடிக்கடி வருகிறாள்.அந்த ஊரில் வேறு எவரும் அவளது மதிப்பிழந்த பொருட்களை பெற்றுக்கொள்ளவதில்லை.அந்த நகை அடகுக்காரன் நாற்பது வயது நிரம்பியவன்.வேலையிலிருந்து ஒரு அவமானமான நிகழ்வால் விலகியவன்.அவள் கொண்டு வரும் பொருட்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றாலும் அவன் சிறு தொகையை அளிக்கிறான்.பின்னர் அவளைத் திருமணம் செய்துக்கொள்கிறான்.அவள் அவனின் கடந்த காலத்தை அறிந்து கொள்கிறாள்.அவர்களுக்குள் ஒரு உடைவு உண்டாகுகிறது.இருவருக்கும் மத்தியில் ஒரு தடுப்பை உருவாக்கி வாழ்கிறார்கள்.தன் அவமானங்களால் மிகவும் துவண்டு இருப்பவன் தன் உறவினர் வழி கிடைத்த மூன்றாயிரம் ரூபள்களை கொண்டு நகை அடகுக்கடையை துவங்கிறான்.தன் கடந்த கால அவமானங்களை துடைத்தெறிந்து புதிதான ஒரு வாழ்வை துவங்க வேண்டும் என்று ஏங்குகிறான்.அதற்கான ஊன்றுகோலாக தன் திருமணத்தை காண்கிறான்.அவர்களுக்குள் உண்டான பிரிவுக்கு பின்னர் அவள் ஒரு நாள் தன்னை மறந்து பாடுகிறாள்.அது அவனுக்கு ஒரு சமிக்ஞையாக தோன்றுகிறது.தன் அதுவரையான இறுக்கங்களிலிருந்து விடுபட்டு அவளிடம் தன்னை முழுதும் ஒப்புக்கொடுக்கிறான்.அவள் கால்களை முத்தமிடுகிறான்.தான் எந்தளவு ஓர் உறவுக்கு ஏங்குபவன் என்பதை அவன் வெளிப்படையாகவே சொல்கிறான்.அவளால் அவனது காதலை புரிந்துகொள்ளவே முடியவில்லை.துப்பாக்கி கொண்டு ஒரு முறை அவன் தூங்கிக் கொண்டிருக்கையில் கொல்ல முயன்ற பின்னர் அவன் தன்னை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை என்ற அவள் எண்ணுகிறாள்.இறுதிவரை அந்த பிரிவு இருக்கும் என்றே நினைக்கிறாள்.அவனது அந்த ஏக்கம் கதறல் அவளை உலுக்குகிறது.ஒரு நாள் அவள் ஜன்னலுக்கு அருகே திருவோவியத்தை பற்றிக் கொண்டு நிற்கிறாள்.அவன் அவளைப் பார்த்துக் கொண்டே பின்னால் நிற்கிறான்.திடீரென்று அவள் ஜன்னலிலிருந்து திருவோவியத்தை மார்போடு புதைத்துக்கொண்டு குதித்து விடுகிறாள்.அவள் வாயிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவு ரத்தம் வந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.இந்தக் கதை ஏனோ விமாலித்த மாமல்லனின் சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதையை நினைவுப்படுத்துகிறது.

எதனால் அவள் தற்கொலை செய்துக்கொண்டாள், ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் தான் வந்திருந்தால் அவளை தற்கொலையிலிருந்து மீட்டிருக்க முடியும் என்று புலம்புகிறான்.தான் மறுபடியும் இந்த தனியான வாழ்க்கையை வாழ வேண்டுமே என்று துயரத்தில் உழல்கிறான்.இந்தக் கதையை மணி கெளல் நஸர் என்ற திரைப்படமாக எடுத்திருக்கிறார்.இலங்கைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இதே கதையை அடிப்படையாக கொண்டு உன்னுடனும் உன்னுடன் இல்லாமலும் (With you , Without you) என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.தஸ்தாயெவ்ஸ்கியின் பல்வேறு கதைகள் நாவல்கள் தன்னிலையில் சொல்லப்பட்டவை.நிலவறையிலிருந்து குறிப்புகள், சூதாடி, பொபொக், உள்ளொடங்கியவள் போன்ற கதைகள் தன்னிலையில் எழுதப்பட்டவை.பல கதைகள் வெற்றியடையாத எழுத்தாளர்கள் தான் கதையை சொல்பவர்கள்.ஆனால் இந்த உள்ளொடுங்கியவள் கதையில் வரும் நகை அடகுக்காரனின் தன்னுரை போலவே இந்தக் கதை அமைந்திருக்கிறது.ஒரு எழுத்தாளனின் குறிப்புகளாக அல்ல.ஏன் அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்பதும் ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்பதுமே அவனை உருக்குலைக்கிறது.இனி மறுபடியும் தன் வாழ்க்கையில் இணைந்துகொள்ள போகும் தனிமை அவனை அச்சமூட்டுகிறது.அவன் அந்த மனதின் அறியமுடியாமை முன் உறவுகளின் புரிந்து கொள்ளமுடியாமையின் முன் செயலற்று நிற்கிறான்.

