Showing posts with label ரஜினிகாந்த். Show all posts
Showing posts with label ரஜினிகாந்த். Show all posts

My Blah Blah's on Kabali





The reunion scene of Kabali with his wife is brilliant. Ranjith has done a great job.it needs a brilliant matured mind to enact the scene like that.Ranjith will play a long innings in Tamil film industry. He should be having lot of ideas. He will try to connect the black with the dalit activism in his future films.The movie has certain templates similar to Madras.To get educated, shout for the dignity, get it.there will be always your own people who will get you down for petty issues.And it would continue.Surprised to see a person less than 35 with much ideas and enacting it so well.Great work.

***

While Baradwaj Rangan can dedicate so much time for Maniratnam's movies why can't he atleast recognize that there is so much work done in the movie Kabali.Why is there such a condescending attitude.Is it not portrayed beyond doubt that Kabali is a dalit.Why can't Kabali be shown as a person who just works in Malaysia migrated recently.Why he is shown as a plantation worker.Why is there a reference to his wife as belonging to a different caste.Why is it referred more than once that he is a educated person and he knows his rights and only shouts for them.Why is it referred that he is not just a rowdy but politically indoctrined person by Tamilnesan.The final dialogue by Kabali ,is it not a shout by a dalit against the upper caste irritation against the growth of dalits through education.Is the reference to the coat suite more than once was without any meaning.Is not Kabali with big gun in the final scene resemble Malcolm X.Was not the choreographic sequences in Madras and Kabali had a reference to black.Is all these done without any sort of hard work , just like that.Why not a pat on the back for such a brilliant work.What was the last time when a movie was made about tamils outside Tamilnadu.

***
Ranjith's Scriptwriting:

In the movie Madras , the friendship between the Protoganist and his friend is not established in the movie.It doesn't grow in the movie.It is already grown before the script starts.Ranjith knows that they are thick friends and assumes the audience will also understand so.He doesn't have a scene or two to establish how both of them value their friendship and why.This is because in scriptwriting, sometimes the writer assumes the audience as educated as himself about the characters and the setting.

In advertisements, we have only 30 sec to 1 minute for the characters to get established and sell the product.So they appear as middleclass man, house wife, Retired Grandfather, all worried about the skin problem of their only kid which was because they accidentally used a soap other than Hamam.
Here the audience accept the characters as such.They are plastic.We sometimes see print advertisements on paper or on billboards which also has a similar establishment of characters and relationships.They are already developed before showing to the audience.It uses the symbols, colours, physique of the person to strike a chord with the viewer, so that he gets the same feeling about the social status and the mood of the person in the Ad.

There is a similar way of Raniith's screenwriting in establishment of certain characters or developments or relationships.For example , in the movie Kabali there are references to different things.If there was a scene between Tamilnesan and Kabali drinking a cup of tea, and Tamilnesan asking about the personal life of Kabali , we would get a better understanding on how closely they were , and how much impact Tamilnesan makes on Kabali.Also , if there was an scene or two on why Kabali decides to Rebel and not stays as he is.

The decision of Kabali or the relationship between Kabali and Tamilnesan is not established, it is shown as something that developed outside the script.Ranjith can draw.I think this somehow influences his characters.They are sketched before the script.The lines are not drawn in the script.They are already drewn.Mostly in Ranjith's movies they don't change.They are what they are.He shows us the grown characters and a stage and then starts the drama.

He doesn't take time to grow them and set a stage and then to play.The Play starts at scene 1.Lot of movies take almost one hour of time to establish the characters and the problems and only then the play actually starts.For example , in movie Dalapathy , Surya is established, then Deva character is established , then Arjun and then the stage is set and the play starts.It is one way of screenwriting.

Ranjith assumes that through references, certain portraits, dialogues he can take care of the establishing and stage setting.For example , he assumes that audience know North Madras.He assumes that the viewer can get an idea of Kabali through the flashback and references.

That is how Kabali is given to us as a Grown character and if we are able to consume it is well and good , else no.Maybe he thinks that the viewer has to connect the dots.This seems to be his way of screenwriting.
 

சலிப்பு







ரஜினிகாந்த் பாபா திரைப்படம் தோல்வி அடைந்த போது மிகவும் துவண்டுவிட்டார்.திரைத்துறையில் அவரின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள இயலாத பலர் அதை கொண்டாடினார்கள்.இனி ரஜினிகாந்த் அவ்வளவுதான் என்றார்கள்.மூன்று வருடம் கழித்து சந்திரமுகி என்ற மலையாளத்திலும் கன்னடத்திலும் வெளியாகி வெற்றி பெற்ற கதைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக மட்டும் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார் ரஜினிகாந்த்.அந்தப் படம் வெற்றி பெற்றது.லிங்கா வணிக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை.ஆனால் அவரின் எதிரிகள் அதை கொண்டாடவில்லை.ஏனேனில் பாபா படம் தோல்வியின் போது உடைக்கப்பட்ட ரஜினி பிம்பம் எந்திரனுக்கு பிறகு உடைபட இயலாத இந்திய - ஆசிய அளவிலான வேறு ஒரு பிம்பத்தை அடைந்துவிட்டது.இப்போது கபாலி தோற்றாலும் அது எந்திரன் இரண்டாவது பாகத்தின் வணிகத்தை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை.ஏனேனில் ரஜினியின் பிம்பம் இன்று தமிழகத்தில் மட்டும் செல்லுபடியாகும் வணிகம் அல்ல.அநேகமாக தயாரிப்பாளர்கள் முதலீடு செய்யும் பணத்தை திரும்ப எடுத்துவிட முடியும் என்கிற சந்தை கணக்கீடுகளுக்கு பின்பே இத்தனை பெரிய பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

ரஜினி ஒரு நடிகராக இந்தியாவில் வேறு எந்த நடிகரோடும் ஒப்பிட இயலாதவர்.கமலஹாசன் போல அவர் பல வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவில்லை.நிச்சயமாக ரஜினியால் நாயகன், குணா போன்ற படங்களில் நடித்திருக்க முடியாது.ஆனால் சின்ன மாற்றங்களோடு வறுமையின் நிறம் சிவப்பு படத்தை அவரால் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும்.இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஒரு பெரிய மடக்கும் பேனாவை பயன்படுத்தியிருப்பார்.என் உறவினர் ஒருவர் அவருக்கு அதை விமான நிலையத்தில் பரிசாக அளித்திருக்கிறார்.நான் இதை ஏதேனும் ஒரு படத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார்.அதை செய்துமிருக்கிறார்.ஸ்ரீதர் படிக்கட்டில் நடந்து வர சொல்லும் போது இரண்டு அடி முன்வைத்து பின் இறங்கி மறுபடியும் ஏறுவது போல அதை செய்கிறார்.ரஜினிகாந்த் தொடர்ந்து தன் படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் தன்னால் அந்தக் காட்சியில் புதிதாக எதையாவது செய்ய முடியும் என்றால் அதை செய்கிறார்.

ரஜினி தொண்ணூறுகளுக்கு பிறகு செய்த படங்களில் ஒரு சட்டகம் இருப்பதை அபிலாஷ் காட்சிப்பிழை இதழ் கட்டுரை ஒன்றில் சொல்லியிருந்தார்.தொண்ணூறுகளுக்கு பிறகு அவர் நடித்த படங்களின் கதையை அவர் முடிவு செய்தார்.அதுவரை பெரும்பாலான படங்கள் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்தவை.அவரிடம் இயல்பாகவே ஒரு விட்டேத்தியான மனநிலை இருக்கிறது.அத்தகைய கதாபாத்திரங்களை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.உறவுகள் மீது ஆழமான கசப்பு அவருக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.சட்டென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்லும் ஒரு மனநிலை மீது அவருக்கு ஆழமான ஈர்ப்பு இருக்கிறது.அவர் நடித்த நிறைய படங்களில் அதிக பணம் சம்பாதித்து அதிகாரத்தை அடைந்து பின்னர் அதை தூக்கி எறிந்துவிட்டு எளிய வாழ்க்கையை நோக்கி செல்லும் சட்டகம் மறுபடி மறுபடி வருகிறது.

அவருடைய ஆன்மிகம் மிகவும் மேலோட்டமானது.அவர் நம்பும் ஆன்மிகம் பாபா படத்தில் அவர் முன்வைக்கும் ஆன்மிகம்தான்.ஆனால் அவரின் சிறப்பியல்பு அவருடைய சலிப்புதான்.அவர் மிகச்சிறப்பாக நடித்த காட்சிகள் அவர் சலிப்பை வெளிபடுத்தும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த படங்களில்தான்.முத்து படத்தில் வரும் தந்தை கதாபாத்திரம், பாபாவில் தன்னை காதலித்த பெண் தான் கூலி என்பதால் நிராகரிக்கும் போது , நல்லவனுக்கு நல்லவனில் தன் மகள் தன்னை மதிக்காமல் ஒருவனை திருமணம் செய்து கொள்ளும் போது, நண்பர்கள்  உறவினர்கள் ஏமாற்றிவிடும் தர்மதுரை ,அண்ணாமலை ,அருணாச்சலம் போன்ற படங்களில் நாம் இதை பார்க்கலாம்.சமீபத்தில் லிங்கா படத்தில் சமையற்காரன் கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வருவார்.அந்த ஒட்டு மொத்த படத்தில் அந்த சில காட்சிகள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும்.ஏனேனில் அதில் ஒரு சலிப்பு இருக்கிறது.ஊர் மக்கள் தன்னை புரிந்துகொள்ளாமல் தூற்றியதை எதிர்கொள்ளும் மனம் அடையும் சலிப்பை மிக எளிதாக வெளிப்படுத்தியிருப்பார்.

தளபதி படத்தில் தன் அன்னை தன்னுடனே இருக்கிறேன் என்று சொல்லும் போது அவர் அதை கொண்டாட்டமாக வெளிப்படுத்துவதில்லை.ஒரு எளிய முக அசைவு.அவ்வளவுதான்.தான் கொண்ற அதே ஆளின் மனைவியை திருமணம் செய்து அவளுடன் வாழும் போது அவர் அதே வாழ்வின் மீதான சலிப்பை வெளிப்படுத்துகிறார்.மன்னன் படத்தில் இறுதியில் மனைவியின் மன்னிப்பை ஒரு சலிப்புடன் ஏற்கிறார்.தளபதி படத்தில் தன் அன்னையை முதல் முறையாக பார்க்கும் காட்சியில் அவர் அன்னையின் மடியில் தலை சாய்த்து அழுவது போல காட்சிபடுத்தியிருப்பார் மணிரத்னம்.உண்மையில் அந்தக் காட்சி ரஜினி என்ற ஆளுமைக்கு அந்நியமானது.அந்த கதாபாத்திரத்திற்கு அல்ல.ரஜினிக்கு.அதே காட்சியில் அன்னை ஒரு தூணிலும் ரஜினி ஒரு தூணிலும் சாய்ந்து பெரிதாக எந்த உரையாடலும் இல்லாமல் முடித்திருந்தால் அது ரஜினி ஆளுமைக்கு பொருந்தியிருக்கும்.காதலின் வெற்றியிலும் தோல்வியிலும், உறவுகளின் நேசத்திலும் துரோகத்திலும்,நண்பர்களின் குரூரத்திலும் அன்பிலும்  அவர் குதூகலிப்பதும் இல்லை கதறுவதும் இல்லை.சற்று விலகி நின்றே அதை அவர் ஏற்கிறார்,நிராகரிக்கிறார்.இந்த சலிப்பு அவரை அதிக உடல் அசைவுகள் அற்ற எளிய முக பாவனைகள் கொண்ட நடிப்பை வெளிக்கொணற வைக்கிறது.இது ரஜினியின் ஆளுமையின் பகுதி.அது அவரின் திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது.நமக்கு ஏன் அப்படியான நடிப்பு பிடித்திருக்கிறது என்பதும் முக்கியம்.படிக்காதவன் படத்தில் தன் தம்பி காரில் செல்லும் போது ரஜினியை கவனிக்காமல் சேற்றில் காரை ஏற்றி வேகமாக  சென்றுவிடுவார்.தலை குணிந்து தரையை பார்த்து எந்த அலட்டலும் இல்லாமல் கார் சென்ற திசையை நோக்கும் அந்த சலிப்பை ஏமாற்றத்தை ரஜினி சாதரணமாக வெளிப்படுத்துவார்.ஐய்யோ தம்பி என் மீது சேற்றை வாரி இறைத்துவிட்டாயே என்று அவர் கதறுவது இல்லை.மூன்றாம் பிறையில் கமல் செய்வது போல குட்டிக்கரணம் அடிப்பதில்லை.ஏதோ ஒரு வகையில் நாமும் நம் வாழ்வின் மீது அப்படியான ஒரு சலிப்பை கொண்டிருப்பதால் அதை ஏற்கிறோமா,தெரியவில்லை.

ரஜினி பற்றிய இன்னொரு முக்கிய விஷயம் நடிகராக அவர் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை.தளபதி படத்தில் தான் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது துரியோதனன் கதாபாத்திரத்தில் நடிப்பவரும் முக்கிய நடிகராக இருக்க வேண்டும் என்று மணிரத்னத்திடம் சொல்கிறார்.பாண்டியன் படத்தில் அவர் வில்லனுக்கு காவலாளியாக இருப்பார்.ரஜினியன் அக்கா வில்லனுடன் பேசிவிட்டு செல்வது போன்ற காட்சி.ஒரு நிமிடத்திற்கும் மேலாக செல்கிறது.ஆனால் மொத்த காட்சியிலும் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.மிக சின்னச்சின்ன கண் அசைவுகள்.அவ்வளவுதான்.அந்தக் காட்சியில் ஒரு காவலாளி எதை செய்ய முடியுமோ அதை செய்கிறார்.அதற்கு மேல் தான் காணாமல் போய்விடுவோமோ என்று அவர் அசட்டையாக எதையும் செய்வதில்லை.இதை கமலால் செய்யவே முடியாது.அவர் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்.பிறரை நடிக்க விட்டு வேடிக்கை பார்க்க ஒரு நடிகருக்கு அபாரமான தன்னம்பிக்கை வேண்டும்.

வி.கே.ராமசாமி எனது கலைப்பயணம் புத்தகத்தில் ரஜினி அருணாச்சலம் படத்தில் தன்னை ஒரு தயாரிப்பாளராக இணைத்து உதவியதை பற்றி எழுதியிருப்பார்.அப்போது வி.கே.ராமசாமியிடம் சிலர் ரஜினி புகழுக்காக இதை செய்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள்.அதற்கு இவரின் பதில் புகழுக்காக செய்வதாக இருந்தாலும் இதை செய்ய துணிச்சல் வேண்டும் என்பதுதான்.ரஜினி தன் ஹோட்டல் ஸ்பிரிங்ஸ் புனரமைக்கப்பட்ட விழாவில் பேசிய வீடியோவை பார்த்தேன்.78யில் இருபத்தி நான்கு லட்சத்திற்கு ஐம்பதாயிரம் முன்பணமாக கொடுத்து அதை வாங்கியிருக்கிறார்.மீதி பணத்தை ஒன்றரை வருடத்தில் அவர் கட்ட வேண்டும்.அநேகமாக ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைத்து ஒன்றரை வருடத்தில் முழு பணத்தையும் செலுத்துகிறார்.ஹோட்டல் தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட அன்றைய தினத்தில் அந்த ஹோட்டலின் மதில் மீது அமர்ந்து அதுவரை பிடித்திக்கொண்டிருந்த சிகரெட்டை விடுத்து 555 சிகரெட் பிடிக்கிறார்.வேறு ஏதோ ஒரு உயர் ரக சாராயத்தை குடிக்கிறார்.அத்தகைய உழைப்புதான் அவருக்கு Nervous breakdown யை உருவாக்கியது.அதன்பின் எண்பதுகளில் அவர் ரமண மகரிஷி பற்றி பேச ஆரம்பிக்கிறார்.அங்கே அடைந்தவற்றின் மீதான சலிப்பும் களிப்பும் வெற்றியும் அவரின் ஆளுமையில் பெரும் பாதிப்பை செலுத்துகிறது.வெற்றியின் மீது வெறி கொண்ட இளைஞன் வெற்றியின் களிப்பில் அடையும் சலிப்பு.நாம் ரஜினியின் படங்களில் பார்க்கும் ஆளுமை கதாபாத்திரத்தின் ஆளுமை அல்ல.அது ரஜினியே தான்.ஆனால் அது கதாபாத்திரத்திலும் சரியாக பொருந்துகிறது.எனக்கு என்னவோ நலன் குமாரசாமி ரஜினியின் படம் ஒன்றை இயக்கினால் ரஜினியின் ஆளுமையை மிகச்சிறப்பாக வெளி கொணர்வார் என்று தோன்றுகிறது.

