நாகார்ஜூனரும் அவர் சீடர் ஆரியதேவரும் |
ஜெயமோகன் விஷ்ணுபுரம் நூலை எழுதிய பின்னர் அதில் கெளஸ்துபம் பகுதியில் வரும் தத்துவ விவதாங்களை பற்றி அறிமுகத்தை உருவாக்கும் பொருட்டு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை எழுதினார்.அதே கெளஸ்துபம் பகுதியில் வரும் பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதியுள்ள நூல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்தக் கருத்துக்கள்”.கிருஷ்ணன் இந்த நூலில் விஷ்ணுபுரத்தின் கெளதுஸ்பம் பகுதியில் வரும் பெளத்த கருத்துக்களை பற்றி மட்டும் தன் மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.அதன் மற்ற பகுதிகளான ஸ்ரீபாதம் மற்றும் மணிமுடி பற்றி அவர் இலக்கியரீதியிலான விமர்சனம் எதையும் முன்வைக்கவில்லை.
பெளத்தத்தின் பிரிவுகளான வைபாஷிகம் , மத்தியமிகம், யோகாசாரம் ஆகிய தரிசனங்கள் ஞான சபையில் விவாதிக்கப்படுகிறது.வைபாஷிக மரபினைச் சார்ந்த பிட்சு நாகநந்த மகாபாதர் வாதத்தின் முதல் கேள்வியாக “பவதத்தரே தங்கள் தருக்கத்தில் ஆத்மா பற்றிய கருத்து என்ன?” என்கிறார்.அதற்கு பவதத்தர் கீழ் வரும் பதிலை அளிக்கிறார்.
“அன்னமயகோசத்தின் உள்ளே பிராண , அசுத்த , சுத்த , ஆனந்த , சின்மய கோசாங்களைத் தாண்டி உட்சென்றால் தெரியும் சதானந்த கோசமே ஆத்மாவாகும்.அது தூய பிரகாசம் கொண்டது.புலன்களின்றியே தன்னை உணர்வது.எந்த வடிவில் பிரம்மம் உள்ளதோ அந்த வடிவமே அதற்கும்.பிரமாண்டத்தின் ஆத்மா பிரம்மம்.உடலின் பிரம்மமே ஆத்மா.அவை வேறு வேறு அல்ல.ஏழு உலகங்களும், ஏழு கோசங்களும் பிரம்மத்தையும் ஆத்மாவையும் பிரதிபலிக்கின்றன.அவை அசத் என அறிந்தவன் பிரம்மமும் , ஆத்மாவுமே சத் என்று அறிவான்.ஆத்ம தரிசனம் பிரம்மதரிசனமேயாகும்.ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது.பனித்துளிகள் எல்லாமே சூரியனை பிரதிபலிக்கின்றன.ஆத்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பேயாகும்.” என்று பதில் அளிக்கிறார்.
இங்கே பவதத்தர் அளிக்கும் விளக்கும் ஆதி வேதாந்த தரிசனம்.பிற்கால வேதாந்தங்களான அத்வைதமும் இதே பார்வையை தான் முன்வைக்கிறது.பெளத்த வைபாஷிக பிரிவை சார்ந்த நாகநந்தரிடம் பவதத்தர் புலன்களின் தர்மத்தையும் மகாதர்மத்தையும் இணைத்து கேள்வி கேட்டு ஒரே தர்மம் ஏன் ஆசைகளையும் துக்கங்களையும் உருவாக்கவும்,அவற்றை அழிக்க காரணமாக அமையவும் வேண்டும் என்கிறார்.இதற்கான பதிலை சரியாக நாகநந்தரால் கூற முடியவில்லை.
கிருஷ்ணன் இங்கு சிறிய எழுத்து தர்மம் மகாதர்மம் ஆகியவற்றை பற்றிய விளக்கத்தை அளிக்கிறார்.பால் தர்மம்.தயிர் தர்மம்.பால் தயிராக மாறுவது மகாதர்மம்.பால்தான் தயிராக முடியும்.தண்ணீர் அல்ல.இந்த மகாதர்மம் என்பது இரு பொருட்களின் தர்மத்தையும் புறத்தையும் கொண்டு உருவாகும் நியதி.இதுவே மகாதர்மம்.பொருட்களின் உள்ளார்ந்த தர்மங்களும் புற உலகமும் முயங்கியே அடுத்த நிலை நிகழ்கிறது.நீர் வழி படூஉம் புனை போல என்ற புறநானூற்று பாடல் முன்வைக்கும் ஆஜிவிக தரிசனம் முழு நிர்னயவாதம்.ஆனால் பெளத்தம் முன்வைக்கும் மகாதர்மம் சார்புநிலை நிர்னயவாதம்.
இரண்டாவதாக நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தை முன்வைத்து சூனியவாதியான மகாநாமர் ஞான சபையில் விவாதம் செய்கிறார்.பவதத்தர் மனிதப் பிரக்ஞையை ஏற்கிறீர்களா என்று மகாநாமரை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.பருப்பிரபஞ்சம் பற்றியும் அதே கேள்வியை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.அப்படியென்றால் சூனியத்தை சூனியம் பார்க்கும் போது எப்படி பருப்பிரமை விளைந்தது என்று கேள்வி கேட்கிறார்.அதற்கு மகாநாமர் அறியமுடியாமையே இறுதி விடையாக இருக்க முடியும் என்கிறார்.அறியமுடியாமை என்பது கூற முடியாமை.நியாய மரபுப்படி விவாதத்தை விட்டு விலகிவிட்டீர்கள் என்று சொல்லி அவரை வாதத்தில் முறியடிக்கிறார்.
விவாதத்தின் தொடகத்தில் மகாநாமர் சூனியவாதம் பற்றி விளக்கம் அளிக்கிறார்.அறிபடு பொருள் , அறியும் பொருள், அறிவு ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்தவை என்கிறார்.மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது என்கிறார்.பின்னர் அவரே இம்மூன்றும் இல்லை என்கிறார்.எதுவுமே இல்லை என்கிறார்.முதல் விளக்கமும் அடுத்த விளக்கமும் முரணாக இருக்கிறது.அமைப்பியம் எதுவுமே அது அதன் சூழமைவால் தான் அர்த்தம் கொள்ளப்படுகிறது என்கிறது.அதாவது சாலையில் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு அது பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய பிறவற்றோடு இருக்கும் சூழமைவால் தான் வாகனத்தை நிறுத்தவேண்டும் என்ற அர்த்தம் கொள்கிறது.தனியாக சிவப்பு நிறத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை.அதற்காக அவை இல்லை என்று பொருள் கொள்ள இயலாது.இதுவே சூன்யவாதத்திற்கும் பொருந்தும்.தனியாக பொருட்கள் இல்லை.அல்லது தனியாக அவற்றை அர்த்தம் கொள்ள இயலாது.
பெளத்தம் பிரத்யட்சம் , அனுமானத்தை அறிதல் முறைகளாக கொள்கிறது.சுருதியை அது அறிதல்முறையாக கொள்ளவில்லை.அப்படியாக அது வேதத்தை நிராகரிக்கிறது.ஆன்மாயின்மை,நிலையின்மை,நிறைவின்மை ஆகியவையே பெளத்தம் முன்வைக்கும் வாழ்வின் மூன்று உண்மைத் தன்மைகள்.இந்த உலகில் தனித்த பேரிருப்பு என்று எதுவும் இல்லை.மகாதர்மம் தனித்த பேரிருப்பு அல்ல.அது எதையும் இயக்குவதில்லை.இயக்கத்தின் நியதியை சுட்டுவதற்கான தொகுப்பு பெயரே மகாதர்மம்.மகாதர்மம் பொருட்களின் இயங்குதளத்திலேயே வெளிப்படுகிறது.அதனால் மகாதர்மம் பிரம்மம் அல்ல.அது எதையும் உருவாக்கவில்லை.
