Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

இரவாடிய திருமேனி


இரவாடிய திருமேனி நாவல் படித்தேன். ஆறு மாதங்களுக்கு மேலாக கரும்புச் சாறு இயந்திரத்திற்குள் விட்டு எடுப்பது போன்ற வேலைப்பணி இருந்ததால் அதிகம் வாசிக்க முடியவில்லை. கடந்த மாதத்தில் பணிச்சூழல் இயல்புக்கு திரும்பியது. முன்னரே பலரும் இந்த நாவலை புகழ்ந்தும் இகழ்ந்தும் எழுதியிருந்ததால் இதை வாசிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். சுனில் கிருஷ்ணன் இதைப்பற்றி காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரையையும் வாசித்திருந்தேன். ஏன் இவ்வாறு எழுதியிருக்கிறீர்கள் , நாவல் நன்றாக இருக்கிறது என்று தானே பலரும் சொல்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன். அவர் நீங்கள் படித்துப் பாருங்கள் என்று பதில் சொல்லியிருந்தார்.

இந்த நாவலை படித்த போது எனக்குத் தோன்றியது இது தான். இந்த நாவல் எந்த வித அகக்கேள்வியிலிருந்தும் இன்னலிலிருந்தும்,பிறழ்விலிருந்தும் , சிதைவிலிருந்தும் தோன்றவில்லை. ஆசிரியருக்கு ஒரு சட்டகம் இருந்திருக்கிறது. அந்தச் சட்டகத்தை கொண்டு செல்ல ஒரு வரைவை உருவாக்கியிருக்கிறார்.கதாபாத்திரங்களை அதற்குள் உலவவிட்டிருக்கிறார்.

இந்த நாவலை படிக்கும் போது அடிக்கடி விஷ்ணுபுரம் நினைவுக்கு வந்தது. ஞானசபை விவாதம், இறுதியில் ஏற்படும் அழிவு, காவியத்தை பாடும் பாத்திரம் நாவலுக்குள்ளேயே வருவது என்று அந்த நாவலுக்கும் இதற்கும் சில பொருத்தங்கள் உள்ளன.

ஆனால் விஷ்ணுபுரம் ஓர் அசல் நாவல்.சங்கர்ஷணனும் , திருவடியும் , பிங்கலனும் நாவலின் நாயகர்கள்.அவர்களுக்கு அடிப்படையான கேள்விகள் இருக்கின்றன.சங்கர்ஷணன் தன் மகன் அணிருத்தன் இறந்த பின்னர் கொள்ளும் துயரம் மெய்த் தன்மை கொண்டதாக இருக்கிறது.அதனோடு மாறாவர்மனின் துயரத்தை ஒப்பிட்டால் படிக்கும் நமக்குத்தான் துன்பம் வருகிறது.ஞானசபை விவாதத்தை ஜெயமோகனால் உருவாக்க முடிந்தது. அதைப் போன்ற ஒன்றைக் கூட போலச் செய்யக்கூட நாவல் முயலவில்லை.

அகக்கேள்வியும் அலைக்கிழப்பும் இல்லாமல் விஷ்ணுபுரம் போன்ற ஓரு நாவலை உருவாக்க முடியாது. அந்த நாவலில் பெளத்தமும் வேதாந்தமும் (அத்வைதம்) ஒன்று தான் அல்லது ஒன்றதன் தொடர்ச்சி தான் என்ற சாத்தியம் முன்வைக்கப்படுகிறது.ஆனால் நாவல் அதை மையமிட்டதல்ல.பெளத்தர்களின் ஆட்சியில் தான் இரவலர்கள் நகரத்தின் மையப்பகுதிகளுக்கு வர முடிகிறது என்ற பதிவும் உள்ளது. 

ஆனால் இரவாடிய திருமேனி போலச் செய்யும் நாவல் கூட இல்லை. நாவலில் கழுமரக் காட்சி கோபல்ல கிராமத்தை நினைவுப்படுத்தியது.தீக்கடும்பை என்ற மலருக்காக வனத்திற்கு செல்கிறார்கள், தேடுகிறார்கள், தேடிக்கொண்டே இருக்கிறார்கள். நாவலில் எதுவும் நிகழ்கிறது.ஓர் உணர்வு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு கதாபாத்திரங்கள் சட்டென்று தாவுகின்றன.

இந்த புதினத்தில் தமிழ் தேசியம் வேறு புகுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் இனங்கள் வேறு , வடுகர்கள் வேறு என்ற பார்வை வருகிறது. கலையும் தத்துவமும் அறியாத இடையர் கூட்டம் ஆட்சி செய்வதன் அவலம் பேசப்படுகிறது. ஆனால் அதுவும் கூட தீவிரத்தொனியில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அப்படியான கோணமும் அழுத்தமாக இல்லை. ஒரு சில வரிகளில் வந்து போய்விடுகிறது.

நாவலில் அரசருக்கு தீக்கடும்பை மலர் தேவைப்படுகிறது.அதற்கு நாவிதர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வனத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.மலரை ஒரு கள்வன் இறுதியில் எடுத்து வருகிறான்.ஆனால் நகரம் அதற்குப்பின் அழிவைச் சந்திக்கிறது. இனி ஞானம் கிழக்கிலில்லை மேற்கில் தான் தோன்றும் என்றும் வடுகர் ஆட்சி மறைந்து இதுவரை நாம் கற்பனைக் கூட செய்யாதவர்கள் நம்மை ஆள்வார்கள் என்று நாவல் முடிகிறது.

அர்த்தமற்ற பல உவமைகள், சொற்றொடர்கள் நாவலில் வந்து கொண்டே இருக்கின்றன. இது தீவிர இலக்கிய நாவலாகவும் இல்லாமல் , ஜனரஞ்சகமான புதினமாகவும் இல்லாமல் ஒரு சட்டகம் கொடுத்தால் தான்தோன்றித்தனமான வாக்கியங்களை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் படைப்பு போல இருக்கிறது.இது காவியமும் இல்லை, எதிர் காவியமும் இல்லை. 

வேல்முருகன் இளங்கோவின் மன்னார் பொழுதுகள் நல்ல நாவல் என்று நாஞ்சில் நாடன் சொன்னதாக படித்தேன். இந்த நாவலை அப்படி அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.


டார்வினின் வால்


 
தமிழில் இன்று பொதுவாக அனைவருமே யதார்த்தவாதக் கதைகளைத்தான் எழுதுகின்றனர். அதில் உறவுச் சிக்கல்களும் , ஆளுமைச் சிக்கல்களும் பிரதான பங்கு வகிக்கின்றன. ஜெயமோகன் இப்படி எழுதுபவர்களுக்கு வரலாற்றிலும் தத்துவத்திலும் அரசியலிலும் ஆர்வமில்லை என்கிறார்.

ஆளுமைச் சிக்கலும் உறவுச் சிக்கலும் சூழலால் தான் நிகழ்கிறது. இன்று ஒருவன் அணுமின் நிலையத்தில் பணிபுரிகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு அணுசக்தி குறித்த கேள்வி எழுகிறது.இது அறத்தின் வழி சரியானதா என்று கேட்டுக்கொள்கிறான்.இன்னொருவன் – மரபணு மாற்று விதைகள் உருவாக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.அவனுக்கு இதை சந்தைக்கு கொண்டு வருவது நியாயமானதா என்ற சிந்தனை எழுகிறது என்று கொள்வோம். இந்த எண்ணத்தால் அவன் மனப்பிறழ்வு கொள்கிறான் என்று கதை சொல்கிறது.இவற்றை வெறும் ஆளுமைச் சிக்கல் சார்ந்த கேள்விகள் என்று கொள்ள இயலுமா? இதை விரித்தால் நீங்கள் வரலாற்றுக்கும் தத்துவத்திற்கும் தான் போக வேண்டும்.மேலும் இன்றைய உறவுச் சிக்கல்கள் இன்றைய சூழலால் தான் நிகழ்கிறது.மார்க்ஸ் அனைத்து உறவுகளுமே வணிக உறவுகள் தான் என்று சொன்னார். உற்பத்தி முறைமைகள் மாறும் போது உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன.அவற்றை உறவுச் சிக்கல்களின் கதைகள் பிரதிபலிக்கின்றன.இன்று எழுதப்படும் கதைகள் அந்தச் சிக்கல்களை மேலும் விரிக்காமல் ஆராயாமல் இருக்கின்றன என்று ஜெயமோகன் சொல்கிறார் என்றால் அதில் உண்மை இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.ஆனால் வரலாறும் , தத்துவமும் , தொன்மமும், உளவியலும் அதை மேலும் விரித்து சொல்வதற்கான வழிகள் மட்டுமே.

