கிழக்கு மேற்கு தெரு

 

லாட்டர்பேக்ட்
 



லெம்கின்
 

 

 

நான் மனித உரிமைச் சட்டங்கள் பற்றிய ஒரு பட்டயப் படிப்பு படித்தேன். இறுதித் தேர்வு எழுதவில்லை.இனி எழுதும் எண்ணமும் இல்லை. அந்தப் படிப்பில் ஒரு பாடம் சர்வதேச அமைப்பில் மனித உரிமைகளுக்கான சட்டங்களும் அவற்றின் அமலாக்கமும்.அரவிந்த் நரேன் நடத்தினார்.எனக்கு அந்த வகுப்புகள் பிடித்திருந்தன.அவர் தன் பாடத்தின் பகுதியாக பிலிப் சாண்ட்ஸ் என்பவர் எழுதிய கிழக்கு மேற்கு தெரு (East West Street) என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்ற பரிந்துரைத்தார்.

பிலிப் சாண்ட்ஸ் வழக்கறிஞர் , பேராசிரியர்.அவர் தன் மூதாதையர்களின் ஊரான லிவீவ் நகரம் பற்றியும் அந்த ஊரில் வாழ்ந்த இருவர் எப்படி மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்டங்களை உருவாக்கினார்கள் என்பது பற்றியும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.

பிலிப் சாண்ட்ஸின் தாய் வழி தந்தை லியான் லிவீவ் நகரத்தில் வசித்தார்.லியானின் தாய் லிவீவ் நகரத்தின் பக்கத்து ஊரான சோல்கீவ் என்ற ஊரில் வளர்ந்தார்.லிவீவ் நகரில் கிழக்கு மேற்கு தெருக்களில் வாழ்ந்த ரஃபேல் லெம்கினும் ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்டும் மனித உரிமைக்களுக்கான சட்ட வரைவுகளை உருவாக்கினார்கள்.அவை சர்வதேச அமைப்பான ஐ.நாவால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ரஃபேல் லெம்கின் கூட்டுக்கொலை (Genocide)  என்கிற பதத்தை உருவாக்கினார்.எது கூட்டுக்கொலை என்பதையும் வரையுறைத்தார்.ஹெர்ஷ் லாட்டர்பேக்ட் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) என்ற சட்ட வரைவை உருவாக்கினார்.இவை இரண்டும் இன்று மனித உரிமைகளுக்கான முக்கியச் சட்டங்களாக இருக்கின்றன.

லெம்கினும் லாட்டர்பேக்ட்டும் மனித உரிமைகளுக்கான சட்டங்களை உருவாக்கினாலும் அவற்றில் முக்கியமான சில வேறுபாடுகள் இருந்தன.லெம்கின் கூட்டுக்கொலைகளை முன்னிறுத்த விரும்பினார்.ஒரு மனிதக்கூட்டத்தின் மீது அவர்கள் சுமந்து நிற்கும் அடையாளத்தின் பொருட்டு நிகழ்த்தப்படும் குற்றம் கூட்டுக்கொலை.அந்த தனிமனிதனுடன் அரசுக்கு வேறு எந்த முரணும் இல்லை.அவர் ஒரு கூட்டத்தை தன் அலகாக கொண்டார்.

லாட்டர்பேக்ட் தனிமனிதனை தன் அலகாக கொண்டார். ஒரு தனிமனிதனுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களை பற்றியே அவர் பேசினார். தனிமனிதனையே அலகாக கொள்ள வேண்டும் , கூட்டத்தை அல்ல என்றார்.இருவரும் தங்கள் தரப்பை வலுவாக முன்வைத்தார்கள். இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் சில வருட இடைவெளியில் படித்தார்கள்.அவர்களுக்கு ஒரே ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தார்கள்.

தனிமனிதன் X கூட்டம்.இவை இரண்டும் எப்போதும் சந்தித்து கொள்கின்றன.எந்த மனிதனும் தனிமனிதன் அல்ல. அனைவரும் அடையாளங்களை தாங்கித்தான் நிற்கிறார்கள்.தேசம், இனம் , மொழி,நிறம்,பாலினம்,தொழில்,மதம்,சாதி என்று பல்வேறு அடையாளங்கள் நம் மீது குறிக்கப்படுகின்றன.இந்த அடையாளங்கள் இல்லாத தனிமனிதன் உலகில் இல்லை.லாட்டர்பேக்ட் ஒரு கூட்டத்தினர் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களையும் தனித்தனி மனிதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களாகவே பார்க்க எண்ணினார்.முதலாளித்துவத்தின் அலகு தனிமனிதன்.இருத்தலியத்தின் சுதந்திரத்தின் அலகும் கூட.தனிமனிதன் என்ற புனைவின் மீது தான் சுதந்திரம் என்ற விழுமியம் வைக்கப்படுகிறது.பொருள் ஈட்டுவதற்கான சுதந்திரம், தன்னை வெளிபடுத்திக் கொள்வதற்கான சுதந்திரம், வாழ்வதற்கான சுதந்திரம், வழிபடுவதற்கான சுதந்திரம், சிந்திப்பதற்கான சுதந்திரம்.மாறாக கூட்டத்தின் மீது சமத்துவம் என்ற விழுமியம் வைக்கப்படுகிறது.வாய்ப்புகளுக்கான சமத்துவம், சமூகநிலைக்கான சமத்துவம்.அதாவது நாம் சமத்துவம் என்று பேசும் போது ஒரு சாதி மற்றொரு சாதிக்கு கீழானது அல்ல , ஒரு மதம் மற்றொரு மதத்தைவிட வேறானது அல்ல, ஒரு தேசம் மற்றொரு தேசத்தை விட உயர்வானது அல்ல என்று சொல்ல விரும்புகிறாம்.சமத்துவம் என்ற சொல்லில் மனிதர்கள் கூட்டங்களாக அணித்திரள்கிறார்கள்.சமத்துவமத்தில் அணிகளையும் சுதந்திரத்தில் தனிமனிதர்களையும் நாம் முன்வைக்கிறோம்.

லாட்டர்பேக்ட்டின் குடும்பத்தினர் யூதர்கள் என்பதால் அவர்கள் கொல்லப்பட்டனர்.அவருடைய ஒரே ஒரு உறவினர் இன்கா போருக்கு பின் உயிருடன் இருப்பது தெரிந்து அவரின் அழைப்பில் பேரில் இங்கிலாந்தில் அவருடன் சென்று சேர்ந்தார்.தன் குடும்பத்தினர் யூதர்கள் என்ற அடையாளத்தை கொண்டிருந்ததால் கொல்லப்பட்டனர் என்ற போதும் அவர் தனிமனிதர்கள் மீதான குற்றங்களையே முன்னிறுத்த விரும்பினார். ஏனேனில் அதுவே சட்டத்தின் முன் நிரூபிக்க எளிதானதாக அமையும்.இரண்டாவது காரணம் நாம் கூட்டுக்கொலைகளை பற்றிச் சொல்லும் போது ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மீது நிகழ்த்தும் வன்முறை என்றே அதை முன்வைக்கிறோம்.ஒரு தனிமனிதன் ஒரு கூட்டத்தின் மீது நிகழ்த்திய வன்முறை என்று அல்ல.ஜெர்மனியர்கள் X யூதர்கள் என்ற எதிரிடை அங்கே வந்துவிடுகிறது.அப்போது நமது சொல்லாடல் இயல்பாகவே வன்முறை நிகழ்த்திய தனிமனிதர்களை விடுத்து அந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் தனது எதிரியாக பாவிக்கிறது.இந்த இரண்டு காரணங்களால் அவர் தனிமனிதன் இன்னொரு தனிமனிதன் மீது நிகழ்த்தும் வன்முறைகளை மானுடத்திற்கு எதிரான குற்றங்களாக வரையுறைத்தார்.

லாட்டர்பேக்ட்டின் வாதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை தான்.இரண்டாம் உலகப்போரின் காலக்கட்டத்தில் போலந்தின் ஆட்சியாளராக ஹான்ஸ் ப்ராங்க் இருந்த போது தான் லாட்டர்பேக்ட்டின் குடும்பத்தினரும் லெம்கினின் குடும்பத்தினரும் இந்த நூலை எழுதிய பிலிப் சாண்ட்ஸின் குடும்பத்திரும் யூதர்கள் என்பதால் கொல்லப்பட்டனர். நியூரம்பர்க் விசாரணையில் அவர் மீது கூட்டுக்கொலை என்ற குற்றம் முன்வைக்கப்பட்டாலும் தீர்ப்பில் அவருக்கு மானுடத்தின் மீதான குற்றங்களுக்குத்தான் தண்டனை அளிக்கப்பட்டது. ஹான்ஸ் ப்ராங்க் ஒரு ஜெர்மானியர் என்பதற்காகவோ அவர் ஹிட்லரின் கீழ் ஆட்சி செய்தார் என்பதற்காகவோ அவருக்கு தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் ஒரு தனிமனிதராக இந்தக் குற்றங்களில் பங்கு வகித்தாரா என்றே ஆராயப்பட்டார்.ஒரு தனிமனிதராக அவர் தன்னை இந்த குற்றச் செயல்களிலிருந்து விடுவித்துக்கொண்டிருக்க இயலுமா என்ற கேள்வியே விசாரணையில் முன்வைக்கப்படுகிறது. மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட சட்டகத்திற்கு வெளியே செல்ல இயலுமா என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது.நாம் சொல்லும் நிர்ணயவாதமும் சுதந்திர இச்சையும் இங்கே முன்னுக்கு வருகின்றன.

சுதந்திரம் சுதந்திர இச்சையை ஏற்கிறது.அதாவது மனிதன் முன் எப்போதும் தேர்வுகள் இருக்கின்றன.மனிதன் தனக்கான பாதையை எப்படிப்பட்ட கையறு நிலையிலும் தேர்வு செய்ய முடியும் என்று நாம் எண்ணுகிறோம்.இருத்தலியவாதம் , முதலாளித்துவம் இரண்டும் சுதந்திர இச்சையை முதன்மைபடுத்துகின்றன.ஹான்ஸ் ப்ராங்க ஒரு வழக்கறிஞர்.அவர் மெல்ல ஹிட்லரின் நம்பத்தகுந்த முதன்மை வட்டத்துக்குள் வருகிறார்.அவர் போலந்தின் தலைமை ஆளுனரானார்.லட்சக்கணக்கான யூதர்களின் கொலைக்கு அவரும் ஒரு காரணியாக இருக்கிறார்.ஜெர்மனி சட்டம் படி ஹான்ஸ் ப்ராங்க் செய்தது குற்றம் அல்ல.ஆனால் அவை மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்.

பொதுவாக உலகெங்கும் கிரிமினல் குற்றங்கள் ஒரு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் நிகழ்ந்தவற்றை கணக்கில் கொள்ளக்கூடாது என்றே சொல்கின்றன.No Retrospective act.இந்திய அரசியலமைப்பிலும் 20(1) இதைச் சொல்கிறது.ஆனால் நியூரம்பர்க விசாரணைகள் ஹான்ஸ் ப்ராங்க் உள்ளிட்ட இருபத்தியொரு பேர் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டங்களை கொண்டு தண்டிக்கப்பட்டார்கள் என்று பார்க்கலாம்.அல்லது அவை தேசங்கள் உருவாக்கிக்கொள்ளும் சட்டங்களை மீறிய உலகு தழுவிய பொது அறத்தை முன்வைக்கும் காலம் கடந்த சட்டங்கள் என்றும் கொள்ள முடியும்.

ஹச்.எல்.ஏ.ஹார்ட் சட்டத்துறைக்கான நேர்க்காட்சிவாதத்தை முன்வைத்தவர்.லான் பியூலர் புது இயற்கை சட்டக் கோட்பாட்டை முன்வைத்தார். ஹார்ட் நியூரெம்பர்க் விசாரணை ஹான்ஸ் ப்ராங்க் உள்ளிட்டோருக்கான தண்டனையை எப்போதைக்குமான பொதுச் சட்டம் என்கிற அடிப்படையில் வழங்கக்கூடாது என்றார்.அப்படியொரு பொதுச் சட்டம் இருக்க இயலாது.அவர்கள் ஜெர்மனியிலிருந்த சட்டங்களின் அடிப்படையில் தங்கள் செயல்களை செய்தனர்.நாம் வேண்டுமென்றால் இந்த ஒரு முறை புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களை கொண்டு அவர்களை தண்டிக்கலாம் என்றார்.லான் ஃபுல்லர் அப்படியல்ல, ஜெர்மனி உருவாக்கிய சட்டங்கள் பிழையானவை.அதனால் அதை கணக்கில் கொள்ளத் தேவையில்லை என்றார்.இயற்கை சட்டக் கோட்பாடு மானுடப் பொதுவிற்கு எப்போதைக்குமான சட்டங்கள் உள்ளன என்ற வாதத்தை முன்வைக்கிறது.ஒரு வகையில் நியூரம்பர்க்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு லான் ஃபுல்லர் வழியிலான பார்வையை ஏற்கிறது என்று சொல்லலாம்.

நியூரம்பர்க் தீர்ப்பில் கூட்டுக்கொலை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் பின்னர் 1948ஆம் ஆண்டு ஐ.நா.சபை கூட்டுக்கொலைகளுக்கான சாசனத்தை முன்மொழிந்தது.பின்னர் பல்வேறு நாடுகள் அவற்றை ஏற்றன.கூட்டுக்கொலைக்காக இன்று உலகின் பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கின்றன.

லெம்கின் திருமணம் செய்து கொள்ளவில்லை.இறுதிக்காலத்தில் தனிமையும் வறுமையும் நோய்மையும் கொண்டிருந்தார்.1959யில் மரணமடைந்தார்.லாட்டர்பேக்ட் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு வகித்து 1960யில் மரணமடைந்தார்.இருவருக்கும் குற்றங்கள் மீதான மாறுப்பட்ட பார்வை இருந்தது.இரண்டும் மானுட நலத்தை முன்வைத்து முன்மொழியப்பட்டன.அவை இன்று மானுடத்திற்கான அரண்களாக சர்வதேச அமைப்பில் இருக்கின்றன.அவர்கள் இருவரும் ஒரே நகரில் கிழக்கு மேற்கான தெருவில் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்பது சற்று வியப்புக்குரியது தான்.

East West Street - Philipe Sands    

தற்காலிகமாய்த் தலைக்குமேல் ஒரு கூரை



வண்ணப்பெண்ணின் புடவை சரசரப்பு போல பெய்து கொண்டிருந்த மழையில் யாரோ ஒரு சிறுவன் தன் தந்தையுடன் நடந்து சென்றான்.அவன் தலையில் சிறிய மஞ்சள் குடையை மாட்டியிருந்தான்.அவன் அந்தக் குடையை அவ்வப்போது கைகளால் பற்றி குதூகலித்தான்.அந்தக் குடை அவனை மழையிலிருந்தும் நாளை வெயிலிருந்தும் காக்கும்.குடை என்பது தலைக்கு மேல் தற்காலிகமாய் ஒரு கூரை.அங்கங்கே சின்னச்சின்ன நீர் குட்டைகள்.மெடிக்கல்ஸூக்கு வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்த கண்ணபிரான் அந்தச் சிறுவனையும் அவனுடைய தந்தையையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.மின்சாரம் நின்றிருந்தது.உள்ளே சுழல் நாற்காலியில் பரதன் அமர்ந்திருந்தார்.கார்மேகங்களிலிருந்து மெல்ல கதிரவன் எட்டிப்பார்த்தான்.மெடிக்கல்ஸீன் கண்ணாடிக் கதவுகளில் பட்டுத் தெறித்த மாலைக்கதிர்களில் அமானுஷ்யம் குடிகொண்டிருந்தது.பரதனின் கண்ணாடி ப்ரேம் மஞ்சள் ஒளியில் ஜ்வலித்தது.திரை விலகுவது போல மழை மெல்ல ஓயத் துவங்கியது.பரதன் மெடிக்கல்ஸின் அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார்.அருகிலிருந்த பிளாஸ்டிக் குடத்திலிருந்து தண்ணீரை குவளையில் எடுத்து முகத்தை அலம்பினார்.வெண்ணிறக் கர்சீப்பை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்து கண்ணாடியை மாட்டிக்கொண்டார்.தான் சென்று விஜயனை சந்தித்து வருவதாக கண்ணபிரானிடம் சொன்னார்.அவன் தலையசைத்தான்.வண்டியை கிளப்புகையில் அவனைப் பார்த்து நல்ல ஷர்ட் என்றார்.கண்ணபிரான் புன்னகைத்தான்.

கண்ணபிரான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் மெடிக்கல்ஸூக்கு வேஷ்டியும் முழுக்கை சட்டையும் அணிந்து வருவான்.பரதன் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை.பின்னர் அவனை ஒரு முறை நாள்ரோட்டிலிருந்த பரணி டெக்ஸ்டைல்ஸூக்கு அழைத்துச் சென்று ஃபேண்ட் சர்ட் பிட்டுகளை எடுத்து அருகிலிருந்த நாகா டெய்லரஸிடம் தைக்கக் கொடுத்தார்.முழுக்கை சட்டையெல்லாம் அணியத் தேவையில்லை என்று சொன்னார்.அது வயதான தோற்றத்தை அளிக்கும் என்றார்.மேலும் கோடுகள் போட்ட சட்டைகளை விட பெரிய சதுரங்கள் கொண்ட சட்டைகளை அணியச் சொன்னார்.சட்டைகளை எடுக்கும் போதே சோபையான வண்ணங்களைத் தவிர்த்தார். கை கடிகாரம் ஒன்றை வாங்கிக்கொடுத்தார்.அடிக்கடி மொபைல் ஃபோனை எடுத்து நேரம் பார்ப்பதையும் வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்க்கச் சொன்னார்.யாரைச் சந்தித்தாலும் மென்புன்னகையோடு பேசச் சொன்னார்.செருப்பு அணிவதற்கு பதிலாக ஷூ அணியக் கட்டாயப்படுத்தினார்.தினமும் ஷூவை பரஷ்ஷால் பாலிஷ் செய்யச் சொன்னார்.வெளியிடங்களில் ஷூவில் அழுக்கு படிந்து விட்டால் துணி அல்லது கிடைத்தால் வாழைப்பழத்தோலை கொண்டு நன்கு துடைக்கச் சொன்னார்.அவரே ஒரு முறை செய்தும் காட்டினார்.ஒரு போதும் பொது இடங்களில் ஷூவை கழற்றிவிட்டு வெறும் சாக்ஸூடன் இருக்கக்கூடாது.காலையில் ஷூ அணிந்தால் இரவு வீட்டுக்குச் சென்று தான் ஷூவை கழற்ற வேண்டும் என்றார்.ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சார் என்று சொன்ன கண்ணபிரானை பரதன் என்றே சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார்.மேலும் ஒரு முறைக்கு மேல் ஒரு உரையாடலில் எவர் ஒருவரையும் சார் என்று சொல்லக்கூடாது என்றார்.அது யாராக இருந்தாலும் ஒரு சார் போதும் என்றார்.

கண்ணபிரான் பரதனிடம் வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில் அடிக்கடி டீ குடிப்பான்.மேலும் அருகிலிருந்த ஹோட்டல்களில் காலை மதியம் இரவு என்று உண்டான்.பரதன் அவனை சமைத்து உண்ணச் சொன்னார்.மதியத்திற்கு கடைக்கு சாப்பாட்டை எடுத்து வரச்சொன்னார்.வீட்டுக்குச் சென்று உண்டு வந்தாலும் தவறில்லை என்றார்.அதிகம் டீ காபி குடிப்பதற்கு பதிலாக வெண்ணீரில் எலுமிச்சை கலந்து தேவைப்பட்டால் கொஞ்சம் டீத்தூள் கலந்து குடிக்கச் சொன்னார்.அதற்காக கடையில் ஒரு கெட்டில் வாங்கி வைத்தார்.தொலைந்து போன காலத்தை நினைத்துக்கொண்டு வருந்துவதை தவிர்க்கச்சொன்னார்.சென்றதினி மீளாது என்றார்.எவரிடமும் தலை குணிந்து பேசக்கூடாது , இளிக்கக்கூடாது என்றார்.இளிப்பது வெட்கத்தின் வெளிப்பாடு.காதலிக்கும் பெண்ணைத் தவிர வேறு யாரிடமும் வெட்கப்படத் தேவையில்லை என்றார்.கண்ணபிரான் அரைக்கை சட்டை அணிந்து இன் செய்துகொண்டான்.ஷூ வாட்ச் அணிந்துகொண்டான்.தினமும் சவரம் செய்தான்.அவரைப் போல அவன் மீசையை மழிக்கவில்லை.காலை ஏழு மணிக்கு அவன் மெடிக்கல்ஸைத் திறந்தால் இரவு பத்து மணி வரை இருப்பான்.பரதன் ஒன்பது மணிக்கு வருவார்.அடிக்கடி கட்சி தொடர்பான வேலைகளுக்காக வெளியில் சென்று விடுவார்.மாலையில் சிறிது நேரம் இருப்பார்.வேறு வேலை எதுவும் இல்லையென்றால் அவரும் மெடிக்கல்ஸீலேயே இருப்பார்.வாடிக்கையாளர்களிடம் அதிகம் பேசத்தேவையில்லை , அதே நேரத்தில் பேசாமலும் இருக்கக்கூடாது என்பார்.ஒரு முறை வந்த வாடிக்கையாளர் அடுத்த முறை வரும் போது அவர் சென்ற முறை எதற்காக வந்திருந்தார் என்பதை நினைவில் வைத்து அதை கேட்க வேண்டும், அவர்களின் குடும்பத்து உறுப்பினர்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் தற்சமயம் எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்,அதே நேரத்தில் தேவையின்றி அவர்களை அதிக கேள்விகளும் கேட்கக்கூடாது, அவர்கள் மீது உண்மையான அக்கறை நமக்கு உண்டு என்பதை நாம் உணர்த்தினால் போதுமானது , உண்மையான அக்கறையும் இருக்க வேண்டும் என்று அவனுக்கு அவர் வகுப்பு எடுத்தார்.பயிலப் பயில நுண்ணறிவு கொண்ட இயந்திரம் சொற் கிடங்கிலிருந்து சூழமைவுக்கு பொருத்தமான வாக்கியங்களை உருவாக்குவது போல பயின்று பயின்று தன்னைத் தகவமைத்துக்கொண்டான் கண்ணபிரான்.அவன் பிறருடன் பேசும் போது இளிப்பதை முதலில் பிரக்ஞைபூர்வமாக தவிர்த்தான்.தலையை ஒரு பக்கம் சாய்த்து சொறிந்து கொள்வதை நிறுத்தினான்.மெல்ல அந்தப் பழக்கங்கள் பொருந்தாத பழைய சட்டைகள் போல அவனை விட்டு விலகின.அவன் கச்சிதமாக கூர்மையாக இனிமையாக பேசினான்.

நால்ரோட்டின் முனையில் அமைந்திருந்தது விஜயனின் ஸ்ரீகிருஷ்ண பவன்.ஹோட்டலுக்குள் சாலையிலிருந்து இரண்டு மூன்று படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்.பெரும் மழை வந்தால் ஹோட்டலுக்குள் நீர் புகுந்து விடும்.ஆனால் அப்படி பெரும் மழை வந்ததுமில்லை.ஹோட்டலுக்குள் நீர் புகுந்ததுமில்லை.தூறல் குறைந்திருந்தாலும் அதிக கூட்டம் இல்லை.இரண்டு மூன்று பேர் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு தந்தை தன் மகளுக்கு தோசையை கிள்ளி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.அடிக்கடி அவளது வாயைத் துடைத்துவிட்டார்.தலையை வருடினார்.தண்ணீர் புகுட்டினார். யசோதையின் கிருஷ்ணன் , கோகுல கிருஷ்ணன்,முரளிகிருஷ்ணன்,ராதாகிருஷ்ணன்,கோவர்தன கிருஷ்ணன் , வேங்கடகிருஷ்ணன் என்று பல்வேறு கிருஷ்ணனின் வரைப்படங்கள் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன.மறுபக்க நீலவண்ணச் சுவரில் கிருஷ்ணன் விஜயனுக்கு குருஷேத்திரத்தில் அருளிய கீதா உபதேசத்தின் ஓவியம்.

“என்ன இன்னிக்கு மழை பெய்யுதேன்னு நினைச்சேன்.வாராது வந்த மாமணியா ஹோட்டலுக்கு வந்திருக்கீங்க” என்று கல்லா அருகில் நின்ற பரதனை தன் கேபினிலிருந்து வெளியே வந்த விஜயன் வரவேற்றான்.

“எப்படி இருக்கீங்க விஜயன்”

“நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க.பத்மா மேடம் எப்படி இருக்காங்க”

“நல்லா இருக்காங்க”

“என்ன சாப்பிடுறீங்க”

“இல்ல உங்களப் பாக்க வந்தேன்”

“ஓ.அப்படியா.வாங்க உள்ளே போலாம்.முருகா இரண்டு கப் காபி கேபினுக்கு அனுப்பு.காபி குடிப்பீங்க இல்ல பரதன்.நான் இந்த நேரத்துல பொதுவா பேட்மிட்டன் விளையாட போயிடுவேன்”

“தெரியும்.இன்னிக்கு மழையா இருக்கு.போயிருக்க மாட்டீங்கனு நினைச்சுதான் வந்தேன்.”

“பரதன் கணக்கு தப்பாது தான்.உட்காருங்க.”

குளிரூட்டப்பட்ட அறை.விஜயன் எப்போதும் ஹோட்டலில் தனக்கென்று அமைத்துக்கொண்ட கேபினில் தான் அமர்ந்து கொள்வான்.அங்கிருந்து கொண்டு அனைத்தையும் கவனிப்பான்.மாலைகளில் அவன் புதிதாக துவங்கிய கிளப்பில் பேட்மிண்டன் விளையாடுவான்.எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டை நெற்றியில் குங்குமத் தீற்றலுடன் இருப்பான்.காபி கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான் முருகன்.

“சொல்லுங்க பரதன்”

தான் கட்சியில் முழு நேர ஊழியராக மாற முடிவு செய்திருப்பதால் ஜீவா மெடிக்கல்ஸை கண்ணபிரானுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அதனால் கண்ணபிரான் பெயரிலேயே டிரக் லைசன்ஸூக்கு விண்ணப்பிக்க எண்ணியிருப்பதாகவும் அதற்கு ரெண்ட் அக்ரிமெண்ட்டை கண்ணபிரான் பெயருக்கு மாற்ற வேண்டும் என்றும் முன்னுரைகள் ஏதும் இல்லாமல் கூறினார்.

“ஃபுல் டைம் பார்ட்டி மெம்பர் ஆக போறீங்களா”

“ம்”

“ஃபுல் டைம் பார்ட்டி மெம்பர் எல்லாம் வேறு தொழில் நடத்தக் கூடாதுங்கற கட்டுப்பாடெல்லாம் இன்னுமும் உங்க கட்சில மட்டும் தான் இருக்கு பரதன்”

“அது நம்ம கட்சி இல்லையா விஜயன்”.

“சாரி.நம்ம கட்சிதான்.காபி குடிங்க பரதன்.ஆறிப்போகுது.காபி கொட்டையை சிக்மகளூருலயிருந்து நேரடியாவே வரவழைக்கிறேன்.இங்கேயே வறுத்து அரைக்கிறோம்.இங்க காபி குடிக்க மட்டுமே காலைலையும் சாய்ந்திரமும் ஒரு கூட்டம் வரும்”

தலையாட்டிய பரதன் சுவற்றில் தொங்கவிடப்பட்ட நாகராஜனின் படத்தைப் பார்த்தார்.இது நாகராஜன் இல்லையா விஜயன் என்று கேட்டார்.திரும்பி படத்தைப் பார்த்த விஜயன் , ஆமாம் ,இது ரொம்ப வருஷமா இருக்கே.நீங்க இங்க வந்ததில்லைன்னு நினைக்கிறேன் என்றான்.

“வந்திருக்கேன்.கேபினுக்கு வந்ததில்லை.”

“ஓ.ஆமாம் பரதன்.நாகராஜன் பெரியப்பா தானே எனக்கு எல்லாமே.இன்னிக்கி நான் ஒரு ஆளா இந்த ஊருல இருக்கறதுக்கு காரணமே அவரு தானே.இந்த இடமே அவரது தானே.”

“தெரியும்.அவரு உங்க சொந்த பெரியப்பா இல்ல இல்ல விஜயன்.”

