அறிதல்


ஒரு குழந்தை முதல் முறை ஒரு பறவையை பார்ககும் போது அதை பறவை என்று அறிவதில்லை.பின்னர் நாம் அதற்கு அதன் பெயர் பறவை என்று சொல்லித்தருகிறோம்.பறவை என்ற சொல்லும் பறவையும் அந்தக் குழந்தையில் இணைகிறது.ஒரு சொல் ஒன்றை குறிப்பதை arbitrary என்கிறார்கள்.ஒரு சட்டகத்திற்குள் ஒரு சொல் அந்தப் பொருளை அந்த சட்டகத்திற்குள் இருக்கும் பிற சொற்களுடன் இருக்கும் ஒப்புமையில் தான் பெறுகிறது என்கிறார்கள்.அப்படி அந்தச் சொல்லை அறிவது தான் அறிதல் ஆகிறது.சொற்களின் வழி நாம் சிந்திப்பதோ , அறிவதோ இல்லை.சொற்களை மொழியை அறிவதே சிந்தனையாகிறது.

பெயர் தெரியாத பறவையை உண்மையில நாம் அறிவதே இல்லை.ஒரு மரத்தை இது ஆலமரம் என்ற சொல்லின் வழி அறியும் போதுதான் உண்மையில் ஒரு குழந்தை அந்த மரத்தை அறிகிறது.இந்த தர்க்கத்தின் வழி பார்க்கும் போது காட்சி ஊடகத்தால் ஒருவர் தன் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற தர்க்கம் தகர்கிறது.ஒரு குழந்தைக்கு நூறு முறை பசுமாட்டை காட்டி ஆனால் அதனுடன் மாடு என்றோ அல்லது வேறு ஒரு வார்த்தையையோ இணைக்காவிட்டால் அது அந்த பசுமாட்டை அறியாது.அந்த வகையில் காட்சி ஊடகம் உங்களுக்கு உலகின் அணைத்து விஷயங்களையும் காட்சியாக உங்கள் வரவேற்பறைக்கு கொண்டு வந்து கொடுத்தாலும் அதை நீங்கள் உருளைகிழங்கை உண்டவாறு நாள் முழுக்க பார்த்தாலும் உங்கள் அறிவு நிச்சயம் வளரப்போவதில்லை.

காவல் நிலையம் , பொது மருத்துவமனை ,சிறைச்சாலை,ஐடித்துறை,வட சென்னை,முதலிரவு,அரசாங்கத் துறைகள்,சிலை கடத்தல்,விசாரணைகள்,நீதிமன்றம்,ஆண் பெண் உறவு ,கல்லூரி,அமெரிக்க வாழ்க்கை என்ற பல விஷயங்கள் குறித்து நமக்கு இருக்கும் பிம்பம் சினிமாவால் உருவானது.

எழுத்தாளர் நாகார்ஜூனன் ஒரு கட்டுரையில் தமிழ்நாட்டை சேர்ந்த எல்லோரையும் ஒரு எண்ணால் வகுக்க முடியும் என்றால் அது சினமா என்றார்.எல்லோருக்கும் இருக்கும் சில பிம்பங்களில் சரிபாதி சினிமாவால் உருவானது.ஆனால் அது ஒரு போதும் அறிதல் இல்லை.அறிதல் முழுக்க முழுக்க மொழியால் வருவது.நீங்கள் ஒரு விஷயத்தை மொழி கொண்டு சொல்ல முடிகிற போதே அதை அறிந்தவர் என்று சொல்லமுடியும்.

புதிய விழுமியங்கள்



ஜெயமோகனின் "தன்னை அழிக்கும் கலை" கட்டுரை முக்கியமானது.உண்மையில் தினசரி பணி நிமித்தமே கூட பல்வேறு மனிதர்களை சந்திப்பவர்கள் இருக்கிறார்கள்.போலீஸ்காரர்கள்,வழக்கறிஞர்கள்,பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்கள்,சமூக சேவையில் ஈடுபடுபவர்கள்,வெகுமக்களை தினமும் சந்திக்க வேண்டிய வணிகர்கள்,கடை வைத்திருப்பவர்கள்,அரசியலில் இருப்பவர்கள்,வங்கி மேலாளர்கள்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஆட்டோ ஓட்டுநர்கள்,பேருந்து நடத்துனர்கள்,கோயில் அர்ச்சகர்கள்,பாதிரியார்கள்,இமாம்கள்,தாசில்தார்கள் இப்படி பலருக்கு தினசரி பணி சார்ந்தே பலத்தரப்பட்ட மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.தமிழில் எழுதுபவர்களில் மேற்சொன்ன துறைகளில் பணிபுரிந்தவர்கள் குறைவு.பெரும்பாலும் முந்தைய தலைமுறையில் எழுத்தாளர்கள் ஆசிரியர்கள் அல்லது அரசாங்கத் துறை அல்லது வணிகம் அல்லது பத்திரிக்கை என்றுதான் இருந்தார்கள். அப்படி இல்லை என்றால் அவர்கள் வேலையே செய்யாதவர்களாக இருந்தார்கள்.இந்தத் தலைமுறையில் அரசுத் துறை என்பதற்கு பதிலாக தனியார் துறை என்பது முக்கிய மாற்றம்.

இதில் பெரும்பாலும் தினசரி அனுபவங்கள் என்பது என்னவாக இருந்துவிட முடியும்.அலுவல் பிரச்சனைகள்,குடும்ப பிரச்சனைகள்,பால்ய காலத்தின் நினைவுகள்,காதல்,தான் வாழும் சிறுநகரம் சார்ந்த மாற்றங்கள் என்பதாகத்தான் இருக்க முடியும்.அதே நேரத்தில் பணியின் ஊடாக வெவ்வேறு அனுபவங்களையும் பெரும் பயணங்களையும் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் எழுதுவதில்லை.

பயணங்களும் அனுபவங்களும் தன்னையே தன் படைப்பில் முன்வைக்கும் நவீன எழுத்தாளனை அவனின் சிறு உலகத்திலிருந்து விடுவித்து வரலாற்றிலும் பண்பாட்டிலும் சென்று சேர்க்கும் என்கிறார் ஜெயமோகன்.அவன் மேலும் பெரிய கேள்விகளை எழுப்பலாம்.தன்னை விட பெரிய மகத்துவங்களிடமும் தன்னை விட பெரிய இருளிடமும் தன்னை ஒப்புக்கொடுப்பதன் வழி அவன் தன் கனவுகளாலும் ,கற்பனையாலும் அவைகளை கதைகளாக முன்வைக்க வேண்டும் என்கிறார்.அவைகளில் அவன் இருப்பான் என்கிறார்.அப்படி வெறும் தினசரி எளிய அனுபவங்களிலிருந்து தன்னை விடுவித்து கற்பனையை ,கனவை விரிக்க அனுபவங்களுக்கு தன்னை திறந்து கொள்ளும் மனமும் பயணமும் உதவும் என்கிறார்.

தமிழில் மாய யதார்த்த எழுத்துகள் , நினைவோடை எழுத்துகள்,தன்னைத்தானே எழுதிச் செல்லும் எழுத்துகள் என்ற வகைளுக்கு பின்னால் ஒரளவு அனுபவமின்மையும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே இங்கே எழுத்தாளர்களால் புதிய விழுமியங்களை உருவாக்க முடியவில்லை.

அசோகமித்திரனின் கதைவெளி என்று பார்த்தால் ஜெமினி ஸ்டுடியோ நாட்கள்,செகந்திரபாத் நாட்கள்,சென்னையின் ஒண்டிக்குடித்தனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதைவெளி.ஆனால் அது பண்பாட்டிலும் வரலாற்றிலும் சென்று மோதும் போது இன்னும் பெரிய கேள்விகளாக மாறுகிறது என்கிறார் ஜெயமோகன்.ஆனால் அதே நேரத்தில் அதில் அந்த எழுத்தாளனும் இருக்கிறான் என்கிறார்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் நாம் வாசிக்கும் எந்த புனைவிலும் ஏதோ ஒரு வகையில் அந்த எழுத்தாளனின் ஆளுமையை நாம் கண்டுகொள்கிறோம்.பின்னர் அந்த எழுத்தாளனை நேரில் சந்திக்கும் போது நாம் கற்பனை செய்து வைத்திருந்த ஆளுமையும் உண்மையும் வேறாக இருப்பதை நினைத்து சில சமயம் ஏமாற்றம் அடைகிறோம்.சில நேரம் உவகை கொள்கிறோம்.ஜெயமோகன் சுந்தர ராமசாமியை முதல் முறை ஜே.ஜே.சில குறிப்புகள் வாசித்த பின் பார்த்து ஏமாற்றம் அடைந்ததை பற்றி நினைவின் நதியில் நூலில் எழுதியிருப்பார்.ஒரு நவீன எழுத்தாளன் தன் புனைவில் தன்னையே எழுதிச் செல்கிறான்.

சுகுமாரன் கவிதைகளை வாசிக்கும் போது நாம் சுகுமாரனுடன் உரையாடுகிறோம்.யுவன் கதைகளின் வழி நாம் யுவன் என்ற ஆளுமை பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி,லா.சா.ரா,மெளனி,புதுமைப்பித்தன் என்று  எல்லா எழுத்தாளர்களிலும் இதை நாம் காண்கிறோம்.நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் நான் வாசித்த வரை எஸ்.ராமகிருஷ்ணனின் புனைவுகளில் மட்டும் இது இல்லை என்று தோன்றுகிறது.அவரின் நெடுங்குருதி,யாமம்,உறுபசி ஆகிய நாவல்களில் எங்குமே நீங்கள் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற ஆளுமையை காண முடியாது.அவர் இதில் கவனமாக இருக்கிறார் என்றும் கூட நினைக்கிறேன்.

இன்று தூய இலக்கியம் பேசும் போது அநேகமாக நாம் அகம் நோக்கி பேசும் ஆக்கங்களையே முன்வைக்கிறோம்.புற விஷயங்களை சற்று மேலோட்டமாக பேசும் ஆக்கங்கள் வெகுஜன தளத்திற்கு தள்ளப்படுகிறது.மாறாக,தீவிர தளத்தில் நாம் நம் அகக்கேள்விகளை வரலாற்றிலும் பண்பாட்டிலும் தேடினால் இன்னும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை கொண்டுவரலாம்.

பண்பாட்டுப்  பயிற்சி என்பது அடிப்படையில் ஒருவனுக்கு வாழ்க்கை சார்ந்த தரிசனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.பண்பாட்டின் மூலம் நாம் பெறுவது அதைத்தான்.இன்று மதம் சார்ந்த விழுமியங்கள் என்று அநேகமாக ஒன்றுமில்லை.நாம் பொருளியல் தேவைகளுக்காக மேற்குலகின் தனிமனித விழுமியங்களை கற்றுக்கொள்ளும் தலைமுறை.அதைத்தாண்டி பண்பாட்டு விழுமியங்கள் என்று எதுவுமே இல்லை.
ஒரு எழுத்தாளன் புதிய விழுமியங்களை காலம் தோறும் உருவாக்க வேண்டும்.அதுவே அவனது பணியும் கூட.அவன் தன்னை மீறி சற்று புறவயமான நோக்கினால் அதை இன்னும் சரியாக செய்ய முடியும்.





மாற்று சினிமாவிற்கான அரங்குகள்



ஸ்வர்ணவேலுக்கு அளிக்கப்பட்ட லெனின் விருது விழாவிற்கு நேற்று சென்றிருந்தேன்.நிறை மக்கள் மேடையிலும் கூட்டத்திலும்.கூட்டத்தில் என் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் தீவிரமாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதை பிரதியை வாசித்துக்கொண்டிருந்தார்.ஸ்வர்ணவேல் காலச்சுவடு இதழில் வீடியோ கேம்ஸ் திரைப்படங்களின் இடத்தை பிடிக்கலாம் என்று எழுதிய கட்டுரையை படித்ததாக நினைவுள்ளது.இது போன்ற விருதுகளின் முக்கிய பங்களிப்பு வெகுஜன தளத்திற்கு வெளியே செயல்படுபவர்களுக்கு அது ஒரு சிறு மகிழ்வையும் நிறைவையும்  அளிக்கிறது.இரண்டாவது அவர்களின் பங்களிப்பை அதுவரை அறியாதவர்களுக்கு ஒரு திறப்பாக அந்த வாய்ப்பு அமைகிறது.தமிழ் ஸ்டுடியோ அருண் தீவிர சினிமா சார்ந்த பல முக்கிய விஷயங்களை செய்துவருகிறார்.பியூர் சினிமா அங்காடி நல்ல முயற்சி.அவர் தொழில்முனைவராக முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேடையில் மிஷ்கின் அருண்மொழி குறித்து பேசியது  மிகவும் நன்றாக இருந்தது.நான் முதலில் இயக்கிய ஒரு குறும்படத்திற்காக அருண்மொழியை சந்தித்தேன்.அப்போது பிரசாத் அகாதெமியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.பல்வேறு உதவிகளை செய்தார்.ஒளிப்பதிவு செய்தார்.அவர் இன்று மாலை ஆறு மணிக்கு உங்களை சந்திக்கிறேன் என்று ஆறு பேரிடம் சொல்வார்.பின்னர் ஆறு மணிக்கு ஏழாவதாக ஒருவரை சென்று சந்திப்பார்.அவருக்கு இலக்கிய உலகில்,சினிமா உலகில்,ஊடகத்துறையில்,அரசியலில் பல்வேறு மனிதர்களை தெரியும்.அவரிடம் உதவி பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு.அவர் சென்னையின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கே அவருக்கு சென்று சந்திக்க ஒருவர் இருப்பார்.அவருக்கு சென்னையின் Topography முழு பரிச்சயம்.எந்த இடத்துக்கும் கூகிள் மெப்ஸை விட எளிதில் செல்லக்கூடிய வழியை அறிந்து வைத்திருப்பார்.

தீவிர அல்லது மாற்று சினிமா ,இலக்கியம்,கலைகள் குறித்தெல்லாம் எனக்கு பல்வேறு குழப்பான  எண்ணங்கள் உண்டு.இவைகள் ஒரு சமூகத்தை மாற்றவோ திசை திருப்பவோ முடியாது என்றே நினைக்கிறேன்.அதனால் அது எத்தனை தீவிரமாக இருந்தாலும்   இல்லாவிட்டாலும் சமூகம் பெரிதாக பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது.வரலாற்றின் திசையில் தான் சமூகம் செல்லும்.மிகப்பெரிய Phenomenonனான காந்தி கூட வரலாற்றை திசை திருப்ப முடியவில்லை.அது தன் போக்கில்தான் சென்றது.செல்கிறது.செல்லும்.பண்பாட்டு மாற்றங்கள் மிக மிக மெல்லத்தான் நடக்கும்.அந்த மாற்றங்கள் மேற்கட்டுமானத்தை ஒரிரு நூற்றாண்டுகள் பின்னர் கூட பாதிக்கும்.அப்படி மாறுவதே சாத்தியமும் கூட.நிலப்பிரபுத்துவ காலத்தின் விழுமியங்களை கொண்டுள்ள இந்தியன் மிக மெல்ல பொருளாதார மாற்றங்கள் காரணமாக வரிசையில் நிற்க வேண்டிய தனிமனித விழுமியங்களை இப்போது கற்றுக்கொள்கிறான்.இது நம் பண்பாட்டில் கற்றுத்தரப்படவில்லை.இதுவே நமது வேலைச்சூழலுக்கும் மேற்குலகின் வேலைச்சூழலுக்குமான முக்கிய வித்யாசம்.இது என் பார்வை.ஆனால் இப்படியான ஒரு பார்வை இருந்தால் பண்பாட்டுத்தளத்தில் தீவிரமாக செயல்பட முடியாது என்றும் தோன்றுகிறது.செயல்பாட்டாளர்களுக்கு ஒரு தீவிரமான செயலூக்க மனநிலை தேவைப்படுகிறது.அதற்கு  லட்சியவாதங்கள் உதவுகிறது.

இன்று சினிமா எடுப்பது  எளிதாகிவிட்டது.யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டால் பணம் கூட பெரிய விஷயம் இல்லை.பிரச்சனை அதன் விநியோகத்தில் மட்டுமே இருக்கிறது.அதை எப்படி மக்களை பார்க்க வைப்பது என்பது தான்.ஒரு வகையில் இன்று இலக்கிய புத்தகங்களின் சிக்கல் கூட அதுதான்.மக்களை எப்படி படிக்க வைப்பது.இன்று புத்தகங்களை வாங்கி விடுகிறார்கள்.ஆனால் வாசிப்பதில்லை.இணையத்தில் ஒரு படத்தை சிறு தொகை செலுத்தி பார்க்கலாம் என்று முயற்சித்தாலும் அது தமிழகத்தை பொறுத்த வரை பெரிய பலன்களை தராது.தமிழகத்தை பொறுத்த வரை இணையத்தில் ஒன்றை வாசிக்க,பார்க்க வேண்டுமென்றால்அது இலவசமாகத்தான் இருக்க வேண்டும்.தீவிர சினிமாவிற்கான திரையரங்குகள் அந்த வகையில் ஒரு மாற்றாக அமையலாம்.ஐம்பது பேர் அமரக்கூடிய அரங்குகள் உருவாக்கப்பட்டு சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டால் அது சுயாதீன சினிமாக்களை எடுப்பவர்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமையும்.ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் ஒரு திரைப்படம்  அல்லது ஆவணப்படம் திரையிடப்படலாம்.மாலை காட்சிகள் மட்டும் வைக்கலாம்.அதன் மூலம் பணத்தை திரும்ப எடுப்பது போன்ற விஷயங்கள் சாத்தியப்படாமல் போகலாம்.ஆனால் அது அரங்கில் திரையிடப்பட்டு ஒரு ஜனத்திரள் கட்டணம் செலுத்தி பார்த்தது என்ற நிறைவை அளிக்கும்.அப்படியான பத்து அரங்குகளாவது தமிழகம் முழுவதும் இயங்கினால் அது நல்ல பயன்களை அளிக்கும்.

இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம்



எம்.என்.ராய் எழுதிய இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம் என்ற சிறு நூலில் வரலாற்றுப் பார்வையில் இஸ்லாம் அதன் துவக்கத்தில் வாள்முனையில் பல தேசங்களை கைப்பற்றியதையும் பின்னர் ஒரு கட்டத்தில் அவர்கள் போர்களை முழுமையாக நிறுத்தி வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு செல்வம் சேர்த்ததையும் அவர்களின் ஓரிறைக் கோட்பாடும் வணிக வெற்றியும் செல்வமும் எப்படி அறிவியல் , தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் பயன்பட்டது என்றும் சொல்கிறார்.ஓரிறைக் கோட்பாடு இயல்பாகவே பகுத்தறிவுக்கும் நிரூபணவாதத்திற்கும் உதவின என்கிறார்.அதுவே கிறுஸ்துவத்தின் வளர்ச்சியால் கைவிடப்பட்ட கிரேக்க அறிவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.ஐரோப்பியர்கள் அராபியர்களிடமிருந்து இந்தக் அறிவை பெற்றார்கள்.அதுவே மறுமலர்ச்சியை உருவாக்கியது என்கிறார். இறைவனுக்கு நிகராக வேறு யாரையும் இணையாக வைக்காதது இஸ்லாத்தின் முக்கியமான விஷயம் என்கிறார்.

இந்தியாவில் இஸ்லாம் வந்த போது அது அராபிய நாயகர்களால் வரவில்லை.மாறாக அது ஆடம்பர வாழ்வில் சீரழிந்து கிடந்த பராசீகர்களாலும் மத்திய ஆசியப் பகுதியை சேர்ந்தவளாலுமே கொண்டு வரப்பட்டது என்கிறார்.பெளத்தப் புரட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு ,அதன் விளைவாக இந்தியச் சமூகத்தை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தியிருந்த பார்ப்பனியப் பிற்போக்குச் சாதிகளுக்குப் பலியாகியிருந்த லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாமின் நம்பிக்கைச் செய்தியையும் விடுதலையையும் வரவேற்றனர் என்கிறார்.

ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் அப்போதைய புறத்தேவையை இஸ்லாம் நிறைவேற்றியிருக்கிறது என்கிறார்.அதனால் அதை அந்த வரலாற்று பாத்திரத்தில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எம்.என்.ராயின் தரப்பு.1939யில் இதை எழுதியிருக்கிறார்.இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கதோடு வாழ அது உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் ஆற்றிய பங்கை புரிந்து கொள்வதே வழி என்கிறார்.இதை "தூய" தமிழில் வெ.கோவிந்தசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.எம்.என்.ராயின் பற்றியும் நூலில் ஒரு கட்டுரை இருக்கிறது.

மிஷ்கினின் திரைப்படங்கள்









மிஷ்கின் கிறுஸ்துவ கருத்தியலால் அதிகம் பாதிக்கப்பட்டவர் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.குற்றம் – குற்றவுணர்வு – பாவம் – மன்னிப்பு – தியாகம் - மீட்சி என்ற தளம் அவருடைய படங்களில் அநேகமாக இருக்கிறது.இது இந்திய மனநிலை அல்ல.இங்கே ஒருவர் குற்றம் செய்தால் அவருக்கு சாபம் அளிக்கப்படுகிறது.குற்றத்திற்கான சாபம்.பின்னர் சாபத்திலிருந்து விடுதலை பெற சாபவிமோசனத்திற்கான வழிகளும் அவருக்கு தரப்படுகிறது.இரண்டலும் இருவேறு தரிசனங்கள் இருக்கிறது.கிறுஸ்துவ கருத்தியலின் பார்வையில் உங்கள் குற்றத்திற்கு நீங்களே பொறுப்பு.அதை எதன் மீதும் சுமத்திவிட்டு நீங்கள் தப்பித்து விட முடியாது.ஆனால் இந்திய பார்வையில் நமக்கு இயல்பாகவே விதி அல்லது ஊழ் என்ற கருத்துகள் பதிந்துவிடுகின்றன.கர்ணனின் சிக்கல்கள் எல்லாமே அவனது பிறப்பின் சிக்கல்களாக இருக்கின்றன.அவனுக்கு எல்லா தருணங்களிலும் முடிவு எடுப்பதற்கான முழு சுதந்திரம் இருக்கிறது.ஆனால் அவனது முடிவுகள் அனைத்தும் அவனது பிறப்பு – பிறப்பின் இழிநிலையில் இருந்து காப்பாற்றிய நண்பன் – அவனுக்கான உதவி – மரணம் என்ற தளத்திலேயே செல்கிறது.அவன் தன் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றால் கட்டுப்படுத்தப்படுகிறான்.அவனுக்கான மீட்சி அவனது மரணத்தில் தான் சாத்தியமாகிறது.மனிதன் இயல்பில் சுதந்திரமானவன்.விளைவுகளை பற்றி பொருட்படுத்தாமல் செயல்களை ஆற்றக்கூடியவன் என்ற எண்ணம் நமக்கு  இல்லை.அது மேற்குலகின் கருத்தியல்.உங்களுக்கு ஒரு வேலை பிடிக்கவில்லை.ஆனால் நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்கிறீர்கள்.அதற்கான காரணம் உங்கள் வீட்டு வாடகை,குடும்பம் நடத்த தேவையான செலவு,அடையாளம்,சமூக அந்தஸ்து போன்றவை.ஆனால் இது எதுவும் அந்த தருணத்தில் உங்களை அந்த வேலையை விட்டு செல்வதற்கான தடையை உருவாக்கவில்லை.இந்த காரணங்களால் நீங்கள் தடையை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.யாருக்கோ பதில் சொல்ல வேண்டியவர்களாக,யாருக்கோ கட்டுண்டவர்களாக நம்மை பாவித்து கொள்வதால் வரும் சிக்கல்கள் தான் இவை.விளைவுகளின் அச்சத்தால் செயல்கள் கட்டுப்படுத்தப் படுகின்றனவே தவிர விளைவுகளால் அல்ல.

இங்கு தான் சுதந்திர இச்சை (Free will) பிரதானமாகிறது.இது மேற்குலகின் கருத்தியல்.இதன் அடிப்படையில் ஒருவன் குற்றம் செய்யும் போது அதனால் வேறொருவர் பாதிக்கப்படும் போது அதை செய்தவன் குற்றவுணர்வு அடைகிறான்.மனிதன் முற்றிலும் சுதந்திரமானவன் என்பதால் அவனது குற்றத்திற்கு அவனே காரணமாகிறான்.அவன் விதி அல்லது ஊழ் அல்லது சூழல் என்ற காரணங்களை சொல்லி தப்பிக்க முடியாது.இப்போது அவன் முழுக்க தனிமனிதன்.தனிமனிதனாக வாழ்வை நோக்கும் போது வாழ்வின் அபத்தமும் , அவதியும் அவனை அறைகிறது.நவீனத் தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இந்த அபத்தத்தையும் அவதியையும் பதிவு செய்திருக்கிறது.ஆனால் அந்தளவு அது சுதந்திர இச்சையை பதிவு செய்யவில்லை.

மிஷ்கினின் கதாபாத்திரங்கள் எதுவுமே இந்திய கதாபாத்திரங்கள் அல்ல.அவர்கள் மேற்குலகை சேர்ந்தவர்கள்.அல்லது மேற்குலகின் வாழ்வையே தனதான வாழ்வாக ஏற்றுக்கொண்ட இந்த தலைமுறை இந்தியர்கள்.அவருடைய படங்களில் குற்றம் – காவல்துறை அதை கண்டுபிடிப்பது போன்ற விஷயங்கள் மறுபடி மறுபடி வந்தாலும் அவரின் படங்களில் புறவுலகம் என்பது முற்றிலும் இல்லை.அவர் காட்டும் புறவுலகம் ஒரு நம்பகத்தண்மையை பொருட்டு உருவாக்குப்படுபவை தான்.அவருடைய பிசாசு படத்தில் அத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் மொத்தமே பத்து கதாபாத்திரங்கள் கூட வருவதில்லை.இதை மணிரத்னத்தின் அஞ்சலியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் அந்த கதையோடு சம்மந்தப்படாத யாருமே அந்த இரவில் வருவதில்லை.அஞ்சாதே படத்தில் காவலர் குடியிருப்பில் இரண்டு குடும்பங்களை தவிர வேறு காவலர் வீடுகள் வருவதேயில்லை.

பிசாசு படத்தில் ஒரு பெண் தன்னை கொலை செய்தவன் மீது இறந்து போகும் போது காதல் கொள்கிறாள்.அவனை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டதால் அவனை இறுதியில் மீட்கிறாள்.மறுபுறம் நாயகன் தான்தான் அந்தப் பெண்னை கொலை செய்தது என்று அறியும் போது குற்றவுணர்வு கொள்கிறான்.மன்னிப்பு கேட்கிறான்.தன்னுயிரை தியாகம் செய்ய முயல்கிறான்.மீட்கப்படுகிறான்.பெண்ணின் தந்தை,பெண்,நாயகன் யாருமே அதை ஒரு விபத்தாக பார்ப்பதில்லை.தான் அதற்கு காரணமில்லை என்று பிசாசாக மாறிய பெண்ணும் கருதுவதில்லை , நாயகனும் கருதுவதில்லை.அவர்கள் தங்கள் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளதாக நினைத்து வேதனைப்படுகிறார்கள்.தங்களை சிதைத்துக் கொள்கிறார்கள்.தியாகம் செய்கிறார்கள்.மீட்சி கொள்கிறார்கள்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஓநாயாக வரும் பாத்திரம் ஒரு சிறுவனை தான் எதிர்பாராத விதமாக கொலை செய்துவிட்டதால் குற்றவுணர்வு கொள்கிறான்.தன்னை தியாகம் செய்து அந்த சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த சிறுமியை எதிரிகளிடமிருந்த மீட்கிறான்.அவன் அதை ஒரு விபத்தாக கடக்கவில்லை.அஞ்சாதே படத்தில் வரும் கிருபாவின் நிலைக்கு சத்யாதான் காரணம் என்று இருவருமே நம்புகிறார்கள்.அது ஒரு பெரிய அமைப்பின் சிக்கல் என்று இருவருமே ஏற்கவில்லை.சத்யா கிருபாவின் நிலையை நினைத்து குற்றவுணர்வு கொள்கிறான்.கிருபா சத்யாவை பழிவாங்க முயல்கிறான்.

அவருடைய படங்களில் எப்போதும் கதாபாத்திரங்கள் உணர்ச்சி கொந்தளிப்பு நிலையிலேயே இருப்பார்கள்.தளர்வாக அமர்ந்து தேநீர் அருந்தும் காட்சிகள் மிகவும் குறைவு.அவர்கள் எதனாலோ பீடிக்கப்படுகிறார்கள்.தந்தையை பற்றி மகளிடம் சொல்ல முடியாத சிக்கல் (சித்திரம் பேசுதடி) , நண்பர்களுக்கு இடையிலான சிக்கல் (அஞ்சாதே), தங்கள் தாயை தேடி அலையும் இருவர் (நந்தலாலா) , தங்கை காணாமல் போன நேரத்தில் ஒரு குற்றத்தை ஆராய வேண்டிய நெருக்கடியில் இருக்கும் ஜேகே(யுத்தம் செய்) , குற்றவுணர்வால் பீடிக்கப்படும் ஓநாய் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்),தன்னை கொன்றவனை காப்பாற்ற போராடும் பிசாசு ( பிசாச) என்று அவருடைய பாத்திரங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு எண்ணத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.அந்த எண்ணம் அவர்களை செலுத்தியபடியே இருக்கிறது.அவர்கள் அதை தவிர்த்த புறவுலகை பார்ப்பதே இல்லை.அதனாலே மிஷ்கினின் திரைப்படங்களிலும் அவர்களை மீறிய புறவுலகம் இல்லை.மிஷ்கினின் படங்களில் கதை கதையை விட்டு வெளியே செல்வதே இல்லை.அவர் மிக இயல்பாக தன் புனைப்பெயராக தஸ்தாவெய்ஸ்கியின் பாத்திரத்தை தேர்ந்திருக்கிறார்.ஏனேனில் இவை அணைத்தும் ஒருவகையில் தஸ்தாவெய்ஸ்கியின் பாத்திரங்களின் குணங்கள்.அவர்கள் அணைவரையும் ஏதேனும் ஒரு எண்ணத்தால் பீடிக்கப்பட்டவர்கள்.அதன் வழி மட்டும் வாழ்வை அணுகுபவர்கள்.அவர்களுக்கு வேறு எதிலும் அக்கறை இருப்பதில்லை.

அவருடைய காட்சி அமைப்புகள் தமிழில் புதிது.ஒரே ஷாட்டில் பல்வேறு செயல்களை காட்சி படுத்திவிடுவார்.அதிகம் வெட்டி வெட்டி காட்ட மாட்டார்.நந்தலாலா படத்தில் அந்த சிறுவன் வீட்டுக்குள் நுழைவது, தன் பாட்டியை கழிப்பறைக்கு அழைத்து செல்வது,மறுபடி வந்து பீரோவை திறந்து தன் அன்னையின் புகைப்படத்தை எடுத்து முத்தமிடுவது,மறுபடி சென்று தன் பாட்டியை கழிப்பறையிலிருந்து அழைத்து வருவது என்று அனைத்தும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும்.அடுத்த dissolve.அதே அறையில் சிறுவன் அமர்ந்து உணவருந்துவான்.தொலைக்காட்சி ஒலித்துக்கொண்டிருக்கும்.பாட்டி கட்டிலில் அமர்ந்திருப்பார்,வேலைக்காரப் பெண் நடந்து செல்வார்.அந்த வீட்டில் அன்னையில்லை.பாட்டியும் சிறுவனும் மட்டுமே இருக்கிறார்கள்.பாட்டிக்கு பார்வை பிரச்சனை.எல்லாமே இரண்டு காட்சிகளில்(ஷாட்டுகளில்) சொல்லிவிடுவார்.பெரும்பாலும் ஒரு காட்சியை ஒரே ஷாட்டில் சொல்வது ஒரு அழகிய நடனம் போன்றது.அதை தமிழில் அதிகம் செய்பவர் மிஷ்கின்.தமிழில் இப்போது இருக்கும் சினிமா இயக்குனர்களில் அதிக உழைப்பின்றி மிக எளிதாக திரைக்கதை எழுதக்கூடியவர் மிஷ்கின் என்று நினைக்கிறேன்.அந்த வகையில் அவருக்கு முன் இருந்தவர் மகேந்திரன் மட்டுமே.மிஷ்கின் படங்களில் கதை எங்குமே நிற்காது.அவருடைய பலவீனங்கள் என்றால் அவரால் தன் கதாபாத்திரங்களுக்கு வெளியே தன் கதை எடுத்து செல்ல முடியாதது,புறவுலகை பெரிய அளவில் காட்ட முடியாதது, ஒரு சிக்கலை அமைப்பின் சிக்கலாக விரிக்க முடியாதது,மேற்குலகின் குற்றம் – குற்றவுணர்வு- தியாகம் – மீட்சி என்ற கருத்தால் பீடிக்கப்பட்டிருப்பது ஆகியவை.அவையே அவரது பலங்களும் கூட.