மூன்றாவதாக பெளத்தத்தின் யோகாசார தரிசனத்தை சார்ந்த அஜிதன் ஞான சபை விவாதத்தில் தன் தரப்பை முன்வைக்கிறான்.வசுபந்தர் அசங்கர் ஆகிய ஞானிகளின் வழிவந்த திக்நாகரின் சீடன் அஜிதன்.திக்நாகர் முன்வைக்கும் யோகாசாரம் விஞ்ஞானவாதம் என்றும் சொல்லப்படுகிறது.சித்தம் மாத்திரம் உள்ளது என்னும் மெய்ஞான மரபு.அதாவது காட்சிப் பிரபஞ்சம் மனதால் மட்டுமே உருவாகுகிறது.இங்குள்ள அனைத்து மனங்களும் இணைந்த ஒட்டுமொத்த மனமே பிரபஞ்தத்தை உருவாக்குகிறது.அதையே ஆலய விஞ்ஞானம் என்று வசுபந்து நிலைநாட்டுகிறார் என்கிறான் அஜிதன்.புறப்பொருட்கள் கனம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது.மாறிக்கொண்டே இருக்கும் பொருளின் ஒரு சுட்டுப் பெயர் நாம் அந்த பொருளுக்கு வழங்குவது.எந்தப் பொருளும் அதன் நிறைவில் இல்லை.நிறைவில் இல்லாத பொருள் இல்லை என்றே கொள்ளப்படும்.ஆகையால் நாம் பொருளாக உணர்வது நம் மனத்தால் தான் என்கிறான் அஜிதன்.சூன்யவாதம் அறிபவன், அறிபடு பொருள், அறியும் பொருள் ஆகியவற்றின் சார்பு நிலையிலேயே நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொல்வதற்கு மாற்றாக யோகாசாரம் மனம் மட்டுமே உள்ளது மற்றவை இல்லை என்ற இடத்திற்கு நகர்கிறது.மேலும் அனைத்து மன விஞ்ஞானங்களும் இனைந்த ஒட்டுமொத்த மனமே ஆலய விஞ்ஞானம் என்றும் அந்த ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்து எழுந்தது என்றும் சொல்கிறான்.மேலும் காலமே மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என நம் கண்முன் எழுந்தருளுகிறது என்று கால தரிசன சூத்ரம் பற்றி சொல்கிறான்.இதில் காலத்தை நேர்கோடாக கொள்ளலாகாது என்றும் , அதை சூழற்சியாக கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான்.அஜிதன் வாதத்தில் வெற்றி பெறுகிறான்.விஷ்ணுபுரத்தின் ஞானாதிபதாயாக பதவி ஏற்கிறான் அஜிதன்.சந்திரகீர்த்தி நகரை ஆள்கிறான்.பெளத்த ஆட்சி அடுத்த இரு நூறு ஆண்டுகள் விஷ்ணுபுர நகரை ஆள்கிறது.
கிருஷ்ணன் தன் நூலில் பெரும்பாலும் நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தையும் விளக்கியும் விஞ்ஞானவாதத்தை மறுத்தும் தன் வாதத்தை முன்னெடுக்கிறார்.இந்த நூலில் அவர் இரண்டு விஷயங்களை செய்கிறார்.ஒன்று விஷ்ணுபுரம் நாவலில் மத்தியமிக தரிசனத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி அதை விளக்கி அதுவே சரியான தரிசனம் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.மற்றது விஷ்ணுபுரம் நாவலில் வரும் அஜிதன் சொல்லும் விஞ்ஞானவாதத்தை மறுத்து அளிக்கும் விளக்கங்கள்.மறுபுறம் திக்நாகர் முன்வைக்கும் விஞ்ஞானவாதத்தையும் மறுக்கிறார்.அதாவது நாவலில் விஞ்ஞானவாதத்தை அஜிதன் முன்வைக்கும் போது செய்யும் வாதங்களில் உள்ள பிழைகளையும் சொல்கிறார்.அதே நேரத்தில் விஞ்ஞானவாதமும் பிழையான வாதம் என்கிறார்.
விஞ்ஞானவாதம் மனம் மட்டுமே உள்ளது என்கிறது.ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்த எழுந்த ஒன்று என்று அஜிதன் கூறுகிறான்.மகாதர்மம் தனித்த பேரிருப்பு என்கிறான்.காலம் மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என்கிறான்.இதற்கு கிருஷ்ணன் கீழ்க்கண்ட மறுப்புகளை சொல்கிறார்.
1. விஞ்ஞானம் எனும் கூட்டு ஏழு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.அவை:
அ - ஐந்து அடிப்படைப் புலனுணர்வுகள்
ஆ - மன உணர்வுகள்(எண்ணங்களால் உருவானவை)
இ - பகுத்து ஆராய்ந்தறியும் அறிவு,புத்தி(Intellectual discriminating consiousness)
ஈ - எட்டாவதாக ஆலய விஞ்ஞானம் விளக்கப்படுகிறது.
இறுதியாக சொல்லப்பட்டுள்ள ஆலய விஞ்ஞானம் வெளியுணர்வுக்கு வராமல் உள்மன ஆழத்தில் உறைந்திருக்கும் வேட்கைகளும் மற்றும் குணங்களுமாகிய சக்திகளை அதாவது புருஷர் என்று கூறப்படுபவரின் சாரமாக இருக்கும் இந்த சக்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.ஒவ்வொரு உயிரையும் உந்தி இயக்கும் சக்திகளாகிய
- பவதண்ஹா(வாழவேண்டும், இப்பிடியாக வேண்டும், அப்படியாக வேண்டும் என்ற வேட்கை)
- காமதண்ஹா(இன்ப வேட்கை)
- விபவதண்ஹா(அழிவு வேட்கை)
ஆகிய இச்சாசக்திகளின் மற்றும் குணங்களாகிய சக்திகளின் ஒரு கூட்டே இந்த ஆலய விஞ்ஞானம்.2. காரணங்களையும் சூழ்நிலைகளையும் ஆதரவுகளையும் சார்ந்து ஒவ்வொன்றும் எவ்வாறு தோன்றுகின்றது,மாறுகின்றது,மறைகின்றது என்பதை நிர்னயிக்கும் இயற்கை விதிகளின் தொகுப்புதான் தர்மம்.பிரபஞ்சத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கும் ருது நியமம்,பீஜா நியமம்,கம்ம நியமம்,சித்த நியமம் மற்றும் தம்ம நியமம் ஆகிய ஐந்து நியமத் தொகுதிகள் ஒன்றோடொன்று பின்னியிணைந்துள்ளது.இவ்வாறு இணைந்துள்ள தொகுதிகளில் அடங்கும் இயற்கை விதிகளின் சார்புடைமையையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கும் அடிப்படை விதிகளின் தொகுப்பே மகாதர்மம்.
3. மகாதர்மம் ஆலய விஞ்ஞானம் எப்படிப் பரிணமிக்கின்றது என்று அதன் பரிணாமப் படிமுறையை நிர்ணயிக்கிறது.அது ஆலய விஞ்ஞானத்தை உண்டாக்குவதில்லை.
4. அஜிதன் கூறும் காலச்சக்கர தரிசனம் பற்றி இந்த விளக்கத்தை அளிக்கிறார்.
- வண்டுதான் வட்டப்பாதையை இயக்குகின்றதே ஒழிய வட்டப்பாதை வண்டை இயக்குவதில்லை.தன்னிச்சையாகச் செயல்படும் வண்டு சில கட்டுப்பாடுகளுக்கும் நியதிகளுக்கும் ஆட்பட்டுள்ளது என்பது உண்மையே.ஆனால் அதைக்கொண்டு வட்டப்பாதை வண்டை இயக்குகின்றது என்று கூறுவது போலியான வாதம்.அது போலவே வாழ்க்கைச் சக்கரம் ஆலய விஞ்ஞானத்தை இயக்குவதில்லை என்பதும் , ஆலய விஞ்ஞானத்தை ஆக்கும் பேராசைகளும் , பற்றுகளும்தான் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றும் விசைகளாக இருக்கின்றன.ஆலய விஞ்ஞானத்தின் பரிணாமச் சுழற்சியே வாழ்க்கைச் சக்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது.
- காலம் நீண்டுகொண்டுதான் போகிறது.சுழல்வதில்லை.சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தம் மையக்கோட்டையும் சுற்றிச் சுழல்கின்றன.ஆகையால் , பகலும் இரவும் மாறிமாறி உண்டாகின்றன.பகல் இரவாகிறது.இரவு பகலாகிறது.பிறப்பு,இறப்பு,மறுபிறப்பு,மறுஇறப்பு என்று வாழ்க்கைச் சக்கரமே சுழன்று கொண்டேயிக்கின்றது.வாழ்க்கைச் சக்கரமே காலச்சக்கரமாகவும் உருவகிக்கப்படுகின்றது என்பது பொருத்தமாக இருக்கும்.
- வஜ்ஜிரயான பெளத்தம் கூறும் காலச்சக்கர தரிசனத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் அது புற உலகையும் அக உலகையும் ஆராய்ந்து பார்த்து இயக்கத்தில் இரண்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைக் காட்டுகின்றது.அண்டத்தின் உருவாகவே பிண்டமும் இருக்கின்றது.பிரபஞ்சங்களும் சூரிய குடும்பங்களும் ஏன் விண்வெளியில் சுழலும் அனைத்துமே , பிறப்பு , வளர்ச்சி, தேய்வு , மரணம் என்று தொடர்ந்து நிகழ்கின்ற வட்டச் சுழற்சிகளுக்கு ஆட்பட்டவைதான்.கோள்களின் சுழற்சிகளை ஆராய்ந்து பார்த்து அவற்றின் அடிப்படையில் நாட்களையும் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பதற்கு காலச்சக்கர தரிசனம் ஒரு தனிச்சிறப்பான முறையை வகுத்து வழங்கியுள்ளது.
- காலத்தையும் வஜ்ஜிராயன பெளத்தம் ஒரு தெய்வமாக உருவகித்து வழிபடுகின்றது.ஆனால் இதிலிருந்து வஜ்ஜிராயன பெளத்தம் காலத்தை ஒரு ஆதிமாகசக்தியாக , தனிப்பெரும் பொருளாக ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூற முடியாது.
ஆதிசங்கரர் |
பெளத்ததில் பல்வேறு தரிசனங்கள் இருக்கும் போது ஏன் அத்வைத்தத்தின் முந்தைய வடிவமாக கருதப்படும் யோகாசாரம் விஷ்ணுபுரத்தில் ஞானசபையில் வெற்றி பெறும் தத்துவமாக புனையப்பட்டுள்ளது என்ற கேள்வி சரியான கேள்விதான்.அது மத்தியமிகமாகவோ அல்லது வைபாஷிகமாக இருந்திருக்கலாம்.ஆனால் இந்த யோகாசாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் அது அத்வைதத்தின் முந்தைய வடிவம் என்பதால் தானா என்பதே ஓட்டுமொத்தமாக கிருஷ்ணனின் புத்தகத்தில் எழுப்பப்படும் கேள்வி.தெரியவில்லை.
ஆனால் மணிமுடி பகுதியில் விஷ்ணுபுரம் நகரின் செம்பர் குல மூப்பன் விஷ்ணுவாக வீற்றிருப்பது செம்பர் குலத்தில் நீலமூப்பன்தான் என்கிறார்.தொடர்ந்து மூப்பன் செம்பர் குல மரபின் தொன்மத்தை விளக்குகிறார்.இதற்கும் ஆதி வேதாந்தந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.அது மூத்தார் வழிபாடு.அந்த செம்பர் குல மூப்பன் சொல்வது போலத்தான் நாவல் முடிவடைகிறது.பிரளயம் வருகிறது.நான்கு பக்கமும் இதழ்கள் விரிய அதிபிரமாண்டமான ஒரு தாமரை மலர் அதன் நடுவே கரிய பீடத்தில் வேததத்தன் அமர்ந்திருக்க , வேதத்தனை தாமரை இதழ்கள் பொதிந்து மூடிக்கொள்கிறது.இவற்றை படிக்கும் போது விஷ்ணுபுரம் நாவல் எந்த தரப்பையும் முன்வைக்கவில்லை என்று சொல்ல முடியும்.பழங்குடி செம்பர் சமூகம் , அவர்களின் தொன்மம், அதன் வழி உருவாகும் சடங்குகள், அந்த ஊர்களை பேரரசுகள் கைப்பற்றுவது, அப்போது பழங்குடிகள் ஊரை விட்டு வெளியேறுவது, அவர்களின் தெய்வங்கள் பேரரசின் தெய்வமாக மாறுவது , அந்த தொன்மம் ஒரு தரிசனமாக மாறுவது என்று இது ஒரு வரலாற்று பார்வையையும் முன்வைக்கிறது.மேலும் விஷ்ணுபுரம் நாவலில் வரும் சங்கர்ஷணனின் மகாபத்மபுராணம் இந்த விஷ்ணுபுரம் நாவலையே போலச்செய்து காட்டுகிறது.அது ஒரு காவியம்.விஷ்ணுபுரமும் ஒரு காவியமாக முன்வைக்கப்படுகிறது.இதில் எந்த தரப்பையும் தனித்தரப்பாக கொள்ள முடியாது.வைணவத்தில் பெரும் தொன்மமாக இருக்கும் நம்மாழ்வார் ஸ்ரீபாத பகுதியில் பயங்கரமாக பகடி செய்யப்படுகிறார்.பவதத்தரின் மகனான விஷ்ணுதத்தன் பின்னர் சித்தனாகிறான்.அவன் எல்லா தரிசனங்களும் உண்மையே.ஆனால் தர்க்கத்தளத்தில் அது வெறும் சொற்போராக மட்டுமே இருக்கும் என்கிறான்.ஏனேனில் அந்த தரிசனங்களை ஒரு எல்லை வரை மட்டுமே மொழியால் விளக்க முடியும் என்று காசியபனுக்கு சொல்கிறான்.
இருந்தபோதும் கெளஸ்துபம் பகுதியில் அநேகமாக வெற்றிபெறுவதும் ஒன்றுதான் தோல்வியடைவதும் ஒன்றுதான் என்ற பார்வை ஏன் வைக்கப்படுகிறது, ஏன் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் வேறு வேறாக இருக்கக்கூடாது என்ற கேள்வி முக்கியமானதுதான்.ஆதி வேதாந்தமும் பெளத்தமும் ஒன்று தான் என்ற பார்வை இங்கே முன்வைக்கப்படுகிறது.இது அவசியமற்றது.பெளத்தம் வேறு ஆதி வேதாந்தம் வேறு.பெளத்தமும் மத்தியமிகமும் தன் பார்வையை வேதாந்தம் வழி பெறவில்லை.வேதங்களை அவை அறிதல் முறையாக ஏற்கவில்லை.இது பல தளங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை காணமுடிகிறது.
இந்த நாவல் வரும் காலம் ஐந்தாம் நூற்றாண்டிலருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரையானதாக இருக்கலாம் என்கிறார் கிருஷ்ணன்.பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை விஷ்ணுபுரம் நாவலை வாசித்தேன்.அப்போது மணிமுடி பகுதியில் ஸ்ரீபாத பகுதியில் வருபவர்கள் ஐதீகங்களாக தொன்மங்களாக கதைகளாக தரிசனங்களாக மாறிவிடுவார்கள்.எனக்கு அது மட்டும் ஈர்த்தது.ஆனால் கிருஷ்ணனின் இந்த நூலை வாசிப்பதற்காக விஷ்ணுபுரத்தை மீள்வாசிப்பு செய்த போது இந்த நாவலின் கட்டமைப்பு, சொற் வளம்,அதன் கனவுத்தன்மை அனைத்தும் மிகவும் ஈர்ப்பத்தாக இருந்தது.ஜெயமோகனுக்கு யானைகளை பற்றி சொல்லி மாளவில்லை.ஸ்ரீபாத பகுதியில் வீரன் என்ற யானை பற்றியும் , இரண்டாம் பகுதியில் அங்காரகன் என்ற யானை பற்றியும் அத்தனை விரிவாக எழுதுகிறார்.ஒரு குழுந்தையின் குதூகுலத்துடன் யானைகளை கண்டு ரசித்தியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும்.அதை எழுதி எழுதித்தான் தீர்க்க முடியும்.எழுதினாலும் தீராது போலும்.இரண்டாம் பாகத்தில் பிராமணர்கள் உணவு உண்ணும் பகுதி நாவலின் மிகச்சிறந்த புனைவுப் பகுதி.நாவலில் தொடர்ந்து ஜெயமோகன் வைதீக மரபு சாதி அடிப்படையில் தண்டனைகளை வழங்கிய விதம்,சூர்யதத்தரின் கொடுங்கோல் ஆட்சி,லெளகீகத்தளத்திற்கு வெளியே எதும் அறியாத பிரமாணர்களின் அக்கறையின்மை என்று தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.சந்திரகீர்த்தியின் பெளத்த ஆட்சி காலத்தில் அத்தனை ஆயிரம் இரவலர்கள் உணவு அருந்த வரும் காட்சியை பார்க்கும் நரோபா இந்த நகரத்தில் இத்தனை இரவலர்களாக என்று வியக்கிறான்.இவர்களுக்கு பெளத்த ஆட்சியில் தான் நகருக்குள் வந்து அண்ணவிகாரத்தில் உணவு அருந்த உரிமை வந்தது என்றும் அதற்கு முன்னர் ஆயிரம் வருடங்களாக மகாமுற்றங்களில் இந்த மக்களுக்கு அனுமதி இருந்ததில்லை என்பதும் சொல்லப்படுகிறது.
திருவடி, பிங்கலன் வழி காமம் மனிதனின் ஆதார விசை என்ற பார்வை நாவலில் வருகிறது.திருவடி லலிதாங்கி என்ற இளம் தாசிப்பெண்னை அத்தனை நெருக்கமாக பார்க்கிறான்.அவளின் முழுங்கையில் மெல்லிய மயிர்கள் இருப்பதைக் காண்கிறான்.வீரன் என்ற யானை மதம் கொண்டு தெருவில் அலைவதால் அங்கே பெருங்குழப்பம் ஏற்படுகிறது.மக்கள் கூட்டம் சிதறிச்செல்கிறது.அந்தக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ளும் லலிதாங்கியை பத்திரமாக அவள் இல்லம் சென்று சேர்க்கிறான் திருவடி.பின்னர் அவன் ஒரு போதும் சமநிலைக்கு திரும்புவதில்லை.அவன் தினமும் அவள் இல்லம் இருக்கும் கணியைகர் தெருக்கு சென்று அங்கு நின்று பாடித்திரும்புகிறான்.அவன் தன் பாடல்களில் பரிபூரண சுய அழிப்பை அடைகிறான்.அது ஒரு உன்மத்த உளறல் என்று மணிமுடி பகுதியில் மாதவன் எண்ணிக்கொள்கிறான்.அவன் திருவடி ஆழ்வார் ஆகிறான்.சாதி கடந்த திருமணங்களை செய்து வைக்கிறான்.லலிதாங்கி திருவடிக்கு ஒரு நிமித்தம் மட்டுமே.அவன் இசையின் வழி பாடல்களின் வழி அங்கிருந்து வெகுதூரம் மானுடம் தழுவும் தரிசனம் நோக்கி செல்கிறான்.ஒரு ஆதித்துயர்.ஆனால் அதன் ஆதார விசை காமம்.இது பிங்கலன் விஷயத்திலும் நிகழ்கிறது.அவன் லட்சுமி என்ற சங்கர்ஷணனின் மனைவியுடன் கொள்ளும் உறவின் வழி தன் தரிசனத்தை அடைகிறான்.அதை யோக சக்கரமாக வளர்தெடுத்து யோனியை அதன் மையமாக உருவகிக்கிறான்.மற்றவை அனைத்தும் ஸ்திரீலிங்கமாகவும் புருஷலிங்கமாவும் உருவகிக்கிறான்.ஆனால் பின்னர் வஜ்ராயன பெளத்தத்தில் ஒரு கூறாக இணைக்கப்பட்ட யோகசக்கரத்தில் நிகழ்ந்த திரிபுகளும் இழிவான பயிற்சிகளுமே ஒருவகையில் இந்தியாவில் பெளத்தத்தின் சீர்கேட்டிற்கும் அவப்பெயருக்கும் இறுதியில் அதன் வீழ்ச்சிக்கும் மறைவுக்கும் காரணங்களாயின என்கிறார் கிருஷ்ணன்.
