புக் பிரம்மா
மூன்றாம் நாள் நிகழ்வில் தெலுங்கு சிறுகதைகள் பற்றிய அரங்குக்கு சென்றேன்.எவை
தெலுங்கு சிறுகதைகள் என்ற விவாதம் நிகழ்ந்தது.அசோகமித்திரன் ஐதராபாத் பற்றி
எழுதியதை சுட்டிக்காட்டி அவை தெலுகு சிறகதைகள் என்று கொள்ள முடியுமா என்ற கேள்வியை
தன் பேச்சில் கேட்டுக்கொண்டார் விவின மூர்த்தி என்ற எழுத்தாளர்.
அவர் பொதுவாக
தெலுகு பாஷையில் எழுதப்பட்ட சிறுகதைகள் தெலுகு சிறகதைகள் தான் என்றார்.தெலுங்கு
சிறுகதைகள் தொடங்கிய காலங்களில் எளிய மக்களின் கஷ்டங்களைப் பற்றி பேசின ,ஏழுபது
எண்பதுக்கு பிறகு எளிய மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசும் அதே
வேளையில் அவர்கள் அதை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தையும் போராட்டங்களை
பற்றியும் பேசின என்றார். தெலுகு கதைகளின் முக்கிய விஷயம் அது சமாஜத்தோடு
(சமூகத்தோடு) எப்போதும் தொடர்பில் இருப்பது தான் என்றார்.அது வேறு ஏதோ ஒரு உலகத்தை
குறித்து பேசாமல் சமூகத்தை குறித்தே தன் கதைகளில் விவாதித்தது என்றார்.சில
குறைகளையும் சொன்னார், குறைகள் எனக்கு சரியாக புரியவில்லை.
முகம்மது காதர்
பாபு என்ற எழுத்தாளரிடம் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமிய உலகத்தை பற்றி மட்டுமே
பேசுகிறார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அவர் தன் வாழ்க்கையிலிருந்து ஒரு பதிலைச்
சொன்னார்.தன் தாய் இறந்த பின்னர் நிறைய பேர் துக்கம் விசாரித்த போது பலருக்கும்
இஸ்லாத்தில் மரணத்திற்கு பின்னான சடங்குங்கள் , முறைகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதை
அறிந்து கொண்டதாகச் சொன்னார்.நாங்கள் இறந்தவர்களின் உடலை மசூதிக்கு எடுத்துச்
செல்வோம், நாற்பது நாட்கள்
கழித்து சில சடங்குகளை அனுசரிப்போம்.அதைப் பற்றி யாரும் அறியவில்லை.எங்களோடு
எங்கள் அருகில் இருக்கிறார்கள் , ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை , அப்படியென்றால்
ஒன்று நாங்கள் அவர்களுக்கு சொல்லவில்லை, அல்லது அவர்களுக்கு அதை அறிய அக்கறையில்லை , ஆகையால்
எங்களுக்கு இவை பற்றி சொல்லவே நிறைய இருக்கிறது.ஒரு எழுத்தாளரிடம் வந்து ஏன் இதைப்
பற்றி எழுதவில்லை , அதைப்பற்றி எழுதவில்லை என்று கேட்பது
அவசியமற்றது. ஒரு எழுத்தாளன் எதை எழுத விரும்புகிறானோ அதைத் தீவிரத்தன்மையோடு
எழுதினாலே போதுமானது என்று கோர்வையாகச் சொன்னார்.அவர் மிக நன்றாக பேசினார்.
அதே போல அவரிடம்
இப்படித்தான் எழுத வேண்டும் , அதாவது ஓடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழும்
குரலாக , ஓடுக்குதலுக்கு
எதிராக என்ற தன்மையில் தான் எழுத வேண்டும் என்ற நிர்பந்தம் உங்களுக்குள்ளேயே
இருக்கிறதா என்ற இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. ஜீவித கதைகள் எப்போதும்
எழுதப்பட்டன.திருமணத்தின் போது மெஹந்தி அணிதல் போன்ற சிறு கொண்டாட்டங்களை எழுதலாம், எழுதப்பட்டுள்ளன.அதனால்
எப்போதும் வாத பிரதிவாதங்கள் உள்ள கதைகளைத்தான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை , ஆனால் அப்படியான
ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பது உண்மைதான் , அதைத் தவிர்த்து எழுத வேண்டும் என்றார்.
எழுத்தாளர்
குப்பிலி பத்மா நான் ஒரு பியூட்டி பார்லரில் நிகழ்ந்த கதையை எழுதினால் இது
உங்களுக்கு நிகழ்ந்ததா என்பது போன்ற எதிர்வினைகள் வருகின்றன என்றார். இதைப்பற்றி
ஜா.தீபா கூட தமிழ் அரங்கில் சொன்னார்.
முகம்மது காதர்
பாபு தெலுங்கு சிறுகதைகளில் வஸ்துக்கள் (வஸ்து என்றால் பொருட்கள் என்று வகையில்
சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன்) மாறியிருக்கின்றன , பிரயோகங்கள்
அதிகம் மாறவில்லை என்றார். (அப்படியாக நான் புரிந்துகொண்டேன்).
பூதுரி
ராஜிரெட்டி என்பவர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.நல்ல நிகழ்வு.தெலுங்கில் கம்யூனிஸ
அமைப்பு தெலுங்கானா பகுதியில் வலுவாக இருந்ததால் ஆரம்ப கால தெலுகு நாவல்கள் , கதைகள் , சுயசரிதைகளில்
இடதுசாரி உலகிலிருந்து நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அறுபதுகளில் ஒரு
நிலச்சுவான்தார் நக்ஸல்களால் கொல்லப்பட்டப் பின்னர் அவரது மனைவி தன் பதினான்கு
குழந்தைகளை தனியாளாக வளர்த்தெடுத்தார்.அவர் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளை
வளர்த்துக்கொண்டு தன் கணவரின் கொலை வழக்கையும் எதிர்கொள்ள
வேண்டியிருந்தது.இவற்றைப்பற்றி அவர் ஒரு சுயசரிதை நூல் எழுதியுள்ளார் என்று
எழுத்தாளர் காத்யாயனி வித்மகே முந்தைய நாள் நிகழ்ந்த பெண்களின் சுயசரிதை என்ற
அரங்கில் பகிர்ந்துகொண்டார்.கட்சி சார் இடதுசாரி அமைப்புகள் பின்னர் வந்த நக்ஸல்
அமைப்புகள் ஆகியவை தெலுகு இலக்கிய உலகில் பெரும் பாதிப்பை எழுத்து முறையில்
சிந்தனையில் செலுத்தியுள்ளது என்று தோன்றியது.
இந்த புக் பிரம்மா நிகழ்வில் தெலுகு இலக்கிய உலகைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டது எனக்கு உவப்பளிக்கிறது.
No comments:
Post a Comment