
இது ஒரு தீவிரமான பிரச்சனை. அறமும் விழுமியங்களும் இறந்து விடும் போது நாம் எதன் அடிப்படையில் நமது வாழ்வை மேற்கொள்வது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் ஜே.ஜே. ஒரு தொழுநோயாளனுக்கு காசு கொடுக்கலாமா வேண்டாமா என்று தீவிரமாக சிந்தித்துவிட்டு இறுதியில் அவனுக்கு சில்லறையை கொடுக்கிறான். பின்னர் தான் கொடுத்த காசு கீழே விழுந்து விடவே அதை சரியாக அவனுக்கு கொடுப்பதற்காக ஜே.ஜே. குனியும் போது தொழுநோயாளன் அந்த நாணயத்தை மண்ணில் புதைத்து இழுத்து கொள்கிறான். ஜே.ஜே.வை அது வெட்கப்பட செய்கிறது.இங்கே எந்த தத்துவ அடிப்படையில் ஜே.ஜே. காசு கொடுக்கிறான் என்பதுதான் முக்கியமான கேள்வி.அற மதிப்பீடுகள் இறந்துவிட்டன என்ற நிலையில் அவனுக்கு காசு கொடுக்க வேண்டும் என்ற ஜே.ஜே முடிவு செய்வது உண்மையில் ஜே.ஜே அந்த அறமதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்துள்ளவன் என்றே காண்பிக்கிறது.அப்படியாக கடவுள் மீதும் என்றும் சொல்லலாம். அப்படியென்றால் நாம் பிச்சைகாரனுக்கு உதவ கூடாதா என்ற அபத்த கேள்வி அல்ல நம் முன் எழ வேண்டியது.ஜே.ஜே. என்ற எழுத்துரு எந்த அடிப்படையில் அதைச்செய்தான் என்ற கேள்வியே முக்கியம்.நீட்ஷே ஜரதுஷ்டரா இவ்வாறு கூறினான் என்ற நூலில் பிச்சைகாரனுக்கு கொடுப்பதை விட எடுத்துக்கொள்ள செய்வது மேலானது ஏனேனில் அது குறைவாகவே வெட்கம் கொள்ள செய்கிறது என்கிறார்.
இருத்தலியவாதத்தின் எல்லா கேள்விகளும் இந்த கடவுள் இறந்துவிட்டார் என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது என்றே நான் புரிந்து கொள்கிறேன்.தஸ்தாவெய்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் நாவலில் எழுப்பும் கேள்வி, அதில் The Grand Inquistor என்ற பகுதியில் கடவுள் பூமிக்கு வருவதை விரும்பாத பிஷப் அவரை திருப்பி அனுப்புகிறார். அதைப்போல ஆல்பெர் காம்யு அந்நியன் நாவலில் எழுப்பும் இருத்தலில் உள்ள அபத்தம் குறித்த கேள்வி ,காஃப்கா உருமாற்றம் கதையில் எழுப்பும் அபத்தம் எல்லாமே இந்த கேள்வியோடு சம்மந்தபட்டதாகவே தெரிகிறது.அப்படியென்றால் அறமதிப்பீடுகளும் விழுமியங்களும் இல்லாத போது மனிதன் எதன் அடிப்படையில் தன் வாழ்வை மேற்கொள்வான் என்கிற போது Freewill என்ற கருத்து முக்கியத்துவம் கொள்கிறது.நீட்ஷேவின் எல்லா புத்தகங்களுக்கும் இந்த வாக்கியமே திறவுகோல் என்று கூட கொள்ளலாம் .
No comments:
Post a Comment