பாரடைஸ்

 


அபிலாஷ் பாரடைஸ் திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறார்.அவர் எழுதியுள்ளதற்கு மாறாக எனக்குத் திரைப்படம் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படம் போலிய பெண்ணியவாதத்தையோ அல்லது பெண்ணியவாதத்தையோ முன்வைக்கும் படம் அல்ல.

சீதையின் அக்கினிப்பிரவேசம் பற்றியும் ராமன் ராவணனை கொலை செய்ததை பற்றியும் கதையில் பலரும் பேசுகிறார்கள். இந்தக் கதையின் மையமான வாதம் அந்தப் பெண்ணின் பார்வை அல்ல.தமிழர்களோ இஸ்லாமியர்களோ சிங்களர்களோ கூட இல்லை. இதில் அந்த நாயகனின் உறுதித்தன்மையே மையக் கதையாடலாக இருக்கிறது. அவன் தொடர்ந்து உறுதியாக பிடிவாதமாக தன் களவாடப்பட்ட பொருள் குறித்த பதற்றத்தோடு இருப்பதையே கதை முதன்மைப்படுத்துகிறது .எனக்கு என் பொருள் வேண்டும் என்பதற்கு அப்பால் அவனால் சிந்திக்க இயலவில்லை.

முதலில் அந்தப் பெண்ணும் இயல்பாக அவனோடு காவல் நிலையம் செல்கிறாள்.அதுவரை அவளுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.அங்கு அழைத்து வருபவர்களை அவளால் அடையாளம் காட்ட இயலவில்லை.தன் கணவரின் தீர்க்கமான முடிவு அவளைக் குழப்புகிறது. இங்கிருந்து தான் அவர்களுக்குள் மன கசப்பு உண்டாகுகிறது. அவன் அந்த விடுதியிலோ , காவல் நிலையத்திலோ ,அந்தத் தமிழர் தாக்கப்படும் போதோ , அவன் இறக்கும் போதோ, அது பெரிய சிக்கலாக உருவெடுக்கும் போதோ அந்த விடுதியின் உதவியாளரை காவல் துறை ஆய்வாளர் சந்தேகிக்கும் போதோ அவன் தன் பிடிவாதத்தை விட்டிருக்கலாம்.

அவன் தொலைத்தவை முக்கியமான பொருட்கள் தான். அவன் கைப்பேசியோடும் கணினியோடும் தான் அதிக நேரம் செலவிடுகிறான் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் வரும் பதற்றம் தான் அவனுக்கும். எப்படியாவது தொலைத்ததை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கும்.அதுவும் அது தன் தொழிலுக்கு முக்கியமானதாக இருக்கும் போது பதற்றமும் ஏக்கமும் மேலும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் அந்த உறுதியிலிருந்தும் பிடிவாதத்திலிருந்தும் அவன் இறுதிவரை விலகி வருவதே இல்லை.தன் முன் நிகழும் எதையும் அவன் கண் கொண்டு பார்க்கவே இல்லை.அவன் அகம் புறத்தை பார்க்க மறுக்கிறது.அவன் இலங்கை சென்றாலும் விடுமுறையில் இல்லை.அவனது அழுத்தமே அங்கு நிகழும் அனைத்துக்கும் காரணம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை.அதை அவன் உணரவும் விரும்பவில்லை.மருத்துவமனைக்கு செல்பவன் அங்கிருந்து திரும்பிவிடுகிறான்.அவன் யதார்த்தத்தை எதிர் கொள்ளத் தயங்குகிறான்.

அவன் தன் பிடிவாதத்தை பொருந்தாத பழைய சட்டையை  போல கழற்றியிருக்க முடியும்.ராமர் தன் பிடிவாதத்தை விட்டிருந்தால் லங்கை அழிந்திருக்காது , சீதையே ராவணனை கொன்றிருப்பாள் என்பதான புரிதலும் உண்டானது.

நாயகி நாயகனை கொல்லும் தருணம் ஒரு விபத்து தான். அது அவள் திட்டமிட்டு நிகழ்த்துவது அல்ல.அந்தத் தருணத்தில் தனக்கிருந்த பதற்றத்தாலும் எரிச்சலாலும் செயலின்மையாலும் தான் அவள் அவனை சுடுகிறாள்.இங்கே நாயகன் ராமனாகவும் இருக்கலாம் ராவணனாகவும் இருக்கலாம். 

இறந்து போன மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபால் ஒரு பேட்டியில் பிடிவாதம் குறித்து பேசியிருப்பார்.பிடிவாதம் இயல்பில் ஒரு அருவெருக்கதக்க குணம்.நாம் மிகவும் உறுதித்தன்மையோடு இருந்தால் பிறருக்கு நம்மை பிடிக்காமல் போய்விடும்.ஆனால் மனித உரிமை ஆர்வலராக என்னுடைய பிடிவாத குணம் எனக்கு உதவுகிறது என்று சொல்லியிருப்பார்.

இந்தத் திரைப்படம் மற்றமை குறித்த அக்கறை அற்ற உறுதித்தன்மை குறித்தே பேசுகிறது. மேலும் ஒரு பெண்ணிற்கு முகமைகள் தேவையில்லை என்பதையும் சொல்கிறது.அதை இந்தக் கதை அந்தப் பெண் கதாபாத்திரத்தின் உருமாற்றமாக சொல்லவில்லை.அந்தப் பெண் இயல்பிலேயே அப்படியானவளாக சுய விருப்பு வெறுப்புகள் கொண்டவளாகவே இருக்கிறாள்.சீதை அழுது கொண்டுதான் இருந்திருப்பாள் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று வினவுகிறாள்.சமண ராமாயணத்தில் சீதை தான் ராவணனை கொல்கிறாள், ராமன் தேரோட்டியாக இருக்கிறான் என்கிறாள்.

பிடிவாதங்களை களைந்து மற்றமை மீது கொள்ள வேண்டிய அக்கறையே இந்தத் திரைப்படத்தின் கதையாடல்.நல்ல திரைப்படம்.

குறிப்பு : இந்தத் திரைப்படத்தை பற்றி எழுதும் எண்ணம்  முன்னர் இல்லை. அபிலாஷ் எழுதியதை படித்தப் பின்னர் என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள முடிந்தது.எழுதவும் வாய்த்தது.அவர் பதிவுக்கு நன்றி.


No comments: