தமிழில் இன்று பொதுவாக அனைவருமே யதார்த்தவாதக் கதைகளைத்தான்
எழுதுகின்றனர். அதில் உறவுச் சிக்கல்களும் , ஆளுமைச் சிக்கல்களும் பிரதான பங்கு வகிக்கின்றன.
ஜெயமோகன் இப்படி எழுதுபவர்களுக்கு வரலாற்றிலும் தத்துவத்திலும் அரசியலிலும் ஆர்வமில்லை
என்கிறார்.
ஆளுமைச் சிக்கலும் உறவுச் சிக்கலும் சூழலால் தான்
நிகழ்கிறது. இன்று ஒருவன் அணுமின் நிலையத்தில் பணிபுரிகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
அவனுக்கு அணுசக்தி குறித்த கேள்வி எழுகிறது.இது அறத்தின் வழி சரியானதா என்று கேட்டுக்கொள்கிறான்.இன்னொருவன்
– மரபணு மாற்று விதைகள் உருவாக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.அவனுக்கு இதை சந்தைக்கு
கொண்டு வருவது நியாயமானதா என்ற சிந்தனை எழுகிறது என்று கொள்வோம். இந்த எண்ணத்தால் அவன்
மனப்பிறழ்வு கொள்கிறான் என்று கதை சொல்கிறது.இவற்றை வெறும் ஆளுமைச் சிக்கல் சார்ந்த
கேள்விகள் என்று கொள்ள இயலுமா? இதை விரித்தால் நீங்கள் வரலாற்றுக்கும் தத்துவத்திற்கும்
தான் போக வேண்டும்.மேலும் இன்றைய உறவுச் சிக்கல்கள் இன்றைய சூழலால் தான் நிகழ்கிறது.மார்க்ஸ்
அனைத்து உறவுகளுமே வணிக உறவுகள் தான் என்று சொன்னார். உற்பத்தி முறைமைகள் மாறும் போது
உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன.அவற்றை உறவுச் சிக்கல்களின் கதைகள் பிரதிபலிக்கின்றன.இன்று
எழுதப்படும் கதைகள் அந்தச் சிக்கல்களை மேலும் விரிக்காமல் ஆராயாமல் இருக்கின்றன என்று
ஜெயமோகன் சொல்கிறார் என்றால் அதில் உண்மை இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.ஆனால் வரலாறும்
, தத்துவமும் , தொன்மமும், உளவியலும் அதை மேலும் விரித்து சொல்வதற்கான வழிகள் மட்டுமே.
தூயனின் டார்வினின் வால் தொகுப்பில் வரலாறும்
, தொன்மமும் , உளவியலும் இருக்கின்றன. மிக
அழகிய மொழியில் மிக தீர்க்கமான பார்வையோடு அமைந்திருக்கின்றன இந்தத் தொகுப்பின் கதைகள்.ஒரு
எலியின் வாலை நறுக்குவதின் வழி ஒற்றை நனவலியிலியை கூட்டு நனவிலியிலிருந்து பிரிக்க
முடியும்.சூழமைவிலிருந்து அதை தனியே பிரித்து விட்டால் அதனால் பின்னர் எந்தத் தொந்தரவும்
இல்லை என்று செல்கிறது டார்வினின் வால் கதை.
டார்வினிய சோஷியலிசம் என்பதைப் பற்றி மேதகு வைஸ்ராய்
திரு ராபர்ட் புல்வேர் லிட்டன் என்ற கதையிலும் எழுதியிருக்கிறார்.தக்கன வாழும், சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும் உயிரிகள் வாழும்
என்ற டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டை இன்று நாம் சமூகத்திற்கு பொருந்திவிட்டோம்.டார்வினின்
கோட்டுபாடு தான் இன்று முதலாளித்துவம் அளிக்கும் தனிமனித சுதந்திரம்.தனிமனித சுதந்திரத்திற்கு
அளவே இல்லை என்பதே இன்றைய பொருள் உற்பத்தி தளத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய வன்முறை.
