சர்தான்
எழுத்தாளன் எழுதலாம் என்றார் நீதிபதி
பிழைகள் அதிகம் என்றார் பிழைதிருத்துநர்
தலைப்பு சரியில்லை என்றார் பதிப்பாளர்
அட்டைக்கு ஏற்ற கதையில்லை என்றார் அட்டை வடிவமைப்பாளர்
ஃபோட்டோவுக்கான முகமில்லை என்றார் புகைப்படக்காரர்
சாதி பிரச்சனை வரலாம் என்றார் போலீஸ்காரர்
உங்கள் தரப்பில் வலுவில்லை என்றார் வழக்கறிஞர்
தீயிட்டு கொளுத்துவோம் என்றார் சாதி கட்சி தலைவர்
வேலையில் கவனம் தேவை என்றார் முதலாளி
சமூக பொறுப்பு வேண்டும் என்றார் பத்திரிக்கையாளர்
எழுத்து என்பது மனுவல் மட்டுமே என்றார் சினிமாக்காரர் சிங்காரவேலர்
காலாவதியான கதை என்றார் கோட்பாட்டாளர்
கள ஆய்வு போதாது என்றார் சமூகவியலாளர்
சரியான பிரதிநித்துவம் இல்லை என்றார் புள்ளியியலாளர்
உன் பெயரை பத்திரிக்கையில் பார்த்தேன் என்றாள் முன்னாள் காதலி
சினிமாவில் வாய்ப்பு தேடு என்றாள் கள்ளக்காதலி
உனக்கெல்லாம் எதற்கு திருமணம் என்றான் மகன்
பைசாவுக்கு பிரயோஜனமில்லை என்றனர் பெற்றோர்
புத்தகத்தை பிடுங்கி முடிவைத்து விளக்கணைத்தாள் மனைவி
கதை எழுதுவியாமே என்றனர் சுற்றோர்
எவ்வளவு கிடைக்கும் என்று கேட்டான் நண்பன்
எழுத்து உனது சுயம் அல்ல என்றார் சாமியார்
மனசோர்வு எதிர்வு மாத்திரைகள் அளித்தார் மருத்துவர்
இனி நான் அழிவேன் என்றான்
உன்னை அழிக்க யாருண்டு
எழுத்தில் வாழ்பவன் அன்றோ நீ என்றேன்
ஆனால் இவர்களின் பார்வையில் நான் என்றான்
இவர்கள் பார்வையில் நீ தினம் தினம்
பட்டுத் தெறிக்க  வேண்டும்
என்ற அவசியம் என்றேன்.
புகையை இழுத்துவிட்டு
சர்தான் என்றான்.

தரிசனம்
ஐநூறு ஆயிர ரூபாய் நோட்டு விவகாரத்தின் ஊடாக பல்வேறு அறிவுஜீவிகள் கிராம பொருளாதாரம் சார்ந்து பல்வேறு கருத்துகளை முன்வைக்கிறார்கள்.பொதுவாக சூழியல்,விவசாயம்,கிராம பொருளாதாரம் பற்றி பேசும் போது அங்கே நாம் சாதிய அடுக்குகளை பற்றி பேசுவதில்லை.நெசவு,குயவு,விவசாயம் மற்றும் கிராம பொருளாதாரம் சார்ந்த தொழில்கள் நிலைபெற வேண்டுமென்றால் இங்கே சாதி எப்போதும் போல இருக்க வேண்டும்.கிராம பொருளாதாரம் பெரிய அளவில் முன்னேற வேண்டுமென்றால் நாம் முதலில் நமது கல்வியை நிறுத்த வேண்டும்.நகர் சார்ந்த வேலைகளுக்கு செல்லவே நமது கல்லி முறை இருக்கிறது.கல்வி இல்லையென்றால் தந்தையின் வேலையை மகன் செய்ய வேண்டும்.அவன் ஒரு போதும் பெரிய மூலதனத்தை உருவாக்க முடியாது.தனக்கென்று தொழிலை உருவாக்க முடியாது.அப்படியென்றால் சாதிய அடுக்குகள் அப்படியே இருக்கும்.

இது இருக்க கூடாது என்றுதானே அம்பேத்கர் கல்விசாலைகளையும்,தொழில்சாலைகளையும்,பெரிய அணைகளையும் ஆதிரத்தார்.மறுமுனையில் காந்தி கிராம பொருளாதாரம் பற்றி பேசினால் சாதி வருகிறது என்று தானே உயர் சாதிகள் குற்றவுணர்வு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.அதனால்தானே அவர்களை ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் செய்த வேலைகளை செய்யச் சொன்னார்.ஆனால் காந்தி நினைத்து போல எந்த மாற்றமும் வரவில்லை.ஆனால் அம்பேத்கர் முன்வைத்த கல்லி,தொழில்துறை என்ற திசையில் தான் இன்று நாடு சென்றுகொண்டிருக்கிறது.

இன்று மோடி தலைமையிலான அரசை விமர்சிக்கும் போது தேசம் அரசு மதம் எல்லாம் ஒன்றாகிறது என்கிறார்கள்.வலதுசாரி அரசு என்பதே தேசத்தையும் மதத்தையும் ஒன்றினைப்பதுதானே.இன்று இந்தியா ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி சொல்வதை கேட்டு நடக்கிறது என்கிறார்கள்.இன்று உலகில் எந்த ஒரு நாடாவது கிராம பொருளாதாரம் சார்ந்து இயங்குகிறதா.இன்றைய சூழலில் ஒரு நாடு தனக்கென்று தனித்த பொருளாதார கொள்கைகளை வகுத்து கொள்ள இயலுமா.அப்படி கிராம பொருளாதாரத்தை முன்வைத்து ஒர் அரசு இயங்குமென்றால் அந்த அரசு சாதியத்தை முன்வைக்கிறது என்று விமர்சிக்கப்படாதா.உலகு செல்லும் திசையில் செல்லாமல் நம் மக்கள் முடக்கப்படுகிறார்கள் என்று சொல்லாமாட்டார்களா.

இங்கு கிராம பொருளாதாரம்,சூழியல்,விவசாயம் என்று பேசுபவர்கள் இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் தங்கள் கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும்.கல்லியிலிருந்து சாதியிலிருந்து உலக பொருளாதார சூழலிலிருந்து அண்டை நாடுகளூடனான உறவுகளிலிருந்து என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு அவர்கள் மாற்று பொருளாதாரம் சார்ந்த எண்ணங்களை முன்வைக்க வேண்டும்.அப்படி இல்லாமல் தேசம் என்பதே கற்பிதம் என்று உளறினால் உலகம் என்பதே கற்பிதம் என்று சொல்லலாம்.அத்தகைய உரையாடல் எங்கும் கொண்டுசெல்லாது.உங்கள் உரையாடலில் ஒரு தரிசனம் இருக்க வேண்டும்.

உதாரணமாக டி.ஆர்.நாகராஜ் தன்னுடைய எரியும் பாதம் புத்தகத்தில் கிராமம்Xநகரம்,சாதிகள்,தொழில்மயம்Xவிவசாயம்,காந்திXஅம்பேத்கர் என்று பல்வேறு முரண்களை தொடர்ந்து பேசுகிறார்.அதன்மூலம் இந்தியா பற்றிய தெளிவான சித்திரத்தை முன்வைக்கிறார்.அவர் தன் வாதங்களை அதன் மேல் வைக்கிறார்.இத்தகைய பார்வை இங்கே எழுதுபவர்களிடம் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் மட்டுமே ஏதேனும் ஆராக்கியமான நகர்தலை அது உருவாக்கும்.மேலும் இத்தகைய விஷயங்களை பேசுபவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள்.அவர்களின் மகன்கள், மகள்கள் எங்கு படிக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள், அவர்கள் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்களா என்பதையும் அவர்களே பரிசீலிக்க வேண்டும்.இங்கு உண்மையில் டி.ஆர்.நாகராஜ் போன்ற அறிவுஜீவி இல்லை.அப்படி ஒருவர் உருவாகி வந்தால் அவர் முக்கிய உரையாடல்களை முன்வைக்கலாம்.

தனி மனித சமூகம்
எஸ்.குருமூர்த்தி கூட ஜெயமோகன் போல வாதாட தயங்குவார்.ஆனால் ஜெயமோகன் இந்த விஷயத்தில் அவரின் வாதங்களை தெளிவாகவே முன்வைத்திருக்கார்.அமெரிக்கா போலவோ ,ஐரோப்பா போலவோ இந்தியா நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து தனிமனிதர்களலான காலத்திற்கு வந்து பின்னர் இங்கு தொழில்மயம் உருவாகவில்லை.

இங்கே நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் மட்டுமே இருந்த கட்டத்தில் சட்டென்று தொழில்மயம் உருவாகிறது .இங்கு தனிமனித விழுமியங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.நான், என் குடும்பம், என் ஜாதி,என் மக்கள் அவ்வளவுதான்.கடவுளை கும்பிட வரிசையில் நிற்பதை அவமானமாக கருதும் சமூகம் இது.யாரை பிடித்தால் சட்டென்று உள்சென்று பரிவட்டம் கட்டி வேலையை முடித்து விட்டு வரலாம் என்று நினைக்கும் சமூகம்.

இந்த சமூகத்தை நவீன அரசின் அமைப்புக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் இந்த அரசு செய்வது சரியானதுதான்.நிலப்பிரபுத்துவ சமூகம் பணத்தை வீட்டில் வைக்கும்.வரி செலுத்தாது.தனிமனித சமூகம் வங்கியில் வைக்கும்.வரி செலுத்தும்.வங்கியில் வைக்க இதுதான் வழி.போகன் சங்கர் சொன்னது போல பணக்காரர்கள் எப்போதும் தப்பிக்கிறார்கள்.பத்தாயிரம் கோடி ரூபாய் எய்த்தவர் தப்பித்துவிட்டார் என்பதால் ஒரு கோடி ரூபாய் எய்த்தவர் தப்பிக்கலாம் என்றில்லை.

கோசாம்பி இந்திய வரலாறு பற்றி எழுதிய புத்தகத்தில் நம் கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது என்கிறார்.இங்கே உருவான சாம்ராஜ்ஜியங்கள் ஒரு வகையில் அவர்களின் தலைக்கு மேலே செல்லும் மேகங்கள் போன்றவையாகி இருந்திருக்கிறது.ஆனால் சட்டென்று 1900களில் இங்கே பல்கலைகழகங்கள் உருவாகின்றன.நகரங்கள் உருவாகுகின்றன.படித்து வேலை செய்யும் முதல் தலைமுறை உருவாகுகிறது.1950களில் சோஷயிலச அரசு வருகிறது.1990களில் மிகப்பெரிய பாய்ச்சலாக தொழில்மயமும் தாராளமயமும் வந்துவிட்டது.இங்கே நகரங்களில் தனிமனிதர்கள் உருவாகுகிறார்கள்.1940களில் புதுமைப்பித்தன் கதைகளில் வந்த தனிமனிதன் உண்மையில் பெரிய அளவில் 2000களுக்கு பிறகே வந்தான்.நூறு வருடங்களில் மிகப்பெரிய சமூக மாற்றம்.ஆனால் பண்பாட்டு அளவில் நாம் அதே நிலப்பிரபுத்துவ சமூகமாகத்தான் இருக்கிறோம்.ஒரு நவீன அரசின் மனிதர்களாக மாறவில்லை." முன்னேறிய நாடுகள் தங்களுடைய சாதனைகளை தாராண்மைவாத யுகத்தின் வழி நிகழ்த்திக்கொள்ளும்" என்கிறார் மார்க்யூஸா.ஆகையால் இங்கே கிட்டத்தட்ட இருநூறு வருட கால வித்யாசம் கொண்ட மனிதர்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்கிறார்கள்.இத்தனை பெரிய வித்யாசங்கள் கொண்ட சமூகம் உலகில் வேறு எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.அப்படியான ஒரு சமூகத்தில் நவீன அரசு தனிமனிதர்களின் விழுமியங்களை கோரும் சட்டங்களை இயற்றுவது மிக கடினமான செயல்.இது ஒரு வகையில் பண்பாட்டு ரீதியிலான பிரச்சனையும் கூட.இங்கே பலருக்கு நான் ஏன் வரி கட்ட வேண்டும் என்றே புரியவில்லை.ஒரு முறை என்னுடன் கர்நாடகவில் பணிபுரிந்தவன் தன் கிராமத்திற்கு சென்றால் வீட்டு கழிப்பறையை பயன்படுத்துவதில்லை , வெளியில்தான் செல்கிறேன் என்றான்.மேலும் ஏன் வீட்டில் கழிப்பறைகளை பயன்படுத்த இந்த அரசு அறிவுறுத்துகிறது என்று புரியவில்லை என்றான்.அவன் இருபத்தியோராம் நூற்றாண்டின் மனிதன்.என்னைவிட வயதில் சிறியவன்.இங்கே எதையும் செய்வது எளிதல்ல.

கமிஷன் அடிப்படையில் பணமாற்றம் செய்யலாம் என்று இப்போது ஐநூறு ஆயிர ரூபாயை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இருபத்தி ஐந்து லட்சத்தை இருபத்தியோறு லட்சமாக மாற்றி நான்கு லட்ச ரூபாயை கமிஷனாக பெற முயன்ற வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.கணக்கில் இல்லாத பணத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பலரிடம் கொடுத்து பிறகு அதே பணத்தை வெள்ளை பணமாக மாற்றுகிறார்கள்.இதற்கு ஒன்று தங்களுக்கு தெரிந்தவர்களை பயன்படுத்த முயல்கிறார்கள்.அல்லது செயல்படாத வங்கி கணக்குகளை பயன்படுத்த முயல்கிறார்கள்.இரண்டாவதை செய்வதற்கு வங்கி அதிகாரிகளின் உதவி தேவைப்படுகிறது.இதற்கு பெயர் Money Laundering.இதை தடுக்க Anti Money Laundering முறையை எல்லா வங்கிகளிலும் அமல்படுத்தவேண்டும்.சட்டென்று ஒருவரின் வங்கி கணக்கில் சிறுசிறு தொகைகளாக பல லட்சம் குவிகிறது என்றால் அது கண்டறியப்படும்.அநேகமாக இவர்களில் பலர் இப்போது பழைய ஐநூறு,ஆயிர ரூபாய்களை பலரின் வங்கி கணக்கில் செலுத்தி அதை அவர்களையே எடுக்க வைத்து கமிஷனாக கொஞ்சம் பணத்தை கொடுத்து பிறகு வெள்ளை பணமாக மாற்றிக்கொள்கிறார்கள்.இதை தடுக்கத்தான் மை வைக்கிறார்கள்.KYC எனும் Know your customer மற்றும் Anti Money Laundering ஆகியவற்றை அமல்படுத்தினால் திடீரென்று ஒருவரின் வங்கி கணக்கில் எப்படி சிறு சிறு தொகை வருகிறது என்று கண்டரியமுடியும்.அந்த வாடிக்கையாளர் யார் , என்ன தொழில் செய்கிறார் போன்ற விபரங்களை வங்கிகள் பெற வேண்டும்.அப்போது சிறு சிறு தொகையாக ஒரு லட்ச ரூபாயை செலுத்தினால் அவரின் பணத்தின் மூலத்தை கேட்டறியலாம்.இப்படி நடக்கிறது என்றாலே யாரும் கமிஷன் அடிப்படையில் உதவ மறுப்பார்கள்.ஆர்பிஐ இதை விரைவாக இந்திய வங்கிகளில் செயல்படுத்த வேண்டும்.

ராஜன் குறை ஜெயமோகனின் கட்டுரைப்பற்றி எழுதியுள்ள குறிப்பில் எந்த வாதத்தையும் கட்டி எழுப்பவில்லை.மாதம் சம்பளம் வாங்குபவர் இரண்டரை லட்சம் மேல் வாங்கினால் வரி கட்ட வேண்டும்.ஹோட்டல் வைத்திருப்பவர் பத்து லட்சம் மேல் சம்பாதித்தால் முப்பது சதவிகிதம் வரி கட்ட வேண்டும்.வருமான வரியை குறைக்க விலக்குகள் உண்டு.அதை செய்யலாம்.அதை விடுத்து அவர் மறுபடியும் தொழிலில் தான் செலுத்துகிறார் ,அதனால் வரி கட்ட தேவையில்லை என்றால் மாத சம்பளக்காரர்கள் கூட பணம் சேர்த்து தொழில் தொடங்கலாம்,அதனால் வரி கட்டத் தேவையில்லை எனலாம்.மேலும் அவர்கள் ஈட்டும் பணத்திற்குத்தான் அவர்கள் பணம் கட்ட வேண்டும்.சேவை வரி முதலியவை வாடிக்கையாளர்கள் செலுத்துகிறார்கள்.

இங்கே பெரு முதலாளிகள்,தொழிலாளிகள் என்ற இரண்டே பிரிவுதான் உள்ளது போல எழுதப்படுகிறது.நடுவில் சிறு முதலாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.இவர்களில் கனிசமானோர் வரி கட்டுவதில்லை.அல்லது மிகக் குறைந்த தொகையை கட்டுகிறார்கள்.அவர்கள் ஏன் வரி கட்டக்கூடாது.இவர்களில் அநேகர் நகைகளிலும் , ரியல் எஸ்டேட்களிலும் தங்களை பணத்தை முதலீடு செய்கிறார்கள்.அவர்களிடமிருந்து எப்படி பணத்தை மீட்பது.அவர்கள் எப்போதும் எல்லா பரிவர்த்தனைகளையும் liquid cashயில் தான் செய்கிறார்கள்.இங்கே உழவர் சந்தை அமைப்புகளை வளர விடாமல் தடுத்தார்கள்.ரியல் எஸ்டேட்களில் ஒரு சதுர அடிக்கு பணத்தை நூறு சதவிகிதம் ஏற்றி விற்கிறார்கள்.இதெல்லாம் தவறே இல்லையா.இப்போது ஐநூறு ஆயிர ரூபாய் செல்லாது என்கிற போது இவர்களில் பலரும் பதறுகிறார்கள்.என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.ஆனால் இவர்கள் சொல்வது போல சாமானிய மனிதன் கஷ்டப்படுகிறான் என்றால் இங்கே ஏன் பெரிய கொந்தளிப்பு இயல்பாக உருவாகவில்லை.இங்கே மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.சில்லறை மாற்றுவதில் சிக்கல் இருக்கிறது.தினசரி தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியவில்லை.பண ஓட்டம் குறைந்துவிட்டது.ஏன் முதலில் ஐநூறு ரூபாய் கொண்டு வராமல் இரண்டாயிரம் ரூபாயை கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லைதான்.

ஆனால் இங்கே எழுதுபவர்களின் உண்மையான அக்கறை யாருக்கானது என்றே தெரியவில்லை.இந்தியா முழுவதுமாக liquid cash அற்ற சமூகமாக மாறுவது அதன் ஆன்மிக தளத்திற்கே பாதகமானது.ஆனால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை.இங்கே மக்கள் கொந்தளிக்கிறார்களோ இல்லையோ நிறைய அறிவு ஜீவிகள் கொந்தளிக்கிறார்கள்.


கிறுஸ்துவ பார்வை
ட்ரி ஆப் லைப் படத்தில் வாழ்வின் பிரபஞ்சத்தின் ஆடலாக கருணைக்கும் இயற்கைக்குமான முரணியக்கம் காண்பிக்கப்படுகிறது.இந்த கருணைக்கும் இயற்கைக்குமான முரணியக்கம் கிரேக்க தத்துவத்தில் (Love and Strife) பல காலமாக இருந்து வருகிறது.இந்த பிண்ணனிதான் கிறுஸ்துவத்தில் குற்றம் - குற்றவுணர்வு - பாவம் - மன்னிப்பு - தியாகம் - மீட்பு என்பதாக வருகிறது என்று தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இந்த கிறுஸ்துவ எண்ணத்தால் அதிகம் பாதிகப்பட்டவர்.அவருடைய படங்களில் குற்றம் - பாவம் - மீட்பு மறுபடி மறுபடி வருகிறது.பாலாவின் படங்களில் இதை பார்க்க முடியாது.அவருடைய படங்களில் குற்றம் - சாபம் - தண்டனை - சாபவிமோசனம் என்ற கருத்துதான் வருகிறது.அடிப்படையில் நம் மரபில் இதுதான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இங்கே நீங்கள் குற்றம் செய்தால் அது சாபத்தை உருவாக்கும்.சாபத்திலிருந்து மீள வழி இருக்கும்.இறுதியில் சாபவிமோசனம்.பிஷ்மருக்கு அம்பை அளிப்பது சாபவிமோசனம்.நமது புராணங்களில் வரும் தீயவர்கள் அவர்கள் செய்த செயல்களால் சாபம் பெறுபவர்கள்.சாபத்தை கடந்து இறுதியில் விமோசனம் அடைகிறார்கள்.

நாம் பெரும்பாலும் ஒரு தீய செயல் அல்லது நற்செயல் நிகழும் போது இப்படி நடக்கனும்னு இருந்திருக்கு பாரேன் என்றுதான் சொல்கிறோம்.ஒன்று பிரபஞ்சத்தின் அல்லது நமது கர்ம வினை பலன்கள் அல்லது ஊழ் என்ற பூங்குன்றனார் சொன்ன நீர்வழி படூஉம் புணை என்று இவை இரண்டாகத்தான் நாம் விஷயங்களை பார்க்கிறோம்.மேற்குலகம் சொல்லும் free will நம் மரபில் இல்லை.அது இல்லாததால் குற்றவுணர்வு - மன்னிப்பு - மீட்பு போன்ற விஷயங்களும் இங்கு இல்லை.

ஆனால் நாம் சமீப காலங்களில் கிரேக்க முரணியக்கமாக வாழ்வை பார்க்கிறோம் என்று தோன்றுகிறது.கருணைக்கும் இயற்கைக்குமான மோதலாக முரணியக்கமாக வாழ்வை பார்ப்பது, குற்றவுணர்வால் மன அழுத்தம் பெறுவது , மீட்சிக்கான வழியற்று அவதியுறுவது என்று கிறுஸ்துவ கருத்தியலின் தாக்கம் நம்மில் அதிகமாக இருக்கிறது.குற்றவுணர்வு இல்லையென்றால் மன அழுத்தம் இல்லை.உங்கள் செயலுக்கு நீங்கள் பொறுப்பில்லை என்றால் குற்றவுணர்வு இல்லை.free will இல்லையென்றால் உங்கள் செயலுக்கு நீங்கள் பொறுப்பில்லை.

சமீபத்தில் அஜிதன் இயக்கிய காப்பன் என்ற குறும்படத்தை பார்த்தேன்.இது ட்ரி ஆப் லைப் படத்தின் பாதிப்பினால் உருவானது என்று தோன்றியது.குற்றம் - கருணை - குற்றவுணர்வு - வாழ்வின் அழைப்பு என்று இது கருணைக்கும் இயற்கைக்குமான ஒரு விஷயமாக வாழ்வை பார்க்கிறது.அது ஒரு பார்வை.ஆனால் அப்படி பார்க்கத்தேவையில்லை என்று படுகிறது.