ரஜினிகாந்தின் திரைப்படங்கள்




ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய கே.ஹரிஹரன் ரஜினிகாந்த் பற்றி கட்டுரைகள் எழுதினாலும் தொலைக்காட்சியில் பேசினாலும் ஒரு விஷயத்தை முக்கியமாக வலியுறுத்துகிறார்.ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் காரணம் அந்தக் காலகட்டம்தான் என்கிறார்.1975யில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மிகச் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகிறார்.அந்தக் காலகட்டத்தில் லட்சியவாதத்தின் மீது இளைஞர்களுக்கு உருவான நம்பிக்கையின்மையும் விரக்தியுமே ரஜினிகாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ஹரிஹரன்.இதில் ஒரளவு உண்மை இருக்கிறது.என் தந்தை பழைய காங்கிரஸில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.எழுபதுகளில் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் பழைய காங்கிரஸ் என்று உடைகிறது.இந்திரா காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றதில் உள்ள முக்கிய காரணம் காங்கிரஸ் அதுவரை உபயோகப்படுத்தி வந்த காளை சின்னத்தை பழைய காங்கிரஸால் தக்கவைத்துக்கொள்ள முடியாததுதான் என்று ஜெயகாந்தன் தன் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவ கட்டுரைகள் நூலில் எழுதுகிறார்.

பழைய காங்கிரஸ் கட்சியால் எந்த வகையிலும் மறுபடியும் எழுச்சி பெற முடியவில்லை.1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைகிறார்.என் தந்தை அடுத்த சில ஆண்டுகளில் ஜனதா கட்சியின் உறுப்பினரானார்.ஆனால் அதில் அவருக்கு பெரிய ஆர்வமோ ஈடுபாடோ இருந்ததாக தெரியவில்லை. விழுப்புரத்தில் ஜூனியர் வழக்கறிஞராக வேலை செய்துகொண்டிருந்தபோது அவருடைய சீனியர் வழக்கறிஞர் அவரை அழைத்து பத்து ரூபாய் கொடுத்து நான் வாழவைப்பேன் என்ற திரைப்படம் வந்திருக்கிறது, அதில் ஒருவன் நன்றாக நடித்திருக்கிறான் போய் பார் என்று சொல்லியிருக்கிறார்.அதில் ரஜினிகாந்த் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.சிவாஜிதான் ஹிரோ.காமராஜர் பக்தராக இருந்த என் தந்தை அப்படியாக ரஜினி ரசிகராக மாறுகிறார்.1980யில் என் தந்தைக்கு திருமணம்.அதுவரை இருந்த சிறிய அளவிலான அரசியல் ஈடுபாடும் அதன் பின் இல்லாமலானது.எனக்கு நினைவு தெரிந்து விழுப்புரம் , விருத்தாசலம், கடலூர் , சிதம்பரம் என்ற பல ஊர்களுக்கு ரஜினி திரைப்படம் வெளியாகும் முதல் நாள் முதல் அல்லது இரண்டாவது காட்சிக்கு நாங்கள் சென்றிருக்கிறோம்.தொண்ணூறுகளுக்கு பிறகு சிறிது சிறிதாக அது குறைந்தது.ஆனால் பாபா படம் வரை என் தந்தையும் திரைப்படங்களை பார்த்தார்.அதன்பின் அவர் திரையரங்களுக்கு செல்வதில்லை.இப்போது அவர் ரஜினி ரசிகராகவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.அந்த வகையில் கே.ஹரிஹரன் சொல்வதை ஒரளவு ஏற்க முடிகிறது.

ஒரு முறை ஆம்பூரில் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன்.என் நண்பனின் பெரியப்பா காவி வேஷ்டி கட்டி பெரிய ருத்திராட்ச மாலை அணிந்துகொண்டு சாய்வு நாற்காலியில் செளகரியமாக அமர்ந்து முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.அவருடைய நண்பர் அவரை பார்க்க வந்திருந்தார்.இருவரும் முள்ளும் மலரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.நானும் பார்த்தேன்.அப்போது அந்த நண்பர் அந்த வயோதிகரிடம் இந்த மாதிரி திரைப்படங்களில் நடித்ததால்தான் இவரை மக்கள் ஏற்றார்கள் என்றார்.இதுவும் முக்கியமான தரப்புதான்.

ரஜினிகாந்த் 1975யில் பாலசந்தர் மூலமாக அறிமுகமாகிறார்.அவர் திரைப்படக்கல்லூரியில் நடிப்புத்துறையில் பயிற்சி பெற்றவர்.தொடர்ந்து அவர்கள், மூன்று முடிச்சு என்று பாலசந்தர் படங்களில் ஒப்பந்தமாகிறார்.பூவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் கதாநாயகனாகிறார். இந்த காலத்தில் அவருக்கு பல்வேறு அகச்சிக்கல்கள் ஏற்படுகிறது.சட்டென்று நிறைய பணம் , ஒரே நேரத்தில் ஏகப்பட்ட படங்கள், அலைச்சல், தனிமை என்று அவர் சிதறுகிறார்.சில காலம் சிகிச்சையும் பெறுகிறார்.அபிலாஷ் புருஸ் லீ பற்றி எழுதிய புத்தகத்தில் லீ எப்படி தன் வெற்றியால் முற்றிலுமாக சிதறுகிறார் என்று எழுதுகிறார்.கிட்டத்தட்ட அதனோடு ரஜினிகாந்தையும் ஒப்பிடலாம்.ஆனால் ரஜினி மீள்கிறார்.ஒரு பத்திரிக்கையாளர் ரஜினி பற்றி சமீபத்தில் எழுதியிருந்தார்.1980களில் அவருடைய திருமணத்திற்கு முன்பே அவர் ஒரளவு நிலையானவராக மாறியிருந்தார் என்கிறார்.பேச்சில் எப்போதும் ரமணரை பற்றி குறிப்பிட்டுயிருக்கிறார்.நாம் அதைப்பற்றி பேசுவோமே என்று பத்திரிக்கையாளரிடம் சொல்கிறார்.அதற்கு அவர் அதையெல்லாம் பிரசுரித்தால் யாரும் வாசிக்கமாட்டார்கள் என்கிறார்.

தர்மயுத்தம் அவர் கதாநாயகனாக நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற படம்.1979ஆம் ஆண்டு முள்ளும் மலரும் வெளியானது.ஒரு நல்ல நடிகர் என்ற எண்ணத்தை அவர் பெறுகிறார்.1980யில்  ஜானி,முரட்டுகாளை, பில்லா போன்ற படங்களில் நடிக்கிறார்.அவர் சூப்பர் ஸ்டாராக ஆகிறார்.1975யிலிருந்து 85வரையான பத்துவருடங்களுக்குள் அவர் நூறு படங்கள் நடித்திருக்கிறார்.அதன்பின் இந்த முப்பது வருடங்களில் அவர் ஐம்பது படங்கள்தான் நடித்திருக்கிறார்.அவர் என்பதுகளிலிருந்து தொண்ணூறுகள்வரையான காலத்தில் நடித்த பல வெற்றி படங்கள் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்தவை.பில்லா, தீ, மிஸ்டர் பாரத் போன்ற படங்கள் எல்லாமே இந்தியில் வெற்றி பெற்று பின்னர் தமிழில் வந்தவை.அவருடைய கதைப்படங்கள் பெரும்பாலும் இந்த காலத்தில் வந்தவைதான்.முள்ளும் மலரும்,ஜானி,கை கொடுத்த கை, ஆறிலிருந்து அறுபது வரை, தம்பிக்கு எந்த ஊரு, தில்லுமுல்லு, குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் எல்லாமே கதைப் படங்கள்.இதில் அவர் கதையை தீர்மானிப்பவராக இல்லை.இந்த படங்களில் பொது சரடாகவும் எதுவும் பெரிதாக இல்லை.ஒரே பொது சரடு என்றால் அது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது தட்டிக்கேட்பவர்,பெண்கள் பின்னால் சுற்றாதவர், எளிய குடும்பத்தில் பிறந்தவர் போன்றவை.இவற்றை ஒரளவு விஜயகாந்தும் பிற்காலத்தில் செய்தார்.ஆக, ரஜினி இந்த காலத்தில் நடித்தவை முழுக்க வெகுஜன படங்கள் அல்லது கதைப்படங்கள் என்ற அளவிலேயே இருந்தன.

ஆனால் தொண்ணூருகளுக்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை பார்க்க முடியும்.அவர் ஏழையாக பிறப்பார்.அவர் தன் பிறப்பின் மூலமாகவோ உழைப்பின் மூலமாகவோ மந்திரத்தின் மூலமாகவோ மிகப்பெரிய பணக்காரராக , அதிகாரம் கொண்டவராக மாறுவார்.ஆனால் இறுதியில் அந்த பணத்தை, அதிகாரத்தை விட்டுவிட்டு எளிய மனிதராக பற்றற்ற நிலையில் வாழவிரும்புவார்.தாய், நண்பன் தவிர்த்த பிற உறவுகள் மீது ஒரு பற்றற்ற மனநிலை அவருக்குள் இருக்கும்.பணக்காரன், உழைப்பாளி, முத்து, வீரா, பாட்ஷா, பாபா, லிங்கா என்று எந்த திரைப்படத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த சட்டகம் அதிலிருக்கும்.

எஜமான் திரைப்படம் முடிந்து வள்ளி படத்தின் திரைக்கதையை இளையராஜாவிடம் சொன்ன போது , இளையராஜா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஒரு இயக்குனர் போல கதை சொன்னதை கேட்டு வியந்ததாக அவரே ஒரு மேடையில் சொன்னார்.அப்போது அவர் ரஜினியிடம் இனி உங்கள் திரைப்படங்களில் கதையை நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.இளையராஜா சொன்னதால் ரஜினிகாந்த் அப்படி செய்தார் என்று சொல்ல முடியாது, ஆனால் தொண்ணூறுகளுக்கு பிறகு அநேகமாக எல்லா திரைப்படங்களிலும் கதையை அவரை முடிவு செய்திருக்கிறார்.யார் இயக்க வேண்டும் யார் தயாரிக்க வேண்டும் என்ற விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவராக மாறியிருக்கிறார்.இதன் மூலமாக கதையில் தான் விரும்பக்கூடிய ஒரு சட்டகம் இருப்பதாக பார்த்துக்கொண்டார்.இந்த சட்டகம் கிட்டத்தட்ட ரஜினிகாந்த் தன் வாழ்க்கையை பற்றி தானே விரும்பும் ஒரு பார்வைதான்.அவர் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்.அவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கிறது, பெரிய நடிகராகிறார், ஆனால் அதன் மீது அவருக்கு பற்றோ, மகிழ்ச்சியோ இல்லை.திரையில் ஒடும் பிம்பங்களுக்கும் தொலைக்காட்சிக்கும் சம்மந்தமில்லை என்பதுபோல தன் வாழ்வில் தான் பற்றற்று இருக்கிறேன் என்பது போன்ற ஒரு சித்திரத்தை அவர் உண்மையிலேயே நம்புகிறார்.இதில் உண்மையில்லாமல் இல்லை.சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன் பால்ய கால நண்பர்களை பார்க்க வந்திருக்கிறார் ரஜினிகாந்த்.அப்போது அவர் வந்திருந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டம் கூடிவிட்டது.செய்திதாளில் அடுத்தநாள் செய்தியும் வந்தது.இதில் உள்ள விஷயம் தன்னை ரஜினிகாந்தாக அல்லாமல் சிவாஜிராவாக மட்டுமே அறிந்த தன் பால்ய கால நண்பர்களோடு .நேரம் செலவழிக்க அவர் விரும்புகிறார்.ஏதோ ஒரு வகையில் அவர் இந்த நடிகர் என்ற வளையத்திலிருந்து தப்பித்து வெளியே சென்று சில காலம் இருக்க விரும்புகிறார்.அவருடைய இமயமலை பயணம் போன்ற விஷயங்களுக்கு பின்னால் ஆன்மிகம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த ரஜினிகாந்திலிருந்து தப்பித்து போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதே நேரத்தில் தான் தன் திரைத்துறையில் அடைந்த இடத்தை விடவும் அவருக்கு மனமில்லை.லிங்கா வெற்றி படம் என்றோ தோல்வி படம் என்றோ சொல்ல முடியாது.ஆனால் பெரிய வெற்றி இல்லை.இப்போது அவர் நிச்சயம் அடுத்த படம் செய்வார்.ஏனேனில் ஒரு வெற்றிப்படம்தான் தன் அதுவரையான படங்களின் கடைசிப்படமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.அதன்மூலமாக திரைத்துறையில் தன் இடத்தை அவர் பற்றிக்கொள்ள விரும்புகிறார்.

ரஜினிகாந்தின் பிற்கால திரைப்படங்களான சிவாஜியில் கூட இந்த சட்டகம் ஒரளவு இருக்கிறது.பாபா திரைப்படம் அநேகமாக ரஜினிகாந்த் பார்வையில் அவருடைய சுயசரிதை.அவர் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொள்கிறார் என்று தோன்றுகிறது.அவர் தெய்வீக அம்சங்கள் கொண்ட பிறவி.தன் சூழலில் கெட்ட நண்பர்களோடு ஏற்படும் தோழமையால் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்.பின்னர் அவருக்கு மந்திரங்கள் கற்றுத்தரப்படுகின்றன.அவர் அதிகாரத்தின் அருகில் செல்கிறார்.அந்த அதிகாரத்தை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் மக்களுக்காக பயன்படுத்த விரும்புகிறார்.தான் நேரடியாக அதிகாரத்திற்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை.ஒரு நல்ல மனிதரை அதிகாரத்திற்கு கொண்டுவருவதாலும் அதை செய்ய முடியும் என்று நினைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மந்திரம் என்பதற்கு பதிலாக சினிமா என்று மாற்றினால் அது அநேகமாக ரஜினியின் கதை.ஆனால் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வில்லை.யாரும் யாருக்கும் தீய பழக்கங்களையோ நல்ல பழக்கங்களையோ கற்றுத்தர முடியாது.ஒரளவுக்கு வற்புறுத்தலாம்.ஆனால் அதை பழக்கமாக மாற்றிக்கொள்வது அந்த தனிப்பட்ட மனிதரை பொறுத்த விஷயம்.நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.

சமீபத்தில் சாபு சிரிலின் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன்.அப்போது பேட்டி எடுத்தவர் சாபு சிரிலிடம் ரஜினிகாந்த் பற்றி ஏதாவது சொல்லச்சொன்னார்.அதற்கு சிரில் ரஜினிகாந்தை பொறுத்தவரை இந்த பிரபஞ்சமே அவரது வெற்றிக்காக பாடுபடுகிறது என்றுதான் தோன்றுகிறது என்றார்.

கே.ஹரிஹரன் சொல்வதில் உண்மை இருக்கிறது.அந்த காலகட்டத்தில் இளைஞர்களின் மத்தியிலிருந்த ஒரு வித கிளர்ச்சி(Rebel) மனநிலைக்கு ரஜினியின் பிம்பம் பொருத்தமாக இருந்திருக்கலாம்.அவர்கள் ரஜினியோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.அது ஒரு முக்கிய விஷயம்.இரண்டாவது காரணம் அவர் கதைப்படங்களில் நடித்ததும் தன்னை ஒரு நல்ல நடிகர் என்று நிரூபித்ததும்.மூன்றாவது அவருடைய இயல்பான உடல்மொழி.ஒரு நடிகரின் உடல்மொழிதான் அவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.No Man’s Land என்ற திரைப்படத்தில் நடித்த  Branko Duric என்ற நடிகரின் நடிப்பை பார்த்த போது சட்டென்று ரஜினியின் ஞாபகம் வந்தது.அந்த நடிகரின் நடிப்பு வசீகரமாக இருந்தது.கமலஹாசனின் உடல்மொழி தமிழ் வெகுமக்களுக்கு முற்றிலும் அந்நியமாக இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.Wild strawberries படத்தில் நடித்த இங்கிரட் துலின் என்ற நடிகையின் உடல்மொழி நம்மை அபாராமாக வசீகரிக்கிறது.அப்படியொரு அசாதாதரமாண நடிப்பும் உடல்மொழியும் நம்மை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.இன்றைய நடிகர்களில் தனுஷ் வெற்றி பெறுவதறகு பின்னால் அந்த உடல்மொழி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மேலே சொன்ன மூன்று விஷயங்களிலும் இல்லாத வேறொரு விஷயமும் ரஜினிகாந்த் விஷயத்தில் இருக்கிறது.அதைத்தான் சாபு சிரில் சொல்லியிருக்கிறார்.அதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அதிருஷ்டம்.திருஷ்டம் என்றால் பார்ப்பது, தெரிவது.அதிர்ஷடம் என்றால் தெரியாதது,அறியாதது.அந்த வகையில் ரஜினியின் வெற்றிக்கு பின்னால் இந்த அதிர்ஷடம் என்ற விஷயமும் இருக்கிறது.

ரஜினிகாந்த் கே.பாலசந்தரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் அடுத்த ஐம்பது வருடங்களுக்கு பிறகு தான் நடித்த திரைப்படங்களில் ராகவேந்திரா, பாட்ஷா , எந்திரன் போன்ற படங்கள் பார்க்கப்படும் என்றார்.ஆனால் உண்மையில் அடுத்த ஐம்பது வருடங்கள் கழித்து அவரின் முள்ளும் மலரும், ஜானி , தில்லுமுல்லு போன்ற படங்கள்தான் நிறைய பார்க்கப்படும் என்று தோன்றுகிறது.


ரஜினிகாந்த்







ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினிகாந்த் தன் காதலியிடம் நான் காண்டேகர், தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன் ஆகியோரை மிகவும் விரும்பி படிப்பேன் என்பார்.அதற்கு அவர் காதலி இந்த புத்தகங்களை எல்லாம் எதற்கு படிக்கிறீர்களோ என்பாள்.புரிந்தவர்களுக்கு சொல்லத்தேவையில்லை , புரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனமில்லை என்பார் ரஜினிகாந்த்.நல்ல திரைப்படம்.நல்ல வசனம்.காண்டேகர் என்ற பெயர் தமிழில் அந்த திரைப்படத்தில் மட்டும் தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.கதையின் பிற்பகுதியில் ரஜினிகாந்த் எழுத்தாளராகிறார்.அதற்காகத்தான் கதையின் முற்பகுதியில் அவர் சிறந்த வாசகர் என்பதை நிறுவ அந்த வசனம் இடம்பெற்றிருக்கிறது.ஆனால் படத்தில் ஒரிடத்தில் கூட அவர் வாசிப்பது போன்ற காட்சியில்லை.

ரஜினிகாந்த் கன்னடிகர் என்பதால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சுப.உதயகுமார் எழுதியிருக்கிறார்.எனக்கு சுப.உதயகுமாரிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது.நான் வாணியம்பாடியில் படித்தேன்.அங்கே உருதுவை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள் அதிகம்.அவர்களில் ஒருவர் நாளை அரசியலில் இறங்கி (அது ஏன் அரசியலில் இறங்க வேண்டும், அதென்ன பாதாளத்திலா இருக்கிறது), தமிழக முதலமைச்சராகும் சூழல் உருவாகும் பட்சத்தில் சுப.உதயகுமார் அதை எதிர்ப்பாரா அல்லது ஆதிரிப்பாரா.சுப.உதயகுமாரின் இதுபோன்ற வாதங்கள் வேடிக்கையானவை.சிறுபிள்ளைத்தனமானவை.

உண்மையில் ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவும் தமிழகமும் ஒரே போலத்தான் இருக்க போகிறது.இன்று நம் எல்லோருக்கும் தேவை பணமும் செளகரியங்களும் தான்.அது நமக்கு சாத்தியப்பட இங்கு சந்தைகளும் அதில் நிறைய கடைகளும் உருவாக வேண்டும்.அவ்வளவுதான்.அதைத்தான் காங்கிரஸ் செய்தது.பி.ஜே.பி செய்கிறது.நாளை வேறு யார் வந்தாலும் அதைத்தான் செய்வார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன் கம்யூனிஸ்ட் கட்சியின் காலம் முடிவடைந்துவிட்டதை சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.உண்மையில் மாற்று பொருளாதார கொள்கைகள் உள்ள ஒரே தரப்பு கம்யூனிஸ்ட்கள்தான்.அதற்கும் பிரகாஷ் காரத் மூடுவிழா நடத்திவிட்டார்.காந்திய தரப்புகள் கட்சி அரசியலில் இல்லை.சுப.உதயகுமார் போன்றவர்கள் காந்தியம் பேசுவது போல தோன்றும் போது அவர் தமிழ் தேசியம் பேசுகிறார்.தமிழ் தேசியம் பேசுகிறார் என்று நினைக்கும் போது ஆம் ஆத்மியில் இணைந்து தேர்தலில் நிற்கிறார்.வேடிக்கைத்தான்.

ஸ்டீபன் ஹாக்கிங் தன் புத்தகம் ஒன்றில் 'Philosophers of Science'  என்பவர்களை இயற்பியலாளர்களாக முடியாமல் தோற்றுபோனவர்கள் என்று கிண்டல் செய்கிறார்.அது போலத்தான் இங்கு பணம் வேண்டாம் , செளகரியங்கள் வேண்டாம் என்று கூச்சல் போடும் நிறைய பேரும்.எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.பீடிக்கப்பட்டவர்களின் கதை நாவலில் இது போன்று முற்போக்கு சிந்தனையாளர்களை பயங்கரமாக பகடி செய்திருக்கிறார் தஸ்தாவெய்ஸ்கி.

உண்மையில் பி.ஜே.பிக்கும் காங்கிரஸூக்கும் வித்யாசமில்லை.கலாச்சார தளத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம்.இருக்கிறது.மற்றபடி எந்த வித்யாசமுமில்லை.மாற்று தரப்புகள் நிச்சயம் இருக்கின்றன.ஆனால் இன்று அதை முன்வைப்பர்களுக்கே இந்தியாவோ , தமிழகமோ தனக்கே என்று தனியான ஒரு பொருளாதார கொள்கையை வைத்துக்கொள்ள முடியாது என்று தெரியும்.உலகம் தழுவிய மாற்று பொருளாதார கொள்கை உருவாகி வரும்போதுதான் உண்மையான மாற்றம் சாத்தியம்.நிச்சயம் இன்றைய சூழலில் அது சாத்தியமில்லை.


ஜானி







ஜானி திரைப்படத்தில் ஜானியின் கதாபாத்திரமும் வித்யாசாகரின் கதாபாத்திரமும் அநேகமாக ஒன்றுதான்.ஜானிக்கும் வித்யாசாருக்கும் இருக்கும் ஒரு வித்யாசம் இசை.வித்யாசாகர் ஒரு பெரிய ஹோட்டலில் பார்பராக இருக்கிறான்.மலை மீது தனியாக ஒரு வீட்டில் செளகரியமாக வாழ்கிறான்.பெற்றோர் , சுற்றோர், காதலி , நண்பர்கள் யாருமில்லை.ஆனால் அவன் கோழிகளோடு தூங்கி அவைகளோடே எழுந்து அதன் முட்டையை உடைத்து குடித்துவிட்டு தன் நாளை ஆரம்பிக்கிறான்.மறுபுறம் தன் தந்தையை தன்னுடைய தந்தைதான் என்று சொல்ல இயலாத ஜானி தன் அன்னையின் மரணத்திற்குபின் தான் யாருமில்லை என்பதை உணர்கிறான்.அவனுடைய தந்தை கடனால் அடைந்த அவமானத்திலிருந்து அவரை மீட்க கீழ்நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறான்.அப்போது அவனின் இருப்பை அர்த்தப்படுத்தும் ஒரே விஷயமாக அவன் அன்னை வழங்கிசென்ற இசை அவனோடு இருக்கிறது.அவள் சிதார் வாசிப்பதை அருகிலிருந்து கேட்டு வளரும் ஜானி அதன் வழி இந்த உலகத்தின் மனிதர்கள், கேலி, அவமானம் , துயரத்திற்கு அப்பால் ஒரு அரூபமான இஷ்டலோகத்தை உருவாக்கி கொள்கிறான்.

உண்டு உறங்கி சொரூப வாழ்க்கை வாழ்ந்து வரும் வித்யாசாகரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள்.அவளை மிகவும் தயங்கி பின்னர் வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொள்கிறான்.நம் வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மீது நமக்கு காலப்போக்கில் ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடும்.அதுபோல வித்யாசாகருக்கும் தான் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கும் அந்த பெண் மீது ஒரு பற்று ஏற்படுகிறது.அவன் அவளின் எந்த செயலையும் கண்டு பரவசம் அடைவதோ ஈர்ப்பு கொள்வதோ இல்லை.மாறாக ஒரு முறை துணிக்கடையில் அவள் புடவைகளை தேர்தெடுக்கையில் ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு சஞ்சலித்துக்கொண்டிருப்பதை பார்த்து அவன் வாழ்வில் ஒன்றை விட மற்றொன்று எப்போதும் சிறப்பாகவே இருக்கும் நாம் தான் ஒரு கட்டத்திற்கு பிறகு தேர்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பான்.ஆக அவனுக்கு அவள் மீது காதலோ, அன்போ உருவாகுவதில்லை.நாம் சிறுவயதிலிருந்து நம் பெற்றோரை , உறவினர்களை, உடன்பிறந்தவர்களை பார்த்து வளர்கிறோம், கூட படிப்பவர்கள் , வேலை செய்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.இப்படித்தான் நமது உறவும் சுற்றும் இருக்கிறது.இவர்களில் பெரும்பாலோர் மீது நமக்கு அன்போ காதலோ இருப்பதில்லை.ஆனால் அவர்களுக்கும் நமக்கும் இடையில் ஒரு பற்று உருவாகிவிடுகிறது.நாம் அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம், அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள், நாம் அவர்களை புண்படுத்துகிறோம், நம்மை அவர்கள் புண்படுத்துகிறார்கள்.இப்படியாக செல்கிறது நம் உறவுகள்.இந்த மனிதர்களோடான நம் உறவு ஒரு அஃறிணை பொருளோடான உறவை போன்றதுதான்.உதாரணமாக உங்கள் மடிக்கணிணி உடைந்துவிட்டதால் நீங்கள் அடைந்த துயரம் உங்களோடு படித்த நண்பன் ஒருவன் இறந்த செய்தி கேட்டு அடைந்த துயரத்தை விட அதிகமாக இருந்திருக்கலாம்.ஏனேனில் மடிக்கணிணியோடான நம் பற்று காலப்போக்கில் அதிகமாகிவிட்டது, நண்பன் வாழ்க்கைபோக்கில் விலகிச்சென்றுவிட்டான்.வித்யாசாகருக்கும் அந்த பெண் மீது இப்படியாக ஒரு பற்று ஏற்படுகிறது.அவளை திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறான்.ஆனால் அவள் வேறு ஒருவனை தேர்வு செய்கிறாள்.அவளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக வித்யாசாகர் சொல்லும் போது அவன் பார்பர் என்பதால் தனக்கு அதில் விருப்பமில்லை என்கிறாள்.அவள் அவனிடமிருந்து நிரந்தரமாக விலகிச்சென்றுவிடலாம் என்று முற்படும் போது அவளையும் அவள் தேர்வுசெய்தவனையும் வித்யாசாகர் கொன்றுவிடுகிறான்.

இங்கு அந்த பெண் வித்யாசாகருக்கு செய்தது தவறா என்றால் இல்லை என்பதே உண்மை.நம் இந்திய சமூகத்தில் ஒரு ஆண் தான் குடும்பத்தை உருவாக்குவதாக நினைத்துக்கொள்கிறான்.பெண் அவன் உருவாக்கும் குடும்பத்தில் தன்னை இணைத்துக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறாள்.இயல்பாகவே தான் இணையும் குடும்பம் தனக்கு செளகரியமானதாக இருக்க வேண்டும் என்று அவள் எண்ணுகிறாள்.அது தன் தேர்வில் உள்ளது என்கிற போது அவள் துணிகிறாள்.ஒரு ஆண் பெரும்பாலும் தன்னை சமயங்களில் சமூகத்தின் தனிமனிதனாக கற்பனை செய்துகொள்கிறான்.பெண் அவளை எப்போதும் குடும்பமாகவே கருதுகிறாள்.தனிமனுஷியாக அல்ல.தன் குழந்தைகளுக்காக அவள் எதையும் பொறுத்துக்கொள்வாள்.பெரும்பாலும் நம் இந்திய குடும்பங்களில் அன்னைகளை குழந்தைகள் மதிப்பதே இல்லை.இரண்டாம் தர குடிமக்கள் போலத்தான் அவர்கள் நடத்தப்படுகிறார்கள்.அவள் தன் கணவனும் குழந்தைகளும் தனக்கு இழைக்கும் அத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொள்கிறாள்.ஏனேனில் அவள் வரையில் அவள் தனியான ஒரு பெளதிக இருப்பு இல்லை.குடும்பமே அவள் அடையாளம்.அவளே குடும்பம்.ஆனால் அதே பெண் தன் குடும்பத்திற்கு வெளியே நடந்துகொள்ளும் விதம் பெரிய அளவில் வித்யாசமானது.உதாரணமாக மத்திய மத்தியதர பெண்கள் தங்கள் வீட்டில் வேலைக்கு வரும் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரம் சமயங்களில் பயங்கரமானது.பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வீரபத்ரபிள்ளை இரண்டு நாட்கள் பசியில் மிகவும் சோர்வாகி வெளி வாசலில் அமரந்திருக்கும் ஒரு பெண்ணிடம் பசிக்கிறது என்று கெஞ்சுவான்.அதற்கு அவள் ஒரே வார்த்தை தான் சொல்வாள் – ‘அதுக்கு’. ‘அதுக்கு’ என்ற ஒரே வார்த்தை அவனை மிகவும் பயங்கரமாக துரத்தும்.ஜெயமோகன் அந்த மன அவஸ்தையை மிக அற்புதமாக சித்தரித்திருப்பார்.பெண் என்பது கருணையின் வடிவமல்லவா அவள் எப்படி பசியால் வாடுபவனை பார்த்து ‘அதுக்கு’ என்று கேட்க முடியும் என்பதை வீரபத்ரபிள்ளையால் புரிந்துகொள்ளவே முடியாது.இதே பெண் தன் குழந்தைகள் ஒரு வேளை பசித்து இருந்தால் துடித்துபோயிருப்பாள்.பெண்கள் பெரும்பாலும் ஒரு உறவில் அதிகாரத்திற்கு கீழ்படிபவர்களாக இருக்க விரும்புகிறார்கள் அல்லது அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக இருக்க விரும்புகிறார்கள்.பெரும்பாலும் ஒரு சமத்துவமான உறவில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று குழம்பிவிடுகிறார்கள்.

அம்பிகாபதி(ராஞ்சனா) படத்தில் குந்தன் ஸோயா என்ற முஸ்லீம் பெண்னை சிறுவயதிலிருந்தே விரும்புகிறான்.ஆனால் அவள் அவனை எப்போதும் பொருட்படுத்துவதேயில்லை.அவள் ஒரு முறை ஏதேர்ச்சையாக சந்திக்கும் அக்ரம் என்ற சீக்கிய மதத்தை சேர்ந்தவனை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.குந்தன் அவளுக்காக நிறைய உதவிகள் செய்திருக்கிறான்.ஆனால் அவள் வீட்டில் அவளை தாங்கள் தேர்வு செய்த மாப்பிள்ளையை  திருமணம் செய்துகொள்ள சொல்கிற போது அவள் நான் குந்தன் மாதிரி ஒரு பிச்சைகாரனை திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டுமா என்று கேட்கிறாள்.இங்கே அக்ரம் கல்லூரியில் மாணவர் தலைவனாக இருக்கிறான்.லெளகீக வாழ்வில் வலுவானவனாக இருக்கிறான்.ஒரளவு ஜனநாயக பண்புகள் கொண்டவனாகவும் இருக்கிறான்.எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி செல்லக்கூடியவன்.அவனை தேர்வு செய்வதன் மூலம் அவளும் அந்த அதிகாரத்தை எதிர்காலத்தில் அடையக்கூடும்.இதை அவள் திட்டமிட்டு செய்யவில்லை.அவனுடன் பழகும் சிறிது நேரத்திலேயே அவளுக்கு அவனை பிடித்துவிடுகிறது.அவள் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள்.அக்ரம் இறந்துவிடுகிறான்.ஆனால் அவள் எப்போதுமே குந்தனை காதலிக்கப்போவதில்லை.அவள் அக்ரம் போன்ற ஒருவனையே தன்வாழ்வில் திருமணம் செய்துகொள்வாள்.பதினாறு வயதினிலே படத்தில் மயில் முதலில் மருத்துவனை நேசிக்கிறாள்.பின்னர் அந்த மருத்துவன் அவளை விட்டு சென்றுவிடுகிறான்.வீட்டில் பார்க்கும் சம்மந்தங்களையும் பரட்டை கலைத்துவிடுகிறான்.இப்போது அவள் சப்பானியை தேர்கிறாள்.இங்கே மறுபடி அந்த மருத்துவன் வந்து நான் தவறு செய்துவிட்டேன் இப்போது உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று சொன்னால் அவள் தடுமாறக்கூடும்.ஏனேனில் மருத்துவனை அவள் தேர்வு செய்வதன் மூலம் அவள் நகர வாழ்க்கையை , அதிகாரத்தை , வேலையாட்களை, செளகரியத்தை என்ற அனைத்தையும் அடைகிறாள்.ஒரு எளிய தேர்வு அவள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும் போது அவள் நிச்சயம் தடுமாறத்தான் செய்வாள்.

இங்கே அம்பிகாபதியில் வரும் குந்தன் போல , வித்யாசாகரை போல ஒரு காதலால் அல்லது பற்றால் தங்களை அழித்துக்கொள்ளும் நிறைய ஆண்களை பார்க்கிறோம்.உண்மையில் ஆண்களால் தன்னை நிராகரிக்கும் பெண்னை மறந்து வாழமுடியாதா? நம் சமூகத்தில் ஒரு ஆண் குடும்பத்தை உருவாக்குபவனாக இருக்கிறான்.ஒரு முறை குந்தனுக்கு உதவுவதற்காக கேஸ் சிலிண்டரை தரையிலிருந்து எடுத்து ரிக்ஷாவில் வைக்கிறான் அக்ரம்.அவன் சென்ற பின் அதே சிலிண்டரை கீழே வைத்து மறுபடியும் ரிக்ஷாவில் ஏற்றுகிறான் குந்தன். ஆக , ஒரு பெண் தன்னை நிராகரிக்கும் போது அவன் தான் குடும்பத்தை உருவாக்கும் தகுதியற்றவன் என்று கருதுகிறான்.அது அவனது அகங்காரத்தை சீண்டுகிறது.திரெளபதி துரியோதனன் தடுமாறி கீழே விழுவதை பார்த்து கேலியாக சிரிப்பதுதான் துரியோதனனின் அகங்காரத்தை சீண்டுகிறது.தன் அகங்காரம் சீண்டப்படும் குந்தன் அவளிடம் தன்னை ஏற்றக்கொள்ளும்படி மன்றாடுகிறான்.மறுபுறம் அதே அகங்காரத்தால் வித்யாசாகர் அந்த பெண்னை கொல்கிறான்.நம் சமூகத்தில் ஆண்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வது, கொலை செய்வது, ஆசிட் ஊற்றுவது, அவதூறு செய்வது எல்லாம் அந்தப்பெண் தன் துணைவி ஆகாததின் வலியால் அல்ல.அது அகங்காரத்தாலும் அது ஏற்படுத்தும் வன்மத்தாலும் தான்.என்னை பொறுத்தவரை ஒரு ஆண் ஒரே நேரத்தில் பத்து பெண்களை மானசீகமாக காதலிக்க முடியும்.ஒரே பெண்ணிற்காக தன் வாழ்வை அழித்துக்கொள்ளும் அளவுக்கு எந்த பெண்ணும் அத்தனை முக்கியமில்லை என்பதை ஆண் அறிவான்.ஆனால் நம் சூழலில் காதலால் ஆண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைப்பதற்கு அவர்களுக்கு வேறு பெண் கிடைப்பதில்லை என்பதுதான் முக்கிய காரணம்.வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்திக் கதாபாத்திரம் எப்போதோ முடிந்துபோன காதலுக்காக மூன்று வருடங்கள் கழித்து வேறொரு பெண்னை நிராகரிக்கும் காட்சி வரும்.மிக அபத்தமான காட்சி.அப்படியெல்லாம் ஒரு அழகான பெண் வந்து காதலை தெரிவிக்கும் போது எந்த ஆணும் நிராகரிக்க மாட்டான்.அப்படி நிராகரித்தால் அவன் நினைவுகளில் வாழும் ஒரு முட்டாள்.அவ்வளவுதான்.

இங்கே வித்யாசாகர் அந்த பெண்னை கொலை செய்வதற்கு அவள் அவனை நிராகரித்து வேறு ஒருவனை தேர்வு செய்வது காரணம் அல்ல.அதை அவன் எளிதில் மறந்துவிடுவான்.அவன் நன்றாக குடித்துவிட்டு இரண்டு நாட்கள் உறங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும்.ஆனால் அவள் வேறு ஒருவனை தேர்வு செய்வதன் மூலம் ஒரு கேலிப்புன்னகையை அவன் மீது செலுத்துகிறாள்.அந்த சீண்டலும், அவன் தனிமையும் வேறு ஒரு பெண் அவன் வாழ்வில் வருவதற்கான சாத்தியமின்னையும்தான் அவனை கொலை செய்ய வைக்கிறது.

வம்ச விருக்ஷா என்ற எஸ்.எல்.பைரப்பாவின் நாவலை முன்வைத்து கிரிஷ் கர்னாடும் பி.வி.காரந்தும் இணைந்து இயக்கிய படத்தில் தன் மகன் இறந்துவிட்டபின் தன் மருமகளை மாமனார் படிப்பதற்காக கல்லூரிக்கு அனுப்புவார்.அவளுக்கு ஒரு மகன் இருப்பான்.கல்லூரியில் அவள் ஒருவரை காதலிப்பாள்.அவளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக மாமனாரிடம் சொல்லும்போது அவர் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பொறுப்பு வம்சவிருக்ஷம் தான் மற்றபடி நம் தனிப்பட்ட ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் குடும்பம் என்ற அமைப்பில் இடமில்லை.உன் மகனை ஒரு சான்றோனாக வளர்த்து வம்சத்தை விருக்ஷம் செய்வதே உன் பணி, உன் ஆசைகளை துறந்துவிடு என்பார்.ஆனால் அவள் தான் விரும்புவரை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துவிடுவாள்.அப்போது அவர் தன் பேரனை அவளோடு அனுப்ப முடியாது என்று சொல்லிவிடுவார்.கதை அதன்பின் வேறு தளத்தில் பயணிக்கும்.இங்குள்ள முக்கிய விஷயம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குடும்பம் என்ற அமைப்பில் ஆற்ற வேண்டிய பங்களிப்பு , அவர்களின் பொறுப்பு என அணைத்தையும் அவர்கள் சிறுவயதிலிருந்தே கற்றே வளர்கிறார்கள்.இன்றைய பெண் விரும்புவதும் ஜனநாயக பண்புகளை கொண்ட மரபான ஆண்தான்.நேற்றைய பெண் ஒரு லட்சியவாத ஆணை ஏற்றாள்.இன்றைய பெண் அதில் கொஞ்சம் ஜனநாயக பண்புகள் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.இதில் உள்ள முக்கிய செய்தி இது ஒரு பெண்ணின் பிரச்சனையோ ஆணின் பிரச்சனையோ அல்ல.நம் சமூகம் குடும்பம் என்ற அமைப்பின் லட்சியவடிவத்திற்காக உருவாக்கிய விழுமியங்களின் சிக்கல்.இந்த சிக்கலை புரிந்துகொண்டு இத்தனை பெரிய உலகில் ஒரு பெண் மட்டுமே தன் இருப்பை நியாயப்படுத்தக்கூடியவள் இல்லை என்ற எண்ணம் சாத்தியப்பட்டிருந்தால் வித்யாசாகர் கொலை செய்திருக்கமாட்டான்.குந்தன் கொல்லப்பட்டிருக்கவும் மாட்டான்.

