அசோகமித்திரனின் பார்வை




அசோகமித்திரனின் கூறுமுறையின் காரணமாக அவர் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்களுடன் ஒப்பிடப்படுகிறார்.கச்சிதமான அலங்காரமற்ற சின்னச் சின்ன வரிகள்.ஆனால் ஹெமிங்வேவின் உலகமும் அசோகமித்திரனின் உலகமும் முற்றிலும் வேறானவை.ஹெமிங்வே வாழ்வை ஒரு வேட்டையாக பார்க்கிறார்.மனிதனை இயற்கை வேட்டையாடுகிறது.ஆண்களை பெண்கள் வேட்டையாடுகிறார்கள்.பெண்களை ஆண்கள் வேட்டையாடுகிறார்கள்.ஒரு நோயால் மரணம் அடைவதை அவர் இயற்கையின் வேட்டையாக பார்க்கிறார்.அவரின் மனிதர்கள் தூய உயிரியல் பிண்டங்கள்.நான் இங்கு சிந்திப்பதற்காக வரவில்லை என்று ஹென்றி ஆயுதங்களுக்கு விடைகொடுத்தல் நாவலில் நினைத்துக்கொள்வான்.அப்படியான ஒரு வாழ்க்கை பார்வை அசோகமித்திரனிடம் இல்லை.அவரின் உலகம் முற்றிலும் வேறானது.

அந்த வகையில் அவரை ஆல்பர் காம்யூவுடனும் தமிழில் நகுலனுடன் ஒப்பிடலாம்.நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுப்பில் வரும் பல கவிதைகள் அடையாளமின்மையை பற்றி பேசுபவை.அவனுக்கு அவன் பெயர் கூட மறந்து விட்டது என்ற வரி ஒரு கவிதையில் வரும்.நகுலனின் இந்த கோட்ஸ்டாண்ட் கவிதைகள் நாம் நமது உடல் வழி அடையாளங்களை கழற்றி கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடுவதன் மூலமாக "நாம் ஒன்றுமில்லை" என்ற தீவிரமான ஆன்மிக நிலையை அடைவதை குறித்து பேசுகின்றன.

18வது அட்சக்கோடு நாவலில் சந்திரசேகரன் அப்படியான ஒர் அடையாளமின்மையை அடைகிறான்.அதை அவனுக்கு தன்முன் நிர்வானமாக வந்து நிற்கும் அவனை விட சிறுவயது பெண் கற்றுத்தருகிறாள்.அவன் கூட்டங்களில் அமைப்புகளில் அடையாளங்களில் கரைய இயலாத தனிமனிதன் ஆகிறான்.அவன் ஹெமிங்வேவின் தூய உயிரியல் பிண்டம் அல்ல.அவன் வாழ்வை அப்படி பார்பதில்லை.அவனின் வாழ்க்கை மிக எளிமையானது.உன்னதங்களை கேள்வி கேட்கிறது.உன்னதங்கள் என்று நாம் மார்தட்டிக்கொள்ளும் விஷயங்கள் அடிப்படையில் மிகப்பெரிய வன்முறையை உருவாக்க வல்லவை என்கிறது.எந்த லட்சியவாதங்களின் மீதும் நம்பிக்கை அற்றவன் இந்த தனிமனிதன்.அவனின் ஒரே சிக்கல் அவனின் முன் நிற்கும் இந்த வாழ்க்கை.இதை அவன் கடத்தியாக வேண்டும்.பெரிய பெரிய வரிசைகளில் நிற்க வேண்டியிருக்கிறது.பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.இதுதான் நகுலனின் அடையாளமற்ற மனிதனுக்கும் அசோகமித்திரனின் தனிமனிதனுக்குமான வித்யாசம்.நகுலனின் மனிதனுக்கு பெரிய வரிசையில் நிற்க வேண்டிய சிக்கல் எல்லாம் இல்லை.அவன் சற்றே சாய்வான நாற்காலியில் அமர்ந்துவிடுகிறான்.

கோலம் என்ற ஒரு கதையில் காலையில் போடப்படும் கோலத்தை பக்கத்து வீட்டு இளைஞன் தெரியாமல் மிதித்து விடுகிறான்.அவனை அந்தப் பெண்ணின் சித்தப்பா கடுமையாக திட்டுகிறார்.மாலையில் அதே கோலத்தில் அந்த வீட்டாரே நடந்து செல்கிறார்கள்.உன்னதங்கள் என்று நாம் கட்டி எழுப்பிக்கொள்ளும் பலவற்றின் அபத்தத்தை அவருடைய கதைகள் மறுபடி மறுபடி பேசுகின்றன.

ஒரு கதையில் ஒருவனின் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் அவனுக்கும் தினசரி செய்தித்தாளால் பிரச்சனை உருவாகிறது.அந்த கோபத்தில் பக்கத்து வீட்டுக்காரனின் மகனின் இறப்புக்கு இவன் காரணமாகிவிடுகிறான்.குற்றவுணர்வால் அவர்களிடம் சென்று தான்தான் தங்களின் மகனின் இறப்புக்கான காரணம் என்கிறான்.அப்படியா என்று சொல்லி விட்டுவிடுகிறார்கள்.ஒரு கடுஞ்சொல் கூட சொல்லவில்லை.ஒரு பிறழ்வை தவறை மாற்றிக்கொள்ள சாத்தியமற்ற குற்றத்தை எப்படி கடப்பது என்பது மற்றொரு தளத்தில் அவரின் கதைகளின் முக்கிய போக்கு.அங்கும் அவர் அந்த வாழ்வின் அபத்தத்தை தான் முக்கியப்படுத்துகிறார்.அவர் தவறை சரி செய்வதில்லை.யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை.பழிவாங்குவதில்லை.மானசரோவரில் சத்யன்குமாரை ஆற்று நீரில் முழ்கி எழச்சொல்கிறார் சித்தர்.அது ஒரு வேடிக்கையான தீர்வு.ஆனால் சத்யன்குமாருக்கு அது விடுதலையை அளிக்கிறது.தர்க்கபூர்வமான விடுதலைகளை அவரின் கதாபாத்திரங்கள் பெறுவதில்லை.ஜம்பகம் போல ஒன்று பிறழ்வால் சிதைந்துவிடுகிறார்கள்.அல்லது சத்யன்குமார் போல வேடிக்கையான சடங்குகளால் மீள்கிறார்கள்.

கரைந்த நிழல்கள் நாவலில் ஒரு பெண் நடிகை ஒரு நாள் படப்பிடிப்புக்கு வராமல் தகராறு செய்கிறாள்.படப்பிடிப்பு நிற்கிறது.அந்த தயாரிப்பாளரின் வாழ்க்கை முழுக்க சிதைந்துவிடுகிறது.ஒரு சிறு பெண் தன் பிடிவாதத்தால் ஒரு தயாரிப்பாளரின் வாழ்வின் போக்கையே மாற்றி விடுகிறாள்.இதை ஒரு அமைப்பின் சிக்கலாகவோ இரண்டு மனிதர்களுக்கு இடையிலான சிக்கலாகவோ அவர் பார்க்கவில்லை.அதை வாழ்வின் அபத்தமாக மாற்றிவிடுகிறார்.அந்த வகையில் அவரை ஆல்பர் காம்யூவின் உலகுடன் ஒப்பிடலாம்.ஆல்பர் காம்யூ தத்துவம் கற்றவர்.கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்.ஆனால் அவரின் கதைகள் அமைப்புக்கும் தனிமனிதனுக்குமான சிக்கலை பேசுவதில்லை.மாறாக, அவரின் கதைகள் அபத்தம்,கிளர்ச்சி,நேசம் என்ற தளத்தில் பயணம் செய்தவை.இந்த உலகம் அபத்தமானது என்பதை நிறுவ அந்நியன் போன்ற நாவல்களை எழுதினார்.கிளர்ச்சியை முன்னிறுத்த சிசிபஸின் தொன்மம்.நேசத்தை முன்வைப்பது பிளேக்,முதல் மனிதன் போன்ற நாவல்கள்.இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் மூன்றையும் உள்ளடக்கிய நாவல்களை அவர் எழுதியிருப்பார்.இந்த வாழ்க்கை அபத்தமானது என்று உணர்ந்து அதற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிறார் காம்யூ.

அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் அத்தகைய உணர்வையெல்லாம் அடைவதில்லை.அவர்கள் பெரிய சித்தாந்த பயிற்சியெல்லாம் இல்லாமல் மிக எளிய தினசரி வாழ்வின் போக்கில் இந்த அபத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.இந்த அபத்த வாழ்வில் ஏற்படும் பிறழ்வுகளை அந்த அபத்தத்தின் வழியே கடக்கிறார்கள்.அவர்களுக்கு புகார் இல்லை.அவர்கள் விமோசனத்துக்காக பிராத்திப்பதும் இல்லை.எலிக்கூண்டிலிருந்து வெட்டவெளியில் விடப்படும் எலியை போல அவர்கள் வாழ்வை எதிர்நோக்குகிறார்கள்.அந்த வெட்டவெளியை பார்த்து மிரட்சி அடையும் எலி போன்றது தான் அவர்களுக்கும் அமைப்புக்குமான உறவு.அவர்கள் அதை உடைக்கவும்,புரட்டிபோடவும்,எதிர்க்கவும் கவலைப்படுவதில்லை.அவர்கள் இந்த நெரிசலில் எப்படி இந்த சாலையை கடப்பது என்று கவலைப்படுகிறார்கள்.அவ்வளவுதான்.அப்படியாக பெரும்பாலான இந்திய மனிதர்களின் வாழ்க்கை தரிசனத்தை தன் கதைகளின் வழியாகவே சொன்னவர் அசோகமித்திரன்.அம்ஷன் குமார் எடுத்த ஆவணப்படத்தில் ஒரு காட்சியில் அவர் பெருங்கூட்டத்தில் ஒருவராக வரும் காட்சி உள்ளது.அதுவே அசோமித்திரன் என்பார் அபிலாஷ்.அசோகமித்திரனுக்கு சிலை வைப்பது என்றால் பெருங் கூட்டத்தின் நடுவில் நடுந்து செல்லும் ஒருவராக அவரை சிலைப்படுத்தலாம்.தனி மனிதராக அல்ல.அதுவே அவருக்கான அஞ்சலி.

அழுக்கு சாக்ஸ்


விட்ட குறை

அறுபட்டதென்ன விடுபட்டதென்ன
ஓன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு

சுவை ஓன்றிவிட்டால் ஓரு நாக்கு போதும் ஒர் உனவு போதும்.மனம் அறுபடுகையில் எதிலும் நிலைகொள்ளாது தடுமாறும் மனதின் எண்ணங்கள்,அப்போது எழும் ஆசைகள்,பிறழ்வுகள் அந்த பிறழ்வுகளால் மேலும் உருவாகும் பிறழ்வுகள் என ஓராயிரம் நாக்குகளுடன் அலையும் மனம்.நல்ல கவிதை.

அதே மனம் நிலை கொள்ளும் போது ஒய்யாரமாய் ஆடும் ஊஞ்சல் ஆகிறது.வெளியில் நல்ல மழை ஒரே சொரூப நிலை என்ற மனநிலை.

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துகுமாக
கால்படாத பூமி
நழுவினாலென்ன
இருந்தாலென்ன

இருவர் கொண்ட ஒர் உறவு என்ற கவிதையில் ஒரு ஆண் பெண்ணிடத்தில் வெட்கம் கொள்கிறான்.அவளுக்கும் இறுதியில் வெட்கம் வருகிறது.கவிதை இப்படி முடிகிறது.அவள் பெண்ணென்று அது வரவில்லை.இந்தக் கவிதை ஆண் பெண் என்ற பாலினங்களுக்கு தரப்படும் குணங்களை மறுக்கிறது.அவள் பெண்ணா யாருக்குத் தெரியும் என்ற வரியும் இதில் உள்ளது.இதே போன்ற விஷயத்தை முன்வைக்கும் கவிதை கனவான்களே.இதில் மஞ்சள் தொப்பி அணிந்தவர்களும் வெளிர் மஞ்சள் தொப்பி அணிந்தவர்களும் அவர்களின் நடைபாதையில் மட்டுமே நடக்க வேண்டும்.மாறி நடந்தால் விதி ஓங்கியடிக்கும் என்கிறது.

இதற்கெல்லாம் தலைப்பு வைக்க முடியாது என்ற கவிதை தொலைந்து போன பால்ய காலத்தை வசந்த காலத்தை பற்றி பேசுகிறது.வையத்துள்,நினைப்புக்குப் பத்துத் தலை,நேயம் ,பூஞ்சை நெஞ்சம்,தெளிவற்றவள்,நடை பாதை,கடைசி மேசையில் ஒர நாற்காலியில் ,பிறழ்மனம்,புருஷன் ,சலனம் ,கேள்வி-பதில் ஆகியவை தனிமை,பிறழ்வு என்ற தளத்தில் தொகுக்கலாம்.

நடுவயது கணவன் மனைவி வாழ்வின் அபத்தத்தை பேசும் கவிதை நீ பாதி நான் பாதி கண்னே.நமது கதைத் தருணங்கள் பூங்கொத்து புது நூல்கள் , பீர் அருந்தியபடி தடவுதல்,வாட்ஸ் அப் ஆகியவற்றிலிருந்து உருவாகாமல் கிழவனும் கடலும் போன்ற ஒரு சாகசத்தை கோருகிறது (தனித்)துவம் என்ற கவிதை.இதே போன்ற ஒரு கவிதை எழுத்து.வட்டத்தை வழித்தெடுத்து ஆட்டம் ஆடுவோம் , பூமியை பால்வெளியை தொட்டுத் தொட்டு என்கிறது இந்தக் கவிதை.

நிறைய கவிதைகளில் நிலா வருகிறது.இந்தக் கவிதை மிகவும் நன்றாக இருந்தது.

சுட்டி

சொல்லிக் காட்டுவதாக
நினைக்க வேண்டாம்
உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது
'அதோ அந்த நிலா'
என வாய்கூறும்போது
சுட்டுவிரலாக மாறாமல்
யாருக்கிருக்கிறது முகம்.

சுட்டப்படும் நிலாவின் குளிர்மையை அடைகிறார் சுட்டுபவரும் சுட்டுகையில்.

அழுக்கு சாக்ஸ் - பெருந்தேவி - விருட்சம் வெளியீடு.

இரண்டாம் உலகம்





அவள் இரண்டாம் உலகத்திலிருந்து விரட்டப்பட்டிருக்கிறாள்
அவள் அருகில் யாருமில்லை
அவளின் பெற்றோர் இறந்துவிட்டனர்
அவளது உடன்பிறப்புகள் அவளை மறந்துவிட்டனர்
அவளது நண்பர்கள் அவளை செருப்பால் அடித்தனர்
அவளது காதலன் அவளின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறான்
தருணம் சாத்தியப்பட்டிருக்கிறது.
உன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று அபத்தம் பேசியவள்
உன்னைச் சுரண்டியவள்
ஆன்மாவை சிதைத்தவள்
தற்கொலைக்கு தூண்டியவள்
பளபளக்கும் சவரக்கத்தி இருக்கிறது என்னிடம் என்றான்.
சவரக்கத்தியின் நுனி அறுக்கையில் ஐயகோ என்பாள்
அந்த நாடகத்தனத்தை சகிக்க இயலாது.
எனது இரண்டாம் உலகத்தின் கணக்கையும் நேற்றே அழித்துவிட்டேன்.
அவளால் கட்டமைக்கபட்ட உலகம் அழிகையில் அழிகிறது
அவளால் என்னில் கட்டமைக்கப்பட்டவையும்.
இனி அவள் பெயரற்றவள்.இருப்பற்றவள்.
நீளமான சாலையில் நிறைந்திருக்கிறது நம் உலகம்.
என் ஆன்மாவும் மலர்ச்சியுற்றிருக்கிறது.
வா நாம் தேநீர் அருந்தலாம்.


முற்போக்காளர்கள்


(1)

தொடர்ச்சியாக வலதுசாரி அரசியல் உலகம் முழுக்க வென்று வருவதை பார்க்க முடிகிறது.இப்போது உத்தரப் பிரதேச தேர்தல்.ஏன் இப்படி நிகழ்கிறது என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.சமீபத்தில் ஜெயமோகன் முற்போக்கின் தோல்வி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.பெருந்தேவி பல்பண்பாட்டுத்துவம் ஏன் தோற்றது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.இரு கட்டுரைகளின் மையப் பொருளும் இஸ்லாம்.இஸ்லாத்தின் அடிப்படைவாதம் தான் இன்றைய வலதுசாரி அரசியலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது என்கிறார் ஜெயமோகன்.பெருந்தேவி குடியேறியவர்களை பண்பாடுகளின் அடிப்படையில் தனித்தனிப் பெட்டிகளில் அடைப்பதால் இனவெறி போக்கு தீவிரமாக அது ஒரு காரணமாக ஆகியிருக்கிறது என்கிறார்.இரண்டிலும் உள்ள உண்மை இஸ்லாமிய சமூகத்தினர் மைய நீரோட்டதோடு கலக்கவில்லை என்பது.நான் வளர்ந்த சூழலில் இஸ்லாமியர் நாட்டார் தெய்வங்களை வழிபடுவதை நேரில் பார்த்திருக்கிறேன்.தர்காக்களுக்கு செல்வார்கள்.ஆனால் கடந்த சில வருடங்களில் இத்தகைய போக்கு முழுவதுமாக மாறியிருக்கிறது.தொடர்ச்சியாக ஏகத்துவம் முன்வைக்கப்படுகிறது.

இஸ்லாத்தின் அடிப்படையே அல்லா ஒருவனே இறைவன்.முகமது நபி அவருடைய இறுதித் தூதர்.இதை ஏற்பவர் இஸ்லாத்தை ஏற்கிறார்.இஸ்லாமிய நெறிதான் சிறந்த நெறி என்று முன்வைக்கப்படும் சொற்பொழிவுகளில் உரையாடல்களில் இந்த நம்பிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதுப்படும் சூழலில்தான் பிற விஷயங்கள் பேசப் படுகிறது.அதனால் தொலைக்காட்சிகளில் நடக்கும் அநேகமான இஸ்லாமிய நெறி பற்றிய உரையாடல்களில் ஒருவர் மாற்றாக எதையும் பேச முடியாது.இஸ்லாம் ஒரு மதம் மட்டும் அல்ல.அது ஒரு வாழ்க்கை நெறியாக கூட இருக்கிறது.ஒருவரின் தனிப்பட்ட கலாச்சார வாழ்வை அது முழுக்க கட்டுப்படுத்துகிறது.இங்கே பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு பின்னால் எழும் கோபத்தில் இருப்பது அது அவர்களின் கலாச்சார வெளியில் தலையிடுகிறது என்பதால்தான்.பொதுவாக இந்திய இஸ்லாமியர்கள் பல திருமணங்களை செய்வதில்லை.அதனால் இந்த சட்டம் வந்தாலும் அது பெரிய பாதிப்பை உருவாக்க போவதில்லை.ஆனால் இந்த சட்டம் இஸ்லாமிய சிவில் சட்டமாக இல்லை என்பதே இங்கு பிரச்சனையாகிறது.

பெருந்தேவியின் கட்டுரையில் அவர் சில உதாரணங்களை முன்வைக்கிறார்.பிரான்ஸில் நடந்த சார்லி ஹெப்தோ நாளிதழ் அலுவலகத் தாக்குதலை செய்தவர் ஒரு Practising Muslim இல்லை என்கிறார்.இன்னொரு உதாரணத்தில் இங்கிலாந்தில் 2005யில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து வர முக்கிய காரணம் அங்கே அணை கட்டப்பட்டது என்கிறார்.கையறு நிலையில் இருந்தவர்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்கிறார்கள்.அங்கும் மில்களில் குறைந்த ஊதியத்தால் மேலும் கையறு நிலைக்கு செல்கிறார்கள்.இரண்டிலும் அவர் சொல்ல முனைவது அவர்கள் அந்நியப்பட்டு போனார்கள் ,அதனால் அதை செய்தார்கள்,அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் இல்லை என்பதைத்தான்.சமீபத்தில் கேரளத்தை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிலிருந்த இளைஞர் இறந்துவிட்டார் என்ற செய்தி அவர்களின் பெற்றோரை வந்தடைந்திருக்கிறது.எங்கோ கேரளத்தில் இந்திய குடிமகனாக வாழும் ஒரு இஸ்லாமியர் ஏன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்கிறார்.இதற்கு முற்போக்காளர்கள் கூறும் விளக்கம் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இங்கே வளர்ந்த வலதுசாரி அரசியல் இஸ்லாமிய மக்களின் மத்தியில் உருவாக்கிய பாதுகாப்பின்மைதான் காரணம் என்று.அதில் உண்மை இல்லாமல் இல்லை.பாதுகாப்பின்மையின் போது சிறுபாண்மை சமூகங்கள் அரசியல் உணர்வு பெறுவதும் அமைப்பாக்கம் ஆவதும் தவிர்க்க இயலாதது.ஆனால் அது ஏன் ஜனநாயக வகையில் இல்லை.ஏன் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற ஒரு தீவிரவாத அமைப்பில் அவர் சென்று சேர வேண்டும்.எது அவரை அங்கே அழைத்து செல்கிறது.இஸ்லாத்தில் இஸ்லாமிய தேசம் குறித்த கனவு இருக்கிறது.அது ஏதோ ஒரு வகையில் இந்த அரசைவிட இஸ்லாமிய அரசு நல்லரசாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.மேலும் இன்று இஸ்லாமிய சமூகத்தினர் அந்நியப்பட்டு நிற்பதற்கு வலதுசாரி அரசு எந்த அளவு காரணமோ அதே அளவு காரணம் வஹாபிஸத்தின் வளர்ச்சியும்.

மறுபடியும் முற்போக்காளர்களின் பதில் வஹாபிஸத்தின் வளர்ச்சியும் வலதுசாரி அமெரிக்க அரசியலால்தான் என்பது.ஆனால் ஏன் வஹாபிஸத்திற்கு எதிரான இங்கு சூஃபிஸத்தை உள்ளடக்கிய நெகிழ்வான இஸ்லாம் பின்நகர்ந்துவிட்டது.ஏன் மக்களை அது ஈர்க்கவில்லை.இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் உள்ள தர்காக்களில் சயனித்திருக்கும் சூஃபிகள் இங்கே வருங்கால பன்மைத்துவத்திற்கான விடிவெள்ளிகள்.அவர்களே இஸ்லாத்தை  நெகிழ்வானதாக மாற்றினார்கள்.எங்கு நோக்கினும் நம்மை எதிர்நோக்கும் தர்காக்களில் இருக்கிறது நமக்கான பன்மைத்துவம்.அதை நோக்கி இஸ்லாமிய சமூகம் செல்ல வேண்டும்.அது இஸ்லாமிய சமூகம் இன்று அடைந்திருக்கும் அந்நியமாதல்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் துவக்கமாக இருக்கும்.

(2)

இங்கே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை தை எழுச்சி என்றெல்லாம் சில முற்போக்கு அறிவுஜீவிகள் எழுதினார்கள்.உண்மையில் நம் இளைஞர்களில் பெரும்பாலோனருக்கு கர்நாடகாவின் முதலமைச்சார் யாரென்று கூட தெரியாது.நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் கூட இன்றைய தலைமுறையினருக்கு இல்லை.இதில் இவர்கள் அரசியல் ரீதியாக தலைமை அற்று அணிதிரண்டு எழுச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய வேடிக்கை.

பொதுவாக வலதுசாரி அரசியல்,இஸ்லாமிய தீவிரவாதம்,மக்கள் போராட்டம் இவைகளை பற்றி எழுதும் போது நமது முற்போக்காளர்கள் எழுதுவது கிட்டத்தட்ட ஒரே போல இருக்கும்.வலதுசாரி அரசியல் உலகம் முழுக்க அந்தந்த நாடுகளில் உள்ள கடவுள்,பெருமாண்மை மதம்,தேசியம்,பொருளாதார வளர்ச்சி,தொழில்துறை,உள்நாட்டு வேலைவாய்ப்பு இவைகளை சரியாக ஒன்றினைத்திருக்கிறது.அதில் இஸ்லாமும் ஒன்று.இது அவர்களின் வெற்றி.இன்று பல்கிப் பெருகி இருக்கும் நுகர்வு கலாச்சாரமும் அதனால் தேவைப்படும் பொருள் ஈட்டும் வேகமும்,மாறி வரும் தொழில்நுட்ப உலகமும் வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தை எல்லோர் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது.நாளை ஒரு மருத்துவரின் இடத்தில் ஒரு வாட்சன் கம்யூட்டர் இருக்கலாம்.இன்று இருக்கும் பல பி.பி.ஓ,ஐடி,அசெம்பளி லைன் வேலைகள் காணாமல் போகும்.அந்த அச்சமும் வலதுசாரி அரசியலின் வளர்ச்சியின் முக்கிய காரணம்.

இவையெல்லாம் சாதாரணமாக கண் திறந்து பார்த்தாலே தெரியும்  விஷயங்கள்.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இந்திய தேசியத்திற்கு எதிரான கோஷங்களை முன்வைக்கும் பதாகையுடன் நிற்கும் இளைஞனுடன் ஒரு ஒய்வு பெற்ற பேராசிரியரும் நின்றார்.ஆச்சரியமாக இருந்தது.இந்திய அரசு அளித்த அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு சட்டை கூட கசங்காத வேலைகளை செய்துகொண்டு இவர்கள் எப்படி புரட்சி குறித்தெல்லாம் பேசுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.பண்பாட்டு தேசியம்,நக்சல்பாரி ,மார்க்கிய லெனினிய இயக்கங்களுக்கு ஆதரவு , பொதுவாக புரட்சி என்று தமிழில் பேசிய பலர் ஆசிரியர்களாக இருந்தார்கள்.அவர்கள் இன்று ஓய்வு பெற்று ஓய்வுதியம் பெறுவர்களாகவும் இருக்கிறார்கள். இங்கு புரட்சி குறித்த பேசிய பல அறிவுஜீவிகள் ஏன் பேராசிரியர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருந்தார்கள் என்பது ஆராய்ச்சிக்குரியது.ஒரு வேளை  அவர்களின் வேலையிலிருந்த சலிப்பை இப்படி எதாவது பேசி போக்கிக்கொண்டார்களா என்று தெரியவில்லை.இன்று அந்தப் போக்கு குறைந்திருப்பதையும் கவனிக்கலாம்.

தஸ்தாவெய்ஸ்கியின்  பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வரும் முற்போக்காளர்களை தஸ்தாவெய்ஸ்கி பயங்கரமாக பகடி செய்திருப்பார்.தனிப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் சிக்கல்கள்,காதல் தோல்விகள் எப்படி அவர்களின் சிந்தனையை மாற்றியமைக்கிறது என்று கேலி செய்திருப்பார்.கொடூரமான கேலி.ஆனால் அந்த நாவல் முன்வைக்கும் முக்கியமான கேள்வி முழுமை( Integrity).உங்களின் தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களின் புரட்சி கோஷங்களின் போது கேட்கலாம்.முழுமையை முன்வைக்கும் புரட்சியாளர்களும் சிந்தனையாளர்களும் இன்று அநேகமாக இல்லை.ஒரு முறை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவரை சந்தித்தேன்.பார்த்த சில நிமிடங்களில் அவர் கேட்ட கேள்வி சொந்த வீடு இருக்கிறதா என்பதுதான்.அவர் என் பொருளாதார தளத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார்.செளகரியங்களும் ,பணமும் , லெளகீக வெற்றிகளும் இன்று முக்கியமாக ஆகியிருக்கிறது.இன்று லட்சியவாதமும் இல்லை.லட்சியமின்னையும் இல்லை.பணம்,செளகரியங்கள் என்று நுகர்வை பெரும் தீனியாக்கி மக்களை இழுக்கிறது மாய இயந்திரம்.அதை வலதுசாரி அரசு கைப்பற்றி இருக்கிறது.அது வெல்கிறது.இடதுசாரி அரசியலின் இன்றைய நிலை என்ன என்பது பெரும் கேள்வி.சிதாராம் யெச்சூரி என்னதான் செய்துகொண்டிருக்கிறார்.அவர்களின் திட்டங்கள் என்ன.கேரளத்தில் இப்போது இருப்பதுதான் இறுதியான இடதுசாரி அரசு.இதன் பின் இடதுசாரி அரசு அங்கு வராது.இடதுசாரிகள் வலதுசாரி அரசு கைப்பற்றி இருக்கும் விஷயங்களை பற்றி ஆராய வேண்டும்.உதாரணமாக இன்று இயந்திரங்ளாலும்,தன்னியக்கமாலும் வேலை வாய்ப்பு பெரும் அச்சமாக மாறி வருகிறது.இதை எப்படி எதிர்கொள்வது.அப்படியான கேள்விகளை நோக்கி  தன் பயணத்தை இடதுசாரிகள் திசைதிருப்ப வேண்டும்.அப்போது இடதுசாரி அரசியலின் மீள்உயிர்ப்பு சாத்தியப்படும்.வெறுமன அமெரிக்க சூழ்ச்சி என்பதால் எதுவும் மாறப்போவதில்லை.



மகிழ்ச்சி


அவள் என் மீது பேரன்பு கொண்டிருக்கிறாள் என்றேன்
அன்பில் என்ன பேரன்பு சிற்றன்பு என்றார்
அவள் என் மீது அன்பு கொண்டிருக்கிறாள்
என் மீது அன்பு கொண்டிருக்கிறாள் என்பதில் சுரண்டல் உள்ளது
அவள் அன்பானவள்

அன்பானவள் என்பது முழுமையை முன்வைக்கிறது
சரிதான் , அவள் பேரழகி
மற்ற பெண்களை சிறுமைப்படுத்துகிறீர்கள்
அவள் அழகி
அவள் என்பதே பிழை
அழகு என்பது உங்கள் மதிப்பீடு
வட்டம் எல்லாம் சதுரம் ஆகாது
என்ன
எல்லா சதுரங்களிலும் வட்டம் உண்டு
புரியவில்லை
மகிழ்ச்சி என்றேன்.


இனிய நாள்


நண்பர் ஒருவர் நம் அலுவலகத்தில் யார் அழகான பெண் என்றார்.எல்லா பெண்களும் அழகாகத்தானே இருக்கிறார்கள் என்றேன்.அழகற்ற பெண்னை காண்பது அரிது.ஒரு முறை நண்பன் ஒருவன் பெண்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.காதலிக்கும் போது நாம் பார்க்கும் பெண் , திருமணத்திற்கு பின் இருப்பதில்லை.அவள் அண்னையாகும் போது முற்றிலும் வேறு ஒரு பெண்ணாகிவிடுகிறாள்.மாமியாராகும் போது அவள் யாரோ.நாம் அப்படியில்லை.நாம் எப்போதும் ஒரே போலத்தான் இருக்கிறோம் என்றான்.எனக்கு பொதுவாக பெண்களை புரிந்து கொள்ளவே முயலவே கூடாது என்று தோன்றுகிறது.ஏனேனில் அது சாத்தியமில்லை.சிந்திக்கும் முறை , ஒரு விஷயத்தை பொருள் கொள்ளும் முறை, அன்பை வெளிப்படுத்துவது , சினம் கொள்வது என்று எல்லாமே பெண்களின் உலகம் வேறாக இருக்கிறது.

பெண்களை போல குரூரமாக பழிவாங்கும் ஆற்றல் ஆண்களுக்கு குறைவு என்று தான் தோன்றுகிறது.அதே போல அவர்களை போல கருணையுடன் நடந்து கொள்வதும் ஆண்களுக்கு சாத்தியமில்லை.அவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் குறிப்பிட்ட விதமாக நடந்துகொள்கிறார்கள் என்பது இரவில் இருளில் வெளிச்சத்திற்கான சாத்தியமின்றி இருப்பது போலத்தான்.ஒன்றும் செய்ய முடியாது.அப்படியே விட்டுவிட வேண்டும்.என் நண்பர் ஒருவர் சொன்னது போல ஆண்களும் பெண்களும் வேறு வேறு உயிரனங்களாக கூட இருக்கலாம்.அன்று தன்னை கடந்தவன் தன்னை பார்த்து புன்னகைக்கவில்லை என்பதால் ஒரு பெண் நாள் முழுதும் மன அழுத்தம் கொள்ளலாம்.அது அவளது அன்றைய செய்கைகளில் முழுக்க வெளிப்படலாம்.அவள் அன்று முழுதும் தான் எதிர்கொள்பவர்களிடம் எரிச்சல் கொள்ளலாம்.வேறு ஒரு நாளில் அவளே மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கலாம்.அவள் எப்போது எப்படி நடந்து கொள்வாள் என்று அறிந்து கொள்ள ஆசைப்படுவது வானம் வசப்படும் என்று சொல்வது போலத்தான்.அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டால் வாழ்க்கை இனிதாகிறது.அன்றைய நாள் உங்கள் காதலியோ , மனைவியோ , மகளோ உங்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்றால் அன்று உங்களுக்கு இனிய நாள் அவ்வளவுதான்.அதில் உங்கள் பங்கு என்று ஒன்றும் இல்லை.அவர்கள் சினத்துடன் உங்களை குரூரமாக குத்தினாலும் நீங்கள் செய்ய ஒன்றும் இல்லை.நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் நடப்பதுதான் நடக்கும்.அதனால் தேமே என்று இருப்பது நலம்.

ஒரு ஆணின் காமம் பெண் உடலிலோ அல்லது கோட்பாட்டாளர்கள் சொல்வது போல காட்சி பிம்பங்களிலோ இல்லை.அது அவனுடைய அகங்காரத்தில் இருக்கிறது.தன் அகங்காரத்தை வென்றவன் காமத்தை கடக்கிறான்.அகங்காரம் அற்றவன் காமம் கொள்வது சாத்தியமற்றது.ஆனால் பெண்களை புரிந்து கொள்வது சாத்தியமில்லை என்பதே ஆண்களுக்கு பெண் மீதிருக்கும் ஈர்ப்பாக இருக்கிறது.

பொற்காலங்கள்





விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனித முன்னேற்றத்திற்கானது என்ற எண்ணம் எப்போதோ காலாவதியாகி விட்டது.விஞ்ஞானத்தின் சட்டகத்தில் அறம் இல்லை.கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷே சொல்வது அதைத்தான்.இங்கே விஞ்ஞான கோட்பாடுகளை உருவாக்குபவர்கள் தனித்த உலகில் வசிக்கவில்லை.அவர்கள் இதே உலகில் இதே பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்கிறார்கள்.ஆனால் அவர்களால் அணுசக்தி குறித்து ஆராய முடிகிறது.மரபணு மாற்று விதைகளை உருவாக்க முடிகிறது.மனிதன் விஞ்ஞானத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறானா என்ற கேள்விக்கெல்லாம் எந்த பதிலும் இல்லை.

விஞ்ஞானம்,தொழிற்துறை,நகரமயமாதல்,தனி மனிதன்,அரசின் கண்காணிப்பு இறுகுவது,அமைப்பின் கீழ் தனிமனித சுதந்திரம் மறுக்கப்படுவது,கடவுள் நம்பிக்கையை முழுக்க ரத்து செய்தது என்று விஞ்ஞானம் மனித வாழ்வை முழுதும் மாற்றி இருக்கிறது.விஞ்ஞானம் மனிதனை தொழில் அளவில் மட்டுமல்ல கலாச்சார ரீதியாகவும் நிறைய மாற்றி விட்டது.மாசனோபு ஐன்ஸ்டீனை கேலி செய்கிறார்.அவர் உண்மையில் விஞ்ஞானத்தை மறுக்கவில்லை.அதன் தரிசனத்தை கேள்வி கேட்கிறார்.விஞ்ஞானத்தால் ஒரு போதும் ஒரு முழுமையை நோக்கி நகர முடியாது.அதன் தரிசனம் எல்லைக்குட்பட்டது.அதனால் அதன் அடிப்படையில் மட்டுமே உலகம் செல்லக்கூடாது என்கிறார்.தன் முன்னோர்கள் விவசாயம் செய்து ஒய்வு நேரத்தில் ஹைக்கூ எழுதி மகிழ்ச்சியாக வாழ முடிந்த போது என் நமது தலைமுறையினரால் அப்படி வாழமுடியவில்லை என்கிறார்.

கோசாம்பி தன் புத்தகம் ஒன்றில் மனித வாழ்வில் பொற்காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை.அப்படி ஒரு பொற்காலம் ஒரு வேளை வருங்காலத்தில் உருவாகலாம் என்கிறார்.அவர் மார்க்ஸிய நோக்கில் உலகை பார்த்தவர்.இந்தியா முன்னேறாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் இங்கு அரசாங்கங்கள் மாறினாலும் கிராம வாழ்க்கை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்ததுதான் என்கிறார்.ஒரு வகையில் மாசனோபு சொல்வதும் கோசாம்பி சொல்வதும் எதிர் திசையில் இருக்கின்றன.கோசாம்பி இறுக்கமான கிராம அமைப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் இங்கே நகரங்கள் உருவாகியிருக்கும், அப்படி உருவாகியிருந்தால் விஞ்ஞானமும் தொழில்துறையும் நன்கு வளர்ந்திருக்கும் என்றார்.அப்படி உருவாகியிருந்தால் இறுதியில் என்ன, பாட்டாளி சர்வாதிகாரம் உருவாகி சோஷியலிச அரசு மலர்ந்து பொற்காலம் வரும் என்று நம்பினார்.மாசனோபுவின் பொற்காலம் இறந்தகாலத்தில் இருந்த போது கோசாம்பியின் பொற்காலம் எதிர்காலத்தில் இருந்தது.சாதிகளற்ற கிராம அமைப்பு தான் பொற்காலம் என்று காந்தி அதை இஷ்டலோகத்தில் முன்வைத்தார்.

இப்படி நம்மிடம் பல பொற்காலங்கள் முன்வைக்கப்படுகின்றன.அப்படியான லட்சியவாதங்களால் பொற்காலங்கள் தோன்றாது என்ற திசையில் தன் கோட்பாடுகளை முன்வைத்தது பின்நவீனத்துவம்.இன்று பின்நவீனத்துவ மனநிலை வெங்கட் பிரபு படத்தில்,நளன் குமாரசாமியின் படங்களில் வருகிறது.மிக எளிதாக நாம் உருவாக்கிக் கொள்ளும் பிம்பங்கள் உண்மையில் கட்டமைக்கப்படுகின்றன என்று முன்வைத்து அந்த பிம்பத்தை முழுக்க சரிக்கிறது இந்த மனநிலை.ஆனால் பின்நவீனத்துவம் எதையும் உருவாக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்கலாம்.இங்கே புதிதாக ஒர் அற உணர்வை அது உருவாக்கவில்லை என்பதை நாம் உணரலாம்.உருவாக்குவது என்பதே பின்நவீனத்துவ மனநிலையில் இல்லை.ஆனால் இங்கே புதிதாக ஒன்றை உருவாக்கி கொள்ளாமல் தரிசனம் இல்லாமல் உலகம் செல்ல முடியாது.ஸ்டீபன் ஹாக்கிங் தன் புத்தகம் ஒன்றில் மனிதர்களை சிறையில் அடைத்து சிந்திக்க கூடாது என்று சொல்லியிருந்தால் கூட இன்றைய கண்டுபிடிப்புகள் வந்திருக்கும்தான் என்கிறார்.ஆக பின்நவீனத்துவம் இன்றைய விஞ்ஞான போக்கில் ஒர் உரையாடலை உருவாக்கி இருக்கிறது.உதயகுமாரால் கூடங்குளத்தில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்திருந்தாலும் போராட்டம் சாத்தியப்பட்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் பின்நவீனத்துவ மனநிலை.விஞ்ஞானம் சொல்வது ஒரு புனைவு மட்டுமே என்பதால் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் அதிக அக்கறை வேண்டும் என்று நமக்கு அது சொல்லிக்கொடுத்திருக்கிறது.இந்த பின்நவீனத்துவ மனநிலை இன்றைய காலகட்டத்தினால் உருவானதா அல்லது நம் சிற்றிதழ்களில் இருந்து உருவாகிவந்த ஒரு சொல்லாடலா என்பது ஆராய்ச்சிக்குரியது.

செல்ஃபி



அவன் சட்டையை சரிசெய்துக்கொண்டான்
அவனது அடையாள அட்டையை கழற்றி ஜோபிக்குள் போட்டான்
தலையை வழித்துக்கொண்டான்
மெல்லச் சிரித்தான்
பொன் ஒளி தன் மீது விழுமாறு நின்றான்
குட்டி தொப்பையை உள்ளிழுத்தான்
வானத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான்
கீழே புல்வெளி
மேலே ஆகாயம்
மரம் காற்றில் அசைந்த
அந்த நொடியில்
செல்ஃபி எடுத்தான்
அவன் நினைத்தது போலவே
செல்ஃபி அவனை போலத்தான் இருந்தது
கடந்து சென்ற பெண்கள்
கண்டு செல்வதை அப்போதுதான்
கவனித்து
வெட்கிச் சிரித்து
துள்ளி குதித்து
திரும்பி நடந்து
மறுபடியும் செல்ஃபியை பார்த்தான்
அது யாரோ போல இருந்தது.