இடதுசாரி கட்சிகளின் வீழ்ச்சி


சீதாராம் யெச்சூரிக்கும் பிரகாஷ் காரத்துக்கும் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியை எப்படி எதிர்கொள்வது என்பதில் வேறுபாடு ஏற்பட்டு பிரகாஷ் காரத் தரப்பின் முன்வரைவு அதிக ஓட்டுகளை பெற்றிருக்கிறது.காங்கிரஸூடன் எவ்வித கூட்டணியும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் பிரகாஷ் காரத் தரப்பின் நிலைப்பாடு.காரத் தரப்பு என்பது கேரளத்தின் தரப்பு.கேரளத்தை மட்டுமே கணக்கில் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்களுக்குத்தான் இப்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆதரவு இருக்கிறது.இனி வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவது சாத்தியமற்றது.காங்கிரஸூடன் இணைந்து திரிணாமூல் காங்கிரஸை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தை பற்றி பிரகாஷ் காரத் தரப்பு கவலைப்படவில்லை.

மார்க்ஸிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட கேரளத்தின் மாநில கட்சி போல ஆகி்விட்டது.திரிபுராவில் அவர்கள் வெல்லாவிட்டால் கேரளம் மட்டுமே அவர்களுக்கு இருக்கும்.எதன் பொருட்டும் அதை இழந்து விடக்கூடாது என்பதே பிரகாஷ் காரத் தரப்பினரின் பதற்றம்.ஒரு வலுவான அரசியல் தரப்பாக இருந்திருக்க வேண்டிய இடதுசாரிகள், காரத்தின் அகங்காரத்தால் 123 ஒப்பந்தத்தின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறியது.ஆட்சி கவிழ்ந்து விட வேண்டும் என்று காரத் விரும்பினார்.சமாஜ்வாதி கட்சி ஆதரவு தந்தது.அப்போது இடதுசாரிகளுக்கு நாற்பதுக்கும் மேலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.அதன் பின் தொடர்ச்சியாக இடதுசாரிகள் வலுவிழந்து வருகிறார்கள்.
இப்போது கூட மார்க்ஸிஸ்ட் கட்சியினருக்கு வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.எப்போதோ சீனப்போரின் போது எழுந்த கருத்து வேறுபாடால் இப்போதும் பிரிந்து இருப்பது அவசியமற்றது.ஆனால் அவர்கள் இனி இணைந்தாலும் பெரிய வித்யாசம் எதுவும் வந்துவிடும் என்று தோன்றவில்லை.அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் அதிக பட்சம் ஐந்து இடங்களில் வென்றால் அதிசயம்.

இன்று ஆம் ஆத்மி கட்சியினருக்கு இருக்கும் ஆதரவு கூட இடதுசாரி கட்சிக்கு இல்லை.மாறிவரும் பொருளாதார சூழலில் பெருநகரங்களே வேலைவாய்ப்புக்கான வழி. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வராவிட்டால் இங்கு படித்து வரும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது. சிறுநகரங்களும் கிராமங்களும் வேலைவாய்ப்புகான வழிகள் அற்று இருக்கிறது. பெருநகரத்தின் உருவாக்கம் சாதிகளை அழிக்கும் அதே நேரத்தில் சாதிகளில் சென்று மக்கள் இணைந்து கொள்வதும் நடக்கிறது.இது ஏன், இவை எல்லாவற்றிலும் இடதுசாரிகள் நிலைப்பாடு என்ன என்று விவாதித்து , இடதுசாரிகள் தங்கள் கொள்கைகள் முழுவதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஆனால் அங்கு சின்ன விவாதம் கூட நடக்கவில்லை.இடதுசாரிகள் இனி பாராளுமன்றத்தில் வலுவான தரப்பாக ஒலிக்க பல பத்தாண்டுகள் ஆகும்.இதில் பிரகாஷ் காரத் தரப்பு ஏற்கப்பட்டால் என்ன, சீதாராம் யெச்சூரியின் தரப்பு ஏற்கப்பட்டால் என்ன.கேரளம் தாண்டி இதனால் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை.ஆனால் பிரகாஷ் காரத் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக வந்தது அந்தக் கட்சியின் துரதிரிஷ்டம்.சீதாரம் யெச்சூரி வந்தும் எந்த மாற்றமும் நிகழவில்லை.மறுபடியும் காரத் வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.அவர் அதன் மூடு வி்ழாவை நடத்தி முடிப்பார்.

ஞாநி


ஞாநி கோலங்கள் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டி சுயாதீன திரைப்படங்களை எடுக்க விரும்பினார். அந்த அமைப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா,பாலசந்தர்,மகேந்திரன் வந்திருந்தார்கள்.அவர் அதுவரை இயக்கிய குறும்படங்களை திரையிட்டனர்.அவருடைய குறும்படங்கள் அனைத்தும் குறைப்படங்கள்.திலீப்குமார் எழுதிய நிகழ மறுத்த அற்புதம் கதையின் குறும்பட வடிவமான திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் அவருடைய திரை முயற்சிகளில் முக்கியமானது.அவர் விரும்பிய திரை மொழி அவருக்கு அந்தப் படத்தில் தான் கைக்கூடியது என்று நினைக்கிறேன்.சமீபத்தில் சிறுவர்களுக்கான ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.அது இன்னும் வெளியாகவில்லை.அவருடைய நாடகங்கள் முதிர்ச்சியற்றவை.அவர் நம்பிய அரசியல் சரிகளை மையப்படுத்தி நாடகங்களை எடுத்தார்.அதை இன்னும் Subtleஆக தீவிரமாக ஆழமாக செய்வதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை என்று தோன்றுகிறது.

அவருக்கு வைகோ மீது ஆழமான கசப்பு இருந்தது.முரசொலி மாறன் மீது மதிப்பு வைத்திருந்தார்.அவருடைய கட்டுரைகளில் தன் கருத்துகளை அவரால் தீவிரமாக முன்வைக்க முடிந்தது.2009யிலிருந்து 2011வரை அவரும் பாஸ்கர் சக்தியும் இணைந்து ஏற்பாடு செய்த கேணி கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.பல எழுத்தாளர்கள்,இசை கலைஞர்களின் பேச்சை அங்கு கேட்க முடிந்தது.ராஜ் கெளதமனின் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது.எல்லா எழுத்தாளர்களும் ஞாநி மீதிருந்த அன்பால்தான் தொலைவிலிருந்து வந்து நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவருக்கு திரைத்துறையில் தான் விரும்பும் படங்களை வெற்றிகரமாக இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்க வேண்டும்.அவருடைய மகன் மனுஷ் நந்தன் திரைத்துறையில் வெற்றிபெற்றிருக்கிறார்.சில சமயங்களில் சில கனவுகள் தலைமுறைகளை கடந்து சாத்தியமடைகிறது.தன் மகன் விரும்பினார் என்று +1 வகுப்பில் சேர்க்கும் போது நிழற்படக்கலை பாடமும் உள்ள பிரிவில் அவரை சேர்த்திருக்கிறார்.அது அவர் இன்று ஒளிப்பதிவாளராக வெற்றி பெற்றுள்ளதற்கு பெரும் உதவி செய்திருக்கும்.அசோகமித்திரன் மீது ஆழமாக பற்றுடன் இருந்தார்.அவருக்கு என் அஞ்சலி.


சமீபத்திய கதைகள்


சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றி தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.நல்ல கட்டுரை.கதைகளில் தொடக்கம் - முடிச்சு - முதிர்வு என்று இருந்த வடிவம் தொண்ணூறுகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள்,கோட்பாடுகளின் அறிமுகத்திற்கு பிறகு மாற்றம் அடைந்ததையும் இரண்டாயிரத்திற்கு பிறகு அதன் தாக்கம் முடிந்து மறுபடி மரபான கதைவடிவங்கள் திரும்ப வந்துவிட்டதையும் சொல்லியிருக்கிறார்.முக்கியமான அவதானிப்பு.

பரீட்சார்த்தமான கதைகள் வெகுகாலம் நம்மிடம் இருப்பதில்லை என்பது அவற்றை நினைவுகூற நாம் முயலும் போது உணர்கிறோம்.மூளைக்கு சலால் விடும் கதைகள் , புதிரை கண்டுபிடிப்பது போன்ற கதைகள் சில காலம் கழித்து அதன் கவர்ச்சியை இழந்துவிடுகின்றது.காதல் அற்று கொள்ளும் புணர்ச்சி போன்றது.அடுத்த முறைக்கு வேறொரு உடல் தேவைப்படுகிறது.புணர்ச்சியின் இன்பத்தை அசை போட இயலுவதில்லை.

மேலும் கதைகள் எத்தனை எளிமையாக இருந்தாலும் அவை ஒரு தரிசனத்தை முன்வைக்க வேண்டும்.ஒட்டுமொத்தமாக வாழ்வை பற்றிய ஒரு சிறு தரிசனத்தை அந்தக் கதை உருவாக்க வேண்டும்.அசோகமித்திரனின் எல்லா கதைகளிலும் அவரின் வாழ்க்கை நோக்கு இருக்கிறது.சுந்தர ராமசாமியின் எல்லா கதைகளிலும் அவரின் வாழ்க்கை நோக்கு இருக்கிறது.அந்த நோக்கு வெளிப்பட வேண்டுமென்றால் அந்த நோக்கமே கதையை எழுதவதற்கான உந்துதலாக இருக்க வேண்டும்.பஷீரின் எல்லா கதைகளும் ஒரு கதைதான்.ஒரு சிறந்த எழுத்தாளரின் எல்லா கதைகளும் ஒரு கதைதான்.இன்று எழுதுபவர்களில் மிகச் சிலரை தவிர பெரும்பாலானோருக்கு ஒரு வாழ்க்கை நோக்கு இல்லை.அதனால் அவை தரிசனமற்ற வெறும் குறிப்புகளாக எஞ்சிவிடுகின்றன.

மேலும் இன்று எழுதுபவர்களில் மிகச்சிலரை தவிர அநேகருக்கு எந்தத் துறை மீதும் Authority இருப்பதில்லை.இலக்கியம் தவிர்த்து வரலாறு , தத்துவம்,உளவியல்,மருத்துவம்,இயற்பியல் என்று ஏதேனும் ஒரு துறையில் ஆழமான தேடலும் வாசிப்பும் ஒரு எழுத்தாளருக்கு முக்கியம்.அது அவரை சிறந்த எழுத்தாளராக்கும்.