தூயனின் டார்வினின் வால் தொகுப்பில் வரலாறும் ,  தொன்மமும் , உளவியலும் இருக்கின்றன. மிக அழகிய மொழியில் மிக தீர்க்கமான பார்வையோடு அமைந்திருக்கின்றன இந்தத் தொகுப்பின் கதைகள்.ஒரு எலியின் வாலை நறுக்குவதின் வழி ஒற்றை நனவலியிலியை கூட்டு நனவிலியிலிருந்து பிரிக்க முடியும்.சூழமைவிலிருந்து அதை தனியே பிரித்து விட்டால் அதனால் பின்னர் எந்தத் தொந்தரவும் இல்லை என்று செல்கிறது டார்வினின் வால் கதை.

டார்வினிய சோஷியலிசம் என்பதைப் பற்றி மேதகு வைஸ்ராய் திரு ராபர்ட் புல்வேர் லிட்டன் என்ற கதையிலும் எழுதியிருக்கிறார்.தக்கன வாழும்,  சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும் உயிரிகள் வாழும் என்ற டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டை இன்று நாம் சமூகத்திற்கு பொருந்திவிட்டோம்.டார்வினின் கோட்டுபாடு தான் இன்று முதலாளித்துவம் அளிக்கும் தனிமனித சுதந்திரம்.தனிமனித சுதந்திரத்திற்கு அளவே இல்லை என்பதே இன்றைய பொருள் உற்பத்தி தளத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய வன்முறை.

சமூகம் என்பது மனிதன் உருவாக்கிய ஒரு ஏற்பாடு.அதில் ரூசோ சொல்வது போல ஒரு சமூக ஒப்பந்தம் தேவைப்படுகிறது. தனிச்சொத்து , அதன் பாதுகாப்பு , இந்தளவு தான் தனிச்சொத்து இருக்க வேண்டும் , இந்த அளவு தான் ஏற்றத் தாழ்வு இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகள் இல்லாமல் யாரும் எப்படியும் பொருள் சேர்க்க முடியும் , சந்தை என்பது அனைவருக்குமானது என்கிற போது நிகழும் சமூக மாற்றங்கள் டார்வின் சொல்லும் பரிணாமவியல் கோட்பாடு அல்ல மாறாக மனிதன் உருவாக்கிய வன்முறை.

தூயன் ஆண் பெண் உறவை முதன்மையாக்கி லாஸ்யம் என்ற கதையை எழுதியிருக்கிறார். இந்தக் கதையின் சொல்முறை நன்றாக உள்ளது. தீப்பற்றிய கனவுகள் என்பது ஆத்மநாம் என்ற ஓவியரைப் பற்றியது.அவர் இறந்துவிட்டார் , தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் கதைநாயகன் தன் ஆய்வில் கீழைத்தேய மரபில் தோய்ந்த ஒருவன் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்கிறான்.அவனது நனவிலி கூட்டு நனவிலியில் இணைந்தே இருக்கிறது.அதன் வெளிப்பாடுகள் தான் அவனது கலை வடிவங்கள் என்கிறான்.அதைத் தான் தலைப்பு தீப்பற்றிய கனவுகள் என்கின்றது.

இந்திரஜாலம் குறுநாவல் ஒரு கதையாடலின் வழி எப்படி மக்களை ,ஊரை, குடும்பத்தை குழப்ப முடியும் என்று சொல்கிறது. இது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாற்றையும் தொன்மத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.நோய்ச் சொர்க்கம் ஒரு முதியவர் , நடுவயதுக்காரர் , இளைஞர் ஆகியோர் பற்றிய கதை.இவர்கள் எவருக்கும் பெயர்கள் இல்லை.ஞாபகமறதியால் தங்கள் அடையாளங்களைத் தொலைத்து விடுகிறார்கள். மையப்புள்ளி, அரை வட்ட வடிவம் என்று லத்தீன் அமெரிக்க கதைளில் வரும் முறைமைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேதகு வைஸ்ராய் கதையில் மதராஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பஞ்சம் அதற்கு வைஸ்ராய் லிட்டன் முன்வைக்கும் தீர்வுகள் பேசப்படுகின்றன.ஒரு பெருங்கதையாடல் நிகழும் அதே சூழலில் சிறுகதையாடல்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பெரும் முடிவுகளை எடுத்துக் கொண்டு இருப்பார்கள்.அதை இரகசியம் போலக் காப்பார்கள்.ஆனால் அவை கீழே அடித்தளத்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.அது எப்படி கசிகிறது என்று யாருக்கும் புரியாது. மேலும் முக்கியமான தருணங்களில் எடுக்கப்படும் முடிவுகள் , தீர்வுகள் மிகத் தற்செயலாக நிகழ்கின்றன.

தூயனின் கதைகள் மறுவாசிப்புக்கு உகந்தவை. கதைகள் சற்று நீளமாக இருக்கின்றன என்று தோன்றுகிறது.ஆனால் வாசிப்புக்கு அவை பெருந்தடையாக இல்லை. அவரின் பிற நூல்களையும் வாசிக்கும் போது அவரின் கதைவெளியை மேலும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

டார்வினின் வால் – தூயன் – எதிர் வெளியீடு.

புகைப்படம் - Julia Margaret Cameron/ Adam Cuerden - Alfred Steiglitz Collection reference 1949.881, Art Institute of Chicago, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=131628151



ஆப்பிளுக்கு முன்

 

சி.சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ஆப்பிளுக்கு முன்.2017யில் எழுதியிருக்கிறார்.அதற்கு முன் 2016யில் பிரசுரமான இறுதி இரவு என்ற சிறுகதைத் தொகுப்பு அவரது முதல் புனைவு நூல்.ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய கேன்வாஸை எடுத்துக்கொள்கிறது.கஸ்தூரிபாவின் மரணம், நவகாளி பயணம், காந்தியின் பரிசோதனைகள்,வங்காளப் பயணம், தேசப் பிரிவினை,மதக் கலவரங்கள், பிர்லா இல்லத்தில் காந்தியின் தங்கல், அங்கே நிகழ்ந்த மரணம்,காந்தியின் மரணத்திற்கு பிறகு மநு நிராதரவாக நிற்கும் நிலை என்று வரலாற்றின் முக்கியத் தருணங்களை பின்புலமாக கொண்டுள்ளது இந்த நாவல்.

இத்தகைய பின்புலமே நாவலுக்கான களத்தை தந்து விடுகிறது.பெரும்பாலும் நல்ல களம் அமைந்து விட்டால் நல்ல கதைகளை எழுதிவிடலாம்.களங்களும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் அவர்கள் செய்யும் பணிகளுமே ஒரு கதையின் முக்கியத் தளமாக இருக்கிறது.கதை அல்ல!இவற்றை ஒரு ஆசிரியர் சரியாக அமைத்துவிட்டால் அதற்கு மேல் அவரது மொழி வளமும் கற்பனையும் அவரது நோக்கும் கதையை தீர்மானிக்கின்றன.

ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய களத்தை கொண்டிருந்தாலும் விரித்து எழுதுவதை விட சுருக்கி எழுதும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.பொதுவாக இத்தகைய பண்புகளை சிறுகதைகளே கொண்டிருக்கும்.அவற்றில் தான் நாம் கோடிட்டு காட்டி விட்டு அடுத்த பகுதிக்கு சென்று விடுவோம்.இந்த நாவலில் அத்தகைய முறைதான் பின்பற்றப்பட்டுள்ளது.

நாவல் ஆகா கான் அரண்மனையில் காந்தி சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்திலிருந்து அவரது மரணம் வரையான காலம் வரை  பயணிக்கிறது.காந்திக்கும் மநுக்கும் இடையிலான பரிசோதனைகளும் அதை முன்னிட்டு அவர்கள் கொள்ளும் உரையாடல்களும் பிறர் அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்களுமே நாவலின் முன்தளத்தில் அமைந்திருக்கின்றன.மற்றவை அனைத்தும் பின்னணியில் நிகழ்கின்றன.பின்னணியில் நிகழ்பவை மீது எந்த இடத்திலும் கவனம் குவியவில்லை.இந்தப் பரிசோதனைகள் குறித்து நாவல் எந்த விதமான பார்வையையும் முன்வைக்க விரும்பவில்லை.அதை சரி என்ற திசைக்கும் நாவல் எடுத்துச்செல்லவில்லை.தவறு என்றும் சொல்லவில்லை.ஒரு வகையில் அதை பதிவு மட்டுமே செய்கிறது.அந்தப் பரிசோதனைகள் மநுவையும் காந்தியையும் பாதிக்கிறது.இவற்றால் மநு உளநிலை வெகுவாக பாதிப்புக்குள்ளாகிறது.அவள் காந்தி சொல்வதை முழுமையாக ஏற்கிறாள்.கிட்டத்தட்ட நிஷ்களங்கமான ஒரு குழந்தையின் இடத்திற்கு அவள் செல்கிறாள்.ஆனால் அதே நேரத்தில் அவளை சுற்றி உள்ளோரின் கேள்விகளாலும் அழுத்தங்களாலும் அவள் குழப்பம் கொள்கிறாள்.தக்கர் பாபா தன் உரையாடல் வழி மநுவிடம் வெற்றி பெறுகிறார்.ஆனால் அது தற்காலிகமான வெற்றியாக அமைகிறது.

காந்தி எப்போதும் பிறரின் கோணத்தை பொருட்படுத்தாமல் தான் வாழ்ந்திருக்கிறார்.அவர் மநுவிடம் தன் பரிசோதனைகள் பாதியிலேயே நின்றுவிட்டதால்தான் நவகாளியில் தன்னால் அமைதியை கொண்டு வர இயலவில்லை என்று சொல்கிறார்.அவர் எப்போதும் தனிமனிதனின் தூய்மை புறத்தை பாதிக்கிறது என்ற கொள்கையை கொண்டிருந்தார்.சிறு விஷயங்களில் மட்டுமல்ல மிகப்பெரிய கொள்கை முடிவுகளில் கூட அதையே பின்பற்றினார்.சாதிய வேறுபாடுகள் , தீண்டாமை , நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றில் அவர் உயர் குடிகளின் தூய்மையைத்தான் வலியுறுத்தினார்.ஒடுக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொள்வதை தவிர வேறு பணிகள் எதுவும் காந்தியின் செயல்திட்டத்தில் இல்லை.காந்தியை பின்பற்றி வினோபா பாவே பல நிலச்சுவான்தார்களிடமிருந்து நிலத்தை தானமாக பெற்றார்.ஆனால் பூதான்  இயக்கம் தோல்வி என்றே நாம் அறிகிறோம்.

காந்தி தன்னை ஒரு அன்னையாக மாற்றிக்கொள்ள விரும்பினார் என்ற பார்வை நாவலில் உரையாடல்களில் மநுவின் எண்ணங்களில் தொடர்ந்து வருகிறது.காந்திக்கும் மநுவுக்குமான உறவு பிறரால் புரிந்து கொள்ள இயலாத ஆன்மிகமான தளத்தில் அமைந்திருப்பதான கோணத்தை நாவல் முன்வைக்க விரும்பி உள்ள அதே நேரத்தில் அப்படியான ஒரு கோணத்தை முழுமையாக பதிவு செய்யவும் விரும்பவில்லை.காந்தியும் மநுவும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள்.அவர்களுக்குள் ஆழமான பற்று இருக்கிறது.இது நாவலில் நன்கு வெளிப்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்த உறவில் உள்ள நோய்மையும் மநுவின் சோர்வின் வழி புலனாகிறது.

எப்போதும் உறவுகளில் நாம் மிகப்பெரிய உரையாடல்களை விளக்கங்களை நமக்கோ பிறருக்கோ அளிக்காமல் இருக்க முடிந்தால் அந்த உறவு இயல்பானதாக இருப்பதாக உணரலாம்.காந்திக்கும் மநுவுக்குமான உறவு இயல்பானதாக இல்லை என்பதை அவர்களுக்குள்ளான உரையாடலும் பிறருடன் அவர்கள் கொள்ளும் வாதங்களும் உணர்த்துகின்றன.தக்கர் பாபாவுக்கும் காந்திக்கும், தக்கர் பாபாவுக்கு மநுவுக்குமான விவாதங்கள் நாவலின் மையமாக அமைந்திருக்கிறது.இந்த வாதங்களை கூர்மையானதாக முன்வைக்க நாவலாசிரியர் விரும்பியிருக்கிறார்.ஆனால் அந்த வாதங்கள் தோய்ந்து போன தோள்கள் போல அமைந்திருக்கின்றன.அந்த வாதங்கள் மிக எளிமையாக நிகழ்கின்றன.அவை எந்த உக்கிரமும் கோபமும் நாடகத்தனமும் பாவனைகளும் இல்லாமல் இருக்கின்றன. ஒப்புநோக்க சுஷீலாவுக்கும் மநுவுக்குமான பேச்சு நன்றாக அமைந்திருந்தன.

இந்த நாவலின் முடிவில் மநு பாவு என் அன்னை என்று எண்ணுகிறாள்.நாவல் இந்தப் பார்வையைத்தான் முன்வைக்க விரும்புகிறதா என்பது தெரியவில்லை.ஆனால் நாவலின் பயணம் இதற்கு மாறாக மநுவின் கையறு நிலையைத்தான் பதிவு செய்கிறது.இது காந்தியின் பரிசோதனைகள் என்பது பற்றிய நாவல் என்பதை விட மநுவின் கைவிடப்பட்ட நிலை பற்றிய நாவல் என்றே கொள்ள முடியும்.மிகப்பெரிய ஆளுமையின் முன் நாம் நம்மை முழுமையாக கரைத்துக்கொள்கிறோம்.அந்த ஆகிருதியின் நிழல் நமது நிழலை இல்லாமல் ஆக்குகிறது.நிழல் என்பது நமது அகங்காரம்.அந்த அகங்காரம் இல்லாத போது அந்த பேராளுமையின் பகுதியாக நாம் மாறுகிறோம்.பேராளுமையின் பகுதியாக இருக்கும் போது மகிழ்ச்சி இருக்கலாம்.குழப்பம் இருக்கலாம்.ஆனால் அந்தக் காலத்திற்கு பின்னர் அவை மிகுந்த மனச்சோர்வை மட்டுமே அளிக்கும்.நாம் பல ஆன்மிக மடங்களில் நிகழ்பவற்றை பற்றி படிக்கிறோம்.அவர்கள் எப்படி முழுமையாக மூளைச் சலவைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதை படித்து ஆச்சரியம் கொள்கிறோம்.அவை பெரும்பாலும் நமது விருப்பத்தாலேயே நிகழ்கிறது.நாம் நம்மை கரைத்துக்கொள்ள விரும்புகையிலேயே அத்தகைய சாத்தியங்கள் அரங்கேறுகின்றன.ஆனால் அவை குழப்பங்கள் ஊடேத்தான் நடக்கின்றன.

மநுவுக்கும் காந்திக்கும்  , காந்திக்கும் பிறருக்குமான பரிசோதனைகள் ஒரு வகை பாவனைகள்.அவை பாவனைகளாக இருப்பதாலேயே மனச்சோர்வு ஏற்படுகிறது.அவை இந்த நாவலில் பதிவாகி இருக்கிறது.மநுவின் வலியை பதிவு செய்த நாவலாக இதை பார்க்கத் தோன்றுகிறது.ஆப்பிளுக்கு முன் என்பது மனிதனுக்கு ஒரு போதும் சாத்தியம் ஆகாத இறந்தகாலம்.இந்த நாவலின் வெற்றி அதன் களம்.அதே நேரத்தில் நாவல் ஏதேனும் ஒரு கோணத்தை விரித்து எழுதியிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சி.சரவணகார்த்திகேயன் - ஆப்பிளுக்கு முன் - உயிர்மை வெளியீடு.

புகைப்படம் - https://www.bbc.com/news/world-asia-india-49848645

இடக்கை

 


எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல் ஒளரங்கசீப்பின் இறுதிக்காலத்திலிருந்து அவரது மரணத்திற்கு பின்னான காலம் வரையான காலமாற்றத்தை பற்றிய வரைவை அளிக்கிறது.நாவலில் தூமகேது என்ற ஒடுக்கப்பட்டவர் செய்யாத தவறுக்காக தண்டனை அளிக்கப்படுகிறார்.காலா என்ற சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.அவரின் தொழில் ஆட்டுத் தோலை பதப்படுத்துவது.சாமர் என்ற இனத்தை சேர்ந்தவர்.யாரோ ஒருவரின் ஆட்டைத் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.நிகிலி என்ற ஊரில் அவரின் மூதாதையர்கள் ஊரை துப்புரவு செய்வதற்காக அழைத்து வரப்படுகிறார்கள்.அவர்கள் சத்கர் என்ற நாட்டில் வாழ்கிறார்கள்.அந்த நாட்டின் அரசன் பிஷாடன் ஒரு மூடன்.நாவலின் இறுதியில் பிஷாடன் கண்கள் பிடுங்கப்பட்டு கைகால்கள் துண்டிக்கப்பட்டு இறக்க அனுமதிக்கப்படுகிறான்.சத்கரை தற்காலிகமாக ஆளும் ரெமியஸ் என்ற வணிகனை கிழக்கிந்திய கம்பெனி தூக்கிலிடுகிறது.சத்கரின் பஜார் விக்டோரியா பஜார் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.ஒளரங்கசீப்பின் மரணத்தின் பின்னர் டெல்லியில் நிலையான அரசு உருவாகவில்லை.முதலில் அவரது மூன்றாவது மகன் ஆட்சி பொறுப்பேற்கிறார்.பின்னர் பகதூர் ஷா ஆட்சிக்கு வருகிறார்.ஒளரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகு அவரது  பணிப்பெண்ணாக இருந்த அஜ்யா என்ற திருநங்கை சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.அவர் ஒளரங்கசீப் கொடுத்த புதையலின் ஆட்டுத் தோல் வரைப்படத்தை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.ஆனால் ஒளரங்கசீப் தான் கையால் தைத்த ஒரு குல்லாவையும் சிறிது தங்க நாணயங்களையும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.அந்த வேண்டுகோளை நிறைவேற்ற விரும்புகிறார் அஜ்யா.ஆனால் அந்த தங்கநாணயங்களை அஜ்யா நியமித்த பெண்ணிடமிருந்து ஒரு திருடன் பறித்து விடுகிறான்.அவர் புதையலுக்கான வரைப்படத்தை மறைத்து வைத்திருக்கிறார் என்று எண்ணுகிற அரசாங்கம் அவரை சிறையில் அடைத்து மரண தண்டனை அளிக்கிறது.நாவலில் மற்றொரு துணைக்கதையாக ஒரு படகோட்டியின் கதை வருகிறது.அவனுக்கு புதையல் கிடைக்கிறது.அவன் அதை வைத்து செல்வந்தனாக ஆகிறான்.ஆனால் அவன் இறுதியில் கடல் பயணத்தின் போது இறந்து போகிறான்.

இந்த நாவல் நீதி மறுக்கப்படுவதன் அவலத்தை பேசும் நாவல்.தூமகேது தன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து அனுபவித்த இன்னல்களை பதிவு செய்கிறது.ஆனால் நாவலின் முக்கியமான குறையாக நான் கருதுவது நாவலில் அனைவரும் வாழ்வின் பிரதான கேள்விகளான நீதி , மரணம் போன்றவற்றை பற்றி தொடர்ந்து பேசுவது தான்.அந்த பெயர்வு சட்டென்று நிகழ்கிறது.அது உரையாடல் வழி யதார்த்த தளத்திலிருந்து தத்துவத் தளத்திற்கு தர்க்க தளத்திற்கு மீபொருண்மை தளத்திற்கு செல்ல வேண்டும்.அது நாவலில் நிகழவில்லை.எந்தக் கதாபாத்திரமும் எதையும் பேசலாம் என்பது உண்மைதான்.ஆனால் அதற்கான சாத்தியங்களை அவர்களின் உரையாடல் தளம் உருவாக்க வேண்டும்.அது யதார்த்த தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு நகர்ந்து அங்கு அத்தகைய தத்துவ உரையாடல்கள் நிகழ வேண்டும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களில் யாமம்,நெடுங்குருதி,இடக்கை ஆகியவை முகலாய அரசின் இறுதிக் காலங்களிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னான காலம் வரையான காலகட்டத்தை பற்றியும் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எளிய மனிதர்களின் வாழ்வை பேசும் நாவல்களாகவும் இருக்கின்றன.அவரின் நாவல்கள் எளிய மனிதர்களின் வாழ்க்கையை தனித்த ஒன்றாக பேசுவதில்லை.அவர்களை அமைப்பின் மனிதர்களாகவே முன்வைக்கிறது.அவர்களின் வாழ்வில் நடப்பவை தற்செயலால் நிகழ்பவை அல்ல.அது அமைப்பின் சிக்கல்களால் நடக்கின்றன.உதாரணமாக தூமகேது ஆட்டைத் திருடிவிட்டான் என்று குற்றம் சாட்டப்படுகிறான்.குற்றம் சாட்டப்படுவது பிழையில்லை.ஆனால் அந்த அமைப்பில் அவன் குற்றமற்றவன் என்று நிரூபித்து வெளியேறுவதற்கான சாளரங்களே இல்லை.அது பிழை.பிஷாடன் என்ற மூடனுக்கு அது குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லை.அதனால் தான் தூமகேது அவதிப்படுகிறான்.இந்த அமைப்பை பிரதிநித்துவப் படுத்துபவனாகத்தான் தூமகேது வருகிறான்.ஓர் ஒடுக்கப்பட்டவனை பிரிதிநித்துவப் படுத்தி அதன் வழி அந்தக் காலகட்டத்தின் நீதியை அரசாங்கத்தை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை பேசும் நாவலாக இடக்கை அமைகிறது.அதை போலவே அவரின் மற்ற நாவல்களையும் நாம் பார்க்க முடியும்.அவை தனிமனிதர்களின் வாதைகளை பேசும் நாவல்கள் அல்ல.அவை அமைப்பின் மனிதர்களை பிரதிநித்துவப்படுத்தும் நாவல்கள்.

நெடுங்குருதியில் வரும் குற்றப் பரம்பரையினர், யாமம் நாவலில் வரும் சென்னை நகரவாசிகள்,இடக்கையில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள்,உறுபதி நாவலில் வரும் சம்பத் அனைவரும் உதிரி மனிதர்கள் என்று தோற்றம் உருவாக்கப்படுகிறது.ஆனால் அவர்கள் யாரும் தனிமனிதர்கள் அல்ல, உதிரி மனிதர்களும் அல்ல.நெடுங்குருதியில் வேம்பலை மறுபடி மறுபடி அந்த மனிதர்களை தன் மாயக் கரங்களால் தன் வசம் இழுத்துக்கொள்கிறது.அவர்களால் அந்த அமைப்பிலிருந்து வெளியேற முடியவில்லை.எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் தனிமனிதர்களை விதத்தோதவோ அவர்களின் வீழ்ச்சியை கழிவிரக்கத்துடன் முன்வைக்கவோ முயற்சிப்பதில்லை.அவர் எந்த சிக்கலையும் தொன்மத்துடன் இணைப்பதில்லை.எந்த தனிமனிதனும் தன் உளவியல் சிக்கலுக்கான யதார்த்த வாழ்வின் சிக்கலுக்கான விடையை தொன்மத்தில் கண்டடைவதில்லை.அவரது நாவல்கள் அந்த நாவல் முன்வைக்கும் அமைப்பில் நிகழ சாத்தியமானவற்றை கதாபாத்திரங்கள் வழி பிரதிநித்துவப் படுத்துகிறது.அதன் வழி அந்த அமைப்பை ஆராய்கிறது.தீவிரமாக விமர்சிக்கிறது.அதுவே எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களின் தளமாக அமைகிறது. 

 

பெளத்தமும் விஷ்ணுபுரமும்


நாகார்ஜூனரும் அவர் சீடர் ஆரியதேவரும்


ஜெயமோகன் விஷ்ணுபுரம் நூலை எழுதிய பின்னர் அதில் கெளஸ்துபம் பகுதியில் வரும் தத்துவ விவதாங்களை பற்றி அறிமுகத்தை உருவாக்கும் பொருட்டு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை எழுதினார்.அதே கெளஸ்துபம் பகுதியில் வரும் பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதியுள்ள நூல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்தக் கருத்துக்கள்”.கிருஷ்ணன் இந்த நூலில் விஷ்ணுபுரத்தின் கெளதுஸ்பம் பகுதியில் வரும் பெளத்த கருத்துக்களை பற்றி மட்டும் தன் மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.அதன் மற்ற பகுதிகளான ஸ்ரீபாதம் மற்றும் மணிமுடி பற்றி அவர் இலக்கியரீதியிலான விமர்சனம் எதையும் முன்வைக்கவில்லை.

பெளத்தத்தின் பிரிவுகளான வைபாஷிகம் , மத்தியமிகம், யோகாசாரம் ஆகிய தரிசனங்கள் ஞான சபையில் விவாதிக்கப்படுகிறது.வைபாஷிக மரபினைச் சார்ந்த பிட்சு நாகநந்த மகாபாதர் வாதத்தின் முதல் கேள்வியாக “பவதத்தரே தங்கள் தருக்கத்தில் ஆத்மா பற்றிய கருத்து என்ன?” என்கிறார்.அதற்கு பவதத்தர் கீழ் வரும் பதிலை அளிக்கிறார்.

“அன்னமயகோசத்தின் உள்ளே பிராண , அசுத்த , சுத்த , ஆனந்த , சின்மய கோசாங்களைத் தாண்டி உட்சென்றால் தெரியும் சதானந்த கோசமே ஆத்மாவாகும்.அது தூய பிரகாசம் கொண்டது.புலன்களின்றியே தன்னை உணர்வது.எந்த வடிவில் பிரம்மம் உள்ளதோ அந்த வடிவமே அதற்கும்.பிரமாண்டத்தின் ஆத்மா பிரம்மம்.உடலின் பிரம்மமே ஆத்மா.அவை வேறு வேறு அல்ல.ஏழு உலகங்களும், ஏழு கோசங்களும் பிரம்மத்தையும் ஆத்மாவையும் பிரதிபலிக்கின்றன.அவை அசத் என அறிந்தவன் பிரம்மமும் , ஆத்மாவுமே சத் என்று அறிவான்.ஆத்ம தரிசனம் பிரம்மதரிசனமேயாகும்.ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது.பனித்துளிகள் எல்லாமே சூரியனை பிரதிபலிக்கின்றன.ஆத்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பேயாகும்.” என்று பதில் அளிக்கிறார்.

இங்கே பவதத்தர் அளிக்கும் விளக்கும் ஆதி வேதாந்த தரிசனம்.பிற்கால வேதாந்தங்களான அத்வைதமும் இதே பார்வையை தான் முன்வைக்கிறது.பெளத்த வைபாஷிக பிரிவை சார்ந்த நாகநந்தரிடம் பவதத்தர் புலன்களின் தர்மத்தையும் மகாதர்மத்தையும் இணைத்து கேள்வி கேட்டு ஒரே தர்மம் ஏன் ஆசைகளையும் துக்கங்களையும் உருவாக்கவும்,அவற்றை அழிக்க காரணமாக அமையவும் வேண்டும் என்கிறார்.இதற்கான பதிலை சரியாக நாகநந்தரால் கூற முடியவில்லை.

கிருஷ்ணன் இங்கு சிறிய எழுத்து தர்மம் மகாதர்மம் ஆகியவற்றை பற்றிய விளக்கத்தை அளிக்கிறார்.பால் தர்மம்.தயிர் தர்மம்.பால் தயிராக மாறுவது மகாதர்மம்.பால்தான் தயிராக முடியும்.தண்ணீர் அல்ல.இந்த மகாதர்மம் என்பது இரு பொருட்களின் தர்மத்தையும் புறத்தையும் கொண்டு உருவாகும் நியதி.இதுவே மகாதர்மம்.பொருட்களின் உள்ளார்ந்த தர்மங்களும் புற உலகமும் முயங்கியே அடுத்த நிலை நிகழ்கிறது.நீர் வழி படூஉம் புனை போல என்ற புறநானூற்று பாடல் முன்வைக்கும் ஆஜிவிக தரிசனம் முழு நிர்னயவாதம்.ஆனால் பெளத்தம் முன்வைக்கும் மகாதர்மம் சார்புநிலை நிர்னயவாதம்.

இரண்டாவதாக நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தை முன்வைத்து சூனியவாதியான மகாநாமர் ஞான சபையில் விவாதம் செய்கிறார்.பவதத்தர் மனிதப் பிரக்ஞையை ஏற்கிறீர்களா என்று மகாநாமரை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.பருப்பிரபஞ்சம் பற்றியும் அதே கேள்வியை கேட்கிறார்.இல்லை என்கிறார் மகாநாமர்.அப்படியென்றால் சூனியத்தை சூனியம் பார்க்கும் போது எப்படி பருப்பிரமை விளைந்தது என்று கேள்வி கேட்கிறார்.அதற்கு மகாநாமர் அறியமுடியாமையே இறுதி விடையாக இருக்க முடியும் என்கிறார்.அறியமுடியாமை என்பது கூற முடியாமை.நியாய மரபுப்படி விவாதத்தை விட்டு விலகிவிட்டீர்கள் என்று சொல்லி அவரை வாதத்தில் முறியடிக்கிறார்.

விவாதத்தின் தொடகத்தில் மகாநாமர் சூனியவாதம் பற்றி விளக்கம் அளிக்கிறார்.அறிபடு பொருள் , அறியும் பொருள், அறிவு ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்தவை என்கிறார்.மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது என்கிறார்.பின்னர் அவரே இம்மூன்றும் இல்லை என்கிறார்.எதுவுமே இல்லை என்கிறார்.முதல் விளக்கமும் அடுத்த விளக்கமும் முரணாக இருக்கிறது.அமைப்பியம் எதுவுமே அது அதன் சூழமைவால் தான் அர்த்தம் கொள்ளப்படுகிறது என்கிறது.அதாவது சாலையில் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு அது பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய பிறவற்றோடு இருக்கும் சூழமைவால் தான் வாகனத்தை நிறுத்தவேண்டும் என்ற அர்த்தம் கொள்கிறது.தனியாக சிவப்பு நிறத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை.அதற்காக அவை இல்லை என்று பொருள் கொள்ள இயலாது.இதுவே சூன்யவாதத்திற்கும் பொருந்தும்.தனியாக பொருட்கள் இல்லை.அல்லது தனியாக அவற்றை அர்த்தம் கொள்ள இயலாது.

பெளத்தம் பிரத்யட்சம் , அனுமானத்தை அறிதல் முறைகளாக கொள்கிறது.சுருதியை அது அறிதல்முறையாக கொள்ளவில்லை.அப்படியாக அது வேதத்தை நிராகரிக்கிறது.ஆன்மாயின்மை,நிலையின்மை,நிறைவின்மை ஆகியவையே பெளத்தம் முன்வைக்கும் வாழ்வின் மூன்று உண்மைத் தன்மைகள்.இந்த உலகில் தனித்த பேரிருப்பு என்று எதுவும் இல்லை.மகாதர்மம் தனித்த பேரிருப்பு அல்ல.அது எதையும் இயக்குவதில்லை.இயக்கத்தின் நியதியை சுட்டுவதற்கான தொகுப்பு பெயரே மகாதர்மம்.மகாதர்மம் பொருட்களின் இயங்குதளத்திலேயே வெளிப்படுகிறது.அதனால் மகாதர்மம் பிரம்மம் அல்ல.அது எதையும் உருவாக்கவில்லை.

மூன்றாவதாக பெளத்தத்தின் யோகாசார தரிசனத்தை சார்ந்த அஜிதன் ஞான சபை விவாதத்தில் தன் தரப்பை முன்வைக்கிறான்.வசுபந்தர் அசங்கர் ஆகிய ஞானிகளின் வழிவந்த திக்நாகரின் சீடன் அஜிதன்.திக்நாகர் முன்வைக்கும் யோகாசாரம் விஞ்ஞானவாதம் என்றும் சொல்லப்படுகிறது.சித்தம் மாத்திரம் உள்ளது என்னும் மெய்ஞான மரபு.அதாவது காட்சிப் பிரபஞ்சம் மனதால் மட்டுமே உருவாகுகிறது.இங்குள்ள அனைத்து மனங்களும் இணைந்த ஒட்டுமொத்த மனமே பிரபஞ்தத்தை உருவாக்குகிறது.அதையே ஆலய விஞ்ஞானம் என்று வசுபந்து நிலைநாட்டுகிறார் என்கிறான் அஜிதன்.புறப்பொருட்கள் கனம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது.மாறிக்கொண்டே இருக்கும் பொருளின் ஒரு சுட்டுப் பெயர் நாம் அந்த பொருளுக்கு வழங்குவது.எந்தப் பொருளும் அதன் நிறைவில் இல்லை.நிறைவில் இல்லாத பொருள் இல்லை என்றே கொள்ளப்படும்.ஆகையால் நாம் பொருளாக உணர்வது நம் மனத்தால் தான் என்கிறான் அஜிதன்.சூன்யவாதம் அறிபவன், அறிபடு பொருள், அறியும் பொருள் ஆகியவற்றின் சார்பு நிலையிலேயே நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொல்வதற்கு மாற்றாக யோகாசாரம் மனம் மட்டுமே உள்ளது மற்றவை இல்லை என்ற இடத்திற்கு நகர்கிறது.மேலும் அனைத்து மன விஞ்ஞானங்களும் இனைந்த ஒட்டுமொத்த மனமே ஆலய விஞ்ஞானம் என்றும் அந்த ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்து எழுந்தது என்றும் சொல்கிறான்.மேலும் காலமே மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என நம் கண்முன் எழுந்தருளுகிறது என்று கால தரிசன சூத்ரம் பற்றி சொல்கிறான்.இதில் காலத்தை நேர்கோடாக கொள்ளலாகாது என்றும் , அதை சூழற்சியாக கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான்.அஜிதன் வாதத்தில் வெற்றி பெறுகிறான்.விஷ்ணுபுரத்தின் ஞானாதிபதாயாக பதவி ஏற்கிறான் அஜிதன்.சந்திரகீர்த்தி நகரை ஆள்கிறான்.பெளத்த ஆட்சி அடுத்த இரு நூறு ஆண்டுகள் விஷ்ணுபுர நகரை ஆள்கிறது.

கிருஷ்ணன் தன் நூலில் பெரும்பாலும் நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனத்தையும் விளக்கியும் விஞ்ஞானவாதத்தை மறுத்தும் தன் வாதத்தை முன்னெடுக்கிறார்.இந்த நூலில் அவர் இரண்டு விஷயங்களை செய்கிறார்.ஒன்று விஷ்ணுபுரம் நாவலில் மத்தியமிக தரிசனத்தை பற்றி சொல்லப்பட்டுள்ளதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி அதை விளக்கி அதுவே சரியான தரிசனம் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.மற்றது விஷ்ணுபுரம் நாவலில் வரும் அஜிதன் சொல்லும் விஞ்ஞானவாதத்தை மறுத்து அளிக்கும் விளக்கங்கள்.மறுபுறம் திக்நாகர் முன்வைக்கும் விஞ்ஞானவாதத்தையும் மறுக்கிறார்.அதாவது நாவலில் விஞ்ஞானவாதத்தை அஜிதன் முன்வைக்கும் போது செய்யும் வாதங்களில் உள்ள பிழைகளையும் சொல்கிறார்.அதே நேரத்தில் விஞ்ஞானவாதமும் பிழையான வாதம் என்கிறார்.

விஞ்ஞானவாதம் மனம் மட்டுமே உள்ளது என்கிறது.ஆலய விஞ்ஞானம் மகாதர்மத்திலிருந்த எழுந்த ஒன்று என்று அஜிதன் கூறுகிறான்.மகாதர்மம் தனித்த பேரிருப்பு என்கிறான்.காலம் மகாதர்மத்தின் ஆடிபிம்பம் என்கிறான்.இதற்கு கிருஷ்ணன் கீழ்க்கண்ட மறுப்புகளை சொல்கிறார்.

1. விஞ்ஞானம் எனும் கூட்டு ஏழு உணர்வுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.அவை:

அ  - ஐந்து அடிப்படைப் புலனுணர்வுகள்
ஆ - மன உணர்வுகள்(எண்ணங்களால் உருவானவை)
இ  - பகுத்து ஆராய்ந்தறியும் அறிவு,புத்தி(Intellectual discriminating consiousness)
ஈ   - எட்டாவதாக ஆலய விஞ்ஞானம் விளக்கப்படுகிறது.

இறுதியாக சொல்லப்பட்டுள்ள ஆலய விஞ்ஞானம் வெளியுணர்வுக்கு வராமல் உள்மன ஆழத்தில் உறைந்திருக்கும் வேட்கைகளும் மற்றும் குணங்களுமாகிய சக்திகளை அதாவது புருஷர் என்று கூறப்படுபவரின் சாரமாக இருக்கும் இந்த சக்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.ஒவ்வொரு உயிரையும் உந்தி இயக்கும் சக்திகளாகிய 
  • பவதண்ஹா(வாழவேண்டும், இப்பிடியாக வேண்டும், அப்படியாக வேண்டும் என்ற வேட்கை)
  • காமதண்ஹா(இன்ப வேட்கை)
  • விபவதண்ஹா(அழிவு வேட்கை) 
ஆகிய இச்சாசக்திகளின் மற்றும் குணங்களாகிய சக்திகளின் ஒரு கூட்டே இந்த ஆலய விஞ்ஞானம்.
2. காரணங்களையும் சூழ்நிலைகளையும் ஆதரவுகளையும் சார்ந்து ஒவ்வொன்றும் எவ்வாறு தோன்றுகின்றது,மாறுகின்றது,மறைகின்றது என்பதை நிர்னயிக்கும் இயற்கை விதிகளின் தொகுப்புதான் தர்மம்.பிரபஞ்சத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கும் ருது நியமம்,பீஜா நியமம்,கம்ம நியமம்,சித்த நியமம் மற்றும் தம்ம நியமம் ஆகிய ஐந்து நியமத் தொகுதிகள் ஒன்றோடொன்று பின்னியிணைந்துள்ளது.இவ்வாறு இணைந்துள்ள தொகுதிகளில் அடங்கும் இயற்கை விதிகளின் சார்புடைமையையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கும் அடிப்படை விதிகளின் தொகுப்பே மகாதர்மம்.

3. மகாதர்மம் ஆலய விஞ்ஞானம் எப்படிப் பரிணமிக்கின்றது என்று அதன் பரிணாமப் படிமுறையை நிர்ணயிக்கிறது.அது ஆலய விஞ்ஞானத்தை உண்டாக்குவதில்லை.

4. அஜிதன் கூறும் காலச்சக்கர தரிசனம் பற்றி இந்த விளக்கத்தை அளிக்கிறார்.

  1. வண்டுதான் வட்டப்பாதையை இயக்குகின்றதே ஒழிய வட்டப்பாதை வண்டை இயக்குவதில்லை.தன்னிச்சையாகச் செயல்படும் வண்டு சில கட்டுப்பாடுகளுக்கும் நியதிகளுக்கும் ஆட்பட்டுள்ளது என்பது உண்மையே.ஆனால் அதைக்கொண்டு வட்டப்பாதை வண்டை இயக்குகின்றது என்று கூறுவது போலியான வாதம்.அது போலவே வாழ்க்கைச் சக்கரம் ஆலய விஞ்ஞானத்தை இயக்குவதில்லை என்பதும் , ஆலய விஞ்ஞானத்தை ஆக்கும் பேராசைகளும் , பற்றுகளும்தான் வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்றும் விசைகளாக இருக்கின்றன.ஆலய விஞ்ஞானத்தின் பரிணாமச் சுழற்சியே வாழ்க்கைச் சக்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது. 
  2. காலம் நீண்டுகொண்டுதான் போகிறது.சுழல்வதில்லை.சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தம் மையக்கோட்டையும் சுற்றிச் சுழல்கின்றன.ஆகையால் , பகலும் இரவும் மாறிமாறி உண்டாகின்றன.பகல் இரவாகிறது.இரவு பகலாகிறது.பிறப்பு,இறப்பு,மறுபிறப்பு,மறுஇறப்பு என்று வாழ்க்கைச் சக்கரமே சுழன்று கொண்டேயிக்கின்றது.வாழ்க்கைச் சக்கரமே காலச்சக்கரமாகவும் உருவகிக்கப்படுகின்றது என்பது பொருத்தமாக இருக்கும்.
  3. வஜ்ஜிரயான பெளத்தம் கூறும் காலச்சக்கர தரிசனத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் அது புற உலகையும் அக உலகையும் ஆராய்ந்து பார்த்து இயக்கத்தில் இரண்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைக் காட்டுகின்றது.அண்டத்தின் உருவாகவே பிண்டமும் இருக்கின்றது.பிரபஞ்சங்களும் சூரிய குடும்பங்களும் ஏன் விண்வெளியில் சுழலும் அனைத்துமே , பிறப்பு , வளர்ச்சி, தேய்வு , மரணம் என்று தொடர்ந்து நிகழ்கின்ற வட்டச் சுழற்சிகளுக்கு ஆட்பட்டவைதான்.கோள்களின் சுழற்சிகளை ஆராய்ந்து பார்த்து அவற்றின் அடிப்படையில் நாட்களையும் மாதங்களையும் வருடங்களையும் கணிப்பதற்கு காலச்சக்கர தரிசனம் ஒரு தனிச்சிறப்பான முறையை வகுத்து வழங்கியுள்ளது.
  4. காலத்தையும் வஜ்ஜிராயன பெளத்தம் ஒரு தெய்வமாக உருவகித்து வழிபடுகின்றது.ஆனால் இதிலிருந்து வஜ்ஜிராயன பெளத்தம் காலத்தை ஒரு ஆதிமாகசக்தியாக , தனிப்பெரும் பொருளாக ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூற முடியாது.
அஜிதன் மனம் மட்டுமே உள்ளது என்கிறான்.பவதத்தர் உள்ளது சத் மற்றதெல்லாம் அசத் என்கிறார்.இரண்டுமே புற உலகை இல்லை அல்லது மாயை என்று ஏற்கிறது.வசுபந்தர் அசங்கர் வழி திக்நாகர் உருவாக்கிய யோகாசாரம் என்ற தரிசனம் விஞ்ஞானவாதத்தை முன்வைத்தது.பின்னர் கெளடபாதர் யோகாசாரம் சார்ந்து தன் தத்துவத்தை உருவாக்குகிறார்.அவரின் வழி வரும் சீடரான ஆதிசங்கரர் அத்வைத்தை முன்வைக்கிறார்.இருப்பது பிரம்மம் மட்டுமே மற்றதனைத்தும் மாயை என்று சொல்கிறார்.பவதத்தர் ஆதிசங்கரர் சொல்வதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறார்.அஜிதனும் அதையே தான் மனம் என்று சொல்கிறான்.அப்படியென்றால் அத்வைத தரிசனமே பல்வேறு வடிவங்களில் பெளத்தமாகவும் வேறு பல தரிசனங்களாவும் இங்கு ஞானத்தளத்தில் இருக்கிறது என்ற பார்வையை ஜெயமோகன் உருவாக்குகிறாரா என்று கிருஷ்ணன் கேள்வி எழுப்புகிறார்.அப்படியென்றால் இரண்டு தரிசனங்களுக்குமான வித்யாசம் வெறும் சொற்பிரயோகங்கள் சார்ந்த்து மட்டும்தானா.அந்த சொற்கறால் நிகழும் தர்க்கரீதியான போர் மட்டுமே இந்த விவாதங்கள் , மற்றபடி எல்லாம் ஒன்றுதான் என்ற பார்வையைத்தான் விஷ்ணுபுரத்தின் கெளஸ்துபம் பகுதி முன்வைக்கிறதா என்று கிருஷ்ணன் வினவுகிறார்.

ஆதிசங்கரர்

பெளத்ததில் பல்வேறு தரிசனங்கள் இருக்கும் போது ஏன் அத்வைத்தத்தின் முந்தைய வடிவமாக கருதப்படும் யோகாசாரம் விஷ்ணுபுரத்தில் ஞானசபையில் வெற்றி பெறும் தத்துவமாக புனையப்பட்டுள்ளது என்ற கேள்வி சரியான கேள்விதான்.அது மத்தியமிகமாகவோ அல்லது வைபாஷிகமாக இருந்திருக்கலாம்.ஆனால் இந்த யோகாசாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் அது அத்வைதத்தின் முந்தைய வடிவம் என்பதால் தானா என்பதே ஓட்டுமொத்தமாக கிருஷ்ணனின் புத்தகத்தில் எழுப்பப்படும் கேள்வி.தெரியவில்லை.

ஆனால் மணிமுடி பகுதியில் விஷ்ணுபுரம் நகரின் செம்பர் குல மூப்பன் விஷ்ணுவாக வீற்றிருப்பது செம்பர் குலத்தில் நீலமூப்பன்தான் என்கிறார்.தொடர்ந்து மூப்பன் செம்பர் குல மரபின் தொன்மத்தை விளக்குகிறார்.இதற்கும் ஆதி வேதாந்தந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.அது மூத்தார் வழிபாடு.அந்த செம்பர் குல மூப்பன் சொல்வது போலத்தான் நாவல் முடிவடைகிறது.பிரளயம் வருகிறது.நான்கு பக்கமும் இதழ்கள் விரிய அதிபிரமாண்டமான ஒரு தாமரை மலர் அதன் நடுவே கரிய பீடத்தில் வேததத்தன் அமர்ந்திருக்க , வேதத்தனை தாமரை இதழ்கள் பொதிந்து மூடிக்கொள்கிறது.இவற்றை படிக்கும் போது விஷ்ணுபுரம் நாவல் எந்த தரப்பையும் முன்வைக்கவில்லை என்று சொல்ல முடியும்.பழங்குடி செம்பர் சமூகம் , அவர்களின் தொன்மம், அதன் வழி உருவாகும் சடங்குகள், அந்த ஊர்களை பேரரசுகள் கைப்பற்றுவது, அப்போது பழங்குடிகள் ஊரை விட்டு வெளியேறுவது, அவர்களின் தெய்வங்கள் பேரரசின் தெய்வமாக மாறுவது , அந்த தொன்மம் ஒரு தரிசனமாக மாறுவது என்று இது ஒரு வரலாற்று பார்வையையும் முன்வைக்கிறது.மேலும் விஷ்ணுபுரம் நாவலில் வரும் சங்கர்ஷணனின் மகாபத்மபுராணம் இந்த விஷ்ணுபுரம் நாவலையே போலச்செய்து காட்டுகிறது.அது ஒரு காவியம்.விஷ்ணுபுரமும் ஒரு காவியமாக முன்வைக்கப்படுகிறது.இதில் எந்த தரப்பையும் தனித்தரப்பாக கொள்ள முடியாது.வைணவத்தில் பெரும் தொன்மமாக இருக்கும் நம்மாழ்வார் ஸ்ரீபாத பகுதியில் பயங்கரமாக பகடி செய்யப்படுகிறார்.பவதத்தரின் மகனான விஷ்ணுதத்தன் பின்னர் சித்தனாகிறான்.அவன் எல்லா தரிசனங்களும் உண்மையே.ஆனால் தர்க்கத்தளத்தில் அது வெறும் சொற்போராக மட்டுமே இருக்கும் என்கிறான்.ஏனேனில் அந்த தரிசனங்களை ஒரு எல்லை வரை மட்டுமே மொழியால் விளக்க முடியும் என்று காசியபனுக்கு சொல்கிறான்.

இருந்தபோதும் கெளஸ்துபம் பகுதியில் அநேகமாக வெற்றிபெறுவதும் ஒன்றுதான் தோல்வியடைவதும் ஒன்றுதான் என்ற பார்வை ஏன் வைக்கப்படுகிறது, ஏன் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் வேறு வேறாக இருக்கக்கூடாது என்ற கேள்வி முக்கியமானதுதான்.ஆதி வேதாந்தமும் பெளத்தமும் ஒன்று தான் என்ற பார்வை இங்கே முன்வைக்கப்படுகிறது.இது அவசியமற்றது.பெளத்தம் வேறு ஆதி வேதாந்தம் வேறு.பெளத்தமும் மத்தியமிகமும் தன் பார்வையை வேதாந்தம் வழி பெறவில்லை.வேதங்களை அவை அறிதல் முறையாக ஏற்கவில்லை.இது பல தளங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை காணமுடிகிறது.

இந்த நாவல் வரும் காலம் ஐந்தாம் நூற்றாண்டிலருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரையானதாக இருக்கலாம் என்கிறார் கிருஷ்ணன்.பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை விஷ்ணுபுரம் நாவலை வாசித்தேன்.அப்போது மணிமுடி பகுதியில் ஸ்ரீபாத பகுதியில் வருபவர்கள் ஐதீகங்களாக தொன்மங்களாக கதைகளாக தரிசனங்களாக மாறிவிடுவார்கள்.எனக்கு அது மட்டும் ஈர்த்தது.ஆனால் கிருஷ்ணனின் இந்த நூலை வாசிப்பதற்காக விஷ்ணுபுரத்தை மீள்வாசிப்பு செய்த போது இந்த நாவலின் கட்டமைப்பு, சொற் வளம்,அதன் கனவுத்தன்மை அனைத்தும் மிகவும் ஈர்ப்பத்தாக இருந்தது.ஜெயமோகனுக்கு யானைகளை பற்றி சொல்லி மாளவில்லை.ஸ்ரீபாத பகுதியில் வீரன் என்ற யானை பற்றியும் , இரண்டாம் பகுதியில் அங்காரகன் என்ற யானை பற்றியும் அத்தனை விரிவாக எழுதுகிறார்.ஒரு குழுந்தையின் குதூகுலத்துடன் யானைகளை கண்டு ரசித்தியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும்.அதை எழுதி எழுதித்தான் தீர்க்க முடியும்.எழுதினாலும் தீராது போலும்.இரண்டாம் பாகத்தில் பிராமணர்கள் உணவு உண்ணும் பகுதி நாவலின் மிகச்சிறந்த புனைவுப் பகுதி.நாவலில் தொடர்ந்து ஜெயமோகன் வைதீக மரபு சாதி அடிப்படையில் தண்டனைகளை வழங்கிய விதம்,சூர்யதத்தரின் கொடுங்கோல் ஆட்சி,லெளகீகத்தளத்திற்கு வெளியே எதும் அறியாத பிரமாணர்களின் அக்கறையின்மை என்று தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.சந்திரகீர்த்தியின் பெளத்த ஆட்சி காலத்தில் அத்தனை ஆயிரம் இரவலர்கள் உணவு அருந்த வரும் காட்சியை பார்க்கும் நரோபா இந்த நகரத்தில் இத்தனை இரவலர்களாக என்று வியக்கிறான்.இவர்களுக்கு பெளத்த ஆட்சியில் தான் நகருக்குள் வந்து அண்ணவிகாரத்தில் உணவு அருந்த உரிமை வந்தது என்றும் அதற்கு முன்னர் ஆயிரம் வருடங்களாக மகாமுற்றங்களில் இந்த மக்களுக்கு அனுமதி இருந்ததில்லை என்பதும் சொல்லப்படுகிறது.

