அசோகமித்திரனின் கூறுமுறையின் காரணமாக அவர் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிடப்படுகிறார்.கச்சிதமான அலங்காரமற்ற சின்னச் சின்ன வரிகள்.ஆனால் ஹெமிங்வேவின் உலகமும் அசோகமித்திரனின் உலகமும் முற்றிலும் வேறானவை.ஹெமிங்வே வாழ்வை ஒரு வேட்டையாக பார்க்கிறார்.மனிதனை இயற்கை வேட்டையாடுகிறது.ஆண்களை பெண்கள் வேட்டையாடுகிறார்கள்.பெண்களை ஆண்கள் வேட்டையாடுகிறார்கள்.ஒரு நோயால் மரணம் அடைவதை அவர் இயற்கையின் வேட்டையாக பார்க்கிறார்.அவரின் மனிதர்கள் தூய உயிரியல் பிண்டங்கள்.நான் இங்கு சிந்திப்பதற்காக வரவில்லை என்று ஹென்றி ஆயுதங்களுக்கு விடைகொடுத்தல் நாவலில் நினைத்துக்கொள்வான்.அப்படியான ஒரு வாழ்க்கை பார்வை அசோகமித்திரனிடம் இல்லை.அவரின் உலகம் முற்றிலும் வேறானது.
அந்த வகையில் அவரை ஆல்பர் காம்யூவுடனும் தமிழில் நகுலனுடன் ஒப்பிடலாம்.நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுப்பில் வரும் பல கவிதைகள் அடையாளமின்மையை பற்றி பேசுபவை.அவனுக்கு அவன் பெயர் கூட மறந்து விட்டது என்ற வரி ஒரு கவிதையில் வரும்.நகுலனின் இந்த கோட்ஸ்டாண்ட் கவிதைகள் நாம் நமது உடல் வழி அடையாளங்களை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடுவதன் மூலமாக "நாம் ஒன்றுமில்லை" என்ற தீவிரமான ஆன்மிக நிலையை அடைவதை குறித்து பேசுகின்றன.
18வது அட்சக்கோடு நாவலில் சந்திரசேகரன் அப்படியான ஒர் அடையாளமின்மையை அடைகிறான்.அதை அவனுக்கு தன்முன் நிர்வானமாக வந்து நிற்கும் அவனை விட சிறுவயது பெண் கற்றுத்தருகிறாள்.அவன் கூட்டங்களில் அமைப்புகளில் அடையாளங்களில் கரைய இயலாத தனிமனிதன் ஆகிறான்.அவன் ஹெமிங்வேவின் தூய உயிரியல் பிண்டம் அல்ல.அவன் வாழ்வை அப்படி பார்பதில்லை.அவனின் வாழ்க்கை மிக எளிமையானது.உன்னதங்களை கேள்வி கேட்கிறது.உன்னதங்கள் என்று நாம் மார்தட்டிக்கொள்ளும் விஷயங்கள் அடிப்படையில் மிகப்பெரிய வன்முறையை உருவாக்க வல்லவை என்கிறது.எந்த லட்சியவாதங்களின் மீதும் நம்பிக்கை அற்றவன் இந்த தனிமனிதன்.அவனின் ஒரே சிக்கல் அவனின் முன் நிற்கும் இந்த வாழ்க்கை.இதை அவன் கடத்தியாக வேண்டும்.பெரிய பெரிய வரிசைகளில் நிற்க வேண்டியிருக்கிறது.பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.இதுதான் நகுலனின் அடையாளமற்ற மனிதனுக்கும் அசோகமித்திரனின் தனிமனிதனுக்குமான வித்யாசம்.நகுலனின் மனிதனுக்கு பெரிய வரிசையில் நிற்க வேண்டிய சிக்கல் எல்லாம் இல்லை.அவன் சற்றே சாய்வான நாற்காலியில் அமர்ந்துவிடுகிறான்.
கோலம் என்ற ஒரு கதையில் காலையில் போடப்படும் கோலத்தை பக்கத்து வீட்டு இளைஞன் தெரியாமல் மிதித்து விடுகிறான்.அவனை அந்தப் பெண்ணின் சித்தப்பா கடுமையாக திட்டுகிறார்.மாலையில் அதே கோலத்தில் அந்த வீட்டாரே நடந்து செல்கிறார்கள்.உன்னதங்கள் என்று நாம் கட்டி எழுப்பிக்கொள்ளும் பலவற்றின் அபத்தத்தை அவருடைய கதைகள் மறுபடி மறுபடி பேசுகின்றன.
ஒரு கதையில் ஒருவனின் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அவனுக்கும் தினசரி செய்தித்தாளால் பிரச்சனை உருவாகிறது.அந்த கோபத்தில் பக்கத்து வீட்டுக்காரனின் மகனின் இறப்புக்கு இவன் காரணமாகிவிடுகிறான்.குற்றவுணர்வால் அவர்களிடம் சென்று தான்தான் தங்களின் மகனின் இறப்புக்கான காரணம் என்கிறான்.அப்படியா என்று சொல்லி விட்டுவிடுகிறார்கள்.ஒரு கடுஞ்சொல் கூட சொல்லவில்லை.ஒரு பிறழ்வை தவறை மாற்றிக்கொள்ள சாத்தியமற்ற குற்றத்தை எப்படி கடப்பது என்பது மற்றொரு தளத்தில் அவரின் கதைகளின் முக்கிய போக்கு.அங்கும் அவர் அந்த வாழ்வின் அபத்தத்தை தான் முக்கியப்படுத்துகிறார்.அவர் தவறை சரி செய்வதில்லை.யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை.பழிவாங்குவதில்லை.மானசரோவரில் சத்யன்குமாரை ஆற்று நீரில் முழ்கி எழச்சொல்கிறார் சித்தர்.அது ஒரு வேடிக்கையான தீர்வு.ஆனால் சத்யன்குமாருக்கு அது விடுதலையை அளிக்கிறது.தர்க்கபூர்வமான விடுதலைகளை அவரின் கதாபாத்திரங்கள் பெறுவதில்லை.ஜம்பகம் போல ஒன்று பிறழ்வால் சிதைந்துவிடுகிறார்கள்.அல்லது சத்யன்குமார் போல வேடிக்கையான சடங்குகளால் மீள்கிறார்கள்.
கரைந்த நிழல்கள் நாவலில் ஒரு பெண் நடிகை ஒரு நாள் படப்பிடிப்புக்கு வராமல் தகராறு செய்கிறாள்.படப்பிடிப்பு நிற்கிறது.அந்த தயாரிப்பாளரின் வாழ்க்கை முழுக்க சிதைந்துவிடுகிறது.ஒரு சிறு பெண் தன் பிடிவாதத்தால் ஒரு தயாரிப்பாளரின் வாழ்வின் போக்கையே மாற்றி விடுகிறாள்.இதை ஒரு அமைப்பின் சிக்கலாகவோ இரண்டு மனிதர்களுக்கு இடையிலான சிக்கலாகவோ அவர் பார்க்கவில்லை.அதை வாழ்வின் அபத்தமாக மாற்றிவிடுகிறார்.அந்த வகையில் அவரை ஆல்பர் காம்யூவின் உலகுடன் ஒப்பிடலாம்.ஆல்பர் காம்யூ தத்துவம் கற்றவர்.கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்.ஆனால் அவரின் கதைகள் அமைப்புக்கும் தனிமனிதனுக்குமான சிக்கலை பேசுவதில்லை.மாறாக, அவரின் கதைகள் அபத்தம்,கிளர்ச்சி,நேசம் என்ற தளத்தில் பயணம் செய்தவை.இந்த உலகம் அபத்தமானது என்பதை நிறுவ அந்நியன் போன்ற நாவல்களை எழுதினார்.கிளர்ச்சியை முன்னிறுத்த சிசிபஸின் தொன்மம்.நேசத்தை முன்வைப்பது பிளேக்,முதல் மனிதன் போன்ற நாவல்கள்.இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் மூன்றையும் உள்ளடக்கிய நாவல்களை அவர் எழுதியிருப்பார்.இந்த வாழ்க்கை அபத்தமானது என்று உணர்ந்து அதற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிறார் காம்யூ.
அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் அத்தகைய உணர்வையெல்லாம் அடைவதில்லை.அவர்கள் பெரிய சித்தாந்த பயிற்சியெல்லாம் இல்லாமல் மிக எளிய தினசரி வாழ்வின் போக்கில் இந்த அபத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.இந்த அபத்த வாழ்வில் ஏற்படும் பிறழ்வுகளை அந்த அபத்தத்தின் வழியே கடக்கிறார்கள்.அவர்களுக்கு புகார் இல்லை.அவர்கள் விமோசனத்துக்காக பிராத்திப்பதும் இல்லை.எலிக்கூண்டிலிருந்து வெட்டவெளியில் விடப்படும் எலியை போல அவர்கள் வாழ்வை எதிர்நோக்குகிறார்கள்.அந்த வெட்டவெளியை பார்த்து மிரட்சி அடையும் எலி போன்றது தான் அவர்களுக்கும் அமைப்புக்குமான உறவு.அவர்கள் அதை உடைக்கவும்,புரட்டிபோடவும்,எதிர்க்கவும் கவலைப்படுவதில்லை.அவர்கள் இந்த நெரிசலில் எப்படி இந்த சாலையை கடப்பது என்று கவலைப்படுகிறார்கள்.அவ்வளவுதான்.அப்படியாக பெரும்பாலான இந்திய மனிதர்களின் வாழ்க்கை தரிசனத்தை தன் கதைகளின் வழியாகவே சொன்னவர் அசோகமித்திரன்.அம்ஷன் குமார் எடுத்த ஆவணப்படத்தில் ஒரு காட்சியில் அவர் பெருங்கூட்டத்தில் ஒருவராக வரும் காட்சி உள்ளது.அதுவே அசோமித்திரன் என்பார் அபிலாஷ்.அசோகமித்திரனுக்கு சிலை வைப்பது என்றால் பெருங் கூட்டத்தின் நடுவில் நடுந்து செல்லும் ஒருவராக அவரை சிலைப்படுத்தலாம்.தனி மனிதராக அல்ல.அதுவே அவருக்கான அஞ்சலி.
No comments:
Post a Comment