சமூகம் என்பது மனிதன் உருவாக்கிய ஒரு ஏற்பாடு.அதில்
ரூசோ சொல்வது போல ஒரு சமூக ஒப்பந்தம் தேவைப்படுகிறது. தனிச்சொத்து , அதன் பாதுகாப்பு
, இந்தளவு தான் தனிச்சொத்து இருக்க வேண்டும் , இந்த அளவு தான் ஏற்றத் தாழ்வு இருக்க
வேண்டும் என்ற கடப்பாடுகள் இல்லாமல் யாரும் எப்படியும் பொருள் சேர்க்க முடியும் , சந்தை
என்பது அனைவருக்குமானது என்கிற போது நிகழும் சமூக மாற்றங்கள் டார்வின் சொல்லும் பரிணாமவியல்
கோட்பாடு அல்ல மாறாக மனிதன் உருவாக்கிய வன்முறை.
தூயன் ஆண் பெண் உறவை முதன்மையாக்கி லாஸ்யம் என்ற கதையை
எழுதியிருக்கிறார். இந்தக் கதையின் சொல்முறை நன்றாக உள்ளது. தீப்பற்றிய கனவுகள் என்பது
ஆத்மநாம் என்ற ஓவியரைப் பற்றியது.அவர் இறந்துவிட்டார் , தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்
என்று சொல்லப்படுகிறது.ஆனால் கதைநாயகன் தன் ஆய்வில் கீழைத்தேய மரபில் தோய்ந்த ஒருவன்
தற்கொலை செய்து கொள்ள முடியாது என்கிறான்.அவனது நனவிலி கூட்டு நனவிலியில் இணைந்தே இருக்கிறது.அதன்
வெளிப்பாடுகள் தான் அவனது கலை வடிவங்கள் என்கிறான்.அதைத் தான் தலைப்பு தீப்பற்றிய கனவுகள்
என்கின்றது.
இந்திரஜாலம் குறுநாவல் ஒரு கதையாடலின் வழி எப்படி
மக்களை ,ஊரை, குடும்பத்தை குழப்ப முடியும் என்று சொல்கிறது. இது புதுக்கோட்டை சமஸ்தானத்தின்
வரலாற்றையும் தொன்மத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.நோய்ச் சொர்க்கம் ஒரு முதியவர்
, நடுவயதுக்காரர் , இளைஞர் ஆகியோர் பற்றிய கதை.இவர்கள் எவருக்கும் பெயர்கள் இல்லை.ஞாபகமறதியால்
தங்கள் அடையாளங்களைத் தொலைத்து விடுகிறார்கள். மையப்புள்ளி, அரை வட்ட வடிவம் என்று
லத்தீன் அமெரிக்க கதைளில் வரும் முறைமைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேதகு வைஸ்ராய் கதையில் மதராஸ் மாகாணத்தில் நிகழ்ந்த
பஞ்சம் அதற்கு வைஸ்ராய் லிட்டன் முன்வைக்கும் தீர்வுகள் பேசப்படுகின்றன.ஒரு பெருங்கதையாடல்
நிகழும் அதே சூழலில் சிறுகதையாடல்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு அலுவலகத்தில்
தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பெரும் முடிவுகளை எடுத்துக் கொண்டு இருப்பார்கள்.அதை
இரகசியம் போலக் காப்பார்கள்.ஆனால் அவை கீழே அடித்தளத்தில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு
தெரிந்திருக்கும்.அது எப்படி கசிகிறது என்று யாருக்கும் புரியாது. மேலும் முக்கியமான
தருணங்களில் எடுக்கப்படும் முடிவுகள் , தீர்வுகள் மிகத் தற்செயலாக நிகழ்கின்றன.
தூயனின் கதைகள் மறுவாசிப்புக்கு உகந்தவை. கதைகள் சற்று
நீளமாக இருக்கின்றன என்று தோன்றுகிறது.ஆனால் வாசிப்புக்கு அவை பெருந்தடையாக இல்லை.
அவரின் பிற நூல்களையும் வாசிக்கும் போது அவரின் கதைவெளியை மேலும் நன்றாக புரிந்து கொள்ள
முடியும் என்று நினைக்கிறேன்.
டார்வினின் வால் – தூயன் – எதிர் வெளியீடு.
புகைப்படம் - Julia Margaret Cameron/ Adam Cuerden - Alfred Steiglitz Collection reference 1949.881, Art Institute of Chicago, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=131628151
No comments:
Post a Comment