“ஆமாம்.உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.நானும் என் தம்பியும் அப்படியே கூப்படப் போயி நிறைய பேரு அப்படி நினைச்சிக்கிட்டாங்க.நான் எட்டாம் கிளாஸ் படிக்கறப்போ எங்க நைனா இறந்துட்டாரு.நிலம் பதினாறு ஏக்கர் இருந்துச்சு.மணக்குப்பம் எங்க ஊரு.திருக்கோயிலூர்ல இருந்து திருவெண்ணெய்நல்லூர் போற வழியில இருக்கு.”

“தெரியும்.அந்த ஊருக்கெல்லாம் நிறைய முறை போயிருக்கேன்.உங்க அப்பாவும் நாகராஜனும் ஒண்ணா படிச்சாங்க இல்ல.”

“ஆமாம்.நைனாவும் நாகரஜன் பெரியப்பாவும் அண்ணாமலையில ஒண்ணாதான் பி.ஏ. படிச்சாங்க.முதல்ல பெரியப்பா விழுப்புரத்துல தான் ப்ராக்டீஸ் பண்ணாரு.அப்போ நைனாவுக்காக ஒரு நிலத்தகராறு கேஸூ கூட ஜெயிச்சு கொடுத்தாரு.ரொம்ப நல்ல சிநேகம்.நைனா செத்துப்போனப்பறம் சின்நைன்னா எங்களுக்கு உதவல.அவரு பக்கத்துல எடையாருன்னு ஒரு கிராமத்துல கம்பத்துகாரங்க வீட்ல பொண்ணு எடுத்தாரு.அப்பறம் அவங்க வீட்டோட போயிட்டாரு.எங்க சொத்தை வேற பறிக்கப் பாத்தாரு.அங்க நல்ல ஸ்கூலும் இல்ல.எங்க அம்மா நாங்க நல்லா படிக்கனும்னு பெரியப்பாவை வந்து பாத்தாங்க.பெரியப்பா பசங்க இங்க தங்கி ஸ்கூலும் காலேஜூம் படிக்கட்டும்னு சொல்லிட்டாரு.தனு பெரியம்மா கிட்டக்கூட அவரு எதுவும் கேட்கல.தனு பெரியம்மா எங்களை அவங்க பசங்க மாதிரியே பாத்துக்கிட்டாங்க.அவங்க பையன் பாலனுக்கும் எங்களுக்கும் எந்த வித்யாசத்தையும் அவங்க காட்டினதில்லை.ஒரு நாளு கூட சாப்பாடு விஷயத்துல பண விஷயத்துல முகம் சுளிச்சதில்லை.பெரியப்பா ஜவஹர் ஸ்கூல்ல சேத்தாரு.அப்புறம் காலேஜ் படிச்சேன்.நான் ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு நினைச்சப்போ அவரு தான் இந்தக் இடத்தை கொடுத்து நடத்திக்கச் சொன்னாரு.முன்னாடி இங்க ஒரு மெஸ்ஸூம் இரண்டு மூணு கடையும் இருந்துச்சு.அப்படியே எல்லாத்தையும் இணைச்சு ஹோட்டலை ஆரம்பிச்சேன்.பெரியப்பா இருக்குற வரைக்கும் அவருகிட்ட வாடகையை ஒண்ணாத்தேதின்னா கொடுத்துடுவேன்.இப்போ பெரியம்மாகிட்ட கொடுத்துடறேன்.நானே அப்பப்போ வாடகையை ஏத்தி பத்திரத்தை புதுப்பிப்பேன்.என் தம்பி இன்ஜினியரிங் முடிச்சுட்டு நல்ல வேலையில இருக்கான்.இதுக்கெல்லாம் அவருதான் காரணம்.எனக்கு இந்த ஹோட்டலுக்கு அவரு பேரு தான் வைக்கனும்னு ஆசை.அவரு தான் கூடவே கூடாதுன்னு சொல்லிட்டாரு.இந்த இடத்தை என் பேருக்கு விலைக்கு கொடுத்துடுங்கனு கேட்கனும்னு நினைப்பேன்.ஆனா கேட்க இதுவரைக்கும் தைரியம் வரல.”

“நீங்க சொல்ற பல தகவல்கள் எனக்குத் தெரியும்.ஆனா இவ்வளவு விவரமா இப்போதான் தெரியுது.”

“பெரியப்பாவ பாக்க நீங்க வருவீங்க இல்ல.”

“ஆமா.அப்போ கடலூர் செயின்ட் ஜோசப்புல பியெஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சுட்டு இருந்தேன்.வக்கீலுக்கு படிக்கலாம்னு ஒரு எண்ணம் வந்ததுக்கு காரணமே அவரு தான்.அவருக்கு பேரே லேபர் லாயர் தான்.முழுக்க முழுக்க கட்சிக் காரங்க கேஸ் தான் எடுப்பாரு.”

அவன் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் வந்து அரிசி மூட்டைகள் வந்திருப்பதாகவும் குடோன் சாவி வேண்டும் என்றும் கேட்டான்.சாவியை எடுத்துக்கொடுத்தவன் குடோன் மிகச் சிறியதாக இருப்பதால் நிறைய பொருட்களை வாங்கி வைக்க முடியவில்லை என்று பரதனிடம் சொன்னான்.அடிக்கடி வாங்க வேண்டியிருக்கிறது என்றும் புலம்பினான்.தலையசைத்து மெளனமாக இருந்தார் பரதன்.

“நீங்க சொன்ன விஷயம் செஞ்சிடலாம் பரதன்.நீங்க ஃபோன்லையே சொல்லியிருக்கலாம்”

“நேருல வந்து சொல்றது தானே முறை.”

“சரிதான்.நீங்க வந்ததும் நல்லதாப் போச்சு.உங்களைப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு.அந்தப் பையன் உங்க கிட்ட வேலை செய்றாரா.”

“மூணு வருஷமா எங்கிட்ட வேலை செய்றாரு. அதுக்கு முன்னாடி கொஞ்ச வருஷம் பெங்களூருல்ல வேலையில இருந்தாரு.அவருக்கு அங்க சரியா வரல.அவருக்கு போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு.”

“உங்களுக்குத் தெரிஞ்சப் பையனா இருக்கறது ஒண்ணு போதும் பரதன்.நாளைக்கே கூட செஞ்சிடலாம்.உங்கக் கடையில ஒருத்தரு கொஞ்சம் சதை பிடிச்சாப்புல இருப்பாரே.அவரா பரதன்”.

“ஆமாம்.அவரு தான்.”

“ஓகே.டன்.நான் ரெண்டு மூணு தடவை அவரப் பாத்திருக்கேன்.பேரு தெரியாது.மாத்திரலாம் பரதன்.” என்று சொல்லி மேஜையைத் தட்டினான்.

“நல்லது விஜயன்”

“இதுக்கு போயி என்ன பரதன்.ஆமாம் கட்சில எதாவது போஸ்டிங் கொடுக்குறாங்களா” என்று தலையை முன்பக்கம் கொண்டு வந்து கேட்டான்.

“மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்.”

“நல்லது.கடலூர்லயா”

“ஆமாம்”

“அப்போ நீங்க அங்க போயிடுவீங்களா”

“இல்ல பத்மாவுக்கு இங்க தானே ப்ராக்டீஸ்.நெய்வேலி கோர்ட் விருத்தாசலம் கோர்ட்.இப்போதைக்கு இங்க தான்.நான் தான் போயி வருவேன்.பின்னாடி பார்க்கலாம்.நான் வரேன் விஜயன்” என்று சொல்லி எழுந்து கொண்டார்.வாங்க என்று சொல்லி பரதனை வாசல் வரை வந்து வழி அனுப்பினான் விஜயன்.

திரும்பிய விஜயன் ஹோட்டல் கல்லா அருகில் கீழே சிதறிக் கிடந்த பில்களைப் பார்த்து உடனே பெருக்கச் சொன்னான்.ஈரமாக இருந்த வாசலை துடைக்கச் சொன்னான்.விரிந்த நிலையில் வாசலை அடைத்துக்கிடந்த இரண்டு மூன்று குடைகளை அப்புறப்படுத்தச் சொன்னான்.டேபிள்களில் அப்படியே இருந்த காபி டம்ளர்களை எடுக்கச் சொல்லி கத்தினான்.நேராக இருந்த நாற்காலிகளை எடுத்து மறுபடியும் நேராக போட்டான்.யாரும் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று சத்தம் போட்டுக்கொண்டே கேபினுக்குள் சென்றான்.

விஜயன் தாரிக் அலி என்பவரிடமிருந்து சில வருடங்களுக்கு முன்னர்தான் பரதனின் கடையிருந்த காம்ப்ளெக்ஸை வாங்கினான்.அந்த வருடத்தில் இரண்டு கிரெளண்டில் இடம் வாங்கி கிளப் ஒன்றை ஆரம்பித்தான்.ஊரில் இருக்கும் பணக்காரர்கள் சந்தித்துக் கொள்ள ஒரு இடம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் விஜயனுக்கு இருந்தது.மேலும் இது நல்ல லாபத்தை தரும் என்றும் அவன் எண்ணினான்.விஜயன் காம்ப்ளெக்ஸை வாங்கிய புதிதில் அங்கிருந்த நான்கு கடைகளிலும் வாடகை வாங்கச் செல்வதுண்டு.பின்னர் அனைவரும் ஜிபேயில் பேடிம்மில் வாடகை செல்லுத்தத் தொடங்கிய பின்னர் செல்வதை நிறுத்திக்கொண்டான்.கடை காம்ப்ளெக்ஸ் , பின்னால் இருந்த ஆறு வீடுகள் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் இருபது செண்ட் நிலம்.காம்ப்ளெக்ஸின் மாடியில் ஒரு கழிப்பறை மட்டும் இருந்தது.அவனுக்கு காம்ப்ளெக்ஸின் முதல் மாடியிலும் கடைகளை கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.அந்த இடத்தில் ஒரு குடோன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது.

மழை பெய்திருந்ததால் வெக்கையாக இல்லை.வேம்பின் கிளைகள் காற்றில் மெல்ல நடனமிட்டன.இரவின் இறுக்கத்தை கலைக்கும் வகையில் குடித்திருந்த ஒருவர் “நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே” என்று உச்சஸ்தாயியில் உருகியவாறு தெருவில் நடந்து சென்றார்.கண்ணபிரான் தோசை வார்த்து தக்காளி வெங்காயம் வதக்கி சட்னி செய்து வாசலில் அமர்ந்து சாப்பிட்டான்.நான்கு இல்லங்கள் இருந்த லைன் வீடு.மற்ற இல்லங்களில் வெளி விளக்குகள் அனைந்திருந்தன.நான்கு வீட்டுக்கும் சேர்த்து கழிப்பறைகளும் குளியலறைகளும் கடைசியில் இருந்தன.திருமணமாகி அவன் அவனது மனைவியை அந்த வீட்டுக்குத் தான் அழைத்து வந்தான்.அந்தப் பெண்ணுக்கு அந்த லைன் வீடு பிடிக்கவில்லை.கண்ணபிரானையும் பிடிக்கவில்லை.வீடு சிறித்து இருக்கிறது.கண்ணபிரான் பெருத்து கருப்பாக எருமைமாடு போல இருப்பதாகச் சொன்னாள்.ஏதோ பி.பார்ம் படித்திருப்பதாகச் சொல்லி கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.ஆனால் ஒரு மெடிக்கல்ஸில் வெறும் மாதச் சம்பளத்தில் இருப்பவனுக்கு எப்படி தன்னை தன் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்கலாம் என்று பிலாக்கணம் பிடித்தாள்.எப்போது கண்ணபிரான் அருகில் சென்றாலும் வயிற்று வலி , உடல் சோர்வு என்று சொல்லி ஒருக்களித்து படுத்துக்கொள்வாள்.கல்யாணமான இரண்டாவது மாதத்தில் ஊரில் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக சொல்லிச் சென்றாள்.இரண்டே நாளில் திரும்புவதாகவும் சொன்னாள்.சென்று ஒரு வருடத்திற்கு மேல் கடந்துவிட்டது.நேரில் சென்று அழைத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்பாள்.பல ஞாயிற்றுக்கிழமைகள் கடந்துவிட்டன.

பரதன் இவை அனைத்தையும் அறிந்திருந்தார்.அவர் ஒரு முறை அவள் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்தார்.அவளுக்கு புகார் என்று ஒன்றும் இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார்.ஆனால் அவளுக்கு கண்ணபிரானைப் பிடிக்கவில்லை.பிடிக்காததற்கும் அவளிடம் காரணங்கள் இல்லை.அவள் திரும்ப வரக்கூடும் என்று அவர் அவனிடம் சொன்னார்.வராமலும் போகக்கூடும்.உனக்கென்று நிலையான வருமானத்தையும் கெளரவத்தையும் உருவாக்கிக்கொண்டால் அவள் வரக்கூடும்.அதே நேரத்தில் அவளுக்காக என்றில்லாமல் உனக்காக உருவாக்கிக்கொள் என்றார்.அதை எப்படி உருவாக்கிக்கொள்வது என்று கண்ணபிரானுக்குத் தெரியவில்லை.பரதன் அவன் பெயரில் மெடிக்கல்ஸை மாற்றிக்கொடுப்பதால் அது சாத்தியமாகும் என்று எண்ணினார்.அவருக்கு பல காலமாக முழு நேர ஊழியராக சென்று விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.சட்டம் படித்தவர் அதன் பின் ப்ராக்டீஸ் செய்யாமல் இருந்தார்.ஒரு தொழில் இருந்தால் கட்சி வேலைகளையும் செய்யலாம் என்று ஒரு வருட டிப்ளமோ வகுப்பு படித்து மெடிக்கல்ஸை ஆரம்பித்தார்.தன் ஆதர்ச நாயகனான ஜீவானாந்தத்தின் பெயரில் கடைக்கு ஜீவா மெடிக்கல்ஸ் என்று பெயர் சூட்டினார்.அவர் அந்த மெடிக்கல்ஸை தொடங்கி பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன.கண்ணபிரான் வந்து மூன்று வருடங்கள் சென்று விட்டன.

பரதன் கண்ணபிரானின் ஆளுமையில் வெகுவான பாதிப்பை செலுத்தினார்.அவனை தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யச் சொன்னார்.அவர் வில் போன்ற உடலை கொண்டிருந்தார்.இறுக்கமான கச்சிதமான உடல்.வலுவான உடல் இருந்தால் வலுவான உள்ளம் அமையும் என்று கண்ணபிரானிடம் அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.யார் வந்தாலும் சென்றாலும் எது நடந்தாலும் ஒரு நாளின் அட்டவணை மாறக்கூடாது என்பார்.தினமும் பேப்பர் படிக்கச் சொன்னார்.ஆங்கில நாளிதழ்கள் வாசிக்க வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தினார்.

முந்தைய நாள் மழை பெய்த சுவடே தெரியாமல் மறுநாள் காலை தீயருவி போல கொட்டிக் கொண்டிருந்தது வெயில்.சுப முகூர்த்த தினம் என்பதால் மெடிக்கல்ஸூக்கு எதிரிலிருந்த லக்ஷ்மி திருமண மண்டபத்தில் பட்டுச்சேலைகளிலும் பட்டு வேஷ்டிகளிலும் சீமாட்டிகளும் சீமான்களும் அங்கிங்கும் இங்கங்கும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.மணப்பெண்ணும் மணமகனும் பிளக்ஸ் போர்ட்டில் புன்னகைத்தார்கள்.கண்ணபிரான் ஏழு மணிக்கெல்லாம் மெடிக்கல்ஸை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.அருகிலிருந்த மளிகைக்கடை எட்டு மணிக்கும் கூரியர் கடை ஒன்பது மணிக்கும் திறக்கும்.பறவை எப்போது அமரும் எப்போது பறக்கும் என்பதை கணிக்க இயலாதது போலவே சிமெண்ட் கடைக்காரர் கடையை எப்போது திறப்பார் எப்போது மூடுவார் என்பதை அறிய இயலாது.மணப்பெண்ணுக்குத் தலைவலி என்று சொல்லி ஒருவர் கண்ணபிரானிடம் மாத்திரைகள் வாங்கிச் சென்றார்.ஊரின் பணக்காரர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்.ஏதோ பெரிய வீட்டுத் திருமணம் என்று எண்ணிக்கொண்டான்.ஒரு கறுப்பு நிற ஹூண்டாய் க்ரேட்டா கார் வந்து மெடிக்கஸ்ஸ் முன் நின்றது.விஜயன் காரிலிருந்து இறங்கினான்.மெடிக்கல்ஸை நோக்கிச் சென்றான்.கண்ணபிரான் எழுந்து கடையிலிருந்து வெளியே வந்தான்.

“நீங்க தானே கண்ணபிரான்”

“ஆமாம் சார்”

“இங்கே எதிர்தாப்புல ஒரு கல்யாணம்.நம்ம ராஜன் கார்ப்பரேஷன் இருக்குல்ல.அவங்க பொண்ணு கல்யாணம்.நான் போய்ட்டு வந்துடேறன்.வண்டி இங்கேயே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

எப்போதும் காலை ஆறு மணியிலிருந்து ஏழு ஏழரை மணி வரை நடை செல்வார் பரதன். அவர் வீடு இருந்த கெங்கைகொண்டான் பகுதியிலிருந்து ஜெயப்பிரியா திரையரங்கைத் தாண்டி நால்ரோடு வழியாக மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டு வரைச் சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு தன் வீட்டுக்குச் செல்வார்.சில நாட்கள் பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த கட்சி ஆபிஸூக்குச் சென்று நாளிதழ்களை வாசித்துவிட்டு தன் சகாக்கள் எவரேனும் இருந்தால் அளாவிவிட்டு திரும்பிவிடுவார்.பரதனுக்கு நடை என்பது அடிப்படையில் பேராக்கு பார்ப்பதற்கான ஒரு ஏற்பாடு.பூங்காக்களில் அவர் ஒரு போதும் நடை செல்ல மாட்டார்.சாலை என்பது விநோத நடனங்கள் நிகழும் மேடை என்று சொல்வார்.அன்று ஒரு பாலத்தின் அருகே நடை சென்று கொண்டிருக்கையில் எதிரிலிருந்த புற்றுக்கோயிலில் ஒரு பெண் பால் ஊற்றுவதை கவனித்தப்படியே கடந்தார்.நாகங்களை வழிபடுவது எப்போதும் நம் மரபில் இருக்கிறது.தமிழகத்தில் , தென்னிந்தியாவில், இந்தியாவில், தென் கிழக்கு ஆசியாவில் நாக வழிபாடு உள்ளது.பெளத்தம் போன்ற பிரிவுகளில் நாகார்ஜூனரின் வரைப்படங்களில் நாகத்தை பார்க்க முடிகிறது.மகாவிஷ்ணு நாகத்தின் மீது துயில் கொள்கிறார்.சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டிலிருந்த நாகத்தை ஆரியர்கள் தங்கள் தெய்வங்களுடன் இணைத்தனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.குண்டலினி போன்ற யோக முறைகளில் கூட சக்தியின் குறியீடாக நாகம் வருகிறது.விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்திற்காக உருவாக்கிய சின்னத்தில் நாகம் இருக்கிறது.எப்படிப் பார்த்தாலும் வேறு எந்த விலங்கை விடவும் ஊர்வனவை விடவும் பறவையை விடவும் நாக வழிபாடு இந்திய மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.நம்மூரில் பக்ஷிராஜன்களை விட நாகராஜன்கள் அதிகம் இருக்கின்றனர்.நாகராஜனைப் பற்றி விஜயன் அத்தனை தீவிரமாக பேசியது ஆச்சரியமளிக்கிறது.விஜயனுக்குள் எப்போதும் ஒரு வணிகனின் கணக்கு மட்டுமே இருக்கும் என்று நினைத்தால் அவனுக்குள் இப்படியான நன்றியுணர்வு கூட இருக்கிறது.ஆச்சரியம் தான்.மனிதர்கள் எத்தனையோ அடுக்குகளிலானவர்கள்.எந்த அடுக்கு எப்போதும் வெளிப்படும் என்பது மட்டுமே நிச்சயமற்றதாக இருக்கிறது.தனு அம்மையாரை பார்த்து பல காலம் ஆகிறது.சென்று பார்க்க வேண்டும்.சிந்தித்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.அவரது மனைவி பத்மா நாளிதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்.

வெற்றிலை மென்றவாறு கார் கதவைத் திறக்கச் சென்ற விஜயன் கண்ணபிரானைப் பார்த்து கடை நோக்கிச் சென்றான்.விஜயன் வருவதை பார்த்த கண்ணபிரான் ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து வெளியில் வைத்தான்.தனக்கும் ஸ்டூலை எடுத்து வெளியில் போட்டான்.உட்காருங்க சார் என்றான்.கண்ணபிரான் நன்கு சவரம் செய்திருந்தான்.பெரிய பெரிய சட்டங்கள் கொண்ட ஆரஞ்சு நிற அரைக்கை சட்டையை அணிந்திருந்தான்.ஷூ நன்கு பாலிஷ் செய்யப்பட்டிருந்தது.

“பரதன் இல்ல”

“பரதன் ஒன்பது மணிக்கு மேல வருவார்”

“என்ன முதலாளியை பேர் சொல்லி கூப்பிடுறீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

“அவரு தான் அப்படி கூப்படிச் சொல்லி கட்டாயப்படுத்தினாரு”

“ம்.”

“நீங்க எந்த ஊரு”

“எனக்கு எடையாருன்னு திருக்கோயிலூர் திருவெண்ணெய்நல்லூர் ரோட்டுல இருக்குற ஊர் சார்”

எடையார் என்றவுடன் விஜயனின் காதுகள் பெரிதாகின.கண்கள் விரித்த விஜயன் இதைப்பற்றி தன்னிடம் பரதன் முந்தைய தினம் ஒன்றும் சொல்லவில்லையே என்று தன் ஆச்சரியத்தை பகிர்ந்து கொண்டான்.பரதனை எப்படித் தெரியும் என்று விசாரித்தான்.ஒரு முறை சட்டமன்றத் தேர்தலுக்கு திருவெண்ணெய்நல்லூருக்கு பிரச்சாரத்துக்கு வந்தவர் அன்றிரவு தன் பக்கத்து வீட்டிலிருந்த தோழரின் வீட்டில் தங்கினார்.அப்போது பேசிக்கொண்டிருக்கையில் தான் பி.பார்ம் படித்தவன் என்பதை அறிந்து கடைக்கு ஆள் தேவை வர இயலுமா என்று கேட்டார்.அப்படி வந்து சேர்ந்தேன் என்று சொன்னான்.

“உங்களுக்கு எடையாருல சுப்புராயுலுவைத் தெரியுமா”

“பெருமாள் கோயில் பக்கத்துல கம்பத்துக் காரரு வெள்ளை அம்பாஸிடர் காரு வைச்சிருந்தாரே , அவரா”

“ஆமாம்.”

“உங்களுக்கு அவரு எதாவது சொந்தமா”

“என் சொந்த சித்தப்பா.நான் மணக்குப்பம் தான்”

“அப்படியா.பரதன் சொல்லலையே சார்.அவங்க தான் எங்க முதலாளிங்க.அதாவது ஆண்டைங்க.எங்க அப்பா காலம் வரைக்கும் அப்படித்தான் இருந்துச்சு.அவரு புள்ள தான் இந்த ஆண்டை அப்படிங்கறது எல்லாம் இனிமே வேணாமுன்னுட்டார்.நீங்க எங்களுக்கு கடன் பட்டவங்க இல்ல, நாங்களும் உங்களுக்கு கடன் பட்டவங்க இல்லன்னு சொல்லிட்டாரு.என் தம்பி படிக்கலை,அவங்க கொள்ளிலதான் வேலைக்குப் போறான்.ஏதாவது வீட்டு வேலை இருந்தா செய்வான்.இப்ப தான் சார் தோணுது , உங்களுக்கு அப்படியே சுப்புராயலு ஐயா ஜாடை”

“பரதன் இப்போ எங்க இருப்பார்”

“வீட்ல”

“சரி.எனக்கு நேரமாச்சு.நான் கிளம்புறேன்.”

“சரி சார்.ரெண்ட் அக்ரிமெண்ட்டை இன்னிக்கி சாய்ந்திரம் ஹோட்டலுக்கு கொண்டு வரலாமா”

“வாங்க அதுக்கென்ன , நேத்தே பரதன் கிட்ட பேசினது தானே” என்று சொல்லிக்கொண்ட நாவைச் சுழற்றி பற்களில் சிக்கிக்கொண்ட பாக்கைத் தூப்பி விட்டு காரை நோக்கிச் சென்றான்.

லாரி ப்ரோக்கர் ஷேட்டின் மேல் மாடியிலிருந்தது பரதன் குடியிருந்த வீடு.விஜயன் காரை கொண்டு வந்து நிறுத்துகையில் ப்ரோக்கர் ஷேட் திறக்கப்படவில்லை.பத்மா கேஸ் கட்டை மடித்து அட்டைப்போட்டு கட்டிக்கொண்டிருந்தார்.

“வாங்க விஜயன்.உட்காருங்க.”

“எப்படி இருக்கீங்க மேடம்”

“நல்லா இருக்கேன்”

“போன வாரம் கோர்ட்டுக்கு வந்திருந்தீங்களா.உங்களைப் பாத்தேன்.பேசனும்னு நினைச்சேன்.அப்பறம் உங்களைப் பாக்க முடியல”

“ஆமாம் மேடம்.கடைப் பசங்க நைய்ட் ஹோட்டலை கிளின் பண்ணிட்டு தண்ணீ பேரல்களை வெளியவே வைச்சுட்டாங்க.அதுக்கு கேஸ்.ஃபைன் கட்டிட்டு வந்தேன்”

பத்மாவின் புருவங்கள் இன்னும் கீழே இறங்கவில்லை என்பதை கவனித்த விஜயன் வக்கீல் நமச்சிவாயம் தான் எடுத்துக்கொடுத்தாரு என்று சொன்னான்.

சரி என்பது போல தலையசைத்தார் பத்மா.நெற்றியில் பெரிதாக பொட்டு வைத்திருந்தார்.வெண்ணிற பருத்தி புடவை அணிந்திருந்தார்.கைகளில் கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை.

“ப்ராக்டீஸ் எப்படி இருக்கு மேடம்”

“பரவாயில்ல.விருத்தாசலமும் போறதால இப்ப கொஞ்சம் ஓகே.” என்று சொல்லி கேஸ் கட்டுகளின் மீது கேஸ் நம்பரை எழுதினார்.

விஜயன் தன்னைப் பார்க்க வரவில்லை பரதனைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட பத்மா  “பரதன் , விஜயன் வந்திருக்கிறார் பாருங்க” என்று அமர்ந்த இடத்திலிருந்தே சற்று குரல் உயர்த்திச் சொன்னார்.தனக்கும் பத்மாவுக்கு காபி போட்டு எடுத்து வந்த பரதன் விஜயனிடம் ஒரு கப்பை நீட்டி நான் அப்பறம் குடிச்சுக்குறேன் என்று கொடுத்தார்.விஜயன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.

விஜயன் கண்ணபிரானை பார்த்ததையும் பேசியதையும் சொன்னான்.முந்தைய தினம் பரதன் ஹோட்டலில் கவனித்தது போல பொருட்களை வைக்க அதிக இடம் இல்லாததால் அந்த மெடிக்கல்ஸ் இருக்கும் இடத்தையே குடோனாக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் சட்டென்று தோன்றியதாகச் சொன்னான்.பரதன் குடோனுக்கு மாற்று ஏற்பாடுகளை பரிசீலிக்கலாம் என்று கூறிய போதும் விஜயன் உறுதியாக சொன்னதையே திரும்பச் சொன்னான்.குடோன் தான் பிரச்சனையா இல்லை வேறு எதாவது பிரச்சனையா என்பதை பரதனால் அறிய முடியவில்லை.கண்ணபிரான் ரெண்ட் அக்ரிமெண்ட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடக் கூடும் என்பதால் நேரில் சொல்லிவிடலாம் என்று வந்ததாகச் சொன்னான்.இதை விட நல்ல இடத்தில் மெடிக்கல்ஸூக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் என்றும் சொன்னான்.பரதன் அதன் பின் பேசுவதை தொடர விரும்பவில்லை.விஜயன் பரதனிடமும் பத்மாவிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான்.

விஜயனின் முகத்தில் தெரிந்த பதற்றமும் அவசரமும் பரதனைக் குழப்பியது.குடோன் தான் வைக்க வேண்டும் என்றால் முந்தைய தினமே சொல்லியிருக்கலாம்.எப்போதாவது சிமெண்ட் கடையை திறக்கும் சின்னத்துரையை காலிச் செய்யச் சொல்லி அங்கு வைக்கலாம்.ஏன் நல்ல வணிகம் நிகழும் கடையை இடம் மாற்ற வற்புறுத்த வேண்டும்.புதிய இடத்திற்கு கடையை மாற்றினால் பழைய வாடிக்கையாளர்கள் வராமல் போகக்கூடும்.அதுவும் கண்ணபிரானுக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இது அவசியமற்றதாக பரதனுக்கு தோன்றியது.அதில் ஏதோ உள் நோக்கம் இருக்கலாம் என்றாலும் என்ன உள்நோக்கம் இருக்கும் என்று அறிய இயலவில்லை.எப்போதும் போல ஒன்பது மணிக்கு கடைக்குச் சென்ற பரதன் கண்ணபிரானிடம் விஜயனுடன் நடந்த உரையாடல் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.கண்ணபிரானிடம் வீனஸ் கம்யூட்டர் சென்டருக்குச் சென்று பத்திரம் வாங்கி ரெண்ட் அக்ரிமெண்ட்டை தயாரிக்கச் சொன்னார்.அதற்கான தரவுகளையும் முந்தைய பத்திரத்தின் நகலையும் கொடுத்தார்.கண்ணபிரான் திரும்ப வந்தப் பின்னர் பத்திரத்தை சரி பார்த்தார்.அனைத்தும் சரியாக இருக்கிறது, விஜயனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கிறதாம் அதனால் பத்திரத்தை அடுத்த நாள் அல்லது அதற்கும் அடுத்த நாள் கொண்டு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் என்று சொன்னார். கண்ணபிரான் மேற்கொண்டு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.ஆனால் அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.அதை கவனித்த பரதன் தான் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி வெளியே கிளம்பினார்.

தனு அம்மையாரின் இல்லம் முன் இருந்த சிறிய கணபதி கோயிலில் இரு பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.வாசலில் வி.என் இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.மா கொய்யா வாழை தென்னை மரங்கள் சூழ இருந்தது இல்லம்.செம்பருத்தியும் ரோஜாவும் மல்லியும் பூத்திருந்தன.கதவு திறந்திருந்தது.வெளியே இருந்த திண்ணையில் ஒரு வயோதிகர் படுத்திருந்தார்.தனு அம்மையார் இருக்கிறாரா என்று தெரியவில்லை.காலிங் பேல் எங்கு இருக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.பரதன் திண்ணையில் அமர்ந்தார்.அந்தப் இரு பெண்களில் ஒருத்தி பரதனை நோக்கி வந்தாள்.யாரை பார்க்கணும் என்று விசாரித்தாள்.தனு அம்மையாரை பார்க்க வேண்டும் , பரதன் என்று சொல்லுங்கள் என்றார்.உள்ளே சென்ற பெண் பரதனை உள்ளே வரச் சொல்லி அழைத்தாள்.

தாழ்வாரத்தில் ஒரு சாய்வான மர நாற்காலியில் அமர்ந்திருந்தார் தனு.பார்த்து வருடங்கள் கடந்து விட்டதை இருவரும் சொல்லிக்கொண்டனர்.பரதன் ஒரு மழை நாளின் இரவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை நாகராஜனிடம் வந்து சொன்னதை நினைவு கூர்ந்தார் தனு.அப்போது நாகராஜன் தன் ராஜ்துத் வண்டியில் பரதனை ஏற்றிக்கொண்டு வடலூர் சபை அருகே டெம்போவை மடக்கி பிடித்ததை சொல்லிச் சிரித்தார்.

“நீங்க அப்போ அடிக்கடி வருவீங்க இல்லையா.எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.நீங்க லா படிச்சிட்டு ப்ராக்டீஸ் பண்ணலைன்னு அவருக்கு வருத்தம்.சொல்லியிருக்கார்.உங்களுக்கு கட்சில போஸ்டிங் கொடுத்திருக்கிறதா சொன்னாங்க.சொல்லுங்க,என்ன விஷயம்.”

பரதன் நிகழ்ந்தவற்றை சுருக்கமாகச் சொன்னார்.தனு விஜயன் அவ்வாறு நடந்து கொள்பவன் இல்லையே என்று மறுத்தார்.இந்த வீட்டில் நாகராஜன் இருந்த போது எத்தனையோ பிள்ளைகள் உணவருந்திருக்கிறார்கள்.எத்தனையோ பிள்ளைகளுக்கு ஒரு விடுதி போல இந்த வீடு இருந்திருக்கிறது.அவர்களோடு விஜயன் பழகியிருக்கிறான்.ஒன்றாக உண்டு உறங்கியிருக்கிறான்.ஆனால் வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை என்று பரதன் மறுபடியும் நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறிய போது தனுவால் அதை மறுக்க இயலவில்லை.

“என்ன செய்யலாமுனு சொல்றீங்க” என்று கேட்டார்.

“தெரியலை.என்னால இதை வேற மாதிரியும் அணுக முடியும்.இன்ஜங்க்ஷன் வாங்க முடியும்.ஆனா விஜயன் இங்க வளர்ந்தவரு.அதான் உங்களை ஒரு முறை பாத்து பேசிட்டு போகலாமனு நினைச்சேன்.”

“நான் ஒரு தடவை விஜயன் கிட்ட பேசிப் பாக்குறேன்.நீங்க ஒரு இரண்டு மூணு நாளு இந்த விஷயத்தை அப்படியே விட்டுடுங்க.”

தனு அம்மையாரை பார்த்து விட்டு வெளியே வந்த போதும் அந்த வயோதிகர் அங்கேயே படுத்திருந்தார்.திண்ணைக்கு முன்னர் வேய்ந்திருந்த கூரையால் வெயில் தெரியவில்லை.அந்த இரு பெண்கள் பரதனின் வண்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.பரதனைப் பார்ததும் இறங்கி ஓடினர்.

வாடகை கொடுத்து இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகின.அதற்குள் தனு பெரியம்மா ஏன் அழைத்தார் என்று விஜயனுக்கு புரியவில்லை.அதுவும் அன்று மாலையே கட்டாயம் வந்து சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் ஆச்சரியம் அளித்தது.அவர் அப்படி அழைத்ததே இல்லை.பரதன் பெரியம்மாவிடம் ஏதேனும் சென்று பேசிப் இருப்பாரா என்று நினைத்தவாறு அவரது வீட்டுக்குச் சென்றான்.தனு உடல் மெலிந்து சாய்வு நாற்காலியில் சுருண்டிருந்தார்.விஜயன் அருகில் வந்து அமர்ந்த போதும் தனு அவனிடம் முகத்தை காட்டவில்லை.

“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க”

தனுவின் தங்கை மகள் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துவிட்டு சென்றாள்.அவளிடம் ஏதாவது கேட்கலாம் என்பதற்குள் அவள் ஏதோ ஒரு அறைக்குள் மறைந்துவிட்டாள்.டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க” என்று மறுபடியும் சற்று சத்தமாக சொன்னான் விஜயன்.

“எனக்கு காது கண்ணு புத்தி எல்லாம் நல்லாத்தான் இருக்கு விஜயா” என்று விஜயனை பார்க்காமலே சொன்னார் தனு.

“அவசரமா வரச் சொன்னீங்க”

எழுந்து அருகிலிருந்த டீபாயிலிருந்த ரிமொட்டை எடுத்து டிவியை அணைத்து விட்டு அமர்ந்தார்.அவனையே சிறிது நேரம் அமைதியாக பார்த்தார்.

“நான் கேக்குறதுக்கு நேரடியா பதில் சொல்லு விஜயா”

“கேளுங்க”

“பரதன் கடையில வேலை செய்யுற பையனுக்கு நீ ஏன் மெடிக்கல்ஸை கொடுக்க முடியாதுங்குற”

“இல்ல பெரியம்மா அங்க குடோன் வைக்கலாமுன்னு ஒரு ஐடியா வந்துச்சு.பரதன் கிட்ட நேரடியாவே அவரு வீட்டுக்குப் போயி காலையிலேயே சொல்லிட்டேன்.அவரு உங்களை வந்து பாத்தாரா”

“உனக்கு குடோன் வைக்க வேற எடமே கிடைக்காதா.உனக்கு இல்லாத இடமா.”

“அதில்ல பெரியம்மா.அந்தக் கடை ரோட்டுலெயே இருக்கு.லோடு எத்த இறக்க வசதியா இருக்கும்.”

“அந்த சிமெண்ட் கடை”

“அந்த சின்னத்துரை காலி செய்யமாட்டான்.சண்டைக்கு வருவான்”.

“அப்போ வேற எந்த காரணமும் இல்ல”

“இல்லையே.ஏன்.யாராவது எதாவது சொன்னங்களா”

“சரி விஜயா.உனக்கு நிறைய வேலை இருக்கும்.நீ கிளம்பு.அதை கேக்கத்தான் கூப்பிட்டேன்.”

அதன் பின் தனு பேசவில்லை.ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தார்.விஜயன் எழுந்திருக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.தனு அவனைப் பார்த்து ஏன் இன்னும் இங்கு இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை, போ என்றும் சொல்லவில்லை.மெளனம் ஒரு பெருஞ் சுவராக மாறி தன் முன் எழுந்து நிற்பதை உணர்ந்தான்.அவனுக்கு அந்தச் சுவற்றை எப்படி உடைப்பது என்று தெரியவில்லை.அவன் மெல்ல எழுந்து எதுவும் சொல்லாமல் வெளியில் வந்தான்.திண்ணையில் அமர்ந்திருந்த வயோதிகர் வாழைமரத்துக்கு அருகில் சென்று அமர்ந்து சிறுநீர் கழித்தார்.திரும்ப வந்தவர் விஜயனைப் பார்த்து யாருப்பா நீ என்று கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றார்.மா மரத்தின் இலைகள் காற்றில் கூத்தாடின.இலைகள் அத்தனையும் நாவுகளாக மாறி ஒவ்வொன்றும் ஒரு வாதத்தை முன்வைப்பது போல விஜயனை அழுத்தின.உரையாடல்கள் பட்சிகளின் இரைச்சலாக மாறி காதைத் துளைத்தன.ஓங்கி வளர்ந்திருந்த தென்னைகள் ஆகாயத்தின் ஆரஞ்சு கதிர்களின் ஒளியில் தங்களின் தனிமையை உரைத்தன.அவனுக்குத் தன் தலைக்கு மேல் இருந்த கூரை சட்டென்று காணாமல் போய் விட்டது போல இருந்தது.மேலே ஆகாயம் கீழே மண்.விஜயன் மிகவும் தனித்துவிடப்பட்டவனாக உணர்ந்தான்.அவன் அந்த தென்னைகளை மறுபடியும் பார்த்தான்.அவை இப்போது ஓங்காரமிட்டன.கண்களை விலக்கி வீட்டைப் பார்த்தான்.அவன் வளர்ந்த வீடு.அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது.இன்று வளர்ந்த சுவர்கள் நாளை மதில்களாக மாறும்.மதில்களை பள்ளிகளிலும் சிறைச்சாலைகளிலும் மனநலவிடுதிகளிலும் அமைக்கின்றனர்.புகமுடியாத வீடு செல்லமுடியாத கருவறை.கரும் பூதம் ஒன்று வானத்திலிருந்து இறங்கி வருவது போல அந்தி மங்கி இருள் சூழ்ந்தது.காரில் சாய்ந்து நின்று சாலையை வெறித்துப் பார்த்தான்.வாகனங்கள் ஒளி பாய்ச்சி சீறிக்கொண்டு சென்றன.கிழக்கில் பிறை உதித்திருந்தது.உடனே வந்து ரெண்ட் அக்ரிமெண்ட்டை கண்ணபிரான் பெயருக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று பரதனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்றான்.

மணல் வீடு இதழில் பிரசுரமான சிறுகதை.

- ஓவியம்  - By Bruno Caruso - Self-scanned, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=78438788


நகுலனின் தனிமொழி

 



நகுலனின் மூன்று , ஐந்து ஆகிய கவிதைத் தொகுப்புகள் இராமயணத்தை அடிப்படையாக கொண்டவை.ஐந்து கவிதைத் தொகுப்பில் குகன், விராதன், சவரி, சடாயு, வீடனன் ஆகியோரைப் பற்றியே எழுதியிருக்கிறார்.இவர்கள் எவருமே இராமயணத்தின் மையக் கதாபாத்திரங்களோ எதிர் கதாபாத்திரங்களோ அல்லர்.ஆனால் இந்தப் பாத்திரங்கள் அனைத்திற்கும் மையச்சரடு ஒன்றுண்டு.தன்னையழித்தல்.மூன்று தொகுப்பில் உள்ள உறங்குகின்ற கும்பகர்ணன் பகுதியும் ஐந்து தொகுப்பில் உள்ள வீடனன் தனிமொழியும் நகுலனின் உலகை நமக்கு ஒளிபுக உணர்த்துபவை.நகுலனின் நினைவுப்பாதை நாவல், ஐந்து , மூன்று , மழை மரம் காற்று,கோட்ஸ்டாண்ட் ஆகிய கவிதைத் தொகுப்புகள் அவரின் தத்துவத்தை இன்னும் தெளிவாக கூறுபவையாக அமைந்திருக்கின்றன.

ஒரு வகையில் வீடனனின் தனிமொழி தான் நகுலனின் தரிசனம் என்று சொல்லிவிடலாம்.பிரத்யட்சமாக காண்பதையே மனிதன் உண்மை என்று எண்ண விரும்புகிறான்.அனைத்து தத்துவங்களும் அறிதல் முறைகள் பற்றி பேசுகின்றன.பிரத்யட்சம், அனுமானம், ஊகம்,தர்க்கம், ஸ்ருதிகள் என்று ஒவ்வொரு தத்துவமும் தனக்கான அறிதல் முறைகளை வரையறுக்கிறது.பிரத்யட்சத்தை கடந்து அருவத்தை உணர்வதை நகுலன் தன் புனைவுகளில் கவிதைகளில் தொடர்ந்து முன்வைக்கிறார்.