எனக்கு இந்த நாவலையும் கிருஷ்ணனின் விமர்சன நூலையும் வாசிக்கும் போது ஒரு விஷயம் முக்கியமாக பட்டது.சுயம் சுயமின்மை.அத்வைதம் ஆன்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பு என்கிறது.ஆன்மா அழிவற்றது என்கிறது.பிரம்மம் X பிரபஞ்ச மாயை என்ற இரு நிலைகளை போல அழிவற்ற ஆன்மா X அழிந்துபோகும் உடல் என்ற இருநிலைகளும் அதில் இருக்கிறது.அழிந்துபோகும் உடல் இழிவானது , அதனால் உடல் உழைப்பு கீழானது , உடல் உழைப்பாளிகள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இதிலிருந்து வந்திருக்கலாம்.மேலும் நானே சச்சிதானந்த சொரூபம் என்பதில் நான் என்ற சுயம் மேலெழுகிறது.அதுவே தன்னை,தன் மொழியை , தன் இனத்தை , தன் சேத்தை , தன்னலத்தை முன்வைக்கும் வாதங்களை தர்க்க ரீதியாக முன்னெடுத்து செல்ல வழி செய்கிறது.மனம் மட்டுமே உள்ளது என்ற விஞ்ஞானவாதமும் பொருள் மட்டுமே உள்ளது என்ற லோகயதமும் இரு எல்லைகள்.தனித்த சுயம் இல்லை.எல்லாம் சார்பு நிலைகளில் இயங்குகின்றன என்ற நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனம் சுயத்தை மறுக்கவுமில்லை, சுயத்தை கொண்டாடவுமில்லை.சார்புநிலையில் இருக்கும் போது அனைத்தும் ஒரே முக்கியத்துவம் கொள்கிறது.தனிமனிதன் , ஆன்மா போன்றவைக்கு எதிரானது சார்புநிலைத் தத்துவம்.ஆலய விஞ்ஞானத்தை கார்ல் யுங் சொல்லும் கூட்டு நனவிலியோடு இணைத்து பார்த்து புரிந்து கொள்ளலாம்.ஆனால் எதுவுமே தனித்த முழுமுதல் பேரிருப்புகள் என்பதை மத்தியமிக மார்க்கம் நிராகரிக்கிறது.அது சரியென்றே படுகிறது.மேலும் அமைப்பியம் போன்ற கோட்பாடுகளுடன் சார்புநிலை தத்துவத்தை இணைத்து புரிந்து கொள்ள முடியும்.
கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில் கல்யாணராமன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.இந்த நூலின் ஒரே குறை இந்த அணிந்துரைதான்.கல்யாணராமன்தான் பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் கவிதைகள் குறைபாடுகளுடன் இருக்கிறது என்று பதறி காலச்சுவடில் கட்டுரை எழுதியவர்.இந்த அணிந்துரையிலும் நிறைய பதறியிருக்கிறார்.அவருக்கு இலக்கியமும் தெரியவில்லை , தத்துவமும் தெரியவில்லை.எல்லாவற்றிலும் எப்போதும் அவரால் சதியை கண்டுபிடிக்கமுடிகிறது.ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்களை சென்னை திருமங்கலத்தின் ஜங்ஷன் அருகே இருக்கும் அவருடைய அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்து பேசினேன்.அப்போது ஜெயமோகனை பலரும் இந்துத்தவர் என்கிறார்களே , இந்த நூலை வாசித்ததன் வழியாக உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுகிறதா என்று கேட்டேன்.இந்த நூல் வழி அப்படி ஒரு எண்ணம் ஏற்படவில்லை என்று சொன்னார்.நிச்சயம் தமிழில் எழுதப்பட்டுள்ள மகத்தான நாவல்களில் ஒன்று விஷ்ணுபுரம்.ஜெயமோகன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூல் எழுத என்ன காரணம் இருந்ததோ அதே காரணங்கள் கிருஷ்ணனின் நூலுக்கும் பொருந்தும்.ஜெயமோகன் தன் முன்னுரையில் இத்தகைய படைப்புக்கு அவசியமான விரிவான விமரிசன உரையாடல் நடைபெறவில்லை என்ற படுகிறது என்கிறார்.மேலும் நமது காவிய , சிற்ப மரபுடன் இப்படைப்புக்கு உள்ள உறவும், இந்திய சிந்தனை மரபும் , தமிழக வரலாறும் இதில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ள முறையும் விமரிசனம் பரிமாற்றம் மூலம் தெளிவடையக் கூடியவை என்கிறார்.அத்தகைய ஒரு விமரிசன நூல்தான் கிருஷ்ணனின் இந்த ஆக்கம்.
நூல்கள்
1. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா வெளியீடு – (இப்போது வேறு பதிப்பகங்கள் வழி வெளியாகிறது என்று நினைக்கிறேன்)
2. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் பெளத்தக் கருத்துக்கள் – ஓ.ரா.ந.கிருஷ்ணன் – மெத்தா பதிப்பகம்.
புகைப்படங்கள்
1.நாகார்ஜூனரும் ஆரியதேவரும் - https://commons.wikimedia.org/w/index.php?curid=21908468
2.ஆதிசங்கரர் - https://commons.wikimedia.org/w/index.php?curid=186869