பொபொக் கதை இவான் என்ற தோற்றுப்போன எழுத்தாளனின் குறிப்புகள்.அவன் எழுதும் பலவும் நிராகரிக்கப்படுகிறது.அவன் மிகவும் அயர்ச்சியாக உணர்கிறான்.ஒரு மாற்றத்திற்காகத் தனக்கு தெரிந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கல்லறைக்குச் செல்கிறான்.அவனை அங்கு இறந்துபோனவரின் உறவினர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை.அவர்களிலிருந்து விலகி மூன்றாம் வகுப்பு கல்லறையில் சென்று அமர்கிறான்.திடீரென்று அவனுக்கு அங்கு பல குரல்கள் கேட்கத் துவங்குகிறது.மரணமடைந்திலிருந்தாலும் கல்லறையில் இருப்பவர்கள் உயிருடன் இருந்த போது இருந்த சமூக அடுக்குகளின் வரையறைகளுக்கு உட்பட்டே பேசுகிறார்கள்.அவர்களின் தவறுகள், பிழைகள், கீழ்மைகள் குறித்த அவமானங்களிலிருந்து விடுபட்டு வெளிப்படையாக பேசிக்கொள்கிறார்கள்.ஒரு பெண் நான் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்கிறாள்.அதை பலரும் ஏற்கிறார்கள்.இந்தக் கதை குறித்து நாம் மிகையான குறியீடுகளை உருவாக்கிக்கொள்ளலாம்.ஆனால் எளிய அளவில் இந்தக் கதை சமூக அமைப்பு உருவாக்கும் விழுமியங்கள் மரணத்திற்கு பிறகு பொருளற்று போகும் சூழலில் மனிதன் தன் கீழ்மைகளை எப்படி எந்தப் பாசாங்கும் இல்லாமல் கொண்டாட முனைகிறான் என்பதை சொல்வதாகக் கொள்ளலாம்.

நம்முள் நம் தீமை குறித்த ஒரு கொண்டாட்ட உணர்வும் அதை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.சட்டங்கள் , உறவுகள், சமூக கண்கானிப்பு, பிறர் குறித்த அச்சம், நம்மை எப்படி முன்நிறுத்த வேண்டும் என்ற ஏக்கம் ,அதிகாரத்திற்கான பிம்ப கட்டமைப்பு , மறுஉலகம் குறித்த ஊகங்கள் நம்மை பல்வேறு வகைகளில் நமது தீமையை நிர்வாணத்தை முழுக்க வெளிப்படுத்த இயலாத வகையில் மாற்றி வைத்திருக்கிறது.அப்படியான மனத்தடுப்புகளை மரணம் அகற்றுகிறது.கல்லறையில் இருக்கும் சடலங்கள் “அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையே” என்ற சுதந்திரத்தை பெறுகிறன்றன.அப்படியான சூழலில் சடலங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அவைகளிலிருந்து எவை திமிறி மேலெழுகிறது என்பதை பற்றிய கேலிச்சித்திரம் தான் பொபொக்.தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தை கரமசோவ், குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ஸ்விட்ரிகைலோவ் போன்றவர்களின் கீழான செயல்களுடன் இந்த பொபொக் கதையை இணைத்து வாசிக்கலாம்.தன் கீழான எண்ணங்கள் உருவாக்கும் அவமானம் பற்றிய கூச்சம் அகலும் போது மனிதனின் தீமை பேருருவம் கொள்கிறது.கூச்சம், வெட்கம், அவமானம் மனிதனை பல வகைகளில் கட்டுப்படுத்துகிறது.அது இல்லாத போது மனிதன் முழுக்க வேறொன்றாக மாறிவிடுகிறான்.இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் நாம் கூச்சம் , வெட்கம் போன்றவற்றை வாழ்வின் முன்னேற்றத்தை தடுக்கும் எதிர்மறையான பண்புகளாவே பார்க்கிறோம்.ஆனால் தீய எண்ணங்கள் , செயல்களின் போது மனிதன் இயல்பாகவே கூச்சமும் கொள்கிறான், மகிழ்ச்சியும் கொள்கிறான்.பொபொக் எந்த சட்டகங்களும் அற்ற சூழலில் மனித நடத்தை குறித்த ஒரு விசாரணை என்று கொள்ள முடியும்.ஒரு எழுத்தாளனின் வெற்றி அவன் தன் கதைக்கானத் தளத்தை உருவாக்குவதில் இருக்கிறது.இந்தக் கதையில் தஸ்தாயெவ்ஸ்கி கல்லறையில் இருக்கும் சடலங்கள் பேசிக்கொள்ளும் தளத்தை உருவாக்குகிறார்.அதை விவரிக்க ஒரு தோற்றுப்போன எழுத்தாளரை மைய கதாபாத்திரமாக்குகிறார்.இப்படியாக இந்தக் கதையை தன் விசாரணைக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.இந்த பொபொக் கதையை வளர்த்து பல்வேறு சூழல்களில் பொருத்தி எழுத முடியும். எழுதுபவருக்கு அதற்கான தைரியம் இருக்க வேண்டும்.தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருந்திருக்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த குறுநாவல்கள் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்கும் போது அவரின் அக்கறை விசாரணை மனிதனின் அகம் குறித்தே இருக்கிறது என்பதை மீண்டும் உணர முடிகிறது.உளவியலில் அவர் செய்திருக்கும் பாய்ச்சல்கள் நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.அவமானம் மனிதனை எந்தளவு துரத்தும் எப்படி மாற்றும் என்பதை பல்வேறு கதைகளில் தஸ்தாயெவ்ஸ்கி தொடர்ந்து எழுதுகிறார்.மரணம், இழப்பு ஆகியவற்றை விட அவமானம் மனிதனை வெகுவாக பாதிக்கிறது.அவனைச் சிதறடிக்கிறது.அவனை பல்வேறு கோமாளித்தனங்களை செய்ய வைக்கிறது.மறுபடியும் இந்த உலகின் முன் தன் அவமானங்களிலுந்து விடுபட்டு கனவானாக மாற அவனை உந்துகிறது.அவமானம் உருவாக்கும் கூச்சம், ஏக்கம், வெட்கம் போன்ற உணர்வுகள் , அவற்றால் நம் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி தஸ்தாயெவ்ஸ்கி போல எழுதியிருப்பவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும்.

அவர் மறுபடி மறுபடி இந்த அகம் சார்ந்த சிக்கல்களில் அக்கறை காட்டுவது இது எப்படி அவனது உறவுகளில் சித்தாந்தங்களில் கருத்தியல்களில் ஆன்மிகத்தில் பெரும் பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதை வலியுறுத்தத்தான்.மேலும் மனிதன் தன்னை முழுமையானவாக உணர விரும்புகிறான்.உடைந்த கண்ணாடியில் மனிதன் தன் முகத்தை பார்க்க விரும்புவதில்லை.அவமானம் மனிதனின் ஆன்மாவில் முழுமையில் ஒரு சிதைவை சிதறலை உடைவை ஏற்படுத்துகிறது.நான் என்ற முழுமையை அது உடைக்கிறது.அவன் சிதறுகிறான்.”அறுபட்டதென்ன விடுபட்டதென்ன ஒன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு” என்ற பெருந்தேவியின் கவிதை வரி போல அவனுள் ஒயாத உரையாடல்கள் கொப்பளிக்கின்றன.அவன் கடல் அலை போல நுரைத்து பொங்குகிறான்.அவனுள் மறுபடியும் தன்னை முழுமையாக தொகுத்துக் கொள்ள முனையும் அவா இருந்து கொண்டே இருக்கும்.அவன் பிராத்தித்திக் கொண்டே இருக்கிறான்.மண்டியிட்டு வணங்கிக்கொண்டே இருக்கிறான்.அவன் தனக்கான மீட்சியை கண்டு கொள்ள பயணிக்கிறான்.அப்படி கொந்தளிக்கும் ஆன்மாக்களே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள்.அவமானங்களும் அது உருவாக்கும் பிறழ்வுமே அவரின் அக்கறைகள்.அங்கிருந்து அவர் மற்றவற்றை விசாரிக்கிறார்.உங்களின் பெரும் திட்டங்கள் , சித்தாந்தங்கள், கருத்தியல்கள் , ஆன்மிகச் சொற்பொழிவுகள் எல்லாம் சரிதான், ஆனால் இங்கு மனிதன் சிதறிக் கிடக்கிறான், இதற்கு உங்கள் தீர்வு என்ன என்று கேட்கிறார்.

அவரின் கேள்விக்கு அவரே பதில்களைக் கண்டுபிடிக்கிறார்.கண்டுபிடிக்கும் பதில்களை அவரே கேலியும் செய்கிறார்.ஆனால் அனைத்துக்கும் அப்பால் மனிதன் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்பது ஒர் உண்மை என்பதன் பக்கம் அவர் அதிக சாய்வு கொள்கிறார்.நாமும் அவரை ஏற்க விரும்புகிறோம்.

The Eternal Husband and Other Stories – Fyodor Dostoevsky – Translated by Richard Pevear and Larrisa Volokhonsky  - Bantam Classics.

 - வனம் இணைய இதழில் பிரசுரமான கட்டுரை.

நிழற்படம் - https://commons.wikimedia.org/wiki/File:Dostoevskij_1863.jpg