திருவடி, பிங்கலன் வழி காமம் மனிதனின் ஆதார விசை என்ற பார்வை நாவலில் வருகிறது.திருவடி லலிதாங்கி என்ற இளம் தாசிப்பெண்னை அத்தனை நெருக்கமாக பார்க்கிறான்.அவளின் முழுங்கையில் மெல்லிய மயிர்கள் இருப்பதைக் காண்கிறான்.வீரன் என்ற யானை மதம் கொண்டு தெருவில் அலைவதால் அங்கே பெருங்குழப்பம் ஏற்படுகிறது.மக்கள் கூட்டம் சிதறிச்செல்கிறது.அந்தக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ளும் லலிதாங்கியை பத்திரமாக அவள் இல்லம் சென்று சேர்க்கிறான் திருவடி.பின்னர் அவன் ஒரு போதும் சமநிலைக்கு திரும்புவதில்லை.அவன் தினமும் அவள் இல்லம் இருக்கும் கணியைகர் தெருக்கு சென்று அங்கு நின்று பாடித்திரும்புகிறான்.அவன் தன் பாடல்களில் பரிபூரண சுய அழிப்பை அடைகிறான்.அது ஒரு உன்மத்த உளறல் என்று மணிமுடி பகுதியில் மாதவன் எண்ணிக்கொள்கிறான்.அவன் திருவடி ஆழ்வார் ஆகிறான்.சாதி கடந்த திருமணங்களை செய்து வைக்கிறான்.லலிதாங்கி திருவடிக்கு ஒரு நிமித்தம் மட்டுமே.அவன் இசையின் வழி பாடல்களின் வழி அங்கிருந்து வெகுதூரம் மானுடம் தழுவும் தரிசனம் நோக்கி செல்கிறான்.ஒரு ஆதித்துயர்.ஆனால் அதன் ஆதார விசை காமம்.இது பிங்கலன் விஷயத்திலும் நிகழ்கிறது.அவன் லட்சுமி என்ற சங்கர்ஷணனின் மனைவியுடன் கொள்ளும் உறவின் வழி தன் தரிசனத்தை அடைகிறான்.அதை யோக சக்கரமாக வளர்தெடுத்து யோனியை அதன் மையமாக உருவகிக்கிறான்.மற்றவை அனைத்தும் ஸ்திரீலிங்கமாகவும் புருஷலிங்கமாவும் உருவகிக்கிறான்.ஆனால் பின்னர் வஜ்ராயன பெளத்தத்தில் ஒரு கூறாக இணைக்கப்பட்ட யோகசக்கரத்தில் நிகழ்ந்த திரிபுகளும் இழிவான பயிற்சிகளுமே ஒருவகையில் இந்தியாவில் பெளத்தத்தின் சீர்கேட்டிற்கும் அவப்பெயருக்கும் இறுதியில் அதன் வீழ்ச்சிக்கும் மறைவுக்கும் காரணங்களாயின என்கிறார் கிருஷ்ணன்.

எனக்கு இந்த நாவலையும் கிருஷ்ணனின் விமர்சன நூலையும் வாசிக்கும் போது ஒரு விஷயம் முக்கியமாக பட்டது.சுயம் சுயமின்மை.அத்வைதம் ஆன்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பு என்கிறது.ஆன்மா அழிவற்றது என்கிறது.பிரம்மம் X பிரபஞ்ச மாயை என்ற இரு நிலைகளை போல அழிவற்ற ஆன்மா X அழிந்துபோகும் உடல் என்ற இருநிலைகளும் அதில் இருக்கிறது.அழிந்துபோகும் உடல் இழிவானது , அதனால் உடல் உழைப்பு கீழானது , உடல் உழைப்பாளிகள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் இதிலிருந்து வந்திருக்கலாம்.மேலும் நானே சச்சிதானந்த சொரூபம் என்பதில் நான் என்ற சுயம் மேலெழுகிறது.அதுவே தன்னை,தன் மொழியை , தன் இனத்தை , தன் சேத்தை , தன்னலத்தை முன்வைக்கும் வாதங்களை தர்க்க ரீதியாக முன்னெடுத்து செல்ல வழி செய்கிறது.மனம் மட்டுமே உள்ளது என்ற விஞ்ஞானவாதமும் பொருள் மட்டுமே உள்ளது என்ற லோகயதமும் இரு எல்லைகள்.தனித்த சுயம் இல்லை.எல்லாம் சார்பு நிலைகளில் இயங்குகின்றன என்ற நாகார்ஜூனரின் மத்தியமிக தரிசனம் சுயத்தை மறுக்கவுமில்லை, சுயத்தை கொண்டாடவுமில்லை.சார்புநிலையில் இருக்கும் போது அனைத்தும் ஒரே முக்கியத்துவம் கொள்கிறது.தனிமனிதன் , ஆன்மா போன்றவைக்கு எதிரானது சார்புநிலைத் தத்துவம்.ஆலய விஞ்ஞானத்தை கார்ல் யுங் சொல்லும் கூட்டு நனவிலியோடு இணைத்து பார்த்து புரிந்து கொள்ளலாம்.ஆனால் எதுவுமே தனித்த முழுமுதல் பேரிருப்புகள் என்பதை மத்தியமிக மார்க்கம் நிராகரிக்கிறது.அது சரியென்றே படுகிறது.மேலும் அமைப்பியம் போன்ற கோட்பாடுகளுடன் சார்புநிலை தத்துவத்தை இணைத்து புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில் கல்யாணராமன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.இந்த நூலின் ஒரே குறை இந்த அணிந்துரைதான்.கல்யாணராமன்தான் பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் கவிதைகள் குறைபாடுகளுடன் இருக்கிறது என்று பதறி காலச்சுவடில் கட்டுரை எழுதியவர்.இந்த அணிந்துரையிலும் நிறைய பதறியிருக்கிறார்.அவருக்கு இலக்கியமும் தெரியவில்லை , தத்துவமும் தெரியவில்லை.எல்லாவற்றிலும் எப்போதும் அவரால் சதியை கண்டுபிடிக்கமுடிகிறது.ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்களை சென்னை திருமங்கலத்தின் ஜங்ஷன் அருகே இருக்கும் அவருடைய அலுவலகத்தில் சமீபத்தில் சந்தித்து பேசினேன்.அப்போது ஜெயமோகனை பலரும் இந்துத்தவர் என்கிறார்களே , இந்த நூலை வாசித்ததன் வழியாக உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுகிறதா என்று கேட்டேன்.இந்த நூல் வழி அப்படி ஒரு எண்ணம் ஏற்படவில்லை என்று சொன்னார்.நிச்சயம் தமிழில் எழுதப்பட்டுள்ள மகத்தான நாவல்களில் ஒன்று விஷ்ணுபுரம்.ஜெயமோகன் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூல் எழுத என்ன காரணம் இருந்ததோ அதே காரணங்கள் கிருஷ்ணனின் நூலுக்கும் பொருந்தும்.ஜெயமோகன் தன் முன்னுரையில் இத்தகைய படைப்புக்கு அவசியமான விரிவான விமரிசன உரையாடல் நடைபெறவில்லை என்ற படுகிறது என்கிறார்.மேலும் நமது காவிய , சிற்ப மரபுடன் இப்படைப்புக்கு உள்ள உறவும், இந்திய சிந்தனை மரபும் , தமிழக வரலாறும் இதில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ள முறையும் விமரிசனம் பரிமாற்றம் மூலம் தெளிவடையக் கூடியவை என்கிறார்.அத்தகைய ஒரு விமரிசன நூல்தான் கிருஷ்ணனின் இந்த ஆக்கம்.

நூல்கள்
1. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா வெளியீடு – (இப்போது வேறு பதிப்பகங்கள் வழி வெளியாகிறது என்று நினைக்கிறேன்)
2. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் பெளத்தக் கருத்துக்கள் – ஓ.ரா.ந.கிருஷ்ணன் – மெத்தா பதிப்பகம்.

புகைப்படங்கள்

1.நாகார்ஜூனரும் ஆரியதேவரும் - https://commons.wikimedia.org/w/index.php?curid=21908468
2.ஆதிசங்கரர் - https://commons.wikimedia.org/w/index.php?curid=186869