வருங்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு சீர்குலையலாம்.அப்போது ஆண் பெண் உறவுகளில் பிரச்சனைகள் இல்லாமல் போகலாம்.இயந்திரங்களும் Artificial Intelligenceயும் வளர்ந்து வரும் சூழலில் நாளை ஆண்களும் பெண்களும் இயந்திரங்களை தங்கள் வாழ்க்கை துணையாக தேர்தெடுக்கலாம்.அப்போது இயந்திரங்கள் சிந்திக்கின்றன, அவைகளுக்கு உணர்வு இருக்கிறது, அவைகளை அடிமைகள் போல் நடத்தக்கூடாது என்று இயந்திரவாதிகள் போர்க்கொடி தூக்கலாம்.அப்போது பெண்ணியவாதிகளும் இயந்திரவாதிகளும் சண்டை போட்டுக்கொள்ளலாம்.ஆண்கள் நிம்மதியாக தூங்கி எழுந்து கோழியின் முட்டையை அப்படியே உண்டு தங்கள் நாளை ஆரம்பிக்கலாம்.

கீழ்மை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் ஜானி அர்ச்சனா என்ற பாடகியை சந்திக்கிறான்.அவள் அவனது துயரத்தை அவனது அன்னையின் துயரத்தை புரிந்துகொள்கிறாள்.இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்.அர்ச்சனா ஒரு லட்சிய வடிவம்.பொதுவாக நம் சமூகத்தில் சீதை ஒரு முக்கிய தொன்மம்.சீதையின் வாழ்வு பொறுமையும் கண்ணீரும் பேரமைதியும் துயரமும் கொண்டது.அவள் நிலையானவள்.அர்ச்சனா அத்தகைய ஒரு லட்சிய வடிவமாக வருகிறாள்.இதை பல்வேறு கலைஞர்களில் பார்க்கலாம்.எதன் மீதும் நம்பிக்கை அற்ற புதுமைப்பித்தன் கதைகளில் ஒரு பெண் குழந்தை மறுபடி மறுபடி வருகிறாள்.ஜெயமோகன் கதைகளில் நீலி வருகிறாள்.அர்ச்சனா ஜானியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள்.ஜானியும் விரும்புகிறான்.பின்னர் ஜானி வித்யாசாகர் செய்த கொலையால் தலைமறைவாகிறான்.அவன் தவறான வழியில் ஈட்டிய பணம் குறித்த அனைத்து விபரங்களையும் அர்ச்சனா அறிந்துகொள்கிறாள்.அவள் அவனிடம் ஏமாந்தவர்களின் பணத்தை அவர்களுக்கு திருப்பி அளிக்கிறாள்.அவள் அவனை வெறுக்கவில்லை.அவனை விட்டு விலகாமல் அவன் நினைவில் வாழ்கிறாள்.அவள் நிலையானவளாக பொறுமையானவளாக துயரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவளாக இருக்கிறாள்.இறுதியில் வித்யாசாகர் எல்லா குற்றங்களையும் ஏற்றுக்கொண்டு ஜானியை காப்பாற்றுகிறான்.

விசு படங்களில் வருவதுபோல ஒரு ஆணின் வாழ்வை சீரழிப்பதும் சீராக்குவதும் ஒரு பெண்தான் என்ற தொனியில் இந்த படம் அமையவில்லை என்பதே ஜானி படத்தின் முக்கிய தளம்.ஜானி இசையின் வழியாக தான் எத்தனை கீழ்மையான வாழ்வை வாழ்ந்தாலும் ஒரு அரூப தளத்தில்  மேன்மையான வாழ்வை எதிர்நோக்குபவனாக இருக்கிறான்.அந்த லட்சிய வடிவின் பெளதிக இருப்பாக அர்ச்சனா அவன் வாழ்வில் வருகிறான்.அவன் இசையால் தன்னை இந்த கோரமான உலகிலிருந்து காத்துக்கொள்கிறான். ஜானி ஒருமுறை தன் தந்தையிடம் Johnny is nobody என்று சொல்வான்.தான் யாருமில்லை என்பவன் எந்த குற்றங்களையும் செய்யலாம்.ஜானி குற்றங்கள் செய்கிறான்.இசை அவனை குற்றங்களிலிருந்து விடுவிக்கிறது.அவன் இருப்பை அர்த்தப்படுத்துகிறது. கொதிநெருப்பில் நிற்பவனை இசை அவன் அன்னையின் கருவறைக்குள் இழுத்துச்செல்கிறது.அவன் பாதுகாப்பான ஒரு இடத்தை அடைந்துவிடுகிறான்.அதன்பின் அவன் யாருமற்றவன் அல்ல.அவனுடைய பாதங்கள் அதன் நிழலை அடைகிறது.

ரஜினிகாந்த் நடித்த சிறந்த படங்களின் பட்டியலில் எப்போதும் முள்ளும் மலரும் திரைப்படமும் ,ஜானியும் இருக்கும்.ஜானியில் செனோரிட்டா பாடலில் யாருமில்லாத தனியாளாக வாழும் வித்யாசாகரின் வாழ்வில் ஒரு பெண் வருவதால் அவன் அடையும் பித்தநிலையின் மகிழ்ச்சி அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.ஒரு குழந்தையின் குதூகலத்தை அவன் அடைவதை அந்த பாடலில் நாம் கண்டுகொள்ளலாம்.படத்தில் பல இடங்களில் ஜானி Music is life giver என்ற டீ சர்ட் அணிந்து மலையில் புற்களின் மீது ஒடும் காட்சி வரும்.பேரமைதியின் நிலத்தை கண்டுவிட்டவனின் சித்திரம் அந்த காட்சிகளில் தெரியும்.இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மிக அற்புதமாக நடித்திருப்பார்.வித்யாசாகரின் தொங்கு மீசை , அவன் பைப் பிடிப்பது , அத்தனையும் மிகவும் ஸ்டைலாக இருக்கும்.படத்தின் குறை இறுதிக்காட்சி.அத்தனை புயலில் அந்த பாடல் ஏதோ ஒரு வகையில் நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.மேலும் படத்தில் தேவையான அளவுக்குக்கூட வெளிப்புற காட்சிகள் இல்லை.எனக்கு பின்னனி இசையை கவனிக்க தெரியாது.ஆனால் இந்த படத்தில் வரும் இசையை மட்டுமே நாம் தனியாகவே கேட்கலாம்.இளையராஜாவின் பின்னனி இசையை பேசும் போது அவசியம் ஜானி படத்தை பேசியே தீரவேண்டும்.அதிலும் இறுதிக்காட்சியில் ஜானியும் அர்ச்சனாவும் இணையும் போது வரும் பின்னனி இசை எவரையும் அசைத்துவிடக்கூடியது.அசோக்குமார் சட்டகங்களை உருவாக்கியுள்ள விதமும் ஒளியமைப்பும் அற்புதமாக இருக்கும்.ஜானியின் அன்னை கதாபாத்திரம் மோகமுள் நாவலில் வரும் பார்வதி கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது.தமிழில் பத்மராஜன் போல எந்தவித சிரமமும் இல்லாமல் கதை சொல்லக்கூடியவர் மகேந்திரன் மட்டுமே.ஜானி படத்தில் ஒரிடத்தில் கூட கதை நிற்பதில்லை.திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்காக மட்டுமே ஜானி திரைப்படத்தை பார்க்கலாம்.தமிழில் அடுத்த ஐம்பது வருடங்கள் கழித்தும்கூட ஜானி திரைப்படம் நினைவுகூறப்படும்.