நீர்ச்சலனம்

 



எனக்குப் பெண் நிச்சயமானது.இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்.எளிய முறையில் எழும்பூரிலிருக்கும் பெருமாள் கோயிலில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டோம்.என் தந்தை இறந்து ஒரு வருடம் ஆகிறது.நான் முன்னர் ஒரு பெண்ணைக் காதலித்தேன்.அதனால் வீட்டில் பார்த்த வரன்களில் ஆர்வம் காட்டவில்லை.அப்போது அவள் வேறொருவனைக் காதலித்துக் கொண்டிருந்தாள்.பின்னர் அவளுக்கும் அவளது காதலனுக்கும் உறவில் முறிவு ஏற்பட்டது.தற்போதும் அவளைக் காதலிப்பதாக கூறினேன்.அவள் மற்றொருவனை காதலிக்கத் தொடங்கினாள்.Don’t make yourself inferior before a woman.She will dislike you more என்று என் தந்தை என்னிடம் ஒரு முறை சொன்னார்.

ஒரு தலைக் காதலின் தோல்வியின் முடிவில் நான் கண்ணீர் சிந்தி கதறி அழுது தவித்து தாடி வளர்த்து தற்கொலைக்கு முயன்று ஜோசியம் பார்த்து பின்னர் ஒரு வழியாக சமாதானமாகி வீட்டில் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்த சமயத்தில் தந்தையார் இறந்து போனார்.அவர் மறைவுக்குப் பின்னர் சில காலம் கூரையற்ற வெளியில் இருப்பது போன்ற இன்மையை உணர்ந்தேன்.என் சகோதரி மூன்று வருடங்களுக்கு முன்னர் மணமாகி ஜெர்மனிக்கு குடிபெயர்ந்துவிட்டாள்.என் தந்தை பொதுப்பணித்துறையில் மின்னியல் பொறியாளராக இருந்தார்.அவரது கிராமத்திலிருந்து முதல் முறையாக சென்னை எம்ஐடியில் மின்னியல் படித்து பிடபள்வூடியில் பொறியாளராக சேர்ந்தார்.நல்ல சுறுசுறுப்பான மனிதர்.ஊரில் நான் இன்னாரின் பையன் என்றால் உடனே ஒரு மரியாதை கிடைப்பதை பார்த்திருக்கிறேன்.அவர் காலை ஆறு மணிக்கு மேல் படுக்கையில் கிடப்பதை நான் பார்த்ததில்லை.எனக்கும் அவருக்கும் பெரிய உரையாடல்கள் எதுவும் எப்போதும் இருக்கவில்லை.

அவரின் மறைவுக்கும் பதினாறாம் நாள் காரியத்திற்கும் வர இயலாத உறவினர் ஒருவர் துக்கம் விசாரிக்க சென்னை வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பால்ய கால சிநேகிதர்கள்.ஒரே பள்ளியில் கல்லூரியில் படித்திருக்கிறார்கள்.அவர் பிஎஸ்சி கணிதம் படித்து என்எல்சியில் வேலைக்குச் சேர்ந்து விட்டார்.என் தந்தை பிஎஸ்சி இயற்பியல் படித்து பின்னர் பொறியியல் படித்தார்.பேசிக் கொண்டிருக்கும் போது உன் அப்பாவுக்கு சாப்பிட்டப் பின்னர் சிகரெட் பிடித்தே ஆக வேண்டும் என்று சொன்னார்.நான் மறுபடியும் என்ன என்றேன்.ஆமாம் அவனுக்கு கல்லூரி முதலாண்டு படிக்கும் போதே புகைப் பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டது என்றார்.அருகில் சோபாவில் அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்தேன்.அவர் தரையைப் பார்த்தார்.எனக்கு அதற்கு பின் அவர் சொன்ன பல விஷயங்கள் காதில் விழவே இல்லை.இது எனக்குத் தெரியாது என்று காட்டிக் கொள்ள எனக்கு விருப்பம் இருக்கவில்லை.எந்தை ஒரு முறை கூட புகைப்பிடத்து நான் கண்டதில்லை.வீட்டிலும் சிகரெட் துண்டுகளையோ பெட்டிகளையோ நான் பார்த்ததில்லை.அவர் சென்றப் பின்னர் என் அம்மாவிடம் கேட்ட போது ஆமாம் என்று எளிமையாக சொன்னார்.எனக்கு இது குறித்து ஒன்றுமே தெரியாதே என்றேன்.பிள்ளைகள் முன்பு யாராவது புகைப்பார்களா என்று பதில் கேள்வி கேட்டு விட்டு வெடுக்கென்று எழுந்து போய் விட்டார்.நான் அதுவரை இருந்த என் தந்தையின் பிம்பத்தில் எப்படி சிகரெட்டை பொருத்துவது என்று புரியாமல் விழித்தேன்.

நிச்சயம் முடிந்த சில நாட்களில் எனக்கு விநோதமான மின்னஞ்சல் ஒன்று வந்தது.உங்கள் தந்தையைப் பற்றி என்ற சப்ஜெக்ட் இருந்தது.திறந்து போது உங்கள் நைனாவைப் பற்றி நீங்கள் அறியாத இரகசியம் ஒன்று இருக்கிறது என்று தொடங்கியது.உங்கள் சகோதரியோ அன்னையோ கூட அதை அறிய மாட்டார்கள்.ஆனால் அந்த உண்மை உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற ரீதியில் எழுதப்பட்டிருந்தது.அந்த இரகசியம் உங்கள் திருமணத்தை கூட நிறுத்தக்கூடும் என்று வேறு அச்சமூட்டியது.ஆனால் அந்த நோக்கம் தனக்கு இல்லை என்றும் அசுவாசமூட்டியது.எழுதியவர் பெயர் இல்லை.மேலும் பெயரில் என்ன இருக்கிறது என்ற அர்த்தம் வரும் வகையிலான மின்னஞ்சல் முகவரி.இதற்காகவே தொடங்கியிருக்கக் கூடும்.ஏதோ பணம் பறிக்கும் கும்பலின் வேலையாக இருக்குமோ என்று தோன்றியது.மின் மொட்டைக் கடிதாசி.அம்மாவிடம் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.எனக்குத் தெரிந்து என் தந்தையின் வாழ்க்கை எளிமையானது.இரகசியங்கள் என்று ஏதேனும் இருக்கும் என்று தோன்றவில்லை.மறுபடியும் ஏதாவது மின்னஞ்சல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்.

என் தந்தை இருந்திருந்தால் நான் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன ஒரே மாதத்தில் விவாகத்தை முடித்திருப்பார்.வேலை மூலம் ஏற்பட்ட அறிமுகங்கள் , ஊரில் உள்ள உறவினர்கள் , கடந்து வந்த நண்பர்கள் என்று அவரின் வட்டம் பெரிது.அவர் வீட்டில் இருந்தால் யாராவது அவரைப் பார்க்க வந்து கொண்டே இருப்பார்கள்.ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் எங்கள் வீடு அணில் விளையாடும் இல்லம் போலாகிவிட்டது.என் அன்னை அதிகம் பேச மாட்டார்.என் தமக்கை என் தந்தை போல வீட்டில் எதையாவது எடுத்துப் போட்டு செய்து கொண்டேருப்பாள்.இப்போது அவளும் இல்லை என்றான பின் வீட்டில் அயர்வு குடிக்கொண்டது.

என் தந்தை வழி பாட்டனார் கஞ்சமநாதன்பேட்டை என்ற ஊரில் பதினாறு ஏக்கர் நிலம் வைத்திருந்தார்.குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இருக்கும் சிறு கிராமம்.அவரின் சகோதரர்கள் அனைவரும் பதின் வயதிலேயே இறந்துவிட்டனர்.தாத்தாவின் அத்தை மகன் அந்த நிலத்தை விற்று விட்டு எங்கள் சாதிக்காரர்கள் அதிகம் இருக்கும் வேறொரு கிராமத்தில் பூமியை வாங்கி விவசாயம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்.அத்தை மகன் வித்தைக்காரர்.வாழ்வாதாரமான நிலத்தை விற்க வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு வித்தகர் ஏமாற்றிவிட்டார்.பூமியும் இல்லை காசும் இல்லை என்றான பின்னர் இப்போது நாங்கள் இருக்கும் ஊரில் தெரிந்த நிலக்கிழாரின் வீட்டில் தஞ்சம் புகுந்தார் என் தாத்தையா.

திண்ணையில் குடும்பத்துடன் தங்கிக் கொண்டு விவசாயக் கூலியாக தன் வாழ்வைக் கழித்தார் எந்தையின் பிதா.என் நைனா படித்து பணிக்குச் சென்று என் தாத்தா விவசாயக் கூலியாக இருந்த அதே ஊரில் ஒரு வீட்டையும் நாலு ஏக்கர் நிலத்தையும் வாங்கினார்.அந்த வீட்டில் தான் என் பாட்டனார் இறந்தார்.அப்போது எனக்கு இரண்டு வயது.பொதுப்பணித்துறையில் அவர் இருந்த போது அரசாங்க குவார்டர்ஸில்தான் தங்கினோம்.அவருக்கு எங்களது உறவினர்கள் மீது கடும் வன்மம் இருந்தது.அதனால் கடலூரில் வேலை கிடைத்தும் பணி மாற்றம் வாங்கி வேலூர் போனார்.நாங்கள் பல காலம் வேலூரில் சத்துவாச்சாரியில் இருந்தோம்.பின்னர் என் தந்தை சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்தார்.அப்போதுதான் எக்மோரில் கங்குரெட்டி தெருவில் ஒரு வீட்டை வாங்கினார்.சென்னை இல்லமும் கிராமத்து வீடும் நிலமும் அவர் பெயரில்தான் இருந்தன.அவர் இறந்தப் பின்னர் அதை எங்கள் பெயருக்கு மாற்றாமல் இருந்தோம்.அதைக் குறித்து நாங்கள் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.

நிச்சயம் முடிந்தப்பின்னர் பெண் வீட்டார் சொத்துகள் யார் பெயரில் இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பினர்.தந்தையின் பெயரில் தான் இருக்கிறது என்ற அறிந்த போது அதை என் பெயருக்கு மாற்றலாமே என்று கேட்டனர்.அவர்களின் கேள்வியின் முதன்மை நோக்கம் அதில் என் தமக்கைக்கும் பங்கு உள்ளதா என்பது தான்.எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலம் ஐம்பது லட்சத்திற்கும் மேல் போனது.சென்னையில் உள்ள வீடு , ஊரில் இருக்கும் நிலம் , இல்லம் எல்லாம் சேர்த்தால் நாலு கோடிக்கும் மேலான சொத்து எங்களுக்கு இருந்தது.

பெண் வீட்டாரின் குழப்பம் சொத்து எனக்கும் என் சகோதரிக்கும் எத்தனை சதவீகிதத்தில் பிரிக்கப்படும் என்பதில் இருந்தது.என் அம்மா அவர்களிடம் என் மகனுக்குத்தான் எல்லாம் என்று விட்டார்.இத்தனைக்கும் என் அக்காவிடம் இது குறித்து அவர் ஒன்றும் பேசவில்லை.பெண்ணுக்கு பங்கு கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்றும் அடுக்கினார்.அப்படியென்றால் மாற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.எங்கள் உறவினர் கூட அந்த ஊரில் சிவில் லாயராக இருக்கிறார்.அவர் உதவுவார் என்றார்கள்.என் அம்மாவும் என்னிடம் முதலில் நிலத்தையும் ஊரில் உள்ள இல்லத்தையும் என் பெயரில் மாற்றிவிடலாம் என்று நச்சரிக்கத் தொடங்கினார்.சட்ட வாரிசுகள் அனைவரும் கையெழுத்துப் போட்டால் தான் எதுவும் நடக்கும்.எனக்கு என் அக்காவின் பங்கை எடுத்துக் கொள்வதில் ஆர்வமில்லை.அதே நேரத்தில் அந்த நிலத்தை மட்டும் ஏன் விற்றுவிடக்கூடாது என்ற எண்ணமும் இருந்தது. விவசாயத்தின் மீது எனக்கு விபரமும் இல்லை விருப்பமும் இல்லை.அந்த ஊரில் ஸ்ரீதரன் என்பவருக்கு அந்த நிலங்களை என் தந்தை குத்தகைக்கு கொடுத்திருந்தார்.கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக அவர் தான் பார்த்துக் கொள்கிறார்.என் அப்பாவிற்கு ஏதோ ஒரு வகையில் உறவு.அவருக்கே கூட கொடுத்து விடலாம்.நான் இதைப்பற்றி ஊருக்கு செல்லும் போது அவரிடம் பேசலாம் என்று நினைத்திருந்தேன்.என் தமக்கை பார்கவிக்கும் இதில் உடன்பாடு இருந்தால் அவள் இந்தியா வரும் போது விற்றுவிடலாம் என்று தீர்மானித்திருந்தேன்.

நிச்சயம் முடிந்திருப்பதால் ஊருக்குச் சென்று எங்கள் குலத் தெய்வம் திரெளபதி அம்மனுக்கும் முத்தியால் ராவுத்தனுக்கும் படையல் வைத்து விட்டு வரலாம் என்று சொன்னார் அம்மா.எனக்கும் சேர்ந்தால் போல நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்த போது கிளம்பிப் போனோம்.தென் பெண்ணை ஆற்றின் நதிக்கரையில் அமைந்திருந்த கிராமம்.ஊருக்கு வந்த அன்றே கோயிலுக்கு போனோம்.கோயில் என் தாத்தா ஏமாந்த கிராமத்தில் இருந்தது.நான் வெளியே இலுப்பை மரத் தோப்பின் நிழலில் அமர்ந்துவிட்டேன்.என் அம்மா உள்ளே வெகு நேரம் வேண்டிக் கொண்டிருந்தார்.பூசாரி எல்லாத் தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்தார்.அங்கிருந்தவர்களுக்கு வீட்டில் சமைத்து எடுத்துவந்திருந்த பிரசாதத்தை  கொடுத்துவிட்டு திருப்தி அடைந்தவராக வெளியில் வந்து கிளம்பலாம் என்று தலையாட்டினார் என்னைப் பெற்றவர்.பூசாரிக்கு ஆயிர ரூபாய் கொடுத்து விட்டு புறப்பட்டோம்.நல்ல வெயில்.ஊர் திரும்பி சாப்பிட்டுவிட்டு மதியம் தூங்கிவிட்டேன்.

அன்று மாலை நதிக்கரைக்கு சென்றிருந்தேன்.யாரும் இல்லை.சற்றே பெரிய ஓடை போல சென்று கொண்டிருந்தது ஆறு.நதியின் இருமரங்கிலும் அடர்த்தியாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து மரங்கள்.காற்று ஆனந்தமாக வீசிக் கொண்டிருந்தது.மாலைக் கதிரவனின் ஒளி நதியில் பட்டுத்தெள்ளியது.எனக்கு ஓடும் நீரின் சலசல சத்தம் பிடிக்கும்.பறவைகளின் கீச்சொலிகள்.இனிப்பை சுவைப்பது போல மனம் தித்திப்பில் அமிழ்ந்தது.அப்படியே சிறிது நேரம் கிடந்தேன்.

மோட்டார் சைக்கிளின் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.ஒருவன் டிவிஎஸ் ரொனின் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான்.மண்ணில் சருக்கி விழுந்து விடுவான் என்று தோன்றியது.ஆனால் சமாளித்து வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு நதி நோக்கி வேகமாக நடந்து வந்தான்.டிஎஸ் என்ற நம்பர் பிளேட்.தெலங்கானா.தெலங்கானாக்காரன் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன்.அவனது முகத்தை பார்த்த போது இவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் ஏற்பட்டது.மிகவும் பரிச்சயமான முகம்.ஆனால் அதைப் பற்றி பொருட்படுத்தாமல் திரும்பிக் கொண்டேன்.

சாயும் பொழுதின் மஞ்சள் கிரணங்கள் நதியைப் புணர்ந்தன.அந்தப் பொன் ஒளியை அந்த ஒலியை அந்தத் தருணத்தை அப்படியே குழந்தை போல அள்ளிக் கொள்ள வேண்டும் என்றிருந்தது.அவன் என்னருகில் வந்து நின்றான்.அவனது நிழல் என் மேல் விழுந்தது.அமர்ந்திருந்த நான் தலை தூக்கி அவனைப் பார்த்தேன்.தோள்பட்டையை சுற்றி பழுப்பு நிற லேதர் பை ஒன்றை மாட்டியிருந்தான்.

“நீங்க தானே ஸ்ரீனிவாஸ்”

“ஆமாம்”

“உங்க அப்பா ஜெகன்னாதன் தானே”

“ஆமாம்”

“நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்”

அமர்ந்திருந்த நான் எழுந்து நீங்கள் என்றேன்.என் பெயர் ரசூல் என்றான்.கை கொடுத்தான்.கை குலுக்கி என்ன விஷயம் என்று கேட்டேன்.

“உங்க கிட்ட ஒரு விஷயம் பேசவேண்டியிருக்கு”

“எதைப்பத்தி”

“உங்க அப்பாவைப் பத்தி”

“எங்க நைனாவைப் பத்தியா”

“ஆமாம்”

“நான் இங்க இருக்குறது உங்களுக்கு எப்படித் தெரியும்”

“வீட்டுக்குப் போயிருந்தேன்.உங்க அம்மா சொன்னாங்க”

எனக்கு அவனிடம் அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை.சரி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு இங்கு வேண்டாம் என்றான்.

“பிறகு”

“அப்படியே எங்காவது போகலாம்”

“ஏன்”

“கொஞ்சம் டீடெய்லா பேசனும்.இங்க சரி வராது”

“எனக்கு நீங்க பேசுறது ஒன்னுமே புரியல”

“பக்கத்துல ஒரு டீக்கடை இருக்கு.அங்கே போகலாம்”

“அங்க உட்கார்ந்து பேசும் அளவுக்கு இடமில்லையே”

“இங்கிருக்கும் கடை இல்ல.அங்கு.நான் கூட்டிப் போறேன்”.அவன் கையை நீட்டி ஏதோ விமானத்தில் அழைத்துப் போவது போல பேசினான்.

“நான் வேஷ்டியில இருக்கேன்”

“அதுக்கென்ன”

நான் அதற்கு பின் ஒன்றும் கேட்கவுமில்லை.சொல்லவுமில்லை.பைக்கின் டயர்கள் புதைந்துவிடும் அளவுக்கு மணல்.அவன் மெல்ல முறுக்கி வண்டியை பாதைத் தொடங்கும் இடத்திற்கு கொண்டு வந்தான்.அவன் பேசுவதின் தாத்பரியம் எதுவும் எனக்கு விளங்கவில்லை.ஆனால் அவனைப் பார்த்த போது ஏதோ தொண்டையில் துயர் உருண்டு நிற்கும் பாலகன் போல இருந்தான்.நான் நடந்து சென்று ஏறிக் கொண்டேன்.அவன் நெடுஞ்சாலையில் இருக்கும் அல்-மீரா என்ற தேநீர்க் கடைக்கு அழைத்து சென்றான்.கூட்டம் அதிகமில்லை.உங்களுக்கு என்ன சொல்லட்டும் என்றான்.பால் இல்லாத வெறும் டீ என்றேன்.வேறு எதாவது வேண்டுமா என்று கேட்டான்.வேண்டாம் என்று சைகை செய்த பின்னர் அவன் இருவருக்கும் தேநீர் சொல்லிவிட்டு இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு எதிராக அமர்ந்தான்.

அவன் மாநிறத்தில் இருந்தான்.வயது முப்பது இருக்கும்.நல்ல திடமான உடல்.மீசையை மழித்திருந்தான்.கட்டம் போட்ட பச்சை நிறச்சட்டை அணிந்திருந்தான்.அது அவனை சற்று இணக்கமானவனாக காட்டியது.அதே நேரத்தில் தேவையில்லாமல் ஒரு வார்த்தை அதிகம் பேசாதவன் என்ற எண்ணமும் உருவானது.எங்கள் இருவருக்கும் தேநீர் வந்தது.

நான் சுருக்கமாக சொல்கிறேன் என்று தொடங்கினான்.உங்களுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும்.அதை அனுப்பியது நான் தான்.என் பெயர் ரசூல்.என் அம்மா பெயர் ராதிகா.நீங்கள் புருவம் உயர்த்தி பார்ப்பது புரிகிறது.பலரும் கொள்ளும் வியப்புதான்.என் அன்னையின் முழுப்பெயர் ராதிகா ரகுராமன்.ரகுராமன் என் பாட்டனார்.என் அன்னையும் என் தந்தையும் உங்கள் தந்தையுடன் சென்னை எம்ஐடியில் படித்தார்கள்.இப்போது என் தாய் உயிருடன் இல்லை.இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்தவிட்டார்.மார்பகப் புற்றுநோய்.என் தந்தையின் பெயர் ரஹீம்.ஆம்.மதம் கடந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.தந்தை நான் பிறந்த ஒரு வருடத்திலேயே சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.என் அன்னை எனக்கு மித்ரன் என்று நாமமிட்டார்.சான்றிதழ்களில் அந்தப் பெயர் தான் இருக்கிறது.நான் ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினேன்.நீங்கள் நினைப்பது தவறு.எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்வதற்காக நான் முஸ்லீமாகவில்லை.எனக்குப் பிடித்திருந்தது அதனால் மாறினேன்.

அவன் தொடர்ந்தான்.செய்தி என்னைப் பற்றியதில்லை.எனக்கு உங்கள் தந்தையை என் சிறுவயதிலிருந்தே தெரியும்.சிறுவயதிலிருந்து என்றால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து.நாங்கள் சென்னையில் திருவல்லிக்கேணியில் சில காலம் இருந்தோம்.அப்போது உங்கள் தந்தை வாரம் ஒரு முறையேனும் எங்களை வந்து பார்ப்பாராம்.பிறகு என் அன்னைக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்தது.அங்குச் சென்றோம்.அப்போது எனக்கு ஐந்தாறு வயது இருக்கும்.உங்கள் தந்தையின் வருகை அதன் பின் குறைந்தது.ஆனால் வருடத்திற்கு மூன்று நான்கு முறையாவது விஜயம் செய்வார்.எனக்குச் சென்னை நினைவுகள் அதிகம் இல்லை.மங்கலாக சிலத் தருணங்கள் மட்டும் ஞாபகத்தில் இருக்கின்றன.ஸ்கூட்டரில் அவருடன் எங்கோ பாலத்தின் மீது சென்றது போன்ற ஒரு காட்சி மனதில் பதிந்திருக்கிறது.அது சென்னையாகத்தான் இருக்க வேண்டும்.ஏனேனில் ஐதராபாத்தில் அவர் வந்தால் ஆட்டோவில் அல்லது பஸ்ஸில்தான் வெளியே போவோம்.நான் ஐதராபாத்தில் அவருடன் இருந்த பொழுதுகள் கூர்மையாக நினைவில் நிற்கின்றன.எனக்கு ஏதாவது வாங்கி வருவார்.வெளியே கூட்டிப்போவார்.அத்தகைய நாட்களில் என் அம்மா அழுத்தமற்று நிம்மதியாக இருந்ததை இப்போது உணர முடிகிறது என்றான்.அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகை முடித்து சிலர் வந்ததால் கூட்டம் சேர்ந்தது.ஓரிருவர் அவனுக்கு முகமன் தெரிவித்தார்கள்.இவர் ஸ்ரீனிவாஸ் , என் நண்பர் என்று அறிமுகப்படுத்தினான்.அவர்கள் தலையசைத்து புன்னகைத்து கடந்தார்கள்.

நான் அவனைக் குழப்பமாக பார்த்தேன்.அதைப் புரிந்துகொண்டவன் தனது தோள்பட்டையை சுற்றி மாட்டியிருந்த பையிலிருந்து ஒரு காகிதக்கட்டை எடுத்தான்.அது பத்திரம் என்பது அவன் அதை விரித்த போது தெரிந்தது.முதல் பக்கத்திலேயே என் தந்தையின் கையெழுத்தை பார்த்தேன்.எனக்கு வயிற்றில் ஏதோ பற்றியிழுப்பது போல இருந்தது. நெற்றியை தடவிக்கொண்டேன்.இது என்ன என்றேன்.உயில் என்றான்.யாருடையது என்று வினவிய போது நான் சந்தேகித்தது போலவே இது உங்கள் நைனாவின் உயில் என்று கூறினான்.நான் ஒரு நொடி எழுந்து நின்றுவிட்டேன்.அவன் பதற வேண்டாம் அமருங்கள் என்றான்.நான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் உட்கார்ந்தேன்.

உங்கள் தந்தை என் தந்தையின் நண்பர்.என் தாயின் நண்பரும் தான்.இதை அவன் சற்று இழுத்து சொன்னான்.அல்லது நான் அப்படி எண்ணிக்கொண்டேன்.இந்த உயில் பத்து வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது.அப்போது என் அம்மா உயிருடன் இருந்தார்.இது சென்னையில் வைத்து கையெழுத்து இடப்பட்டது.சாட்சிகள் உங்கள் தந்தைக்கும் என் பெற்றோருக்கும் நண்பர்களான தட்சினாமூர்த்தியும் கிருஷ்ண ராவும்.கிருஷ்ண ராவை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.இதில் நாலு ஏக்கர் நிலம் மித்ரனுக்கும் சென்னையில் உள்ள வீடும் கிராமத்தில் இருக்கும் இல்லமும் தனது இயற்கையான சந்ததிகளுக்கும் என்று எழுதப்பட்டுள்ளதாக சொன்னான்.அதைக் கூறிகொண்ட பத்திரத்தை என்னிடம் நீட்டினான்.வேண்டுமென்றால் பார்த்துக்கொள் என்பது போல இருந்தது அந்தச் சமிக்ஞை.அப்போது என் பெயர் மித்ரன்.நான் உங்கள் தந்தை இறந்த போது வந்திருந்தேன்.கிருஷ்ண ராவ் சொல்லியிருந்தார் என்றான்.

எனது நா சற்று வறண்டது.என்னைச் சுற்றி இருந்த அனைத்தும் மறைந்து தெரிந்தது சூன்யம்.எச்சிலைக் கூட்டி முழுங்கினேன்.கைகளை வேஷ்டியில் அழுத்தித் துடைத்தேன்.பெருங் கூட்டத்திற்கு நடுவே தந்தையை தொலைத்து விட்டு நிற்கும் சிறுவன் போல அழுகை முட்டிக் கொண்டு வந்தது.அவன் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை என்பது மட்டும்தான் ஆறுதலாக இருந்தது.எனக்கு அந்தத் தருணத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூடத் தெரியவில்லை.எனக்கு அவன் யார் என்று தெரியாது.அவன் சொல்பவற்றின் மெய்த்தன்மையை கூட அறியேன்.ஆனால் அந்தக் கையெழுத்து எனக்குத் தெரியும்.என் நைனாவின் கையெழுத்தை என் கைரேகையை போலவே நான் அறிவேன்.அதில் இருக்கும் அந்தக் கையொப்பம் ஒரு சர்ப்பம் போல என்னை நோக்கி எழுந்து வந்தது.என் கரங்கள் வலி கொண்டு நடுங்கின.அதற்கு மேல் அங்கு இருந்தால் உதறலில் கீழே விழுந்து விடுவேன் என்று கூடத் தோன்றியது.

நான் எழுந்து கடையிலிருந்து நடக்க ஆரம்பித்தேன். அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் என்னை பின் தொடராமல் தடுக்காமல் அப்படியே அமர்ந்துவிட்டான்.எனக்கு அது பெரும் நிம்மதியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.இருண்டிருந்தது.நான் அழுவதற்கு அது ஏதுவாக இருந்தது.நான் கண்ணீர் உதித்துக் கொண்டே நெடுஞ்சாலையில் நடந்தேன். இதெல்லாம் என்ன.நான் ஏதாவது துர்கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தது.என் பிரக்ஞை சரியாகத்தானே இருக்கிறது என்ற குழப்பம் உண்டானது.என் தந்தைக்கும் அந்த ரசூலின் அன்னைக்கும்.என் எண்ணங்கள்.எல்லாமே அசிங்கமாக இருந்தது.யாரோ பிருஷ்டத்தை தூக்கி என் முன் காண்பிப்பது போலத் தோன்றியது.என் அப்பா ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.அம்மே.எனக்கு அப்படியே சாலைக்குள் புதைந்து விடலாம் என்று வந்தது.மறுபடியும் ஓடிச் சென்று அந்த ரசூலின் முகத்தில் நன்றாக குத்துவிட வேண்டும் என்று ஆத்திரம் முட்டியது.அவன் சொல்வது பொய்யாக இருக்கலாம்.இருக்கலாம் தான்.இருக்க வேண்டும் என்ற விருப்பம் மேலெழுந்தது.

ஆனால் அந்தக் கையொப்பம்.அவர் தன் வேலையின் பொருட்டு வீட்டுக்கு எடுத்து வரும் கோப்புகளில் இடும் அந்தக் கிறுக்கலை நான் அருகில் நின்று பார்த்திருக்கிறேன்.நான் கடற்கரை சாலையிலிருக்கும் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பல முறை சென்றிருக்கிறேன்.அங்கிருந்து கொண்டு கடலைப் பார்ப்பது அந்தக் காலத்தில் எத்தனை மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.அப்போது அவர் அறையில் அந்தக் கையெழுத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன்.என் பள்ளி டைரிகளில் படிவங்களில் நான் பார்த்த அந்த லிபிகள்.அதில் ஆங்கில எழுத்து ஆர் போன்ற ஒரு கோணல் வரும்.ஆனால் அவர் பெயரில் எங்கும் ஆர் இல்லை.என் பாட்டனாரின் நாமத்திலும் அப்படி எதுவும் இல்லை.அதைக் குறித்து ஒரு முறை கேட்ட போது சிரித்தார்.ஒரு வேளை அந்த ராதிகாவின் நினைவாகத்தான் ஆர் சேர்த்து கொண்டாரோ.என் தந்தைக்கு ஒரு கள்ளக் காதலி இருந்திருக்கிறாள்.அவளுக்கு என் அப்பா கள்ளக் காதலன்.

வீட்டுக்கு வந்த போது அம்மா இல்லை.அது சற்று நிம்மதியை அளித்தது.ஒரு வேளை என் தந்தை சிகரெட் பிடிப்பார் என்பதைத் தெரிந்து வைத்திருந்தது போல இதையும் அவர் அறிந்திருப்பாரோ என்ற எண்ணம் உதித்தது.இதை எல்லாம் ஊர் அறிந்தால் எத்தனை பெரிய அவமானம்.எல்லோரும் என்னைப் பார்த்து சிரிப்பார்கள்.என் செவி கேட்க என் நைனாவை கேலி பேசுவார்கள்.என் அம்மாவிற்கு இது மிகப்பெரிய துரோகம்.என் திருமணம் கூட நின்று போகக்கூடும்.ஆனால் ஒரு வேளை இது நட்பின் பொருட்டு செய்யப்பட்டதாக இருக்குமென்றால்.ஏதோ ஒரு சத்தியம் போல.பிராயச்சித்தம் போல.திரும்பக் கொடுப்பது போல.தெரியவில்லை.ஆனால் தோழமைக்காக யாரும் நாலு ஏக்கர் நிலத்தை எழுதி வைக்கமாட்டார்கள்.

உயில் எழுதப்பட்டு பத்து வருடங்களாகிறது என்றான்.இதைக்குறித்து என் தந்தை ஒரு சொல் கூட உதிர்த்ததில்லை.இப்படியா முதுகில் குத்துவார்கள்.ஒரு வேளை அதற்குப் பிறகு இன்னொரு உயில் எழுதியிருந்தால் அதில் அனைத்தும் எங்களுக்குத்தான் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இப்போது அந்த நிலம் என்னை விட்டு போகிறது என்று கவலைப்படுகிறேனா அல்லது என் தந்தைக்கு இன்னொரு மகன் இருக்கிறான் என்று குறுகுகிறேனா என்று கூடத் தெரியவில்லை.அவனில் என் தந்தையின் பிம்பத்தை பார்த்தேனே.அது எனது அனுமானமா அல்லது உண்மையிலேயே அவன் என் தந்தை போலத்தான் இருக்கிறானா.

என் அப்பா இருந்திருந்தால் சட்டையை பிடித்து அவன் உன் மகனா என்று கேட்டிருக்கலாம்.அவன் தான் செத்துப் போய்விட்டானே.படுபாவி.வெளியில் செல்லும் போதெல்லாம் நன்கு இஸ்திரி செய்த வெள்ளை நிறச் சட்டையை இன் செய்து லேதர் பெல்ட்டும் அடர்த்தியான வண்ணங்களில் கால்சராயும் பாலிஷ் செய்த ஷூவும் அணிந்துகொண்டு அப்படியே பெரிய மயிராண்டி போலத்தான் போவான்.வீட்டில் கூட அந்தாளின் அறையிலிருந்து வெளியே வரும் போது தலை கலைந்து நான் பார்த்ததில்லை.தினமும் சவரம் செய்வான்.உடற்பயிற்சி செய்வான்.சிறுவயதில் சிலம்பம் கற்றான்.ஒரு கனவான் போல இருந்தானே.ஆனால் உண்மையில் சிகரெட் பிடித்திருக்கிறான்.பெண் தொடர்பு இருந்திருக்கிறது.இதோ இந்த நிலங்களை வீட்டை வாங்க எத்தனை தில்லுமுல்லுகள் செய்திருப்பானோ தெரியவில்லை.இன்னும் குடி , கூத்து என்று என்ன இழவுகள் எல்லாம் இருந்ததோ.எனக்கு என் மீதே அருவருப்பாக வந்தது.சட்டையைக் கிழிப்பது போல அவனைக் கிழித்துப் போட முடியாதே.

நான் என் அம்மா வருவதற்கு முன்னர் விளக்கை அணைத்துவிட்டு தூங்குவது போல பாவனை செய்தேன்.உறங்கிவிட்டால் எழுப்ப மாட்டார்.என்னுள் பல குரல்கள் ஒன்றோடு ஒன்று உரையாடிக்கொண்டன.எனக்குச் சாத்தியப்பட்ட நல்லூழ் மிகுந்த மனஅழுத்தம் வந்தால் அப்படியே நித்திரையில் ஆழ்ந்துவிடுவேன் என்பது தான்.கனவில் தொடர்பற்ற ஏதேதோ காட்சிகள்.அதில் ஒன்றில் என் தந்தை மலக்குவியலுக்கு மத்தியில் இருந்தார்.காலையில் துயில் கலைந்த போது இன்று அமாவாசை என்பதால் நைனாவுக்கு படைக்க வேண்டும் வாழையிலை வாங்கி வா என்றார் அம்மா.எனக்கு என் தாய் மீது ஒரு பெரிய கல்லைத் தூக்கிப்போட்டு கொல்ல வேண்டும் என்று முதல் முறையாக தோன்றியது.இவள் சரியான தத்தி.அங்கே கணவன் வேறொருத்தியுடன் கூத்தடித்திருக்கிறான்.அது தெரியாமல் அவனை வணங்கப்போகிறாளாம்.வெளியில் சென்று உமிழ் நீரை துப்பினேன்.

மதியத்திற்கு மேல் சாப்பிட்டுவிட்டு அந்தப் பெண் வீட்டார் சொன்ன வக்கீலை போய்ப் பார்ப்போம் என்று அம்மா பேசத் தொடங்கினார்.நான் தலையை மட்டும் வேகமாக ஆட்டிவிட்டு பக்கத்து வீட்டில் பைக்கை வாங்கிக் கொண்டு வெளியில் போனேன்.எனக்கு உண்மையில் எங்கு போவது என்று கூடத் தெரியவில்லை.அவன் அந்த ரசூலின் போன் நம்பரை கூட நான் வாங்கவில்லை.முந்தைய நாள் சென்ற கடைக்கே மறுபடியும் சென்றேன்.அவன் அங்கு தென்படுவான் என்று ஏனோ எனக்குத் தோன்றியது.அவன் அங்கு இல்லை.எதிரில் இருந்த பள்ளிவாசலில் அவனைக் குறித்து விசாரிக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.அன்று வெள்ளிக்கிழமை.ஒரு வேளை மதியத் தொழுகைக்கு அவன் வரக்கூடும்.இவன் சென்னையில் பிறந்திருக்கிறான்.பின்னர் ஐதராபாத்தில் வளர்ந்திருக்கிறான்.அப்படியென்றால் இந்த ஊரில் என்ன செய்கிறான்.அதுவும் புரியவில்லை.கிருஷ்ண ராவை அழைத்து பேசலாம் என்று நினைத்தேன்.என் தந்தையின் பல்லாண்டு நண்பர்.

ஆனால் அவருடன் பேசி அவரும் அதை ஊர்ஜிதப் படுத்தினால் அதை மெல்வது இன்னும் கடினமானதாக மாறும்.மேலும் இதையெல்லாம் எங்களிடமிருந்து மறைத்திருந்ததால் அவர் மீதும் ஆழமான கசப்பு எழுந்தது.வண்டியில் இலக்கில்லாமல் சிறிது நேரம் சுற்றினேன்.வாழையிலையை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.அமாவாசை என்றால் என் அன்னைக்கு காலையில் சாப்பிடக் கூடாது.தலை குளிக்க வேண்டும்.வெங்காயம் பூண்டு இவை எதையும் உணவில் சேர்க்கமாட்டார்.அதனால் சாம்பார் இருக்காது.மோர் குழம்பும் சேப்பங்கிழங்கு பொரியலும் வடை பாயசாமும் செய்து என் தந்தையை வணங்கிவிட்டு எனக்கு உணவு பரிமாறினார்.இவருக்கு இதெல்லாம் தெரிய வந்தாலும் இது போலத்தான் நடந்து கொள்வாரா என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.என்னடா புதுசா பாக்குற மாதிரி அம்மாவைப் பாக்குறே என்று கேட்டுவிட்டு போய்விட்டார்.

நன்கு சாயக்கூடிய நாற்காலியை எடுத்து வீட்டுக்குப் பின்புறம் போட்டு அமர்ந்தேன்.மாமரத்தில் அடர்த்தியான பச்சை இலைகள்.காய்கள் இதோ விழப் போகிறேன் என்பது போல தொங்கிக் கொண்டிருந்தன.சலனமற்று கிடந்தது பொழுது.அப்படியே சிறிது கண் அயர்ந்தேன்.எங்கோ ஒரு நாய் குரைப்பது கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.தொலைவில் என் அம்மா பக்கத்து வீட்டாருடன் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது.அவர் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு பின்னால் வலது பக்கமாக அரை கீலோ மீட்டர் நடந்தால் எங்கள் பூமி.எங்கள் பூமி.இனி அது அவனுடையது.அந்த நிலம் என் தந்தை சம்பாதித்தது.அதை அவர் எப்படி அடைந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.அதை எவருக்கும் கொடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது.இதோ குரைத்துக் கொண்டிருக்கும் இந்த நாயிற்கு கூட எழுதி வைக்கலாம்.ரசூலுக்கு எழுதியிருக்கிறார்.ஏன் எழுதினார்.என்ன காரணம்.இதை எல்லாம் எத்தனை தூரம் துரத்த முடியும்.துரத்தினாலும் என்ன அறிந்து விட முடியும்.ஏதேதோ எண்ணங்கள்.அடர்த்தியான பச்சை நிற இலைகளின் ஊடே வெயில் நடனமிட்டது.எல்லாம் எளிதாக தெரிந்தது.ஆனால் அத்தனை எளிது இல்லை என்றும் தெரிந்தது.

பொதுவாக வேலையில்லாத நாட்களில் நான் அலைபேசியின் ஒலியை மட்டுறுத்தி வைத்திருப்பேன்.கீழே வைத்திருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன்.தொடர்ந்து ஒரே எண்ணிலிருந்து பல அழைப்புகள்.நான் ரசூல் என்று தொடங்கிய நிறைய குறுஞ்செய்திகள்.இவனுக்கு என்னை நெருங்குவது மிக எளிதாக இருக்கிறது.அவனுடன் பேசும் விருப்பம் இருக்கவில்லை.அதனால் அது என் தந்தையின் கையெழுத்துதான் என்றால் அதன் பின் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை.பத்திரம் என்னிடம் தான் இருக்கிறது.வந்து வாங்கிக்கொள்.விற்று காசாக்கி நீயும் குடித்து கூத்தடித்து செத்துப்போ என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.

அப்படியில்லை.அது என் நோக்கம் இல்லை.நான் உங்களை மறுபடியும் சந்திக்க முடிந்தால் விரிவாக சொல்ல முடியும் என்றான்.நாளை நான் உங்களை ஓரிடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று வேறு தொடர்ந்தான்.எனக்கு உன்னை மறுபடியும் பார்க்க விருப்பமில்லை.வேண்டுமென்றால் கிருஷ்ண ராவிடம் பத்திரங்களை கொடுத்து விடுகிறேன். நான் எங்கு கையொப்பம் ஈட வேண்டும் என்று சொல்.அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்று பதில் எழுதினேன்.

ஒரு முறை சந்திக்க விரும்புகிறேன்.ஒரு முறை மட்டும்.தயவுசெய்து பரிசீலியுங்கள்.அதற்கு மேல் உங்கள் விருப்பம் என்று சுருக்கமாக எழுதியிருந்தான்.துயர் தொனித்த வரி.இதைக் குறித்து இதற்கு மேல் சிந்திக்க ஒன்றுமில்லை.அது என் தந்தை தன் சுயநினைவுடன் ஈட்ட கையொப்பம்தான்.பூர்விக நிலம் இல்லை.அதனால் அதைப்பற்றி இனி குழம்பத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.எனக்கு அவன் அழைக்கும் இடத்திற்கு போவதில் உண்மையில் ஆர்வமில்லை.ஆனால் செல்வதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதும் இல்லை தான்.போய் வரலாம் என்று தீர்மானித்தேன்.நாளை சந்திக்கலாம் என்று சொன்னதற்கு மகிழ்ச்சி நான் வந்து காலை எட்டு மணிக்கு அழைத்து போகிறேன் என்றான்.

அவனது மோட்டார் சைக்களில் போனோம்.அவன் எதுவும் பேசவில்லை.நானும் எங்கே போகிறோம் எதுக்குப் போகிறோம் என்று கேட்கவில்லை.சனிக்கிழமை காலை என்பதால் சாலையில் அதிக வண்டிகள் இல்லை.இளங்கதிர்.அவன் நான்காவது கீயரில் சீரான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.அடிக்கடி பிரேக்கும் போடவில்லை.அக்ஸிலேட்டரையும் கூட்டவில்லை.அப்படியே நிறைய தூரம் போனான்.சில மணித்தியாலங்களில் வண்டி நான் அவன் எல்லாம் ஒன்றாகிவிட்டது போன்றோர் உணர்வு.பண்ருட்டியை நெருங்கும் முன்பு ஒரு சாலையோரக் கடையில் நிறுத்தினான்.எங்கிருந்தோ திரும்பி வந்தது போல இருந்தது.

“நீங்க டிபன் சாப்பிடுறீங்களா.இல்ல டீயா”

“ம்.என்னது”

“இல்ல நீங்க”

“எனக்கு டீ போதும்”

இரண்டு டீ சொல்லிவிட்டு என்னருகில் வந்து நின்றான்.

“எங்க போறோம்”

“நீங்க இப்பத்தான் கேக்குறீங்க”

“இப்பத்தான் கேக்கனும்னு தோனிச்சு”

“எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கடலூர்ல இருக்கார்.அவரைச் சந்திச்சா நான் எதுக்கு உங்களப் பாக்க வந்தேன்னு உங்களுக்குப் புரியும்”

“என்ன பொடி வைச்சு பேசுறீங்க”

“அப்படில்லாம் ஒண்ணுமில்ல.நீங்க பாருங்க”

அவன் அதன் பின் ஒன்றும் சொல்லவில்லை.எனக்கும் நச்சரிக்கத் தோன்றவில்லை.அவன் வண்டியை கடலூர் நோக்கி விட்டான்.என் தந்தை பிஎஸ்சி படித்த போது பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு சைக்கிளில் போய் வருவார்.பஸ்ஸூக்கு பணம் இருக்காது.இத்தனை தூரம் தினமும் இருமுறை மூன்று வருடங்கள் சென்று வந்திருக்கிறார்.பரீட்சை நாட்களில் கூட சாப்பிட ஒன்றும் இருக்காது என்று சொன்னது நினைவுக்கு வந்தது.அவன் கடலூர் மத்திய சிறைச்சாலையில் நிறுத்திய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.இங்குதான் ஒருத்தரை பார்க்கப் போகிறோம் என்றான்.

“உங்களுக்குத் தெரிஞ்சவரா”

“இல்ல.தெரிஞ்சுகிட்டவரு”

“புரியல”

“நான் சொல்றேன்”

அவன் எனக்கும் சேர்ந்து முன்பே அனுமதி வாங்கியிருந்ததை அப்போது தான் அறிந்தேன்.தன் தோள்பட்டையை சுற்றி மாட்டியிருந்த பையிலிருந்து விசாரணைக் கைதியை பார்ப்பதற்கான அனுமதிப் படிவங்களை கொடுத்தான்.அவனுக்கு என் ஆதார் எண் கூட தெரிந்திருந்தது.இதெல்லாம் எப்படிப் பெற்றாய் என்று கேட்ட போது அவன் அதென்ன பெரிய விஷயம் என்பது போல பார்த்தான்.அலைபேசிகளை ஒப்படைத்தோம்.சோதனை செய்து விட்டு உள்ளே விட்டார்கள்.வார்டன் அவனை நினைவு கூர்ந்து பேசினார்.எங்களைப் போல கைதிகளைப் பார்க்க பத்து பதினைந்து பேர் வந்திருந்தனர்.அரை மணி நேரம் பேசலாம்.எல்லோருக்கும் ஒரே கால அளவு தான்.எங்களுக்கும் கைதிகளுக்கும் மத்தியில் மூன்று அடி இடைவெளி இருந்தது.இரு பக்கமும் ஆளுயர இரும்புக் கம்பித் தடுப்புகள்.எங்களைப் பார்க்க வந்தது ஒரு இளைஞன்.லுங்கியும் சட்டையும் அணிந்திருந்தான்.அவனுக்கு இருபத்தியைந்து வயது இருக்கும்.ரசூலை நலம் விசாரித்தான்.அனைத்தையும் சத்தமாக பேச வேண்டியிருந்தது.

உங்களுக்கு வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறேன்.விசாரணைக் கைதியாக நான்காண்டுகளுக்கு மேலாக இருந்து விட்டதால் ஜாமீன் வாங்கிவிடலாம்.ஷூரிட்டி செலுத்த வேண்டியிருந்தால் அதற்கும் நாங்கள் உதவுவோம் என்று அவனிடம் கூறிக் கொண்டிருந்தான்.எங்க வாப்பாவே என்னை வந்து பார்த்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது.எல்லோரும் என்னை மறந்து விட்டார்கள் என்று அவன் சற்று குழறலாக சொன்னான்.ரசூல் பதிலுக்கு ஆறுதலாக எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.பின்னர் கிளம்பும் போது நம்பிக்கையோடு இருங்கள் என்று சொன்னான்.அவன் தலையசைத்து புறப்பட்டான்.நாங்கள் வெளியே வந்தோம்.

நான் ஜேஎன்யூல பிஹெச்டி செய்கிறேன்.இந்தியாவில் முகலாயர் காலத்திலிருந்து சிறைச்சாலைகள் எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்றும் அது எப்படி வெகு மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் மற்றமையை உருவாக்கிக் கொடுக்கிறது என்றும் அதன் வழி எவ்வாறு அரசு முற்றதிகாரம் நோக்கி பயனிக்கிறது என்றும் நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.அதன் ஒரு பகுதியாக பல சிறைச்சாலைகளுக்கு செல்கிறேன்.ஆராய்ச்சியின் பொருட்டு வரும் போது வார்டன் முன்னிலையில் சிலருடன் நேரடியாக அமர்ந்து பேச முடியும்.அப்படி இங்கே ஏதேர்ச்சையாக சிறைச்சாலையில் சந்தித்த ஒருவனைத்தான் இன்று மறுபடியும் சந்தித்தோம்.இந்தியாவில் சிறைச்சாலைகளில் அதிகம் இருப்போர் எஸ்சிகளும் எஸ்டிகளும் இஸ்லாமியர்களும்தான் என்றான்.

காலையிலிருந்து டீ தவிர எதுவும் சாப்பிடாததால் நல்ல பசி. அவன் விரும்பினால் அசைவம் சாப்பிடலாம் என்றேன்.இல்லை நான் அசைவம் அதிகம் சாப்பிடுவதில்லை என்று கூறினான்.நாங்கள் மஞ்சக்குப்பத்தில் இருந்த ஏதோ ஒரு பவன் ஹோட்டலுக்கு போனோம்..இருவருக்கும் மீல்ஸ் சொல்லி டோக்கன் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம்.அவன் தொடர்ந்து பேசினான்.

இப்போது நாம் பார்த்தவனின் பெயர் ஜாபர்.குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவன்.அவனின் தந்தை மாட்டுக்கறி கடை வைத்திருக்கிறார்.இவனது தந்தையை ஒருவன் தரக்குறைவாக பேசிவிட்டான்.இவன் அடித்துவிட்டான்.அந்தாள் இரண்டு நாட்களில் மாரடைப்பால் இறந்து விட்டான்.இவன் செய்தது எல்லாம் கன்னத்தில் ஒரு அறை விட்டதுதான்.அந்தாளுக்கு வயது ஐம்பது இருக்கும்.இவன் மீது வெறும் அடிதடி வழக்கு தான் பதிவு செய்திருக்க வேண்டும்.ஆனால் கொலைப்பிரிவும் சேர்த்து பதிந்து விட்டார்கள்.அப்போது கைது செய்யப்பட்டு சிறைக்கு வந்தவன்தான்.நான்காண்டுகள் ஆகிவிட்டன.ஜாமீன் கூட கிடைக்கவில்லை.குற்றவியல் நீதிமன்றமும் செசன்ஸ் நீதிமன்றமும் பிணை தர மறுத்துவிட்டதால் இப்போது உயர்நீதிமன்றம் செல்ல வேண்டும்.வழக்கு விசாரணையும் மந்தகதியில் போய்க்கொண்டிருக்கிறது.ஆனால் அவரின் தந்தைக்கு இதற்கு மேல் அந்த வழக்கை நடத்த வழி தெரியாமல் திக்கற்று நிற்கிறார்.பணமும் இல்லை.இது போல இந்தியாவில் எண்ணற்ற கைதிகள் இருக்கிறார்கள்.இதில் முஸ்லீம்களும் பட்டியலினத்தவர்களும் பழங்குடியினரும் அதிகம்.ஐம்பது சதவீகதத்தினருக்கும் மேல்.

நான் என் ஆராய்ச்சியின் பொருட்டு ஜாபர் போன்றவர்களை சந்தித்த போது இவர்களுக்கு ஒரு அமைப்பும் செலவிட பணமும் இருந்தால் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன்.அப்போது தான் இந்த உயில் ஞாபகம் வந்தது.அப்படித்தான் உங்களை வந்து சந்தித்தேன் என்றான்.கதை எங்கெல்லாமோ போகிறது என்று நினைத்துக்கொண்டேன்.அவன் சப்ளையரிடம் இன்னும் கொஞ்சம் உருளைக்கிழங்கு பொரியலை எடுத்து வரச் சொன்னான்.

நாங்கள் உணவருந்திவிட்டு வெளியில் வந்தோம்.பீடா ஸ்டால் இருந்தது.அவனுக்கு வேண்டுமா என்று கேட்டேன்.இல்லை என்று தலையாட்டினான்.நான் ஒரு ஸ்வீட் பீடா வாங்கி வாயில் குதப்பிக் கொண்டேன்.அவன் பைக்கை எடுத்தான்.மதியம் மணி ஒன்றிருக்கும்.நாங்கள் அதன் பின் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.பண்ருட்டி அருகே வந்த போது காலையில் தேநீர் குடித்த கடையிலேயே நிறுத்தினான்.எனக்கு இப்போது வெறும் டீ என்று சொன்னேன்.இருவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டோம்.அது அங்குசெட்டிபாளையம் என்ற ஊர்.எனக்கு இங்கு உறவினர்கள் இருந்தார்கள்.எனக்கு சித்தப்பா முறை வரும் ஒருவருக்கு இங்கு நிலம் இருந்தது.என் தந்தையுடன் பிறந்த சகோதரி அதாவது என் அத்தை இங்கு வாழ்ந்த போது சிறுவயதில் வந்திருக்கிறேன்.இப்போது எனக்கு அதிகம் அடையாளம் தெரியவில்லை.

எனக்கு ஏன் உங்கள் தந்தை நாலு ஏக்கர் நிலத்தை எழுதி வைத்தார் என்ற கேள்வி உங்களிடம் இருக்கிறது தானே என்றான்.ஆமாம் என்றேன்.அவன் தன் முகத்தை பக்கவாட்டில் என்னை நோக்கித் திருப்பி உங்கள் தந்தை என் தந்தை இல்லை என்றான்.என் முகம் சட்டென்று சுருங்கியது.என் தந்தை ரஹீம்.சட்டப்படியான தந்தையும் அவர் தான்.உயிரியல் தந்தையும் அவர் தான் என்றான்.நான் அமைதி காத்தேன்.பின்னர் ஏன் எனக்கு அவர் இந்தளவு விலை போகக் கூடிய நிலத்தை எழுதி வைத்தார் என்ற கேள்வி உங்களுக்கு எழுலாம் என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.நாங்கள் இருவரும் டீ குடித்து முடித்திருந்தோம்.பணத்தை கொடுத்துவிட்டு கிளாஸை அங்கு வைத்துவிட்டு என்னைப் பார்த்து சிறிது நடப்போமா என்றான்.இந்த வெயிலிலா என்றேன்.அவன் இல்லை இங்கு அப்படியே கொஞ்ச தூரம் நடந்து வலது பக்கம் திரும்பினால் ஒரு மசூதி இருக்கிறது.அங்கு போயி அமரலாம் என்றான்.நானும் அவனும் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு நடந்தோம்.பள்ளிவாசலுக்கு வெளியே அதன் வளாகத்தில் சிமெண்ட் பெஞ்சுகள் இருந்தன.மஸ்ஜிதிலிருந்து வெளியே வந்த மெளலவி ரசூலைப் பார்த்து வணக்கம் சொல்லி இங்கே என்ன என்று விசாரித்தார்.இந்தப் பக்கமாக வேலை இருந்தததாகவும் சிறிது நேரம் இங்கே இளைப்பாறி விட்டு போகலாம் என்று வந்தததாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.அவர் போய்விட்டார்.

“உங்களுக்கு நிறைய பேரைத் தெரிஞ்சிருக்கு”

“இல்ல ரிசர்ச்சுக்காக இந்த டிஸ்டிரிக்ட்டுக்கு அடிக்கடி வந்து போறேன்”

“ஏன் இந்த ஊர்”

“எங்க அம்மா இங்க தான் புறந்தாங்க.கடலூர்.”

“ஓ”

“வாங்க அங்க உட்காரலாம்.நிழலா இருக்குது”

வேப்பமரத்தின் கீழ் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தோம்.என் பெற்றோருக்கும் உங்கள் தந்தைக்கும் கல்லூரியில் தான் அறிமுகம்.என் அப்பாவும் அம்மாவும் கல்லூரியில் காதலித்து படிப்பு முடிந்த உடனே திருமணம் செய்து கொண்டார்கள்.இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.நான் பிறந்த ஒரு வருடத்தில் என் தந்தை சாலை விபத்தில் இறந்தார் என்று சொல்லியிருந்தேன் இல்லையா.அவர் இறந்தப் பின்னர் என் அன்னைக்கு யாருமில்லை.யாரும் உதவிக்கு வரவில்லை.உங்கள் தந்தையும் கிருஷ்ண ராவும்தான் அவரது உடலை மருத்துவமனையிலிருந்து பெறுவதிலிருந்து இறுதிச்சடங்குகள் வரை அனைத்தையும் நடத்தினார்கள்.

திருவல்லிக்கேணியில் நாங்கள் இருந்த போது உங்கள் தந்தை வாரம் ஒரு முறை தேவையான காய்கறிகள் மளிகைப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து விட்டுப் போவாராம்.என் அம்மா சொல்லியிருக்கிறார்.அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை.வேலூரில் இருந்தார்.எனக்கு இந்த உயில் விஷயம் பல வருடங்களாகவே உறுத்திக்கொண்டிருந்தது.உங்களுக்கு இருக்கும் பல கேள்விகள் எனக்கும் இருந்தன.ஒரு முறை என் அம்மாவிடம் நான் யாருக்கு பிறந்தேன் என்று கேட்டுவிட்டேன்.அதைச் சொல்லும் போது அவன் உதட்டை கடித்துக்கொண்டான்.என் அம்மா துடித்துவிட்டார்.

நான் அந்தக் கேள்வியை கேட்டிருக்கக்கூடாது.ஆனால் கேட்டுத் தொலைத்துவிட்டேன்.அவர் சொன்னார்.அடேய்.ரஹீமிற்கும் எனக்குமான தோழமையின் பிறப்படா நீ.அதனால் தான் உனக்கு மித்ரன் என்று பெயர் வைத்தோம்.எங்கள் மித்ருடா நீ.எனக்கும் ஜெகன்னாதனுக்குமான உறவு எத்தகையது என்பதை நான் யாருக்கும் விளக்கத் தேவையில்லை.உனக்கும் தான்.என் பையனுக்கு நீங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று நான் ஒன்றும் ஜெகனிடம் யாசிக்கவில்லை.இதை எனக்காகவோ உனக்காகவோ அவர் செய்யவில்லை.அவரது நண்பன் ரஹீமிற்காக செய்தார்.இப்படி ஒரு எண்ணத்துடன்தான் என்னை அம்மா என்று இத்தனை நாள் அழைத்தாயா என்று சொல்லி நிறைய நேரம் அழுதார்.நான் எப்போதும் அதன் பின் அவரிடம் உங்கள் தந்தையைப் பற்றி பேசவில்லை.

உண்மையில் அவர்களின் உறவு எத்தகையது.அது வெறும் நட்பா அல்லது அவர்கள் இருவர் மத்தியில் அதற்கும் மேல் ஆழமான பற்று இருந்ததா என்று எனக்குத் தெரியாது.அதைக் குறித்து சிந்திப்பதில் பொருளில்லை என்று என் அன்னை அன்று கண் கலங்கிய போது எனக்குப் புரிந்தது.அவ்வளவுதான் சொல்ல முடியும்.நான் இஸ்லாத்திற்கு மாறிய போது ரசூல் என்ற பெயர் சூட்டிக்கொண்டேன்.அவர் வைத்த மித்ரன் என்ற பெயரை விடுவது சற்று கடினமாக இருந்தது.

எங்க அம்மா பாவம்.கடினமான வாழ்வை எதிர்கொண்டு தனியாக என்னை வளர்த்தார் என்று உள்ளங்கையை தைய்த்துக்கொண்டே சொன்னான்.என் அம்மாவின் பெற்றோர் மட்டும் அல்ல உடன் பிறந்த சகோதரிகள் கூட அவரிடமிருந்து விலகி விட்டனர்.பின்னர் எப்போதும் அவர்கள் ப்ரியத்துடன் ஒரு சொல் பேசியதில்லை.அதில் என் அம்மாவின் தங்கை ஒருவர் அவர்களது பெற்றோரைக்கு துயரத்தையும் அவமானத்தையும் அளித்ததால்தான் என் அப்பா அற்பாயுளில் போய் விட்டார் என்று என் அன்னையிடமே தொலைபேசியில் பேசும் போது சொல்லியிருக்கிறார்.தகிக்கும் வெயிலில் நடந்தவருக்கு குடையாக இருந்தவர் உங்கள் தந்தை.நான் அப்படித்தான் எண்ணிக்கொள்கிறேன்.

எனக்கு சட்டென்று தொண்டையில் ஏதோ வலி ஏற்பட்டது.என்னை அறியாமல் கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.அவன் என் தோளின் மீது தன் கரத்தை வைத்தான்.கர்சீப் எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்தேன்.என் தந்தை ரஹீமின் மகனுக்குத்தான் அந்த நாலு ஏக்கரை கொடுக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.அது தான் சட்டப்படியும் செல்லும்.அப்படியே செய்யலாம் என்று மூக்கை உறிஞ்சிக்கொண்டே சொன்னேன்.அவன் அது என் நோக்கம் அல்ல என்றான்.

“உங்க நோக்கம் இங்க முக்கியமில்லையே.சட்டம் என்ன சொல்லுதுங்கறது தானே முக்கியம்”

“சட்டம் எல்லாம் இருக்கட்டும்.அந்த வில் இல்லாட்டி உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் உங்க அக்காவுக்கும் தான் அந்த சொத்தின் உரிமை.இப்போ அதுல நாலாவதா நானும் இருக்கேன்னு வைச்சுக்கலாம்”

“புரியல”

“நான் அந்த சொத்தை பறிச்சிக்கிட்டு போக வரல.நான் இதுல ஒரு பங்குத்தாரரா இருந்தா போதும்”

“ஆனா வில்லில் அந்த நிலம் முழுசும் உங்களுக்குத்தான் தானே இருக்கு”

உண்மை தான்.அந்த நிலத்திற்கு ஒரு வேளை நான் முழு உரிமைக்காக முயன்றால் நீங்கள் அதை மறுத்து நீதிமன்றம் போனால் அந்த வழக்கு முடியும் போது நாம் இருவரும் ஏழுபது வயதைக் கடந்திருப்போம் என்று சொன்னான்.ஆனால் நான் நீதிமன்றம் போகப் போவதில்லை.அது என் தந்தையின் கையொப்பம் தான்.அதனால் கோர்ட்டுக்குப் போவதில் அர்த்தம் இல்லை என்றேன்.

“அந்த வில்லை ரெஜிஸ்டர் செய்யலை”

“வில்லை ரெஜிஸ்டர் செய்யனும்ன்னு அவசியமில்ல”

“கரெக்ட்.பதிவு செய்யத் தேவை இல்லைதான்”

“அப்புறம் என்ன.இதெ இத்தோடு விட்டுவிடுவோம்.”

“உங்க கல்யாணம் நின்னுப் போலாம்”

“அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்.எங்க அப்பாவுக்கே அந்தக் கவலை இல்ல”

“ஆனால் உங்க அம்மாவுக்கு இது தெரிஞ்சா”

“என்ன செய்ய முடியும்.தெரிஞ்சுதானே ஆகணும்”

“அவங்க இதை தாங்கிக்குவாங்களா”

“எங்க நைனா இறந்ததையே தாங்கிக்கிட்டாங்க.இது என்ன”

“ஆனால் இது துரோகம் மாதிரி இருக்கமே.அதெ ஏத்துக்குறது கஷ்டம் இல்லையா”

“அதுக்கு என்ன செய்ய முடியும்.ஏத்துக்கிட்டுத்தான் ஆகனும்”

நான் உருவாக்க விரும்பும் அமைப்பிற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும்.இந்த நிலத்தின் மீது எனக்கு உரிமை இருக்கிறது.அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.ஆனால் அதே நேரத்தில் உங்கள் அம்மாவை கொலை செய்து உங்கள் திருமணத்தை நிறுத்தி உங்க சிஸ்டரை அவங்க வீட்டு ஆளுங்க மத்தியில அவமானப்படுத்தி அதைப் பெற விரும்பவில்லை.அவ்வளவுதான் என்றான்.அவன் அவ்வளவுதான் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினான்.

என் அம்மா பற்றி எங்களைப் பற்றி உங்களுக்கு என்ன கரிசனம்.என் அப்பாவின் நோக்கம் உங்களுக்கு முக்கியமில்லையா என்ற எனது கேள்விக்கு இறந்து போனவர்களை விட இருப்பவர்கள் தான் பிரதானம் என்று சட்டென்று சொன்னான்.

ஆனால் இதையெல்லாம் நீங்கள் கடலூர் கூட்டிப் போய் அந்தச் சிறைச்சாலையில் ஜாபரை அறிமுகப்படுத்தித்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை.உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது.அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்கள் முடிவு.நீங்கள் நோபலான ஒரு விஷயத்திற்கு போராடுகிறீர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க முனைவது போல எனக்குத் தோன்றுகிறது என்றேன்.

எனக்கு இந்தத் தேவை இல்லாவிட்டால் நான் உங்களைத் தொந்தரவு செய்திருக்க மாட்டேன்.அது நிச்சயம்.அதனால் தான் அழைத்துப் போனேன்.பொது நலத்தின் பொருட்டு போராடும் முற்போக்காளனாக என்னைக் காட்டிக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதைப் பற்றி சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.நான் எப்போதும் எனக்குப் பிடித்ததை எதனோடு என்னை என்னால் முழுமையாக பிணைத்துக் கொள்ள முடிகிறதோ அதைச் செய்கிறேன்.அவ்வளவுதான்.அந்த உயிலை உண்மையில் நான் உங்களிடம் காட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை.இரண்டு கோடிக்கும் மேல் போகும் என்பது எனக்குத் தெரியும்.ஆனால் அந்த உயிலை கிழித்துப் போடவும் இல்லை.ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.இந்த அமைப்பு எண்ணம் தோன்றிய போது முதலில் கிருஷ்ண ராவை உங்களிடம் பேசச் சொன்னேன்.அவர் அசெளகரியமாக உணர்ந்தார்.எனக்கும் உங்களிடம் இதைக் குறித்து எப்படி தொடங்குவது என்பது மிகுந்த அச்சத்தை அளித்தது.யாரும் உடைந்துவிடக்கூடிய விஷயம் தான் இது.அதனால் முதலில் ஒரு மின்னஞ்சல்லை அனுப்பிப் பார்த்தேன்.நீங்கள் பதில் எதுவும் அனுப்பவில்லை.பிறகு நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து போது நானும் இங்கு இருந்ததால் இப்போதே பேசிவிடலாம் என்று முடிவு செய்தேன்.சட்டென்று எடுத்த முடிவு தான்.

“இப்படியான அமைப்புகள் ஏற்கனவே நிறைய இருக்குமே”

“இருக்கலாம்.ஆனா இன்னும் ஜாபர் உள்ளதான் இருக்கான்.நான் என்னால முடிஞ்சதை செய்யனும்னு நினைக்கிறேன்”

“என்ன பங்கை எதிர்பார்க்குறீங்க”

“நாலுல ஒரு பங்கு”

“நான் நிலத்தை விக்கப் போறேன்னு யாராவது உங்களுக்கு சொன்னாங்களா”

“நீங்க அந்த ஸ்ரீதரனுக்கு தருவீங்க அப்படிங்கறது என்னோட ஊகம்”

“ஏன் அப்படி சொல்றீங்க”

“உங்களுக்கு நிலத்தை வைச்சிக்கிட்டு இருக்க விருப்பமில்ல”

“எப்படித் தெரியும்”

நீங்கள் சற்று சோம்பல் குணம் கொண்டவர்.அதனால் அந்த முடிவுக்குத்தான் வருவீர்கள் என்பது என் அனுமானம் என்றான்.அவன் இதைச் சொல்லும் போது இளிக்கவில்லை.அவன் எப்போதும் எதற்கும் இளிக்கவில்லை என்பதை அப்போது நினைவுக் கூர்ந்தேன்.அதன் பின் நான் ஒன்றும் பேசவில்லை.சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.அவன் அப்படி இப்படி பேராக்கு பார்த்தான்.

புறப்படலாம் என்றேன்.நாங்கள் நடந்து வரும் போது நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்டான்.ஹேமாவதி என்றேன்.ஹேமாவதி என்று தனக்குள் ஒரு முறை சொல்லிக்கொண்டவன் , நல்ல பெயர், அந்தப் பெயரில் இருக்கும் ஓசையைக் கவனித்தீர்களா என்று கேட்டான்.என்ன ஓசை என்றதற்கு Stream of Water – சலசலத்து செல்லும் நீரின் ஒலி அந்தப் பெயரில் இருக்கிறது என்றான்.நான் புன்னகைத்தேன்.இருவரும் பைக் இருந்த இடத்திற்கு வந்தோம்.பைக்கை நான் ஓட்டுகிறேன் என்றேன்.அவன் சாவியை கொடுத்தான்.சீட் வெயிலில் கொதித்தது.டீக்கடையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கிக் குடித்தேன்.சிறிது நீரை சீட்டில் தெளித்து துடைத்தப்பின் வண்டியை எடுத்தேன்.வீடு நோக்கி புறப்பட்டோம்.


- மணல் வீடு இதழில் பிரசுரமான சிறுகதை