Showing posts with label காம்யூ. Show all posts
Showing posts with label காம்யூ. Show all posts

நீரின் சலனம்


ஒரு விவசாய குடும்பத்தை கொலை செய்து கொள்ளை அடித்த ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.அவனின் தலை கிலெட்டினால் துண்டிக்கப்படப் போவதை காண ஆல்பர் காம்யூவின் தந்தை வைகறையில் எழுந்து செல்கிறார்.அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது சரிதான் என்று முதலில் நினைக்கிறார்.ஆனால் மரண தண்டனை அரங்கேற்றப்பட்டதை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர் யாருடனும் பேசாமல் கட்டிலில் படுக்கிறார்.சட்டென்று குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுக்கிறார்.இன்று மரண தண்டனைகள் பொதுவில் கொடுக்கப்படுவதில்லை.அவை சிறைகளுக்கு எடுத்துச்  செல்லப் பட்டுவிட்டன.இந்த சம்பவத்துடன் ஆல்பர் காம்யூ தன் Reflections on Guillotine என்ற கட்டுரையை தொடங்குகிறார்.  தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிரான தன் தர்க்கத்தை முன்வைக்கிறார்.

தர்க்கம்:

மரண தண்டனை பொது சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்க வேண்டுமென்றால் அது ஏன் பொதுவில் நிகழ்த்தப்படாமல் தனி அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.அது பயத்தை உருவாக்க வேண்டுமென்றால் அது பொதுவில் நிகழ்த்தப்பட்டு அதைப்பற்றிய விவரங்கள் நிறைவாக பத்திரிக்கைகளில் வருவது தானே சரி.ஆனால் அரசுக்கு இதில் ஏதோ ஒரு தயக்கம் இருக்கிறது.இது அவசியமானது என்று கருதுகிறது.ஆனால் அதை பொதுவில் வைக்கத் தயங்குகிறது.அப்படியென்றால் அது முன்வைக்கும் வாதத்தின் மீது அதற்கே நம்பிக்கை இல்லை.இதை முன்பு நிகழ்ந்து கொண்டிருந்தவற்றின் தொடர்ச்சியாக நிகழ்த்துவதற்கு மேல் இதில் அரசு கொள்ளும் கொள்கை என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
பொதுவாக இது போன்ற மரண தண்டனைகள் பற்றிய வாதங்களில் முக்கியாமனது அந்த தண்டனை இனி நிகழவிருக்கும் கொலைகளை தடுக்கும் என்பதுதான்.ஆனால் மேலும் மேலும் மரண தண்டனை அளிக்கப்படுகிறது.அப்படியென்றால் மேலும் மேலும் கொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் பத்து கொலைகள் நிகழ்ந்திருக்க வேண்டிய இடத்தில் எட்டு கொலைகள்தான் நிகழ்ந்திருக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படும்.அந்த இரண்டு கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.அந்த ஊகத்தின் அடிப்படையில் ஒரு நிச்சய மரணம் அரசால் நிகழ்த்தப்படுகிறது.

பெரும்பாலான கொலையாளிகள் காலை சவரம் செய்யும் போது கூட இன்று கொலை செய்யப்போகிறாம் என்று நினைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.அப்படியென்றால் அந்த தருணத்தில் அவர்களை இந்த மரண தண்டனை பயம் அந்த பெருங்குற்ற செயலை செய்ய தடுக்கவில்லை.மனிதனுக்கு உயிர் வாழ்வதற்கு இருக்கும் இச்சை போலவே தன்னையும் பிறரையும் அழித்துக்கொள்ளவும் இச்சை இருக்கிறது.மேலும் காதல், பயம்,வன்மம் இவை எல்லாம் மனிதனை எந்த மனத்தடையையும் உடைத்து தன் இலக்கை நோக்கி இழுத்துச்செல்பவை.அதனால் மரண தண்டனை பயத்தை உருவாக்கி பெருங்குற்றங்களை தடுக்கும் என்கிற வாதம் பிழையானது.அப்படி அது பயத்தை உருவாக்க வேண்டும் என்று அரசு நினைக்கும் என்றால் அதை அப்பட்டமாக செய்யலாம்.ஆனால் அதை செய்ய அரசு அவமானம் கொள்கிறது.

இன்று கொலைகளை பற்றி பேசும் போது மதுவின் விற்பனை குறித்தும் நாம் பேச வேண்டும்.திட்டமிட்ட கொலைகளில் மதுவின் தாக்கம் இருக்கிறது.சிறுவர்களை கொலை செய்தவர்களில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மதுவின் தாக்கத்தில் இருந்தனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது.அப்படியென்றால் இந்த மதுவகைகளை உற்பத்தி செய்து விற்கும்  சாராய வியாபாரிகளும் அவர்களை தடை செய்யாத அரசும் அந்த கொலைகளில் பங்கு வகிக்கின்றன.அப்படியென்றால் இந்த சமூகம் பழச்சாறை மட்டும் உட்கொள்ளும் வரை நாம் யாருக்கும் எந்த பொறுப்பும் இல்லை என்று விட்டுவிடலாமா.அப்படி இல்லை.நாம் இந்த பொறுப்புகளை அந்த கொலை செய்தவனின் தலையில் மட்டும் போட்டுவிட்டு தப்பித்துவிட வாய்ப்பில்லை.

ஒரு வகையில் மரண தண்டனை ஒரு பழிவாங்கும் செயல் என்று கொள்ளலாம்.ஆனால் பழிவாங்கும் போது ஒரு கண்ணுக்கு ஒரு கண்தான் வாங்கப்படுகிறது.இங்கு இரண்டு கண்களும் பறிக்கப்படுகிறது.அவனுக்கு மரணத்திற்கான நாள் நிர்ணயிக்கப்படுகிறது.அது நாள் வரை அவன் காத்திருக்க வேண்டும்.இதற்கிடையில் அவன் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம்.ஆனால் அது வரலாம்.வராமல் போகலாம்.அந்த நிச்சயமின்மை அவனை மிகவும் பதறச்செய்கிறது.இறுதியில் அவனது உடல் இரண்டு துண்டுகளாகும் மரணம் அவனுக்கு வழங்கப்படுகிறது.இது அவன் செய்த கொலையை விட பெரிய தண்டனை.இந்தக் காலத்தில் அவன் ஒரு பொருள் போல இருக்கிறான்.அவனுக்கு என்று தேர்வுகள் இல்லை.அவன் உணவு உட்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு நிச்சயமான மாற்ற சாத்தியமற்ற மரண தண்டனையை வழங்க அந்த சமூகத்திற்கு அரசுக்கு அந்த தார்மீகம் இருக்க வேண்டும்.ஆனால் அப்படியான தார்மீகம் நம் சமூகத்திற்கு இல்லை.ஒரு சமூகம் தன் தகுதிக்கு ஏற்ற குற்றவாளிகளை உருவாக்குகிறது.சமூகம் ஒன்றும் அறியாமை நிரம்பிய ஆட்டுக்குட்டி இல்லை.இந்த குற்றவாளியை நீக்கிவிட்டால் அது தூய்மை பெற்றுவிடாது. நாம் நிச்சயமான தூய்மையான அரசாகவும் சமூகமாகவும் இல்லாத போது இந்த மரண தண்டனை எதை தரப்போகிறது.ஒன்றுமில்லை.அதற்காக மனிதாபிமானம் என்ற பெயரில் தண்டனை வழங்கக்கூடாது என்றுமில்லை.வாழ்நாள் முழுக்க கடும் வேலை செய்ய வேண்டிய தண்டனையை வழங்கலாம்.ஒரு குற்றத்திற்கு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இந்த சமூகத்திற்கு இல்லை.ஏனேனில் இங்கு அப்படியான நீதிபதிகள் யாரும் இல்லை.

மரண தண்டனையின் முக்கிய சிக்கல் அது திருத்த சாத்தியமற்றது என்பதுதான்.விஞ்ஞானத்திற்கு முன்னான காலத்தில் மரண தண்டனை வழங்கப்பட்ட போது அது இறுதி தீர்ப்பாக இல்லை.அவனுக்கான இறுதி தீர்ப்பு இன்னும் இருந்தது.ஆனால் இன்று அப்படியான மேல் உலகங்கள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை.அப்படி இருக்கையில் இதுவே இறுதி தீர்ப்பாகிறது.அப்படியான இறுதி தீர்ப்பு மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

மறுமலர்ச்சி காலத்தில் மனிதன் அடிப்படையில் நல்லவன் என்பதால் அவனுக்கு மரண தண்டனை தேவையில்லை என்ற வாதம் இருந்தது.ஆனால் மனிதன் அடிப்படையில் தீயவன்.அதனாலேயே அவனுக்கு மரண தண்டனை கூடாது என்கிறார்.தண்டனை கூடாது என்றல்ல.ஒரு சமூகம் பரிணாம வளர்ச்சி அடைய தேவையற்றவர்களை நீக்கலாம் என்ற நோக்கம் மேல் எழுந்துள்ளது.ஆனால் அவனை நீக்கிவிட்டால் சமூகம் தூய்மை அடைந்துவிடுவதில்லை.சமூகத்திலிருந்தே அந்த மனிதன் வந்திருக்கிறான்.நாம் எல்லோரும் ஒரளவு பொறுப்பற்று இருக்க வேண்டியிருக்கிறது.அதனால் இறுதியான தீர்மானமான முடிவுகளை எடுக்க நாம் தகுதியற்றவர்கள்.

மொத்த மானுட இனத்தின் இருப்பே மரணத்திற்கு எதிரானதுதான் என்கிறார் காம்யூ.இந்தக் கட்டுரையின் இன்னொரு வடிவம் தான் அவருடைய வீழ்ச்சி நாவல்.அறியாமையின் ஆட்டுக்குட்டி திருடப்பட்டுவிட்டதால் நாம் பிறரின் மீதி தீர்மானமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அந்த நாவலில் சொல்கிறார்.

உருளும் பாறை




ஜெயமோகன் அழுக்கு படிந்த கண்ணாடி என்ற கட்டுரையில் காமம் ,குரோதம், மோகம் ஆகிய அழுக்குகள் நீங்கி பார்த்தால் கண்ணாடியில் பிம்பம் சரியாக தெரியும் என்கிறார்.ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் (இங்கனைத்திலும் இறை உறைகிறது) என்ற நிலை தான் அது என்று ஒரு துறவி அதனை விளக்குகிறார்.ஆல்பர் காம்யூவின் சிசிபஸின் தொன்மம் கட்டுரைத் தொகுப்பில் சிசிபஸ் ஒரு உருளும் பாறையை மலை உச்சிவரை கொண்டு செல்ல வேண்டும்.அங்கிருந்து மறுபடி அதை உருள விட வேண்டும்.பின்னர் கீழே சென்று அதை மறுபடியும் மேலே உருட்டிக் கொண்டு வர வேண்டும்.இப்படி தொடர்ச்சியாக எந்த முடிவும் இல்லாமல் அதை அவன் செய்ய வேண்டும்.இதில் சிசிபஸ் அந்த உருளும் பாறையை மறுபடியும் மேலே கொண்டுவர தனியாக கீழே இறங்குகிறான்.அப்போதும் அவனுடன் அந்த பாறை கூட இல்லை.மறுபடியும் அது கீழே தான் செல்லும் என்பதையும் அவன் அறிவான்.

இது சுத்த அபத்த செயல்பாடு.ஆனால் அவன் அதை செய்தாக வேண்டும்.வேறு வழியில்லை.இப்போது அவன் முன் இரண்டு வழிகள் இருக்கிறது.ஒன்று அவன் தற்கொலை செய்துக் கொள்ளலாம்.அல்லது கீழே சென்று மறுபடி அதை உருட்டி மேலே கொண்டு வரலாம்.அவன் தற்கொலை செய்துக் கொள்வதில்லை.மாறாக அவன் இந்த அபத்தத்தை முழுவதுமாக உணர்ந்து கீழே செல்கிறான்.அப்போது அவன் என்ன உணர்வான்.அந்த கூர்மையான வெயிலில் வியர்வை பிசுபிசுக்க அவன் அந்த அபத்த பந்தை எட்டி உதைத்து கீழே செல்வது அற்புதமான காட்சி.இதோ அபத்தமே நான் உன்னை அங்கீகரிக்கிறேன்.நான் உன்னை பிரக்ஞைபூர்வமாக உணர்கிறேன்.ஆனால் நான் ஒரு போதும் உன்னை நினைத்து சோர்ந்து போய் அமர்ந்துவிடப் போவதில்லை.ஒரு போதும் தற்கொலை செய்துக் கொள்ள போவதில்லை.நான் உன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்வேன்.இதுவே என் இருத்தல் செயல்பாடு என்கிறான் சிசிபஸ்.சிசிபஸ் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றே நாம் கருத வேண்டும் என்று அந்தக் கட்டுரையை முடிக்கிறார் காம்யூ.

ராஜீவ் கொலை வழக்கில் தன் இளமையை முழுமையாக இழந்து நிற்கும் பேரறிவாளன் இந்த அடிப்படையில் தான் வாழ்வை சந்திக்க முடியும்.தன் ஆண் உடலில் இருக்கும் பெண் தண்மை புரிந்துக்கொண்டு அதை தனது அடையாளமாக அறிவிக்க இயலாமல் திணறும் மனிதன் அபத்தமாகத்தான் வாழ்வை எதிர்கொள்வான்.தன் அதுவரையான உழைப்பும் கனவும் கண்ணீரும் அர்த்தமற்று போகும் புதல்வனின் மரணத்தில் ஒரு தந்தை வாழ்வின் அபத்தம் முன் கையறு நிலையில் தான் நிற்க முடியும்.தன்னை முழுமையாக சிதறடித்து விடக்கூடிய அவமானத்தை எதிர்கொள்ளும் மனிதன் வாழ்வை அர்த்தமுள்ளதாக பார்க்க முடியாது.நாம் ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று அவர்களிடம் நாம் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.அது அநீதியும் கூட.

வாழ்வின் அபத்தம் முன் கையறு நிலையில் நிற்பவனிடம் அதை எதிர்கொள்ளும் பிரக்ஞையை சிசிபஸின் தொன்மம் கட்டுரை அளிக்கிறது.சிசிபஸ் தனியாக அந்த உருளும் கல்லை நோக்கி செல்லும் போது அவனைப் போலவே வேறொருவனுக்கும் அதே பணி அளிக்கப்பட்டிருக்கிறது எனக் கொள்வோம்.இருவரும் வாழ்வின் அபத்தத்தை பிரக்ஞை பூர்வமாக உணர்ந்து அதை எதிர்த்து கிளர்ச்சி செய்கிறார்கள்.கிளர்ச்சி என்றால் கொடி தூக்குவது இல்லை.மலை உச்சியிலிருந்து கீழே செல்வதுதான்.இப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவானால் அங்கு மானுட நேசமும் அன்புமே மலரும்.ஒரு வகையில் இந்த அபத்தத்தை உணரும் தருணம் , அதை பிரக்ஞைபூர்வமாக எதிர்கொள்ளும் கிளர்ச்சி, அதன் ஊடாக மலரும் நேசம் ஆகியவற்றைத் தான் காம்யூ மறுபடி மறுபடி சொல்கிறார்.இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்தால் அதை ஒரு முழுக் கோட்பாடாக அவர் உருவாக்கியிருக்கலாம்.

ஒரு அர்த்தமற்ற வேலையை காலையிலிருந்து மாலை வரை செய்து வீடு சென்று திரும்பி அடுத்த நாள் காலை மறுபடி அதே அர்த்தமற்ற வேலையை செய்ய கிளம்பும் தருணம் சிசிபஸ் தருணம் தான்.உங்களை குதறிப்போட்டு கீழே விழ வைத்து பல்லிளிக்கும் சமூகத்தின் முன் அடுத்த நாள் சென்று அமர்வதும் சிசிபஸ் தருணம் தான். துறவு ஒருவகையில் சாகச மனநிலை.தொடர் ஓட்டங்களும் சறுக்கல்களும் அலைச்சல்களும் கீழ்மையும் தீமையும் சிதறலும் பற்றும் பரிவை தேடும் கரங்களும் கொண்ட வாழ்வில் அத்தகைய மனநிலை சாத்தியமே இல்லை என்று தான் தோன்றுகிறது.

சிசிபஸின் தொன்மம் என்ற தொகுப்பில் காம்யூ தன் நிலைப்பாட்டை முன்வைக்க ஒரு பெண் பித்தனையும் , ஒரு நடிகன் பாத்திரத்தையும் விளக்குவார்.இரண்டுமே காம்யூதான்.அத்வைத தரிசனங்கள் அல்லது அதுபோன்ற பிற வேதாந்த தரிசனங்கள் முன்வைக்கும் மனநிலை எத்தகைய வாழ்க்கை முறையில் சாத்தியம் என்று தெரியவில்லை.ஆனால் உங்களால் உங்கள் வாழ்க்கை முறையில் சாத்தியமாக்கிக் கொள்ள இயலாத வாழ்க்கை தரிசனம் எந்த வகையில் உங்களுக்கு உதவும்.தெரியவில்லை.இருத்தலியவாதம் கேலிக்குள்ளாவது இயல்புதான்.ஏனேனில் அது ஒருவகையில் புலம்பல் கூட.லெவி ஸ்ட்ராஸ் அதை பெட்டிக்கடைகாரியின் தத்துவம் என்கிறார்.

ஒரு சமூகத்தின் தனிமனிதர்கள் ஏதேனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைப்பாக்கம் பெறுவதும் அந்த தனிமனிதர்களின் சிக்கல்கள் உண்மையில் அமைப்பின் சிக்கல்கள் என்று உணர்வதும் அதை எதிர்கொள்வதும் போரிடுவதும் வெல்வதும் சரியே.ஆனால் அது ஒரு போதும் ஒரு தனிமனிதனின் துயரத்தை பாடாது.அங்கே ஒரு மனிதன் எண்ணாக மாறுகிறான்.ஒரு புள்ளியியல் விவரனையின் வரைவாக உருக்கொள்கிறான்.ஆனால் அந்த பெளதீக மனிதன் ஆசைகளும் குழப்பங்களும் அச்சமும் காதலும் காமமும் பற்றும் வெறுமையும் என வாழ்வை வழக்கம் போலவே எதிர்கொள்கிறான்.அங்கே அமைப்பு அவனுக்காக வந்து நிறகப் போவதில்லை.அப்போது அவன் சிசிபஸூடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.அவன் துறவு கொண்டால் ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்று சொல்லவும் கூடும்.   


அபத்த தரிசனம்






ஆல்பர் காம்யூ மற்ற எழுத்தாளர்களை விட ஒரு வகையில் முக்கியமானவர்.அவர் வாழ்வதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்க யத்தனித்தார்.அவருடைய அந்நியன் நாவல் , பிளேக், வீழ்ச்சி , சிசிபஸின் தொன்மம் கட்டுரைகள் எல்லாவற்றிலும் வாழ்வை ஒரு குறிப்பிட்ட தளத்தில் தொகுக்க முயல்கிறார்.

முதலில் அவர் இந்த வாழ்க்கை அபத்தமானது என்கிற முடிவுக்கு வருகிறார்.இந்த அபத்த வாழ்வை அது அபத்தமானது என்கிற பிரக்ஞையின் வழி மட்டுமே கடக்க முடியும் என்று நினைக்கிறார்.பின்னர் இந்த அபத்த வாழ்வின் வழியும் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க முடியும் என்று எண்ணுகிறார்.

முதலில் அபத்தம் என்கிற கருத்தை முன்வைக்க அந்நியன் நாவலும் சிசிபஸின் தொன்மம் என்கிற கட்டுரை தொகுப்பையும் எழுதுகிறார்.அபத்தம் என்கிற போது அவர் ஒரு கேலிச்சிரிப்பை உருவாக்க முனைவதில்லை.மாறாக உங்கள் கைகளை பற்றி நாம் இருவரும் தேநீர் அருந்தலாம் என்றே சொல்கிறார்.எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே என்பதே அவர் முன்வைக்கும் அபத்தம்.மாறாக எதுவுமே மதிக்கத்தக்கதல்ல என்பதல்ல.சிசிபஸின் தொன்மம் கட்டுரை தொகுப்பில் சரியான பிரக்ஞையோடு இருந்தால் ஒரு தபால்காரராக இருப்பதற்கும் பிரதமராக இருப்பதற்கும் எந்த வித்யாசமும் இல்லை என்கிறார்.இந்த சரியான பிரக்ஞை என்பது சூட்சமமானது.அந்த பிரக்ஞையை எப்படி அடைவது, ஏன் அடைய வேண்டும் என்பதில் அவர் கூறும் ஒரே விஷயம் வேற்றுமையின்மை தான்.ஆனால் அந்த வேற்றுமையின்மையை நாம் தான் உணர வேண்டும் , அது புறத்தில் இல்லை, அகத்தில் தான் இருக்கிறது.

வீழ்ச்சி நாவலில் மிகத் தீவிரமாக தன்னைத் தானே குதறி சுய விசாரனை செய்கிறார்.அவர் இறுதியாக இங்கு நல்லவர்கள் , யோக்கிமானவர்கள் யாருமில்லை என்கிற முடிவுக்கு வருகிறார்.இந்த நாவல் ஒரு வகை குற்ற ஏற்புரைதான்.அவரின் மனைவி காம்யுவின் திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளும் உறவுகளால் தற்கொலைக்கு முயல்கிறார்.அந்த குற்றவுணர்வில் உருவான நாவல்தான் வீழ்ச்சி.

பிளேக் நாவல் ,வளரும் கல் சிறுகதை ஆகியவற்றில் ஒரு ஆழமான நட்பை முன்வைக்கிறார்.பிளேக் நாவலில் கதைசொல்லியும் பிளேக்கால் இறுதியில் இறந்துவிடுபவருக்கும் இடையில் உருவாகும் நட்பு மிகவும் வசீகரமானது.அவர்கள் இருவரும் ஒரு நாள் கடலில் நீந்த செல்லும் இடம் அத்தனை அழகாக இருக்கும்.அவர் எந்த அர்த்தமும் இல்லாத அபத்த வாழ்வில் ஒரு மானுட நேசத்தை முன்வைக்கிறார்.அங்கே மருத்துவர் , காவலாளி, பொறுக்கி என்கிற பேதங்கள் இல்லை.

ஆல்பர் காம்யூ காசநோயால் பாதிக்கப்பட்டவர்.அதனால் அவரால் தொடர்ந்து கால்பந்து விளையாட முடியவில்லை.எல்லோரும் நினைப்பது போல காம்யூ செளகரியமான வாழ்வை வாழவில்லை.அவர் பிரான்ஸில் மிகுந்த தனிமையை எதிர்கொண்டார்.அவரின் அல்ஜிரியா பற்றிய நிலைப்பாடு மற்றும் கம்யூனிஸத்திலிருந்து விலகியது அவரை தனிமைப்படுத்தியது.அவரின் பால்ய காலம் துயரமானது.ஆனால் அவர் மூளை கொண்டு மட்டுமே வாழ்ந்தவர் அல்ல.கால்பந்தில் ஆர்வம் கொண்டவர்.இறுதிவரை நாடகங்கள் இயக்கினார்.நடித்தார்.பல பெண்களோடு உறவு கொள்கிறார்.அது அவரின் மனைவியின் மனதை புண்படுத்துகிறது என்கிற போதும் அவர் அதை பொருட்படுத்தவில்லை.ஆனால் தான் திருமணம் செய்திருக்கக்கூடாது என்று மட்டும் ஒப்புக்கொள்கிறார்.

அவரின் காசநோய் , பால்ய காலத்தின் வறுமை இவை ஏதோ ஒரு வகையில் அவரின் அபத்த தரிசனத்தை உருவாக்கி இருக்குமா என்று தெரியவில்லை.அதாவது வேற்றுமையின்னமை.தஸ்தாவெய்ஸ்கியின் பேதை நாவலில் இப்போலிட் அவசியமான விளக்கம் என்ற ஒரு கட்டுரையை வாசிப்பான்.அவன் காசநோயால் பாதிக்கப்பட்டவன்.

ஏதோ ஒரு வகையில் தோல்வி, வெறுமைதான் ஒருவரை வாழ்வின் அபத்தம் நோக்கி நகர்த்துகிறதா.இருக்கலாம்.வாழ்வை கொண்டாட்டமாக பார்ப்பவர்கள் ஏன் வாழ்வின் அபத்தம் குறித்து எண்ணப்போகிறார்கள்.எல்லா வாழ்க்கைநிலைகளும் மதிக்கத்தக்கதே என்பவர் , ஏன் வாழ்வில் பொருளியில் ரீதியில் முன்னேற முனைவார்கள்.இருப்பதே மகிழ்ச்சிதானே.ஆனால் இந்த தரிசனம் ஒருவரின் வாழ்க்கை பற்றிய பார்வையை முற்றிலுமாக மாற்ற வல்லது.ஆல்பர் காம்யூ முன்வைக்கும் நேசம் வாழ்வின் அபத்தம் மூலமாக நாம் அடையும் வேற்றுமையின்மை எனும் ஆன்மிக தளத்தை அடைகிறது.அதை ஒருவரால் அடைய முடியும் என்றால் அவர் ஞானிதான்.அந்த மனநிலையே வசீகரமானது.அதன்பின் இந்த உலகில் உங்களை யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது.

ஆல்பெர் காம்யூவின் வீழ்ச்சி




Adoration of the Lamb - இடது பக்கம் கீழே இருப்பது Just Judges என்ற திருடப்பட்ட ஒவியம் 
 1934 ஆம் ஆண்டு Just Judges என்ற ஒவியம் யாரோ ஒருவரால் திருடப்படுகிறது.அந்த ஒவியம் பற்றிய குறிப்பு இந்த ஆல்பெர் காம்யூவின் வீழ்ச்சி(The Fall) நாவலில் வருகிறது.நாவலில் , ஒவியத்தை திருடியவர் குடிப்பதற்காக ஹாலந்தில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள மெக்ஸிகோ சிட்டி என்ற மதுவகத்தின் உரிமையாளரிடம் அதை விற்றுவிடுகிறார். அதை அவரிடமிருந்து வாங்கி தன் வீட்டின் அலமாரியில் வைத்துக்கொள்கிறார் ழான் பேப்டிஸ்ட் கிளெமன்ஸ்.கிளெமன்ஸ் பாரீஸில் வழக்கறிஞராக இருந்தவர்.புகழ்பெற்ற வழக்கறிஞர்.பார்வையற்றவர்களை சாலையை கடக்க உதவி செய்வது , விதவைகளுக்கும் அநாதைகளுக்குமான வழக்குகளில் வாதாடுவது, பேருந்தில் வேறொருவருக்கு இடமளிப்பது, காரில் செல்லும் போது மற்றவர்களை ஏற்றிக்கொள்வது என்று கிளெமன்ஸ் மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கையை வாழ்கிறார்.பார்வையற்றவர்களை சாலையை கடக்க உதவிசெய்த பின் அவர்களின் முன் தன் தொப்பியை எடுத்து வணக்கம் செலுத்துகிறார்.எப்படியும் அவர்களுக்கு அது தெரியப்போவதில்லை.ஆனால் அவர் மிக பெரிய நாடகத்தின் பகுதியை அரங்கேற்றிய வெற்றியுடன் பார்வையாளர்களை நோக்கி தன் தொப்பியை எடுத்து வணக்கம் செலுத்துகிறார்.சமூகத்தில் அவருக்கு நன்மதிப்பு இருக்கிறது.பெண்கள் அவரிடம் எளிதில் வசியப்பட்டுவிடுகிறார்கள்.அவர்களை ஈர்ப்பதற்கான வரிகளை அவரால் எளிதாக எந்த வித சிரமமும் இல்லாமல் சொல்ல முடிகிறது.அவர் மிகுந்த மனநிறைவுடன் பிறரை விட மேலான ஒரிடத்தில் வாழ்ந்து வருகிறார்.ஒரு நாள் ஒரு பெண்னை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு பாலத்தின் மீது நடந்துசெல்கிறார்.பாலத்தை கடக்கும் போது கறுப்பு நிறத்திலான உடை அணிந்த ஒல்லியான இளம் பெண் நதியை நோக்கியவாறு நின்றுகொண்டிருப்பதை பார்க்கிறார்.அவருடைய மேல் அங்கிக்கும் கருத்த கூந்தலுக்கும் இடையில் தண்னென்று ஈரம் தோய்ந்த அவரது பின் கழுத்தை பார்க்கிறார்.அது அவரை துணுக்குற வைக்கிறது.ஆனால் அவர் தொடர்ந்து நடக்கிறார்..சிறிது தூரம் நடந்தபின் யாரோ நீரில் குதித்த சத்தம் கேட்கிறது.உறைந்து போய் அங்கேயே நிற்கும் கிளெமன்ஸ் திரும்பவில்லை.மிகவும் தாமதமாகிவிட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற சமாதானத்தோடு அந்த இடத்தை கடந்துவிடுகிறார்.அதன்பின் இரண்டு நாட்கள் அவர் செய்திதாள்களை வாசிக்கவில்லை.அவர் வாழ்க்கையில் அந்த சம்பவம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.அவர் வாழ்க்கை பழையபடியே இயங்கிறது.இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து ஒரு முறை வேறொரு நதி பாலத்தில் நின்றுகொண்டிருக்கையில் ஏதோ சிரிப்பொலி கேட்கிறது.அவர் சுற்றும் பார்க்கிறார்.யாருமில்லை.பின்னர் வீடு திரும்புகிறார்.அங்கும் சிரிப்பொலி கேட்கிறது.அந்த சிரிப்பொலி கேலியானது அல்ல.ஒரு ஆரோக்கியமான சிரிப்பு தான்.அவரால் அந்த சிரிப்பை நிராகரிக்க முடியவில்லை.அது அவரை நிம்மதி இழக்க செய்கிறது.அவர் தன்னைபற்றி கொண்ட தன்னிறைவை எப்படியோ அது கேலி செய்கிறது.பல முயற்சிகளுக்கு பின் வேறு வழியின்றி கட்டற்ற இன்பத்தில் தோய்கிறார்.அந்த சிரிப்பு மறைந்து போகிறது.மதுவும் மாதுவும் அவருக்கான மீட்சியாக அமைகிறது.அந்நிலையில் அவர் அமரத்துவம் கொள்கிறார்.அவருக்கு காசநோய் இருப்பதால் மதுவை இடைநிறுத்துகிறார்.ஒரு நாள் தனக்கு காசநோய் நன்றாக குணமடைந்துவருவதால் ஒரு நண்பருக்கு விருந்தளிக்கும் பொருட்டு அவருடன் செல்கிறார்.கப்பலில் பயணிக்கும் போது கறுப்பு நிறத்தில் வெளியேறும் கழிவை பார்க்கிறார்.மறுபடியும் அந்த சிரிப்பொலி நினைவுக்கு வருகிறது.அதன் பின் அவர் இனி இந்த வாழ்க்கை முழுவதும் இதனோடே வாழ வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறார்.பாரீஸில் தன் அலுவலகத்தை மூடிவிட்டு வேறெங்காவது சென்று விட வேண்டும் என்று முடிவு செய்கிறார்.ஹாலந்தில் ஆம்ஸ்டர்டாம் செல்கிறார்.கடல், மூடுபனியால் சூழ்ந்த நகரம்.ஆம்ஸ்டர்டாம் கடலில் பயணிக்கும் போது நமக்கு கரைகளே தெரிவதில்லை.வானம் மேகமூட்டத்தால் மூடப்பட்டிருக்கும்.அந்த கடலில் பயணிக்கும் போது நாம் பயணிப்பதை போலவே உணர்வதில்லை.மாறாக கனவு கான்பதை போல உணர்கிறோம்.இது கிட்டத்தட்ட வாழ்க்கை போலத்தான்.இந்த வாழ்க்கையில் நாம் பயணிப்பதே இல்லை.இதற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.ஹாலந்தில் வாழும் மனிதர்கள் அங்கே இருக்கும் போது வேறெங்கோவும் வாழ்கிறார்கள்.தன்னைப்போலவே இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள்.அதனால் கிளெமன்ஸ் அங்கே செல்கிறார்.மெக்ஸிகோ சிட்டி என்ற மதுவகம் தான் அவருடைய அலுவலகம்.அங்கே தனக்கான வாடிக்கையாளர்களை உருவாக்குகிறார்.உலகின் எல்லா மூலைகளிலுமிருந்து அங்கே ஆட்கள் வந்தபடியே இருக்கிறார்கள்.அப்படி அங்கே வரும் ஒருவராக வாசகரை பாவித்து அவருடன் உரையாடுவது போல எழுதப்பட்ட நாவல் தான் வீழ்ச்சி.வாசகராக நாமும் அவருடன் மெக்ஸிகோ சிட்டி மதுவகத்தில் அமர்ந்து அவருடைய ஒப்பதல் வாக்குமூலத்தை கேட்கிறாம்.


கிளெமன்ஸ் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை எல்லோரிடமும் பொதுவில் தெரிவிக்கிறார்.அதற்காக அவர் அழுது மார்பில் அடித்துக்கொள்வதில்லை.சரியான வார்த்தைகளை தேர்கிறார்.அவருடைய தவறுகளை பட்டியலிடுகிறார்.அப்போது உங்களையும் அவருடன் இணைத்துக்கொள்கிறார்.உங்கள் இருவருக்குமான பொது தோல்விகளை பேசுகிறார்.அப்போது நாம் எல்லோரும் குற்றம் புரிந்தவர்கள் என்ற முறையில் சகோதரர்களே என்று சொல்லிவிடுகிறார்!ஆனால் அதில் அவர் விடுதலையை உணர்கிறார்.அவர் முதலில் தன் குற்றத்தை எந்த வித சமரசமும் இல்லாமல் ஒப்புக்கொள்கிறார்.பின்னர் அதன் மூலமாக இந்த மானுடத்தின் நீதிபதி ஆகிறார்.அப்படியாக மறுபடியும் அவர் மேலே உயர்ந்த இடத்திற்கு சென்றுவிடுகிறார்.இந்த நாவல் சாராம்சத்தில் மனிதனின் ஆதார குணங்களை பற்றி பேசுகிறது.கிளெமன்ஸ் எல்லா இடங்களிலும் மேலே உயரத்தில் இருக்க விரும்புகிறார்.கப்பலில் பயணிக்கும் போது மேலடுக்கில் இருக்க விரும்புகிறார்.கடல் மட்டத்திலிருந்து வெகு  உயரத்திலிருக்கும் மலையில் நிற்க விரும்புகிறார்.அவருக்கு மனித எறும்புகளுக்கு மத்தியில் கீழே இருக்க விருப்பமில்லை.அவரின் செயல்கள் அளித்த மன நிறைவு அவரை எங்கோ ஒரு உயரத்தில் அதீத சுய மதிப்பு கொண்டவராக இருக்க செய்கிறது.தன் வாடிக்கையாளர் ஒருவர் தன்னால் பணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறும் போது அது தேவையில்லை , மாறாக அவருக்கு எதாவது பண உதவி வேண்டுமா என்று கேட்டு விட்டு , வேறு யாரும் இவ்வாறே நடந்து கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு விடைபெறுகையில் மிகுந்த மகிழ்ச்சியும் உவகையும் அடைகிறார்.ஒருவன் தன் நற்செயலை பற்றி சொல்லும் போது , அல்லது யோசிக்கும் போது அது தன்னுடைய பிறவி குணம் என்று சொல்கிறான்.ஆனால் ஒரு தவறை நிகழ்த்தும் போது அதற்கான காரணத்தை சொல்கிறான்.அப்போது இருந்த சூழல், தன் பிரச்சனைகள் என்று பட்டியலிடுகிறான்.அதனால் தான் குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்.குற்றவாளிகள் நீதிமன்றத்தில் கோருவது கருணையை.ஆம், நாம் இழைத்த குற்றங்களுக்கு நாம் கோருவது கருணையே.நமது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பல பக்கங்கள் ஒருவரின் குற்றத்தை எதன் பொருட்டு குறைக்கலாம் என்பது பற்றி தான் பேசுகிறது.நான் ஒருவரை மிகவும் புண்படுத்தும்படி பேசியிருக்கிறேன்.பின்னர் அவரிடம் மன்னிப்பு கோரியபோது நான் மிகவும் நல்லவன் என்றும் ஏதோ சந்தர்ப்ப சூழல் காரணமாக இவ்வாறு நடந்து கொண்டதாகவும் இது ஒரு தற்காலிக விஷயமே என்றும் சொன்னேன்.இப்போது நினைத்து பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது.எந்த சிறிய அல்லது பெரிய குற்றத்தை செய்தவரும் இதையே தான் செய்வார்.நாம் நமது குற்றங்களுக்கான பொறுப்புணர்வை ஏற்க தயங்குகிறாம்.கிளெமன்ஸ் ஒரு முறை காரில் பயணம் செய்யும் போது சிகப்பு விளக்கு எரிவதால் சிக்னலில் நிற்கிறார்.அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் காரர் அவரது காருக்கு முன் தன் வண்டியை நிறுத்துகிறார்.சிக்னல் பச்சை நிறத்திற்க்கு மாறிய பின் முன் இருந்தவரால் மோட்டர் சைக்கிளை இயக்க முடியவில்லை.அவர் கொஞ்சம் விலகி கொண்டால் தான் செல்ல முடியும் என்று கிளெமன்ஸ் சொல்கிறார்.வாக்குவாதம் நீளவே கிளெமன்ஸ் காரிலிருந்து வெளியே வந்து மோட்டார் சைக்கிள் ஒட்டுநரை நோக்கி செல்கிறார்.அப்போது வேறொருவர் கிளெமன்ஸை தடுத்து மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருப்பவரை தாக்க முனைவது தவறு என்கிறார்.இதற்கிடையில் மோட்டார் சைக்கிள் இயங்கவே அவர் வண்டியை கிளப்பிக்கொண்டு கிளெமன்ஸை தட்டிவிட்டு செல்கிறார்.என்ன நடந்தது என்பதை யூகிக்க முடியாமல் கிளெமன்ஸ் மறுபடி காரை நோக்கி செல்கிறார். கிளெமன்ஸை தடுத்து அறிவுறத்தியவர் அவரை முட்டாள் கழுதை என்று கத்திவிட்டு செல்கிறார்.அவரோடு சிக்னலில் நின்றுகொண்டிருந்த எவரும் அந்த நிகழ்வை மறந்துபோயிருப்பார்கள்.ஆனால் கிளெமன்ஸ் அந்த நிகழ்வை மறுபடி மறுபடி தன் மனதில் நிகழ்த்திப்பார்க்கிறார்.தன்னை கழுதை என்று திட்டியவனை அடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் காரனை விரட்டி பிடித்து மடக்கி அவனை மண்டியிட வைக்க வேண்டும் என்ற படச்சுருளை அவருக்குள் மறுபடி மறுபடி நிகழ்த்திக்கொள்கிறார்.அவர் மறுபடியும் தன்மதிப்போடு சமூகத்தில் நடப்பதில் ஏதோ தயக்கம் கொள்கிறார்.அந்த வன்மம் அவரை நிம்மதி இழக்க செய்கிறது.தான் கண்ணியமானவன் என்ற பிம்பத்தை அது உடைக்கிறது.நதியில் விழுந்து மரணமடைந்த பெண்னை காப்பாற்ற துணியாமல் தாமதாமாகிவிட்டது இனி காப்பாற்ற சாத்தியமில்லை என்ற சமாதானாத்தோடு நடந்து சென்ற கணத்தை நினைவுகொள்வதோடு அவர் தன்னை பற்றிய முழுமையை அடைகிறார்.அவர் இதுவரை செய்த உதவிகள் எல்லாமே போலியானவை.அத்தகைய செயல்கள் அவருக்கு அளித்த சுயநிறைவை தன்மதிப்பை அவர் வெகுவாக நேசித்தார்.மொத்தத்தில் அவர் தன்னை மட்டுமே நேசித்தார்.அவர் மிகவும் விரும்பி செய்த செயல்களில் கூட அவருக்கு எந்த ஈடுபாடும் இல்லை.அந்த பெண்னை காப்பாற்றாமல் போனதை நினைக்கும் போது தன் அக்கறைகள் எந்தளவுக்கு என்று கேட்டு கொள்கிறார்.நம்மை இழக்கக்கூடிய ஒரு அக்கறையை உதவியை பிறருக்கு செய்ய நாம் முனைவதில்லை.தியாகம் நம்மை முன்நிறுத்தவே செய்யப்படுகிறது.நாம் செய்யும் எல்லா செயல்களும் நமக்கானவையே.

அந்த குற்றவுணர்வு உருவான பின் அவரால் முன் போல இயங்க முடியவில்லை.எப்போதும் பெண்கள் மத்தியில் இருக்கிறார்.ஒரு கட்டத்தில் அது நிறைய சிரமமாக மாறவே ஒழுக்க நெறி நிரம்பிய வாழ்வை வாழ விரும்புகிறார்.பிறகுதான் எந்த வித ஒழுக்க நெறிகளும் அற்ற கட்டற்ற இன்பத்தில் தோயும் வாழ்க்கையே தேர்கிறார்.காலை பொழுதில் விழித்தெழுகையில்  படுக்கையில் அவரின் இருபுறமும் விலைமாதுக்கள் இருக்கிறார்கள்.குடியும் பெண்களும் அவருக்கு அந்த சிரிப்பொலியை மறக்க உதவுகின்றன.அவர் நீதிமன்றத்தில் வாதாடுவதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் அவரை கண்டு அஞ்சுகிறார்கள்.அவர் அந்த சிரிப்பொலியை மறக்கிறார்.ஆனால் ஒரு முறை கப்பலில் பயணம் செய்யும் போது சட்டென்று அந்த நினைவு வரவே உதறல் கொள்கிறார்.பின்னர்தான் தான் செய்த தவறுகளை எந்தவித சமரசமும் இல்லாமல் ஒப்பு கொள்ளவேண்டும் என்று முடிவு செய்கிறார்.அப்படி செய்வதின் மூலம் தன்னை நீதிபதியாக்கி கொள்கிறார்.தனக்கான தீர்ப்பை எழுதும் நீதிபதியாக, அதன் மூலம் மானுடம் முழுவதுக்குமான நீதிபதியாக மாற்றம் கொள்கிறார்.அந்த சிரிப்பொலி நம்மை சுற்றிய மனிதர்களின் சிரிப்பொலிதான்.நாம் செய்யும் ஒரு தவறுக்கு நம்மை நோக்கி அவர்கள் உடனடியாக அவசரமாக எழுதும் தீர்ப்பு.அதை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் சிரிப்பொலி.இதை அவர் வெறுக்கிறார்.நாம் எல்லோரும் பிறரின் குற்ற நடவடிக்கைகளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டே இருக்கிறோம்.அதுவும் எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக.தீர்ப்பு எழுதிய பின் ஒரு கேலியான சிரிப்பொலி புரிகிறோம் அதுவே அந்த குற்றம் நம்மை பற்றியது என்றால் அது தனித்துவமானது என்று சொல்கிறோம் .அப்போது அங்கே சூழல் வருகிறது.சந்தர்ப்பங்கள் வருகிறது.விதி, ஊழ் ஆகியவை வருகின்றன.ஒருவன் தன் குற்றத்தை எந்தவித பிடிமானமும் இல்லாமல் எதிர்கொள்வது எத்தனை பெரிய விடுதலை.சமயம் மனிதர்களை குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது.ஆனால் ஒருவனை குற்றவுணர்வு கொள்ளச்செய்ய, தண்டனை வழங்க உண்மையில் சமயம் தேவையில்லை என்கிறார் கிளெமன்ஸ்.

மத்திய காலகட்டத்தில் Little-ease என்ற வகையிலான சிறைகள் இருந்திருக்கின்றன.அவைகளில் ஒருவர் நிற்கவோ அமரவோ படுத்துறங்கவோ முடியாது.அதாவது அப்படி ஒரிடத்தில் சில காலம் இருப்பவன் நாம் குற்றம் செய்திருக்கிறோம் அதனால் இந்த தண்டனை, குற்றமற்ற அறியாமை நிரம்பிய வாழ்க்கை என்பது நன்றாக உடலை விரித்து நிம்மதியாக உறங்குவது தான் என்பதை உணர்கிறான்.இதை வடிவமைக்க ஒருவருக்கு சமயமோ கடவுளோ தேவை இல்லை.வேறோரு சிறை பற்றி விவரிக்கிறார்.இங்கு மனிதர்கள் நின்றுகொண்டிருப்பார்கள்.கதவு அவர்களின் தாடை வரை இருக்கும்.வந்து போகும் சிறை அதிகாரிகள் கைதிகளின் முகத்தில் காறி உமிழ்வார்கள், அப்போது அதை துடைக்க அவர்களால் முடியாது.ஆனால் கண்களை மூடிக்கொள்ள அனுமதி உண்டு.இப்படிப்பட்ட சித்ரவதைகளை வழங்க மனிதனுக்கு கடவுளோ சமயமோ தேவையில்லை.அது மனிதனால் இயல்பாக செய்ய முடிந்த செயலே.கிளெமன்ஸ் தான் வாழ்ந்த இரட்டை வாழ்க்கையை வெறுக்கிறார்.தான் உண்மையில் பிறரை காதலிக்கவோ , நேசிக்கவோ அக்கறை கொள்ளவோ இல்லை.நான் காதலிக்கபட வேண்டும் என்று விரும்பினேன்.பரஸ்பர காதல் அல்ல.நான் காதலிக்கப்பட வேண்டும்.அதன் மூலம் நான் மேலும் உயரத்தில் இருக்க வேண்டும்.நான் மற்றவர்களை தேவையான போது பயன்படுத்திக்கொள்ள குளிர்பதனப் பெட்டியில் வைப்பது போல அவர்களை வைக்க விரும்பினேன் என்று சொல்கிறார்.

          

ஆல்பெர் காம்யூ 1956ஆம் ஆண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார்.இவரும் இவரின் துனைவியாரும் ஒருவர் மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்ற ஒப்புதலோடே திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஆனால் காம்யூவின் காதல் வாழ்க்கை அவருடைய துனைவியாருக்கு மன அழுத்தத்தை அளிக்கிறது.அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.அது காம்யூவை வெகுவாக பாதிக்கிறது.இந்த நாவல் கிட்டத்தட்ட காம்யூவின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லலாம்.காம்யூவிற்கும் காசநோய் இருந்தது.கிளெமன்ஸ் தான் வாழ்க்கையில் இரண்டு செயல்களில் மட்டுமே அதன் சட்டங்களை ஒப்புக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டதாக சொல்கிறார்.ஒன்று விளையாட்டு , மற்றொன்று நாடகம்.காம்யூ கால்பந்தாட்டக்காரராக இருந்திருக்கிறார்.நாடகங்களை எழுதியும் இயக்கியும் இருக்கிறார்.

இயேசு கிறுஸ்து பற்றி கிளெமன்ஸ் குறிப்பிடுகிறார்.கிறிஸ்துவிற்கு தான் முழுக்க தவறுகள் எதுவுமே செய்யவில்லை என்ற எண்ணம் இருந்ததில்லை.அவர் பொருட்டு கொல்லப்பட்ட குழந்தைகளை , குழந்தைகளை இழந்து வாடிய ராகெல்லின் துயரத்தை அவர் அறிந்திருந்தார்.அந்த துயரத்தை , குற்றவுணர்வை அதற்கு மேலும் தாங்க முடியாமல் அவர் மரணமடைந்தார்.இதில் பிரச்சனை என்ன வென்றால் நம்மை அவர் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்.நம்மால் அவரை போல செய்ய இயலவில்லை.கிளெமன்ஸ் வட ஆப்பிரிக்கா பகுதிகளில் முகாம்களில் சில காலம் இருக்கிறார்.அப்போது குழுவில் அவர்களுக்கு இடையே அவர் போப் என்று அங்கீகரிக்க படுகிறார்.அங்கே ஒரு படிநிலை தேவைப்படுகிறது.இவரின் கட்டளைகளை அங்கே உள்ளவர்கள் ஏற்கிறார்கள்.அங்கே எப்போதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.ஒரு முறை இறந்து போகும் நிலையிலிருக்கும் வேறொருவரின் தண்ணீரை இவர் அருந்துகிறார்.அவர் எப்படியும் இறந்து போகும் நிலையில் இருந்ததால் அவரை விடவும் தான் தான் மற்றவர்களுக்கு அதிகம் பயன்படுபவான இருக்க முடியும் என்பதே அதற்கு அவர் அளிக்கும் விளக்கம்.அந்த நிகழ்வோடு குழுவை கலைத்துவிடுகிறார். சகோதரத்துவம், சமதர்மம் மனிதனால் முடியாது என்கிறார்.இந்த நாவல் முழுக்க முழுக்க மனிதனின் ஆதார குணங்களான அதிகாரம், மனிதனால் பிறரை எந்தளவுக்கு குரூரமாக நடத்த முடியும் என்பதையும், காதல் , அன்பு, சகோதரத்துவம், என்று நாம் இந்த ஜனநாயக யுகத்தில் நின்று கொண்டு பேசியபடி இருக்கும் வார்த்தைகளுக்கு பின்னால் உள்ள கோர முகத்தை பற்றி பேசியபடி செல்கிறது.இது நமது வீழ்ச்சியை பற்றி பேசுகிறது.இந்த நாவல் உங்களை பற்றி பேசவில்லை.ஆனால் உங்களோடு பயணிக்கிறது.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த துரோகத்தை, கொலையை , திருட்டை, ஏமாற்றத்தை நீங்கள் அறியாமலே பட்டியல் இட வைக்கிறது.நாம் எத்தனை சுயநலவாதிகள் என்பதை எந்த வித இரக்கமும் இல்லாமல் பேசுகிறது.தஸ்தாவெய்ஸ்கிக்கும் காம்யூவிற்கும் இருக்கும் முக்கிய வித்யாசம் காம்யூவின் உலகில் மீட்சி இல்லை.நாம் பொதுவாக சமயம் , கருத்தியல் ஆகியவற்றால் தான் இத்தனை பெரிய அநீதிகளை மனிதனால் செய்ய முடிந்திருக்கிறது என்று சொல்கிறோம்.ஆனால் காம்யூ இந்த நாவலில் மனிதனால் இயல்பாகவே இதை எல்லாம் சிறப்பாக செய்ய முடியும் என்பதை நிறுவுகிறார்.நீங்கள் உங்கள் குற்றங்களை பட்டியலிட்டு பாவ மன்னிப்பு கேட்க முடியாது.உங்களுக்கு எந்த கருணையும் இல்லை.பகிரங்கமாக ஒப்புக்கொள்வதின் மூலமாக நீங்கள் உங்களின் பாசாங்கின் , பாவனைகளின் முகத்தை கிழிக்கிறீர்கள்.அவ்வளவுதான்.பிறர் உங்களுக்கான தீர்ப்பை எழுதுவதற்கு முன்னால் நீங்களே அதை செய்கிறீர்கள்.அதன் மூலம் உங்களை சுற்றி இருக்கும் மக்களின் கேலியான சிரிப்பொலியிலிருந்து தப்புகிறீர்கள்.மேலும் உங்கள் குற்றங்களை எந்தவித கருணையின் எதிர்ப்பார்ப்பில்லாமல் ஒப்புக்கொண்டதால் நீங்கள் நீதிபதி ஆகுகிறீர்கள்.அப்போது மானுடத்தை உங்களோடு சேர்த்துக்கொண்டு நீங்களும் அவர்களும் உங்களது பொதுவான குற்றங்கள் மூலமாக சகோதரத்துவத்தை உணரலாம்!அவ்வளவே.


Just Judges என்ற திருடப்பட்ட ஒவியம் இவரிடம் இருக்கிறது.அதை மூன்று நாடுகளின் காவலர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த ஒவியத்தில் நீதிபதிகள் அறியாமையின் குறியீடான செம்மறி ஆட்டுக்குட்டியை தேடி செல்கிறார்கள்.ஆனால் நீதியும் அறியாமையும் எப்போதோ பிரிக்கப்பட்டுவிட்டது.இன்று நீதி இறைவனின் பெயரால் வழங்கப்படுகிறது.ஆனால் விலைமாதுவை நோக்கி 'Neither do i condemn thee!' என்று மென்மையாக சொன்னவரின் பெயரால் நீதி வழங்கப்படுகிறது.அப்படிப்பட்ட ஒவியத்தை திருடியதற்காக தான் காவலர்களால் கைது செய்யப்பட்டால் அது நன்றாக இருக்கும் என்று கருதுகிறார் கிளெமன்ஸ்.அது எல்லாவற்றையும் எளிதாக்கிவிடும்.அதற்குபின் தனக்கு மரணம் குறித்த பயம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லும் கிளெமன்ஸ் இறுதியில் இவ்வாறாக முடிக்கிறார்.மறுபடியும் அந்த இளம் பெண்னை நதியில் குதிக்க சொல்லலாம்.அப்போது நமக்கு அவரை காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அப்போதும் தாமதாகிவிடலாம்.எப்போதும் தாமதமாகித்தான் விடுகிறது!அதிர்ஷடவசமாக!