அழுக்கு சாக்ஸ்


விட்ட குறை

அறுபட்டதென்ன விடுபட்டதென்ன
ஓன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு

சுவை ஓன்றிவிட்டால் ஓரு நாக்கு போதும் ஒர் உனவு போதும்.மனம் அறுபடுகையில் எதிலும் நிலைகொள்ளாது தடுமாறும் மனதின் எண்ணங்கள்,அப்போது எழும் ஆசைகள்,பிறழ்வுகள் அந்த பிறழ்வுகளால் மேலும் உருவாகும் பிறழ்வுகள் என ஓராயிரம் நாக்குகளுடன் அலையும் மனம்.நல்ல கவிதை.

அதே மனம் நிலை கொள்ளும் போது ஒய்யாரமாய் ஆடும் ஊஞ்சல் ஆகிறது.வெளியில் நல்ல மழை ஒரே சொரூப நிலை என்ற மனநிலை.

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துகுமாக
கால்படாத பூமி
நழுவினாலென்ன
இருந்தாலென்ன

இருவர் கொண்ட ஒர் உறவு என்ற கவிதையில் ஒரு ஆண் பெண்ணிடத்தில் வெட்கம் கொள்கிறான்.அவளுக்கும் இறுதியில் வெட்கம் வருகிறது.கவிதை இப்படி முடிகிறது.அவள் பெண்ணென்று அது வரவில்லை.இந்தக் கவிதை ஆண் பெண் என்ற பாலினங்களுக்கு தரப்படும் குணங்களை மறுக்கிறது.அவள் பெண்ணா யாருக்குத் தெரியும் என்ற வரியும் இதில் உள்ளது.இதே போன்ற விஷயத்தை முன்வைக்கும் கவிதை கனவான்களே.இதில் மஞ்சள் தொப்பி அணிந்தவர்களும் வெளிர் மஞ்சள் தொப்பி அணிந்தவர்களும் அவர்களின் நடைபாதையில் மட்டுமே நடக்க வேண்டும்.மாறி நடந்தால் விதி ஓங்கியடிக்கும் என்கிறது.

இதற்கெல்லாம் தலைப்பு வைக்க முடியாது என்ற கவிதை தொலைந்து போன பால்ய காலத்தை வசந்த காலத்தை பற்றி பேசுகிறது.வையத்துள்,நினைப்புக்குப் பத்துத் தலை,நேயம் ,பூஞ்சை நெஞ்சம்,தெளிவற்றவள்,நடை பாதை,கடைசி மேசையில் ஒர நாற்காலியில் ,பிறழ்மனம்,புருஷன் ,சலனம் ,கேள்வி-பதில் ஆகியவை தனிமை,பிறழ்வு என்ற தளத்தில் தொகுக்கலாம்.

நடுவயது கணவன் மனைவி வாழ்வின் அபத்தத்தை பேசும் கவிதை நீ பாதி நான் பாதி கண்னே.நமது கதைத் தருணங்கள் பூங்கொத்து புது நூல்கள் , பீர் அருந்தியபடி தடவுதல்,வாட்ஸ் அப் ஆகியவற்றிலிருந்து உருவாகாமல் கிழவனும் கடலும் போன்ற ஒரு சாகசத்தை கோருகிறது (தனித்)துவம் என்ற கவிதை.இதே போன்ற ஒரு கவிதை எழுத்து.வட்டத்தை வழித்தெடுத்து ஆட்டம் ஆடுவோம் , பூமியை பால்வெளியை தொட்டுத் தொட்டு என்கிறது இந்தக் கவிதை.

நிறைய கவிதைகளில் நிலா வருகிறது.இந்தக் கவிதை மிகவும் நன்றாக இருந்தது.

சுட்டி

சொல்லிக் காட்டுவதாக
நினைக்க வேண்டாம்
உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது
'அதோ அந்த நிலா'
என வாய்கூறும்போது
சுட்டுவிரலாக மாறாமல்
யாருக்கிருக்கிறது முகம்.

சுட்டப்படும் நிலாவின் குளிர்மையை அடைகிறார் சுட்டுபவரும் சுட்டுகையில்.

அழுக்கு சாக்ஸ் - பெருந்தேவி - விருட்சம் வெளியீடு.

No comments: