முற்போக்காளர்கள்


(1)

தொடர்ச்சியாக வலதுசாரி அரசியல் உலகம் முழுக்க வென்று வருவதை பார்க்க முடிகிறது.இப்போது உத்தரப் பிரதேச தேர்தல்.ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.சமீபத்தில் ஜெயமோகன் முற்போக்கின் தோல்வி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.பெருந்தேவி பல்பண்பாட்டுத்துவம் ஏன் தோற்றது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.இரு கட்டுரைகளின் மையப் பொருளும் இஸ்லாம்.இஸ்லாத்தின் அடிப்படைவாதம் தான் இன்றைய வலதுசாரி அரசியலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது என்கிறார் ஜெயமோகன்.பெருந்தேவி குடியேறியவர்களை பண்பாடுகளின் அடிப்படையில் தனித்தனிப் பெட்டிகளில் அடைப்பதால் இனவெறி போக்கு தீவிரமாக அது ஒரு காரணமாக ஆகியிருக்கிறது என்கிறார்.இரண்டிலும் உள்ள உண்மை இஸ்லாமிய சமூகத்தினர் மைய நீரோட்டதோடு கலக்கவில்லை என்பது.நான் வளர்ந்த சூழலில் இஸ்லாமியர் நாட்டார் தெய்வங்களை வழிபடுவதை நேரில் பார்த்திருக்கிறேன்.தர்காக்களுக்கு செல்வார்கள்.ஆனால் கடந்த சில வருடங்களில் இத்தகைய போக்கு முழுவதுமாக மாறியிருக்கிறது.தொடர்ச்சியாக ஏகத்துவம் முன்வைக்கப்படுகிறது.

இஸ்லாத்தின் அடிப்படையே அல்லா ஒருவனே இறைவன்.முகமது நபி அவருடைய இறுதித் தூதர்.இதை ஏற்பவர் இஸ்லாத்தை ஏற்கிறார்.இஸ்லாமிய நெறிதான் சிறந்த நெறி என்று முன்வைக்கப்படும் சொற்பொழிவுகளில் உரையாடல்களில் இந்த நம்பிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதுப்படும் சூழலில்தான் பிற விஷயங்கள் பேசப் படுகிறது.அதனால் தொலைக்காட்சிகளில் நடக்கும் அநேகமான இஸ்லாமிய நெறி பற்றிய உரையாடல்களில் ஒருவர் மாற்றாக எதையும் பேச முடியாது.இஸ்லாம் ஒரு மதம் மட்டும் அல்ல.அது ஒரு வாழ்க்கை நெறியாக கூட இருக்கிறது.ஒருவரின் தனிப்பட்ட கலாச்சார வாழ்வை அது முழுக்க கட்டுப்படுத்துகிறது.இங்கே பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு பின்னால் எழும் கோபத்தில் இருப்பது அது அவர்களின் கலாச்சார வெளியில் தலையிடுகிறது என்பதால்தான்.பொதுவாக இந்திய இஸ்லாமியர்கள் பல திருமணங்களை செய்வதில்லை.அதனால் இந்த சட்டம் வந்தாலும் அது பெரிய பாதிப்பை உருவாக்க போவதில்லை.ஆனால் இந்த சட்டம் இஸ்லாமிய சிவில் சட்டமாக இல்லை என்பதே இங்கு பிரச்சனையாகிறது.

பெருந்தேவியின் கட்டுரையில் அவர் சில உதாரணங்களை முன்வைக்கிறார்.பிரான்ஸில் நடந்த சார்லி ஹெப்தோ நாளிதழ் அலுவலகத் தாக்குதலை செய்தவர் ஒரு Practising Muslim இல்லை என்கிறார்.இன்னொரு உதாரணத்தில் இங்கிலாந்தில் 2005யில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து வர முக்கிய காரணம் அங்கே அணை கட்டப்பட்டது என்கிறார்.கையறு நிலையில் இருந்தவர்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்கிறார்கள்.அங்கும் மில்களில் குறைந்த ஊதியத்தால் மேலும் கையறு நிலைக்கு செல்கிறார்கள்.இரண்டிலும் அவர் சொல்ல முனைவது அவர்கள் அந்நியப்பட்டு போனார்கள் ,அதனால் அதை செய்தார்கள்,அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இல்லை என்பதைத்தான்.சமீபத்தில் கேரளத்தை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிலிருந்த இளைஞர் இறந்துவிட்டார் என்ற செய்தி அவர்களின் பெற்றோரை வந்தடைந்திருக்கிறது.எங்கோ கேரளத்தில் இந்திய குடிமகனாக வாழும் ஒரு இஸ்லாமியர் ஏன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்கிறார்.இதற்கு முற்போக்காளர்கள் கூறும் விளக்கம் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இங்கே வளர்ந்த வலதுசாரி அரசியல் இஸ்லாமிய மக்களின் மத்தியில் உருவாக்கிய பாதுகாப்பின்மைதான் காரணம் என்று.அதில் உண்மை இல்லாமல் இல்லை.பாதுகாப்பின்மையின் போது சிறுபாண்மை சமூகங்கள் அரசியல் உணர்வு பெறுவதும் அமைப்பாக்கம் ஆவதும் தவிர்க்க இயலாதது.ஆனால் அது ஏன் ஜனநாயக வகையில் இல்லை.ஏன் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற ஒரு தீவிரவாத அமைப்பில் அவர் சென்று சேர வேண்டும்.எது அவரை அங்கே அழைத்து செல்கிறது.இஸ்லாத்தில் இஸ்லாமிய தேசம் குறித்த கனவு இருக்கிறது.அது ஏதோ ஒரு வகையில் இந்த அரசைவிட இஸ்லாமிய அரசு நல்லரசாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.மேலும் இன்று இஸ்லாமிய சமூகத்தினர் அந்நியப்பட்டு நிற்பதற்கு வலதுசாரி அரசு எந்த அளவு காரணமோ அதே அளவு காரணம் வஹாபிஸத்தின் வளர்ச்சியும்.

மறுபடியும் முற்போக்காளர்களின் பதில் வஹாபிஸத்தின் வளர்ச்சியும் வலதுசாரி அமெரிக்க அரசியலால்தான் என்பது.ஆனால் ஏன் வஹாபிஸத்திற்கு எதிரான இங்கு சூஃபிஸத்தை உள்ளடக்கிய நெகிழ்வான இஸ்லாம் பின்நகர்ந்துவிட்டது.ஏன் மக்களை அது ஈர்க்கவில்லை.இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் உள்ள தர்காக்களில் சயனித்திருக்கும் சூஃபிகள் இங்கே வருங்கால பன்மைத்துவத்திற்கான விடிவெள்ளிகள்.அவர்களே இஸ்லாத்தை  நெகிழ்வானதாக மாற்றினார்கள்.எங்கு நோக்கினும் நம்மை எதிர்நோக்கும் தர்காக்களில் இருக்கிறது நமக்கான பன்மைத்துவம்.அதை நோக்கி இஸ்லாமிய சமூகம் செல்ல வேண்டும்.அது இஸ்லாமிய சமூகம் இன்று அடைந்திருக்கும் அந்நியமாதல்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் துவக்கமாக இருக்கும்.

(2)

இங்கே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை தை எழுச்சி என்றெல்லாம் சில முற்போக்கு அறிவுஜீவிகள் எழுதினார்கள்.உண்மையில் நம் இளைஞர்களில் பெரும்பாலோனருக்கு கர்நாடகாவின் முதலமைச்சார் யாரென்று கூட தெரியாது.நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் கூட இன்றைய தலைமுறையினருக்கு இல்லை.இதில் இவர்கள் அரசியல் ரீதியாக தலைமை அற்று அணிதிரண்டு எழுச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய வேடிக்கை.

பொதுவாக வலதுசாரி அரசியல்,இஸ்லாமிய தீவிரவாதம்,மக்கள் போராட்டம் இவைகளை பற்றி எழுதும் போது நமது முற்போக்காளர்கள் எழுதுவது கிட்டத்தட்ட ஒரே போல இருக்கும்.வலதுசாரி அரசியல் உலகம் முழுக்க அந்தந்த நாடுகளில் உள்ள கடவுள்,பெருமாண்மை மதம்,தேசியம்,பொருளாதார வளர்ச்சி,தொழில்துறை,உள்நாட்டு வேலைவாய்ப்பு இவைகளை சரியாக ஒன்றினைத்திருக்கிறது.அதில் இஸ்லாமும் ஒன்று.இது அவர்களின் வெற்றி.இன்று பல்கிப் பெருகி இருக்கும் நுகர்வு கலாச்சாரமும் அதனால் தேவைப்படும் பொருள் ஈட்டும் வேகமும்,மாறி வரும் தொழில்நுட்ப உலகமும் வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தை எல்லோர் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது.நாளை ஒரு மருத்துவரின் இடத்தில் ஒரு வாட்சன் கம்யூட்டர் இருக்கலாம்.இன்று இருக்கும் பல பி.பி.ஓ,ஐடி,அசெம்பளி லைன் வேலைகள் காணாமல் போகும்.அந்த அச்சமும் வலதுசாரி அரசியலின் வளர்ச்சியின் முக்கிய காரணம்.

