விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனித முன்னேற்றத்திற்கானது என்ற எண்ணம் எப்போதோ காலாவதியாகி விட்டது.விஞ்ஞானத்தின் சட்டகத்தில் அறம் இல்லை.கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷே சொல்வது அதைத்தான்.இங்கே விஞ்ஞான கோட்பாடுகளை உருவாக்குபவர்கள் தனித்த உலகில் வசிக்கவில்லை.அவர்கள் இதே உலகில் இதே பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள்.ஆனால் அவர்களால் அணுசக்தி குறித்து ஆராய முடிகிறது.மரபணு மாற்று விதைகளை உருவாக்க முடிகிறது.மனிதன் விஞ்ஞானத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறானா என்ற கேள்விக்கெல்லாம் எந்த பதிலும் இல்லை.
விஞ்ஞானம்,தொழிற்துறை,நகரமயமாதல்,தனி மனிதன்,அரசின் கண்காணிப்பு இறுகுவது,அமைப்பின் கீழ் தனிமனித சுதந்திரம் மறுக்கப்படுவது,கடவுள் நம்பிக்கையை முழுக்க ரத்து செய்தது என்று விஞ்ஞானம் மனித வாழ்வை முழுதும் மாற்றி இருக்கிறது.விஞ்ஞானம் மனிதனை தொழில் அளவில் மட்டுமல்ல கலாச்சார ரீதியாகவும் நிறைய மாற்றி விட்டது.மாசனோபு ஐன்ஸ்டீனை கேலி செய்கிறார்.அவர் உண்மையில் விஞ்ஞானத்தை மறுக்கவில்லை.அதன் தரிசனத்தை கேள்வி கேட்கிறார்.விஞ்ஞானத்தால் ஒரு போதும் ஒரு முழுமையை நோக்கி நகர முடியாது.அதன் தரிசனம் எல்லைக்குட்பட்டது.அதனால் அதன் அடிப்படையில் மட்டுமே உலகம் செல்லக்கூடாது என்கிறார்.தன் முன்னோர்கள் விவசாயம் செய்து ஒய்வு நேரத்தில் ஹைக்கூ எழுதி மகிழ்ச்சியாக வாழ முடிந்த போது என் நமது தலைமுறையினரால் அப்படி வாழமுடியவில்லை என்கிறார்.
கோசாம்பி தன் புத்தகம் ஒன்றில் மனித வாழ்வில் பொற்காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை.அப்படி ஒரு பொற்காலம் ஒரு வேளை வருங்காலத்தில் உருவாகலாம் என்கிறார்.அவர் மார்க்ஸிய நோக்கில் உலகை பார்த்தவர்.இந்தியா முன்னேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் இங்கு அரசாங்கங்கள் மாறினாலும் கிராம வாழ்க்கை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்ததுதான் என்கிறார்.ஒரு வகையில் மாசனோபு சொல்வதும் கோசாம்பி சொல்வதும் எதிர் திசையில் இருக்கின்றன.கோசாம்பி இறுக்கமான கிராம அமைப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் இங்கே நகரங்கள் உருவாகியிருக்கும், அப்படி உருவாகியிருந்தால் விஞ்ஞானமும் தொழில்துறையும் நன்கு வளர்ந்திருக்கும் என்றார்.அப்படி உருவாகியிருந்தால் இறுதியில் என்ன, பாட்டாளி சர்வாதிகாரம் உருவாகி சோஷியலிச அரசு மலர்ந்து பொற்காலம் வரும் என்று நம்பினார்.மாசனோபுவின் பொற்காலம் இறந்தகாலத்தில் இருந்த போது கோசாம்பியின் பொற்காலம் எதிர்காலத்தில் இருந்தது.சாதிகளற்ற கிராம அமைப்பு தான் பொற்காலம் என்று காந்தி அதை இஷ்டலோகத்தில் முன்வைத்தார்.
இப்படி நம்மிடம் பல பொற்காலங்கள் முன்வைக்கப்படுகின்றன.அப்படியான லட்சியவாதங்களால் பொற்காலங்கள் தோன்றாது என்ற திசையில் தன் கோட்பாடுகளை முன்வைத்தது பின்நவீனத்துவம்.இன்று பின்நவீனத்துவ மனநிலை வெங்கட் பிரபு படத்தில்,நளன் குமாரசாமியின் படங்களில் வருகிறது.மிக எளிதாக நாம் உருவாக்கிக் கொள்ளும் பிம்பங்கள் உண்மையில் கட்டமைக்கப்படுகின்றன என்று முன்வைத்து அந்த பிம்பத்தை முழுக்க சரிக்கிறது இந்த மனநிலை.ஆனால் பின்நவீனத்துவம் எதையும் உருவாக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்கலாம்.இங்கே புதிதாக ஒர் அற உணர்வை அது உருவாக்கவில்லை என்பதை நாம் உணரலாம்.உருவாக்குவது என்பதே பின்நவீனத்துவ மனநிலையில் இல்லை.ஆனால் இங்கே புதிதாக ஒன்றை உருவாக்கி கொள்ளாமல் தரிசனம் இல்லாமல் உலகம் செல்ல முடியாது.ஸ்டீபன் ஹாக்கிங் தன் புத்தகம் ஒன்றில் மனிதர்களை சிறையில் அடைத்து சிந்திக்க கூடாது என்று சொல்லியிருந்தால் கூட இன்றைய கண்டுபிடிப்புகள் வந்திருக்கும்தான் என்கிறார்.ஆக பின்நவீனத்துவம் இன்றைய விஞ்ஞான போக்கில் ஒர் உரையாடலை உருவாக்கி இருக்கிறது.உதயகுமாரால் கூடங்குளத்தில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்திருந்தாலும் போராட்டம் சாத்தியப்பட்டிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் பின்நவீனத்துவ மனநிலை.விஞ்ஞானம் சொல்வது ஒரு புனைவு மட்டுமே என்பதால் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் அதிக அக்கறை வேண்டும் என்று நமக்கு அது சொல்லிக்கொடுத்திருக்கிறது.இந்த பின்நவீனத்துவ மனநிலை இன்றைய காலகட்டத்தினால் உருவானதா அல்லது நம் சிற்றிதழ்களில் இருந்து உருவாகிவந்த ஒரு சொல்லாடலா என்பது ஆராய்ச்சிக்குரியது.
No comments:
Post a Comment