கும்பகர்ணன் நான் அரக்கன் என்கிறான்.வீடனன் தன் தனிமொழியில் அந்த நாம-ரூபத்தைத்தான் கேள்வி கேட்கிறான்.என்னை நான் என்று நான் ஒரு போதும் மயங்குவதில்லை என்று மறுபடி மறுபடி சொல்கிறான். பிறப்பால் இனத்தால் உருவாகும் அடையாளங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுதல் தான் நகுலன் முன்வைக்கும் உலகம். வீடனன் தான் பிறப்பாலோ இனத்தாலோ கட்டுண்டவன் அல்ல என்கிறான்.கும்பகர்ணன் வீடனனிடம் அடிப்படையில் நான் ஒரு அரக்கன் , ஸ்தூலத்தைச் சூக்குமாக்கும் வித்தையை நாங்கள் வெறுக்கிறோம்,ரத்தமும் சதையுமாகத்தான் நாங்கள் இந்த உலகைத் தரிசிக்கிறோம்.நாங்கள் அரக்கர்கள், எங்களுக்குக் கனவுகள் பலிக்க வேண்டும், காமம் தீர வேண்டும் , இங்கு நம் வழிகள் பிரிகின்றன என்று தன் உரையை முடிக்கிறான்.

கும்பகர்ணன் தன் செயல்களை நியாயப்படுத்திச் சொல்ல அரக்கர்களின் உலகப் பார்வை அவர்களின் குணங்கள் ஆகியவற்றையே பயன்படுத்திக் கொள்கிறான்.இந்த அடையாளங்கள் இந்த செயல்களை அங்கீகரிக்கின்றன என்று கும்பகர்ணன் சொல்கிறான். இவை சரியானவை தவறானவை என்ற தர்க்க விவாதத்திற்குள் அவன் செல்லவில்லை.கும்பகர்ணன் தாங்கள் சூடிக்கொள்ளும் அர்க்கர்கள் என்ற அடையாளத்தின் வழி தங்கள் செயல்களுக்கான நியாயங்களை உருவாக்கிறான்.அந்த அடையாளங்களை அழித்து விட்டால் அவனால் அவர்களது செயல்களை தர்க்கப்படுத்தி ஒரு வரிக் கூட சொல்ல இயலாது.

வீடனன் இதைத்தான் கேள்வி கேட்கிறான்.விகுதியை பகுதியாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறான். ஏதோ ஒன்று நாம-ரூபமாகத் தன்னை கிளை பரப்பிக் கொண்டு இவ்விகலம் முழுவதும் வியாபகமுற்று இருக்கிறது என்று கொள்வதும் அந்த ரூபம் தான் மூல தத்துவம் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று வீடனன் எண்ணிக்கொள்கிறான்.தன் பெரிய அண்ணாவாலும் இளைய அண்ணாவாலும் நாம ரூபத்தை தாண்டிய ஏதோ ஒன்று தங்களைச் சூழ்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவில்லை என்று கவலைப்படுகிறான்.தன்மையிலிருந்தே உருவம் என்று சொல்கிறான்.

சித்தாந்தம், சாதி, இனம், சமயம், மொழி, உடல், நினைவுகள் ஆகியவற்றின் வழி நாம் நமக்கான அடையாளங்களை சூடிக்கொள்கிறோம்.சித்தாந்தத்தின் தர்க்கங்கள் நம்முடைய தர்க்கங்கள் ஆகின்றன.உருவத்திலிருந்து தன்மை உருவாகிறது.நாம் நமது என்றும் என்னுடையது என்றும் சொல்லிக்கொள்வது அந்த சித்தாந்தத்தின் வழி உருவான தத்துவத்தைத்தான்.அதுவே ஒருவனின் பிரத்யட்ச உலகமாக ஆகிறது.உருவம் கொண்டு ஒருவன் அடையும் அருவம் அந்த சித்தாந்தத்தின் தன்மையில்தான் இருக்கிறது.இவற்றை தாண்டிய ஒரு அருவம் உள்ளது என்றும் அந்த அருவத்திலிருந்து தனக்கான உருவத்தை அடைய முடியும் என்றும் மனிதன் எண்ணும் போது அடையாளங்களிலிருந்து விடுபடலாம் என்பது நகுலன் முன்வைக்கும் தர்க்கம்.

முன்னர் குறிப்பிட்டது போல ஐந்து கவிதைத் தொகுப்பில் அவர் குகன் , சடாயு, சவரி, விராதன் , வீடனன் ஆகியோர் பற்றி எழுதியிருப்பதில் இருக்கும் இணைக்கும் சங்கலி அவர்கள் தங்களை இழப்பது தான்.காத்திருத்தல்,பணிதல்,தன்னுயிர் நீத்தல்,சாபத்திலிருந்து விடுபடுதல், தன் அடையாளத்தை களைந்து வெளியேறுதல் என்று அவை மற்றமை பற்றிய அக்கறையை முதன்மைப்படுத்துகிறது.நகுலன் தன் படைப்புகளில் மூன்று விஷயங்களை செய்கிறார்.ஒன்று அடையாளம் களைதல் என்னும் நிலை.இரண்டாவது மற்றமை குறித்த உணர்வு.மூன்றாவது அடையாளம் களைந்து இரண்டறக் கலத்தல்.பிறிதாகுதல்.

அடையாளம் களைய நமக்கு தடையாக இருப்பவை பால், உடல், நினைவு, இனம் , சாதி, மதம், சமூக அடுக்கு, சித்தாந்தங்கள் ஆகியவை.திரெளபதி அவள் வந்து போகும் அர்ச்சுனன் என்ற கவிதையில் வந்து போகும் அர்ச்சுனன் என்ற வரி ஒரு நிலையற்றத் தன்மையை குறிக்கிறது.திடமான ஸ்திரமான ஒரு அடையாளத்திலிருந்து விலகி ஒரு பாயம்(flux) நிலையை நோக்கிச் செல்கிறது வந்து போகும் அர்ச்சுனன் கவிதை.மற்றமையை வேண்டி நிற்கிறது.அதே போல கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் அடையாளத்தை சுமக்கும் உடல் இல்லாமல் போதல் என்ற நிலையைப் பற்றி பேசுகிறார்.

இந்த அடையாளங்களிலிருந்து விடுவித்துக்கொள்ளுதல் என்பது உலகு நீக்கிய ஒரு தரிசனத்தை முன்வைப்பதற்காக அல்ல.அல்லது உலகு கடந்த நிலையை அடைவதற்காக அல்ல.அவை மற்றமை குறித்த அக்கறையை உள்ளடக்கியவை.வீடனன் பிறப்பென்ற பேதைமை நீங்கி ராமனுக்கு நான் ஆட்பட்டேன் என்கிறான்.கும்பகர்ணன் இராவணனிடம் வீடனன் பற்றி சொல்லும் போது அவன் தன் பிள்ளைத்தன்மை நீங்கிவிட்டான் என்கிறான்.பிள்ளைத்தன்மை என்பது பிறப்பின் பால் வரும் பேதைமை.வீடனன் அந்த பிள்ளைத்தன்மை நீங்கி இராமனிடம் சென்று சேர்கிறான்.நகுலன் மற்றமை குறித்த அக்கறையோடு நின்றுவிடுவதில்லை.மற்றமையோடு ஒன்றாகுதல் என்பது நகுலன் படைப்புகளில் தொடர்ந்து வரும் மற்றொரு எண்ணம்.

தான் இராமனைக் கைகூப்பித் தொழுதது பற்றிச் சொல்லும் போது , உண்மையில் யார் யாரைத் தொழுதார்கள் , நான் இராமனிடமிருந்து என்னை வேறாகத் கருதவில்லை, கைகூப்பித் தொழுதல் என்பது யோக முத்திரை , இது தான் கடைசி வார்த்தை என்கிறான்.வீடனன் தன்னை மற்றமையில் கண்டுகொள்கிறான்.மற்றமையாகவே ஆகிறான்.இதுதான் நகுலன் முன்வைக்கும் தரிசனம்.இது அவரது அனைத்துப் படைப்புகளிலும் இருக்கிறது.வீடனன் தனிமொழியில் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

கோட்ஸ்டாண்ட் தொகுப்பில் எல்லைகள் என்ற கவிதை


..காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப-சிதலங்கள் , இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் – இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்.


அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது.நடுவில் யாரோ
ஒருவர் அவனை நோக்கி
“நீங்கள்? ” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

மேதைகளின் சிற்ப சிதலங்கள் ,இருப்பவர்களின் மிரட்டல் ஆகிய இரண்டையும் அவன் கடக்கிறான்.மேதைகளின் சிற்ப சிதலங்கள் என்பவை சித்தாந்தங்களும் , கோட்பாடுகளும், மதங்களும் அன்றி வேறென்ன.நம்மை இந்த சிற்ப சிதலங்களின் வரையறைகள் கட்டுப்படுத்துகின்றன.நகுலன் அவற்றை மீறுவது குறித்து பேசவில்லை, மாறாக அதைக் கடப்பதை பற்றியே தன் படைப்புகளில் பேசுகிறார்.அவனுக்கு அவன் பெயர் கூட மறந்துவிட்டது என்பது அவன் தன் அடையாளங்களிலிருந்து முழுக்க வெளியேறிவிட்டான் என்பதையே குறிக்கிறது.

கோட்ஸ்டாண்ட் கவிதைகளில் வரும் புகழ்பெற்ற ராமச்சந்திரன் கவிதை நாம-ரூபங்கள் சூட்டும் அடையாளங்களிலிருந்து விடுபடுதல் என்பதைப் பற்றிதான் பேசுகிறது.யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது / எல்லாம் என்பது மனிதனை மையப்படுத்தும் பார்வையை கேள்விக்கு உட்படுத்துகிறது.மனிதன் அனைத்தையும் மாற்றும் வல்லமை உள்ளவன் என்பது இருபதாம் நூற்றாண்டில் வலதுசாரி இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் ஏற்றுக்கொண்ட எண்ணம்.அதை நகுலன் தொடர்ந்து தன் படைப்புகளில் மறுக்கிறார்.மேலும் மனிதன் முழுமையானவன், ஸ்திரமான அடையாளங்களைக் கொண்டவன் என்பதையும் நகுலன் ஏற்கவில்லை.

இவர்கள் என்ற கவிதையில்

 

…எதிரில் இருப்பவன்
பிரக்ஞையின்றித் தங்களைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என்று எழுதுகிறார்.இந்த தான் என்ற பிரக்ஞையிலிருந்து எப்படி நழுவுவது விடுபடுவது என்பதை பற்றி மழை மரம் காற்று கவிதைத் தொகுப்பில் விரிவாகச் சொல்கிறார்.

…பல விஷயங்களிலிருந்து

விடுபட்டாலொழிய
காற்றுச் சலிப்பது
இலை அசைவது
திடீரென்று சூரியப்பிராகசத்தில்
இலைகள்
வாடித் தவழ்வது
நமக்குத் தெரியாது

                                            என்கிறார்.மேலும்

..விறகு வெட்டி!

என் நிழலை வெட்டு;
எனக்கு
நானே ஒரு மலடியாகப் போகும்
நிலைமையைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவஸ்தையிலிருந்து
என்னை விடுவி!!

என்கிறார். நகுலன் இங்கு என் நிழலை வெட்டு என்று குறிப்பிடுகிறார்.என்னை வெட்டு என்றல்ல. நிழல் என்பதை ஆனவம் , அகங்காரம், அடையாளம்,தர்க்கம்,பிரக்ஞை என்று அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும் தன்னிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் சொரூப நிலையை பற்றி மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் இப்படி சொல்கிறார்.

 

நான்
என்னை விட்டுச் செல்லும்
நழுவல்
விடிந்தால்
உலகம் நமக்குக் காத்துக்
கொண்டிருக்கிறது;
அதிலிருந்து
இப்படிக் கழன்று கொள்வதில்
                           தான் நமது
விமோசனம்

அடுத்த நாள் விடிந்தால் தன் லெளகீக பரபரப்புகளுக்குள் நம்மை அமிழ்த்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இந்த சொரூப நிலை அவசியம் என்பதையும் தொடர்ந்து தன் படைப்புகளில் முன்வைக்கிறார். அந்த விடுபடுதல் பால் திரிந்து , நினைவுகளிலிருந்து தப்பி, உடலைக் கழற்றி, பிரக்ஞையிலிருந்து நழுவி என்ற பல்வேறு நிலைகளில் நகுலன் படைப்புகளில் வருகின்றன. இந்த விடுபடுதல் வழி அவர் ஒரு ஆன்மிக நிலையை அத்வைத தத்துவத்தை சொல்லவில்லை என்பதே என் எண்ணம்.அவர் சக மனிதனை மட்டுமே இங்கு மற்றமையாக கூறுகிறார்.

மழை மரம் காற்று தொகுப்பில் இறுதியில் தன் கூற்றை மேலும் வலுவாகச் சொல்ல “இவனும் வெகுதூரம் சென்று திரும்பி வந்தவன் தான் சொல்கிறான்” என்று திருமூலரைப் பற்றி சொல்லிவிட்டு திருமந்திரத்தின் கீழ்கண்ட பகுதியை சுட்டுகிறார்.


கொழுந்தினைக் காணிற் குவலயத் தோன்றும்
எழுந்திடங் காணில் இருக்கலுமாகும்
பரந்திடங்காணில் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தையுளானே.

கொழுந்தன் – சுடர் , குவலயம் – உலகம்

பரம் – தத்துவங்களை விட்ட ஆன்மா
பார்ப்பதி – சக்தி

ஞானலிங்கமாகிய ஒளி மயமான சுடரைக் கண்டால் உலகம் தோன்றும்.எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும், தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகப் பற்றின் – சக்தி உருவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.1

இந்த மந்திரத்தை நகுலன் கூறும் நிழலை வெட்டு என்பதுடன் பொருத்திப் பார்க்கலாம்.மேலும் நகுலன் தொடர்ந்து உருவத்திலிருந்து அருவம் நோக்கிய பயணத்தைப் பற்றி தன் நினைவுப்பாதை நாவலில், வீடனனின் தனிமொழியில் எழுதுகிறார்.மனிதன் உருவத்தை கடந்து அருவத்தின் உண்மையை அறிய வேண்டும் என்று நகுலன் தன் படைப்புகளில் தொடர்ச்சியாக பதிவுசெய்கிறார்.

நகுலனின் அருவம் உலகம் பொய் என்ற நிலையை நோக்கி பேசவில்லை.அது மற்றமையில் இரண்டறக் கலக்கும் ஒரு அவாவுதலை பற்றியே பேசுகிறது.பெளதீகமான உலகம் இல்லாமல் ஆகிறது என்ற கருத்தை நகுலன் சொல்வதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.நகுலனின் ஸ்டேஷன் கவிதையை நான் இந்தப் பொருளில் புரிந்து கொள்கிறேன்.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

இந்தக் கவிதையையும் யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற கவிதையையும் நாம் கவனித்தால் அதில் அவர் மனிதர்களை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பதை உணரலாம்.பெளதீகமான புற உலகை இல்லாமல் செய்யும் அத்வதை நோக்கிலிருந்து விலகி பிறிது என்ற எண்ணம் அற்ற ஓர் பக்தி நிலையை பற்றி நகுலன் கவனம் கொள்கிறார்.

என்னைப் பார்க்க வந்தவர்

தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்

என்ற கவிதையில் பிறிரை புரிந்து கொள்ளவும் பிறரை அறியவும் விடாமல் தன்னையே ஸ்தாபித்துக்கொள்ள மனிதன் எந்தளவு பிரயத்தனப்படுகிறான் என்பதை கூறுகிறார்.

இந்த நான் என்ற பிரக்ஞையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதையும் உருவங்களிலிருந்து அருவங்கள் நோக்கிய பயணத்தையும் முன்வைப்பவை நகுலனின் படைப்புகள்.நகுலனின் கவிதைகள் பக்திக் கவிதைகளும் கூட.இங்கு மற்றமை கடவுளாக இல்லாமல் மற்றொரு மனிதனாக இருக்கிறது.மற்றமை குறித்த அக்கறை தான் அனைத்து பொதுநல செயல்களுக்குமான முதல் படி. நகுலன் அதை நோக்கி நம்மை அழைத்துச்செல்கிறார்.நாம் செல்வோம்.

1 - திருமந்திரம் விரிவுரை – ஜி.வரதராஜன்

ஷங்கர் ராமசுப்ரமணியன் தொகுத்த நகுலன் 100 அருவம் உருவம் நூலில் இடம்பெற்ற கட்டுரை.



சட்டமும் இலக்கியமும்

 

நான் PG Diploma in Human Rights Law படித்து வருகிறேன்.எழுதுபவனாக சட்டம் பற்றிய பொது அறிவு இருந்தால் நல்லது என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.சட்டமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று பல நிலைகளில் பிணைப்பு கொண்டவை.

1. ஒரு வகுப்பில் ஆசிரியர் மரண தண்டனை பற்றி விளக்கினார்.மரண தண்டனை ஏன் கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த போது எவன் ஒருவனும் அவன் செய்த குற்றச்செயல் மட்டுமே அல்ல என்ற காரணத்தையும் சொன்னார்.A man can't be defined by his crime.அவன் வாழ்க்கையில் அவன் செய்த ஒரு செயல் அந்தக் குற்றம்.அவன் அது அல்ல.மரண தண்டனை மாறாக அவன் அந்தக் குற்றமே என்று சொல்கிறது என்றார்.எனக்கு அந்த வாதம் பிடித்திருந்தது.மரண தண்டையிலிருந்து விலக்கிக்கூட நாம் இதை பார்க்கலாம்.எவர் ஒருவரும் அவர் செய்த குற்றம் மட்டும் அல்ல.

2. நான் இந்த வகுப்பில் சேர்ந்த பின்னர் அடிக்கடி இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன்.முக்கியமான நமது அடிப்படை உரிமைகள் பகுதி.அதில் பிரிவு 20 குற்றச் சாட்டப்பட்டவருக்கான உரிமைகளைப் பற்றிய பிரிவு.அதில் ஒரு வரி இருக்கிறது.

"எவர் ஒருவரும் ஒரு குற்றத்திற்காக ஒரு முறைக்கு மேல் தண்டிக்கப்படக் கூடாது."

அதாவது ஒரு குற்றத்திற்கு ஒரு முறை தான் தண்டனை அளிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவு சொல்கிறது.எத்தனை அற்புதமான வரி.விவிலயத்தின் வரி போன்ற ஒலியை எழுப்பும் வரி.

நாம் மேலே சொன்ன இரண்டையும் பொதுவாக நமது தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்றுவது இல்லை.ஒருவர் குற்றம் நிகழ்த்திவிட்டால் அந்த குற்றத்திலிருந்து நீக்கி அவரை நாம் அதன் பின் பார்ப்பதில்லை.அதே போல ஒரு முறை அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால் அந்தக் குற்றத்தை அதன் பின் சுட்டிக்காட்டமால் நம்மால் இருக்க முடிவதில்லை.இந்த இரண்டு பண்புகளும் நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.இதனால் தான் இலக்கியம் போல சட்டமும் பல அறிதல்களை அளிக்கக்கூடிய ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.


சுயமும் ஆளுமையும்


ஆங்கிலத்தில் Enmeshment என்ற சொல் இருக்கிறது.இந்தியக் குடும்பங்களில் அதிகம் காணப்படும் ஒன்று தான்.பிறரில் நம்மை காண்பது என்று இதைச் சொல்லலாம். எனது உடல், எனது மனம் , எனது விருப்பு வெறுப்புகள் , எனது அடையாளம் என்ற எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் பிறருடன் நமது ஆளுமையை இணைத்துக் காண்பது Enmeshment என்று சொல்லலாம்.அந்த பிறர் தந்தை, தாய், சகோதரன், ஆசிரியர், தலைவர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.பொதுவாக Enmeshment குடும்பச் சூழலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தை.இதனுடன் தொடர்புடைய மற்றொரு சொல் ஆளுமைக் குறைபாடு, ஆளுமைச்சிக்கல்(Underdeveloped Self).

சிலர் பன்னிரண்டு வயதிலேயே தனி ஆளுமைகளாக முகிழ்ந்து விடுகிறார்கள்.தங்களுக்கு எது பிடிக்கும் , பிடிக்காது என்பதிலிருந்து தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொள்வது வரை அவர்கள் முழுமையான தனிமனிதர்களாக வளர்ந்து விடுவார்கள்.சிலர் பதினெட்டு இருபது வயதில் அந்த முதிர்ச்சியை அடைவார்கள்.சிலர் முப்பது வயதில் கூட அத்தகைய தனி மனிதர்களாக ஆளுமைகளாக மாறாமல் குறைப்பட்ட ஆளுமைகளாகவே இருப்பார்கள்.இதற்கு பெரும்பாலும் தாய் அல்லது தந்தையின் வளர்ப்பு முறை ஒரு காரணமாக இருக்கும்.அல்லது அவர்கள் சிறு வயதில் பதின் பருவத்தில் எதிர்கொண்ட சிக்கல்களால் கூட இவை நிகழலாம்.ஆனால் குடும்பம் இதில் முக்கிய பங்காற்றுகிறது.உங்களுக்கு உடல் வலி என்றால் நீங்கள் துடிக்கலாம்,உங்களுடன் சேர்ந்து உங்களின் தாயும் தந்தையும் துடித்தால் அங்கே வெவ்வேறு உடல்கள் என்ற எல்லைகள் இல்லாமல் போகின்றன.தன் தந்தையில் தன்னைக் காண்பது , தாயில் காண்பது என்று அந்தக் குழந்தை வளர்கிறது.அங்கே தாய் தந்தையர் செய்ய வேண்டியது உங்களுக்கான சிகிச்சையை அளிப்பது தான்.

இப்படி வளரும் குழந்தைகள் - பதின் பருவத்தில் இளைஞனாக வெளி உலகிற்கு வரும் போது பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.காபி வேண்டுமா டீ வேண்டுமா என்று கேட்டால் அவர்களால் சட்டென்று பதில் சொல்ல முடியாது.பிறர் என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்பார்கள்.சிலர் தங்கள் அனுபவங்களின் வழி இதிலிருந்து விடுபடலாம்.சிலர் தங்கள் வாழ்நாள் முழுதும் இந்த ஆளுமைச்சிக்கலூடே வாழ நேரலாம்.

இத்தகையோர் தாங்கள் எதிர் கொள்ளும் பேராளுமைகளுக்கு முன் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார்கள்,சரணடைகிறார்கள். அவர்களால் எந்த ஒன்றிலும் தெளிவான முடிவை நோக்கி எளிதில் நகர முடிவதில்லை.இத்தகையோர் தான் பெரும்பாலும் சுரண்டப்படுகிறார்கள்.பொருளாதார ரீதியில், உடல் அளவில் , உளவியல் ரீதியில் என்று இந்தச் சுரண்டல் அவர்கள் யாரிடம் சிக்குகிறார்கள் என்பது பொருத்து மாறுபடலாம்.வெகு சிலரே இந்த அனுபவங்கள் வழியாக தங்களை உடைத்துக்கொண்டு வெளியே வந்து புதிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.பலர் சிதறிப்போகிறார்கள்.

தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இத்தகைய இளைஞர்களைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.அவர்களை இவர்களால் எளிதில் குழப்ப முடிகிறது.தன்பால் விழைவு கொண்டோரில் சிலர் இரண்டு வழிகளை கடைப்பிடிக்கிறார்கள்.ஒன்று தாங்கள் பரிதாபத்திற்கு உரிய ஜீவன் என்றும் கருணை காட்டப்பட வேண்டும் என்றும் கெஞ்சுவார்கள்.மற்றொரு முனையில் தாங்கள் எத்தனை பெரிய ஆளுமை என்றும் தன் அதிகாரம் எத்தகையது என்றும் வேஷம் கட்டுவார்கள்.அவர்கள் இந்த இருவேறு நிலைகளை மாறிமாறி நடிப்பார்கள்.தங்களுக்கு இரை சிக்குமா என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.அதே நேரத்தில் இத்தகையோர் சற்று தெளிவுடனும் இருப்பார்கள்.அந்த இரையை ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து விட்டால் அந்த இரையை விட்டுவிட்டு அடுத்த தேர்வுக்கு போய்விடுவார்கள்.

தன்பால் விழைவு கொண்டு பிறரை சுரண்ட முயல்வோர் பெரும்பாலும் பதினைந்து வயதிலிருந்து இருபத்தியைந்து வயதுக்குள் இருப்போரைத்தான் தங்கள் இலக்காக கொள்கிறார்கள்.தன்பால் விழைவு பிழையல்ல என்று தான் இன்றைய சட்டமும் , விஞ்ஞானமும் சொல்கிறது.ஆனால் உங்களுக்கான இணையை நீங்கள் தான் தேடிப் பெற வேண்டும்.இணை வேறு இரை வேறு.

இப்போது தமிழ் நவீன இலக்கிய சூழலில் வந்து கொண்டிருக்கும் புகார்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அதிர்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது.பிறரைச் சுரண்டும் அதிகாரம் யாருக்குமில்லை.எங்கெல்லாம் Cult குழுக்கள் உருவாகுகின்றனவோ அங்கெல்லாம் சுரண்டல்கள் நிகழ்கின்றன.நீங்கள் எந்த அமைப்பில் , குழுவில், மடத்தில் வேண்டுமானாலும் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.அந்த குழுவின் பேராளுமையை விதத்தோதுங்கள்.அவரே உலகை உய்விக்க வந்த தூதன் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.ஆனால் எல்லாவற்றிற்கும் அப்பால் நீங்கள் ஒரு தனிமனிதன் என்பதையும் உங்களுக்கு என்று ஒரு ஆளுமை உண்டு என்பதையும் உணருங்கள்.உங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்.இந்த எல்லைக்கு மேல் ஒருவர் என்னை மனதளவில் ,உடல் அளவில் நெருங்க அனுமதிக்க இயலாது என்று உறுதி கொள்ளுங்கள்.கடவுளே என்றாலும் நான் அந்த கடவுளின் பகுதி அல்ல என்பதை மனதில் நிறுத்துங்கள்.

பிறரைச் சுரண்டுவோர் வெகுளிகள் அல்ல.அவர்கள் நீங்கள் யார் , உங்கள் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள், உங்களின் சமூக அந்தஸ்து என்ன , திருப்பி அடிக்கும் சாத்தியம் கொண்டவரா என்பதை கவனிக்கிறார்கள்.உங்கள் உடல்மொழியை அவர்கள் மிகத் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.நீங்கள் மிகவும் கூச்சப்படக்கூடியவரா, அச்சப்படுபவரா, அதிர்ந்து பேசாதவரா என்று அனைத்தையும் அவர்கள் அளக்கிறார்கள்.அதன் பின்னர் தான் தங்கள் தந்திரங்களை துவங்குகிறார்கள்.அவை வெறும் Trial & Error அல்ல. கணக்கிடப்பட்ட Trial & Errors.

காரல் மார்க்ஸ் சமூகத்தில் மூலதனம்(சொத்து) மட்டுமே ஒருவனின் நிலையை தீர்மானிக்கிறது என்றார்.All relations are essentially financial relationships என்று சொன்னார்.ஆனால் மாக்ஸ் வெபர் சமூக அந்தஸ்து , சொத்து , அதிகாரம் ஆகியவைதான் சமூகத்தின் ஒருவனின் நிலையை தீர்மானிக்கின்றன என்று சொன்னார்.மாக்ஸ் வெபர் சொல்வது தான் சரி. இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த அவச் சூழல் இந்த பண்பாட்டு அதிகாரத்தின் வழியாக நிகழ்த்தப்பட்டுள்ளது.வெறும் தனி மனிதனாக இவர்கள் தங்கள் இரையை அடையவில்லை.அதற்கு பின்னால் அவர்கள் உருவாக்கிக்கொண்ட பண்பாட்டு அதிகாரம் அவர்களுக்கு உதவியிருக்கிறது.

இன்றைய சூழலில் உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.ஸ்வதர்மம் முக்கியமானது.நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

முடிந்தால் தஸ்தாயெவ்ஸ்கியின் The Adolescent நாவலை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.Underdeveloped Self பற்றி புரிந்துக்கொள்ள உதவும் நாவல்.


குற்றங்களும் பிம்பங்களும்

 

பொதுவாக குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் ஏன் பல வருட நட்பு இருந்தது அல்லது தொடர்பு இருந்தது என்ற கேள்வி  அனைத்து வகை சுரண்டல் சார்ந்த குற்றங்களிலும் முன்வைக்கப்படுகிறது.பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல் , உணர்வுச் சுரண்டல் என்று பல வகையான சுரண்டல்களில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.உண்மையில் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் உருவாகும் உறவும் ஆழமான பிணைப்பு கொண்டது தான்.காதல் போன்ற பந்தம்.அந்தப் பிணைப்பு பல நேரங்களில் வலுவானதாகவும் அமைகிறது.அந்த உறவு ஒரு விஷ சுழற்சி போல இயங்குகிறது.அதில் சில நேரங்களில் குற்றவாளியும் மகிழ்ச்சியின்றி பயணிக்கிறார்,குற்றமிழைக்கப்பட்டவரும் பயணிக்கிறார்.காதல் கொண்ட இருவர் ஒருவரை ஒருவரை அறிந்துக் கொள்வது போலவே இது போன்ற துர் உறவுகளிலும் அறிதல் நிகழ்கின்றது.

நாம் யார் என்பது குறித்து நம்மிடையே ஒரு பிம்பம் இருக்கிறது.நான் சர்வோத்தமன் , நெய்வேலியில் வளர்ந்தேன், பொறியியல் படித்தேன், கணினித்துறையில் வேலை செய்கிறேன்,  மனைவி குழந்தைகளுடன் பெங்களூரில் வாழ்ந்து வருகிறேன், கதைகள் கட்டுரைகள் எழுதுவேன் என்று ஒரு பட்டியல் கொண்ட பிம்பத்தை நான் என்னில் சேகரித்து வைத்திருக்கிறேன்.இவற்றுடன் நான் கொண்ட விழுமியங்களும் நம்பிக்கைகளும் அதில் இருக்கும்.ஆங்கிலத்தில் Spirit என்று சொல்லலாம்.ஆனால் இது ஆன்மா அல்ல.ஆடி பிம்பம்.இது தான் ஒரு மனிதன் தனது நேற்றையும் நாளையையும் இன்றையும் இணைத்து ஓர் இணைவை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.இதுதான் ஒரு அறுபடாத தொடர்ச்சியை தக்க வைக்க உதவுகிறது.

இந்த பிம்பத்தில் ஒருவன் சிறுவனாக பவுடர் பூசி தலை வாரி மிட்டாய் மென்றவாறு தன் தாய் தந்தையருடன் அமர்ந்திருக்கிறான்.அங்கு அவன் மிக பாதுகாப்பாக இருக்கிறான்.இந்த பிம்பம் உடைபடாத வரை மனிதனுக்கு பிரச்சனையில்லை.ஆனால் அந்த ஆடியில் அவன் காணாமல் போய்விட்டால் அவன் சிதறுகிறான்.காவல் நிலையங்களில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது சில நேரங்களில் உடைகள் அற்று நிர்வாணமாக நிறுத்தப்படுகின்றனர்.அது அவனை அவமானம் கொள்ளச் செய்வதற்காக மட்டும் நிகழ்த்தப்படுவது அல்ல.அவன் தன்னுள் கொண்டுள்ள அந்த பிம்பத்தை உடைப்பதற்காகவும் தான்.அதனால் தான் காவல் நிலையங்களிலிருந்து பின்னர் வெளிவரும் பலர் சில காலத்திற்கு எந்தச் செயலிலும் ஈடுபட முடியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.ஒருவன் தன்னைப்பற்றி கொண்டுள்ள சமூக மதிப்பீடு , பிம்பத்தை நொறுக்குவது தான் இத்தகைய தண்டனைகளுக்கு பின்னால் உள்ள உளவியல்.அவன் வெளியே சென்று தன் பழைய செயல்களை செய்யக்கூடாது என்பதற்காக நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறை.

பெண்களும் ஆண்களும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் சில நேரங்களில் இது காரணமாக அமைகிறது.அவனது ஆன்மாவை (ஸ்பிரிட்) கொன்று இனி நீ ஒன்றுமில்லை  , நீ ஒரு சக்கை என்று சொல்வது தான் இந்தச் செயலுக்கு பின்னால் உள்ள காரணம்.பெரும்பாலான சுரண்டல்களும் இதைத்தான் செய்கின்றன.ஆனால் அதை பெளதிகமான பருப்பொருளாக நம்மால் சில நேரங்களில் காண இயலாது.சுரண்டல்களின் ஆதார விசை பிம்ப வழிபாடும், நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் தான்.சில நேரங்களில் சிலர் வேலையின் பொருட்டு , ஒரு வாய்ப்பின் பொருட்டு சுரண்டலை பொறுத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் அது நம்பிக்கையால் நிகழலாம்.பொருளாதாரச் சுரண்டல்கள் அப்படித்தான் நிகழ்கின்றன.வேறு சில தந்தை , குரு , ஆசிரியர் போன்ற பிம்ப வழிபாட்டால் நிகழ்பவை.

இதில் சுரண்டுபவர் முதலில் செய்வது சுரண்டுபவரை ஆராய்வது தான்.பின்னர் தன் சுரண்டலை மெல்லத் துவங்குகிறார்.பாதிக்கப்படுபவர் தன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா என்பதை கவனிக்கிறார்.எதிர்ப்பு இல்லாத போது அதை தொடர்கிறார்.இதில் பாதிக்கப்படுவர்களுக்கு தாங்கள் எதையோ இழக்கிறோம் என்ற எண்ணம் இத்தகைய உறவின் துவக்கத்திலேயே இருக்கும்.ஆனால் அது இன்னது என்று அவர்களால் சொல்ல இயலாது.குழப்பம் அடைவார்கள்.எப்போதும் இந்தச் சுரண்டும் நபரை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.குற்றவாளியின் தரப்பு நியாயத்தை தங்களுக்குள் விளக்கிக்கொள்வார்கள்.தர்க்கப்படுத்தி எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது , நாம் தான் தேவையின்றி அலட்டிக்கொள்கிறோம் என்று சமாதானம் கொள்வார்கள்.ஆனால் அவர்களால் அந்த உறவு தொடங்குவதற்கு முன்னர் இருந்தது போல மகிழ்ச்சியாக இருக்க இயவவில்லை என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.மன அழுத்தம் கொள்வார்கள்.எப்போதும் அவர்களுக்குள் ஓர் உரையாடல் இருக்கும்.அவர் தான் அணிந்திருக்கும் உடைகளை யாரோ தனக்குத் தெரியாமல் திருடுகிறார்கள் என்ற எண்ணத்தை அடைவார்.ஆனால் உண்மையில் அப்படித்தானா என்ற குழப்பமும் அவருக்கு இருக்கும்.மேலே சொன்ன நம்பிக்கை போன்ற காரணங்களால் அந்த உறவு நீடிக்கவும் செய்யும்.

உடல் அளவில் நிர்வாணப்படுத்தி தண்டிப்பது , வன்புணர்வு செய்து தண்டிப்பது போன்றது தான் சுரண்டலும்.இது போன்ற சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர் மனச்சோர்வு , தனிமை, குற்றவுணர்வு , அவமானம் , தற்கொலை உணர்வு, உடல் வலி , வன்மம்  ஆகியவற்றை அனுபவக்கின்றனர்.இதில் உளவியல் ரீதியில் அவரது பிம்பம் உடைக்கப்படுகிறது.சிலர் இத்தகைய உறவில் ஈடுபடத்துவங்கிய ஆரம்ப நாட்களில் வெகுவாக எடை இழப்பார்கள்.தங்களை சுருக்கிக்கொள்வார்கள்.நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவார்கள்.உடைக்கப்பட்ட ஆடியில் அவர் கேலிச்சித்திரமாகிறார்.ஏதோ ஒரு தருணத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தான் பாதிக்கப்படுகிறோம் என்று புரியத் துவங்கும்.இந்த உறவில் சிக்கல் இருக்கிறது என்று உணர்வார்கள்.ஆனால் பாதிக்கப்பட்டவரின் பிம்பம் உடைந்துவிட்டது.அதை மறுபடியும் கட்டியெழுப்பதற்கான கச்சாப்பொருட்கள் சுரண்டப்பட்டவரிடம் இருப்பதாக அவர் நம்புகிறார்.கிட்டத்தட்ட தன் உடலை மறைக்க தேவையான உடை தன்னைச் சுரண்டியவரிடம் மட்டுமே இருப்பதாக அவர் நம்பத் தலைப்படுகிறார்.அது வெளியில் கிடைக்காது என்கிற வகையிலேயே அவரின் உரையாடல்கள் அமையும்.அவர் தன்னைச் சுரண்டியவரிடம் இறைஞ்சுவார்.மிரட்டுவார்.தன்னால் இயன்ற அனைத்து வழிமுறைகளையும் செய்துப் பார்ப்பார்.சுரண்டுபவர் அவரைப் பார்த்து இளித்தப்படியே இருப்பார்.அல்லது மேலும் குழப்புவார்.உடையை கொடுப்பது போல கொடுத்து பிடுங்கிக் கொள்வார்.அது ஒரு விஷச் சுழற்சி போலச் சுழன்றபடியே இருக்கும்.பின்னர் ஏதோ ஒரு கட்டத்தில் இருவரும் உறவை முறித்துக்கொள்வார்கள்.பெரும்பாலும் சுரண்டுபவர் தான் உறவை முறிப்பார்.ஏனேனில் அவருக்கு அடுத்த இரை கிடைத்திருக்கும்.இந்த விடைபெறுதலுக்குப் பிறகும் இந்த உறவுகள் இருவர் நினைவிலும் நீடிக்கும்.

பாதிக்கப்பட்டவர் அந்த உறவின் முடிவில் தான் முழுமையற்றவராக மாறிவிட்டோம் என்பதை உணர்வார்.கண்ணாடியில் முகம் பார்க்கும் போது தன்னில் ஏதோ ஒன்று குறைகிறது என்று கவலை கொள்வார்.அவர் கோபம், அவமானம், துயரம் , குற்றவுணர்வு என்று பல்வேறு உணர்வு நிலையில் தகித்தப் படியே இருப்பார்.ஓர் இடத்தில் அமர இயலாமல் தவிப்பார்கள்.ஏனேனில் அவரது பிம்பம் உடைக்கப்பட்ட நிலையிலேயே நொறுக்கப்பட்ட நிலையிலேயே தான் இருக்கிறது.அதை அவரால் மீட்க இயலவில்லை.மெல்ல தன்னைச் சுரண்டியவரை எப்படி பழிவாங்கலாம் என்று எண்ணத் துவங்குவார்.

1. உடல் அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது.

2. பொருளாதாரத் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது. வேலையில் இருந்து நீக்க வைப்பது அல்லது தொழிலை முடக்க முனைவது.

3. சுரண்டியவருக்கு தெரிந்த நபர்களுக்கு அவரைப்பற்றிய சுய ரூபத்தை தெரியப்படுத்துவது.

4. பொதுவில் முன்வைப்பது.

5. புறக்கணித்து முன்செல்வது.

6.  மன்னிப்பை கோருவது.

இதில் பாதிக்கப்பட்டவர் தன்னால் இயன்ற வகையில் ஒன்று பழிவாங்குவார் அல்லது புறக்கணித்துச் செல்வார் அல்லது மன்னிப்பை கோருவார்.இதனால் தான் பல நேரங்களில் பத்து வருடங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தவை சட்டென்று வெளியில் வருகின்றன.பாதிக்கப்பட்டோரை பொறுத்தவரை அவை எப்போதோ நிகழ்ந்தவை அல்ல , அவர்களுக்கு அது முந்தைய நாள் நடந்த நிகழ்வு போல இருக்கும்.அந்த உரையாடல்கள் அவர்களுக்குள் நிகழ்ந்தபடியே இருக்கும்.சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர் கோருவதெல்லாம் எந்த ஆனாலும் இல்லாத ஒரு எளிய மன்னிப்பை மட்டுமே.ஏனேனில் அது பாதிக்கப்பட்டவரை ஒரு மனிதராக பொருட்படுத்துகிறது.அவரின் கேலிச்சித்திரம் நேர் செய்யப்படுகிறது.அவர் தன் ஆடி பிம்பத்தை மறுபடியும் பெறுகிறார்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு சிலர் தங்கள் முந்தைய பிம்பத்தை திரும்ப பெறுகின்றனர்.அவர் தன் தாய் தந்தையருடன் அமர்ந்து மிட்டாய் மென்றவாறு பேராக்கு பார்க்கத் துவங்குகிறார்.மனம் அந்த ஏகாந்த நிலையை அடையும் போது அவர் தன் வேலைகளை முன் போல செய்யத் தொடங்குவார்.சிலர் ஒரு போதும் முன் போல் இயங்க இயலாத வகையில் முழுமையாக சிதறிப்போய் விடுகின்றனர்.சிலர் தன்னைச் சுரண்டியவரிடமே சென்று சேர்ந்துவிடுகிறார்கள்.ஜெயகாந்தனின் கதை ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை பாதித்தவனிடமே சென்று சேர்கிறார்.

ஆனால் எப்போதும் சுரண்டியவருக்கும் பாதிக்கப்பட்டவருக்குமான அந்த உறவு ஒரு பிணைப்பு நீடித்துக்கொண்டே தான் இருக்கும்.சுரண்டியவரின் துணை அறியாத சில இரகசியங்களை பாதிக்கப்பட்டவர் அறிவார்.சிலர் சில காலம் கழித்து அணைத்தையும் மறந்து எளிமையாக உரையாடக் கூடியவர்களாகவும் மாற்றம் கொள்வார்கள்.காலம் சிலரை கனிய வைக்கும்.மறக்க வைக்கும்.சுரண்டுபவரும் எல்லா நேரங்களிலும் திட்டமிட்டு இவற்றை நிகழ்த்துவதில்லை.அது நிகழத் துவங்குகையில் அவர் திட்டமிடத் துவங்கிறார்.ஆனால் பல நேரங்களில் சுரண்டுபவர்களிடம் ஒரு Pattern இருக்கும் என்றே உளவியலில் சொல்லப்படுகிறது.அனைத்தையும் கறுப்பு வெள்ளையில் நம்மால் அடைக்க முடியாது என்பதும் உண்மைதான் .உறவுகள் அது அப்படித்தான் என்ற சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்று இருக்கிறது.அது இத்தகைய விஷச் சுழற்சி கொண்ட உறவுகளுக்கும் பொருந்தும்.

இத்தகைய விஷயங்களை சரியாக சொல்வதற்கு புனைவு தான் சரியான வாகனம் என்று இதை எழுதும் போது உணர்கிறேன்.உளவியலாளர்களால் இன்னும் நன்றாக விளக்க முடியும்  என்று நினைக்கிறேன்.