இவையெல்லாம் சாதாரணமாக கண் திறந்து பார்த்தாலே தெரியும்  விஷயங்கள்.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இந்திய தேசியத்திற்கு எதிரான கோஷங்களை முன்வைக்கும் பதாகையுடன் நிற்கும் இளைஞனுடன் ஒரு ஒய்வு பெற்ற பேராசிரியரும் நின்றார்.ஆச்சரியமாக இருந்தது.இந்திய அரசு அளித்த அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு சட்டை கூட கசங்காத வேலைகளை செய்துகொண்டு இவர்கள் எப்படி புரட்சி குறித்தெல்லாம் பேசுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.பண்பாட்டு தேசியம்,நக்சல்பாரி ,மார்க்கிய லெனினிய இயக்கங்களுக்கு ஆதரவு , பொதுவாக புரட்சி என்று தமிழில் பேசிய பலர் ஆசிரியர்களாக இருந்தார்கள்.அவர்கள் இன்று ஓய்வு பெற்று ஓய்வுதியம் பெறுவர்களாகவும் இருக்கிறார்கள். இங்கு புரட்சி குறித்த பேசிய பல அறிவுஜீவிகள் ஏன் பேராசிரியர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருந்தார்கள் என்பது ஆராய்ச்சிக்குரியது.ஒரு வேளை  அவர்களின் வேலையிலிருந்த சலிப்பை இப்படி எதாவது பேசி போக்கிக்கொண்டார்களா என்று தெரியவில்லை.இன்று அந்தப் போக்கு குறைந்திருப்பதையும் கவனிக்கலாம்.

தஸ்தாவெய்ஸ்கியின்  பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வரும் முற்போக்காளர்களை தஸ்தாவெய்ஸ்கி பயங்கரமாக பகடி செய்திருப்பார்.தனிப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்கள்,காதல் தோல்விகள் எப்படி அவர்களின் சிந்தனையை மாற்றியமைக்கிறது என்று கேலி செய்திருப்பார்.கொடூரமான கேலி.ஆனால் அந்த நாவல் முன்வைக்கும் முக்கியமான கேள்வி முழுமை( Integrity).உங்களின் தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களின் புரட்சி கோஷங்களின் போது கேட்கலாம்.முழுமையை முன்வைக்கும் புரட்சியாளர்களும் சிந்தனையாளர்களும் இன்று அநேகமாக இல்லை.ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவரை சந்தித்தேன்.பார்த்த சில நிமிடங்களில் அவர் கேட்ட கேள்வி சொந்த வீடு இருக்கிறதா என்பதுதான்.அவர் என் பொருளாதார தளத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார்.செளகரியங்களும் ,பணமும் , லெளகீக வெற்றிகளும் இன்று முக்கியமாக ஆகியிருக்கிறது.இன்று லட்சியவாதமும் இல்லை.லட்சியமின்னையும் இல்லை.பணம்,செளகரியங்கள் என்று நுகர்வை பெரும் தீனியாக்கி மக்களை இழுக்கிறது மாய இயந்திரம்.அதை வலதுசாரி அரசு கைப்பற்றி இருக்கிறது.அது வெல்கிறது.இடதுசாரி அரசியலின் இன்றைய நிலை என்ன என்பது பெரும் கேள்வி.சிதாராம் யெச்சூரி என்னதான் செய்துகொண்டிருக்கிறார்.அவர்களின் திட்டங்கள் என்ன.கேரளத்தில் இப்போது இருப்பதுதான் இறுதியான இடதுசாரி அரசு.இதன் பின் இடதுசாரி அரசு அங்கு வராது.இடதுசாரிகள் வலதுசாரி அரசு கைப்பற்றி இருக்கும் விஷயங்களை பற்றி ஆராய வேண்டும்.உதாரணமாக இன்று இயந்திரங்ளாலும்,தன்னியக்கமாலும் வேலை வாய்ப்பு பெரும் அச்சமாக மாறி வருகிறது.இதை எப்படி எதிர்கொள்வது.அப்படியான கேள்விகளை நோக்கி  தன் பயணத்தை இடதுசாரிகள் திசைதிருப்ப வேண்டும்.அப்போது இடதுசாரி அரசியலின் மீள்உயிர்ப்பு சாத்தியப்படும்.வெறுமன அமெரிக்க சூழ்ச்சி என்பதால் எதுவும் மாறப்போவதில்லை.



No comments: